Category: செய்திகள்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    நைஜல் ஃபராஜ் மற்றும் Reform UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.

    பிரிட்டிஷ் அரசியலைப் பற்றி எழுதும்போது, கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் ஒருவராக நைஜல் ஃபராஜை குறிப்பிடாமல் முன்னேற முடியாது.

    ஒரு அரசியல் தலைவர் எப்போதும் ஆட்சியில் இருந்தால்தான் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டியதில்லை. சிலர் எதிர்க்கட்சியில் இருந்தபடியே நாட்டின் அரசியல் திசையையே மாற்றிவிடுவார்கள். நைஜல் ஃபராஜ் அப்படிப்பட்டவர்.

    அவர் பிரிட்டிஷ் அரசியலின் மையக் கேள்விகளாக மாற்றியவை குடியேற்றம், தேசிய இறையாண்மை மற்றும் பிரிட்டிஷ் அடையாளம்.

    பல ஆண்டுகளாக இந்தக் கருத்துக்கள் அரசியல் மேடைகளில் பேசப்பட்டாலும், அவற்றை பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாற்றியவர்களில் ஃபராஜுக்கு முக்கியமான இடமுண்டு.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பலர் அரசியல் கனவாகவே கருதினர்.

    ஆனால் அந்தக் கனவு மக்களின் வாக்காக மாறியது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் பின்னணியில் ஃபராஜ் வகித்த பங்கு, பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் தனி அத்தியாயமாகவே இருக்கும்.

    பிரெக்சிட்டிற்குப் பிறகு அவரது அரசியல் முடிந்துவிடும் என்று பலரும் நினைத்தனர்.

    ஆனால் அரசியலில் வெற்றிடங்கள் நீண்ட காலம் காலியாக இருப்பதில்லை.

    மக்களின் புதிய அதிருப்திகளை உணர்ந்த ஃபராஜ், ரீபோர்ம் யூகே என்ற கட்சியை தேசிய அரசியலின் முக்கிய சக்தியாக மாற்றத் தொடங்கினார்.

    ரீபோர்ம் யூகேவின் பலம் என்ன ?

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு.

    மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவதில்லை.

    ஆனால் அவர்கள் தாங்கள் கேட்கப்படவில்லை என்று உணரும்போது, மாற்றத்தை உருவாக்கும் சக்தியைத் தேடுகிறார்கள்.

    இன்று ரீபோர்ம்ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது இதுவே.

    வாழ்க்கைச் செலவு உயர்வு…

    வரி சுமைகள்…

    குடியேற்றம் தொடர்பான கவலைகள்…

    தேசிய சுகாதார சேவையின் நீண்ட காத்திருப்பு…

    அரசியல்வாதிகளின் மீது குறைந்து வரும் நம்பிக்கை…

    பிரிட்டனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பகுதி மக்களிடையே உருவாகிவரும் அச்சம்…

    இந்த அனைத்தையும் ஒரே அரசியல் மொழியாக மாற்ற முயற்சிக்கிறது Reform UK.

    அவர்கள் பேசும் மொழி மிகவும் நேரடியானது.

    அரசியல் அலங்காரச் சொற்கள் குறைவு.

    அதனால்தான் பாரம்பரிய அரசியலில் விரக்தியடைந்த சில வாக்காளர்களை அவர்கள் ஈர்க்க முடிகிறது.

    2024 பொதுத்தேர்தலில் Clacton தொகுதியில் ஃபராஜ் 21,225 வாக்குகளைப் பெற்று, 46.2% வாக்கு பங்குடன் வெற்றி பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜைல்ஸ் வாட்லிங்ஸ் 12,820 வாக்குகளைப் பெற்றார்.

    அது ஒரு தொகுதி வெற்றி மட்டுமல்ல.

    “ரீபோர்ம் யூகேஐ இனி புறக்கணிக்க முடியாது” என்ற அரசியல் செய்தியாகவும் அது அமைந்தது.

    ரீபோர்ம் யூகேவின் பலவீனம் என்ன ?

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் மற்றொரு உண்மையையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

    மக்களின் கோபத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு விஷயம்.

    ஒரு நாட்டை நிர்வகிப்பது வேறு விஷயம்.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொள்கைகளை விமர்சிப்பது எளிது.

    ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு முடிவும் பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பாதிக்கும்.

    அங்கேயே எந்த புதிய அரசியல் இயக்கமும் தனது உண்மையான திறமையை நிரூபிக்க வேண்டும்.

    ரீபோர்ம் யூகே இன்னும் அந்தச் சோதனையை முழுமையாக எதிர்கொண்டதாக நான் கருதவில்லை.

    ஒரு அரசியல் கட்சியின் உண்மையான வலிமை, அது எவ்வளவு சத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது என்பதில் மட்டும் இல்லை.

    அதிகாரம் கிடைத்தால் அந்த எதிர்ப்பை நடைமுறை அரசாக மாற்றும் திறன் அதற்கு இருக்கிறதா? என்பதில்தான் உள்ளது.

    £5 மில்லியன் விவகாரம்  ஃபராஜின் அரசியலைச் சூழ்ந்த புதிய கேள்வி

    இங்கேதான் நைஜல் ஃபராஜின் சமீபத்திய அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு திருப்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

    2024ஆம் ஆண்டு, ரீபோர்ம் யூகேக்கு நிதியுதவி செய்த கிரிப்டோ முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹாபோர்ன் என்பவரிடமிருந்து ஃபராஜ் £5 மில்லியன் பெறுமதியான தனிப்பட்ட பரிசைப் பெற்றார்.

    இது சாதாரண அரசியல் நன்கொடை விவகாரம் அல்ல.

    ஏனெனில், அந்தத் தொகை தொடர்பாக நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஃபராஜ் ஆரம்பத்தில், இந்தப் பணம் தனது வாழ்நாள் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகளுக்காக வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

    பின்னர் அவர் அதனை Brexit-க்காக மேற்கொண்ட தனது அரசியல் முயற்சிகளுக்கான ஒரு வகையான “பரிசு” எனவும் விளக்கியுள்ளார்.

    இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    விசாரணை நடைபெறுவது என்பது ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டார் என்பதல்ல.

    ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வழங்கப்பட்டது, அது ஏன் உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை, நாடாளுமன்ற விதிகளுக்கு அது உட்பட்டதா என்பவை நிச்சயமாக பொதுமக்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளாகும்.

    மேலும், இந்த விவகாரம் வெறும் அரசியல் வதந்தியாக இல்லை. நாடாளுமன்ற விதிமுறைகளை கண்காணிக்கும் அமைப்பின் விசாரணைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.

    இதன் காரணமாக ஃபராஜின் அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது:

    “அதிகார வர்க்கத்தைஎதிர்த்து பேசும் ஒருவர், தன்னுடைய அரசியல் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறார்?”

    அதுதான் இன்றைய பிரச்சினையின் அரசியல் மையம்.

    பதவி விலகலும் கிளாக்டன் இடைத்தேர்தலும்

    இந்த நிதி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தீவிரமடைந்த நிலையில், 2026 ஜூலை 7 அன்று ஃபராஜ் கிளாக்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனால் அவர் அரசியலை விட்டு விலகவில்லை.

    மாறாக, தனது பதவி விலகலின் மூலம் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலை உருவாக்கி, அதில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    அவர் இதனை “மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான தேர்தல்” என்ற அரசியல் சவாலாக முன்வைத்தார்.

    அதாவது,

    “என்னைப் பற்றிய தீர்ப்பை நாடாளுமன்ற விசாரணைகள் வழங்க வேண்டாம்; கிளாக்டன் (Clacton) மக்கள் வழங்கட்டும்” என்பதே அவரது அரசியல் நிலைப்பாட்டின் சாரமாக இருந்தது.

    இது ஃபராஜின் அரசியல் பாணியை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

    ஒரு பிரச்சினையை அவர் சட்டரீதியான அல்லது நாடாளுமன்ற நடைமுறை விவகாரமாக மட்டும் பார்க்கவில்லை.

    அதை உடனடியாக “மக்கள் எதிர் அதிகார வர்க்கம்” என்ற அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்.

    இதுதான் அவரது பலமும்.

    அதே நேரத்தில் இதுவே அவரது அரசியல் பலவீனமாகவும் மாறக்கூடும்.

    ஏனெனில், ஒவ்வொரு நிர்வாக அல்லது ஒழுங்குமுறை விசாரணையையும் “அதிகார வர்க்கத்தின் சதி” என்று மாற்றிவிட்டால், உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான அபாயம் உள்ளது.

    ஆனால் நடந்தது என்ன?

    ஃபராஜ் எதிர்பார்த்திருந்தது ஒரு மிகப்பெரிய அரசியல் மோதல்.

    ரீபோர்ம் யூகே  ஒருபுறம்.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் போன்ற பாரம்பரிய அரசியல் சக்திகள் மறுபுறம்.

    ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்டது.

    முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தன.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ரீஸ்டோர் பிரிட்டன் கட்சியும் போட்டியிடவில்லை.

    இதன் அரசியல் காரணம் தெளிவானது.

    அந்தக் கட்சிகளின் பார்வையில், ஃபராஜ் தனது சொந்த நிதி மற்றும் நாடாளுமன்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த இடைத்தேர்தலை உருவாக்கியிருந்தார்.

    கன்சர்வேடிவ் தலைவர் கெமி பேடனொக் இதனை “போலி இடைத்தேர்தல்” என்றும் “தன்முனைப்பு போட்டி” என்றும் விமர்சித்தார்.

    லேபர் இதனை ஒரு “சர்க்கஸ்” எனக் கருதி போட்டியிடவில்லை.

    லிபரல் டெமகிரட்ஸ் தலைவர் எட் டேவி, இதனை ஃபராஜின் “அகங்கார அரசியல்” என்று விமர்சித்ததுடன், அதற்கு அரசியல் ஆக்சிஜன் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

    கிறீன்ஸ் கட்சியும் இறுதியில் போட்டியிடாமல் விலகியது.

    இதில் ஒரு சுவாரசியமான அரசியல் முரண்பாடு உள்ளது.

    ஃபராஜ் விரும்பியது:

    “அரசியல் வர்க்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம்”

    முக்கியக் கட்சிகள் உருவாக்கியது:

    “ஃப்ராஜுக்கெதிரான ஃப்ராஜின் போராட்டம்”

    அதாவது, அவர் எதிர்பார்த்த பெரிய அரசியல் போராட்ட மேடை உருவாகவில்லை.

    34 வேட்பாளர்கள்  ஆனால் உண்மையான போட்டியாளர் யார்?

    முக்கியக் கட்சிகள் விலகியதால் கிளாக்டன் தேர்தல் வெறுமையாகிவிடவில்லை.

    மாறாக, வரலாற்றில் மிகவும் விசித்திரமான தேர்தல்களில் ஒன்றாக மாறியது.

    மொத்தம் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இது ஒரு பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மிகப்பெரிய வேட்பாளர் எண்ணிக்கையாக அமைந்தது.

    அவர்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் நகைச்சுவை அரசியல்வாதியான கவுண்ட் பின்வேஸ்(Count Binface).

    இது ஒரு சாதாரண தேர்தல் களமாக இல்லாமல், பிரிட்டிஷ் அரசியலின் மீதான மக்களின் விரக்தி, நகைச்சுவை, எதிர்ப்பு மற்றும் அரசியல் நாடகத்தின் கலவையாக மாறியது.

    ஆனால் இதன் அடிப்படை உண்மை ஒன்றுதான்:

    பெரிய கட்சிகள் இல்லாத தேர்தல், உண்மையான தேசிய அரசியல் ஆதரவை அளக்கும் வழக்கமான அளவுகோலாக இருக்க முடியாது.

    ஃபராஜ் மீண்டும் வென்றார் – ஆனால் அதன் அர்த்தம் என்ன?

    2026 ஆகஸ்ட் 13 அன்று நடந்த கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 22,239 வாக்குகளையும், சுமார் 62.8% வாக்குகளையும் பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக இருந்த கவுண்ட் பின்வேஸ் (Count Binface) சுமார் 9,455 வாக்குகளைப் பெற்று 26.7% பெற்றார். வெற்றி மிகப் பெரியது.

    ஆனால் இங்கே ஒரு அரசியல் நுணுக்கத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

    2024 பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் வாக்குகள் சேர்ந்து அந்தத் தொகுதியில் மிகப் பெரிய வாக்குத் தளத்தை வலதுசாரிக் கட்சிகளுக்கு உருவாக்கியிருந்தன.

    2026 இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவே இல்லை.

    எனவே, இந்த வெற்றியை “பிரிட்டன் முழுவதும் ஃபராஜுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு” என்று எடுத்துக்கொள்வது அரசியல் ரீதியாக மிகைப்படுத்தலாகிவிடும்.

    இது முதன்மையாக கிளாக்டன் தொகுதியில் ஃபராஜின் தனிப்பட்ட அரசியல் ஆதரவையும் ரீபோர்ம் யூகேயின் உள்ளூர் வலிமையையும் காட்டுகிறது.

    ஆனால் அது அவருக்கு ஒரு முக்கியமான அரசியல் மூலதனத்தை மீண்டும் வழங்கியுள்ளது:

    நாடாளுமன்ற இருக்கை.

    ஆனால் £5 மில்லியன் கேள்வி முடிந்துவிட்டதா?

    இல்லை.

    இதுதான் இந்த இடைத்தேர்தலின் மிக முக்கியமான அரசியல் உண்மை.

    ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற விதிமுறைகளை மீறிய விசாரணை முடிவடைந்துவிடவில்லை.

    மாறாக, அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதால் அந்த விவகாரம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் போன்ற சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

    இதனால் Clacton மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறது:

    “நாங்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.”

    ஆனால் அது மற்றொரு விஷயத்தைச் சொல்லவில்லை:

    “நாடாளுமன்ற விதிமுறைகள் தொடர்பான விசாரணை தேவையில்லை.”

    இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாது.

    ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு ஒரு அரசியல் ஆணையை வழங்குகிறது.

    ஆனால் சட்டமும் நாடாளுமன்ற விதிகளும் தங்களுடைய நடைமுறையில் தொடர்கின்றன.

    புலம்பெயர் தமிழனாக என் பார்வை

    இந்த இடத்தில் நான் ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, குடியேற்றம் குறித்து பேசப்பட்டது.

    இன்று குடியேற்றமே தேர்தல்களின் மையக் கேள்விகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    அப்போது விவாதம் வேலை வாய்ப்பைப் பற்றியது.

    இன்று விவாதம் தேசிய அடையாளத்தையும் எல்லைக் கட்டுப்பாட்டையும் பற்றியது.

    அப்போது,

    “எத்தனை பேர் வருகிறார்கள்?”

    என்ற கேள்வி இருந்தது.

    இன்று,

    “பிரிட்டன் எப்படிப்பட்ட நாடாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வி எழுகிறது.

    இந்த மாற்றத்தை நான் ஐம்பத்தொரு ஆண்டுகளாக நேரில் பார்த்திருக்கிறேன்.

    ஒரு குடியேறிய தமிழனாக, இந்த நாட்டின் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், வாய்ப்புகளையும் மதிக்கிறேன்.

    அதே நேரத்தில், இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களின் உணர்வுகளையும் நான் புரிந்துகொள்கிறேன்.

    ஒரு நாட்டிற்கு மனிதநேயமும் தேவை.

    அதே நாட்டிற்கு ஒழுங்கும் தேவை.

    ஒரு நாட்டிற்கு அகதிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இதயமும் தேவை.

    அதே நேரத்தில், அதன் குடியேற்றக் கொள்கைக்கு தெளிவான விதிகளும் தேவை.

    இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்குவது எந்த அரசுக்கும் மிகவும் கடினமான அரசியல் பணியாகும்.

    ஆனால் அதைவிட முக்கியமானது இன்னொன்று.

    குடியேற்றத்தைப் பற்றிப் பேசும்போது குடியேறியவர்களைப் பற்றிய வெறுப்பையும், குடியேற்றம் குறித்து கவலைப்படுபவர்களைப் பற்றிய அவமதிப்பையும் ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

    அரசியல் விவாதம் மனிதர்களை எதிரிகளாக மாற்றாமல், பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடும் வழியாக இருக்க வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை

    எனது பார்வையில் ரீபோர்ம் யூகேயின் மிகப்பெரிய வெற்றி அவர்கள் பெற்றிருக்கும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல.

    கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் மொழியையே மாற்றியிருப்பதுதான்.

    ஒரு காலத்தில் வலதுசாரி வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி, இன்று தனது பாரம்பரிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியை ரீபோர்ம் யாகூ நோக்கி இழந்துள்ளது.

    இது சாதாரண வாக்கு மாற்றமல்ல.

    இது அரசியல் நம்பிக்கையின் இடமாற்றம்.

    கிளாக்டன் இதற்கு ஒரு குறியீடு.

    ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு இங்கே இன்னொரு கேள்வியும் உள்ளது:

    ரீபோர்ம் யூகேவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா?

    அல்லது ரீபோர்ம் யூகே எடுத்துக்காட்டும் மக்களின் உண்மையான கவலைகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா?**

    இரண்டாவது வழியே நீண்ட காலத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சோதனை

    ரீபோர்ம் யூகேவின் வளர்ச்சியை கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சவால்.

    ஏனெனில் குடியேற்றம், வாழ்க்கைச் செலவு, என்.எச்.எஸ், வீடமைப்பு, வேலைவாய்ப்பு, பொது சேவைகள் போன்ற கேள்விகள் வலதுசாரிகளின் சொந்த பிரச்சினைகள் அல்ல.

    அவை சாதாரண மக்களின் வாழ்க்கைக் கேள்விகள்.

    Labour அவற்றுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்கத் தவறினால், அந்த இடத்தை ரீபோர்ம் போன்ற இயக்கங்கள் நிரப்பும்.

    அதேவேளை,ரீபோர்மை எதிர்ப்பதற்காக அதன் கடுமையான மொழியை அப்படியே ஏற்றுக்கொள்வதும் லேபருக்கு தீர்வாக இருக்காது.

    மக்களின் அச்சத்தை மறுப்பதற்குப் பதிலாக, அந்த அச்சம் ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வதே அரசியலின் முதிர்ச்சி.

    லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் புதிய அரசியல் இடைவெளி

    Liberal Democrats-க்கு இங்கு வேறொரு வாய்ப்பு உள்ளது.

    கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் இடையிலான வலதுசாரி போட்டி தீவிரமடையும் போது, மிதவாத மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் இடம் உருவாகிறது.

    ஆனால் அந்த இடத்தை லிபரல் டெமகிரட்ஸ் எவ்வளவு திறமையாக நிரப்புகின்றனர் என்பதுதான் கேள்வி.

    கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணித்தது அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டைத் தந்திருக்கலாம்.

    ஆனால் எதிர்காலத்தில் ரீபோர்ம் யூகே வளர்ந்துகொண்டே சென்றால், அதன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அரசியல் தளத்தை யார் உருவாக்கப் போகிறார்கள்?

    இதுவும் ஒரு முக்கியமான கேள்வி.

    ஃபராஜ் – ஒரு தலைவர் மட்டுமா? அல்லது ஒரு அரசியல் அறிகுறியா?

    நைஜல் ஃபராஜை ஒருவர் விரும்பலாம்.

    வெறுக்கலாம்.

    அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

    மறுக்கலாம்.

    ஆனால் அவரை அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிரிட்டனின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

    அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல.

    அவர் பிரிட்டிஷ் சமூகத்தின் ஒரு பகுதியின் மனநிலையை வெளிப்படுத்தும் அரசியல் நிகழ்வு.

    அந்த மனநிலை ஏன் உருவானது என்பதைக் கவனிப்பது முக்கியம்.

    அதை வெறுமனே “வலதுசாரி கோபம்” என்று நிராகரித்துவிட்டால், அதன் பின்னால் இருக்கும் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

    அதே நேரத்தில், அந்தக் கோபத்தை அரசியல் அதிகாரமாக மாற்றும் ஒவ்வொரு முயற்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

    அதுதான் ஜனநாயகத்தின் சமநிலை.

    கிளாக்டன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

    இந்த இடைத்தேர்தல் எனக்கு ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவூட்டுகிறது.

    மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது, அவருடைய ஒவ்வொரு செயலும் சரி என்று தீர்ப்பு வழங்குவதாக அர்த்தமல்ல.

    அதேபோல்,

    ஒரு அரசியல்வாதி மீது விசாரணை நடைபெறுவது, அவர் அரசியல் ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டார் என்பதையும் அர்த்தப்படுத்தாது.

    கிளாக்டன் மக்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    இப்போது அவரது பொறுப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

    அவர் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதாகச் சொன்னால், அதனை விமர்சிப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நேர்மை ஆகியவற்றிலும் தன்னை நிரூபிக்க வேண்டும்.

    ஏனெனில் அதிகாரத்தை விமர்சிப்பது எளிது.

    அதிகாரத்தின் முன் நின்று தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் கடினம்.

    முடிவாக…

    நைஜல் ஃபராஜின் அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

    மாறாக, அது இன்னொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

    பிரெக்ஸிட் அவரை வரலாற்றில் பதித்தது.

    ரீபோர்ம் யூகே அவரை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்குக் கொண்டுவந்தது.

    கிளாக்டன் அவருக்கு நாடாளுமன்ற இருக்கையைத் தந்தது.

    ஆனால் £5 மில்லியன் விவகாரம் அவருக்கு ஒரு புதிய சோதனையை உருவாக்கியுள்ளது.

    அந்தச் சோதனை வெறும் ஃபராஜுக்கானது அல்ல.

    அது பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கான சோதனையும் கூட.

    ஒரு அரசியல்வாதியின் மக்கள் ஆதரவும், அவரது அரசியல் பொறுப்பும் இரண்டும் ஒன்றாக இருக்க முடியுமா?

    மக்களின் கோபத்தை அரசியல் மாற்றமாக மாற்ற முடியும்; ஆனால் அந்த மாற்றத்தை நல்லாட்சியாக மாற்ற முடியுமா?

    ரீபோர்ம் யூகே எதிர்ப்பின் சக்தியாக மட்டுமே தொடருமா, அல்லது ஒருநாள் ஆட்சிக்குத் தயாரான மாற்று அரசாக உருவெடுக்குமா?

    கன்சர்வேடிவ் கட்சி தனது பாரம்பரிய வாக்குத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புமா?

    லேபர் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அச்சங்களுக்கு நம்பகமான பதிலை வழங்குமா?

    லிபரல் டெமகிரட்ஸ் இந்த புதிய அரசியல் இடைவெளியை நிரப்புவார்களா?

    இவைதான் இனி பிரிட்டிஷ் அரசியலின் முக்கியக் கேள்விகள்.

    நான் இந்த நாட்டில் ஐம்பத்தொரு ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழனாக இந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, எனக்கு தோன்றுவது ஒன்றுதான்:

    பிரிட்டன் மாறிக்கொண்டிருக்கிறது.

    ஆனால் மாற்றத்தின் திசையை இன்னும் யாரும் முழுமையாகத் தீர்மானித்துவிடவில்லை.

    அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாம்.

    தலைவர்கள் வரலாம்.

    போகலாம்.

    வாக்காளர்கள் கட்சிகளை மாற்றலாம்.

    ஆனால் இறுதியில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, அதன் மக்களின் மனநிலையும் அவர்கள் செலுத்தும் வாக்கும்தான்.

    அந்த மனநிலை எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே, பிரிட்டிஷ் அரசியலின் நாளைய முகத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்.

    நைஜல் ஃபராஜ் அந்த மாற்றத்தின் காரணமா?

    அல்லது ஏற்கனவே மாறிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் சமூகத்தின் வெளிப்பாடா?

    இதற்கான பதில் இன்னும் வரலாற்றின் கைகளில்தான் உள்ளது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    (தொடரும் – பகுதி 4: கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் எதிர்காலம், மற்றும் பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை.)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை

    ஒரு ஜனநாயக நாட்டில் தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை.

    அவர்கள் மக்களின் நம்பிக்கையால் உருவாகிறார்கள்.

    அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் ஆற்றல் இருந்தால் மட்டுமே அவர்கள் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள்.

    இன்றைய பிரிட்டிஷ் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் அரசியல் பயணத்தை ஆராயாமல் முடியாது.

    அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டம்.

    அதில் சிலர் வேகமாக ஓடி ஆரம்பத்திலேயே மறைந்து விடுகிறார்கள்.

    சிலர் மெதுவாக நடந்தாலும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து உச்சத்தை அடைகிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் பயணம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

    இங்கிலாந்து அரசியலில் அவர் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திறமையான இளம் தொழிலாளர் கட்சி அரசியல்வாதி என்ற அடையாளமே அவருக்கு இருந்தது.

    பின்னர் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்தார். குறிப்பாக தேசிய சுகாதார சேவை (NHS) தொடர்பான அவரது ஈடுபாடு, சாதாரண மக்களின் வாழ்க்கையை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் அரசியல்வாதி என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

    ஆனால் அரசியலில் ஒவ்வொரு வெற்றிக்கும் முன் தோல்விகள் இருக்கும்.

    கட்சித் தலைமைப் போட்டிகளில் அவர் பின்னடைவைச் சந்தித்தார்.

    பல அரசியல்வாதிகள் அத்தகைய தோல்விக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகியிருப்பார்கள். ஆனால் பர்ன்ஹாம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

    அவர் லண்டன் அரசியலின் மையத்தை விட்டு, கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராகப் பொறுப்பேற்றார்.

    அங்குதான் அவரது அரசியல் முதிர்ச்சி முழுமையாக வெளிப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதும், தனது பகுதி மக்களின் நலனுக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

    அந்தச் செயல்பாடு அவரை ஒரு பிராந்திய அரசியல்வாதியாக அல்ல, தேசிய அளவிலான தலைவராக மக்களிடம் அறிமுகப்படுத்தியது.

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால், பிரிட்டிஷ் மக்கள் வெறும் பேச்சாளர்களை நீண்ட காலம் ஏற்றுக்கொள்வதில்லை.

    அவர்கள் செயலில் நம்பிக்கை வைப்பவர்களையே இறுதியில் மதிக்கிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் மீது உருவான நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே.

    இன்றைய பிரிட்டனில் மக்களின் முக்கியமான கவலைகள் வாழ்க்கைச் செலவு, சுகாதாரம், வீட்டு வசதி, குடியேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை.

    இந்த அனைத்திலும் சமநிலையான அணுகுமுறையை முன்வைக்க முயன்றதாலேயே அவர் தேசிய அரசியலின் மையத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டார்.

    பிரிட்டனின் அரசியலமைப்பில் பிரதமரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.

    மக்கள் தங்கள் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் கட்சியின் தலைவரை, நாட்டின் மன்னர் அல்லது மன்னி அரசு அமைக்க அழைக்கிறார்.

    அந்த அழைப்பை ஏற்று அமைச்சரவையை அமைக்கும் நபரே பிரதமராகப் பதவியேற்கிறார்.

    இந்த நடைமுறை உலகின் பல நாடுகளிலிருந்து மாறுபட்டது.

    இங்கு பிரதமரின் அதிகாரம் சட்டத்தில் மட்டுமல்ல.

    நாடாளுமன்றத்தின் நம்பிக்கையிலும் இருக்கிறது. அந்த நம்பிக்கை குறைந்தால், பதவியும் நீடிக்காது. இதுவே பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் தனித்துவமான வலிமை.

    ஆண்டி பர்ன்ஹாம் பிரதமரானது ஒரே நாளில் நிகழ்ந்த சம்பவமல்ல.

    பல ஆண்டுகளாக உருவான அரசியல் அனுபவம், மக்களிடம் பெற்ற நம்பிக்கை, கட்சிக்குள் பெற்ற ஆதரவு, நாட்டின் அரசியல் சூழல் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்தபோதுதான் அவர் அந்த உயரத்தை அடைந்தார்.

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

    பிரதமராக உயர்வது ஒரு தலைவரின் வெற்றி.

    ஆனால் அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றுவது அவரது ஆட்சிதான்.

    இன்று பிரிட்டன் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்கள், அதிகரித்து வரும் குடியேற்ற விவாதங்கள், தேசிய சுகாதார சேவையின் சவால்கள், உலகளாவிய பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆண்டி பர்ன்ஹாம் அரசின் தோள்களில் உள்ளது.

    அவரது ஆட்சியின் வெற்றியை தீர்மானிப்பது தேர்தல் வெற்றி அல்ல.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாதாரண பிரிட்டிஷ் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றம்தான்.

    அதனால்தான் அரசியலில் வெற்றி என்பது பதவியை அடைவது அல்ல.

    அந்தப் பதவியின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதே உண்மையான வெற்றியாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.08.2026

    (தொடரும் – பகுதி 3 : நைஜல் ஃபராஜ் மற்றும் ரீபோர்ம் UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    அன்பினியோரே!

    அன்பு வணக்கம்.

    நீங்கள் நலமா ?

    நான் நலமேயுள்ளேன்.

    எனது இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் எனும் இந்த தொடரின் இனிவரும் ஐந்து மடல்களும் இன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைகளை ஐந்து பகுதிகளாக பிரித்து அலசும் மடல்களாக வரும்.

    வாரமொரு பகுதியாக வரைய இருக்கிறேன்.

    அன்பானவர்களே ! நான் கவிஞனுமில்லை, கலைஞனுமில்லை, ரசிகனுமில்லை, பெரிய எழுத்தாளனுமில்லை.

    இங்கிலாந்தில் கடந்த 51 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு 69 வயதான சாதாரண புலம்பெயர் தமிழன் என்பதே எனது தகுதி.

    ஈழம் எனது அடையாளம், தமிழ் எனது முகவரி.

    இன்றைய. அவசர உலகிலே அரசியல் மாற்றங்கள் இமைக்கும் பொழுதினில் நடந்தேறுகின்றன.

    நான் இப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கும் போதே அதை மறுதலிக்கும் நிகழ்வுகள்.

    அப்படி நான் பதிவிடுவதற்கு மாக எதுவும் நடப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல .

    அதற்காக முன் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன்

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    51 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழனின் அரசியல் சாட்சியம்

    பகுதி – 1

    ஐம்பத்தொரு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெறும் கால அளவல்ல.

    அது ஒரு நாட்டின் அரசியல் பரிணாமத்தை கண்முன்னே பார்த்து பதிவு செய்யும் நீண்ட பயணம்.

    நான் இங்கிலாந்தில் காலடி எடுத்து வைத்த காலத்தில், இந்நாடு இன்னும் தனது பேரரசின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தது.

    தொழிற்சாலைகளின் புகை வானத்தை மூடியிருந்தது.

    தொழிலாளர் சங்கங்கள் அரசியலில் வலுவான தாக்கம் செலுத்தின. குடியேற்றம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்று காணும் அளவுக்கு சமூக ஊடகங்கள் அரசியலை வடிவமைக்கவில்லை.

    இந்த ஐம்பத்தொரு ஆண்டுகளில் நான் பல பிரதமர்களைக் கண்டிருக்கிறேன்.

    பல தேர்தல்களை நேரில் அனுபவித்திருக்கிறேன்.

    மக்களின் மனநிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் கவனித்திருக்கிறேன்.

    அரசியல் என்பது வெறும் கட்சிகள் மோதும் களம் அல்ல.

    அது மக்களின் நம்பிக்கைகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் சந்திக்கும் இடம் என்பதை இந்த நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது.

    ஒரு ஜனநாயகத்தின் வலிமை அதன் அரசாங்கத்தில் மட்டும் இல்லை.

    ஆட்சியை மாற்றும் உரிமையை மக்கள் அமைதியாகப் பயன்படுத்தும் பண்பாட்டில்தான் இருக்கிறது.

    அந்த வகையில் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

    கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துப் பார்த்தாலே பிரிட்டிஷ் அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் ஆழமானவை.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்சிட், அதன் பொருளாதார விளைவுகள், வாழ்க்கைச் செலவின் உயர்வு, தேசிய சுகாதார சேவையின் சவால்கள், குடியேற்றக் கொள்கைகள், உலக அரசியல் மாற்றங்கள் இவை அனைத்தும் மக்களின் அரசியல் சிந்தனையையே மாற்றியுள்ளன.

    ஒரு காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளான லேபரும் கன்சர்வேடிவும் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் அமைப்பு, இன்று பல திசைகளில் இழுக்கப்படுகிறது.

    வலதுசாரி தேசிய உணர்வை முன்வைக்கும் சக்திகள் வலுவடைகின்றன.

    மைய அரசியலை வலியுறுத்துபவர்கள் புதிய கூட்டணிகளைத் தேடுகின்றனர்.

    இளைஞர்களின் வாக்கு முறையும், வயதான வாக்காளர்களின் முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.

    இந்த மாற்றங்களின் மையத்தில் இன்று ஒரு புதிய அரசியல் சமநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

    இன்றைய பிரதமராக உள்ள ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் இயக்கத்தின் மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி.

    அவருடைய தலைமையால் லேபர் கட்சி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில், நைஜல் ஃபராஜ் தலைமையிலான ரீபோர்ம் கட்சி, பாரம்பரிய வலதுசாரி அரசியலை முற்றிலும் மாற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

    இதனால் கன்சர்வேடிவ் கட்சி தனது அரசியல் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இன்னும் மத்திய அரசியலின் குரலாக இருக்க முயற்சித்தாலும், இரு துருவங்களுக்கிடையில் தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுகிறது.

    இவை வெறும் கட்சிகளின் கதைகள் அல்ல.

    இவை பிரிட்டிஷ் சமூகத்தின் உள்ளார்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்புகள்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரங்கள் தெரு மேடைகளிலும், செய்தித்தாள்களிலும் நடந்தன.

    இன்று அவை கைப்பேசியின் திரையில் நடக்கின்றன.

    ஒருகாலத்தில் குடும்ப மரபே வாக்கை நிர்ணயித்தது.

    இன்று ஒரு வைரல் காணொளி கூட வாக்காளரின் மனதை மாற்றுகிறது.

    இந்த மாற்றத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில், அரசியல் என்பது நிலையாக இருக்கும் கட்டிடம் அல்ல காலத்தோடு வடிவம் மாறும் உயிருள்ள அமைப்பு என்பதையே நான் உணர்ந்திருக்கிறேன்.

    இந்தக் கட்டுரையில் நான் எந்தக் கட்சியையும் புகழவோ, குறைக்கவோ முயலவில்லை.

    ஒரு பாமர மனிதனின்அரசியல் ஆய்வாகவும், ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், வெற்றியையும் சவால்களையும் பார்த்து வாழ்ந்த புலம்பெயர் தமிழனாகவும், நான் கண்ட உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு நாட்டின் அரசியல் அதன் நாடாளுமன்றத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை.

    அது பேருந்து நிறுத்தங்களில் பேசப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் விவாதிக்கப்படுகிறது.

    பல்கலைக்கழகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    குடியேற்றக் குடும்பங்களின் உணவுமேசைகளில் அனுபவமாகப் பகிரப்படுகிறது.

    அந்த உயிருள்ள அரசியலின் சாட்சியாக இந்த ஆய்வை நான் பதிவு செய்கிறேன்.

    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    03.08.2026

    அடுத்த வாரம் ………

    (தொடரும் – பகுதி 2: “ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை: அரசியலமைப்பும் அரசியல் பயணமும்”)

    Share
  • மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி

    மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி

    ஜெ. கார்த்திக்

    தமிழர்கள் அடர்த்தியாக வாழும் ஆசிய நாடுகளில் மியன்மார் நாடும் ஒன்று. தமிழ்மொழிப்பயன்பாடும் தமிழ்க்கல்வியும் இராணுவ ஆட்சியினால் நிச்சயமற்ற சூழலில் அங்கே இருந்துவருகிறது. இந்நிலையில், அங்குள்ள பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் இத்தகைய சூழலை மாற்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மியன்மாரில் இலக்கியப்படைப்புகள் வெளிவருவது அருகியுள்ள சூழலில், மியன்மாரிலுள்ள யாங்கோன் பகுதியில் செயல்படும் தமிழர் அறநெறிக்கழகம், தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சியை மாணவர்களிடமும் தமிழாசிரியர்களிடமும் கொண்டுசெல்வதற்கு முனைந்துவருகிறது. குறிப்பாக, தமிழர் அறநெறிக்கழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் பள்ளி மாணவர்கள் 20பேருக்கு கடந்த ஜூன் மாதம் 6 முதல் 11ஆம் தேதிவரையிலான 6 நாட்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ. கார்த்திக் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பயிற்சிகளை வழங்கினார்.

    பயிலரங்கில் பங்கேற்ற தமிழ் மாணவர்களின் ஒருபகுதி

    பயிற்சி முடித்த  தமிழ் மாணவர்களின் முதல் இலக்கியப் படைப்புகள் ’என்மொழி’ என்னும் சிறப்பிதழில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மியன்மார் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் செவ்விலக்கியப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மியன்மார் நாட்டின் தமிழ்க்கல்விச்சூழல் குறித்த கருத்தரங்கமும் நிகழ்த்தப்பெற்றன.

    பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகள்  கொண்ட ‘என்மொழி’ இதழின் அட்டைப்படம். (இதழை வாசிக்க) : https://archive.org/details/enmozhi-myanmar-magazine-special-issue-2026-jun/mode/2up )

    [முகப்புப் படம்: தமிழ் பயிற்றுவிக்கும் உதவிப்பேராசிரியர் ஜெ. கார்த்திக்]

    Share
  • லண்டனிலே கம்பன் விழா (ஜூன் 27 & 28, 2026)

    லண்டனிலே கம்பன் விழா (ஜூன் 27 & 28, 2026)

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இங்கிலாந்திலிருந்து சக்தி சக்திதாசன்.

    நானிங்கு நலமே நீங்களும் அதேபோல நலமுடன், மகிழ்வாக இருப்பீர்கள் என்பதே என் நம்பிக்கை.

    புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழின் பால் இருக்கும் அதீத மொழியன்பு பற்றிய பகிர்வே இது.

    ஆம் கடந்த ஜூன் 27, 28ம் தேதிகளில் இங்கிலாந்தில் அல்பேர்ட்டன் (Alperton)  எனும் இடத்தில் நிகழ்ந்த மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற “கம்பன் விழா ” பற்றிய பகிர்வே இது.

    தமிழ் இலக்கியத்தின் உயரிய மலைச்சிகரமாக விளங்கும் கம்பன், தனது “கம்பராமாயணம்” மூலம் தமிழுக்கு அளித்த செழுமை அளவிட முடியாதது.

    வால்மீகியின் ஆதாரத்தைத் தமிழ்மொழியின் இனிமையாலும் கற்பனையின் வளமாலும் புதுப்பித்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவர் கம்பன்.

    அவரது கவித்திறன் வெறும் இலக்கியச் சிறப்பாக மட்டுமல்லாது, ஆன்மீக ஆழமும் மனிதநேய சிந்தனைகளும் நிறைந்ததாகும்.

    ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கும் இசைநயம், சொல் வளம், உவமைச் செல்வம் ஆகியவை கம்பனை உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக உயர்த்துகின்றன.

    இவ்வாறான கம்பனின் பெருமையையும், அவரது இலக்கியப் பாரம்பரியத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உயிர்ப்பித்து நிலைநிறுத்தும் முயற்சியாகவே இத்தகைய கம்பன் விழாக்கள் விளங்குகின்றன என்பது பெருமிதம் அளிக்கிறது.

    இலண்டனில் இயங்கும் “அறிவு அறக்கட்டளை” அமைப்பின் கீழ் ஈழத்தின் கம்பன் கழக புகழ், ஆன்மீக அறிவுசார் அறிஞர் “கம்பவாரிதி ஜெயராஜ்” அவர்களின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டது இலண்டன் கம்பன் கழக கட்டமைப்பு.

    அவரின் வழி காட்டுதலில் இவ்விழா மூன்றாவது ஆண்டாக நிகழப்பெற்றது.

    இம்முறை விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.

    இருப்பினும் விழா அவரது வழிகாட்டுதலிலும் ஆசிகளுடனுமே நடைபெற்றது என்பதை விழா அமைப்பாளர்களின் உரைகளின் மூலம் அறிய முடிந்தது.

    இம்முறையும் விழா சிறப்பு நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட நான்கு பேரை கெளரவ விருதளித்து பெருமைப்படுத்தியது விழாவுக்கு மேலும் சிறப்பு ஏற்ப்டுத்தியது.

    ஈழத்தின் முன்னோடி ஊடகவியாளாலராக எமக்கெல்லா உதாரணமாகத் திகழும் ஊடகவியலாளர் “ஈழநாடு மாலி” என்று அன்போடு அழைக்கப்படும் அண்ணன் மகாலிங்கசிவம் முதலாவதாக கெளரவிக்கப்பட்டு “சமூகசிரோன்மணி” என்ற பட்டம் அளிக்கப்பட்டது உள்ளத்துக்கு இதமளித்தது.

    நான் கல்வி பயின்ற எனது பழைய பாடசாலை யாழ் பரியோவான் கல்லூரியின் (Jaffna St. Johns College) எனது முன்னாள் ஆசிரியர் அமரர் கனகராஜா அவர்களின் மைந்தனும் இன்றைய இங்கிலாந்து லெஸ்டர் பல்கலைக்கழக துணைவேந்தர் நிஷான் கனகராஜா.

    எத்தனையோ தசாப்தங்களுக்கு பின்பு இங்கிலாந்து அரசின் கெளரவமான “சார்” பட்டம் பெற்ற இலங்கைத் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது இவருக்கு இங்கிலாந்து அரசர் “சார்ள்ஸ்” அவர்களால் 2025 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

    இவர் இலண்டன் கம்பன் விழாவினரால் “ஞானசாகரர்” பட்டம் வழங்கி கெரவிக்கப்பட்டார்.

    தொடர்ந்து ஈழத்திலே பிறந்து  தந்தை மூலம் இசை பயின்று இந்தியாவில் இசை வித்துவான் அமரர் கல்யாணராமன் அவர்களின் மாணவியும் துணைவியுமாகிய திருமதி பூஷணி கல்யாணராமன் அம்மா அவர்கள் “இசைப்பேரரசி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

    நான்காவதாக இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், இலண்டன் ஐயப்பன் கோயில் அறங்காவலர் திரு. மீ. இராஜகோபாலன் அவர்களின் சமூகசேவை அர்ப்பணிப்புக்காக “சமூகசிரோன்மணி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

    பல அருமையான நிகழ்ச்சிகள் இரண்டு தினங்களும் அமைப்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நிகழ்ந்தது.

    முதலாம் நாளான 27ம் தேதி, முதல் அமர்வில் அரங்கில் நாளைய தலைமுறை தமிழ் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ள உதவும் முகமாக “இளையோர் அரங்கம்” நிகழ்ந்தது.

    இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியவிடயம் இந்நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தேன் தமிழை நாவில் கொண்டு சுவைபட பேசும் தம்பி சிவராஜா விசாகன் பணியாற்றியதே!

    இது இனிவரும் எம் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத செயலாகக் காண்கிறேன்.

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் கடல்கடந்து வந்திருந்தார்கள்.

    தமிழகத்திலிருந்து இலக்கியச்சுடர் இராமலிங்கம், தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் மற்றும் ஈழத்திலிருந்து செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா, பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் இவர்களோடு இவர்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து பேசும் வல்லவரான நன் லண்டன் கோமதி சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    27ம்தேதி முதல் அமர்வில், இளையோர் அரங்கம், தாமல் கோ. சரவணன் தலைமையிலும் பட்டிமன்றம் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையிலும் நடைபெற்றது.

    இரண்டாம் அமர்வில் வழக்காடு மன்றம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    இரண்டாம் நாள் 28.06.2026 முதல் அமர்வில் சிந்தனை அரங்கம் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் தலைமையிலும், இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தனியுரையும் நிகழ்ந்தது.

    இரண்டாம் அமர்வில் சைவப்புலவர் சிவானந்தன் அவர்களின் தனியுரையும், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் தனியுரையும் இடம்பெற்றது.

    அத்தோடு இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தலைமையில் வழக்காடு மன்றம் நிகழ்ந்தது.

    மிகவும் இனிமையாக நிகழ்ந்த இம்மனநிறைவான நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இரண்டாம் நாளே என்னால் கலந்து கொள்ள முடிந்தது.

    பலகாலமாக சந்திக்காத பல பழைய இலக்கிய ஆர்வல உறவுகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

    இரண்டு நாட்களும் சிற்றுண்டியோடு பானங்களும் இரவு போசனமும் வழங்கப்பட்டது.

    இந்நேரத்தில் இவ்விழா சிறப்புற நிகழ பொருளுதவி, சரீர உதவி வழங்கியவர்களை நன்றியோடு நினைவுகூர்வது எமது கடமை.

    இது போன்ற நிகழ்வுகள் புலம்பெயர் நிலங்களில் அந்நாட்டவரின் வசதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வது தமிழின் பெருமைக்கு மேலுமவிழா  பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    இந்த நிகழ்வினைக் குறித்து என்பாடல் வரிகளில் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு உருவாக்கப்பட்ட பாடலை என் காணிக்கையாகவும் நன்றிகளுடனும் சமர்பித்திருக்கிறேன்.

    கம்பனைப் போற்றும் தமிழன்பன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா!

    இன்று ஈரோட்டில், புதிதாக அரசு அமைத்துள்ள, த.வெ.க கட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு கே.கே. ஆனந்த மோகன் அவர்களுக்கும், ஈரோட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு அமைப்புகளின் மூலம் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
    இருவரும் மிக யதார்த்தமாக, இயல்பான உரை வழங்கியது மக்களிடையே மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றது. மக்கள் முன்னிலையில் தாங்கள் எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் 1 உரூபாய் கூட கையூட்டு பெறாமல், நேர்மையான முறையில் மக்கள் பணி ஆற்றப்போவதாக உறுதி மொழி அளித்தார்கள். தங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் தங்களுடைய ஆட்சி நிரந்தரமாக இன்னும் பல காலங்களுக்கு தங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆசிகளுடன் இந்திய அளவில் தொடர உறுதி கொண்டுள்ளதாகவும் பேசி அசத்தியுள்ளனர். இது உண்மையாக நடந்தால் மகிழ்ச்சிதான் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கைதட்டி வரவேற்றனர். ஈரோட்டில் கைத்தறித்துறையிலும், துணிகள் தயாரிப்பு, சாயக்கழிவுகள் என்று பலப்பல பிரச்சனைகள் தீர்வு காணப்பட வேண்டியுள்ளன . மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு மாவட்டத் தமிழியக்கத்தின் சார்பாக, மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும், வல்லமை இணைய இதழ் சார்பாகவும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாகவும் நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம். நலமே விளைக என்ற நம்பிக்கையுடன் நகர்கிறோம் ……

    Share
  • Lexifyd – தமிழ் கற்க ஒரு செயலி

    Lexifyd – தமிழ் கற்க ஒரு செயலி

    தமிழ் கற்க, இதோ ஒரு நல்ல வாய்ப்பு. இதில் விளையாட்டைப் போல் தமிழ் கற்கலாம். இதில் தமிழ் மொழியுடன் கூடவே தமிழ் மரபையும் கற்கலாம். இதன் உள்ளடக்கத்தை உருவாக்கியதில் எனக்கும் சிறு பங்கு இருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே!

    எங்கள் மாத்யமிக் குழுவினர், 5 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்காக Lexifyd என்ற தமிழ் கற்கும் செயலியை (App) கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளோம்!

    உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தமிழ் கற்க விரும்பும் குழந்தைகள் இருந்தால், தயவுசெய்து இந்தத் தகவலை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிவிறக்கம் செய்ய (Download Link): https://play.google.com/store/apps/details?id=com.maadhyamik.kanchi

    முதல் நிலையில் (Level-1) உள்ளவை:

    முழுமையான எழுத்துகள்: எழுத்துகளின் வடிவங்களை அறிந்து, அவற்றைத் தொடுதிரையில் எழுதிப் பழகுவதோடு, சரியான உச்சரிப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

    10 சுவாரசியமான பாடங்கள்: குழந்தைகளுக்கு ஏற்ற தலைப்புகளில், உயர்தர நிகழ்படங்கள் (Videos), வரைகலை ஓவியங்கள் (Graphics) மூலம் வடிவமைக்கப்பட்ட பாடங்கள். மேலும், குழந்தைகளின் கற்றல் திறனைப் புரிந்துகொள்ளத் திருப்புதல் பாடங்களும் (Review Lessons) இதில் உள்ளன.

    விளையாட்டுகள்: சொல் சார்ந்த பல விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் தங்களுடைய சொற்களஞ்சியத்தையும் (Vocabulary) எழுத்துத் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம்.

    தேவையானவை (Pre-requisites): எதுவுமில்லை! எளிய பேச்சுத் தமிழைப் புரிந்துகொள்ளும் திறன் மட்டும் இருந்தால் போதும்.

    (இதன் iOS பதிப்பும் அடுத்தடுத்த நிலைகளும் விரைவில் வரவுள்ளன!)

    இதை நீங்கள் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன். மிக்க நன்றி!

    Learn Tamil through play! Fun, interactive lessons on language and heritage.

    #Lexifyd #Tamil #Tamillearning #LearnTamil #Maadhyamik #Tamillessons #TamilAlphabets #Games #app #androidapp #தமிழ்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … 313

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … 313

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே !

    நானிங்கு நலமே !

    நீங்கள் நலமா ?

    இம்மடலை சென்னையில் இருந்து எழுதுகிறேன்.

    உலகம் முழுவதும் நிகழும் அரசியல், இயற்கை, மற்றும் அரச குடும்ப நிகழ்வுகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இங்கிலாந்து அரசியல் ஜனவரி 2026 ஐ நோக்கினால்,

    தொழிலாளர் கட்சி (Labour Party):
    பிரதமர் கியர் ஸ்டார்மர் தனது புத்தாண்டு உரையில் “சரிவு மற்றும் பிளவுகளை வெல்லும்” அரசாங்கத்தை வாக்குறுதி அளித்தார்.
    மக்களுக்கு “நல்ல மாற்றங்களை உணரச் செய்வோம்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    கன்சர்வேட்டிவ் கட்சி (Conservative Party):
    எதிர்க்கட்சி தலைவர் கேமி பாடெனொக், 2025-இல் “வளர்ச்சி இல்லாமல், அதிக வரிகள், வேலைவாய்ப்பு குறைவு” என விமர்சனம் செய்தார்.
    “நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்து, பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவோம்” என்ற திட்டத்தை முன்வைத்தார்.

    ரீபார்ம் யுகே (Reform UK):
    நைஜல் பாராஜ் ஜனவரி 19-ஆம் தேதி Newark-on-Trent-இல் உரையாற்றினார்.
    பிரெக்ஸிட் பின்னணியில், மக்கள் எதிர்பார்ப்புகள், பொருளாதார குழப்பம், பொறுப்புக்கூறல் ஆகியவை அரசியல் அமைப்பை மாற்றுகின்றன.

    இங்கிலாந்து காலநிலை ஜனவரி 2026இல் ,

    மாதத்தின் தொடக்கத்தில் ஆர்க்டிக் காற்று காரணமாக கடும் குளிர் நிலவியது.

    ஸ்காட்லாந்து மற்றும் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு, பனிமூட்டம், பனிக்கட்டி போன்றவை காணப்பட்டன.

    லண்டனில் வெப்பநிலை -3°C வரை குறைந்தது

    மழை, பனிக்கட்டி, மற்றும் காற்று ஆகியவை பயணத்திற்கும் விவசாயத்திற்கும் சவாலாக இருந்தன.

    -இங்கிலாந்து அரச குடும்ப நிகழ்வுகள் ஜனவரி 2026

    ஜனவரி 9: இளவரசி கேத்தரின் 44வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    ஜனவரி 15: இளவரசர் வில்லியம் ஹெரிபோர்ட்ஷயரில் உள்ள பண்ணை ஒன்றை பார்வையிட்டார்.

    ஜனவரி 25: வில்லியம் மற்றும் கேத்தரின் ஸ்காட்லாந்தில் அரச நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

    பிப்ரவரி 3: கிங் சார்ல்ஸ் மற்றும் குவீன் கமில்லா, உள்ளாட்சி ஊழியர்களுக்காக அரண்மனையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    இங்கிலாந்து பொருளாதார நிலை
    ஜனவரி 2026

    பொருளாதார முன்னறிவிப்புகள்: HM Treasury – நிதி ஆணையம் வெளியிட்ட கணிப்புகளின்படி, 2026 இங்கிலாந்து பொருளாதாரம் “மிதமான வளர்ச்சி” பாதையில் உள்ளது.

    விலை உயர்வு (CPI): பணவீக்க விகிதம் குறைவாக இருந்ததால், வட்டி விகிதங்கள் மெதுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சம்பள வளர்ச்சி: மெதுவாக இருந்தது, ஆனால் வேலைவாய்ப்பு நிலைமை சீராக உள்ளது.

    நுகர்வோர் நம்பிக்கை: Which? பத்திரிகை ஆய்வின்படி, மக்கள் நம்பிக்கை 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

    பொருளாதார சீரமைப்பு: PwC- பிரைஸ் வாட்டர் கூப்பர் கணிப்புகளின்படி, 2026 “அடாப்டேஷன்” (Adaptation) ஆண்டாக இருக்கும்.

    அரசுகள், நிறுவனங்கள், மக்கள் புதிய சூழ்நிலைக்கு தங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    உலகளாவிய நிகழ்வுகள் – ஜனவரி 2026

    பொதுவான விழாக்கள்:
    ஜனவரி 1 புதுவருடம், உலக அமைதி நாள்
    ஜனவரி 15: தைப்பொங்கல் (தமிழர்களின் பெருவிழா)

    அன்புள்ள வாசகர்களே !
    இங்கிலாந்து அரசியல், இயற்கை, மற்றும் அரச குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் ஒரு புதிய மாற்றத்தின் பாதையை நோக்கி நகர்கின்றன.

    நாம் எங்கே இருந்தாலும், உலகம் எவ்வாறு நகர்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வும், பகிரும் மனப்பான்மையும் நம் வாழ்வை வளமாக்கும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 309

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 309

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    இதோ முடியும் இந்த செப்டெம்பர் மாதத்தின். முக்கிய நிகழ்வுகளை புரட்டிப் பார்க்கிறேன்.

    விளைவு இதோ உங்களை நோக்கி விரைகிறது என் மடல்.

    இலைகள் உதிரும் பருவம்… அரசியல் மாற்றங்களும் உதிர்கின்றனவோ?

    செப்டெம்பர் முடிவடைந்தது. அக்டோபர் தொடங்கிவிட்டது.

    இலைகள் உதிரத் தொடங்கியுள்ளன. ஆனால் இவை இயற்கையின் நிகழ்வுகள் மட்டுமல்ல. இங்கிலாந்து அரசியலிலும், உலக அரசியல் மேடைகளிலும் சில கட்சிகளின் செல்வாக்கும், சில தலைவர்களின் புகழும் உதிரத் தொடங்கியுள்ளன.

    கன்சர்வேடிவ் கட்சி ஒரு சரிவின் கதையாக தொடர்கிறது போலும்.

    14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி, தற்போது மிக மோசமான நிலையை சந்திக்கிறது.

    கட்சி எம்பிக்கள் சிலர் ரீபோர்ம் கட்சிக்குத் தாவல், பொதுமக்களின் நம்பிக்கை இழப்பு,

    மற்றும் எதிர்பாராத தேர்தல் தோல்விகள் அவர்களுக்கு கொடுத்த அதிர்ச்சிக்கு மேலாக இப்போ ரீபோர்ம் கட்சி அவர்களின் ஆதரவை பறிக்கிறதோ ?

    எல்லாமே  ஒரு அதீத சரிவை நோக்கி அக்கட்சியை இழுத்துச் செல்கிறது.

    லேபர் கட்சி, வெறும் 14 மாதங்களுக்கு முன் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், தற்போது அதே பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

    ரீபோர்ம் கட்சி அதன் ஆட்டம் ?வேகமான எழுச்சி, சாத்தியமான சரிவு?

    சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பொதுமக்கள் கவலையை அடிப்படையாகக் கொண்டு, ரீபோர்ம் கட்சி திடீரென எழுச்சி பெற்றது.

    ஆனால், இந்த வேகமான வளர்ச்சி, நிலையான ஆதரவாக மாறுமா?

    அல்லது, அரசியல் சூழ்நிலையின் மாற்றத்தில் அவர்கள் ஆதரவை இழக்குமா?

    இது எதிர்பார்க்கப்படும் அடுத்த கட்டம்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இங்கிலாந்து விஜயம் அரசியல் நிழல்களில் உறவாடல்

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து வந்தார்.

    ராஜ குடும்பத்தின் உபசரிப்பு, பிரதமர் கியர் ஸ்டாமரின் ஒட்டி உறவாடல்.

    இவை அரசியல் அல்லவா?

    இளவரசர் ஹரி, தந்தையுடன் உறவை புதுப்பிக்க முயற்சி எடுத்தது, அரசியல் நுணுக்கங்களின் பின்னணியில் நிகழ்ந்தது.

    கட்சி மாநாடுகள் நடக்கும் காலமிது எதிர்காலத்தின் சாயல்களை நிர்ணயிக்கிறது.

    ரீபோர்ம் கட்சி, கிறீன் கட்சி, லிபரல் டெமோகிராட்ஸ் கட்சி க தங்களது வருடாந்த மாநாடுகளை முடித்துள்ளன.

    லேபர் கட்சியின் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

    கன்சர்வேடிவ் கட்சியின் மாநாடு இன்னும் நடக்கவிருக்கிறது.

    இவை அனைத்தும், அடுத்த பொதுத் தேர்தலுக்கான அடித்தளங்களை அமைக்கின்றன.

    ஆகா அவுத்து விட்டாரய்யா ஒரு கொள்கைப் பிரகடனத்தை நமது பிரதமர்.

    சரியும் அவர் செல்வாக்கை தடுத்து நிறுத்துமா இந் நடவடிக்கை டிஜிட்டல் அடையாள அட்டை  குடியேற்றக் கட்டுப்பாட்டுக்கான புதிய முயற்சி.

    பிரதமர் கியர் ஸ்டாமர், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் டிஜிட்டல் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

    இது ஒரு புதிய கட்டுப்பாட்டு முயற்சி.

    இது அவரை அவர் நடமாடும் அரசியல் தளத்தில்.அடையாளப்.படுத்துமா?

    பாலஸ்தீன அங்கீகாரமும் அதில் இங்கிலாந்தின் சர்வதேச நிலைப்பாடும்.

    இங்கிலாந்து, பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து அறிவித்துள்ளது.

    ஐ.நா. சபையின் 80வது அமர்வில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் “இன அழிப்பு” என அறிவிக்கப்பட்டது.

    இது ஒரு அழுத்தமான அதே சமயம் முரண்பாடுகளுக்கு வழி கோலும் அறிவித்தல்.

    உக்ரைன் – ரஸ்ய போரில் இதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில்  ட்ரம்ப்பின் பல்டி.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் இழந்த பகுதிகளை மீண்டும் வெல்லலாம் என அறிவித்தார்.

    இது, ரஷ்ய அதிபர் பூட்டினுடன் “கா” விட்டதனாலா? எனும் கேள்வியை எழுப்புகிறது.

    மனிதாபிமானமுள்ள அனைத்து மனிதர்களின் விழியோரம் உகுக்கும் கண்ணீராக தமிழ்நாட்டில் நடந்த அகோரம்.

    தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அகோர நிகழ்வு,

    மனிதாபிமானமுள்ளோர் மனங்களை உலுக்கியது.

    இது, அரசியல் அல்ல. ஆனால், அரசியல் அமைப்புகளின் செயலிழப்பை வெளிப்படுத்தும் ஒரு சாட்சி.

    இவை அனைத்தும் செப்டெம்பர் மாதம் தன்னுள் பதுக்கிக் கொண்ட நிகழ்வுகள்.

    இலைகள் உதிரும் பருவத்தில், அரசியல் மாற்றங்களும் உதிரத் தொடங்கியுள்ளன என்று கூறுகின்றனவோ ?

    அக்டோபர், புதிய சாயல்களை கொண்டு வருமா?, அல்லது பழைய நிழல்களை நீட்டுமா?

    Share
  • ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    அண்ணாகண்ணன்

    இன்று பிறந்த நாள் காணும் வல்லமை நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் நீடூழி வாழ்க.

    தமிழக அரசின் அம்மா இலக்கிய விருது பெற்றவர், 20க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், கிம் யாங் ஷிக் கவிதைகளைக் கொரிய நாட்டுக் கவிக்குயில் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர், லெஸ்லி டவுனர் எழுதிய கெய்ஷா நூலைத் தமிழில் பெயர்த்தவர், கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், கொங்கு நாட்டு வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தமிழ் கொரியத் தொடர்புகள் குறித்த ஆய்வறிஞர், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையை நிறுவி நடத்துபவர், வல்லமை மின்னிதழை வழிநடத்தும் ஆதார சக்தி, திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிப்பவர், ஆற்றல் வாய்ந்த பேச்சாளர், ஆளுமை மிகுந்த நிர்வாகி, அயராத உழைப்பாளர் பவளசங்கரி அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க

    இந்தப் படம், 2011ஆம் ஆண்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. பின்னணியில் எழுத்தாளர் சுபாஷினி திருமலை

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    சக்தி சக்திதாசன்

    அன்பான வல்லமை வாசக இதயங்களே!

    மீண்டும் அடுத்த மடலில் இங்கிலாந்து அரசியல் நிகழ்வுகளையும் உலக அரங்கின் சில நிகழ்வுகளை உ புலம்.பெயர் தமிழன் பார்வையில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்

    ஆகஸ்ட் 2025 இல் இங்கிலாந்து அரசியல் சூழல் பல பரபரப்பான மற்றும் சிக்கலான மாற்றங்களை சந்தித்தது.

    அரசாங்க நடவடிக்கைகள், கட்சி மாற்றங்கள், ஊழல் விசாரணைகள் மற்றும் சர்வதேச உறவுகள் இவை எல்லாமே ஒரு விசித்திர அரசியல் சூழலைத் தந்தது.

    கீழே அந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகச் சில.

    அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் சட்ட மாற்றங்கள்

    -சிவில் சர்வீஸ் இன்டர்ன்ஷிப் திட்டம்: அரசு, “தாழ்ந்த சமூக பொருளாதார பின்னணி” கொண்ட பட்டதாரிகளுக்கே இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

    பெற்றோர் 14 வயதில் செய்த வேலை அடிப்படையில் இது மதிப்பீடு செய்யப்படும்.

    எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, குடியேற்றவாசிகள் கடல் வழியாக பயணம் செய்யும் தகவல்களை இணையத்தில் விளம்பரம் செய்வதை குற்றமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஊழல் மற்றும் ஒழுங்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.

    பாராளுமநிற உறுப்பினர் ட்யூலிப்.சிடிக் பங்களாதேஷ் ஊழல் தடுப்பு ஆணையம் அவருக்கு எதிராக வழக்கு தொடரும் என அறிவித்தது.

    பாராளுமன்ற உறுப்பினர் கேட் பயண செலவுகள் மற்றும் பிற நிதி உதவிகள் தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    பாராளுமன்ற உறுபினர் கட் எகெல்ஸ் என்பவர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு சென்ற பயணத்தை தாமதமாக அறிவித்ததற்காக விசாரணை.

    ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் காலின் ஸ்மித் ஸ்கொட்லாந்து பாராளுமன்ற கழிப்பறை ஒன்றில் கேமரா வைத்ததாக குற்றச்சாட்டினால் அவரது பாஸ் முடக்கப்பட்டது.

    கட்சி மாற்றங்கள் மற்றும் பதவி ராஜினாமா சில நடைபெற்றன.

    சாரா அதெர்ட்டன் என்பவர் கன்சர்வேடிவ் கட்சியை விட்டு விலக திட்டம்.

    – Jeremy Balfour என்பவர் ஸ்கொட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து விலகினார்.

    கட்சி எதிர்மறை அரசியல் பக்கம் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு.

    Graham Simpson: எனும் கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Reform UK க்கு தாவினார்.

    அவ்சால் கான் எனும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துருக்கிக்கு சென்ற பயணத்தால் விமர்சனம் ஏற்பட்டதால் UK வர்த்தகப் பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்தார்.

    ருக்சானா அலி எனும் அரசாங்க எம்.பி தனக்குச் சொந்தமான.வீட்டின் வாடகை உயர்வை கையாளும் விதம் தொடர்பாக விமர்சனம் எழுந்ததால் Homelessness Minister பதவியை விட்டு விலகினார்.

    சர்வதேச உறவுகள் மற்றும் கருத்துக்கள் வலுவடைந்தன.

    இங்கிலாந்து வெளிநாட்டு அமைச்சர் டேவிட் லாமி & அமெரிக்க உதவி ஐனாதிபதி ஜேடி வான்ஸ்: UK-யின் பஸ்தீன் மாநில அங்கீகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    லேபர் கட்சி உதவி தலைவர் ஆஞ்ஞெலா ரெய்னர் சீனாவின் புதிய தூதரக திட்டத்தில் சில பகுதிகள் மறைக்கப்பட்டதற்காக விளக்கம் கோரினார்.

    முன்னாள் பிரதமர் டோனி பிளேயரும் , அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களும் போருக்கு பிறகு காஸாவுக்கான நிலைமைகள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் சந்திப்பு.

    லிபரல் கட்சி தகைவர் சார் எட் டேவி அவர்கள் அம்ந்ரிக்க அதிபர் Trump-இன் UK வரவேற்பு விருந்தில் பங்கேற்க மறுத்து, Gaza-வின் மனிதாபிமான நிலைமையை எதிர்த்து “செய்தி” அனுப்பினார்.

    கட்சி நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான பல நிகழ்வுகள்.

    கிறீன் கட்சு தலைமை மற்றும் துணை தலைமை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

    ரீபோர்ம் யூகே பல முக்கிய உறுப்பினர்கள் நிர்வாக குழுவில் இணைந்தனர்.

    கட்சி, £10 பில்லியன் செலவில் பரந்த அளவிலான சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்தும் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

    குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என ப்ராஜ் உறுதி அளித்தார்.

    ஊடக சுதந்திரம் மற்றும் அரசியல் தலையீடு பற்றி பல பகிரப்பட்டன

    பீ.பீ.சியின் முன்னாள் செய்தித் தலைவர் James Harding, அரசியல் தலையீடு இல்லாமல் BBC பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இது லிஸா நாண்டியின் டிம் டேவி என்பவருக்கு எதிரான கருத்துகளுக்குப் பின்னர் வந்தது.

    சமூக மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் பேசப்பட்டன.

    ஜெஸ் பிலிப்ஸ் எனும் தொழிற்கட்சி அமைச்சர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கான ஸ்கிரீனிங் கருவி “செயல்படவில்லை” என BBC-க்கு தெரிவித்தார்.

    வாரிக்‌ஷையர் பொலிஸார் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவலை மறைத்ததாக Reform UK-யின் கூற்றை மறுத்தது.

    இந்த மாதம், அரசியல் சூழலில் பல்வேறு மாற்றங்கள், சிக்கல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன.

    இது எதிர்கால தேர்தல்களுக்கு முன்னோட்டமாகவும், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தும் முக்கிய கட்டமாகவும் அமைந்தது.

    தொடர்ந்து இங்கிலாந்து அரசியல் சூழலை கவனிக்க வேண்டிய அவசியம் இம்மாத நிகழ்வுகள் மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

    சரி இனி உலக அரங்கிற்கு வருவோமா?

    2025 ஆகஸ்ட் மாத உலக அரசியல் நிகழ்வுகள் பலவகைப்பட்டன.

    ஆகஸ்ட் 2025 உலக அரசியலில் பல முக்கிய மாற்றங்கள், சர்வதேச சந்திப்புகள் மற்றும் மனிதாபிமான சிக்கல்கள் இடம்பெற்றன.

    மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்தன.

    காசா: ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், காசாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் “சமீப காலத்தில் ஒப்பிட முடியாத அளவுக்கு” உள்ளன எனக் கூறி, உடனடி போர்நிறைவு மற்றும் மனிதாபிமான அணுகல் தேவை என வலியுறுத்தினார்.

    உக்ரைன்: ரஷ்யாவின் கீவ் நகரில் நடத்திய தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இது உக்ரைனில் தொடரும் போரின் கடுமையை வெளிப்படுத்துகிறது.

    ஹைட்டி: தலைநகர் போர்ட்-ஆ-பிரின்ஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கும்பல் வன்முறை காரணமாக 1.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 6 மில்லியன் பேர் உதவிக்கு சார்ந்துள்ளனர்.

    சூடான்: போர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காலரா பரவல் காரணமாக 30 மில்லியன் மக்கள் உதவிக்கு தேவைப்படுகின்றனர்.

    சர்வதேச உறவுகள் மற்றும் அணுசக்தி பற்றிய அனுமானங்கள் வலுத்தன.

    இரான் மீது ஐ.நா. தண்டனை மீளமைப்பு.

    ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை, அணுசக்தி திட்டம் தொடர்பாக, 30 நாட்களில் மீண்டும் தண்டனைகளை விதிக்க முடியும் என அறிவித்தன.

    லெபனான்: இஸ்ரேல்-லெபனான் இடையே உள்ள “ப்ளூ லைன்” பகுதியில் ஐ.நா. அமைதி படை பணியை 2026 டிசம்பர் வரை நீட்டிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

    தேர்தல்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன

    பொலிவியா: ஆகஸ்ட் 17 அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.

    தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலெஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.

    மொராலெஸ் போட்டியிட தடை செய்யப்பட்டுள்ளார்.

    கயானா: ஆகஸ்ட் 31 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனாதிபதி இர்ஃபான் அலி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது,

    ஆனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் நடந்தேறின

    – TICAD 9 (Tokyo International Conference on African Development): ஆகஸ்ட் 20–22 வரை ஜப்பானில் நடைபெற்ற இந்த மாநாடு, ஆப்பிரிக்க வளர்ச்சி, முதலீடு மற்றும் அமைதி தொடர்பாக முக்கிய உரையாடல்களை ஏற்படுத்தியது.

    SCO (Shanghai Cooperation Organization) உச்சி மாநாடு: ஆகஸ்ட் 31–செப்டம்பர் 1 வரை சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற இந்த கூட்டம், மத்திய ஆசியாவில் ரஷ்யா மற்றும் சீனாவின் பாதுகாப்பு பங்கு குறித்து கவனம் செலுத்தியது.

    காலநிலை மற்றும் சமூக சிக்கல்கள் முன்னிலை பெற்றன.

    லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்: காலநிலை மாற்றம் காரணமாக 2030க்குள் 5.9 மில்லியன் குழந்தைகள் வறுமையில் சிக்கக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த மாதம், உலக அரசியல் பல பரபரப்பான மாற்றங்களை சந்தித்தது.

    மோதல்கள், மனிதாபிமான சிக்கல்கள், சர்வதேச கூட்டங்கள் மற்றும் தேர்தல்கள் என நடைபெற்ற இந்நிகழ்வுகள் உலக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையைக் காட்டுகின்றன.

    தொடர்ந்து உலக அரசியல் சூழலை கவனிப்பது, நம் சமூகத்தின் எதிர்காலத்தை புரிந்து கொள்ள உதவும்.

    இதனிடையே எனது சொந்த வாழ்வில் நான் இருவாரங்கள் கனடா நாட்டிற்கு பயணம் செய்தது நெஞ்சை நிறைத்தது.

    உற்ற நண்பன் ஒருவனின் மகளின் திருமணத்தோடு பலகாலங்கள் சந்திக்காத பல உறவினர்களைக் கண்டு வந்தது நெஞ்சுக்கு இதமளித்தது.

    பல்லின மக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட கனேடிய தேசத்தின் முதுகெலும்பின் பாகமாக எமது புலம்பெயர் உறவுகள் செயற்படுவது ஆனந்தமளிக்கிறது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 307 )

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 307 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வாசக உள்ளங்களே !

    மற்றொரு மடலில் உங்களுடன் இங்கிலாந்திலிருந்து இணைவதில் மகிழ்கிறேன்.

    ஜூலை மாதம், இங்கிலாந்து அரசியல் அரங்கம் ஒரு பெரிய திருப்பத்தை கண்டது.

    லேபர் கட்சி, 174 இடங்களில் வெற்றி பெற்று, “நாம் வந்தோம், பார்த்தோம், வென்றோம்” என்ற ரோமன் பாணியில் ஆட்சி ஏற்றது.

    ஆனால் மக்களின் மனநிலை? “வந்ததா? வென்றதா? எதற்காக?” என்ற கேள்விகள்.

    புதிய பிரதமர் ஸ்டார்மர், “மாற்றம் தேவை” என்ற முழக்கத்துடன் வந்தார்.

    ஆனால் மக்கள், “மாற்றம் வந்ததா, மாறிவிட்டதா?” என்று குழப்பத்தில். ஒரு பக்கத்தில், NHS (தேசிய சுகாதார சேவை) சீரமைப்பு, மற்றொரு பக்கத்தில், குடியிருப்பு விலை உயர்வு. மக்கள், “நாம் வாக்களித்தது வீடு வாங்க, வீரம் வாங்க அல்ல!” என்று புலம்புகிறார்கள்.

    ஜூன் மாதத்தில் வெப்பநிலை 30°C தாண்டியது.

    லண்டனில், லிடோக்கள் (திறந்த நீச்சல் குளங்கள்) “நீர் இல்லாமல் நீச்சல்” என்ற நிலைக்கு வந்தன.

    மக்கள், “நாம் வெப்பநிலையை எதிர்பார்த்தோம், வெப்பமூட்டத்தை அல்ல!” என்று குளிர்பானம் குடித்தபடி புலம்பினர்.

    அதே சமயம், “பிரைடு” விழா ஜூலை 5ம் தேதி நடந்தது. லண்டன் நகரம், வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது.

    ஆனால் சிலர், “நாம் வண்ணங்களை கொண்டாடுகிறோம், ஆனால் வணிகம் அதை விற்பனை செய்கிறது” என்று விமர்சனம் செய்தனர்.

    இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

    ஆனால் ரசிகர்கள், “நாம் கிரிக்கெட் பார்க்கிறோம், அரசியல் விளையாட்டு அல்ல!” என்று விளம்பர இடைவெளியில் புலம்புகிறார்கள்.

    இங்கிலாந்து தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2–1 என்ற முன்னிலையில் உள்ளது. இந்தியா, எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது.

    ஆனால் லீட்ஸ் மற்றும் லார்ட்ஸ் போட்டிகளில் தோல்வி கண்டது.

    நான்காவது டெஸ்ட் ஜூலை 23–27 வரை மாஞ்செஸ்டரில் நடைபெற உள்ளது, இது இந்தியாவுக்கான மிக முக்கியமான போட்டி எனக் கருதப்படுகிறது.

    ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் சேரும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் அவரது பங்கேற்பு தொடரை சமநிலைப்படுத்த உதவலாம்.

    தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறும்.

    ஜூலை 8–10, 2025 வரை பிரெஞ்சு அதிபர் எம்யூவல் மக்ரோன் தனது மனைவி பிரிஜிட் மக்ரோனுடன் இணைந்து இங்கிலாந்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில விஜயத்தை மேற்கொண்டார்.

    இந்த விஜயம், பிரெக்சிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதல் மாநில வருகையாகும்.

    வின்ட்சர் கோட்டையில் நடந்த வரவேற்பு விழா, அரச குடும்பத்தின் பம்பரமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.

    மக்ரோன், பாராளுமன்றத்தில் உரையாற்றி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

    பாதுகாப்பு, குடியேற்றம், செயற்கை நுண்ணறிவு, கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளில் கூட்டாண்மை தீவிரமாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    ஜூலை 10, 2025 அன்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து “ஒன்று வருகை, ஒன்று திருப்பி அனுப்பு” என்ற புதிய அகதி உடன்படிக்கையை அறிவித்தன.

    இங்கிலாந்து, சட்டவழியாக உறவுகள் உள்ள அகதிகளை ஏற்க, சட்டவிரோதமாக படகில் வந்தவர்களை பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பும் திட்டம் இது.

    ஆரம்பத்தில், வாரத்திற்கு 50 பேர் வரை திருப்பி அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது அகதிகள் கடல் வழியாக வருவதை தடுக்கும் முயற்சியாகவும், ஐரோப்பிய ஒப்புதலுக்காக காத்திருக்கும் ஒரு பைலட் திட்டமாகவும் உள்ளது.

    ஜூலை 2025இல், லேபர் கட்சிக்குள் இடது சாரி உறுப்பினர்களிடையே மனநிலை மாறுபாடுகள் தீவிரமாக காணப்படுகின்றன.

    முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பன், லேபரின் தற்போதைய மையவாத போக்கை எதிர்த்து, புதிய இடதுசாரி கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    சாரா சுல்தானா உள்ளிட்ட சில சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள், கோர்பனுடன் இணைந்து புதிய கட்சியை உருவாக்க உள்ளனர்.

    இந்த புதிய கட்சி, பாலஸ்தீன ஆதரவு, நலத்திட்ட விரிவாக்கம், பணக்காரர்களுக்கான வரி சீரமைப்பு போன்ற கொள்கைகளை முன்வைக்கலாம்.

    லேபர் கட்சியின் இடது பாகம், குறிப்பாக டயான் அபோட், அப்சானா பேகம் போன்றவர்கள், கோர்பனின் கூட்டணியில் சேரும் வாய்ப்பு உள்ளது.

    புதிய கட்சி, இளைய வாக்காளர்கள் மற்றும் சமூகநீதி ஆதரவாளர்களிடையே ஆதரவை பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இது லேபர் கட்சிக்குள் புதிய பிளவுகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    ஆனால், புதிய கட்சி தொடர்ச்சியான ஆதரவை பெறுமா?

    அல்லது ஒரு தாற்காலிக அலைதானா? என்பது இன்னும் தெரியவில்லை.

    ஜூலை 11ம் தேதி, இசைக்கவி ரமணன் லண்டன் வந்தார்.

    இம்மாத முடிவுவரை லண்டனில்.இருக்கும் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    ஜூலை 17, 2025 அன்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் மற்றும் ஜெர்மனிய அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ் லண்டனில் முக்கியமான சந்திப்பை மேற்கொண்டனர்.

    இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றது.

    அவர்கள் கென்சிங்டன்ட்ரீட்டி (“Kensington Treaty”) எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இது பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, மற்றும் குடியேற்றம் உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்தும் திட்டமாகும்.

    ஜெர்மனியில் இருந்து UK-க்கு செல்லும் பயணிகள், விரைவில் இ கேட் (e-Gate) வசதியைப் பயன்படுத்த முடியும்.

    இது வணிக மற்றும் கல்வி பயணிகளுக்கு பெரும் நன்மை தரும்.

    இலஞ்சம் மற்றும் அகதி கடத்தல் தொடர்பான சட்டங்களை ஜெர்மனி கடுமையாக்கும் திட்டத்தை ஸ்டாமர் பாராட்டினார்.

    “சிறிய படகுகள்” வழியாக யூகே(UK)க்கு வருவதை தடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

    இரு தலைவர்களும் உக்ரைன் மற்றும் காசா நிலைமைகள் குறித்து உரையாடினர்.

    இருவரும் நட்பு மற்றும் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

    இந்த சந்திப்பு, பிரெக்சிட்டுக்குப் பிறகு யூகே – ஈயூ (UK–EU) உறவுகளை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

    ஜூலை 2025இல், இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையிலான உறவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

    இருவரும் பொதுவான அரசியல் நிலைப்பாடுகள் இல்லாதபோதிலும், தனிப்பட்ட உறவுகள் மற்றும் குடும்ப மதிப்பீடுகள் மூலம் நெருக்கம் வளர்த்துள்ளனர்.

    ஸ்டாமர், ட்ரம்ப் மீது “நான் அவரை விரும்புகிறேன்” என்ற அளவிற்கு நேர்மையான பாராட்டுகளை தெரிவித்தார்.

    “அவர் லிபரல் அல்ல, ஆனால் நல்ல ஒப்பந்தங்களைச் செய்தார்” என ட்ரம்ப் கூறினார்.

    இருவரும் பிரெக்சிட்டுக்குப் பிறகு UK–US வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த ஒப்பந்தம், UK கார் மற்றும் விமான உற்பத்தி துறைகளுக்கான அமெரிக்க வரிகளை குறைத்தது.

    ட்ரம்ப், ஜூலை 25–29 வரை ஸ்காட்லாந்தில் தனிப்பட்ட விஜயத்தில் இருப்பார்.

    அப்போது ஸ்டாமருடன் அபெர்டீனில் சந்தித்து, வர்த்தக ஒப்பந்தத்தை “refine” செய்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

    ஸ்டாமர், ட்ரம்ப் மீது “அவர் குடும்பத்தை நேசிக்கிறார், அதுவே அவரை நிலைநிறுத்தச் செய்கிறது” எனக் கூறினார்.

    இது, இருவருக்கிடையே மனதளவிலான இணைப்பை உருவாக்கியதாக அவர் விளக்கியுள்ளார்.

    இருவருக்கிடையேயான உறவு, யூகே-யூஸ்(UK–US) உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும், உள்நாட்டு விமர்சனங்களை ஏற்படுத்தும் காரணமாகவும் மாறியுள்ளது.

    ஸ்டாமர், “தேசிய நலனுக்காக” இந்த உறவை வளர்த்ததாக கூறுகிறார், ஆனால் சில இடதுசாரி விமர்சகர்கள், “மதிப்பீடுகளுக்கு விரோதமான நட்பு” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது அரசியல் அல்ல, ஒரு பரஸ்பர நலன் சார்ந்த நட்பு என ஸ்டாமர் விளக்குகிறார். ஆனால், “இது எவ்வளவு நீடிக்கும்?” என்பது இன்னும் ஒரு திறந்த கேள்வியே.

    இங்கிலாந்து கடந்த ஒரு மாதத்தில் அரசியல் மாற்றம், சமூக சுழற்சி, வானிலை வேறுபாடு என பல பரபரப்புகளை கண்டது.

    அன்பினிய உறவுகளே !

    மாதாந்த முக்கிய நிகழ்வுகளை ஒரு புலம்பெயர் தமிழனின் பார்வையில் பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    சக்தி சக்திதாசன்
    இங்கிலாந்து

    அன்பான வல்லமை வாசக நெஞ்சங்களே !

    நான் நலமேயுள்ளேன் . நீங்களும் நலமாக இருக்க அனைவர்க்கும் பொதுவான இறையைப் பிரார்த்திக்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    2025-இன் மே மாதம், இங்கிலாந்து ஒரு பரிணாமக் கட்டத்தில் நுழைந்தது. வெப்பம் அதிகரித்தது மட்டுமல்ல, அரசியல் சூழ்நிலையும், சமூக மாற்றங்களும், கலாச்சார நிகழ்வுகளும் நாட்டின் மனநிலையை பிரதிபலித்தன.

    புதிய ஆட்சியின் சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள், மற்றும் உள்ளூர் தேர்தல்களின் தாக்கம்—இவை அனைத்தும் ஒரு புதிய பாதையை உருவாக்கின.

    அரசியல் பரிமாணம்: லேபர் ஆட்சியின் சோதனைக்காலம்

    2024-இல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, தனது ஆட்சியின் 11வது மாதத்தில் முழுமையான செலவுத்திட்ட மதிப்பீட்டை (Comprehensive Spending Review) மே 11-ஆம் தேதி வெளியிட்டது.

    இது, நாட்டின் எதிர்கால செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கான திசையை நிர்ணயித்த முக்கிய தருணமாக அமைந்தது.

    NHS மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி

    சுகாதார சேவைகளுக்கு வருடத்திற்கு 2.8% வரை அதிகரிப்பு.

    பொதுத்துறை முதலீடுகள் – பள்ளிகள், போக்குவரத்து, மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் முதலீடு.

    பிரதமரின் நோக்கம் – “ஒரு புது பத்தாண்டு தேசிய மறுசீரமைப்பு” என்ற லேபர் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் முயற்சி.

    இது, லேபர் ஆட்சியின் “தொடக்க வெற்றிக்காலம்” முடிவடைந்து, நடவடிக்கைகள் மூலம் நம்பிக்கை பெற வேண்டிய கட்டமாக மாறியதை சுட்டிக்காட்டுகிறது.

    உள்ளூர் தேர்தல்கள்  ரீபார்ம் UK-வின் எழுச்சி

    மே 2 அன்று நடைபெற்ற உள்ளூர் தேர்தல்களில், ரீபோர்ம் (Reform UK) கட்சி 677 கவுன்சில் இடங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    குறிப்பாக, ஹல் ‘ கிழக்கு யோர்க்‌ஷையர் (Hull & East Yorkshire) மற்றும் Greater Lincolnshire ஆகிய இரண்டு புதிய மேயர் ஆட்சிகளை கைப்பற்றியது.

    ஆனால்…

    – இது முழுமையான வெற்றி அல்ல

    ரீபோர்ம் யூ.கே (Reform UK) இன் வெற்றிகள் பெரும்பாலும் சிறிய நகரங்களில் மட்டுமே.

    சவால்கள் – கட்சி உறுப்பினர்கள் சிலர், “தொழிலாளர்களை நீக்குவோம்” போன்ற பிரச்சனையான கருத்துகளை வெளியிட்டதால், சட்டரீதியான சிக்கல்கள் உருவாகும் அபாயம்.

    இது, பிரதமர் ஸ்டார்மரின் ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால் ரீபோர்ம் யூ.கே (Reform UK) இப்போது ஆட்சியில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

    இது ஒரு புதிய சோதனை.

    சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்தன ப்ரைட்(Bright) விழாக்களில் ஆதரவு குறைவு.

    LGBTQ+ ப்ரைட் விழாக்களுக்கு பெரும்பாலான பெருநிறுவனங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளன..

    Sony, Durex, Costa Coffee போன்ற பிராண்டுகள், DEI (Diversity, Equity, Inclusion) கொள்கைகளுக்கான அரசியல் எதிர்ப்புகளால், அமெரிக்காவில் ஏற்பட்ட அழுத்தங்களின் தாக்கமாக இங்கிலாந்திலும் பின்வாங்கியுள்ளன.

    இது, சமூக நீதி மற்றும் வர்த்தக அரசியலின் மோதலை வெளிப்படுத்துகிறது.

    இங்கிலாந்து நிறுவனங்கள், அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் தாக்கத்தில் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றத் தொடங்கியுள்ளன.

    கலாச்சாரம் மற்றும் மக்கள் நிகழ்வுகள்:

    ஷெல்சி மலர் கண்காட்சி (Chelsea Flower Show) [மே 21–25]

    பசுமை நகரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருப்பொருளில் தோட்டக்கலை விழா.

    வைக்கல் விழ (Hay Festival (மே 22–ஜூன் 1) – இலக்கியம், கவிதை, சிந்தனை உரைகள்.

    – Brighton Festival (மே 3–26) – இசை, நாடகம், நடனம், திரைப்படம்.

    – FA Cup Finals (மே 17–18) – வெம்ப்லியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப்போட்டிகள்.

    இப்படியான கலாசார நிகழ்வுகள் பல நடந்தேறின.

    ஒரு தேசத்தின் திசை மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இங்கிலாந்தில் தென்படத் தொடங்கியுள்ளது.

    2025 மே மாதம், இங்கிலாந்து அரசியல் மறுசீரமைப்பு, சமூக சிந்தனையின் மாறுதல், மற்றும் கலாச்சார உற்சாகம் ஆகியவற்றின் சந்திப்பாக அமைந்தது.

    லேபர் ஆட்சி தனது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

    Reform UK தனது வெற்றிகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மக்கள், மாற்றத்திற்கான உணர்வுடன், நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கின்றனர்.

    இஸ்ரேல்–ஈரான் யுத்தம் மேற்கு ஆசியாவை பதற்றமூட்டும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர் எடுத்துள்ள நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

    அவர், ஈரான் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறியதுடன், இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.

    இதன் மூலம், இங்கிலாந்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்படுகிறது.

    இருப்பினும், இந்த நிலைப்பாடு ஈரானின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும், இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

    இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடர்பாக இங்கிலாந்து அரசு முன்பு எடுத்திருந்த நிலைப்பாடுகள் சில முக்கிய அம்சங்களை கொண்டிருந்தன:

    – பயண எச்சரிக்கை: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய குடிமக்களுக்கு அரசு அறிவுறுத்தியது.

    இது அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கிறது.

    – பிரித்தானிய குடிமக்கள் வெளியேற்றம்: இஸ்ரேலில் உள்ள பிரித்தானியர்களை வெளியேற்ற சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இது பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களுக்கு பதிலாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

    – இராணுவ பங்கேற்பில் எச்சரிக்கை: ஈரான், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என எச்சரித்தபோதும், இங்கிலாந்து நேரடியாக எந்த இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை.

    இதன் மூலம், இங்கிலாந்து தற்காலிகமாகத் தன்னைத் தவிர்த்துக்கொண்டு, பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.

    இங்கிலாந்து அரசு, பொதுவாக, இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமையை ஆதரிக்கின்ற போதிலும், நேரடி மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் ஒரு சமநிலை நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது.

    இது ஒரு மாதம் மட்டுமல்ல – ஒரு புதிய அரசியல் பருவத்தின் தொடக்கம்.

    உக்ரைன் உடன்படிக்கை: இங்கிலாந்து மற்றும் உக்ரைன் இடையே 100 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது ரஷ்யா-ஈர்ப்பு சூழ்நிலையில் உக்ரைனுக்கு உறுதுணையாக அமைகிறது.

    பிரெக்சிட் பிந்தைய வர்த்தக ஒழுங்குகள்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

    அரசியல் நிதி ஒழுங்குமுறை: தேர்தல் நிதி முறைகள் மற்றும் அரசியல் நிதி பங்களிப்புகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

    பாராளுமன்ற சீர்திருத்தம்: மேலவை உறுப்பினர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

    2025 ஜூன் மாதம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவமாக, தீராத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தங்கள் உயிரை தாங்களே முடிக்க அனுமதிக்கும் கருணைக் கொலை மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

    314–291 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மனித உரிமை, கண்ணியமான இறப்பு, மற்றும் தனிநபர் சுயாதீனத்தை முன்னிறுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக கருதப்படுகிறது.

    இது, 1967ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்துக்குப் பிறகு சமூகக் கொள்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த மசோதாவுக்கு எதிராக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சமூக அழுத்தத்தால் தங்கள் உயிரை முடிக்கத் தூண்டப்படக்கூடும் என்ற எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவை உள்ளிட்ட மதநம்பிக்கைக் குழுக்கள், மனித வாழ்வின் மதிப்பை வலியுறுத்தி, இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியிருந்தனர்.

    இந்த சட்டம் மேல்சபையில் மேலும் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், இங்கிலாந்து சமூகத்தில் இறுதி நேர உரிமைகள் குறித்த விவாதங்களை இது மேலும் தீவிரமாக்கியுள்ளது.

    இந்த மாத மடலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பல நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் பார்த்தோம்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை.

    Share
  • 16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    வல்லமை மின்னிதழ், 15 ஆண்டுகளை நிறைவுசெய்து 16ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தமிழின் முதல் மின்னிதழ். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. தொடர்ந்து நடுநிலையுடன் படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

    இந்தப் பதினைந்து ஆண்டுகளில் வல்லமை, 19,831 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,949 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    Share