பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11075315_10205201894081371_1963618067_n

 

அமுதா ஹரிஹரன்
அமுதா ஹரிஹரன்

அமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப்          பங்கு பெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

41 thoughts on “படக்கவிதைப் போட்டி (5)

 1. கூட்டு வாழ்வு

  ஆதாமும், ஏவாளும் இல்லற 
  வேதத்தை ஓதுபவர் ! 
  காதலர் இருவர் கருத்தொரு மித்து
  ஆதரவு பட்டதே இன்பம் !
  பசுமை நிறச் சூழ்வெளிக்குக்
  கடுந்தவம் புரிகிறார் !
  தூய காற்றும்,
  துப்புரவு விண்ணும் கொண்ட 
  ஒப்பில்லா உலகுக்கு
  அர்ப்பணம் செய்கிறார் !
  கூட்டு வாழ்வைக்
  காட்டும் கற்சிலைகள் !
  பிரச்சனை மிக்க நாட்டிலே
  இருவருக்கும்
  ஒரு திசை நோக்கு ! 
  ஒரு வகைப் போக்கு !
  ஓங்கி உயர்ந்தது உலகிலே
  ஒற்றுமை வாழ்வுதான் !

  சி. ஜெயபாரதன்

 2. சிற்பக் கவிதை

  வண்ணங்கள் போர்த்திய
  மாறும் வானும்
  மாறாத மலைத்தொடரும்

  காண்போர் கருத்தினில்
  இறைவன் வரையும்
  ஓவியமாய் வியந்து நிற்க

  காலத்தினால் கரையாத
  மானுடத்தின் மகத்துவத்தை
  விசித்திரமாய் ஒளிந்திருக்கும்

  கருங்கல் சித்திரங்கள்
  கம்பிச் சிறைக்குள்
  காவியமாய் உளி எழுதிய
  சிற்பக் கவிதை கண்டேன்…!

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 3. தாதான்மியக் காதலுரு…..

  தாஜ்மகால் காதலுக்கு என்ற
  தாக்கமோ காதல் சிலை!
  தலையாம் மலையுச்சியில் தவம்!
  தாதான்மியக் காதல் உரு!
  இயற்கையை ரசிக்கும் உள்ளம்
  இணைவிழி இணை மனத்தோற்றம்
  இதுவன்றோ காதல் என்ற
  இன்னுயர் உதாரணக் கல்லுரு.

  ஊனுயிராய் உலவிக் கலக்கும்
  ஊன்றுகோல்! அன்பு ஊற்று!
  உன்னதம்! காதல் இறைமை!
  இத்தேடல் பிரபஞ்ச  மயக்கம்!
  இவ்வாடல் உலக இயக்கம்!
  காதலியல் ஒழுக்கம் தரும்
  காதல் செய்யுங்கள் மனுகுல 
  காந்தி! மாசு அறுக்கும்!

  பா ஆக்கம் 
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்  23.3.2015

 4. உளிகொண்டு செதுக்கிய சிலையோ இல்லை
  வரிக்கொண்டு வடித்த கவிதையோ
  இல்லை
  அண்ணலும் நோக்க அம்மையும் நோக்க காணும் இயற்கை மலையோ
  இங்கே காமனின் பாணமும் காணமல் போனது
  அன்பென்னும் கூடோ
  அரண் இங்கே அமைத்து நிற்க
  பண்பாட்டில் பயணிக்கும் பல்லவர்காலசிற்பமோ
  கண்கவர்காட்சியானது எனக்கு
  சிலையும் மலையும்

 5. காதலால் இணைந்திட்டோம்
  காலத்தால் வாழ்ந்திட்டோம்
  கடைசிவரை பிரியாமல்
  காலன் எங்களை பிரிக்கும்முன்
  கல்சிலையாய் சமைந்திட்டோம்
  காதலர்கள் சின்னமாக

 6. கருத்தொருமித்து

  காதலால் கட்டுண்டு

  சூழ்ந்திருக்கும் உலகம்

  தனை மறந்து

  தமக்கே தமக்கான

  புதியதோர் சுவர்க்கம்

  சிருஷ்டித்து – ஆங்கே

  ஒருவரை ஒருவருள்

  தொலைத்து –

  ஈருடல் ஓருயிரான

  நிலையில் இங்கே

  கற்சிலையாய் சமைந்தனரோ ?

  காதலில் உயரப் பறந்தனரோ ? –

  மெல்ல கேசம் வருடும்

  மேகக் காதலனின் காதில்

  கிசுகிசுக்கிறாளோ –

  மரகதப் பட்டுடுத்திய

  மலை மங்கை ?

 7. மனிதனே நான் மலையனடா
  மணிமகுடம் தரித்த அழகனடா

  என்றும் பசுமையே எமது பட்டாடை
  விண்முகிலோ கொஞ்சும் குழந்தையடா

  குளிர் தென்றல் எமைத் தழுவும் சுகமும்
  வான்மழைத் தூறலின் இதமும்

  இறைவன் எமக்களித்த காலகால
  வரங்களின் அழியாத கொடையடா

  மலைராணி அவளெனது மகாராணி தான்
  எங்களுக்குள் தொடரும் மலைத்தொடர்பு தான்

  சிந்திக்காது சிதைத்து விட்டாய் என் ஜீவனை
  இழந்து விட்டாள் என்னெதிரே அவள் ஜீவனை

  அவளுக்குள் வடித்த சிலை ஒய்யாரமாய்
  சிறையெடுத்து அழகு பார்த்தாய் கம்பீரமாய்

  அழகுதெய்வம் வெறும் கல்லாக மாறியதோ
  எதிரில் எந்தன் மனம் குமுறும் எரிமலையானதோ

  மலைகள் நாங்கள் வெறும் கல்லல்லவே
  நிறைவில்லாத வெறும் காட்சிப் பொருளல்லவே

  தாங்காது கேட்கின்றேன் இக்கணம் வந்திடுவாய்
  எனையும் அழித்து சிலை செய்திடுவாய் ..!

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 8. (சிறிய மாற்றம்

  )தாங்காது கேட்கின்றேன் இக்கணம் வந்திடடா…
  எனையும் அழித்து சிலை செய்திடடா…!

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 9.         படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா. .. மெல்பேண்

        சிலையினை  அமைத்திட்ட சிற்பியை வியப்பதா
        சிலையாக அமர்ந்திருக்கும் சிற்பத்தை வியப்பதா !

         சிலையது உணர்த்திநிற்கும் சீர்தனை வியப்பதா 
         இயற்கையோடு இணைந்துநிற்கும் இன்பத்தை வியப்பதா  !

 10.             படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

              சிந்தனையைத் தூண்டுவது !
          —————————————–

         சிலையாக இருந்தாலும்
         சிந்தனையை தூண்டுவது
         மலைபோல எண்ணங்கள் 
         மனதினிலே எழுகிறது

         அழகான காதலினை
         அனைவர்க்கும் காட்டியது
        அழகொழுகு காட்சிதனை
        அதுரசித்து நிற்கிறது !
        
     

 11.        படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

              கற்சிலையில் காணுகின்றோம் !
          ———————————————

         சாதியில்லை மதமுமில்லை
         சண்டைக்கு யாருமில்லை 
         ஏதுமற்ற நிலையிலிங்கு
         இருக்கிறது இச்சிலைகள்

        காதலது பக்குவத்தை
        கற்சிலைகள் தருகிறது
       மோதலின்றி சாதலின்றி
       முழுமையாய் நிற்கிறது !
     

 12. உயில் விருந்து.

  ”…உலகத் தொல்லைகள் வேண்டாம் வா 
  உச்சிமீதமர்ந்து காற்று ஊடாடாது இணைவோம்
  உறைந்து போவோம் இன்பக் காதலில்
  ஊர் சுற்றுவோர் கண்களிற்கு விருந்தாவோம்…”

  உயில் எழுதி பணமும் வைத்த
  உல்லாசப் பயண மலையேறும் சோடியின்
  உருவச் சிலையிது உருவாக்கியவர் வாழ்க!
  உவப்பான அற்புதச் சிற்ப விருந்து!

  பா ஆக்கம்
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  24-3-2015

 13. படக் கவிதைப் போட்டி- 5

  நினைத்ததெல்லாம் நடந்தும்…

  அந்த காலத்து காதலர்களா
  அல்லது
  அற்ப சுவைக்காக
  ஆண்டவனிடம் சாபம் பெற்ற
  ஆதாமும் ஏவாளுமா

  இவர்கள்
  எதுவும் இல்லாதிருந்தபோது
  எல்லாமும் பெற்றிருந்தனர்
  எல்லாமும் கிடைத்தபோது
  எதையோ இழந்து நிற்கின்றனர்!

  ஆடைகள் இல்லாதபோது
  இவர்கள்
  அவமானம் அடைந்ததில்லை
  இப்போது
  ஆடை அரைகுறையானதால்
  மானம் 
  மரணமடைந்து கொண்டிருக்கிறது!

  மலை மரம் வெட்டவெளி
  எங்கு இருந்தாலும்
  இவர்களது
  அந்தரங்கம் அசிங்கப்பட்டதில்லை
  இப்போது
  மூடிய அறைகளுக்குள்ளே கூட
  முகம் தெரியாத கருவிகளால்
  இவர்கள்
  முக்காடு நீக்கப் படுகிறது!

  ஓ மனித இனமே
  உன் ஆறாம் அறிவு
  நேர்மையின்றி நடந்ததால்
  நினத்தெல்லாம் நடந்தும்
  நீ
  நிர்வாணமாய் நிற்கிறாய்!

 14. இயற்கை அழிவின் இரகசியம் கண்டு 
  மயங்கிச் சமைந்தோம் மலைமேல்.- தயக்கம் 
  தொலைத்து மரம்வெட்டிக் காடழிப்பால் காற்றைத் 
  தொலைக்கும் உலகை வியந்து .

  *மெய்யன் நடராஜ் – இலங்கை 

 15. சிகரத்தில் ஏறியவர் .. !

  கண்டதும் காதல் மின்னல் 
  அடித்தது,
  கனவு உலகில் மயங்கி,
  இடி இடித்தது, 
  ஊடல் முடித்துக்
  கூடியவர் சின்ன வீட்டில் !
  காமத்தேன் குடித்து
  சொர்க்கபுரி உச்சியில்
  சுகம் கண்ட பிறகு
  தர்க்க புரியில் தடம் வைத்தார்,
  வருவாய் இல்லை !  
  திருமண ஒப்பந்தம் இல்லை !
  கரு வயிற்றில் ! 
  உச்சிக்கு ஏறிய பிறகு
  இப்போது
  இறங்க வேண்டும் கீழே 
  இருவரும் !

  சி. ஜெயபாரதன்

 16. சூழ்வெளித் தூய்மை

  இது நமது பூமி, மனிதா !
  இது நமது வானம்!
  இது நமது பசுமை நீர்வளம்!
  முப்பெரும் சூழ் வளத்தை
  துப்புரவாய் வைப்பது,
  இப்புவி மாந்தர் நீடு வாழ
  ஒப்பிலா பணி!

  சி. ஜெயபாரதன்

 17.         படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

               கற்சிலைகள் தோற்றாது
           ————————————-

     காதலரை எண்ணிவிடின்
     கற்சிலைகள் தோற்றாது
     காதலை நாமெண்ணிவிடின்
     கற்சிலைகள் உயித்துவிடும் ! 

     காதலுடன் சேர்ந்தவர்கள் 
     கற்சிலையாய் மாறிடினும்
    காதலுக்கு மரியாதை
    காட்சியிலே தெரிகிறது !
    

 18.       படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா … மெல்பேண் 

           நல்ல பாடம் !
       ———————

     இயற்கையை ரசிக்கும் இச்சிலைகள்
     செயற்கையாய் இங்கு இருந்திடினும்
     இறுக்கமாய் கொண்ட காதலினை
     எமக்கெலாம் உணர்த்தும் பாடமிது !

     கற்சிலை என ஒதுக்கி
     பற்பல நினைக்க வேண்டாம்
     காதலை காட்டி நிற்கும்
     கற்சிலை என்றே கொள்வோம் !

     

 19. சிலைகள் பேசும் சரிதம்

  காவியம் போல வாழ்ந்திருக்க
         கருத்தில் ஒன்றாய் சேர்ந்திருந்தோம்
  தீவிர மாகக் காதலித்தோம்
         திருப்ப மாகிடச் சிலையானோம்
  ஆவிதான் பிரிந்து விட்டாலும்
         அருகில் ஒன்றாய் சேர்ந்திருப்போம்
  பாவினில் வடித்து வென்றிடுவான்
         பழனிச் சாமி நம்கதையை

  பார்புகழ் வேந்தன் செல்வியிவள்
         பயிற்று வித்த புலவன்யான்
  கூர்மதி என்மேல் காதலானாள்
         கொற்ற வன்தான் கோபமானான்
  வேர்விடும் காதல் உணர்வைநீ
         விதைத்த குற்றம் பெரிதென்றான்
  ஊர்அது முன்உன் சிரம்வெட்ட
         உத்தர விட்டேன் என்றுரைத்தான்

  காலம் கடந்தும் உயிர்வாழும்
         கவிஞன் படைப்புத் தவறென்றால்
  மாலதி மாத வம்படைத்த
         மகாத்மா பவபூ தியோடுகவி
  காளிதா சன்கல் லறைதோண்டி
         கழுவி லேற்று என்றுரைத்தேன்
  வாலிபக் காதல் குற்றமெனில்
         வலிய மாய்வேன் நானுமென்றாள்

  மகளை இழக்க மனமின்றி
         மணம்தான் எமக்கு செய்வித்தான்
  சுகவாழ் வுநிலைத் திடவில்லை
         சூழ்ச்சி வலைக்குப் பலியானோம்
  சனங்கள் விரும்பும் இளவரசி 
         சவமா னதுபொ  றுக்காமல்
  மனம்கொ தித்த மக்களெல்லாம்
         மன்னன் அரசைத் துறந்தார்கள்

  தீயினில் இட்ட மெழுகைப்போல்
         துவண்ட தந்த சாம்ராஜ்யம்
  கோயிலில் இருக்கும் சிற்பம்போல்
         குடிகள் அமைத்த சிலையானோம்
  நீயிறந் தாலும் மெய்க்காதல்
         நிலைத்தி ருக்கும் என்பதாக
  ஆயிரம் ஆண்டு கடந்துமிங்கு
         அன்பின் உருவாய் நிலையானோம்

 20. இதுவரை
  அறிந்திராத மொழியும்
  தீண்டலில் கரையும்
  புரியாத உணர்வுகளும் என
  பக்கமிருப்பிலே
  தூரமாகி போகிறது
  நாம் காணும் உலகம்

  மின்னும் நட்சத்திரம்
  காற்றினில் தவழ்ந்து வந்து
  நம்மை தழுவும் இசை
  உருகும் பனி
  பச்சை புல்வெளி
  பார்த்த பரவசம் என
  மீளா கணங்களில்
  முன்னம் விரியுது
  இதுவரை நாம்
  பார்த்திராத உலகம்

  நாம் கற்சிலையான
  தருணத்திலும்
  தீராத நம் பேச்சினில்
  கிளர்ந்தெழும் உணர்வுகளால்
  கலைத்து போகிறது
  கடந்து போகும் மேகமும்
  சுற்றி வரும் சூரியனும்

 21. உளி
  களி நடணம் புரிய
  இந்த கற்சிலை உருவானதோ!

  மலை
  தரும் மயக்கம் அறிய
  எந்த சிற்பிக்கு கருவானதோ!

  வான்
  நிறம்  வெளுத்து இளைத்து
  இங்கு அழகூட்ட உரமானதோ!

  மண்
  மடிசாய்ந்து சேர்ந்து
  பகல் ஒளி பரவசமானதோ!

  கலை
  கண் ஈர்த்து நிறுத்தி
  எனையும் கல்லாக்கி சென்றதோ!

  சிலை
  செய் நேர்த்தி கண்டு
  நானும் சிலையானேன் என்பதோ!

 22. காலத்தை வென்றிட…

  மலையின் அழகினில் மயங்கியேதான்
       மாறிப் போனார் சிலையாக,
  நிலையா உலகில் நிலைபெறவே
       நினைவுச் சின்ன நிலையானார்,
  கலையே ஈதெனப் பார்த்தாலும்
       காதல் சிலையெனச் சேர்த்தாலும்,
  விலையெனச் சொல்ல ஏதுமில்லை
       வென்றே நிற்கும் காலத்தையே…!

  -செண்பக ஜெகதீசன்…

 23.        படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

               சிலைகள் ஆனோம் !
           ———————————
       நீலவான் நிலத்தை நோக்க
       நிலம்நாணி வானை நோக்க
      
        காலனே நீயும் எம்மை
        கணக்கினில் கொள்ளும் முன்னம்
        ஞாலமே வியக்கும் வண்ணம்
        நாமிங்கு சிலைகள் ஆனோம் !

 24.       படக்கவிதைப் போட்டி … எம். ஜெயராமசர்மா … மெல்பேண் 
            கண்டேனே இங்கே
        ——————————– 

         கல்லிலே கலைவண்ணம் கண்டேன் – இங்கு
         காதலை செப்புகின்ற கற்சிலை கண்டேன் 

         மண்ணிலே காதலில் நிற்போர்  – அவர்
         மனத்தினில் காதலை காட்டிடும் சிலையை
         கல்லிலே கண்டேனே இங்கே !
         

 25. ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ 
  தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர் 
  கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும் 
  வற்றிடா அன்பே மருந்து .

 26. காதலில் தோல்வி .. !

  காதலில் தோற்றோர் கதைசொல்வார் கற்சிலையாய் ! 
  மோதல் புயலிலே மூச்சிழந்து – சாதலே
  வாழ்வின் முடிவென்றால் வையகமே பாழ்நரகம்
  வீழ்ச்சிதான் வாழ்வா விளம்பு ?  

  சி. ஜெயபாரதன்

 27. காதலில் வெற்றி

  காதலில் வென்றோம் ! கரங்கோர்த்துக் கூடியே
  சாதனை செய்யத்தான் சாய்ந்துள்ளோம் – போதிமரம்
  ஏதுமில்லை !  பூமியைப் பார் ! எல்லாமே உள்ளது  ! 
  யாதும் நமக்கென்று அறி.  

  சி. ஜெயபாரதன்.

 28. யாரிவர்கள்?
  மலை உச்சியில் 
  மண் முகட்டில் 
  என்றோ பதிந்த 
  கால்தடங்கள் 
  வாழ்ந்ததன் அறிகுறியை 
  வானளாவ சொல்வதென்று 
  கற்சிலையாய் அமர்ந்து 
  கொண்டனரா?

  உயிர் தாங்கிய உருவங்கள்
  எதிர்ப்பின் ஈட்டிக்கு 
  இரையாகி  இரு 
  துருவங்களாய் 
  மாறி விடும் 
  கொடுமை கூடாதென்று 
  கரும் பாறைச் 
  குன்றதனில்   உயிரற்ற 
  கற் சிலையாய்  அமர்ந்து 
  விட்டனரா?

  ஆயிரமாயிரம்  
  யுகங்கள் கடந்தும் 
  வானும் பூமியும் 
  தேய்ந்து கலைந்தும்  
  சிலை பிறந்த கதை 
  சொல்லக் காதல் 
  கொண்ட மனத்துடன்   
  காற்றாகக் காத்துக் 
  கிடகின்றனரோ?

  அறிந்த அறிவியலும் 
  அறியாத சரித்திரமும் 
  புரியாத அன்பு மொழிக்கு 
  முன்னே பிறவி ஊமையே
  வாழ்ந்த உணர்வுகள் 
  கரை தாண்டி கரைந்து  
  வெட்டவெளியாகி 
  நீர்க்குமிழியாய் 
  மறைந்து விட்டதோ?

  அன்பு நிறைந்த 
  ஏகாந்த பூமியிது 
  ஆசைக் கண்கள் 
  தாலாட்டிய பூமியிது
  காலச் சுழற்சி 
  காதல் மலர்ச்சி   
  பிறவிகள் வேண்டுமென 
  மண்ணுக்குள் மானுடத்தை  
  விதைகளாக விதைத்துச்  
  சென்றனரே….

  மீண்டும் பிறக்கும்  
  அன்பென்ற  
  மாறாத நம்பிக்கையோடு 
  அராஜக ஆலகாலம் 
  அழிந்து மறைய 
  ஆண் பெண் ஆசை 
  எனப்  புதியதோர் 
  ஆரம்பப் புள்ளியிலே 
  பழைய மனிதர்களே 
  வந்து நிறைத்திடுங்கள்..!

   

 29. படைப்பாளிகள் 

  மாறு வேடம் புனைந்து
  மண்ணில் தோன்றிக் குந்திய
  மானிடச் சிலைகள் இவை !
  கருப் பொருளாய்ச் சிவன்
  இயக்க வடிவாய்ச் சக்தி !
  சிவனும் சக்தியும்
  இமய உச்சியில் 
  அமர்ந்து 
  தமது பசுமை வண்ணப்
  படைப்பு அழகை
  நோக்கும் காட்சி என்னே !
  மகத்தான காட்சி !
  மௌனக் காட்சி !

  சி. ஜெயபாரதன்.

 30. கனிவுறு காதலில் கல்லானோம்

  கனிவுறு காதலில் கல்லானோம்
  இனியொரு பிறவியில் இணைவோமா?
  அந்த வானமும் இந்த பூமியும் போல்
  எந்த போழ்திலும் சேர்ந்தேயிருப்போமா ?

  கன்னல் மொழிகள் பேசி -என்
  மன்னவன் தோள்களில் சாய்ந்தே
  சென்றன பொழுதுகள் மிகச் சிறந்து
  என்றென்றும் அவன் அன்பினில் திளைத்து !

  பசுமையின் கோலங்கள் நாம் கொண்டு
  நேசம் நிறைத்த எம் நெஞ்சம் இரண்டு
  தேசுடன் கொண்ட மாசிலா காதல் ….
  பேச மறந்தது பேதை .. அங்கு!

  விழி வழி நிறைந்து செறிந்த காதல்
  மொழி பறித்து எம்மை ஊமையாக்கி
  கழிந்தன பொழுதுகள் தழுவுதலில்
  வழிந்தது நாணம் .. வதனமெங்கும்!

  பிரிந்திடா அன்றில் பறவைகள் போல்
  நெருங்கியே கூடிய நெஞ்சங்கள்
  தெரிந்தும் தெரியா நெகிழ்வுடனே
  பூரிப்பில் நாம் சேர்ந்து கொண்டோம் !

  இறப்பிலும் பிரியா வரம் வேண்டி
  சிறப்பாய் காதல் வாழ்வு கொண்டு
  உறவில் திளைத்தோம் இணையராய்
  மறவா அன்பு பூண்டிருந்தோம் –நாம்

  கனிவுறு காதலில் கல்லானோம்
  இனியொரு பிறவியில் இணைவோமா?
  அந்த வானமும் இந்த பூமியும் போலே
  எந்த போழ்திலும் சேர்ந்தேயிருப்போமா?

  புனிதா கணேசன்
  இங்கிலாந்து (27.03.2015)

 31. வானம் பூமி தொட்டால் கடல்!
  கானம் செவி தொட்டால் இசை !
  கார்முகில் காற்றுப் பட்டு மழை!
  வேர் மண்ணைத் தொட்டு பயிர்!
  நிலவு பூமி தொட்டால் குழுமை!
  காலைக் கதிரவன் கீற்றுப் பட்டு வெம்மை!
  காற்று புல்லாங்குழல் புகுந்து கீதம்!
  கீற்று இலைகள் தொட்டால் தென்றல்!
  நீ என் கரம் தொட்டு-
  நான் உன் தோள் தொட்டு
  நாம் என் கல்லானோம் ?
  நினைவுகளை இப்படியே
  இனிமையாய் இக்கணமே
  நிறுத்தி விடவா ?

  புனிதா கணேசன்
  இங்கிலாந்து (27.03.2015)

 32.                      தலைப்பு: காலம் கடந்தும் 
  கடந்து செல்லும் காலம் 
  காலமும் மாறும் அகிலம் 
  இவற்றினிடையே 
  காலம் கடந்தும்  நிற்கும் 
  கலை தவழும் மலை  
  மலை தழுவும் முகில் 
  இவற்றோடு 
  காதல் தலைவி தலைவனாய்
  நீயும் நானும்!
              -கிரேஸ் பிரதிபா 

 33. அடிமைச் சிலை…!

  எந்த மந்திரக்கோலுக்கு 
  அடிமையாய் 
  சமைந்து விட்டாய்?

  பஞ்சபூத  சக்திகளும் 
  நிந்தன் சிலையழகு  
  கண்டு செயலிழந்ததோ ?

  உச்சிமலை சிலைகளே 
  தென்றல் தொட்டும் 
  கதிரொளி பட்டும் 
  மேகமழை அடித்தும் 
  உணர்வில்லையோ?

  அன்பெனும் கோலுக்கு 
  சமைந்த மனம் 
  ஆகாசக் கோளுக்கு 
  சுமையாகுமா?

  மாறாத மலையில் 
  சிலையாக 
  அப்படியே 
  அமர்ந்திருங்கள் ..!
  என்றாவது
  சிலையை
  மலை   செய்ய 
  மந்திரக் கோலுடன்  
  மனிதன் வருவான்….!

  ஜெயஸ்ரீ ஷங்கர் 

 34. அடிமைச் சிலை…!

  எந்த மந்திரக்கோலுக்கு 
  அடிமைச் சிலையாய் 
  சமைந்து விட்டாய்?

  பஞ்சபூத  சக்திகளும் 
  நிந்தன் சிலையழகு  
  கண்டு செயலிழந்ததோ ?

  உச்சிமலைச்  சிலையே  
  தென்றல் தொட்டும் 
  கதிரொளி பட்டும் 
  மேகமழை யடித்தும் 
  உணர் வில்லையோ?
  உங்களுக்கு…!

  அன்பெனும் கோலுக்குச்  
  சமைந்த மனம் 
  ஆகாசக் கோளுக்குச் 
  சுமையாகுமா?

  மாறாத மலையில் 
  சிலையாக அப்படியே 
  அமர்ந்திருங்கள் ..!
  என்றாவது ஓர் நாள் 
  சிலையை மலை   
  செய்ய மந்திரக் 
  கோலுடன்  மனிதன்
  வருவான்….!

  ஜெயஸ்ரீ ஷங்கர் 

 35. வெஞ்சினப் பலி !

  விசுவா மித்திர
  வேங்கை முனியின் 
  வெஞ்சினத்தால் சபிக்கப் பட்டோம் !
  விதி முறைகள் தாண்டி 
  மதி இழந்தோம் !
  சதி பதியாய் வாழ நினைத்தோம் !
  என் பிரமச்சரிய விரதம் 
  ஏட்டுச் சுரைக்காய் ஆனது ! 
  போட்ட கோட்டைத் 
  தாண்டி என் 
  மார்பில் சாய்ந்தாய் நீ !
  தண்டணை நமக்கு !
  உச்சி வெய்யிலில் காயும்
  ஊமைச் சிலைகளாய் !

  சி. ஜெயபாரதன்

 36. இயற்கை 
  எழில் வாங்கும் 
  மலையேறியோ  
  சிலை தாங்கிய 
  மலையின் 
  அற்புதக் காட்சி
  கண்கண்டு மனம் 
  கொள்ளை கொண்டதும் 
  காமிரா கண்களுக்கும் 
  விருந்தளித்த 
  அமுதா உங்கள் 
  ஒருள்ளம் இங்கு 
  அத்தனை 
  உள்ளத்துக் 
  கற்பனையை 
  ஊற்றெனப் பெருக்கி 
  கவியாறு ஓட  
  அந்தக்  காமெரா 
  கண்களில் 
  ஆனந்த வெள்ளம்…!

 37. வாழ்த்துகள் சிறந்த கவி படைத்தவர்க்கும் மற்றவர்க்கும்

 38. படக் கவிதைப் போட்டிச் சிறந்த கவிதையாளருக்கும்,
  பாராட்டுகள் பெற்றோருக்கும்,
  மனமார்ந்த வாழ்த்துகள்.
  எனது வரிகளின் பாராட்டிற்கும் 
  மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கிறேன்.
  மகிழ்வு.
  வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 30.3.2015

 39. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.