பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 40
63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 1)



திருதொண்டத்தொகையில் சுந்தரர் பெருமான், “செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்” என்று புகழும் சிறுத்தொண்டர் நாயனார், காவிரி பாயும் சோழ நாட்டில் வளம் கொழிக்கும் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் மரபினில் அவதரித்தவர். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். திருச்செங்காட்டங்குடி என்ற இந்த ஊர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் நாகபட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர்.
சிவபெருமானிடம் மாறாத அன்பும் அதீத பக்தியும் கொண்டிருந்த சிறுத்தொண்ட நாயனார், அன்றாடமும் சிவனடியார்களுக்கு அமுது படைக்காமல் உண்பதில்லை என்ற மன உறுதியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு அவர்கள் விரும்பியவாறே எந்த உணவானாலும் இல்லையெனாது அகமகிழ்ந்து அமுது படைத்து வந்தார். அவர்களை வழிபட்டு, அவர்கள் முன்பு தம்மை மிகச் சிறியவராக எண்ணிப் பணிந்து, அவர்களுக்குப் பணிவிடைகளும் செய்துகொண்டிருந்த இவர் ‘சிறுத்தொண்டர்’ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.
உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு
இன்றிப் பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள்
சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று
உதைத்த கழற்கு அன்பு
பள்ளமடையாய் என்றும் பயின்று
வரும் பண்புடையார்
பரஞ்சோதியார் ஆயுர்வேதக் கலையும், அளவில்லாத வடநூல் கலையும், தூயப் படைத்தொழிலும், கற்று தேர்ந்தவற்றையும் சிவபெருமான்பால், சிவனடியார்பால் கொண்ட அன்பையும் ஒன்றாகக் கலந்து தெளித்ததால் அவர் கற்ற கலைகள் கலையின் பயனால் கிடைத்த உலகியல் இன்பங்கள் அனைத்தும் தூசு போல் பறந்து சிவன் கழலின் அன்பே நின்றது.
யானை ஏற்றம், குதிரை ஏற்றம், போர் செய்வது போன்றவற்றில் வல்லவராகத் திகழ்ந்த பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவரிடம் படைத் தளபதியாக பணியாற்றினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். வாதாபியில் பெரும் படைப்பலம் கொண்ட இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து, அங்கிருந்து பொன்னும் மணிகளும் நிதிக்குவியலையும், ஏராளமான யானைகள், குதிரைகள் போன்றவற்றையும் கவர்ந்து வந்தாலும் அவருடைய மனம் மேலும் போரில் ஈடுபட விரும்பவில்லை. பரஞ்சோதியாரின் வீரதீரத்தை வெகுவாகப் பாராட்டிய மன்னன், அவரைப் பார்த்து தாமே படையெடுத்துச் சென்றிருந்தாலும் வாதாபியை வென்றிருக்க முடியாது என்றபோது மக்கள் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்ற பரஞ்சோதியை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை என்றனர். இதைக் கேட்ட மன்னன், சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் அடியாரை போருக்கு அனுப்பி பெரும் பாவம் செய்துவிட்டேனே என்று வருந்தியவர் எம்பெருமானிடம் தம் பிழைப் பொறுத்தருளவும் வேண்டினார். அதுமட்டுமின்றி பரஞ்சோதியாரை அழைத்து மேற்கொண்டு அவர் தம் செம்மைநெறித் தொண்டைத் தொடர வேண்டும் என்று வேண்டி, நிறையப் பொன்னும் பொருளும் வழங்கி அரச மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தார். பரஞ்சோதியார் மன்னரிடம் விடைபெற்று தமது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார்.
வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டைக் கண்டு தன் வெற்றிச் சின்னமாக விநாயகரை தமிழகத்திற்குக் கொண்டு வந்திருந்தார். திருச்செங்காட்டாங்குடியில் கணபதி ஈச்சுவரம் இறைவரை வணங்கி பல்லவ மன்னனிடமிருந்து பெற்ற பொன்னும் பொருளையும் ஆலயத் திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி நெறியில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார், திருவெண்காடு நங்கை என்னும் அருள் நிறைந்த மங்கையை திருமணம் செய்து கொண்டார். திருவெண்காடு நங்கையும் சிறுத்தொண்டரின் சிவவழிபாட்டிற்கும், சிவனடியார் தொண்டிற்கும் பெரிதும் துணை நின்றவர், அவருடன் சேர்ந்து அன்றாடம் சிவனடியார்களை அன்போடு வரவேற்று முறையாக உபசரித்து அவர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் வழக்கத்தை நியமமாகக் கொண்டிருந்தனர். சிவனடியார்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து மகிழ்ந்திருந்தனர்.
இத்தகைய இல்லறத்தின் பயனாக, சிவபெருமானின் அருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு சீராளன் என்னும் திருநாமம் இட்டு சிறப்பாக வளர்த்து வந்தனர்.
நீராரும் சடை முடியார்
அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர் தமக்குப்
பெருகுதிரு மனை அறத்தின்
வேராகி விளங்கும்
திரு வெண்காட்டு நங்கைபால்
சீராளத் தேவர் எனும்
திருமைந்தர் அவதரித்தார்
சீராளத்தேவருக்கு அனைத்துச் சிறப்புகளையும் செய்துப் போற்றி அந்தந்தப் பருவத்துக்குரிய சிறப்புகளைச் செய்து பல விழாக்களையும் எடுத்து ஊர் மெச்ச வளர்த்து வந்தனர். மூவாண்டு நிறைந்தவுடன் முடி இறக்கியவர்கள், சீராளனின் பள்ளி செல்லும் பருவத்தில் பாடசாலையில் சேர்த்து, கலைகள் பல கற்கச் செய்து அவன் கல்வியில் சிறந்து விளங்குவதைக் கண்டு இன்புற்றிருந்தனர்.
திருஞானசம்பந்தப் பெருமான் திருசெங்காட்டங்குடி ஈசனை வணங்க வந்தவரை, சிறுத்தொண்டர் வரவேற்றுத் தம் இல்லத்தில் தங்க வைத்தார். சிறப்பாக பணிவிடைகள் செய்து அவரை வணங்கினார். திருஞானசம்பந்தரும் உள்ளம் மகிழ்ந்து தன்னுடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரையும் சிறப்பித்துப் பாடியருளினார். சிறுத்தொண்டரின் திருத்தொண்டின் புகழ் அனைத்துப் பகுதிகளிலும் பரவியது. திருக்கையிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானும் மண்ணுலகிற்கு வர திருவுளம் கொண்டார். சிறுத்தொண்ட நாயனாரின் பக்தியையும் திருத்தொண்டின் சிறப்பையும் உலகறியச் செய்யும் எண்ணம் கொண்டார் சிவபெருமான். அடியார்கள் பலர் தங்களுக்கு எட்டாக்கனியாக விளங்கும் ஆண்டவனை நோக்கிப் போகும் வேளையில் அந்த சிவபெருமானே சிறுத்தொண்டரின் அன்பினை நுகர்வதற்கு வயிரவக் கோலத்தோடு புறப்பட்டு வந்தார். அவருடைய திருவிளையாடலும் ஆரம்பித்தது.
இத்தன்மை நிகழும் நாள்
இவர் திருத்தொண்டு இருங்கயிலை
அத்தர் திருவடி இணைக் கீழ்ச்
சென்று அணைய அவருடைய
மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து
அருளுதற்கு விடையவர் தாம்
சித்தம் மகிழ் வைரவராய்த்
திருமலைநின் றணைகின்றார்.
இறைவன் சோதனையால் அன்று சிவனடியார்கள் ஒருவரும் அமுதுண்ண வரவில்லை. சிறுத்தொண்டரும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும் கவலையோடு காத்திருந்தனர். பின்னர் சிறுத்தொண்டர் சிவனடியார்களை அழைத்து வருவதாகச் சொல்லிக் கிளம்பினார். அச்சமயம் ஈசனே கருஞ்சட்டை அணிந்து இடக்கையில் சூலம் ஏந்தி பைரவ அடியார் வடிவமேந்தி திருச்செங்காட்டங்குடி ஊருக்கு வந்தார். எதிரில் பார்ப்பவர்களையெல்லாம் சிறுத்தொண்டர் வீடு எங்கே என்று கேட்டுக்கொண்டே வந்து, சிறுத்தொண்டர் வீட்டின் முன் நின்று அடியார்களுக்கு அமுதிடும் சிறுத்தொண்டர் இருக்கிறாரா அவரைக் காண வேண்டி வந்துள்ளேன் என்று அன்போடு கூறினார். சிறுத்தொண்டரது மனைவியாரும் மகிழ்வுடன் அடியாரை அமுதுண்ண அழைத்தார். பைரவத் துறவியாய் வந்த சிவபெருமான் மிகுந்த பசியுடையவராய்க் காணப்பட்டார். அவரிடம் தன் கணவர் உணவிடுவதற்காக அடியாரைத் தேடிச் சென்றுள்ளார் என்றும் அடியாரான அவரே அங்கு வந்திருப்பது தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வார், சிறிது பொறுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அடியார் வேடத்தில் வந்திருந்த பெருமானும் சிறுத்தொண்டர் வரும்வரை தாம் கனபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருப்பதாகவும், அவர் வந்தவுடன் தாம் வந்த செய்தியை தெரிவிக்கவும் கூறி ஆத்தி மரத்தின் கீழ் சென்று அமர்ந்தார்.
அடியார்களைத் தேடிச் சென்ற சிறுத்தொண்டர் எங்கு தேடினும் ஒரு அடியவரையும் காணமுடியவில்லையே என்று மனைவியிடம் சொல்லி வருந்தினார். அவர் மனைவியாரும் பைரவ அடியார் வந்து சென்ற செய்தியைத் தன் கணவரிடம் கூறினார். அதைக் கேட்டவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாகச் சென்று ஆத்தி மரத்தின் கீழமர்ந்திருந்த அடியாரைக் கண்டு, அவர்தம் திருவடிகளைப் பணிந்து நின்றார். அப்போது அந்த பைரவ அடியார், அவரிடம், நீர் தான் சிறுத்தொண்டரா? என வினவியபோது அவரும் முகம் மலர, எத்தகுதியும் இல்லாத இச்சிறியோனை அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு எனப் பணிந்துக் கூறினார். அடியேன் செய்த தவத்தால் அன்று அவரைக் கண்டதாகவும், தயை கூர்ந்து அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுதுண்ணல் வேண்டும் என்றும் பணிந்து கேட்டுக்கொண்டார்.
பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து தாம் அவரைக் காணும் ஆவலில்தான் வந்தாரேத் தவிர தமக்கு அவரால் உணவளிக்க முடியாது என்று கூறினார். இதைக் கேட்ட சிறுத்தொண்டரும் அவருக்கு வேண்டிய உணவை எப்படியாயினும் விரைந்து அமுது படைப்பதாக உறுதியளித்து பணிந்து நின்றார்.
அடியாரும் மிகவும் அதிர்ச்சியான அச்செய்தியைக் கூறியும் சிறுத்தொண்டரின் மனது எந்த வகையிலும் தம் நியமத்திலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை. தாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் உண்ணும் வழமையுடையவர் என்றும், அதுவும் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை மட்டுமேதான் உண்போம் என்றும், அந்த நாளும் அன்று தான் என்றும் கூறினார். ஆனாலும் தமக்கு அமுதளிக்க சிறுத்தொண்டரால் முடியாது என்றும் கூறினார். அது கேட்ட சிறுத்தொண்டர், சிவபெருமான் அருளால் தங்களிடம் அனைத்துச் செல்வங்களும், ஆடுகள், மாடுகள், என ஆநிரைகள் அனைத்தும் குறைவில்லாது உள்ளதாகவும், அவருக்கு அமுதாகும் பசு எதுவென தெரிவித்தால் அடியேன் விரைந்து சென்று சமைத்து, காலம் தவறாமல் அமுது படைப்பேன் என்றும் கூறினார்.
ஆனால் அந்த சிவனடியாரோ பசுவென்றால், அவர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி தாம் கூறவில்லை என்றும், தாம் குறிப்பிடுவது நரப்பசு, அதுவும் ஐந்து வயது மிகாமல் இருக்க வேண்டும், அங்கத்தில் ஊனம் எதுவும் இல்லாதிருத்தல் வேண்டும், ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அதுவும் தாயார் பிடிக்க, தந்தை அரிந்து கொடுக்க வேண்டும். தாயும், தந்தையும் தம்முள் மனமுவந்த துன்பமின்றி, எந்தப் பிழையுமின்றி சமைத்த அந்த கரியினை மட்டுமே உண்பேன் என்று கூறினார். சிறுத்தொண்டரும், அவரைப் பணிந்து, சுவாமி அமுது செய்வதானால் அதுவும் தமக்கு அரியது அல்ல என்று திருவடியை வணங்கி இல்லம் வந்தார். கணவர் வருகையைக் கண்ட திருவெண்காட்டு நங்கை அடியார் விரும்பும் அமுது யாது என வினவினார்.
அச்சம் எய்திக் கறி அமுதாம்
என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார் மார்பின் கண்
அணைத்தே முத்தம் தாமுண்ணார்
பொச்சம் இல்லாத் திருத் தொண்டர்
புனிதர் தமக்குக் கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார்
வேறு கொண்டு அணைவார்.
சிறுத்தொண்ட நாயனாரும் தம் மனைவியாரிடம் பைரவ அடியார் திருவமுது செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறினார். திருவெண்காட்டு நங்கையாரும் அவ்வாறு அமுது செய்விப்போம் தடையில்லை என்றாலும், அப்படி ஐந்து வயதுப் பிள்ளையை யாரிடம் பெறுவது எனக் கேட்டார். சிறுத்தொண்டர் மனையாளின் முகம் பார்த்து எவ்வளவு பொன் பொருள் கொட்டிக் கொடுத்தாலும், தாம் பெற்ற பிள்ளையை யார் தருவார்கள். அப்படியேத் தந்தாலும், தங்கள் பிள்ளையைத் தாங்களே அரிந்து கொடுக்கும் பெற்றோர்கள் இந்த உலகில் எவரும் இருக்கவே மாட்டார்கள். அதற்கு மேலும் காலம் தாழ்த்துவது பயன் இல்லை. எனை இங்கு உய்ய நீர் பயந்தானை அழைப்போம் யாம் என்றார்.
தொடருவோம்
