பல்லழகன் – பகுதி – 18
திவாகர்
“டாக்டர் கோம்டி’ன்னு போர்ட்’ல பார்த்தேன்.. அது நீங்கதானா..”
“நீங்க யாரு சார்?. முதல்ல க்லினிக்ல வர்றதுக்கு அப்பாயிண்ட்மென்ட் வாங்கணும்னு வாசல்லயே போர்ட் போட்டுருக்கோமே.. பார்க்கலியா..”
“நான் பல் கன்சல்டிங்க்கு வரல்லே.. இங்க ஒரு பொண்ணைப் பார்த்தேன். இப்போ எங்க அவ?”
“மரியாதையா பேசுங்க.. அவ கிவன்னு சொன்னா நான் போலீஸைக் கூப்பிடுவேன். நீங்க யாரு? உங்க பேரு என்ன.. சரி, அதெல்லாம் வேணாம்.. நீங்க முதல்ல வெளியே கிளம்புங்க..”
“இல்ல.. அவ.. அதாவது சுமதியை அந்தப் பொண்ணு உள்ள நுழைஞ்சு போனதை நான் பார்த்தேன். சுமதி எங்கேன்னு சொல்லறியா.. இல்ல நானா தேடிக்கட்டுமா?”
சாந்திக்குக் கோபம் கூடவே வந்தது.
“மிஸ்டர்.. ஜாக்கிரதை.. க்லினிக்ல வந்து அநியாயமாப் பேசறதோட இல்லாமல் மரியாதை இல்லாம கத்தறே.. இரு இரு நான் போலீஸைக் கூப்பிடறேன்” என்று சொல்லி ஃபோனை எடுத்தாள். அதற்குள் அந்த ஃபோனைப் பிடுங்கிப் போட்டு சாந்தியின் கையைப் பிடித்து கெட்டியாக முறிக்கப் பார்த்தார்.
“என்னோட சுமதியை ஒளிச்சு வெச்சுட்டு பயமுறுத்தறியா? நான் யார் தெரியுமா.. மரியாதையா சுமதியை உள்ளேயிருந்து கூப்பிடு.. இல்லே.. உங்க ரெண்டு பேரையும் பொம்பளைங்கன்னு பார்க்காம கொன்னுடுவேன்.. ஜாக்கிரதை!” என்று கத்திய கந்தசாமியைப் பார்த்து கோம்டி கத்தினாள்.
“யோவ்.. அவ கையை விடுய்யா.. இப்போ வெளியே போகறியா இல்லே நாங்களே துரத்திடுவோம்.. ஹேய் சாந்தி, உன் கைல கிடைக்கிற பேப்பர் வெயிட்டால அவன் மண்டைல போடு..” இப்படிச் சொல்வதற்குள் கந்தசாமி கோம்டியைப் புறம் தள்ளி பின் கதவைத் திறந்துவிட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். வீட்டுக்குள் இருந்தோர் கத்தினர். அவள் அம்மாவும் அப்பாவும் கந்தசாமியைத் தடுத்தாலும் அவர்களையும் தள்ளி விட்டு இன்னொரு அறைக்குள் பதுங்கியிருந்த சுமதியை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார். வெளியே தெருவில் இருட்டாக இருந்தாலும் அப்படியே தர தரவென இழுத்துச் சென்றவர் அவளிடமிருந்த கைப்பையைத் திறந்தார். அதிலிருந்து எதையோ எடுத்தவரிடமிருந்து அவர் கையைப் பிடித்து தன் வாயால் கடித்து அவரை விட்டு வெளியேறி சுமதி கடகடவென தெருவில் ஓட்டம் பிடித்தாள்.
“என்ன திமிரு.. போ.. எனக்கு என்ன தேவையோ அது கிடைச்சிடுச்சு.. மறுபடியும் இந்தப் பக்கம் வந்தே காலை ஒடிச்சுடுவேன்.” என்று சொல்லிய கந்தசாமி இவர்களை ஏறெடுத்துப் பார்க்காமல் தன் வீட்டுக்குள் போய் விட்டார்.
“போலீசுக்கு மொபைல்ல பேசறேன்” என்று கோம்டி சொல்லும்போது அவள் அம்மா தடுத்துவிட்டாள்.
“வேண்டாம்டி.. அவன் நம்மகிட்ட எதுவும் சண்டைக்கு வரவில்லே.. விடு..”
கோபத்துடன் கத்தினாள். “என்னம்மா சொல்லறே.. நம்ம சாந்தியை கையைப் பிடிச்சு முறுக்கிட்டான். ‘வயலென்ஸ் அகைன்ஸ்ட் லேடீஸ்’ சட்டம் இருக்கு.. அத்தோட சுமதி நம்மகிட்ட வேலை பாக்கற பொண்ணு. அவளைக் கையைப் பிடிச்சு தரதரவெனு இழுத்துப் போயிருக்கான்.. நாளைக்கு சுமதி வந்தாள்னா இன்னும் என்னவெல்லாம் செய்வானோ? நாம பாதுகாப்பு கொடுக்க வேணாமா? இவனை சும்மா விடக்கூடாது.”
“கோமதி.. கொஞ்சம் சும்மா இருக்கியா.. சுமதிக்காக அவன் வந்தான். இனிமே சுமதி இங்கே இனிமே வரமாட்டா. எதுக்கும் அவளை அவ வீட்டுல போய்ப் பாரு. அவ நம்ம வீட்டுக்குள்ள ஓடி ஒளியறச்சே பேசினேன். கடைஞ்செடுத்த அயோக்கியனாம் அவன். ‘வெறி நாய்ம்மா’ன்னு சுமதி அழுதுண்டே சொல்லறா.. நீ ஏன்மா அவங்கிட்டே மாட்டினேன்னு கேட்டேன்.. அப்பறமா சொல்றேன்மான்னு சொல்லறச்ச அந்தக் கடங்காரன் உள்ளயே வந்துட்டான்.. சுமதி சொல்லட்டும். அதுக்கப்பறம் நாம போலீசுக்குப் போகணுமா இல்ல வேற ஏதாவது பண்ணணுமான்னு யோசிப்போம். (சாந்தியைப் பார்த்தாள்) ஏம்மா சாந்தி ரொம்ப வலிக்குதா.. தைலம் தரட்டுமா.. நாசமாதான் போவான்.. பொம்பளைப் புள்ளைன்னு கூடப் பார்க்காம கையை முறிக்கறான்.. புழுத்துச் சாவான் பாரு” அவள் அம்மா சாபம் கொடுத்தாள்.
“இல்லே ஆண்ட்டி.. அவன் பிடிக்கறச்சே வலிச்சுது.. இப்போ இல்லே.. அவன் இந்த மேஜை வெயிட்டுக்கு எஸ்கேப் ஆகிட்டான். இன்னொருதடவை இப்படி வரட்டும்.. நானாச்சு அவனாச்சு..” என்று சாந்தி கையில் அந்த மேஜை வெயிட்டை வைத்தபடியே பேசினாள்.
மறுபடியும் தற்காலத்துக்கு வந்தனர்.
“ஓ! நம்மாளு இங்க இவ்வளோ ஆட்டம் ஆடியிருக்காரா.. சாந்தி! இது என்னிக்கு நடந்தது?”
கோம்டியே சொன்னாள். “என்ன ஒரு நாலு மாசம் இருக்கும். எனக்கு என்ன சந்தேகம்னா அவன் எதையோ அவ கைப்பையிலிருந்து பிடிங்கிட்டான். காசா கார்டா இருக்கும்னு நினைச்சேன்.”
கல்யாண் தலையை அசைத்து ஆமோதித்தான்.
“அன்னிக்கு இந்த கோம்டி சொன்னவுடனே அந்த மேஜை வெயிட்டால பலமா அடிக்காம போயிட்டியே சாந்தி.. பொண்ணுங்கன்னா தைர்யமும் உள்ளவங்கதான்னு காமிச்சிருக்கணும். அது சரி, அந்த சுமதியைப் பாத்தீங்களா.. என்ன காரணம் சொன்னா அவ.”.
“கோம்டி! விடுடி.. அந்த ஆளே போயிட்டான்.. (சட்டென கல்யாணைப் பார்த்தவள்) சாரி, போயிட்டாரு..” சாந்தி வெறுப்புடன் சொன்னாள்.
“என்ன பெரிய காரணம்.. அவ ஏதோ சொல்லி மழுப்பிட்டா.. அந்த ஆள் கைப்பைலேர்ந்து என்ன எடுத்தான்னு கேட்டதுக்கு அது ஒண்ணுமில்லேம்மா. விடுங்க அதைப் பத்தி பேச வேணாம். ஆனா அவங்கிட்டே ஜாக்கிரதையா இருங்க.. அவன் இனிமே வந்தான்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க.. அப்ப நாம் எல்லாமா சேர்ந்து போலீசுல மாட்டிவிடலாம்னு சொன்னா.. ஆனா அன்னிலேர்ந்து அவ என் க்லினிக் வரல்லே.. நானும் வேற ஆள் போட்டுட்டேன்.”
“ஆனா இப்படிப்பட்ட கொடுமைக்காரன் அதுவும் மரியாதையே தெரியாதவன் ஒத்தன் செத்துப் போயிட்டான்னு தெரிஞ்சா அதுவும் உங்க பெரியப்பாவா இல்லாத பட்சத்தில் என்ன நீங்க நினைப்பீங்களோ அதே நினைப்புதான் எங்களுக்கும் இருக்கு,” சாந்தி இப்படிச் சொல்லியதும் கோம்டி தலையை ஆட்டினாள்.,,
“கந்தசாமி.. அதான் உங்க பெரியப்பா கொலையானார்னு வைசாக்லேர்ந்து திரும்பிவந்த அன்னிக்குக் காலைல எனக்குத் தெரிஞ்சவுடனே நான், சாந்தி ஏன் எங்கம்மா எங்கப்பா கூட கொஞ்சம் சந்தோஷப்பட்டோம்தான். ஆனா எனக்கு உங்களோட பெரியப்பாதான் அந்த ஆளுன்னு தெரிஞ்சவுடனே அன்னிக்கு சாயங்காலம் வந்து துக்கம் விசாரிச்சேன். இந்த கேஸ் எடுத்த மூணாம் நாளே இன்ஸ்பெக்டர் என்னை சுமதியைப் பாக்கச் சொல்லி விசாரிக்கச் சொன்னாரு. ஏன்.. இன்னிக்குக் கூட அதைத்தான் கேட்டாரு. சுமதியை விசாரிக்கணும்னு அவரே ஒருதடவை உங்ககூட போனாரு. ஆனா நான் இப்போ வரைக்கும் போகலே.. எதுக்குன்னா எனக்கு அவ விஷயம் தெரியும். அவ இந்தக் கொலையைப் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லே. சாதாரணமா அந்த ஆளையே பார்க்கமாட்டேன்னு பிடிவாதமா இருந்தவ துப்பாக்கியாலே இந்த வீட்டுக்கு வந்து ஏன் சுடணும்,, அவகிட்ட போனா பழையபடி ஏதாவது பொம்பளை அவஸ்தப்பட்ட கதைதான் கிடைக்கும்னு தெரிஞ்சுபோச்சு.”
“கோம்டி நீங்க சொல்லறது வாஸ்தவம்தான். சுமதி கொலை பண்ணியிருக்க வாய்ப்பே இல்லைன்னு நானே இன்ஸ்பெக்டருக்குச் சொன்னேன்.”
“நானும் கவனிச்சேன் அதை. ஆனா அதை விட கூடவே இருக்கற இந்த பசங்க முரளி சுந்தரைப் பிடிச்சா நிறைய விஷயம் கிடைக்கும்னுதான் இவங்களை ஃபாலோ பண்ணேன்.. சரி, போஸ்ட் மார்ட்டம் பிரகாரம் சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஒரு குண்டு மார்புலயும் இன்னொரு குண்டு சாயங்காலம் அஞ்சறை மணிக்கு நல்லா ஆழமா நெத்திப் பொட்டுலேயும் போயிருக்கு.. மார்ல பாய்ஞ்ச குண்டு வலது மார்பு ஓரத்துல பட்டதுனாலே இதயத்துக்கு ஆபத்தில்லாம பொழைச்சுப்போக வாய்ப்பிருக்கு இல்லையா.. ஆனா அரைமணி நேரத்துக்கு அப்பறம் பாய்ஞ்ச குண்டு அவர் உயிரைக் குடிச்சுடுச்சு. இது எப்படி நடந்ததுன்னு ப்ரூவ் பண்ணினோம்னா கேஸ் குலோஸ். எல்லா ஆங்கிளும் செக் பண்ணி என்னோட ரிப்போர்ட்டை நாளைக்கு அடுத்தநாள் தர்றேன்.”.
சாந்தி குறுக்கிட்டாள்.
“நாளைக்கு கேஸ் முடிஞ்சுடுமாடி?”
“அது தெரியாது. நாம டீடெயில் ரிப்போர்ட் கொடுக்கவேண்டியது நம்ம கடமை. அதை பூர்த்தி பண்ணி நாம ஒதுங்கிடலாம். பொதுவா என்னோட எல்லா வேலையும் அப்படித்தான் இருக்கும். நான் இன்வெஸ்டிகேஷன் மட்டும்தான் பார்க்கிறேன். லாயர் இல்லையே.. முடிஞ்சவரைக்கும் தகவல் திரட்டி ஆதாரத்தோடு பார்ட்டிகிட்ட கொடுத்தா அதுக்கப்பறம் அவங்க நடக்க வேண்டியதைப் பார்த்துப்பாங்க.. நான் என் ஃபீஸை வாங்கிண்டு கழண்டுண்டு வரவேண்டியதுதான்.. இதே முடிவுதான் கல்யாண் பெரியப்பா கேஸ்லயும்… நாளைக்கு நான் என் வேலையை முடிச்சுடறேன். அதுக்கு முன்னாடி கல்யாண் ரெண்டு வேலை பண்ணனும்.”
“என்ன வேலை?”
“நாளைக்குக் காலையில சுந்தர் வந்து ரிப்போர்ட் தருவான். அவன் வந்தவுடனே அந்த ஸ்டேட்மெண்டை வாங்கி வெச்சுக்குங்க. நாளைக்கு ஒரு நாள் போகட்டும். நாளன்னிக்கு சுந்தர், முரளியும் பிரியாவையும் வரச் சொல்லுங்க.. பிரியா எதுக்குன்னு முரளி கேட்கலாம். ஒரு சாட்சிக்குதான்னு சொல்லணும். நான் இன்ஸ்பெக்டரையும் ரெடியா வரச் சொல்லறேன்.. ஒரு ஃபைனல் மீடிங்க் போட்டு முடிச்சிடப் பாக்கலாம். என்னோட செக்கையும் ரெடி பண்ணி வெச்சுக்குங்க.. நான் கழண்டுக்கறேன்.. ஓகேவா?”
“எனக்குப் புரியறது.. ஆனா நான் ஃபோன் பண்ணினவுடனே ஒருவேளை சந்தேகப்படறாங்களோன்னு தெரிஞ்சு இவங்க எஸ்கேப் ஆகிட்டா?”
“யாரும் எஸ்கேப் ஆகமாட்டாங்க. நான் நீங்க இங்க வர்றதுக்கு முன்னாடிதான் இன்ஸ்பெக்டர் மோகன்கிட்ட பேசினேன். முரளிக்கும் சுந்தருக்கும் ஒரு இருபத்து நான்கு மணி நேரக் கண்காணிப்பு தேவை.. இப்பவே ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்லி இருக்கேன்.”
கடைசியில் ஒரு முத்தாய்ப்பாக ஒரு வார்த்தை சொன்னாள்
“யாரு எஸ்கேப் ஆனாலும் ஆகாவிட்டாலும் நான் இந்த கேஸுலேர்ந்து சீக்கிரமே எஸ்கேப்.”
ஏதோ ஒரு ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்தான் கல்யாண்.
அடுத்த நாள் காலை போலீஸ் ஸ்டேஷன்
இன்ஸ்பெக்டர் மோகனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் கோம்டி
“நீங்க கேட்கிறது புரியறது.. இதோ பாருங்க கோமதி..”
“சார்.. நான் கோம்டி.. கந்தசாமி இறந்த நேரம் நிச்சயமா சாயங்காலம் அஞ்சரை மணிக்குத்தானான்னு கேட்டேனே..”
இன்ஸ்பெக்டர் கொஞ்சம் அலுப்புடன் பேசுகிறார். “சரிம்மா கோம்டி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல அவர் இறந்த நேரம் ஈவ்னிங்க் 5.30 இருக்கணும்னு சொல்லறாங்க.. முதல் குண்டு ஏறத்தாழ அஞ்சு மணிக்கும் இரண்டாவது குண்டு அஞ்சரை மணிக்கும் பாய்ஞ்சிருக்கணும்னு சொல்லறாங்க.. முதல் குண்டு மார்புல அதுவும் வலது மார்புல ஓரத்துல விலா எலும்பு வரைக்கும் கூட ஆழமா இல்லாம பாயறச்சே ரத்த சேதம் மார்புல ரொம்ப அதிகமா இல்லே.. அப்போ அவர் உயிர் போகலே.. அத்தோட மார்பு ரத்தம்தான் அவர் கையிலயும் அதே கைரேகைதான் பீரோ ஹேண்டில்லயும் இருக்கு.. இன்னொண்ணு என்னன்னா ரொம்ப கிட்டக்கலேர்ந்து பிஸ்டல சாச்சு சுடப்பட்டிருக்கவேண்டும். பிஸ்டல் ஸ்லான்ட் பொஸிஷன்ல சுடறச்சே அதனோட வேகம் ரொம்ப குறச்சலாவே பாய்ஞ்சிருக்கு. ஆனா அரை மணி நேரத்துக்குப் பின்ன பாய்ஞ்ச அடுத்த குண்டு நெத்திப் பொட்டுல துப்பாக்கியை அழுத்தி சுட்டதில அது சரியா சுடப்பட்டு உடனடியா உயிரைக் குடிச்சிருச்சு. இவ்வளவுதான்.. அது நடந்த நேரம் அஞ்சறை மணிக்கு…”
“அது எனக்கு ஓரளவு தெளிவைக் கொடுத்துருக்கு சார். நாளைக்குக் காலைல பதினோறு மணிக்கு நானும் நீங்களும் கல்யாண் வீட்டுல ஒரு ஃபைனல் மீடிங்க் போடலாம். யாரார் மேலே சந்தேகம் பண்றோமா அவங்கள்லாம் வராங்க.. நீங்க ஃபைனல் அதாரிடி.. அதுக்கப்பறம் உங்க முடிவு என்னவா இருந்தாலும் அதை நீங்க எடுத்துக்கலாம்.”
“ஓகே கோம.. சாரி. கோம்டி..” என்றவர் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்.
“நீங்க சுந்தருக்கும் முரளிக்கும் கண்காணிப்புப் போடணும்னு கேட்டது ரொம்பச் சரி. காலைலே சுந்தர் அவசரம் அவசரமா வீட்டை விட்டு வெளியே போயிருக்கான். எஸ்கேப் பண்ணப் பாத்துருக்கான் அவனை ஃபால்லோ பண்ணின கான்ஸ்டபிள் அவனை அப்போதான் பிடிச்சிருக்கார். ஸ்டேஷனுக்குக் கொண்டு வரதா சொல்லியிருக்கார். “அவன் தப்பிக்கதான் பார்த்திருக்கான் சார்.. நல்லகாலம் அதுக்குள்ளே பிடிச்சுட்டோம்”னார்.. அதனால சுந்தர் வந்தா இங்கேயே இருக்க வெச்சுடறேன்.. நாளைக்குக் காலைல நான் வரச்சே அவனைக் கொண்டு வர்றேன்..”
“ஓ.. சுந்தர் ஏன் தப்பிக்கப் பாக்கணும்.. இருந்தாலும் நீங்க பிடிச்சது நல்லதுதான்..ஓகே சார்..”
அவள் வெளியேறும்போதுதான் பார்க்கிறாள் அங்கே வெயிட்டிங்க் பெஞ்சில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருப்பதையும் இன்ஸ்பெக்டர் அழைப்பதாகச் சொன்னதும் அவன் எழுந்து நடப்பதையும் பார்க்கிறாள். சற்று கால் ஊனமாக இருந்து மெதுவாக நடந்து செல்வதையும் கவனிக்கிறாள். இருந்தாலும் வெளியே போகிறாள். மனதுக்குள் ஏதோ இடிக்க வெளியே சற்று நேரம் காத்திருக்கிறாள். அங்கே உள்ளே இருந்தவன் வெளியே வந்து அவளைக் கடந்து போகையில் அவனை நிப்பாட்டுகிறாள். மெல்லிய குரலில் கூப்பிடுகிறாள்.
“மிஸ்டர் திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி…”
சட்டென நிற்கிறான் அவன். அவளைப் பார்த்து ஆச்சரியமாக கேட்கிறான்.
“அட, என் முழுப் பேரும் வெச்சுக் கூப்பிடறீங்க.. என்னைத் தெரியுமா?”
“ஓ! உங்களைத் தெரியுமே.. உங்களை நான் பார்த்திருக்கிறேனே.. என்னை ஞாபகம் இல்லையா?”
அவன் முழித்தான்..
தொடரும்
