Category: பெரிய புராணம் எனும் பேரமுதம்

  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 45

    63 நாயன்மார்கள் வரலாறு – 39 புகழ்ச் சோழ நாயனார்

    பொழின் மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர்

        போதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே

    யழலவிர்வாள் கொடுத்தபிரா னதிகை மான்மே

        லடர்ந்தபெரும் படையேவ வவர்கொண் டேய்ந்த

    தழல்விழிகொ டலைகாண்பார் கண்ட தோர்புன்

        சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்

    கழல்பரவி யதுசிரத்தி னேந்தி வாய்ந்த

        கனன்மூழ்கி யிறைவனடி கைக்கொண்டாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில், “பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்” என்று புகழ்கிறார்.

     இமயமலையின் நெற்றியின் செங்குத்துப் பாறைகளில் தங்கள் புலிக் கொடியைப் பறக்கவிட்டு தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டியவர்கள் சாகசப் பிரியர்களான சோழர்கள். சோழ மன்னர்களின் பல தலைநகரங்களில் ஒன்றாக விளங்கிய திருச்சிக்கு அருகிலுள்ள உறையூர், உறந்தை, கோழியூர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது.

    தலைநகரமாக இருந்த உறையூரில், நான்கு படைகளைக் கொண்ட அரசப் படையின் தொடர்ச்சியான நடமாட்டம் இருந்தது. அந்த நகரம் அழகிய உயரமான வீடுகளின் வரிசைகளையும், வணிகத் தெருக்களையும், யானைகள் பல உடைய சாலைகளையும், உயர்ந்த மதில்கள், கூட கோபுரங்கள், தேவர்கள் உலா வரும் சாலைகள் போன்ற சிறப்புகளைக் கொண்டிருந்தது. இந்த நகரத்தின் மையத்தில், ஒரு கிரீடத்தைப் போல, பிறை அலங்கரிக்கப்பட்ட கடவுளான பஞ்சவர்ணேசுவரர் கோயில் இருந்தது. அவர் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சியளித்தார். இது இப்போது திருச்சிராப்பள்ளி நகரின் மையப் பகுதியாக அமைந்துள்ளது. கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு திருப்பணிகள் பல செய்து வந்தார்.

    தில்லையம்பதியில் எண்ணிலாத் திருப்பணிகள் செய்து புகழ் பெற்றவரான, அனபாயச் சோழனுடைய திருக்குலத்திற்கு மூதாதையாக விளங்கியவர் புகழ்ச் சோழர் என்ற மாமன்னர். புகழ்ச் சோழ நாயனார் சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுப்பித்து, அன்றாட வழிபாடுகள் சிறக்கவும் ஏற்பாடு செய்து வந்தார். தொண்டர்களின் உதவியால் திருத்தொண்டுகள் பலவும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட இத்திருத்தலம் ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றது. இவர் கொங்கு நாட்டிலும், மேல் திசையில் உள்ள ஏனைச் சிற்றரசர்களும் கப்பங்களைக் கட்ட வேண்டும் என்று விரும்பினார். அதனால் சோழர்களின் உரிமைத் தலைநகரங்களின் ஒன்றான கருவூரைத் தன் சுற்றத்துடன் அடைந்தார். கரூரில் பசுபதீசுவரரை பல காலம் வழிபட்டார். அதன் பின்னர் அரண்மனை சென்று அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளினார். சிற்றரசர்கள் கொண்டு வந்த யானைகள், குதிரைகள், பொன்மணிகள் முதலிய திறைப் பொருட்களையெல்லாம் கண்டார். நிறைகொண்டு வந்த மன்னர்களின் நிலைக்கு ஏற்ப செயல் உரிமைகளைத் தந்தார். அந்த சிற்றரசர்களைப் பார்த்து, தமது ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருக்கின்ற அரசர்கள் இருந்தால், அவர்கள் யார் என்ற விவரம் அளிக்குமாறு கேட்டார். அதற்கு அவ்வரசர்கள், முறையாகத் திறை செலுத்தாத மன்னன் அதிகன் என்பவன் என்றனர். பெரிய மதில்கள் சூழ்ந்த நகரில் இருந்துகொண்டும் திறை செலுத்தவில்லை என்றனர். அவன் தனது நான்கு மடங்கு படையை எதிரியின் கோட்டையை ஆக்கிரமிக்கக் கட்டளையிட்டான். புகழ்ச் சோழனின் வலிமையும் வீரமும் நிறைந்த படை, கோட்டையையும் எதிரியையும் எளிதாகக் கைப்பற்றியது. அதிகன் காட்டில் ஓடி ஒளிந்தான்.

     அவர்கள் தங்கள் வீரத்தை மன்னனுக்குக் காட்டுவதற்காகக் குவியல் குவியலாகத் தலைகளைக் கொண்டு வந்தனர். அந்தத் தலைகளின் நடுவே ஒரு தலையில்  சிவ பக்தனின் அடையாளமான சடைமுடியும், திருநீறும் கண்டார்.

    கண்ட பொழுதே நடுங்கி

      மனம் கலங்கிக் கைதொழுது

    கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து

      எதிர் சென்று அது கொணர்ந்த

    திண்டிறலோன் கைத் தலையில்

      சடை தெரியப் பார்த்தருளிப்

    புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து

      இழியப் புரவலனார்.

    செங்கோலின்வழி நிற்பச் சிவநெறி தழைக்க அரசு புரிந்தவர், சடைமுடியைக் கண்ட மாமன்னர் மனம் நடுங்கினார். அருவியென கண்களில் நீர் பொழிந்தது. சடாமுடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்ட புகழ்ச் சோழ நாயனார் அதிர்ச்சியடைந்தார். அவரது மனம் அச்சம் கொண்டது. தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகு இதுவல்லவே என்று தம்மையே இகழ்ந்து கொண்டார். தாம் அரசாட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டதாகப் புலம்பியவர், அமைச்சர்களை நோக்கி, “இந்நாட்டை ஆளுமாறும், சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என்னுடைய மகனுக்கு முடிசூட்டுங்கள்” என்றார். தாம் செய்த இந்த பழிக்குத் தீர்வு தாமே காரணமாகி அக்கினியை வளர்ப்பித்தார். தம் உடல் முழுதும் திருநீறு பூசிக்கொண்டு, திருச்சடையையுடைய தலையை பொற்தட்டில் கிடத்தி தலைமேல் அத்தட்டைச் சுமந்து கொண்டு திருவைந்தெழுத்தினை ஓதிக்கொண்டு அக்கினியை வலம் வந்து மகிழ்ச்சியுடன் அக்னி பிழம்பினுள் இறங்கினார். இறையருளால் அப்போது வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச் சோழ நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்து முக்தி அடைந்தார். சைவ நெறி தழைக்கத் தம் உயிரையே தியாகம் செய்த இந்த மகான் நாயனார் என்று போற்றப்படுகிறார்!

    புகழ்ச் சோழ நாயனார் புராணம் சொல்லும் கருத்து!

    ஒரு நாள் சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூக்குடலையைப் பட்டத்து யானை சிதறிய குற்றத்திற்காக அந்த யானையையும், பாகரையும் கொன்று நின்ற எறிபத்த நாயனாரை அடைந்து தம்முடைய உடைவாளைத் தந்து “யானை செய்த குற்றம் என்னையே சேரும். ஆகவே என்னையும் கொல்லும்” என்று எறிபத்த நாயனாரிடம் உறைவாளை வழங்கினார். அப்போது இறைவன் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். யானையும் பாகரும் உயர் பெற்றெழும்படி புகழ்ச் சோழ நாயனார் பக்தியில் சிறந்து விளங்கினார்.

    அக்கால மன்னர்கள் போரிட்டு தங்கள் இராச்சியங்களின் எல்லைகளை விரிவுபடுத்துவது வழமையான செயல் என்றாலும், சடைமுடியுடன் ஒரு அடியாரின் தலையைப் பார்த்த பிறகும், தன் புகழ் களங்கப்பட்ட நிலையில் தான் எப்படி அதன் பிறகும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று புகழச் சோழன் குற்றவுணர்வில் மூழ்கினார். மிகுந்த துயரத்துடன், தன் மகனான புதிய மன்னனுக்கு முடிசூட்டி, அவனை இறைவனின் நெடுவழியில் வழிநடத்துமாறு கட்டளையிட்டார். அமைச்சர்களும், குடிமக்களும் பெரும் துயரத்துடன் இருக்கும் வேளையில் தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் தீர்மானித்தார். பெயருக்கு ஏற்றவாறு தன் புகழ் உச்சத்தை அடைந்த நிலையில் இறைவனின் திருவடிகளை அடைந்தார்.

    அரசனாக இருப்பினும், இறைமை என்பது தன்பரிசனம், பகைவர், கள்வர், தீவிலங்குகள் போன்றவற்றால் குடிமக்களுக்குத் தீங்கு நேராமல் காப்பதே சிறந்த அறமாகும். அது,

    மாநிலங்கா வலனாவான் மன்னுயிர் காக்குங்காலைத்

    தானதனுக் கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால்

    ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மா லானபய

    மைந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ”

    என வரும் மநுநீதி கண்டபுராணச் செய்யுளால் விளங்குகிறது.

    சிவன் பண்பே தம் பண்பாகக் கொண்டு உலாவும் நடமாடும் சிவங்களாகிய சிவனடியார்களுமே தம் வாழ்வின் பெருந்தவம் என்று எண்ணுபவர்கள்,  இவற்றுக்கு நேரும் நிந்தை முதலிய தீங்குகள் நேரடியாகவே அரசன் கேட்டிற்குக் காரணமெனப்படுதலினாலும் அது வலுவுறும். அவ்வாறாதல் திருமந்திரத்தில்,

    முன்னவனார்கோயிற் பூசைகள் முட்டிடின்

    மன்னற்குத் தீங்குள வாரி வளங்குன்றும்

    கன்னங்களவு மிகுத்திடுங் காசினி

    என்னரு நந்தி எடுத்துரைத்தானே”

    என்று உரைக்கப்படுகிறது.

    திருவாதவூரடிகள் புராணத்தில், வையைப் பெருக்கினால் தளர்வுற்ற பாண்டிய மன்னனைப் பற்றி சொல்லும்போது,

     “ஆதியாங் கடவு ளெந்தை யாலவா யமலன் மங்கை

    பாதியான் சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண்டோ

    நீதியாந் தவத்தின் மிக்கார் நெஞ்சம் புழுங்க மண்மேல்

    நீதியாஞ் செய்ததுண்டோ செப்புமினமைச்சரென்றான்”

    என்று வருவதால் அறியப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று புகழ்ச் சோழ நாயனாரின் குருபூசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 44

    63 நாயன்மார்கள் வரலாறு – 38 பொய்யடிமை இல்லாத புலவர்

     சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகை ஏழாம் திருமுறைப் பதிகத்தில் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற புகழ்பெற்ற வரியை அருள்கின்றார். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பதின்மரைப் பற்றி பாடியுள்ளார். ‘பொய்யடிமையில்லாத புலவர் புராணம்’ என்பது அவற்றில் ஒன்று.

    செய்யுள் நிகழ் சொல் தெளிவும்

      செவ்விய நூல் பல நோக்கும்

    மெய் உணர்வின் பயன் இதுவே

      எனத் துணிந்து விளங்கி ஒளிர்

    மை அணியும் கண்டத்தார்

      மலர் அடிக்கே ஆளானார்

    பொய் அடிமை இல்லாத புலவர்

      எனப் புகழ் மிக்கார். 

    பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்பவர்கள் அடியார்களும் சிவனருட் செல்வர்களுமாவர். பொய்யடிமை இல்லாத புலவர்கள் நுண்ணிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்தும், செவ்விய நூல்கள் பலவற்றைக் கற்றும் மெய்யுணர்வின் பயன் இதுவே என்று உணர்ந்தவர்கள். மிகுந்த அர்ப்பணிப்புடன் சித்தத்தை சிவன் பால் வைத்து வாழும் பெருமை மிக்கவர்கள். திருக்கயிலைப் பெருமானுக்கே ஆளானவர்களான இவர்கள் பாடல்களின் சொற்களுக்கு மிகத் தெளிவாகப் பொருள் உரைப்பவர்கள். அறிவார்ந்த அடியார்களான இப்புலவர்கள் கற்றவர்களுக்கு மட்டுமே வரம்பாக நிற்பவர்கள். நூல் பல கற்று நுண்மதி படைத்தோர் மெய்யுணர்வு கொண்டோரான இவ்வடியார்கள் சிவபெருமானை அன்றி வேறு எப்பேர்ப்பட்ட பொருளாயினும் பெரிதாக எண்ணாதவர்கள். மெய்யன்புடன் எம்பெருமானுக்கு அடிமை பூண்டவர்கள். பக்தி நூல்களை ஓதி உணர்ந்து உருகி, ஒருமைப்பட்டு நிற்பவர்கள். மெய்யன்புடன் சிவனடிக்கேத் தொண்டு பூண்ட அவர்கள் திருவருள் நெறி நின்று பெற்ற பெருமை அளவிடற்கரியது. அதுமட்டுமின்றி தவறாது வேத முறைப்படியிலான வேள்விகளைச் செய்து சிவனை வழிபட்டு வருபவர்கள். சிவபெருமானை அன்றி, வேறு எவரையும் புகழ்ந்து பாடாத சொற்திறம் மிக்க பெருமைக்குரியவர்கள்.

    பொற்பு அமைந்த அரவாரும்

      புரிசடையார் தமை அல்லால்

    சொற்பதங்கள் வாய் திறவாத்

      தொண்டு நெறித் தலைநின்ற

    பெற்றியினில் மெய் அடிமை

      உடையாராம் பெரும் புலவர்

    மற்றவர் தம் பெருமையார்

      அறிந்து உரைக்க வல்லார்கள்.  

    ஆங்கு அவர் தம் அடி இணைகள்

      தலை மேல் கொண்டு அவனி எலாம்

    தாங்கிய வெண்குடை வளவர் குலம்

      செய்த தவம் அனையார்

    ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை

      உணர் செயல் புரிந்த

    பூங் கழலார் புகழ்ச்

      சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம். 

    திருச்சிற்றம்பலம்

    பொய்யடிமை இல்லாத புலவர்கள் புராணம் சொல்லும் கருத்து

    ஏழாம் பாடலில், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்!’ என்று சுந்தரர் கூறியுள்ளது தனியடியார்களையா? தொகையடியார்களையா? என்கிற ஆய்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.1,300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ வரிக்கு உரியவர் யார் என்ற தேடல் இன்றும் தொடர்கிறது.

    ‘வேண்டுவோர்க்கு வீடுபேறளிக்கும் அற்புதத் திருத்தலமான திருப்புகலூர் ஆலயத்தில் செங்கற்கள் பொன்கட்டிகளாக மாறிய திருவருள் அதிசயம் நடந்தது. அதையே சான்றாகக் கொண்டு, பூவுலகில் மண்ணாளும் வேந்தர்களைப் புகழ்ந்துபாடி வீணாய் பொழுதைக் கழிக்காமல் புகலூரில் உறைந்துள்ள இறைவனைப் பாடுங்கள், எண்ணியதைப் பெறலாம்’ என்ற வேறொரு பாடலில் சுந்தரர் பெருமானின்  விளக்கமே விடையாகிறது.

    இது குறித்து பேராசிரியர். முனைவர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம், அவர்களின் விளக்கத்தையும் அறிவோம்:

    முதற் செய்யுளின் பொருள்: பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் யார் என்றால், தாம் அருளிய செய்யுளில் தோன்றும் ஒவ்வொரு சொல்லும் (நிகழ் சொல்) பொருள் தெளிவுடன் (சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து) உரைப்பவரும், செவ்விய நூற்கள் பலவும் உணர்த்த முயலும் பயன் சிவபெருமான் திருவடிப்பேறே என்று விளங்கி உணர்ந்து, அம் மைஅணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானவர் அவர் ஆவார்.

    இரண்டாம் செய்யுளின் பொருள்: ‘அப்பொய்யடிமை இல்லாத புலவர், பொற்பமைந்த புரிசடை வள்ளல்‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ வாழ்வோரில் முதன்மையானவராம் பேறு பெற்றதால், மெய் அடிமை உடைய பெரும் புலவர் ஆவார்; அன்னாரின் பெருமையை அறிந்து உரைக்க யாரால் இயலும்?’ என வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

    சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற திருவாக்குக்கு, ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்’ என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் பாடலை ஏற்றுக் கொள்ளாத சேக்கிழார் பெருமான், அவர்தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபட, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்” என்று தம் சொற்பதங்களால் பரமனைப் பாடுவதற்கல்லால் வாய்திறவா தொண்டுநெறி வாழ்வோரில் முதன்மையானவர் அம் மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று உறுதிபடக் கூறியதால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ தனியடியாரே என்று திண்ணமாகக் கூறிவிட்டார் சேக்கிழார் பெருமான்.

    இயற்பெயரைக் குறிக்காது,  ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ என்ற சிறப்புப் பெயரால் சுந்தரமூர்த்தி நாயனார், ‘திருத்தொண்டர் தொகை’யில்  சிறப்பித்துப் பாடியது ஒரு தனியடியாரையே என நிறுவிய சேக்கிழார் பெருமான், அப்பொய்யடிமையில்லாப் புலவரின் சிறப்புத் தகுதிகளை விரித்தும் விளக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் தம் ‘திருத்தொண்டர் தொகை’யில் ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ போல் வேறு தனியடியார்களை இயற்பெயர் குறிக்காது சிறப்புப் பெயரால் குறித்துள்ளாரா என்ற இயல்பான கேள்விக்கான விடைகளே சேக்கிழாரின் கூற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் செய்திகளாம். நாம் சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘திருத்தொண்டர் தொகை’யிலேயே இக்கேள்விக்கான விடையைத் தேடலாம்.

    ‘திருத்தொண்டர் தொகை’யை உற்று நோக்கினால், இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப்போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று அந்நாயன்மார்களின் அரும்பெரும் செயல்கள், இயல்புகளால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறித்துள்ளதைக் காணக் கிடைக்கின்றன. இங்ஙனம் தனியடியார்கள் பலரையும் இயற்பெயரால் குறிக்காமல் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார் என்பது முக்கியமான செய்தியாகும்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார்

     

     

     

    குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

        கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

    பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

        பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த

    மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி

        மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்

    சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து

        திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.

     

    கூற்றுவ நாயனார் களந்தை என்னும் ஊரில் வாழ்ந்த சிவனடியார். ஒரு சிற்றரசராக இருந்த இவர் தன் தோள் வலிமையாலும், வாள் வலிமையாலும் பகைவர்களை வென்ற மாவீரராகவும் இருந்தார். பல்லவ மன்னரான இவர் பல்வேறு மன்னர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார். தும்பைப் பூ மாலை சூடியவர், சோழ மன்னர்களையும் வென்று சோழ நாட்டையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார். யானைப் படைகள், விரைந்து செல்லும் குதிரைகள், வலிமையான தேர்கள் மற்றும் சிறப்புப் படை வீரர்கள் என மிகவும் சக்திவாய்ந்த படைகளுக்குத் தலைவராக விளங்கினார். என்றாலும் இவர் முடி சூடிக்கொண்ட அரசராக இல்லை. அந்நாட்களில் மன்னர்களுக்கு மணிமகுடம் சூட்டுவது ஒரு பெரிய விழா. பண்டைய நாட்களில் சோழர்களின் மணிமுடி தில்லையின் கருவூலத்தில் இருந்தது. உரிய காலத்தில் இதனை சோழ மன்னர்களுக்குச் சூட்ட வேண்டும் என்று தில்லை வாழ் அந்தணரை வேண்டினார்.

     

    • ஆனால் அவர்கள் சோழர் குலத்தில் தோன்றாத மன்னர் எவருக்கும் முடி சூட்டமாட்டோம் என்று கூறிவிட்டனர். தீட்சிதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மணிமகுடத்தை ஒப்படைத்துவிட்டு சேர நாடு சென்றுவிட்டனர். ஆனால் கூற்றுவ நாயனார் அவர்களிடம் வாதிட்டு முடி சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.
    • கூத்தப் பெருமானிடத்தில் கூற்றுவனார், தில்லைவாழ் அந்தணர்கள் தனக்கு முடிசூட்ட ஒப்புதல் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை ஐயனின் திருவடியையே மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும் என வேண்டினார். தன் அடிகளை முடியாகத் தரவேண்டும் என்று சிவனை வேண்டியதால், சிவபெருமானும் அவர் கனவில் தோன்றி அவரது சென்னியின் மீது தம் திருவடிகளைச் சூட்டி அருள் புரிந்தார். கண் விழித்த நாயனார் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். பேரானந்தம் கொண்ட அந்நாயனார் இறைவனுடைய திருவடியே மணிமுடியாகக் கொண்டு நாடாண்டார். அரசு செல்வத்தைப் பெருமான் அருளால் கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்து போற்றி இறைப்பணிக்கும், அடியவர் பணிக்கும் அரசு செல்வத்தைப் பயன்படுத்தி இறைவன் திருவடி நிழல் சார்ந்தார்.
    •  கூற்றுவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

     

    பகைவர்களுக்கு எமன் போன்று விளங்கியதால் கூற்றுவர் என்ற பெயர் பெற்றார் இந்நாயனார். கூற்றுவர் என்பதற்குக் கூறுபடுத்துபவர் என்று பொருள். உடம்பையும், உயிரையும் கூறுபடுத்துவதால் எமனுக்குக் கூற்றுவன் என்று பெயர். வெற்றிகளால் இவர் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். அருளிலும் பொருளிலும் சிறந்து விளங்கிய இந்நாயனார் பகைவர் அஞ்சும் நாற்படை கொண்டு பெருமிதத்துடன் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார்.

     

    தம் பூர்வ புண்ணியப் பேறாகக் கூற்றுவ நாயனார் சிவபெருமான் எனும் மெய்யுணர்வும், சிவநாமமும் எம்பெருமான் வழிபாடும் தவறாது புரிந்து சிறந்த சிவனடியாராக விளங்கியுள்ளார். சேக்கிழார் பெருமான் வாக்கில்,

    துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று

    சூலப்படையார்தம் நன்னா மந்தந் திருநாவில்

    நாளும் நாளும் நவிலும் நலம்மிக்கார்

    பன்னாளீச ரடியார்தம் பாதம்பரவிப் பணிந்தேத்தி

    முன்னா கியநல் திருத்தொண்டின்

    முயன்றார் களந்தை முதல்வனார்”

    என்று போற்றுகின்றார்.

     

    தமக்கு முடிசூட்ட மறுத்த தில்லைவாழ் அந்தணரை வலிந்து உடன்படுத்தவோ அல்லது மாற்று வழி கண்டு முடிசூட்டு விழாவைக் கொள்ளவோ போதிய ஆற்றல் உள்ளவராக இருந்தும் கூற்றுவ நாயனார் அவற்றை நாடாது சிவபெருமான் திருவருளையே வேண்டியவர், அத்திருவடியே தமக்கு மணிமுடியாகப் பெற்று நாடாண்டார். நாடாளும் பணியுடன், இறைப்பணியும், அடியவர் பணியும், சிறக்க வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சேர்ந்தார்.

     

    திருச்சிற்றம்பலம்.

     

     

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 42

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 36 ணநாத நாயனார்

     

    கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்

        கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு                                  

    நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து

        நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி

    வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி

        வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்

    புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்

        பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே

     

    கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழும் கணநாத நாயனார் சீர்காழியில் ஒரு மறையவர் குலத்தில் அவதரித்தவர். சிவபெருமான் மீது மாறாத அன்பு கொண்டு சட்டைநாதர் கோயிலுக்குத் தவறாமல் சென்று, தோணியப்பர் வடிவில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அனுதினமும் கோயிலில் பூசைகளை நடத்தி, எம்பெருமானுக்கு நைவேத்தியம் படைத்தார். தனது வீட்டிலும் சிவனடியார்களுக்கும் உணவு அளித்து சேவை புரிந்து வந்தார்.

    அடியார்களைக் கவரும் வண்ணம் சைவம் குறித்த அவருடைய சொற்பொழிவுகள், மக்களிடையே மிகுந்த பக்தி உணர்வைத் தூண்டியது. வேதங்களையும் சிவ மந்திரங்களையும் மிகத் தேர்ச்சியுடன் உச்சரிப்பதோடு நெஞ்சுறுதியோடு திருத்தொண்டுகள் பலவும் இடையறாது செய்து கொண்டிருந்தார். சைவ சமயம் தழைத்தோங்கும் வண்ணம் தொண்டர்களுக்கு உரிய பயிற்சிக் கூடம் அமைத்தார். நல்ல தொண்டர்களை உருவாக்கினார்.

    நந்தவனம் அமைப்பது, மலர் கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது, காலையும், மாலையும் கோயிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கெல்லாம் தொண்டர்களை உருவாக்கினார்.

    நல்ல நந்தவனப் பணி செய்பவர்

      நறுந்துணர் மலர் கொய்வோர்

    பல் மலர்த் தொடை புனைபவர் கொணர்

      திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்

    அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத்

      திரு மெழுக்கு அமைப்போர்கள்

    எல்லையில் விளக்கு எரிப்பவர்

      திரு முறை எழுதுவோர் வாசிப்போர்

    வறுமையில் உழன்ற அடியார்களுக்கு ஆடைகளை வழங்கியவர், அவர்களின் பிள்ளைகளுக்கும் முறையான கல்வியை அளித்தார்.

    ஞானசம்பந்தப் பெருமானைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றிய கணநாத நாயனார் அவரிடமிருந்து சைவத் தத்துவங்களைக் கற்றுக்கொண்டார்.

    சிவபெருமான் மீது அவர் கொண்டிருந்த உண்மையான பக்தியினாலும், அடியார்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் அவர் ஆற்றிய பெரும் சேவையினாலும், சிவபெருமானின் திருவடிகளே காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சார்ந்தார். ஆண்டுதோறும் கணநாத நாயனார் முக்தி அடைந்த நாளான, பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இவரது குருபூசைநாள் சீர்காழியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

     

    கணநாத நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில்

      உறுதி மெய் உணர்வு எய்தி

    அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர்

      திறம் அவனியின் மிசை ஆக்கும்

    மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும்

      கண நாதனார் கழல் வாழ்த்திக்

    குலவு நீற்று வண் கூற்றுவனார்

      திறம் கொள்கையின் மொழிகின்றாம்.

    சாதிப் பாகுபாடின்றி அனைவரிடமும் சமமான அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டவரை மக்கள் மனதார நேசித்தனர். அவருடைய கனிவான நடத்தையால், ஏராளமான மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு, சிவபெருமானைப் பற்றிய அவருடைய தெய்வீக சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் செவிமடுத்தவர்கள் தங்கள் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை மட்டுமே நிரப்பினார். தன் வாழ்நாளில், கடவுளுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதன் மூலம் அவர் பல நல்ல கர்ம வினைகளைச் செய்திருந்தார். சிவபெருமான், ஊழிக்காலத்தில் 64 கலைகளையும் ஆடையாகக் கொண்டு பிரணவத் தோணியில் தேவியுடன் வந்து பிரளயத்தில் அழியாது நின்ற இத்தலத்தில் தங்கியதாக தலபுராணம் கூறும், சீர்காழி திருத்தோணியப்பரை சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்திய கணநாதர், சிவனடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல், தாமும் அதன் வழி நடந்தார். தொண்டர்கள் விரும்பும் சிவாலயப் பணிகளை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் செய்யும் பணியை இறைமனதோடு தூய்மையாகச் செய்யவும் பயிற்றுவித்தார். திருத்தொண்டின் வழி நிற்பதே சிவபெருமானின் திருவடியை அடையும் வழி என்பதை உணர்ந்தவர் அனைவரையும் அரவணைத்து, தானும் பங்கெடுத்து ஆலயப்பணியைக் குறைவின்றி செய்தார்.

     திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 35 கழறிற்று அறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார்

    சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் ‘கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்’ என்று போற்றும் பெருமை பெற்றவர் இளவரசர் பெருமாக்கோதையார். சேர நாட்டின் தலைநகரமான மகோதை என்னும் கொடுங்கோளூரில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தின் பெரும் புண்ணியங்களின் பயனாய் தோன்றிய இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் பெருமாக்கோதையார். இளம் வயதிலேயே அவர் மனம் நாளும் சிவ சிந்தையிலேயே ஈடுபட்டு வந்தது.  திருஅஞ்சைக்களத்து ஈசன் பால் பேரன்புடையவராய் விளங்கிய இவர், பொழுது புலரும் முன்பே எழுந்து புனித நீராடி ஆலயத்தைத் தூய்மை செய்து திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் அயராது பணி செய்து இறைவனை வழிபட்டு வந்தார். இளவரசனாக இருந்தும் அரச போகங்களில் அதிகாரச் செழிப்பில் அவர் மனம் ஈடுபடாமல், திருத்தொண்டு செய்வதே நிலையான பேரின்பம் என்று வாழ்ந்து வந்தார். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பெரிய புராணத்துக்கு மூலமாக இருந்தது. சுந்தரரின் சமகாலத்தவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார்.

    செங்கொற்பொறையன் என்னும் மன்னன் அப்போது சேர நாட்டை ஆண்டு வந்தான். நிலையற்ற வாழ்வில் இறைவன் திருவடியை அடைவதே உத்தமம் என்று எண்ணிய அவன் தன் அரச வாழ்வைத் துறந்து தவம் மேற்கொள்ள கானகத்தை நோக்கிச் சென்றான். அமைச்சர் முதலானோர் ஆய்வு செய்து சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரே அரசு உரிமை புரக்கும் உரிமை உடையார் என்று அறிந்து அவரை அணுகி அரசுரிமை ஏற்று அம்மலை நாட்டு மக்களை காத்தருள வேண்டும் என்று அழைத்தனர்.

    சேர நாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்க வேண்டும் என்பதை அவருக்குத் திருவருள் உணர்த்திற்று. பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். சேர நாட்டு மன்னரானதால் சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

    சேரமான் பெருமானுக்கு முடிசூட்டு விழா முடிந்தது. திருவஞ்சைக்களத்து  இறைவனை வழிபட்டு பட்டத்து யானை மீது  அரச மாளிகைக்குச் சென்று கொண்டிருந்தார் அரசர். அப்போது உவர் மண் மூட்டையோடு  ஒரு சலவைத் தொழிலாளி எதிர்ப்பட்டான். அவன் சுமந்து வந்த அந்த உவர் மண் அவன் உடல் முழுவதும் சிதறிப் படர்ந்து முழு நீறு பூசிய முனிவர் போன்று தோற்றமளிக்கச் செய்தது. அவனைக் கண்ட சேரமான் பெருமான் சிவனடியார் என்றே கருதியவர் சற்றும் தயங்காமல் யானையினின்றும் கீழே இறங்கி அந்த ஏழைத் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கினார். பதறிப்போன அந்த சலவைத் தொழிலாளி அச்சம் கொண்டு, தான் மன்னருக்கு அடித்தொழில் புரியும் ஒரு சலவைத் தொழிலாளி என்று கூறக்கேட்டு அடியேன் அடிச்சேரன் சிவவேடத்தை நினைப்பித்தீர் வருந்தாது செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார்.

    மத்த யானை ஏறி மன்னர்

      சூழவரு வீர்காள்

    செத்த போதில் ஆரும் இல்லை

      சிந்தையுள் வைம்மின்கள்

    வைத்த உள்ளம் மாற்ற வேண்டா

      வம்மின் மனத்தீரே

    அத்தர் கோயில் எதிர்கொள் பாடி

      என்ப தடைவோமே. 

    என்று ஆரூரர் தம் பாடலில் அழகாக விளக்குகிறார்.

    கழறிற்றறிவார் மனதில் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் பிடி சாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வு, தமது அரச வாழ்வு நிச்சயமல்ல என்பதையும் உணர்த்தியதால் அவ்வேடத்திற்கு உரிய வகையில் வணங்கினார் சேரமான் பெருமான். எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்கி மக்கள் வாழ்வில் இன்பம் பெருக அரசு நடத்தினார். மன்னர் நாள்தோறும் தன் ஆன்மார்த்த மூர்த்தியான, ‘திருஅஞ்சைக்களம் சபாபதி’ என்ற கூத்தப் பெருமான் திருமேனியை உள்ளம் நெக்குருக வழிபாடு செய்வார். பெருமானும் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வகையில் பாதச் சிலம்போசை அளிப்பார். ஓசை கேட்ட பின்பு வழிபாட்டினை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.

    ஒரு நாள் சிவபெருமான் கழறிற்றறிவார் நாயனாரைச் சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பை மேற்கொண்டார். அன்று நாள்தோறும் அவருடைய பூசை முடிவில் கேட்கும் சிலம்பொலியைக் கேட்கப் பெறாததால் நாயனார் மிக வருந்தி இவ்வாறு நிகழ்தற்குத் தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணி உயிர்விடத் துணிந்தார்.

    அப்போது எம்பெருமான், தில்லையம்பதியில் சுந்தரர் தம்மைப் பாடிக் கொண்டிருக்கும் அப்பாடலில் ஒன்றிப்போனதால் சேரமானின் பூசையை ஏற்க சிறிது தாமதம் நேர்ந்தது என்று கூறுகிறார். இறைவனின் அருளை வியந்துப் போற்றியவர்,  தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வென்தொண்டரையும் காண்பேன் என்று சோழ நாடு செல்லத் தயாரானார். தில்லைத் திருக்கோயிலை அடைந்து கூத்தப்பெருமான் திருநடம் பயிலும் பேரம்பலத்தை அடைந்து புலனும் உளமும் ஒன்றாகி வழிபாடு செய்தார். பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப் பாடினார். கூத்தப் பெருமானும் பாடல் கேட்டு மகிழ்ந்து பாதச் சிலம்போசை கேட்பித்தார்.

    வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
    தூநற் சிறப்பி னர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள்
    தேனக் கலர்ந்த கொன்றையினா ராடற் சிலம்பி னொலிமுன்போன்
    மானப் பூசை முடிவின்கட் கேளா தொழிய மதிமயங்கி

    சுந்தரரைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்தவர், அவர் திருவாரூர் சென்றதை அறிந்து தாமும் திருவாரூருக்குச் சென்று சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். பின் தியாகராசரையும் வணங்கி, “திருமும்மணிக்கோவை” என்னும் பிரபந்தத்தால் சிவபெருமானைப் போற்றினார்.

    ‘என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பு ஒன்னும்’ என்று சேக்கிழார் பெருமான் என் நெகிழ்ந்துரைக்கும் அளவிற்கு, ஆரூரரைக் கண்ட சேரமான் பெருவிருப்புடன் தாழ்ந்தார், விழுந்தார், வணங்கினார். அவரை வாரியெடுத்துத் தழுவினார் நம்பியாரூரர்.

    மதுரையில் வறுமையால் வாடிக்கொண்டிருந்த பாணபத்திரர் எனும் புலவரைக் கண்ட சொக்கநாதர் பாணபத்திரரின் வறுமையைப் போக்க எண்ணம் கொண்டார். ஆதலால் ‘மதிமலி புரிசை’ என்ற பாடலை ஓர் திரைச்சீலையில் எழுதி, ‘இத்திருமுகத்தை சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தால் பரிசில் வழங்குவான்’ என்று குறிப்பித்தார்.

    பின்னர் எம்பெருமானார் சேரமான் பெருமான் நாயனாரின் கனவில் தோன்றித் தம் அடியவனான பாணபத்திரன் அவரைக் கண்டு பொருள் பெறும் நோக்கில் வந்துள்ளதால் அவருக்கு வேண்டும் அளவு பொருள் கொடுத்தனுப்புமாறு திருவாய் மலர்ந்தருளினார்.

    திருமுகத்தைப் படித்துப் பரவசமடைந்த சேரமான் பெருமான் அதனைத் தலையில் வைத்துக் கொண்டு ‘எம்பெருமானின் திருமுகம் பெறும்பேறு எனக்குக் கிடைத்ததே’ என்று ஆனந்தக் கூத்தாடினார். பாணரைப் பணிந்து, தமது அனைத்து சொத்துகள் மட்டுமின்றி அரசாட்சியும் அவருக்கே உரியது என்றார் கழறிற்றறிவார் நாயனார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரரோ நாயனாரின் உயர் குணத்திற்குத் தலை வணங்கியதோடு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்ட பாணரை பரிசுப் பொருட்களுடன் யானைமீது அமர்த்தி  அன்புடன் வழியனுப்பி வைத்தார் கழறிற்றறிவார் நாயனார்.

    சேரமான் பெருமான் நம்பியாரூரரைப் பார்த்து மதுரை சென்று அங்கையற்கண்ணி உடனமர் சொக்கலிங்கப் பெருமானை வணங்க விருப்பம் தெரிவிக்க  இருவரும் பாண்டி நாடு சென்று மதுரை சொக்கலிங்கப் பெருமானை வணங்கி மகிழ்ந்தனர். பாண்டிய மன்னனும் அவர்  மகளை மணந்த சோழ மன்னனும் இரு பெரு மக்களையும் வரவேற்று உபசரித்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர் புடைசூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான்  சுந்தரரோடு  திருவாரூரில் தங்கியிருந்து அவரைத் தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார்.

    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்று

    அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

    முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

    மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும்
    படியா இவைகற் றுவல்ல அடியார்

    பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
    குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்

    குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
    என்று ஆரூரர் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.

    திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நீண்ட நாட்களுக்குப் பின் சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்று இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர். ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து சென்று ஐயாறப்பரை வழிபட்டப் பின்னர் இருவரும் மலைநாடு நோக்கிச் சென்றனர். இவர்கள் வருகை அறிந்து நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து தோரணம் அமைத்துப் பல்வேறு நலன் செய்தனர். நாடே விழாக்கோலம் பூண்டது. சுந்தரர் திருவஞ்சைக்களம் இறைவனை ‘தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.
    சிலநாட்களுக்குப் பிறகு சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்து பிரியா விடைப் பெற்றார். சேரமான் பொன்னும், மணியும், பூந்துகிலும் இன்ன பிற பொருட்களையும் வாரி வழங்கி  சுந்தரரை வழியனுப்பினார்.

    எம்பெருமான் ஆரூரரின் பாசத்தளையை நீக்கி அருள் புரிய எண்ணம் கொண்டவர், இந்திரன் முதலிய தேவகணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பி அவரைத் திருக்கயிலைக்கு அழைத்து வருமாறு பணித்தார். அக்கணம் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்த தேவர்கள் எம்பெருமானின் அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரரும் இறையாணையை ஏற்றவர், சேரமானையும் மனத்தில் சிந்தித்துக் கொண்டே வெள்ளை யானையின் மேல் ஏறி

    தானெனை முன்படைத் தானத

      றிந்துதன் பொன்னடிக்கே

    நானென பாடலந் தோநாயி

      னேனைப் பொருட்படுத்து

    வானெனை வந்தெதிர் கொள்ளமத்த

      யானை அருள்புரிந்து

    ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

      தான்மலை உத்தமனே

    என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக்கயிலாயம் சென்றார்.
    ஆனால் சேரமான் பெருமான் சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்தவர், தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று ஆரூரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் எண்ணம் கொண்டார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டபோது, தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ எனும் திருமந்திரத்தைக் கூறியவர், வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்தவர், அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

    ஆரூரர் திருக்கயிலையினுள் சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றியவர், சேரமான் வருகையையும் எம்பெருமானிடம் விண்ணப்பித்தபோது பெருமானும் சேரமான் பெருமானை உள்ளே அழைத்துத் தாம் அழையாமல் எதற்கு வந்தார் எனக் கேட்கிறார். சேரமானும் திருவருள் வெள்ளம் ஆரூரருடன் தன்னையும் ஈர்த்துக் கொணர்ந்து வந்து அங்கே நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலா ஒன்று பாடியுள்ளதாகவும், அதனைச் செவிமடுத்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். சிவபெருமான் அதனைச் சொல்லக் கேட்டுத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக்கயிலையில் எம்பெருமான் முன்னர் அரங்கேற்றி ஆனந்தமடைந்தார். எம்பெருமான் ஆரூரரோடு சேரமானையும் சிவகணத் தலைவராய் தம்பால் நிலை பெற்றிருக்கப் பணிக்கச் சேரமான் பெருமான் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்து மீப்பெருவாழ்வு அடைந்தார்.

    கழறிற்றறிவார் நாயனார் குருபூசை தினம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவஞ்சைக்களம் என்ற ஸ்ரீவாஞ்சி குளம் கோயிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் இங்கு தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    சேரமான் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். இறைவனும் அவர்தம் பேரருளால் “யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் இரக்க உள்ளமும் தண்டாத கொடையும் காவல் மன்னர்க்குரியனவும் எல்லாம் கைவந்துறப் பெற்றார்”.

    பிற உயிர்கள் பேசும் மொழிகளை அறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். கழறுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமையால் கழற்றிற்றறிவார் என்ற பெயர் பெற்றார். சேர நாட்டு மன்னரானார். எனவே சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

    சேரமான் பெருமாள் நாயனாரின் படைப்புகள்

    சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார்.

    திருக்கைலாய ஞானவுலா, ஆதிஉலா என்றும் வழங்கப்படுகிறது. உலாவில் சிவபெருமான் போற்றப்படுகிறார். திருக்கயிலையில் தேவர்கள் கூடிச் சிவபெருமான் உலா வந்து காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால், எம்பெருமானும் அதற்கிசைவளிக்க, உமையவள் சிவனாருக்கு அனைத்து அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்க்கிறாள். மன்மதன் மாலை தருகிறான். சந்தனம் பூசிக் கிளம்பும் சிவனைத் தெருக்களில் உள்ள மகளிர் கண்டு காதல் கொள்கின்றனர். முனிவர்கள் பணிந்து வாழ்த்துகின்றனர். தேவர்கள் தொண்டு செய்கின்றனர் என்று அமைந்துள்ள நூல் இது. காண்பவர் நெஞ்சங்களைக் கவரும் ஒப்பற்ற தலைவனாம் சிவனது திருவுலாக் காட்சியை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.

    ‘உலா’ எனும் இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது இந்நூல். அந்த வகையில் இதை இலக்கணமாகக் கொண்டு, இதே அமைப்பில் பின்னாளில் உலா நூல்கள் இயற்றப்பட்டன.

    திருவாரூர் மும்மணிக்கோவை என்ற நூல் சிவனடியார்கள் செந்தமிழ் வல்லவர்களாகவும் இருந்தமை அறிய முடிகின்றது. மூன்று வெவ்வேறு மணிகளை மாற்றி மாற்றித் தொடுத்த மாலை போல், வெவ்வேறு மூவகைச் செய்யுள்கள் மாறி மாறி வர முப்பது பாடல்களைக் கொண்ட இந்நூலும் புதிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதுபோலவே, சிவபெருமானைப் போற்றுவதற்குக் கண்டுபிடித்த புதுப்புது இலக்கிய வடிவங்கள் பின்னாளில் சிற்றிலக்கியங்களாக மலர்ந்தன.

    பொன் வண்ணத்து அந்தாதி எனும் நூல் பதினொராம் திருமுறையில் உள்ளது. சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 101 பாடல்களை உடையது. ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

    சேத்திர திருவெண்பா, திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய நூல்களும் தோன்றின.

    திருச்சிற்றம்பலம்

     

     

     

     

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 2)

    ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாக இருக்க வேண்டும். அந்த மைந்தனைத் தாய் பிடிக்க, தந்தை அரிய வேண்டும். தாயும் தந்தையும் தம்முள் மனம் உவந்த துன்பமின்றி அமைந்த கறியைத்தான் தாம் உண்பது என்கிறார் பைரவ அடியார்.

    பள்ளிக்குச் சென்ற சீராளத் தேவரை அழைத்து வந்து நீராட்டி, அணிகலன்களைப் பூட்டி அழகு செய்து, வழமைபோல் அள்ளியணைத்து முத்தமிட நினைத்த திருவெண்காட்டு நங்கையார் வெருவுற்று நீங்கினார். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராளத் தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்று அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

    தாங்கள் பெற்றெடுத்த தெய்வச் செல்வனை, மழலை மாறா இனிய புதல்வனைச் சலங்கை கொஞ்சும் அழகிய கால்கள் இரண்டையும் மடியில் வைத்துப் புடை இடுக்கி மகனுடைய இரண்டு கைகளையும் தாய் பிடிக்கத் தந்தையார் கருவி கொண்டு தலையரிவார். பைரவர் தாயும் தந்தையும் தம்முள் மகிழ்ந்து துன்பமின்றி அரிந்து கறிசமைக்க வேண்டும் என்றதனால், தாயும் தந்தையும், சீராளத் தேவர் என்னும் மகன் இருந்ததால் தங்கள் திருத்தொண்டு முற்றுப் பெறாமல் தொடர்ந்து நிகழ வாய்ப்பளித்தான் என்று மகிழ்ந்திருந்தார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கையோ இன்று அடியவர் அமுது செய்யவில்லையானால் தன் கணவர் உயிர் வாழார், சீராளத் தேவர் அடியவருக்கு அமுதாக இருந்து தன் கணவர் உயிரைக் காத்து தன் தாலியை தமக்களித்தான் என்று இருவர் மனமும் மகிழ உணவு சமைத்தார்.

    சந்தனத்தாதியார் கறியைப் பல்வேறு வகையாக, விரைந்து சமைத்து சிறுத்தொண்டருக்கு விவரம் அளித்தவுடன், அவரும் பைரவ அடியாரைச் சென்று அழைத்து வந்து, அவரின் பாதங்களைத் தூய்மை செய்து, ஆசனத்தில் அமரச் செய்து மாலைகள் சூட்டிப் புனித நீரால் பாதங்களைக் கழுவினார். அப்புனித நீரை வீடு முழுக்கத் தெளித்துத் தூப தீபம் காட்டிப் பூசனை செய்து வேண்டினார். மனைவியுடன் வணங்கி திருவமுது செய்ய வேண்டும் என்று பணிந்து வேண்டி நின்றார். பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து, தாம் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் கொண்டு சுவையாக கறியமைத்தீரா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திருவெண்காட்டு நங்கை தலைக்கறி அமுதுக்காகாது என்று கழித்துவிட்டதாகக் கூறியபோது, அதுவும்கூட தாம் உண்போம் என்றார். இணையர் இருவரும் சிந்தை கலங்கித் திகைத்து நின்றனர். உடனே சந்தனத்தாதியார் அதையும் சமைத்து வைத்திருப்பதாகக் கூறி எடுத்துக் கொடுத்தார்.

    பைரவ அடியாருக்கு எவ்விதக் குறையுமின்றி அமுது படைப்பதில் மகிழ்ந்த திருவெண்காட்டு நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். ஆனால் அதன் பின்னும் பைரவ அடியார், தாம் தனித்து உண்ண மாட்டோம் என்றும் சிவனடியார் யாராவது இருந்தால் அழைத்து வரவேண்டும் என்றும் கூறினார். வெளியில் தேடிய சிறுத்தொண்ட நாயனார், எவரையும் காணவில்லை என்று கூறுகிறார். பைரவ அடியாரும், திருவெண்ணீறு அணிந்திருக்கும் அவரும் அடியார்தான் என்பதால் சிறுத்தொண்டரும் தன்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் என்றார். அடியார் திருவமுது செய்யும் பொருட்டு தாமும் உடனமர்ந்து உணவருந்துவதாகக் கூறி உண்ண ஆரம்பித்தார். அது கண்ட பைரவ அடியார். “உமக்கு ஓர் பிள்ளை இருக்கிறான் அல்லவா? அவனையும் அழைத்து வா. அவனும் நம்முடன் திருவமுது செய்யட்டும்” என்றார். அது கேட்டு சிறுத்தொண்ட நாயனார் கண் கலங்கி தங்கள் மைந்தன் அதற்கு உதவான் என்றார். ஆனால் பைரவ அடியார் அவர்களது மைந்தனும் வந்தால் தான் தாம் அமுது உண்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். சிறுத்தொண்ட நாயனார் செய்வதறியாது திகைத்து நின்றவர், செய்வதறியாது கணவன், மனைவி இருவரும் வாயிற்புறத்தில் நின்று மகனே வருவாய் என்று அழைக்க ஆரம்பித்தபோதும் மகன் வரவில்லை.

    சிறுத்தொண்டர் மீண்டும் இப்போது அடியார் அமுதுண்ண நீ வேண்டும் மகனே, என் துன்பத்தை நீக்கும் மைந்தா வருக என்று வேண்டியபோதும் வரவில்லை. திருவெண்காட்டு நங்கையோ, பிள்ளையைத் தந்தை அரிய கால்களைப் புடை இடுக்கி அழுத்திப் பிடித்தபோது சீராள தேவர் கால்களை உதறிய நேரத்தில் அந்தப் பிஞ்சுக் கால்களில் அணிந்திருந்த சிலம்பின் மணி ஒலிகள் தம் காதுகளில் ஒலித்த அந்த நொடியே அது கடைசிக் காட்சியாக ஆகிவிட்டாலும் அதனையே வைத்து மீண்டும் அழைத்தார்.

    வையம் நிகழும் சிறுத் தொண்டர்

      மைந்தா வருவாய் என அழைத்தார்

    தையலாரும் தலைவர் பணி தலை

      நிற்பாராய்த் தாம் அழைப்பார்

    செய்ய மணியே சீராளா வாராய்

      சிவனார் அடியார் யாம்

    உய்யும் வகையால் உடன் உண்ண

      அழைக்கின்றார் என்று ஓலம் இட. 

    எம்பெருமான் திருவருளால் அந்த அதிசயமும் நடந்தது. குழந்தை சீராளன் பாடசாலையிலிருந்து ஓடி வரும் குழந்தை போல துள்ளிக் குதித்து ஓடி வந்த அன்பு புதல்வனை அள்ளியெடுத்த அன்னை வாரிக் கையிலெடுத்து கணவரிடம் கொடுக்க, சிவனடியார் அமுதுண்ணப் பெற்றோம் என இருவரும் அகமகிழ்ந்தனர். மகனை அழைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்த சிறுத்தொண்டர் பைரவரைக் காணாது சிந்தை கலங்கித் திகைத்துக் கீழே விழுந்தார். கலத்தில் இருந்த கறியமுதும் காணாமல் அஞ்சினார். பைரவரைத் தேடி வீட்டின் பகுதியில் பார்த்தார். மறைந்த பைரவர் விடை மீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிக் கொடுத்த அதிசயமும் நடந்தது. திருத்தொண்டில் மூவரும் ஈடுபட்டதால் மூவருக்கும் அருள் செய்ய எம்பெருமான் மூவராகவே வந்தனர் போலும்!

    தனி வெள் விடை மேல் நெடும்

      விசும்பில் தலைவர் பூத கண நாதர்

    முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய்

      உள்ளோர் போற்றி இசைப்ப

    இனிய கறியும் திரு அமுதும்

      அமைத்தார் காண எழுந்து அருளிப்

    பனி வெண் திங்கள் முடி துளங்கப்

      பரந்த கருணை நோக்கு அளித்தார்

     

    சிறுத்தொண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருத்தொண்டில் வல்வினையும் நல்வினையும்!

    சிவனடியார்களின் திருத்தொண்டுகள் பற்றிய நூலாகிய திருக்களிற்றுப்படியார், அடியார்களின் செயல்களின் தன்மை சார்ந்து அவற்றை மெல்வினை, வல்வினை என வகைப்படுத்துகிறது. அவற்றுள், ஏறுமாறாக இல்லாமல், மிக இயல்பாக, எவரும் செய்யக்கூடிய எளிமையான சரியை கிரியைத் தொண்டுகள் மெல்லினையெனவும், நினைக்கவே அச்சமூட்டுகின்றனவும், பதற்றமும் ஏற்படுத்துகிற, அடுத்தவர்களால் எளிதாகச் செய்ய முடியாதனவாக உள்ளத் தொண்டுகள் வல்வினை எனவும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள் மெல்வினையை இலக்கண வகையாலுரைத்த திருக்களிற்றுப்படியார் வல்வினையை உதாரணங்கள் மூலமே காட்டியிருத்தல் குறிப்பிடத்தகும்.

    “வரங்கள் தருஞ்செய்ய வியிரவர்க்குத் தங்கள்
    கரங்களினாலன்று கறியாக்க – இரங்காதே
    கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை
    வல்வினையே யென்றதுகாண் மற்று.”

    திருஞானசம்பந்தர் தேவாரத்தில், “சிறப்புலவன் சிறுத்தொண்டன்” என்றும் “சீராளன் சிறுத்தொண்டன்”

    சிறுத்தொண்ட நாயனார் குறிக்கப்பட்டுள்ளார்

    சேக்கிழார் தம் வாக்கில்,

    “சீதமதி அரவினுமின் செஞ்சடைமேற்

    செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு

    வழிபாட்டால் மேதகையாரவர் முன்பு மிகச்

    சிறியராயடைந்தார் ஆதலினாற் சிறுத்தொண்டராய்

    நிகழ்ந்தா ரவனியின் மேல்”

    என்பார்.

    சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டும், அளவற்ற அன்பின் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் உலக இயல்புக்கு மாறானவை என்றாலும் அவை முக்தி தரும் என்கிறார். பைரவர் (சிவன்) வடிவில் வந்த அடியாருக்குத் தனது கைகளாலேயே தன் மகனைக் கறியாக்கிச் சமைத்து அன்போடு படைத்த சிறுத்தொண்ட நாயனாரின் வல்வினை பற்றி குறிப்பிடுகின்றது.

    உயிர் உள்ள ஆடு, கோழி போன்றவற்றை அறுத்தார்கள் எனும்போது, உயிர் அற்ற காய்கறிகளை அரிந்தார்கள் என்பது வழக்கு. சீராளத் தேவர் சிவயோக நிலையில் உயிர் பொருளாக இருந்த காரணத்தால் தெய்வச் சேக்கிழார் பெருமான் அரிந்தார் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளதோடு, அரியவினை செய்தார் என்று இரு பொருள்படக் கூறுகிறார். அதாவது ஒன்று அருமையான செயல் என்று குறிப்பிடுவது. மற்றொன்று சீராளத் தேவர் அரிகின்ற செயல் என்பதாம்.

    இத்தகைய அரிய செயல் செய்தவரை ஆண்டவன் அருள் செய்தது சற்று கடினமான முறைதான் என்றாலும் பெற்ற பிள்ளையை அரிந்து சமைக்கச் செய்தது கருணையின்பால் படுமா என்று தோன்றலாம். யாரை எப்படி ஆட்கொள்வது என்பதை அந்த இறைவனே முடிவு செய்கிறான். வடபுலத்தில் படையெடுத்துச் சென்ற பரஞ்சோதியார் வாதாபித் தென் நகரைத் தீக்கிரையாக்கியுள்ளார். அதில் பல உயிர்களும், குழந்தைகளும் உயிர் நீத்துள்ளனர். பரஞ்சோதியாரைப் பொருத்தவரையில் அது தனது தேசபக்தியின் வெளிப்பாடு என்பார். பற்றின்றி விருப்பு வெறுப்பின்றித் தேச பக்தியால் வாதாபியை வீழ்த்தியவர் தெய்வ பக்திக்காகப் பற்றற்று தம் பிள்ளையை அரிவாரோ என்று சோதிப்பார் போலும்! இவ்வினாவிற்கான விடையாக சிறுத்தொண்டர் வரலாற்றால் அடியவர்களின் பற்றற்ற நிலையை உலகிற்கு விளக்கியருளுகிறார்.

    சிறுத்தொண்டர் நாயனார் பல்லவ மன்னனின் படைத் தளபதியாக ‘வாதாபி’ சென்று சாளுக்கியர்களோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது தம்முடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில் நிர்மாணம் செய்துள்ளார். இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 40

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 1)

    திருதொண்டத்தொகையில் சுந்தரர் பெருமான், “செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்” என்று புகழும் சிறுத்தொண்டர் நாயனார், காவிரி பாயும் சோழ நாட்டில் வளம் கொழிக்கும் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் மரபினில் அவதரித்தவர். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். திருச்செங்காட்டங்குடி என்ற இந்த ஊர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் நாகபட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர்.

    சிவபெருமானிடம் மாறாத அன்பும் அதீத பக்தியும் கொண்டிருந்த சிறுத்தொண்ட நாயனார், அன்றாடமும் சிவனடியார்களுக்கு அமுது படைக்காமல் உண்பதில்லை என்ற மன உறுதியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு அவர்கள் விரும்பியவாறே எந்த உணவானாலும் இல்லையெனாது அகமகிழ்ந்து அமுது படைத்து வந்தார். அவர்களை வழிபட்டு, அவர்கள் முன்பு தம்மை மிகச் சிறியவராக எண்ணிப் பணிந்து, அவர்களுக்குப் பணிவிடைகளும் செய்துகொண்டிருந்த இவர் ‘சிறுத்தொண்டர்’ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

    உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு

      இன்றிப் பயின்று அவற்றால்

    தெள்ளி வடித்து அறிந்த பொருள்

      சிவன் கழலில் செறிவு என்றே

    கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று

      உதைத்த கழற்கு அன்பு

    பள்ளமடையாய் என்றும் பயின்று

      வரும் பண்புடையார்

    பரஞ்சோதியார் ஆயுர்வேதக் கலையும், அளவில்லாத வடநூல் கலையும், தூயப் படைத்தொழிலும், கற்று தேர்ந்தவற்றையும் சிவபெருமான்பால், சிவனடியார்பால் கொண்ட அன்பையும் ஒன்றாகக் கலந்து தெளித்ததால் அவர் கற்ற கலைகள் கலையின் பயனால் கிடைத்த உலகியல் இன்பங்கள் அனைத்தும் தூசு போல் பறந்து சிவன் கழலின் அன்பே நின்றது.

    யானை ஏற்றம், குதிரை ஏற்றம், போர் செய்வது போன்றவற்றில் வல்லவராகத் திகழ்ந்த பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவரிடம் படைத் தளபதியாக பணியாற்றினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். வாதாபியில் பெரும் படைப்பலம் கொண்ட இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து, அங்கிருந்து பொன்னும் மணிகளும் நிதிக்குவியலையும், ஏராளமான யானைகள், குதிரைகள் போன்றவற்றையும் கவர்ந்து வந்தாலும் அவருடைய மனம் மேலும் போரில் ஈடுபட விரும்பவில்லை. பரஞ்சோதியாரின் வீரதீரத்தை வெகுவாகப் பாராட்டிய மன்னன், அவரைப் பார்த்து தாமே படையெடுத்துச் சென்றிருந்தாலும் வாதாபியை வென்றிருக்க முடியாது என்றபோது மக்கள் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்ற பரஞ்சோதியை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை என்றனர். இதைக் கேட்ட மன்னன், சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் அடியாரை போருக்கு அனுப்பி பெரும் பாவம் செய்துவிட்டேனே என்று வருந்தியவர் எம்பெருமானிடம் தம் பிழைப் பொறுத்தருளவும் வேண்டினார். அதுமட்டுமின்றி பரஞ்சோதியாரை அழைத்து மேற்கொண்டு அவர் தம் செம்மைநெறித் தொண்டைத் தொடர வேண்டும் என்று வேண்டி, நிறையப் பொன்னும் பொருளும் வழங்கி அரச மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தார். பரஞ்சோதியார் மன்னரிடம் விடைபெற்று தமது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார்.

    வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டைக் கண்டு தன் வெற்றிச் சின்னமாக விநாயகரை தமிழகத்திற்குக் கொண்டு வந்திருந்தார். திருச்செங்காட்டாங்குடியில் கணபதி ஈச்சுவரம் இறைவரை வணங்கி பல்லவ மன்னனிடமிருந்து பெற்ற பொன்னும் பொருளையும் ஆலயத் திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி நெறியில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார், திருவெண்காடு நங்கை என்னும் அருள் நிறைந்த மங்கையை திருமணம் செய்து கொண்டார். திருவெண்காடு நங்கையும் சிறுத்தொண்டரின் சிவவழிபாட்டிற்கும், சிவனடியார் தொண்டிற்கும் பெரிதும் துணை நின்றவர், அவருடன் சேர்ந்து அன்றாடம் சிவனடியார்களை அன்போடு வரவேற்று முறையாக உபசரித்து அவர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் வழக்கத்தை நியமமாகக் கொண்டிருந்தனர். சிவனடியார்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து மகிழ்ந்திருந்தனர்.

    இத்தகைய இல்லறத்தின் பயனாக, சிவபெருமானின் அருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு சீராளன் என்னும் திருநாமம் இட்டு சிறப்பாக வளர்த்து வந்தனர்.

    நீராரும் சடை முடியார்

      அருளினால் நிறை தவத்துப்

    பேராளர் அவர் தமக்குப்

      பெருகுதிரு மனை அறத்தின்

    வேராகி விளங்கும்

      திரு வெண்காட்டு நங்கைபால்

    சீராளத் தேவர் எனும்

      திருமைந்தர் அவதரித்தார்

    சீராளத்தேவருக்கு அனைத்துச் சிறப்புகளையும் செய்துப் போற்றி அந்தந்தப் பருவத்துக்குரிய சிறப்புகளைச் செய்து பல விழாக்களையும் எடுத்து ஊர் மெச்ச வளர்த்து வந்தனர். மூவாண்டு நிறைந்தவுடன் முடி இறக்கியவர்கள், சீராளனின் பள்ளி செல்லும் பருவத்தில் பாடசாலையில் சேர்த்து, கலைகள் பல கற்கச் செய்து அவன் கல்வியில் சிறந்து விளங்குவதைக் கண்டு இன்புற்றிருந்தனர்.

    திருஞானசம்பந்தப் பெருமான் திருசெங்காட்டங்குடி ஈசனை வணங்க வந்தவரை, சிறுத்தொண்டர் வரவேற்றுத் தம் இல்லத்தில் தங்க வைத்தார். சிறப்பாக பணிவிடைகள் செய்து அவரை வணங்கினார். திருஞானசம்பந்தரும் உள்ளம் மகிழ்ந்து தன்னுடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரையும் சிறப்பித்துப் பாடியருளினார். சிறுத்தொண்டரின் திருத்தொண்டின் புகழ் அனைத்துப் பகுதிகளிலும் பரவியது. திருக்கையிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானும் மண்ணுலகிற்கு வர திருவுளம் கொண்டார். சிறுத்தொண்ட நாயனாரின் பக்தியையும் திருத்தொண்டின் சிறப்பையும் உலகறியச் செய்யும் எண்ணம் கொண்டார் சிவபெருமான். அடியார்கள் பலர் தங்களுக்கு எட்டாக்கனியாக விளங்கும் ஆண்டவனை நோக்கிப் போகும் வேளையில் அந்த சிவபெருமானே சிறுத்தொண்டரின் அன்பினை நுகர்வதற்கு வயிரவக் கோலத்தோடு புறப்பட்டு வந்தார். அவருடைய திருவிளையாடலும் ஆரம்பித்தது.

    இத்தன்மை நிகழும் நாள்

      இவர் திருத்தொண்டு இருங்கயிலை

    அத்தர் திருவடி இணைக் கீழ்ச்

      சென்று அணைய அவருடைய

    மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து

      அருளுதற்கு விடையவர் தாம்

    சித்தம் மகிழ் வைரவராய்த்

      திருமலைநின் றணைகின்றார். 

    இறைவன் சோதனையால் அன்று சிவனடியார்கள் ஒருவரும் அமுதுண்ண வரவில்லை. சிறுத்தொண்டரும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும் கவலையோடு காத்திருந்தனர். பின்னர் சிறுத்தொண்டர் சிவனடியார்களை அழைத்து வருவதாகச் சொல்லிக் கிளம்பினார். அச்சமயம் ஈசனே கருஞ்சட்டை அணிந்து இடக்கையில் சூலம் ஏந்தி பைரவ அடியார் வடிவமேந்தி திருச்செங்காட்டங்குடி ஊருக்கு வந்தார். எதிரில் பார்ப்பவர்களையெல்லாம் சிறுத்தொண்டர் வீடு எங்கே என்று கேட்டுக்கொண்டே வந்து,  சிறுத்தொண்டர் வீட்டின் முன் நின்று அடியார்களுக்கு அமுதிடும் சிறுத்தொண்டர் இருக்கிறாரா அவரைக் காண வேண்டி வந்துள்ளேன் என்று அன்போடு கூறினார். சிறுத்தொண்டரது மனைவியாரும் மகிழ்வுடன் அடியாரை அமுதுண்ண அழைத்தார். பைரவத் துறவியாய் வந்த சிவபெருமான் மிகுந்த பசியுடையவராய்க் காணப்பட்டார். அவரிடம் தன் கணவர் உணவிடுவதற்காக அடியாரைத் தேடிச் சென்றுள்ளார் என்றும் அடியாரான அவரே அங்கு வந்திருப்பது தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வார், சிறிது பொறுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அடியார் வேடத்தில் வந்திருந்த பெருமானும் சிறுத்தொண்டர் வரும்வரை  தாம் கனபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருப்பதாகவும், அவர் வந்தவுடன் தாம் வந்த செய்தியை தெரிவிக்கவும் கூறி ஆத்தி மரத்தின் கீழ் சென்று அமர்ந்தார்.

    அடியார்களைத் தேடிச் சென்ற சிறுத்தொண்டர் எங்கு தேடினும் ஒரு அடியவரையும் காணமுடியவில்லையே என்று மனைவியிடம் சொல்லி வருந்தினார். அவர் மனைவியாரும் பைரவ அடியார் வந்து சென்ற செய்தியைத் தன் கணவரிடம் கூறினார். அதைக் கேட்டவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாகச் சென்று ஆத்தி மரத்தின் கீழமர்ந்திருந்த அடியாரைக் கண்டு, அவர்தம் திருவடிகளைப் பணிந்து நின்றார். அப்போது அந்த பைரவ அடியார், அவரிடம், நீர் தான் சிறுத்தொண்டரா? என வினவியபோது அவரும் முகம் மலர, எத்தகுதியும் இல்லாத இச்சிறியோனை அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு எனப் பணிந்துக் கூறினார். அடியேன் செய்த தவத்தால் அன்று அவரைக் கண்டதாகவும், தயை கூர்ந்து அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுதுண்ணல் வேண்டும் என்றும் பணிந்து கேட்டுக்கொண்டார்.

    பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து தாம் அவரைக் காணும் ஆவலில்தான் வந்தாரேத் தவிர தமக்கு அவரால் உணவளிக்க முடியாது என்று கூறினார். இதைக் கேட்ட சிறுத்தொண்டரும் அவருக்கு வேண்டிய உணவை எப்படியாயினும் விரைந்து அமுது படைப்பதாக உறுதியளித்து பணிந்து நின்றார்.

    அடியாரும் மிகவும் அதிர்ச்சியான அச்செய்தியைக் கூறியும் சிறுத்தொண்டரின் மனது எந்த வகையிலும் தம் நியமத்திலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை. தாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் உண்ணும் வழமையுடையவர் என்றும், அதுவும் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை மட்டுமேதான் உண்போம்  என்றும், அந்த நாளும் அன்று தான் என்றும் கூறினார். ஆனாலும் தமக்கு அமுதளிக்க சிறுத்தொண்டரால் முடியாது என்றும் கூறினார். அது கேட்ட சிறுத்தொண்டர், சிவபெருமான் அருளால் தங்களிடம் அனைத்துச் செல்வங்களும், ஆடுகள், மாடுகள், என ஆநிரைகள் அனைத்தும் குறைவில்லாது உள்ளதாகவும், அவருக்கு அமுதாகும் பசு எதுவென தெரிவித்தால் அடியேன் விரைந்து சென்று சமைத்து, காலம் தவறாமல் அமுது படைப்பேன் என்றும் கூறினார்.

    ஆனால் அந்த சிவனடியாரோ பசுவென்றால், அவர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி தாம் கூறவில்லை என்றும், தாம் குறிப்பிடுவது நரப்பசு, அதுவும் ஐந்து வயது மிகாமல் இருக்க வேண்டும், அங்கத்தில் ஊனம் எதுவும் இல்லாதிருத்தல் வேண்டும், ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அதுவும் தாயார் பிடிக்க, தந்தை அரிந்து கொடுக்க வேண்டும். தாயும், தந்தையும் தம்முள் மனமுவந்த துன்பமின்றி, எந்தப் பிழையுமின்றி சமைத்த அந்த கரியினை மட்டுமே உண்பேன் என்று கூறினார். சிறுத்தொண்டரும், அவரைப் பணிந்து, சுவாமி அமுது செய்வதானால் அதுவும் தமக்கு அரியது அல்ல என்று திருவடியை வணங்கி இல்லம் வந்தார். கணவர் வருகையைக் கண்ட திருவெண்காட்டு நங்கை அடியார் விரும்பும் அமுது யாது என வினவினார்.

    அச்சம் எய்திக் கறி அமுதாம்

      என்னும் அதனால் அரும் புதல்வன்

    உச்சி மோவார் மார்பின் கண்

      அணைத்தே முத்தம் தாமுண்ணார்

    பொச்சம் இல்லாத் திருத் தொண்டர்

      புனிதர் தமக்குக் கறி அமைக்க

    மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார்

      வேறு கொண்டு அணைவார். 

    சிறுத்தொண்ட நாயனாரும் தம் மனைவியாரிடம் பைரவ அடியார் திருவமுது செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறினார். திருவெண்காட்டு நங்கையாரும் அவ்வாறு அமுது செய்விப்போம் தடையில்லை என்றாலும், அப்படி ஐந்து வயதுப் பிள்ளையை யாரிடம் பெறுவது எனக் கேட்டார். சிறுத்தொண்டர் மனையாளின் முகம் பார்த்து எவ்வளவு பொன் பொருள் கொட்டிக் கொடுத்தாலும், தாம் பெற்ற பிள்ளையை யார் தருவார்கள். அப்படியேத் தந்தாலும், தங்கள் பிள்ளையைத் தாங்களே அரிந்து கொடுக்கும் பெற்றோர்கள் இந்த உலகில் எவரும் இருக்கவே மாட்டார்கள். அதற்கு மேலும் காலம் தாழ்த்துவது பயன் இல்லை. எனை இங்கு உய்ய நீர் பயந்தானை அழைப்போம் யாம் என்றார்.

    தொடருவோம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 39

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறப்புலி நாயனார்

    “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனாரால் போற்றப்படுகின்ற சிறப்புலி நாயனார் காவிரியாறு பாய்ந்தோடும் சோழ நாட்டின் பழமையான திருவாக்கூர் திருத்தலத்தில் வேதம் போற்றும் அந்தணர் மரபில் அவதரித்தவர்.  சேக்கிழார் பெருமானால் வள்ளலார் என்று போற்றிப் புகழப்படும் மிகச் சிறந்த வள்ளன்மையுடன் விளங்கிய சிறப்புலியார் தன்னிடம் உள்ளதனைத்தும் சிவபெருமான் அளித்தது என்று எண்ணி அடியவர்கள் கேட்கும் முன்னமே அவர்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளித்து மகிழ்பவர்.

    பொன்னி நீர் நாட்டின் நீடும்

      பொற்பதி புவனத்து உள்ளோர்

    இன்மையால் இரந்து சென்றோர்க்கு

      இல்லை என்னாதே ஈயும்

    தன்மையார் என்று நன்மை

      சார்ந்த வேதியரைச் சண்பை

    மன்னனார் அருளிச்செய்த மறைத்

      திருவாக்கூர் ஆக்கூர்

    சிவனடியார்களை உபசரிப்பதைத் தவிர வேறு சிந்தனையும் பற்றும் அற்றவராக இருந்தார். இளவயதிலிருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தியும் அன்பும் கொண்டிருந்தவர், அன்றாடம் ஐந்தெழுத்து மந்திரத்தை முக்காலமும் நியமமாக ஓதி வேள்விகளைச் சிவாகம முறைப்படி நடத்தியும் மகிழ்வுற்றார். திருவாக்கூர் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீசுவரை அனுதினமும் வழிபட்டு வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். இடியின் ஓசையையும் மூழ்கடிக்கும் வேதங்களின் ஒலியால் நிறைந்திருந்த திருவாக்கூர் நகரம்,  மாயவரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    சிவனடியார்களின் மீது பேரன்பு கொண்ட சிறப்புலி நாயனார் நீறணிந்த அடியார்களைக் கண்டதும் அன்புடன் அவர்களை வணங்கி திருவமுது படைத்து மகிழ்வார். ஈடு இணையற்ற அன்பினாலும் விருந்தோம்பலினாலும் மக்களால் பெரிதும் போற்றப்படார்.

    இறையருளால் ஒரு சமயம், சிறப்புலி நாயனார் ஆயிரம் அடியார்களுக்கு திருவமுது படைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது அடியார்கள் வந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என மன வேதனை அடைந்தார். திருவாக்கூரில் கோவில் கொண்டிருக்கும் தான்தோன்றிநாதரை மனமுருக வேண்டியபோது, சிவபெருமான் தாமே சிவனடியார் வேடம் பூண்டு சிறப்புலி நாயனாரின் இல்லத்தில் நடக்கும் திருவமுதை ஏற்க வந்தார். அவரை பேரன்புடன் வரவேற்று  திருவமுது செய்வித்த சிறப்புலியாருக்கு மட்டுமின்றி சிவபெருமான் அங்கிருந்தோர் அனைவருக்கும் திருக்காட்சி அருளினார். இதனால் திருவாக்கூர் தான்தோன்றீசுவரருக்கு “ஆயிரத்தில் ஒருவர்” என்ற திருப்பெயரும் உண்டு. சிவனடியார் திருத்தொண்டில் சிறந்து விளங்கிய சிறப்புலி நாயனார் இறுதியில் பேரின்பமான வீடுபேற்றினை அடைந்தார்.

    திருவாக்கூர் கோயில் மகாமண்டபத்தில் சிறப்புலி நாயனாருக்குத் தனி சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கிய நிலையில் சிறப்புலி நாயனாருக்கு திருக்காட்சி அளித்த மூர்த்தியாகிய ஆயிரத்தில் ஒருவர் சன்னிதியும் உள்ளது.

    சிறப்புலி நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    உலகிலேயே சிறந்தது ஈதல் எனும் அறம் என்பார் ஔவை. கொடுப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், கொடுக்க மனம் இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் ஔவையார் விளக்குகிறார். அடியவர்கள் எப்போதும் தன்னால் இயன்றவரை அனைவருக்கும் உதவுபவர்கள். தங்கள் உடைமைகளையும், தங்களையுமே பிறருக்காக அளித்து மகிழும் வள்ளன்மை கொண்டவர்கள். சிறப்புலி நாயனாரும் அடியவரிடத்திலும் ஆண்டவனிடத்திலும் அளவிட முடியாத பக்தியுடன் பலத் திருத்தொண்டுகள் புரிந்தார். பக்தியில் முதற்படி தம்மிடம் உள்ளதை பிறருக்கு மனமுவந்து கொடுப்பது என்பதற்கு ஆதாரமாக சிறப்புலியார் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் மாரி போல வாரி வழங்கும் தன்மையுடையவராக இருந்தார்.

    ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த

      போது அடியில் தாழ்ந்து

    மூளும் ஆதரவு பொங்க

      முன்பு நின்று இனிய கூறி

    நாளும் நல் அமுதம் ஊட்டி

      நயந்தன எல்லாம் நல்கி

    நீளும் இன்பத்துள் தங்கி

      நிதிமழை மாரி போன்றார்.

    திருஞான சம்பந்தர் பெருமான் தமது தேவாரப் பதிகத்தில், “இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் வாழும் மக்கள்” என்கிறார்.

    அக்கிருந்த ஆரமும்

      ஆடரவும் ஆமையும்

    தொக்கிருந்த மார்பினான்

      தோலுடையான் வெண்ணீற்றான்

    புக்கிருந்த தொல்கோயில்

      பொய்யிலா மெய்ந்நெறிக்கே

    தக்கிருந்தார் ஆக்கூரில்

      தான்தோன்றி மாடமே.

     

    நன்மையான் நாரணனும்நான்முகனும் காண்புஅரிய

    தொன்மையான்தோற்றம்கேடு இல்லாதான் தொல்கோயில்,

    இன்மையால் சென்றுஇரந்தார்க்கு இல்லைஎன்னாது ஈந்துஉவக்கும்

    தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

     

    சிறப்புலி நாயனார் அன்றாடம் எம்பெருமானின் அடியார்களுக்கு வேண்டுவனவற்றையெல்லாம் அளித்து தொண்டாற்றி வந்ததால், சிறப்புலி நாயனாரின் அறத்தினால் உளம் மகிழ்ந்து, ஆயிரமாவது அடியாராக சிவபெருமானே நேரில் வந்து அவர் அளித்த திருவமுதை ஏற்றுக்கொண்டார். திருவாக்கூர் கோயில் இந்த நிகழ்வுக்குச் சான்றாக விளங்குகின்றது. இங்கு இறைவன், ஆயிரத்தில் ஒருவர் என்று போற்றப்படுகிறார்.

    திருச்சிற்றம்பலம்

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 38

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 33 சாக்கிய நாயனார்

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!

    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்ற்!

    வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!

    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

     

        

    தொண்டை நாட்டில், திருச்சங்க மங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சாக்கிய நாயனார். சாக்கியர் என்பது சாக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்ற பொருளாகும். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தெரியவில்லை. இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அனைத்து உயிர்களிடத்தும் அருளுடையவராக விளங்கிய சாக்கியர், பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்றவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர் நெறி என்று உணர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். ஆனாலும் அவர் சாக்கிய உடையை மாற்றிக் கொள்ளாமல் அதே உடையிலேயே இருந்தார்.

    “வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

     என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைப் புகழ்கின்றார்.

     

    காணாத அருவினுக்கும்

      உருவினுக்கும் காரணமாய்

    நீள் நாகம் அணிந்தார்க்கு

      நிகழ் குறியாம் சிவலிங்கம்

    நாணாது நேடியமால் நான்

      முகனும் காண நடுச்

    சேணாரும் தழல் பிழம்பாய்த்

      தோன்றிது தெளிந்தாராய்.

     

    சிவலிங்க வழிபாடே சிறந்தது என்று மனம் தெளிந்த சாக்கியர் உள்ளம், நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்ட பின்னரே உண்ண வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டார். வெட்டவெளியில் கேட்பாரற்று இருந்த ஒரு சிவலிங்கத்தைக் கண்டு களிப்புற்றவர், செய்வதறியாது அருகிலிருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டபோது சிவபெருமானும் அக்கல் அடியை இனிமையாக அன்புடன் ஏற்றுக்கொண்டார்.  இறைவன் மீது கொண்ட அளவிலாத அன்பினாலே அவன் திருவருளையே நினைந்து தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கல் எறிந்த சாக்கியரை எம்பெருமான் மகிழ்ந்து ஏற்றார். மறுநாளும் சாக்கியர் சிவபெருமானைக் கண்டு களிக்க வந்தார். முதல் நாள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தவர், தாம் செய்த அச்செயல் இறைவன் திருவருளாலே நடந்துள்ளது என்று உணர்ந்து நாளும் அதையேச் செய்வது இறைவன் திருவுளம் என்றும் உணர்ந்தார்.

     

    சாக்கியரின் கல்லெறியும் வழிபாடு இங்கனமே தொடர்ந்தது. ஒரு நாள் கல் வழிபாட்டைச் செய்ய மறந்து உணவு உண்ண அமர்ந்தவர், எம்பெருமானுக்கு கல்லெறியாமல் உண்ண வந்துவிட்டோமே என்று பேரன்புடன் கல்லை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் சாக்கியர். அப்போது அவர் முன் சிவபெருமான் உமாதேவியுடன் தோன்றி திருக்காட்சி வழங்கினார். தேவாதி தேவர்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு சாக்கிய நாயனாருக்குக் கிடைத்தது. அவருக்கு சிவலோகமும் அன்போடு வழங்கினார் எம்பெருமான்.

     

    சாக்கிய நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே நாயனார் சாக்கிய நாயனார். இவர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவபெருமானை வழிபடுவோர் மலர் தூவியும், பதிகங்கள் பாடியும் வழிபடுவது வழக்கம். ஆனால் சிவபெருமானைக் கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார்.

    பிறப்பதும், இறப்பதும் மனித இனத்தின் சாபக்கேடு என்பதை உணர்ந்த சாக்கிய நாயனார், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்லப் போகிறோம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தார். பிறப்பையும், இறப்பையும் தவிர்க்க வேண்டுமென்ற கருத்து அவர் எண்ணத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது. கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகருக்குச் சென்றார். காஞ்சி மாநகர் தத்துவக் கோட்டையாகத் திகழ்ந்த பொற்காலம் அது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டில் இருந்து பலர் காஞ்சி மாநகர் வந்து தத்துவம் பயின்று சென்றதாகவும் வரலாறு அறியத் தருகின்றது. சாக்கிய நாயனார் காஞ்சி மாநகர் சென்று பல நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களின் உரைகளைக் கேட்டுத் தாமும் அறிஞராய்த் திகழ்ந்தார்.

     

    பௌத்தர்களின் அரிய  “திரிபிடகம்” என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார். தத்துவத்தின் ஈர்ப்பால் சாக்கிய மதத்தைச் சேர்ந்தவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர்நெறி என உணர்ந்தார். ஆனாலும் சாக்கியர் தோற்றத்திலேயே இருந்தார். சிவநெறியில் சிந்தை இருந்தாலும் புறத்தே சிவ வேடம் தரிக்காமல் சாக்கிய வேடத்திலேயே இருந்தார்.

     

     

    எந்நிலையில் நின்றாலும்

      எக்கோலம் கொண்டாலும்

    மன்னிய சீர்ச் சங்கரன் தாள்

      மறவாமை பொருள் என்றே

    துன்னிய வேடம் தன்னைத்

      துறவாதே தூய சிவம்

    தன்னை மிகும் அன்பினால்

      மறவாமை தலை நிற்பார்

     

    வினை என்பது சடம். வினைச்செயல் செய்கின்ற உயிர் செய்கின்ற செயல், செயலுக்கேற்ற பலன், பலனைக் கூட்டுகின்ற இறைவன் இந்த நான்கும் சைவத்திற்கு அடிப்படை. இறைவன் வினைப்பயனைக் கூட்டுவிக்கின்றான். எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும், எனத் துணிந்து சாக்கியர் வேடம் தரித்தவாறே சிவபெருமானை வணங்கி வந்தார்.

     

    செய்வினையும் செய்வானும் அதன்

      பயனும் கொடுப்பானும்

    மெய் வகையால் நான்காகும் விதித்த

      பொருள் எனக் கொண்டே

    இவ்வியல்பு சைவநெறி அல்ல

      வற்றுக்கு இல்லை என

    உய்வகையால் பொருள் சிவன் என்று

      அருளாலே உணர்ந்து அறிந்தார்.

     

    கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.

     

    செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனை வழங்கி ஊட்டுபவனான இறைவன் ஒன்று என உண்மை காணும் வகையினால், விதியினால் கிடைக்கும் பொருட்கள் நான்காகும் என்ற தெளிவும் கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், நிலை பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் உணர்ந்து அறிந்து கொண்டார்.

     

    அகம் நிறைந்த பேர்

      உவகை அடங்காத ஆதரவால்

    மகவு மகிழ்ந்து உவப்பார்கள்

      வன்மை புரிசெயலினால்

    இகழ்வனவே செய்தாலும் இளம்

      புதல்வர்க்கு இன்பமே

    நிகழும் அது போல் அதற்கு

      நீள் சடையார் தாம் மகிழ்வார்.

     

    எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் இல்லை. செயல்புரிவார் உள்ளத்தில் திகழும் நினைவுகளுக்கே முதன்மை கொடுக்கிறோம்.

     

    கல்லாலே எறிந்ததுவும் அன்பான

      படி காணில்

    வில்வேடர் செருப்பு அடியும்

      திருமுடியில் மேவிற்றால்

    நல்லார் மற்று அவர் செய்கை

      அன்பாலே நயந்து அதனை

    அல்லாதார் கல் என்பார்

      அரனார்க்கு அஃது அலராமால்.

     

    சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற சாக்கிய வேடத்தையும் தொடர்ந்தார். பெருந்தவமுடைய சாக்கிய நாயனார் சிவபெருமானின் அருட்செயலே அனைத்தும் என்ற உணர்வுடையவராக விளங்கினார். கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே என்பதற்கு ஆதாரமாக, வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்ற தன்மையை அறிவோம். நாயனார் அன்பால் விரும்பிய அச்செயலை, அவர் எறிந்தது கல் என்பர் அறியாதார். ஆனால் அது எம்பெருமான் சிவனுக்கு மனமிக்க மலரேயாகும்.

     

    சிவபெருமானை வழிபட தூய அன்பும், உண்மையான பக்தியும் இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். வீரட்டானேசுவரருக்கு எதிரே சாக்கிய நாயனார் திருமேனி கையில் கல்லுடன் காணப்படுகிறது. வீரட்டானேசுவரர் திருமேனி மீது சாக்கியர் கல்லால் எறிந்ததால் ஏற்பட்ட வடுவும் காணப்படுகிறது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

     

    “திருச்சிற்றம்பலம்”

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 37

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 32 சோமாசிமாற நாயனார்

     “அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
    பாடல் பெற்ற திருத்தலமான, மாஞ்சோலை சூழ்ந்த ஊரான ‘அம்பர்’ மாகாளம் (தற்போது “கோவில் திருமாளம்’ என அழைக்கப்படுகின்றது),  சோழ வளநாட்டில் அமைந்துள்ள ஒரு புண்ணியத் தலமாகும். இவ்வூரில் வேதங்கள் பயிலும் மறையவர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார். சோமயாகம் செய்பவர்கள் சோமையாசி என்று அழைக்கப்பட்டனர். இதுவே பின்னாளில் சோமாசிமாற நாயனார் என்று மாறியுள்ளது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். இவர் சிவனடியார்கள் என்றால் அவர் எக்குலத்தவராயினும் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.

    அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்

        அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்

    உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்

        உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்

    நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்

        நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே

    இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

    எந்நாளும் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து, சிவபெருமானின் “நமச்சிவாய” எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் ஒழுக்கம் உடைய இவர் தம் இளம் வயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய பொருள் உதவிகளையும், உணவுகளையும் அளிப்பதைத் தமது தலையாயக் கடமையாகவும் கொண்டிருந்தார்.

    பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்த, சோமாசிமாற நாயனார்  பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்குச் சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர். சோமாசிமாற நாயனார் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இந்த நேரத்தில் சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை எம்பெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. சுந்தரரின் பாதம் பணிந்தால் எம்பெருமானை எளிதில் அணுகமுடியும் என்று எண்ணியவர், சுந்தரரின் நட்பைப் பெறும் முயற்சியில், தினமும் அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் அளிப்பார். பரவை நாச்சியாரும் சுந்தரருக்கு கீரையை சமைத்துப் போட, அவரும் தினமும் அவருக்கு யார் அந்த தூதுவளைக் கீரையைத் தருகிறார் என்று கேட்டார்.

    பரவை நாச்சியாரும், அவருக்கு சோமாசிமாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அவர்களுக்கு வேண்டுவது யாது என்று வினவினார். சோமாசிமாற நாயனாரும், தாம் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை எம்பெருமான் தாமே வந்து பெற்றுக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனத் தம் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலைத் தம் மனக்கண்ணில் முன்னரே அறிந்துகொண்ட சுந்தரரும், இறையருளால் அனைத்தும் நலமாகும் என்று உறுதியளித்தார். வேள்விக்கான நாளும் வந்தது.

     

    வேள்வி நிறைவுபெறும் தருணத்தில் அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அனைவரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தபோது, பறை ஒலியும் கேட்டது. தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன் பறையை இசைத்தபடி, தோளில் இறந்த மானின் உடல் கிடக்க நடந்து வந்துகொண்டிருக்கிறார். கைகளில் நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வரும் அவருடன், தலையில் மதுக்குடத்தைச் சுமந்தபடி வந்த அவர் மனைவி,  தன் முதுகில் இரு பிள்ளைகளையும் கட்டிக்கொண்டிருந்தாள்.

     

    ஆனால் சோமாசிமாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடியபோது சோமாசிமாற நாயனாரோ, அனைத்தையும் அறிந்திருந்தவராக அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் எடுத்துச் சென்று அவரிடம் நீட்டினார். சுற்றியிருந்தவர்கள், எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டனர். அப்போதும் சோமாசிமாற நாயனாரோ மிகுந்த பக்தியோடு பணிந்து நின்று அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் அளித்தார். அப்போதுதான் அங்கு அந்த அதிசயம் நடந்தது. அந்த வேடன் நாயனார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற அதே கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும், விநாயகரோடும், முருகப் பெருமானோடும் பிரகாசமாகக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர். ‘காட்சி கொடுத்த நாயகர்’ என்ற பெயரும் சோமாசிமாற நாயனாருக்கு உண்டாயிற்று.

     

    சோமாசிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    புகழ், பயன் என ஏதும் கருதாது உலக நலன்களுக்காகச் செய்யப்படும் வேள்விகளால் உலகத்தில் துன்பம் நீங்கும், மழை பொழியும், வளம் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.

    கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

    செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

    முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

    என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.

    ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!

    என்னும் அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, ஒருவர் எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர் ஈசருக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் என்று இயல்பினர். எப்போதும் சிந்தை தெளிய சிவன் ஐந்தெழுத்தை ஓதுபவர். அப்படிப்பட்ட அடியவர்கள் யாராயினும் வேறுபாடு கருதாது அவர்களைப் போற்றி வணங்கினார்.

    எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு

      அன்பர் என்றால்

    அத் தன்மையர் தாம் நமை

      ஆள்பவர் என்று கொள்வார்

    சித்தம் தெளியச் சிவன்

      அஞ்செழுத்து ஓதும் வாய்மை

    நித்தம் நியமம் எனப்

      போற்றும் நெறியில் நின்றார்

    அடியவர்களுக்குள் சாதி, இனம் பாராது, சிவபெருமானை அவர்கள் உருவில் கண்டு வணங்கல் வேண்டும். இக்கொள்கையை சோமாசிமாற நாயனார் கடைபிடித்து இறைவனையும், இறையடியார்களையும் போற்றினார். நாயன்மார்களில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். தீண்டத்தகாதவராகப் பயிர் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாரிலிருந்து, வேடர் (கண்ணப்பர்), செம்படவர் (அதிபத்த நாயனார்) , வண்ணார் இனத்தைச் சேர்ந்தவர் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார், குயவர் (திருநீலகண்டர்) என்றும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் வரையில் அத்தனை சாதிகளையும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பார்க்கிறோம். இவர்களில் ஞானசம்பந்தர் உள்பட பன்னிரண்டு வைதிக பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் சோமாசிமாற நாயனாரும் ஒருவர்.

    எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டபோதும், அத்வைதத்தின் அரும்பொருள் அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் ‘விநாயகனும் முருகனும்’ என்றும் தெளிந்தார்.

     

    திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்தலமான திருமாளம் எனும் தலத்தில் ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராசப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை. திருமாகாளம் மகாகாளநாதர் கோயிலில் பிராகாரத்தில் சோமாசிமாற நாயனார் அவர் மனைவி சுசீலை தனி சந்நிதி உள்ளது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

     

    “திருச்சிற்றம்பலம்”

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்

    தொண்டை நாடு சான்றோர் உடைத்து, எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித்த தொண்டை நாட்டில், நீர் வளமும் நில வளமும் மிக்க ஊரான திருவேற்காட்டில், வேளாண்மை குலத்தில் தலைமை சார்ந்த பெரியார் ஒருவர் வாழ்ந்தார். திருநீற்றினையே மெய்ப்பொருளாகக் கருதியவர், சிவனடியார்களுக்கு அன்புடன் திருவமுது படைத்து, அவர்களையே சிவமெனக் கருதித் துதித்துப் பின்னர் தாம் உண்ணும் நியதியைக் கொள்கையாகக் கொண்டவர்.

    தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்

        தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று

    கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்

        கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்

    விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள

        வெகுண்டிடலான் “மூர்க்கர்” என விளம்பும் நாமம்

    எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்                                                 

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

    அடியார்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு அன்புடன் அளித்து அமுதும் செய்வித்து வந்தார் மூர்க்க நாயனார். அடியவர்கள் திரண்டு வர ஆரம்பித்ததால் அவர் தம் உடைமைகளை விற்றும் திருத்தொண்டு செய்து வந்தார். இருப்பினும் மேலும் அத்தொண்டு செய்வதற்குப் போதிய பொருள் இன்மையால், முன்பு அவர் கற்ற சூதாட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதன் மூலம் பொருள் ஈட்டி அடியவர்களுக்கு அமுது படைக்க எண்ணினார். ஆனால் அவ்வூரில் சூதாடுவோர் இல்லாமையினால் அவ்வூரை அகன்று ஒவ்வொரு சிவத்தலங்களுக்கும் சென்று, அவ்வூரிலுள்ள சிவபெருமானை உள்ளம் உருகி வழிபட்டுப் பின் சூதாடி அதன் மூலம் வரும் பொருளினால் அடியவர்க்கு அமுது ஊட்டி வந்தார்.

    பெற்றம் ஏறிப் பலிக்கு வரும்

      பெருமான் அமரும் தானங்கள்

    உற்ற அன்பால் சென்று எய்தி

      உருகும் உள்ளத்தொடும் பணிந்து

    கற்ற சூதால் நியதியாம்

      கடனும் முடித்தே கருதாரூர்

    செற்ற சிலையார் திருக் குடந்தை

      அடைந்தார் வந்து சில நாளில்

    பின்னர் கும்பகோணத்தை அடைந்து அங்கே சூதாடிப் பொருள் தேடி தம் கடமையை நிறைவேற்றியவர், சூதிலே முதல் ஆட்டத்தில் தோற்றவர் பின்னாட்டங்களிலே பல முறையும் வென்றவர் பொருள் பெற்றார். சூதிலே மறுத்தவர்களை மூர்க்கமாக உடைவாளை உருவிக் குத்தியதால், நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினால் பெற்ற பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்தபின் கடைப்பந்தியில் அமர்ந்து தம் பசியாறினார்.

    சூதினில் வென்று எய்தும் பொருள்

      துரிசு அற்ற நல் உணர்வில்

    தீது அகல அமுது ஆக்குவார்

      கொள்ளத் தாம் தீண்டார்

    காதலுடன் அடியார்கள் அமுது

      செயக் கடைப் பந்தி

    ஏதம் இலா வகை தாமும் அமுது

      செய்து அங்கு இருக்கும் நாள்.

    எம்பெருமானின் அடியார்களுக்கு அன்றாடம் அமுது படைத்தவர், அப்பெருமக்களின் அருளால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெற்று இவ்வுலகை விட்டு இறையடி நிழல் சென்று சார்ந்தார்.

    மூர்க்க நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    “உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந்கானே” என்று சிவஞான சித்தியாரிலும்,

    “எல்லா முன்னுடைமையே எல்லாமுன் அடிமையே எல்லாமுன்னுடைய செயலே” – “அறிந்தபடிநின்று சுகநான் அவ்வண்ணமாகாமை இவ்வண்ணமாயினேன் அதுவுநின் செயலதென்றே கல்லாத வறிஞனுக்குள்ளே யுணர்த்தினை” – “சந்ததமுமெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்” என தாயுமான சுவாமிகள் பாடலிலும்,

    “என்செயலாவதி யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்” என பட்டினத்தடிகள் பாடலிலும் வருவன கொண்டு, செய்யும் செயல் யாவும் சிவனருளால் மட்டுமே நடைபெறுவதை அறியத் தருகின்றனர்.

    ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான சூதாட்டத்தை இறையடியாரான ஒரு நாயனார் செய்வது தகுமோ என்ற வினா எழுவது இயல்புதானே. ஆனால் இந்நாயனார் அந்த சூதாட்டத்தை தம் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தம் குடும்பத்திற்காகவும், சுய நோக்கிற்காகவும் செய்திருந்தால் அது மாபெரும் தவறாகும். ஆனால் நாயனார் தாம் முன்பு கற்ற அந்த சூதாட்டத்தை தம் வாழ்வு வளம் பெற பயன்படுத்தவில்லை. தம் உடைமைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அடியவர்களின் நலன் கருதி அந்த சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அடியார்களுக்கு அமுது படைக்கவும், அவர்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளி வழங்க வேண்டும் என்ற தம் கொள்கை நிறைவேறவும் அவர் இறுதி வரை பாடுபட்டார். பொதுவாகவே அடியார்கள் தாம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற தம் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அதனால் வரும் பாவத்தை ஏற்கவும் அவர் தயாராக இருந்தார். அந்த வகையில் அவர் சூதாடி வந்த பொருளில் தனக்காகவோ, தன் குடும்பத்தினர்க்காகவோ ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை.

    “செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்து சிலர் எய்தற்கரியதனை எய்தினர்கள் ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு” என்று திருக்களிற்றுப்படியார் கூற்றினாலும்,

    “நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடுங் கோயிற் பகைவற் கதாமே” எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியதாலும் அறிய முடிகிறது.

    வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்       

    மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்       

    ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

    நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்       

    நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

    அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்       

    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                   

     

    நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்        

    நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

    கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி        

    கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

    குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்        

    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

    பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்        

    பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 

    சுந்தரர் தேவாரம்

     

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 35

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 30  தண்டியடிகள் நாயனார்

     

     

    சோழநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமான ஒன்றான திருவாரூர் எனும் திருத்தலம் நால்வர் பெருமக்களால் பாடப்பெற்ற அருட்தலமாம். நம்பியாரூரர் வலது கண் பெற்ற திருத்தலம் என்பதோடு ஆரூரருக்கு இறைவன் தோழமை கொடுத்த மிகத் தொன்மையான அருட்தலமும் இதுதான். “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” என்று தண்டியடிகள் நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் புகழப்படும், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டிருந்த தண்டியடிகள் நாயனார், செங்குந்தர் மரபில் அவதரித்தவர். பிறந்தபோதே கண்காணார், புறக்கண்ணால் உலகத்தைக் காண இயலாத இவர் தம்முடைய அகக்கண் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார். கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி நின்றவர் இவர்.

    திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி

        சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்

    குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று” என்று

        குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண்

    அருளாலே விழித்தெவரும் அந்தராக

        அமணர் கலக் கம்பலகண் டவர்கள் பாழிப்

    பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப்

        பரனருளால் அமருலகம் பற்றி னாரே.

    தண்டியடிகள் நாயனார், அன்றாடம் தண்டியடிகள் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்குச் சென்று தேவாசிரிய மண்டபத்தை வணங்கி,  ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். திருவாரூர்க் கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கமலாலயம் எனும் திருக்குளம், பெருமானுக்குத் தீர்த்தக் குளமாகவும், அடியவர்கள் குளிப்பதற்கும் உரியதாகும். அங்கு வாழ்ந்த சமணர்கள், ஒரு நாள் அங்கு பாழிகளும், பள்ளிகளும் அமைத்ததால் குளத்தின் இடமும் குறைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள் அக்குளத்தினை தூர்வாரி அகலப்படுத்தவும் எண்ணினார்.

    பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்தும் குளத்தினை சீரமைக்கும் திருத்தொண்டினைச் செய்தவர். அதற்கு வழிகாட்டும் வகையில் குளத்தை அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியையும், குளக்கரையில் ஒரு தறியையும் நட்டார். இரண்டையும் ஒரு கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டி ஒரு கூடையில் எடுத்தவர் அதைக் கரைமேட்டில் கொட்டினார். தண்டியடிகள் நாயனாரின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத் தொடங்கியது. தண்டியடிகள் நாயனாரின் செயலைக் கண்ட சமணர்கள் பொறாமை கொண்டு, இத்தொண்டினைக் கண்டு வெதும்பியவர்கள், மண்ணைக் கிளறினால் அதில் உள்ள சிற்றுயிர்கள் அழிந்து போகும் என்று கூறி அதனைத் தடுத்தனர்.

    சிவபெருமானுக்குத் தான் செய்யும் இப்பணியால், சிறு உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் நேராது என்றார். ஆனால் அவர்கள் தாங்கள் கூறிய அறிவுரை காதில் விழவில்லையா, கண்தான் இல்லை காதுமா செவிடு என்று கேட்டவர்களிடம்,

    “சிவபெருமான் திருவடிகளன்றி வேறு ஒன்றையும் நான் காணவில்லை. காண விரும்பவும் இல்லை. சிவபெருமானின் திருவருளால் என் கண் காணப்பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.

    அதற்கு சமணர்கள் தண்டியடிகளிடம், அவர் தம் கடவுள் அருளால் கண் பெற்றால் தாங்கள் அந்த ஊரை விட்டே சென்றுவிடுவதாகக் கூறியவர்கள், அவர்தம் கரத்திலிருந்த மண் வெட்டியையும், கூடையையும் பிடுங்கி எறிந்தனர்.

    மிகவும் வருந்திய தண்டியடிகள் நாயனார், ஆரூர் பெருமானின் திருமுன் நின்று, தனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும், என்று கண்ணீர் மல்க வேண்டியவர், அப்படியே தூங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய எம்பெருமான், “மனக்கவலையை விடு. உன் கண்கள் நாளை ஒளி பெறும். உன் தொண்டினைத் தடுத்துப் பழித்துப் பேசியவர்கள் கண்களை இழப்பார்கள்” என்று அருளினார். அன்று இரவே சோழ அரசனின் கனவிலும் தோன்றி, “தண்டியடிகள் நாயனார் செய்யும் கமலாலய குளத் திருப்பணிக்கு ஊறு விளைவிக்கும் சமணர்களின் வழக்கினை முடித்து வை.” என்று கட்டளையிட்டார். சோழ அரசன் கண்விழித்து எழுந்து திருவாரூரை அடைந்தவர், தண்டியடிகளைச் சந்தித்து நடந்தவைகளைக் கேட்டறிந்தார். பின்னர் சமணர்களை அழைத்து விசாரித்தார். சமணர்கள் இறையருளால் தண்டியடிகளுக்கு கண்ணொளி கிடைத்துவிட்டால் திருவாரூரைவிட்டு வெளியே செல்வதாக ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். மறுநாள் இருத்தரப்பினரையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு வந்தார் சோழ அரசன். அடிகளாரைப் பார்த்து, அவரை கண் பெறும் நிகழ்வினைச் செய்து காட்டும்படி கூறினார். தண்டியடிகள் நாயனார் இறைவனை மனத்தால் வழிபட்டு திருவைந்தெழுத்தை ஓதியபடி குளத்தில் மூழ்கி எழுந்தபோது, கண்கள் செம்மையாகக் காண ஒளிபெற்று எழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர். தண்டியடிகள் நாயனார் பார்வை பெற்ற அதே நேரம் அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் கண்பார்வை பறி போனது. தண்டியடிகள் நாயனாரின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம் அடைந்தனர். சமணர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர்.

    ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி லின்றென் கண்பெற்று
    வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்;
    ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ” தென்றே யஞ்செழுத்தை
    வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்.

    தண்டியடிகள் நாயனார் தான் எண்ணியபடி, திருக்குளத்தை அரசரின் உதவியுடன் பெரிதாகக் கட்டி முடித்தார். தண்டியடிகள் நாயனாரின் அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி பெருமிதம் கொண்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார் சிவபெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.

    தண்டியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” திருமந்திரம்.

    சிவன் கழல் அல்லது வேறு காணாத அக நோக்கு உடைமையன்றிப் புறத்தில் வேறு எதையும் காணாதவர் என்ற குறிப்பினால் பிறந்தபோதே கண்காணார் கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி நின்றார். அகக்கண் காட்சியாகிய ஞானக்கண் காட்சிக்கு சிவம் அல்லாது  வேறு ஒன்றும் தோன்றாது. அகக் காட்சியில் சிவதரிசனம் பெற்றோர் புறக்காட்சியாகிய மற்றெந்த உணர்வுகளும் முற்றாக அற்றிருப்பர் என்பதற்கிணங்க இந்நாயனார் பிறப்பிலேயே புறக்கண் அற்றவராய்ப் பிறந்துள்ளார் என்பதை சேக்கிழார் பெருமான்,

    தண்டியடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமைத் தவமுடையார்

    அண்டவாணர் மறைபாட ஆடுஞ்செய்ய கழல்மனத்துக்

    கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங்

     கண்டவுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார்”

    என்பார்.

    எனவே, “நாட்டம்மிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும்) அடியேன்” என்னும் இத்திருத்தொண்டத்தொகை வாக்கு நிற்றல் அறியப்படும்.

    காணுங் கண்ணாற் காண்பது மெய்த் தொண்டேயான கருத்துடையார்” என அடுத்துவரும் சேக்கிழார் திருவாக்காலும் அறியப்பெறும்.

    “கந்தை மிகையாங் கருத்து” எனத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் வருவனவற்றாலும் விளங்கப் பெறும்.

    எவ்வகைப் பற்றுதலுமின்றி முழுமையாகச் சிவன் பேரிலும் சிவன் சார்பிலும் பணி செய்து கிடப்பவர்க்கு சிவ புண்ணியம் எனப்பட்டு, அதன் தரமும் தகுதியும் உயர்வாகும்.

    நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளமுண் டாதல்

     தானென ஒன்றின்றியே தானதுவாய் –

    நானென வொன்று இல்லென்று தானே எனுமவரைத்

    தன்னடி வைத்து இல்லென்று தானும் இறை”

    எனச் சிவஞான போதத்திலும்,

    “யாதே செய்து மியாமலோ நீ என்னில் ஆதே என்னும் அளவில் பெருமையான்” எனத் தேவாரத்திலும்,

    “சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தி என்றுஞ் செய்ததிவனுக் கெனக்குச் செய்ததென்றும் பவமகல உடனாகி ஏன்று கொள்வன்” எனச் சிவஞான சித்தியாரிலும் வருவனவற்றால் அறியப்படும்.

    தண்டியடிகள் நாயனார் புறக்கண் இன்மையாகிய தமது மீப்பெரும் குறைபாட்டின் இடையிலும், அகக்கண் கூர்மை மிகப் பெற்று, திருவாரூர்த் திருக்கோயிலின் திருக்குளத்துக்கு அநீதியான முறையில் ஏற்பட்ட அவலத்தை உற்றுணர்ந்து தாமே தனி ஒருவராய் நின்று திருக்குளத் திருப்பணியாற்றிய சீர்மை சிவத்திருப்பணியைத் தம் இலட்சியமாகக் கொண்டு சைவத்திருப்பணி வரலாற்றின் பொன் எழுத்துக்களாற் பொறித்துப் போற்றப்படும் தகைமையுடைவரானார்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 34

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 29 – திருமூல நாயனார்

    ‘நம்பிரான் திருமூலன்’ அடியார்க்கும் அடியேன், என்று ஆரூரர் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் புகழும் திருமூல நாயனார், சைவ சமயத்தில் காலத்தால் முதிர்ந்தவர் மட்டுமின்றி கருத்தால், எண்ணத்தால், சிந்தையால் முதிர்ந்தவர் என்று அறியப்படும் ஆகச்சிறந்த சிவயோகி ஆவார். திருக்கையிலை மலையின் திருக்கோயிலுக்கு முதற்பெரும் நாயகரான திருநந்திதேவர், இந்திரன், மால், அயன் முதலிய தேவர்களுக்கு நெறி அருள்கின்ற திருவருள் பெற்றவர். இத்தகைய நந்தி தேவரின் திருவருள் பெற்ற சிவயோகிகளில் ஒருவர் என்ற பேர் பெற்றவர். திருமந்திரத்தில் திருமூலர் என்று குறிப்பிடப்படும் இவர் சுந்தரநாதன் அன்று அழைப்பட்டவர்.

    “நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
    என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே” 

    திருமூலரின் பழைய நண்பராகிய, பொதிகையில் எழுந்தருளியுள்ளஅகத்திய மகாமுனிவருடன் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பியவர் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென் திசையை நோக்கி வந்தார். திருக்கேதாரம், நேபாளம், காசி, திருசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே ஆவடுதுறைப் பெருமானை வணங்கத் திட்டமிட்டார்.

    ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்தினில் பசுக்கூட்டங்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். சாத்தனூரில் மூலன் எனும் இடையன் அவைகளை மேய்க்கின்றவன். அன்று அவன் அவ்விடத்தில், பசும்புல்வெளியில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவன் மீது உள்ள அன்பினால் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி அழுதன.

    பசுக்களின் துன்பத்தைக் கண்ட சிவயோகியார், எம்பெருமானின் திருவருளால் அப்பசுக்களின் துயரத்தை நீக்க  வேண்டும் என்று முடிவெடுத்தார். தம் திருமேனியை ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு, மூலனின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினார். பசுக்களின் துயரத்தைப் போக்குவதற்காக திருமூலராய் எழுந்தார். மூலனை மோந்த பசுக்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற் சென்று மேய்த்தார். மகிழ்ந்து, துள்ளிக் குதித்து, மேய்ந்திருந்த பசுக்கள் அந்தி நேரத்தில், பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன. சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் தத்தமது வீடுகளுக்குச் செல்லத் தாம் வெளியிலே நின்றார்.

    மூலனுடைய மனைவி தன் கணவனைத் தேடி வந்தவள், சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, அவருடைய திருமேனியைத் தீண்ட, அவர் விலகி நின்றார். திருமூலநாயனார், தனக்கும் மூலனின் மனைவிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று மறுத்து, ஒரு பொது மடத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி கவலை கொண்டிருந்தவள் மறுநாள் அதனை ஊர்ப்பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். தன் கணவனுக்கு சித்தம் பேதலித்துவிட்டதாகவும் கூறினாள். திருமூலனைக் கூர்ந்து கவனித்த அப்பெரியவர்கள் அவர் சிறந்த ஞானியாகத் தெரிவதாகவும், சிவயோகியாராகத் தெரிவதாகவும் கூறி, அவரை இனி அவள் என்றும் சேர முடியாது என்று புரிய வைத்து திரும்ப அழைத்துச் சென்றனர்.

    சிவயோகத்தில் இருந்த திருமூல நாயனார் எழுந்து, பசுக்கள் வந்த வழியே சென்று தாம் மறைத்து வைத்திருந்த தம் உடலைக் காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, சிவபெருமான் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருள் அனைத்தும் தமிழ் ஆக்க எம்பெருமான் திருவருள் இவ்வுடலைத் தந்தது என்று உணர்ந்தார்.

    “தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப் பொருளை
    மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
    கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
    எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர் அருள் எனவுணர்ந்தார்” 

     திருமூலரும் எம்பெருமானின் திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்தின் சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப் புறத்தில் உள்ள அரசின் கீழ் அமர்ந்து சிவயோகத்தில் நிலைத்திருந்தார். மூவாயிரம் ஆண்டுகள் அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு ஆண்டிற்கு ஒவ்வொரு திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடலால் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரம் எனும் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கையிலையை அடைந்தார்.

    முன்னிய அப் பொருள் மாலைத்

      தமிழ் மூவாயிரம் சாத்தி

    மன்னிய மூவாயிரத்து ஆண்டு

      இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து

    சென்னி மதி அணிந்தார் தம்

      திருவருளால் திருக் கயிலை

    தன்னில் அணைந்து ஒரு காலும்

      பிரியாமைத் தாள் அடைந்தார். 

     

    திருமூலதேவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

    திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களும் திருமந்திரம் என்ற நூலாகப் பன்னிரெண்டு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக விளங்குவது. திருமூலர், இறைவன் தம்மைப் படைத்தது இறைவனுடைய தன்மைகளைத் தமிழில் அழகுற எடுத்தியம்புவதற்காகவே என்றார். திருமூலர் திருமந்திரம் ஆகமப் பொருளையெல்லாம் திரட்டி ஒன்பது தந்திரங்களாக அருளிச் செய்தார்.

    ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு மந்திரமாலை” என்ற திருத்தொண்டர்புராண வசனமாகிய புறச்சான்றினாலும் அது வலுவுறும்.

     

    பக்தன் சரியை கிரியை பயில்வுற்றுச்

    சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்

    உய்த்தநெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்

    சித்தங் குருவருளாற் சிவமாகுமே”

    சிவப்பேறடைதற்குரிய நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கும் சைவநாற்பாதங்களாம். நான்காவதாகிய ஞானம் சிவப்பேற்றை நேரே அருள்வதாக, ஏனைய மூன்றும் படிமுறைக்கிரமத்தில் அதற்குத் தகுதியளிப்பன. ஞானம் என்பது சிவத்தில் இலயித்த உயிர் சிவத்தையுணர்தலாகிய மெய்யுணர்வு விளக்கமுற்றிருப்பதாகவும் அமையும்.

    திருவாவடுதுறையில் அரசின் கீழ் திருமூலர் யோகத்தில் இருந்ததை ,

    சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
    சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
    சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
    சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே

    என்று குறிப்பிடுகின்றார்.

    சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு முன்னோடியாக விளங்கும் திருமந்திரம், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்ற சொற்றொடரை அருளியவர் திருமூலர். சாத்திரங்களின் சாரத்தை மிக எளிமையாகவும், முழுமையாகவும் உரைத்தவர் திருமூலர். ஆகமங்கள் 28 தமிழாகமம் சொல்ல வந்த திருமூலர் வரலாறு 28 பாடல்களில் அமைந்துள்ளதும் போற்றத்தக்கது.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார்

    ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்

        ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே

    தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்‘ என்னும்

        துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி

    ‘வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்’ என்ன

        வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்

    போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து

        போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில், “ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் தலத்தில், வேளாளர் குலத்தில் தோன்றியவர். சோழ மன்னர்களிடம் பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாக இருந்து வந்துள்ள குடும்பம் இவருடையது. ஏயர்கோன் கலிக்காமர் சிவபக்தியிலும் சிவனடியார் திருத்தொண்டிலும் சிறந்து விளங்கியவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்தில் அளவில்லாத திருப்பணிகள் செய்தவர். “ஏயர்கோன்” என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலமான எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் இளம் வயதிலேயே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.

    ஏயர்கோன் கலிக்காமர் மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு சிறப்பாகத் தமது இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இக்காலகட்டத்தில் ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தமது இல்லத்தரசியான பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டிக் கொண்டதால் சிவபெருமானும் அவ்வண்ணமே அவரிடம் சென்றார். இதைப் பற்றி கேள்வியுற்ற, சிவனையே முழுமுதற் பொருளாகப் போற்றிய ஏயர்கோன் கலிக்காம நாயனார், இத்தகைய காரியத்தைச் செய்து, தன்னை அடியார் என்று கூறிக்கொள்ளும் சுந்தரர் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறார். சிவபெருமானே இதற்கு இசைந்திருந்தாலும் சுந்தரர் செய்த இந்தக் காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவராய், இப்படிப்பட்டச் செய்தியை கேட்ட பின்னும் தன்னுயிர் போகவில்லையே என்று வருந்தி சுந்தரமூர்த்தி நாயனார் மீது சொல்லொணா துயரமும், கடுங்கோபமும் கொண்டார். இதையறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வருந்தி, அவர்தம் சினத்தை தணித்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் பணிந்து வேண்டினார். அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்கிய இடமும் இதுதான்.

    சூலை நோயை உண்டாக்கி ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு ஆறாத வலியைக் கொடுத்தார் எம்பெருமான். கலிக்காம நாயனாரும் என்ன செய்தும் தம் வலி குறையவே இல்லையே என்று வருந்தி அதனைப் போக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியவர் அப்படியே மயங்கினார். அந்த மயக்கத்தில் சிவபெருமான் தோன்றி, இந்த சூலை நோயால் ஏற்பட்டுள்ள வலியைத் தீர்க்க வல்லவன் சுந்தரன் மட்டுமே என்று கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டு கொதித்துப் போனார் கலிக்காமர். ஆனால் கலிக்காமரோ, சுந்தரர் வந்துதான் என் வயிற்று நோய் தீரும் என்றால் அந்நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவனார் மறைந்தாலும் அவர் அத்தோடு நிற்கவில்லை. ஆரூரரிடம் சென்று, தம்முடைய ஆணையை ஏற்று கலிக்காமரின் சூலையைத் தீர்க்க வேண்டும் என்று பணித்துவிட்டு மறைந்தார். எம்பெருமானின் கட்டளையை ஏற்று நம்பியாரூர் ஏயர்கோன் உற்ற பிணியைத் தீர்ப்பதற்குத் தாம் வருகின்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

    ஆனால் ஏயர்கோன் தம் மனைவிக்காக எம்பெருமானையே தூது அனுப்பிய சுந்தரன் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு வருகிறார் என்றால், அவர் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு முன் தான் மாய்ந்து விடுவதாகக் கூறி, சூலை உள்ள வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் என்று தன் உடைவாளை எடுத்துக் குத்திக்கொண்டு உயிர் துறந்தார். வேகமாக வந்த ஆரூரரை வெளியே சென்று மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார் அவருடைய துணைவியார்.

    சுந்தரர் தான் வந்த காரியத்தைக் கூற, கலிக்காமர் அவ்வாறு நோயால் வருந்தவில்லை என்றும், அவருக்கு நோயுமில்லை துன்பமுமில்லை, அவர் உறங்குகிறார் என்று கூறி தன் கணவரின் இறப்பை மறைக்க முயன்றார். சுந்தரர் விடாது தன் மனம் தடைபடுவதைக் கூறி அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்தவே வேறு வழியின்றி தன் கணவரின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு கலிக்காமர் இரத்த வெள்ளத்தில் வயிறு கிழிந்து, குடல் வெளிப்பட்டு இறந்து கிடப்பதைச் சுந்தரர் கண்டார். நடந்த எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்று வருந்திய சுந்தரமூர்த்தி நாயனார் தம்மிடம் உள்ள வாளால் குத்திக்கொள்ளும் போது சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர்த்தெழுந்தார்.

    இறையருளால் உயிர்த்தெழுந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரை அன்பினால் தழுவிப் பிரியாத நண்பர்களானார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் சில நாட்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் தங்கி திருப்புன்கூர் திருத்தலத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் விருப்பத்துகிணங்க அவருடன் திருவாரூர் சென்று சில நாட்கள் தங்கியிருந்து தியாகராசரை வணங்கி மகிழ்ந்தார். பின்னர் ஏயர்கோனார் திருப்பெருமங்கலம் திரும்பி வந்து சிவப்பணி செய்து சிவனடி சேர்ந்தார்.

     

    ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    மெய்ஞ்ஞானம் உற்றார்க்குப் பக்தி பொதுவாயினும் அவரவர் ஆன்ம எழுச்சியின் நிலையைப் பொறுத்து ஒவ்வொருவர் பக்திக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை திருத்தொண்டர் புராண வரலாறுகளின் மூலம் அறியலாம்.

    “தந்தம் பெருமைக்களவாகிய சால்பினிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்” மூர்த்தி நாயனார் புராணம்.

    “ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரமீசன் பணியலதொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரமென்னால் விளம்புந் தகையதோ”திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

    தீது ஒன்றுமில்லை என்று தன் கணவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மாண்டதையே மறைக்கத் துணிந்த அவருடைய பத்தினியின் மாண்பைப் போற்றினாலும், தம் மனம் தடைப்பட ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என எண்ணிய ஆரூரர் அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்த அவர் இருந்த அறையினைக் காட்ட, அங்கு அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தம்பால் வந்த கோபத்தினால் ஏயர்கோனார் இந்த முடிவுக்கு வந்தார் என்றால் அவர் சென்ற இடத்திற்கே தானும் செல்லப்போவதாகக் கூறி, ஏயர்கோன் கலிக்காம நாயனார் தம் உடைவாளினால் தமது வயிற்றைத் தாமே குற்றிக் கிழித்துக் கொள்ளப் போனார். இதனை கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்,

    “பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்

    புயன்மறந்த கன்னன்மை தீரப்புனிற்றுக்

    கலிக்காமற் கன்று புன்கூர் மன்னு

    மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே

    பின்னும் மழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே” என்றும்

    திருத்தொண்டர் புராணத்தில்,

    “பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால் வரும்பெருமைக் கலிக்காமனார்” எனவும்

    சுந்தரர் தேவாரத்தில்,

    “வையகம் முற்றும் மாமழை துறந்து

    வயலில் நீரிலை மாநிலந் தருகேம்

    உய்யக்கொள்கமற் றெங்களை யென்ன

    ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

    பெய்யுமாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்

    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளுஞ்

    செய்கைகண்டுநின் திருவடியடைந்தேன்

     செழும்பொழிற்றிருப் புன் கூருளானே”

    எனவும் வருபவற்றால் அறியப்படும்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தம் பத்தினி பரவைபால் தூதனுப்பிய செய்தியைக் கேட்டமாத்திரத்தே, அதிசயித்து எரிச்சலுற்றவர் இவரெல்லாம் ஒரு தொண்டரா, எத்தகையதொரு பெரிய பாவத்தைச் செய்துள்ளார். இச்செய்தியைக் காதால் கேட்கவும் இயலவில்லை என்னால் என்று புலம்புகிறார்.

    “நம்பியாரூரர் நெஞ்சினடுக்கமொன்றின்றி நின்று

    தம்பிரானாரைத் தூது தையல்பால்விட்டா ரென்னும்

    இம்பரின் மிக்கவார்த்தை யேயர்கோனார்தாங் கேட்டு

     வெம்பினாரதிசயித்தார் வெருவினார் விளம்பலுற்றார்”

     

    “நாயனை அடியானேவுங் காரியம் நன்று

    சால ஏயுமொன்றிதனைச் செய்வான்

    தொண்டனாமென்னே பாவம் பேயனேன்

    பொறுக்கவொண்ணாப் பிழையினைச் செவியார்

     கேட்ப தாயின பின்னும் மாயா திருந்ததென் ஆவியென்பார்”

    மற்றும்

     “நம்பர்தா மடியாராற்றாராகியே நண்ணினாரேல்

    உம்பரார்கோனும் மாலு மயனுநேருணரவொண்ணா

    எம்பிரானிசைந்தாலேவப் பெறுவதே யிதனுக்குள்ளங்

    கம்பியாதவனை யான்முன் காணுநா ளெந்நா ளென்று”

    என வரும் சேக்கிழார் பெருமானின் பாடல்களால் அறியலாம்.

     

    குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:

    நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை முப்பொழுதும் வணங்கி வாழ்ந்து கொண்டிருந்தார். அச்சமயம் திருக்கோளிலி என்னும் திருத்தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டிருந்தார். அந்த அன்பின் காரணமாக அவருக்காக பரவையார் திருமாளிகைக்கு, செந்நெல், பருப்பு போன்ற பொருள்களைத் தவறாமல் அனுப்பி வரும் கடமையைக் கொண்டிருந்தார். ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் வழமைபோல் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் வருந்தியவர், உணவு உண்ணாமல்  உறங்கச் சென்றார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி “ஆரூரன் தனக்கு உன் பொருட்டாக நெல் கொடுத்தோம் என்று அருள்பாலித்தார். காலையில் எழுந்து பார்த்தபொழுது குண்டையூர் முழுதும் நெல் மலை குவிந்திருந்தது. நெல்மலையைக் கண்டு வியந்தவர், திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் நடந்தவற்றைக் கூறினார். குண்டையூர்க்கிழார் அந்நெல்மலையைப் பார்த்து இது மனிதர்களால் எடுத்து வரும் அளவினதன்று. மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்றார். அப்போது சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து,

    நீள நினைந்தடி யேனுமை

      நித்தலுங் கைதொழுவேன்

    வாளன கண்மட வாளவள்

      வாடி வருந்தாமே

    கோளிலி எம்பெரு மான்குண்டை

      யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

    ஆளிலை எம்பெரு மானவை

      அட்டித் தரப்பணியே.

    என்னும் திருப்பதிகம் பாடி நெல்லை எடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி விண்ணப்பித்துக்கொண்டார். அன்றிரவு தம்முடைய பூத கணங்களைக் கொண்டு பரவையார் இருந்த வீதியில் நெல்லைக் கொண்டுவந்து குவித்தார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்தவர் பரவையார்க்கும் அந்த நற்செய்தியை தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.

     

    ஆரூர்ப் பெருமானைப் பரவையாரிடம் தூதனுப்புதல்:

    சுந்தரர் எம்பெருமானை வணங்கச் சென்ற பொழுது அவருடைய பரிசனங்களில் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சங்கிலியாரை மணந்த சுந்தரரின் செய்கையை முன்பே அறிந்திருந்த பரவையார் அவர்களைத் தடுத்த செய்தியினை சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர் மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என உணர்ந்தவர், பெரியார் பலரைப் பரவையார்பால் தூது விடுத்தும், அவர்கள் பலவாறு எடுத்துக் கூறியும் சினந்தணியாமல் பரவையார், மீண்டும் பேசினால் தன்னுயிர் இழப்பது உறுதி என்று கூறினார். அதனால் மனம் வருந்திய சுந்தரர் உறங்காது சிவபிரானை எண்ணி வேண்டினார். அடியார் துயர் பொறுக்காத  எம்பெருமான் நள்ளிரவில் சுந்தரர் முன் வந்தணைந்தார். சுந்தரர் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று, தமக்குற்ற குறையை எடுத்துக்கூறி தன்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் அப்போதே பரவைபால் தூது செல்ல இசைந்தார். பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக் காண வேண்டுமென்ற திருவிளையாடலை மனத்திற்கொண்டு பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார். சுந்தரர் எம்பெருமானை எதிர்கொண்டு வணங்கி விவரம் கேட்டவரிடம், எம்பெருமான் `நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்துவிட்டாள்` என்று கூறினார். அச்சொற்கேட்டு நடுங்கிப் போனவர், பரவையிடம் தன்னைக் கூட்டவில்லை என்றால் தன்னுயிர் நீங்குவது உறுதி என்று பலவாறு கூறித் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.
    சிவபெருமானும் நம்பியாரூரரைப் பார்த்து,  மீண்டும் ஒருமுறை தூது சென்று அவர்தம் குறையை தீர்த்து வைப்பதாகக் கூறியவர் பரவையார் மாளிகையை நோக்கி மீண்டும் எழுந்தருளினார். பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்து உழலும் எம்பெருமானின் கருணையை வியந்து, இசைவுற்றதால் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரிடம் மீண்டும் எழுந்தருளினார். சிவபெருமான் சுந்தரரைப் பரவையார்பால் அனுப்பிவைத்த பின்னர் திருக்கோயிலினுள் புகுந்தருளினார். இருவரும் இறைவனது எளிவந்த கருணையை வியந்து இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.

    தங்கக்கட்டியான செங்கல்

    திருவலிவலம் பெருமானின் திருவடிக் காட்சியைக் கண்டு களித்த ஆரூரர், திருவாரூர் சென்று அங்கு தங்கியிருந்தார். பங்குனித் திருவிழாவிற்கு ஆகும் பெருஞ்செலவில் தம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் , இல்லையென்றால் பரவையார் முகம் வாடிவிடுமே என்று வருந்தியவர், பணம் பெறுவதற்காக திருப்புகலூர் சென்று பொன் வேண்டிப் பாடினார். திருக்கோயிலை வலம் வந்து வழிபாட்டினை நிறைவு செய்து புறப்படும் சமயம் அயர்ச்சியில், அங்கு அக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வைத்து அதன்மீது தமது துண்டினை விரித்து அப்படியே கண் அயர்ந்து உறங்கி விட்டார். தூக்கம் விழித்து துண்டை எடுத்தவர் அதிசயித்துப் போனார். துண்டின் கீழிருந்த அச்செங்கல் தங்கக்கட்டியாக மாறியிருந்த்தே அதன் காரணம். இன்றும் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், இந்த அரிய திருப்பாசுரத்தைப் பாடினால் இறைவன் வேண்டிய பொருளை அளிக்க வல்லான் என்ற நம்பிக்கை அடியவர்களிடம் உண்டு என்பதும் சத்தியம்! அப்பாடல்,

    தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்

      சார்வினுந்தொண்டர் தருகிலாப்

    பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை

      புகலூர்பாடுமின் புலவீர்காள்

    இம்மையேதருஞ் சோறுங்கூறையும்

      ஏத்தலாமிடர் கெடலுமாம்

    அம்மையேசிவ லோகமாள்வதற்

      கியாதுமையுற வில்லையே. 

     

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 32

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (5)

    எலும்பைப் பெண்ணாக்கியது

    மயிலாப்பூரில் வணிகர் குலத்தில், சிவனடி மறவாச் சீலர் சிவநெறித் தொண்டில் ஈடுபட்டு ஈசனடியாரை நேசிக்கும் இயல்புடையாரான  சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், பிற சமயமாகிய சமண, பௌத்த மதங்களைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, சைவப் பயிர் செழித்தோங்கச் செய்யும் உறுதியுடையோராய்த் திகழ்ந்தவர். தமது மூன்றாம் அகவையில் திருக்காழிப்பதியில் ஞானப்பால் உண்டு, முத்துச் சிவிகை, முத்துப்பந்தர், பொற்றாளம் சிவபெருமான் கருணையால் பெற்றவர், மதுரை மூதூர் சென்று சமணர்களை வென்று சைவம் தழைத்தோங்கச் செய்த அருமைப் பெருமைகளுக்கு உரியவரான ஞானசம்பந்தர் பற்றி கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு அழகிற் சிறந்த பூம்பாவை எனும் ஒரு பெண் மகவு இருந்தாள். மணப்பருவம் எய்திய நிலையில் இருந்த அப்பெண் திருமகளென அழகும் கலைமகளென அறிவும் மிக்கவளாய் இருந்தாள். அவளையும், தன்னையும், தன் செல்வத்தையும் ஞானசம்பந்தருக்கே உடமையாக்கி அவர் மடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி கொண்டார்.

     

    இந்நிலையில் பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி உயிர் துறந்தாள்.  சிவநேசர் மிகவும் வருந்தினாலும் அப்பெண், சம்பந்தப் பெருமானின் உடமையென்பதால் தாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று உளம் தெளிந்து, அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதைக் கன்னி மாடத்தில் வைத்து அக்குடத்திற்குப் பூம்பாவை பூணும் அணிகலன்களையெல்லாம் அணிவித்துப் பூசனை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் என்ற செய்தியை அவ்வூர் மக்கள் சிவநேசரிடம் தெரிவித்தனர். அகமலர்ந்த சிவநேசர் சம்பந்தரை வரவேற்கத் திருவொற்றியூர் சென்று எதிர் கொண்டழைத்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார்கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியையும் அவரிடம் கூறினர்.

    ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி கபாலீசுரரை வழிபட்டு, சிவநேசரை அழைத்து அவர்தம் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன் வைக்கும்படி பணித்தார். சிவநேசரும் வெந்த சாம்பலோடு எலும்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்து எடுத்து வந்து கபாலீச்சுவரப் பெருமான் திருமுன் வைத்து வணங்கினார். `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய,

     

    மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

     

    எனத் திருப்பதிகம் தொடங்கி, முதல் பாடலிலே உருவம் பெற்ற பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையான எட்டுப் பாடல்களைப் பாடிய அளவில் பன்னிரெண்டு வயதுடையவளாக மாறி நின்றாள்.

     

    உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

    இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

    கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

    பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

     

    எனும் பத்தாவது பாடலைப் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உயிர் பெற்று குடம் உடைய வெளிப்பட்டு எழுந்தவள், ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். அது கேட்ட ஞானசம்பந்தர், அரவு தீண்டி உயிர் துறந்த மகளை இறைவன் திருவருளால் பூம்பாவையாக மீண்டும் பிறப்பித்த்தால் அவள் தமக்கு மகளாவாள் என்ற மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தினார். சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச் செய்தார். பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி சேர்ந்தார்.
    பின்னர் ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள், திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீர்காழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானை வழிபட்டுத் தம் திருமாளிகையை அடைந்தார்.

    காழிவேந்தருக்குக் கடிமணம்!

     

    ஞானசம்பந்தர் சீர்காழிமேய பெருமானை நாளும் வணங்கி முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய அடியவருடன் இனிதிருந்தார். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர், அக்கால மரபுப்படி திருமண வயதான பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தாலும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைந்தார்.

     

    சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழ்ந்த சீலமிக்க அந்தணர் குடியில் தோன்றிய நம்மாண்டவர் என்பாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய அத்திருநாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் எம்பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து, கோயிலின் அருகே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்மாண்டவர் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தி, மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்புறம் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காண வந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார். திருநீலநக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்மாண்டவர் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் மணமகளைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி உடனானார்.
    அச்சோதி மறைய பெருமணக் கோயில் முன் போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

     

    கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
    பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
    சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
    நல்லூர்ப் பெருமண மேயநம் பானே

    ஞானசம்பந்தர் உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினை அறிவுறுத்த உளங்கொண்டு ஞானமெய் நெறிதான் யார்க்கும், ‘நமச்சிவாயச் சொல்லாம்’ என்று அனைவருக்கும் ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்து கூட்டுச் சிவதீக்கை செய்வித்துச் சோதியில் கலக்கச் செய்தார்.

     

    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது வரலாற்று ஆசிரியர்கள் கணித்துள்ள உண்மையாகும். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பதும் அவர் தம் வரலாறுகளால் விளங்கும். குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும் என்ற வகையில் அம்மன்னனும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்மவர்மப் பல்லவன் காலத்தில் படைத் தளபதியாக இருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி.642 ஆகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனான இம்மன்னனின் காலம் கி.பி. 640-670 என்ற வகையில் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம் என்கின்றனர்.

    வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை

    விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய்

    மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

    என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளால், வேதநெறியையும் சைவத்துறையையும் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டாகத் திருவவதாரம் செய்தருளியுள்ளவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் என்பது உறுதிப்படும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞான நிலை சைவத்துறையாதல் அமையும். “ஞானம் ஈசன்பாலன்பே” எனத் திருத்தொண்டர் புராணத்தும் “அன்பே சிவமாவது” எனத் திருமந்திரத்தும் வருவன கொண்டும் அது தெளியப்படுகிறது.

    அன்பு, அறம், மறம் ஆதியனவும் அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது,

    பூவினில் வாசம் புனலினிற் பொற்பு

    புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற்

     பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்”

     

     “கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

    கடல்மலைவா னாகாசமானாய் நீயே”

     

     “பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி”

    என்பன போன்ற தேவாரத் திருப்பதிகங்களாலும்,

     “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்

    நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள்

    வாய்மைநீ அறத்தினுளன்புநீ

    மறத்தினுள் மைந்து நீ வேதத்து

    மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ

    அனைத்தினுட் பொருளுநீ”

    என்னும் பரிபாடலாலும் அறியப்படும்.

    வேள்வி நெறியாகிய வேத நெறி மீளத் தலையெடுத்தோங்க வைத்து அருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டின் மகிமை அளப்பரியது என்பது அவர்தம் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே இன்றளவிலும் உறுதியாக நிற்பதும் கண்கூடு.

    சைவத்துறை தழைத்தோங்கும் பொருட்டு அவர்தம் திருவவதாரம் அமைந்தது என்பதற்கு ஆதாரம், அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்று, சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார் – திருஞானசம்பந்தர் – சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்து மூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் எனும் ஞானம் பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப் பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், தனிப்பட்டதொரு ஞான எழுச்சியும் விறலும் உடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய ஞானச்செல்வனைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் விதந்தோதப்பட்டுள்ளார்.

    காகமுணவு கலந்துண்ணக் கண்டீர்

    அகண்டாகாரசிவ போக மென்னும்

    பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய்

    ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்

    இனியெடுத்த தேகம் விழுமுன்

    புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

    எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலால், உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாக இருக்குங்கால் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் ஞான மகிமை எக்காலத்தும் போற்றுதலுக்குரியதாம்.

    ஞானப்பிள்ளையார், தென்பாண்டி நாட்டில் சென்றபோது நாடு இருந்த நிலையும் சைவம் இருந்த நிலையும் வேதனைக்குரியதாக இருந்தது. சமணரைக் கழுவில் ஏற்றியது சரியா என்ற வாதம் எழுவது இயல்புதான் என்றாலும் அது சிந்திக்கத்தக்க வினாவாகும். ஆனால் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றச் சொல்லவில்லை என்பதும் உண்மைதான். சமணர்களைப் பொருத்தவரை, அவர்களே சூளுரைத்து அவர்களுக்கு, அவர்களே விதித்துக் கொண்ட தண்டனைதான் அது. வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படி, பாண்டி வேந்தன், கழுவிலே ஏற்றுமாறு உத்தரவிட்டான். குலச்சிறையாரும் அதனை நிறைவேற்றினார். ஆனால் சமணர்கள் பல்லாயிரம் அடியார்கள் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் உண்மை. நாடாளும் மன்னனான நின்றசீர் நெடுமாறன் அரச நீதி காக்கும் பொருட்டே அவர்களைக் கழுவேற்றினான். நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைப்பது மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதனைச் சரி செய்வதும் மன்னனின் கடமையாகும். எனவே மன்னன் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினான். இதனை சம்பந்தர் தடுத்திருக்கலாமே என்ற வினாவும் எழலாம். அவருக்குச் சமணர்கள்பால் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றாலும் அரச நீதியில் மதம் கலந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அடியவர்களுக்கு இழைத்த அநீதிக்காகவும் அவர் இதில் தலையிடவில்லை என்றே அறியலாம்.

    வழிபாட்டு மொழி பற்றிய ஐயம் எழுபவருக்கு ஞானச்செல்வர் எம்பெருமானை வழுத்தும் அடியவருக்கும் பெருமானுக்கும் இடையில் மொழி எந்த தடையும் இல்லை. காரணம் அனைத்து மொழியும் அறிந்தவன் சிவபெருமான். ஆகவே அடியாருக்குத் தெரிந்த மொழியால் அவன் புகழ் சொல்லிப் பரவலாம் என்பதைத் தெள்ளென விளக்குகிறார்.

    1. தம்மலரடி யொன்ற அடியவர் பரவத்

    தமிழ் சொல்லும் வட சொல்லும் தாணிழற்சேர

    அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள்

     

    1. கல்லால் நிழல்மேய கறை சேர் கண்டா என்று

    எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த

     

    1. பத்தரொடு பலரும் வொலியும்மலர் அங்கை புனல்தூவி

    ஒத்த சொல்லி யுலகத்தவர் தாந்தொழ

     

    1. செந்தமிழ் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு

    அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்.

     

    சம்மந்தப் பெருமான் வழிபாட்டு மொழி எது எனில், தம் உள்ளத்தை எது ஒன்றச் செய்கிறதோ அம்மொழியே வழிபாட்டு மொழி என வழிகாட்டுகிறார்.

     

    வழிபாட்டு நெறிகள்

    1. சிவ வழிபாடு செய்தல்
    2. திருநீறு அணிந்து மகிழ்தல்
    3. ஐந்தெழுத்து ஓதல்

    ஆகிய மூன்று நெறிகளை வலியுறுத்தி நாம் வாழச் சிந்தை நிலை பெறச் சிவ வழிபாடும் அதற்குச் சாதனமாகத் திருநீறு அணிதலும், திருஐந்தெழுத்தை ஓதலுமே முத்தி பெற எளிய வழி என வலியுறுத்தி வாழ்ந்து காட்டினார்.

    திருஞானசம்பந்தர் துதி

    பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த

    சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்

    குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை

    விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share