ஜி.டி.என். திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

ஜி.டி.என். படம் பார்த்த பிறகு ஜி.டி. நாயுடுவை மக்கள் எப்படி நினைவுகூர்வார்கள்? ஒரு தந்திரசாலியாகவா? போராளியாகவா? அறவழியில் நின்றவராகவா? தொழிலதிபராகவா? பென்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியாகவா?

ஜி.டி.நாயுடுவை ஒரு கண்டுபிடிப்பாளராக, அறிவியல் பார்வை கொண்டவராக, அதன் வழியே சிக்கலைத் தீர்த்தவராக, புத்தாக்கங்களின் நாயகராக, குறைந்த செலவில் தரமான பொருள்களை உருவாக்கியவராக முன்வைத்திருக்க வேண்டும். ஆனால், இது சாதாரண அரசியல் படமாக மாறிவிட்டது.

வணிகரீதியில் வெற்றி பெற வேண்டும் என்றால், கதாநாயகன் மட்டுமில்லை, வில்லனும் வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். அதனால், சிலரை வில்லனாகக் காட்டுவதற்காகத் தேவையில்லாமல் நிறையக் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதனால், ஜி.டி.நாயுடுவின் புத்தாக்கம் என்ற மையக் கருவிலிருந்து படம் விலகிச் சென்றுவிட்டது. இந்த அடிப்படைச் சறுக்கல், படத்தின் தரத்தைக் குறைத்துவிட்டது. இதன் திரைக்கதையைப் படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமாரும் ஆர்.மாதவனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

விவரணப் படமாக (டாக்குமென்டரி) ஆகிவிடக் கூடாது என்ற நினைப்பில், வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் உலகப் பயணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இன்று நாம் ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடுவதற்குக் காரணம், அவர் ஜெர்மனிக்குச் சென்றதோ, பென்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியாகவோ இருந்தது இல்லை. அவரது அறிவியல் கண்ணோட்டத்தை, தொலைநோக்கை, கருவிகளை, ஆலைகளை, புதிய கண்டுபிடிப்புகளை வைத்தே அவரை மதிக்கிறோம். ஒருவரது வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எவை முக்கியமான நிகழ்வுகள், அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்த தலைமுறை எடுத்துக்கொள்ள வேண்டியது என்ன என்ற தெளிவோடு படத்தை எடுக்க வேண்டும்.

படத்தின் சுவரொட்டிகளில், எடிசன் ஆப் இந்தியா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆனால், படம் அவரது கண்டுபிடிப்புகளில் மையம் கொள்ளவில்லை. எடிசன், ஆயிரத்துக்கும் மேலான பொருள்களுக்குக் காப்புரிமை பெற்றுள்ளார். ஜி.டி.நாயுடுவோ வெகு சில பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றுள்ளார். இதற்கான காரணங்கள் குறித்துப் படத்தில் எதுவும் இல்லை. காப்புரிமை ஏன் மிகவும் முக்கியம் என்ற விழிப்புணர்வைப் படம் ஊட்டவில்லை.

ஜி.டி.நாயுடுவை எடிசனுடன் ஒப்பிட வேண்டிய தேவையும் இல்லை. எப்போதும் நம்மை மேற்குலகச் சாதனையாளர்களுடன் அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏதுமில்லை. நமது தனித்த அடையாளங்களை நாம் பேண வேண்டும். நமது பாரம்பரிய அறிவு, அனுபவம், கண்டுபிடிப்புகள் குறித்த பெருமை நமக்குத் தேவை. இன்னொருவரது புகழின் நிழலில் நாம் வளர வேண்டாம்.

1970ஆம் ஆண்டு ஜி.டி.நாயுடு வாழும்போதே அவருக்கு பத்ம பூஷன் விருதினை அளித்து, இந்திய அரசு கெளரவித்துள்ளது. ஆனால், படத்தில் அவர் தனது கண்டுபிடிப்புகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தி, ஓட்டாண்டியாக ஆனது போல் காட்டியுள்ளனர்.

ஜி.டி.நாயுடுவின் முதல் மனைவி, அவரை இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்வதற்கு வலுவான காரணத்தைப் படத்தில் காட்டவில்லை. இரண்டாம் திருமணம் ஆன பிறகு, முதல் மனைவி என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. முதல் மனைவி செல்லம்மாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், படத்தில் அதைப் பற்றிய குறிப்பும் இல்லை. இது வாழ்க்கை வரலாறு என்ற
வகையிலும் முழுமையாக இல்லை.

ஜி.டி.நாயுடு படத்தைப் பார்த்த பிறகு விஞ்ஞானிகள் உருவாவதற்குப் பதிலாக, வரி பாக்கி ஜப்திக்காக அரசு அதிகாரிகள் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று பலரும் கற்றுக்கொள்ளக் கூடும். அந்த அளவிற்கு வரி விதிப்பு அதிகாரிகள், இதில் காட்டப்படுகிறார்கள்.

ஜி.டி.நாயுடுவைப் பற்றி இன்னொரு சிறப்பான படம் எடுக்கும் தேவையை இந்தப் படம் உருவாக்கிவிட்டது.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *