மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா
இறையுடன் தோழமை பூணலாம் மென்னும்
வழியினைக் கண்டவர் ஆலால சுந்தரர்
ஆலால சுந்தரர் தோழமை என்பது
அன்பு சிவத்துடன் இணைந்திடு நிலையே
ஏசினார் பேசினார் எள்ளிநகை யாடினார்
இறைவனோ அவரை விட்டு விடவில்லை
பேசிய வாயினால் பாடுக என்றார்
பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்
தொண்டருள் சுந்தரர் வன்தொண்டர் ஆவார்
வன்தொண்டர் அடைமொழி அவரது சிறப்பே
எம்பிரான் அருளைப் பெற்றது வன்சொலே
தோழமை உணர்வால் சொன்னதும் வன்சொலே
அரன் அடியார்கள் பெருமையை அறிந்திட
வைத்தவர் ஆலால சுந்தரர் ஆவார்
சுந்தரர் தொட்ட வித்தினைக் கண்டார்
சேக்கிழார் பெரிய புராணத்தைத் தந்தார்
அரன் அடியாரை அனைவரும் அறிய
அரன் அடியாரின் அற்புதம் விளங்க
அடித்தளம் அமைந்தவர் சுந்தரர் ஆவார்
சுந்தரர் என்றுமே சிவசைவச் சொத்து
எளிமையும் இனிமையும் உரிமையும் அன்பும்
இருந்திடும் சுந்தரர் பாடல்கள் அனைத்தும்
நட்பும் இருக்கும் பக்தியும் இருக்கும்
சங்கரன் சரணாகதி தாங்கியும் இருக்கும்
சந்தமொடு ஓசையுடன் தாள லயமோடு
செந்தமிழில் தேவாரம் தந்து குவித்தாரே
செந்துருத்திப் பண்ணாலே பாடி அளித்தாரே
சம்பந்தர் அப்பர் தொட்டுவிடாப் பண்ணால்
தீதகன்று உலகுய்ய திருவவதாரம் செய்தார்
தெய்வத்தமிழ் தத்திடவே சுந்தரரும் வந்தார்
நாதனுடன் நட்புரிமை பூண்ட நல்லடியார்
நம்சைவ அடியாரை நாடறியச் செய்தார்
அழகும் சுந்தரர் அலங்காரம் சுந்தரர்
அரனுக்குக் அருகிருக்கும் அருநட்பும் சுந்தரர்
அந்தணராய் பிறந்தார் அரசராய் வாழ்ந்தார்
ஆனாலும் சுந்தரர் அரனுக்கு அடிமையே !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.