பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 42
63 நாயன்மார்கள் வரலாறு – 36 கணநாத நாயனார்



கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்
கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு
நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து
நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி
வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி
வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்
புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்
பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே
“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழும் கணநாத நாயனார் சீர்காழியில் ஒரு மறையவர் குலத்தில் அவதரித்தவர். சிவபெருமான் மீது மாறாத அன்பு கொண்டு சட்டைநாதர் கோயிலுக்குத் தவறாமல் சென்று, தோணியப்பர் வடிவில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அனுதினமும் கோயிலில் பூசைகளை நடத்தி, எம்பெருமானுக்கு நைவேத்தியம் படைத்தார். தனது வீட்டிலும் சிவனடியார்களுக்கும் உணவு அளித்து சேவை புரிந்து வந்தார்.
அடியார்களைக் கவரும் வண்ணம் சைவம் குறித்த அவருடைய சொற்பொழிவுகள், மக்களிடையே மிகுந்த பக்தி உணர்வைத் தூண்டியது. வேதங்களையும் சிவ மந்திரங்களையும் மிகத் தேர்ச்சியுடன் உச்சரிப்பதோடு நெஞ்சுறுதியோடு திருத்தொண்டுகள் பலவும் இடையறாது செய்து கொண்டிருந்தார். சைவ சமயம் தழைத்தோங்கும் வண்ணம் தொண்டர்களுக்கு உரிய பயிற்சிக் கூடம் அமைத்தார். நல்ல தொண்டர்களை உருவாக்கினார்.
நந்தவனம் அமைப்பது, மலர் கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது, காலையும், மாலையும் கோயிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கெல்லாம் தொண்டர்களை உருவாக்கினார்.
நல்ல நந்தவனப் பணி செய்பவர்
நறுந்துணர் மலர் கொய்வோர்
பல் மலர்த் தொடை புனைபவர் கொணர்
திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்
அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத்
திரு மெழுக்கு அமைப்போர்கள்
எல்லையில் விளக்கு எரிப்பவர்
திரு முறை எழுதுவோர் வாசிப்போர்
வறுமையில் உழன்ற அடியார்களுக்கு ஆடைகளை வழங்கியவர், அவர்களின் பிள்ளைகளுக்கும் முறையான கல்வியை அளித்தார்.
ஞானசம்பந்தப் பெருமானைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றிய கணநாத நாயனார் அவரிடமிருந்து சைவத் தத்துவங்களைக் கற்றுக்கொண்டார்.
சிவபெருமான் மீது அவர் கொண்டிருந்த உண்மையான பக்தியினாலும், அடியார்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் அவர் ஆற்றிய பெரும் சேவையினாலும், சிவபெருமானின் திருவடிகளே காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சார்ந்தார். ஆண்டுதோறும் கணநாத நாயனார் முக்தி அடைந்த நாளான, பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இவரது குருபூசைநாள் சீர்காழியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கணநாத நாயனார் புராணம் சொல்லும் கருத்து:
உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில்
உறுதி மெய் உணர்வு எய்தி
அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர்
திறம் அவனியின் மிசை ஆக்கும்
மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும்
கண நாதனார் கழல் வாழ்த்திக்
குலவு நீற்று வண் கூற்றுவனார்
திறம் கொள்கையின் மொழிகின்றாம்.
சாதிப் பாகுபாடின்றி அனைவரிடமும் சமமான அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டவரை மக்கள் மனதார நேசித்தனர். அவருடைய கனிவான நடத்தையால், ஏராளமான மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு, சிவபெருமானைப் பற்றிய அவருடைய தெய்வீக சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் செவிமடுத்தவர்கள் தங்கள் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை மட்டுமே நிரப்பினார். தன் வாழ்நாளில், கடவுளுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதன் மூலம் அவர் பல நல்ல கர்ம வினைகளைச் செய்திருந்தார். சிவபெருமான், ஊழிக்காலத்தில் 64 கலைகளையும் ஆடையாகக் கொண்டு பிரணவத் தோணியில் தேவியுடன் வந்து பிரளயத்தில் அழியாது நின்ற இத்தலத்தில் தங்கியதாக தலபுராணம் கூறும், சீர்காழி திருத்தோணியப்பரை சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்திய கணநாதர், சிவனடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல், தாமும் அதன் வழி நடந்தார். தொண்டர்கள் விரும்பும் சிவாலயப் பணிகளை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் செய்யும் பணியை இறைமனதோடு தூய்மையாகச் செய்யவும் பயிற்றுவித்தார். திருத்தொண்டின் வழி நிற்பதே சிவபெருமானின் திருவடியை அடையும் வழி என்பதை உணர்ந்தவர் அனைவரையும் அரவணைத்து, தானும் பங்கெடுத்து ஆலயப்பணியைக் குறைவின்றி செய்தார்.
திருச்சிற்றம்பலம்
