Month: July 2024

  • குறளின் கதிர்களாய்…(501)

    குறளின் கதிர்களாய்…(501)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(501)

    எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
    கொள்ளாத கொள்ளா துலகு.

    -திருக்குறள் -470(தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    தமது செயல் நிறைவேறிட
    அரசாள்வோர்
    தமது தகுதிக்குப் பொருந்தாதவற்றைச்
    செய்தால் அதனை
    உலகோர் மதியார்,
    அதனால்
    அவர் இகழாத வழிகளை
    எண்ணிச் செயல்படவேண்டும்…!

    குறும்பாவில்…

    தம்தகுதிக்குப் பொருந்தாதவற்றை அரசர்
    செய்தால் உலகோர் இகழ்வர், அதனாலவர்
    இகழா வகையில் செயல்படவேண்டும்…!

    மரபுக் கவிதையில்…

    மன்னர் தனது தகுதிக்கு
    மாறாய்ச் செயல்கள் செய்கின்ற
    தன்மை தன்னைப் பார்த்தாலே
    தாங்கா உலகோர் மதிக்காமல்
    அன்னார் செயலை இகழ்வாரே,
    அதனைக் கருத்தில் கொண்டேதான்
    என்றும் அவர்கள் இகழாமல்
    ஏற்றும் வகையில் செயல்வேண்டும்…!

    லிமரைக்கூ…

    தகுதிமறந்து செயல்படும் மன்னர்
    இகழப்படுவதால் தவறதைத் தவிர்த்துச் செயல்பட
    வேண்டும் மக்கள் முன்னர்…!

    கிராமிய பாணியில்…

    செயல்படு செயல்படு
    நல்லாத் தெரிஞ்சி
    நல்லமொறயில செயல்படு..

    நாடளுற ராசா
    தனக்க தகுதிய மறந்து
    தாழ்வான செயல்களச் செய்தா
    மக்கள் யாருமே
    மதிக்கமாட்டாங்க,
    அதுனால
    மக்கள் எகழ்ந்து பேசாத வகதெரிஞ்சி
    மன்னரு செயல்படணும்..

    அதால
    செயல்படு செயல்படு
    நல்லாத் தெரிஞ்சி
    நல்லமொறயில செயல்படு…!

    Share
  • ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                            
    மெல்பேண். ஆஸ்திரேலியா

    நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் நாளும் பொழுதும் யாவற்றையும் செய்து வருகின்றோம். சமயத்தில் நம்பிக்கை. தத்துவத்தில் நம்பிக்கை. புராண , இதிகாசங்களில் நம்பிக்கை. முன்னோர் மொழிந்த மொழிகளில் நம்பிக்கை. கற்றறிந்தவர் எழுதும் நூல்களில் நம்பிக்கை. அவர்கள் ஆற்றுகின்ற உரைகளில் நம்பிக்கை . இவற்றை எல்லாம் விட சமுகத்தில் நிலவுகின்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்வில் நம்பி க்கை எனும் பொழுது பல பரிமாணங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பன்னிரண்டு மாதங்கள் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதை நோக்குவதும் மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. 

    ன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களைச் சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியைசித்திரையைதையைஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகிவிட்ட நிலையில், மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது!

    ஆடி என்றவுடன் – ஆடிச் செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப் பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

    மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. திருப்பாவையும் மணிவாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகின்றன. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய்ப் புரட்டாசி விளங்குகிறது. ஆடிபுரட்டாசிமார்கழி இறை வழிபாட்டுக்கு உரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றவை அல்லவா என்று வினா எழுகிறதல்லவா? ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடிபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

    சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கிறார்.தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தைப் பித்ருக்களுக்கு வழிபாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் பொழுது வெப்பம் தணிந்து – காற்றுமழைபனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக் காலம் தேவர்களுக்கு இராக் காலமாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்காலத் தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி, இரவின் தொடக்கம். மார்கழி, விடியலின் தொடக்கம்.

    ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம்.கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும்.சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது.இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால் தானோ  என்று எண்ணிட  வைக்கிறது.

    அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால்வேப்பிலைமஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சுவதும்அம்மனுக்கு வைத்து வழிபடுவதும் கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா !

    ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே.அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய்க் கருதி, போற்றி வழிபாடுகளில் ஈடுபடுவதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

    ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக் கயிற்றை மாற்றுவதும்அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்கு உரியதாய் இருந்தாலும்பெரும்பாலான சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த் திருவிழாதெப்பத் திருவிழாதீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரியாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள்பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடைபெறுவதும் நோக்கத்தக்கது.

    ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும் தையில் வருகின்ற அமாவாசையும் கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம்உத்தராயண புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

    இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்தான். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தையினைப் பொங்கல் திருநாளாய்அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா ?

    ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக் குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக் குளி” என்னும் முதுமொழி பழக்கத்தில் இருக்கிறது.

    ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம்என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா ! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள்.அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்திரையில் பிரசவம் நடக்கும். சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதாரணமாகச் சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம் .வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் கால நிலை காரணமாக, பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை, பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

    ஆடி என்றவுடன் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் கட்டாயம் வந்து நிற்பார். தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டு வருவதும் நாடிவரும் ஆடி அல்லவா ! 

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுருண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
    மணக்க மணக்க வாயூறிடுமே

    குங்குமப் பொட்டிட்டு, பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே

    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

    நாடிவரும் ஆடி அமங்கலமான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம் ! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனைப் போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழும் காலமாகும். 

    மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்து மேதினியில் சிறந்து விளங்குவதுதான் ஆடி மாதத்தின் சிறப்பு எனலாம். எங்கள் முன்னோர்கள் எதையும் தக்க காரண காரியத்தோடுதான் வகுத்தார்கள். அவர்களின் கணிப்பில் தவறுகளைக் கண்டுபிடிப்பது முறையானதல்ல. தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசுவது என்பது பெரும் மேதாவித்தனம் ஆகியே விட்டது. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. சிறப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதுதான் மிகவும் உகந்த பண்பாடாகும்.

    நம்பிக்கைகள்தான் வாழ்வின் ஆணிவேராகும். எமது முன்னோர் கொண்ட நம்பிக்கைகள், அதற்காக அவர்கள் வகுத்த அற வழிகள், ஆன்மீக வழிகள், அத்தனையும் எம்மை என்றுமே வழிநடத்திச் செல்வதற்கு அருந்துணையாக அமைகின்றன என்பதை அகமிருத்துவது அவசியம் அல்லவா!  

    Share
  • லண்டனில் கம்பன் விழா

    லண்டனில் கம்பன் விழா

    சக்தி சக்திதாசன்
    இங்கிலாந்து

    காரைக்குடியில் 1939ம் ஆண்டு ஏப்பிரல் மாதம்  2,3 ம் நாட்களில் கம்பனின் தமிழ்த்திறனைப் போற்றி சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல சா.கணேசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே காரைக்குடி கம்பன் கழகம்.

    கம்பனில் மோகம் கொண்ட அமரர்  சா.கணேசன் தமிழின் மீதும், தமிழின் முன்னோர்கள் மீதும் அளவிலா ஆர்வம் கொண்டவர்.

    இந்திய தேசிய காங்கிரஸ், பின்னர் சுதந்திரா கட்சி எனும் கட்சிகளில் இணைந்து இந்திய விடுதலைப் போரிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் முன்னேறத்துக்காக அரசியலில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் தமிழக மேலவை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

    கம்பன் கழகத்தை அமைத்து கம்பருக்காக திருநாள் எடுத்தவர் சா. கணேசன். அனைவருக்கும் “கம்பனடிப்பொடி” எனும் கெளரவப் பெயரால் அறியப்படுபவர்.

    காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் இன்று தமிழகத்தின் பல பாகங்களிலும், சர்வதேச அளவில் தமிழர் செறிந்து வாழும் பல நாடுகளிலும் கிளைகள் பரப்பி கம்பனின் தமிழ்ரசக் கனிகளைத் தாங்கி நிற்கிறது.

    இலங்கையில் கம்பனடிப்பொடியின் நேரடி ஆசியுடன் உலகெங்கும் பறந்து கம்பனையும் தமிழையும் போற்றி வருகிறார் ஐயா இலங்கை ஜெயராஜ்.

    அந்த வழியில் இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் மாநகரில் கோலாகலமாக கம்பன் கழக இலண்டன் கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

    கம்பன் தமிழையும், தமிழிலக்கியத்தையும் கண்ணெனப் போற்றும் அன்பர்கள் ஒன்றிணைந்து யாம் பெற்ற இன்பம் பெறுக இங்கிலாந்து வாழ் தமிழர் என்பதற்காக இக்கம்பன் கழகத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

    இவ்வங்குரார்ப்பன விழாவிற்காக தாய்த்மிழ்ப் பின்புலங்களில் இருந்து பண்பட்ட பேச்சாளர்கள், தமிழறிஞர்கள் வந்திருந்தார்கள்.

    குறிப்பாக ” கம்பவாரிதி ” எனப் பெயர் பெற்ற திரு இலங்கை ஜெயராஜ்.

    தமிழகத்தில் புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர் திருமதி பாரதி பாஸ்கர்,

    தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர் தமிழறிஞருமான திரு. பாரதி கிருஷ்ணகுமார்.

    இலங்கை தமிழ் மற்றும் சமயச் சொற்பொழிவாளர் தமிழருவி சிவக்குமார்.

    இலங்கையின் மற்றொரு சிறந்த இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் முனைவர்  ஸ்ரீ பிரசாந்தன்.

    முன்னால் மலேசிய துணை அமைச்சரும், தமிழ் ஆர்வலருமான திரு டத்தோ சரவணன்.

    எனப் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்ட இரண்டு நாட்கள் நிகழ்வு கடந்த ஜூலை 13,14ம் தேதிகளில் லண்டன் அல்பேர்ட்டன் சமூகக் கூட்டரங்கு மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து சுமார் இரவு 10 மணி வரை நடந்தது.

    பட்டிமன்றம் , உரையரங்கம், நாட்டியநாடகம் எனப்பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

    துரதிர்ஷ்டவசமாக பல மாதங்களுக்கு முன்னராகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததால் முதலாம் நாள் அங்குரார்ப்பன நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

    இரண்டாம்நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு நானும் எனது மனைவியும் நண்பர் ஒருவருடன் மூன்று மணிக்கு முன்னதாகவே மணடபத்தை அடைந்து விட்டோம்.

    மண்டப ஒழுங்கு மிக நேர்த்தியாகவே அமைக்கப்பட்டிருந்தது.

    வாசலிலேயே தமிழ்க் கலாச்சாரப் பிரகாரம் மங்கக விளக்கின் ஒளியுடன் வரவேற்கக் காத்திருந்தார்கள்.

    கையில் லண்டன் கம்பன் கழக  விழா மலர் கையளிப்புடன் மண்டபத்தினில் நுழைந்தோம்.

    மண்டபம் நிறைந்து வழிந்தது அதிர்ஷ்டவசமாக மண்டபத்தின் பின் இருக்கைகளில் சில எமக்குக் கை கொடுத்தன.

    மண்பத்தினுள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது அங்கேருக்கும் ஓரிரண்டு இருக்கைகளில் யாராவது இருக்கிறார்களா ? என்று விழா அமைப்பாளர்களில் ஒருவர் வந்து வினவி புதிதாக வருபவர்களை உட்கார வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

    இருக்கைகள் மண்டபத்தின் உள்ளே நிரம்பியதால் வெளியே வரவேற்புகூடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியின் முன்னால் ஒரு ஐம்பது இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சிகள் நேரலையாக அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

    இலவசமாக விருந்தினர்க்கு தேநீர் கூடத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

    இரண்டாம் நாள் நிகழ்வின் ஆரம்பம் அழகாகத் தொகுப்பாளரினால் விவரிக்கப்பட்டது.

    மங்கல விளக்கேற்றலையும் வரவேற்புரையையும்,தகைமை உரையையும் அடுத்து இங்கிலாந்திலே பிறந்து இங்கு பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவர்களாக இருக்கும் ஒரு யுவனும், ஒரு யுவதியும் தமிழில் சிந்தனையரங்கத்தை ஆரம்பித்தார்கள்.

    அது பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் முன்னிலையில் நடந்தது.

    மிகவும் அருமையாக கம்ப இராமாயணத்தைப் பற்றி அவ்விளைஞனும், வளரும் தலைமுறை மத்தியில் தமிழின் வளர்ச்சி பற்றிய கருத்துரையை அந்த இளம் மாணவியும் உரை நிகழ்த்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமார். இளைய பேச்சாளர்களின் திறமையை வெகுவாக பாராட்டி தனக்கெயுரிய நகைச்சுவை கலந்த பேச்சுடன் அரங்கை மகிழ்ச்சியிலாழ்த்தினார்.

    தொடர்ந்த  இளம் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இராமாயண நாட்டிய நாடகம் செவிகளுக்கும், கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.

    முழு இராமாயணத்தின் சாரத்தையே வெறும் ஒரு மணி நேரத்துக்குள் அதன் மையக் கருத்துக் குன்றாமல் அச்சிறு நடிகர்கள் நிகழ்த்தியமை அரங்கத்தையே மகிழ்வான வியப்புக்குள் ஆழ்த்தியது.

    இடைவெளியின் போது தமிழ் இலக்கிய நயத்தைக் குறிப்பாக கம்பனின் நயத்தை விருந்தாகத் தந்த அமைப்பினர் மிகவும் நியாயமான விலையில் சிற்றுண்டிகளை அளித்து வாய்க்கும் சுவையளித்தார்கள்.

    இடைவேகைக்கு சற்று முன்னதாக மக்கள் பணிக்காகச் சேவையாற்றுபவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் மாண்பளித்துக் கெகரவிக்கப்பட்டார்கள்.

    இடைவேளையைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பட்டிமன்றம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

    தலைப்பு கம்பைராமயணத்தின் வீரம் செறிந்த நிலம் இராமனின் அயோத்தியா ? அன்றி இராவணனின் இலங்கையா ? என்பதுவே அயோத்தியே என்று தமிழருவி சிவக்குமார், பாரதி கிருஷ்ணகுமார், ஆகியோர் வாதிட இலங்கையே என பேச்சாளர் ஸ்ரீ பிரசாந்தன், திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் வாதிட்டனர்.

    மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னர் அயோத்திதான் வீரம் செறிந்த நிலம் என்று நடுவர் கம்பவாரிதி தீர்ப்பளித்தார்.

    சிறப்புரை மாண்புமிகு முன்னாள் மலேசிய துணையமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கபட்டது.

    அருமையான நிகழ்வுகளுடன் இனிதே முடிந்த விழாவின் இறுதியில் அனைவருக்கும் அருமையான சாத்வீக விருந்தளித்து விடைதனுப்பி வைத்தார்கள்.

    இவ்விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னால் பல தமிழ் இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நேசர்கள் எனப் பகரச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது எனது பாக்கியமே !

    எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனங்களில் கம்பனின் ஆளுமையும், அதனுடன் கலந்த இலக்கிய நேசமும் எத்தகைய ஆழமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.

    தமிழை நேசிப்பவன், தமிழை வாசிப்பவன், தமிழை யாசிப்பவன் எனும் ஒரு சாதாரண பாமர ரசிகனின் உள்ளக் கிடக்கையை வெளியிட வேண்டியது எனது கடமை என எண்ணுகிறேன்.

    விழா முடிந்த பின்னால் விழா அமைப்பாளர்கள் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது.

    இலண்டனில் அதுவும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் ஒரு சாதாரண பிறந்தநாள் விழாவிற்கே ஏற்படும் செலவினைப் பற்றி அறிந்தவன்.

    இத்தகைய அளவில் இலக்கிய விழா ஒன்றை அமைப்பதில் உள்ளப் பொருளாதார, நிர்வாகச் சிக்கல்கள் உணரக்கூடியதே.

    இவ்விழாவிற்கான செலவினில் பல நல்ல உள்ளங்கள் விழா அமைப்புக்குழுவிற்கு உதவியதை அவர்களே பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

    இலவச அனுமதியுடன் தேநீர் இரவு உணவு உபசாரங்களுடன் விழா நடைபெற்றது.

    அங்கே மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் நன்கொடை செய்ய விரும்புவோர்களுக்கான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

    இரண்டு நாட்களையும் சேர்த்து அண்ணளவாக ஆயிரம் பார்வையாகர்கள் வந்திருந்ததாக அவ்வமைப்பாளர் சொன்னார்.

    அமைப்பாளர்கள் ஒரு தேநீர் லண்டன் காசில் ஒரு பவுண்டு என்று அறவிட்டிருந்தால் கூட சுமார் 800 பவுண்டுகள் வரை அதவது இந்திய ரூபாய் எட்டு லட்சம் அறவிட்டிருக்கலாம்.

    ஆனால் அங்கிருந்த நன்கொடைப் பெட்டிகளின் மொத்தம் அதன் அரைப்பங்காவது வந்திருக்குமா என்பது சந்தேகமே !

    ஒரு சினிமா பார்ப்பதற்கு 15 பவுண்டுகள் கொடுக்கிறோம்.

    சினிமா நடிகர்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு குறைந்தது 30 பவுண்ட்ஸ் கொடுத்துக் கலந்து கொள்கிறோம்.

    அதைப் பார்ப்பது தவறென்பதல்ல எனது வாதம் ஏனெனில் ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் அவர்களது தெரிவு.

    ஆனால் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கம்பன் எனும் கவிச்சக்கரவர்த்தியின் தமிழை ரசிக்க வந்த ரசிகர்கள் எத்தனை தூரம் இதைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதுவே கேள்வி.

    எமது அடுத்த தலைமுறையை நோக்கி இலக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமானால் அருகி வரும் பார்வையாளர்களின் பங்களிப்பின்றி நிறைவேறாது.

    அடுத்த வருடம் கம்பன் விழாவில் சந்திப்போம்.

    Share
  • வஞ்சியின் நெஞ்சறிய…

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவியோடு தினைப்புனம் காக்கப் புறப்பட்டாள் அவள் ஆருயிர்த் தோழி. வழியெல்லாம் பேசிக்கொண்டு கலகலப்பாக வரும் தலைவி சில நாட்களாக அதிகம் பேசுவதில்லை; தோழி பேசியவற்றுக்கு மறுமொழியாகச் சில வார்த்தைகளை உதிர்ப்பதோடு சரி! தவிரவும் எதையோ சிந்தித்துக்கொண்டிருப்பதை அவள் முகக்குறிப்புக் காட்டுகின்றது. ஏன்… உணவு உண்பதில்கூட நாட்டம் அதிகமில்லை அவளுக்கு. இதன் காரணம் என்னவாக இருக்கும்? துறுதுறுப்பான பெண் திடீரென்று சோர்வாய்த் தெரிவதும், சிந்தனையில் ஆழ்வதும் புதிராக அல்லவா இருக்கின்றது? என்று சிந்திக்கலானாள் தோழி.

    அப்போது அவளது எண்ணத் திரையில் வண்ண ஓவியமாய்த் தோன்றினான் அந்த எழில்மிகு இளைஞன். தான் தேடிவந்த யானை அந்தப் பக்கமாக வந்ததா என்று தலைவியும் தோழியும் நின்றிருந்த இடத்தருகே வந்து சில நாட்களுக்கு முன்பு கேட்டான் அவன். தலைவியைக் கண்டதும் அவன் பார்வை அவள்மீதே நிலைக்குத்தி நின்றது; தலைவியும் அவனைக் கண்டு நாணத்தோடு தலைகுனிந்தாள். அதன்பிறகு அவன் அடிக்கடி இந்தத் தினைப்புனத்தருகே தென்படுகின்றான். ஒருவேளை நான் தலைவியோடு தினைப்புனக் காவலுக்கு வாராத சமயங்களில் இவர்களுக்குள் காதல் அரும்பத் தொடங்கிவிட்டதோ? எதுவாக இருந்தாலும் இன்றைக்கு அதைக் கண்டுபிடித்துவிடுகின்றேன் என்று தீர்மானித்தாள். அப்போது தினைப்புனக் காவலுக்காக வழக்கமாகத் தலைவியும் தோழியும் அமரும் மரத்தின் பரணருகே அவர்கள் இருவரும் வந்திருந்தனர்.

    பரணில் ஏறி இருவரும் அமர்ந்த சற்றுநேரத்தில் ’கீக்கீ’ என்று கத்திக்கொண்டு கிளிக்கூட்டமொன்று தினைகளைக் கவர்வதற்காகப் பறந்து வந்துகொண்டிருந்தது. தட்டை, குளிர், தழல் ஆகிய கிளி கடியும் கருவிகளை முழக்கிக் கிளிகளை விரட்டினர் இருவரும். வஞ்சியரின் கருவிகள் எழுப்பிய ஒலியால் அஞ்சிப் பறந்தன கிளிகள்.

    தலைவி ஏதாவது பேசுவாள் என்று தோழி எதிர்பார்த்தாள்; ஆனால் அவளோ  பேசாமடந்தையாய் அமர்ந்திருந்தாள். அவளின் அழகிய முகத்தில் அங்குமிங்கும் பிறழும் நீலமலர்போன்ற கண்களின் வனப்பில் இலயித்த தோழி, ஒரு வேடிக்கை செய்து இவள் உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வரவழைத்துவிடுகின்றேன் என்று நினைத்துக்கொண்டு தலைவியைப் பார்த்து, ”உன்னிடம் ஒரு விசயத்தைச் சொல்லவேண்டும் என்று சில நாட்களாகவே நினைக்கிறேன்; ஆனால் தயக்கத்தின் காரணமாகத் தவிர்த்துவிடுகின்றேன்” என்றாள் பீடிகையோடு.

    ”தன்னைப் பற்றி ஏதேனும் சொல்லப்போகிறாளோ” எனும் பதற்றம் தலைவியைத் தொற்றிக்கொண்டது. அதனை மறைத்தவளாய், “என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? தயங்காமல் உடனே சொல்!” என்றாள் சிறிது தடுமாற்றத்தோடு.

    ”அதுவந்து…அழகாகத் தொடுக்கப்பட்ட கண்ணியை அணிந்தவனாய்க் கையில் வில்லோடு, வலிமையான விலங்கின் காலடியைத் தேடிக்கொண்டு வருவதுபோல் இப்பக்கமாக இளைய ஆடவன் ஒருவன் வந்துபோகிறான்…” என்று சொல்லி நிறுத்தினாள் தோழி.

    கேட்டுக்கொண்டிருந்த தலைவிக்கு உள்ளூற உதறல் எடுத்தது; அதை மறைத்துக்கொண்டு, ”மேலே சொல்!” என்றாள்.

    ”நான் வரும் வழியில் என்னையே எதிர்நோக்கி நிற்பவன்போல் நிற்கிறான் அவன்; அதை வெளிப்படையாக வாய்விட்டுச் சொல்கிறானா என்றால் இல்லை; அவனுடைய முகக்குறிப்பை வைத்து அவனுக்கு என்னால் ஏற்பட்டிருக்கும் காதல்நோயை அறிந்தேன்; இவ்வாறே பல நாட்களாக ஏதும் சொல்லாமல் வந்துபோகிறான்” என்று சொல்லிவிட்டுத் தலைவியின்மீது பார்வையைச் செலுத்தினாள் தோழி. தலைவி ஏதும் சொல்லாமல் இருந்தாள்.

    விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தவள், ”ம்ம்ம்…எனக்கும் அவன் நினைவால் பாயில் படுத்தால் உறக்கமில்லை; காதல்நோயால் நெஞ்சில் நிம்மதியில்லை. ஆணாக இருந்துகொண்டு அவனே தன் காதலை உரைக்காதபோது பெண்ணான நான் எப்படிச் சொல்வது? எனினும், எனக்கும் அவன்பால் அன்பு உண்டு என்பதை அவன் அறியாமல்போனால் எங்கே என்னைவிட்டு நீங்கிவிடுவானோ என்ற அச்சம் என்னுள் எழுந்தது; அவன் நினைவால் என் தோளும் மெலிந்தது; இதற்கொரு முடிவுகாண வேண்டும் என்று எண்ணினேன்; அதனால் நாணத்துக்கு விடைகொடுத்துவிட்டுத் துணிச்சலாய் ஒரு காரியம் செய்தேன்” என்றாள் தோழி.

    தலைவியின் இதயத்துடிப்பு எகிறியது. அதனை அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு, “என்ன செய்தாய்?” என்று கேட்டாள் மெல்லிய குரலில்.

    ”அதுவா?” என்று நகைத்த தோழி, ”நம் தினைப்புனத்தருகே கட்டப்பட்டிருக்கின்றதே ஊஞ்சல், அதிலேறி நான் ஆடிக்கொண்டிருந்தேன்; அப்போது அவன் அங்கே வந்தான். ”ஐய! நான் ஆடுவதற்கு வசதியாக இந்த ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டிவிட முடியுமா?” என்று அவனைக் கேட்டேன்; அதற்காகவே காத்திருந்தவன்போல் ”நல்லது, இதோ ஆட்டிவிடுகிறேன்” என்று விரைந்துவந்து ஊஞ்சலை ஆட்டினான். அப்போது கைப்பிடி நழுவி வீழ்வதுபோல் நான் அவன் மெய்மீது மெய்யாகவே விழுந்தேன்!” என்றாள் தலைவியைக் குறும்பாய்ப் பார்த்தபடி.

    ”ஐயோ…அப்புறம்?” என்றால் தலைவி திகிலோடு!

    ”அப்புறமென்ன? ஊசலாட்டத்தால் நான் தலைசுற்றி மயங்கி விழுந்துவிட்டதாக நினைத்த அவன், என்னை விரைந்து அள்ளிக்கொண்டான். நானோ உணர்விழந்தவள்போல்  நடித்துக்கொண்டு அவன் மார்பின்மீது நெடுநேரம் சாய்ந்திருந்தேன். பின்னே? நான் தன்னுணர்வோடு இருப்பதை அவனறிந்தால் என்னைத் தன் மார்பில் தாங்கிக்கொள்வானா? பண்பாடு மிக்கவனான அவன், பெண்ணே! எழுந்திரு…விரைவாக வீடுசெல்! என்றல்லவா, பிறரறியாமல், என்னை அனுப்பியிருப்பான்!” என்று தன் திறமையைத் தானே வியப்பவள்போல் கூறிவிட்டுத் தலைவியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.

    தலைவியின் கண்களில் கண்ணீர்முத்துக்கள் திரண்டு வெளியில் விழக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்ட தோழி அதனைத் தாளாமல், ”அடி கள்ளி! உன் உள்ளத்தை உணரத்தான் இவ்வாறு இட்டுக்கட்டிச் சொன்னேன்; அதனை மெய்யென்று நம்பிவிட்டாயா? என்று கேட்டுவிட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.

    தலைவி அவளைத் திகைப்போடு பார்க்கவே, ”நீயும் அந்த ஆண்தகையும் காதலிப்பது எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய்? அதனை உன்மூலம் அறியவே இந்தத் திருவிளையாடல்!” என்றுகூறிவிட்டுத் தலைவியின் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டினாள்.

    தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதை அறிந்த தலைவி வெட்கத்தோடு தோழியின் தோளில் சாய்ந்தாள்.

    இந்தச் சுவையான நிகழ்வைத் தாங்கியிருக்கும் கலித்தொகைப் பாடலிது.

    கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
    வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
    கண்ணியன் வில்லன் வரும்என்னை நோக்குபு
    முன்னத்திற் காட்டுதல் அல்லது தானுற்ற
    நோய்உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்
    பாயல் பெறேஎன் படர்கூர்ந்து அவன்வயின்
    சேயேன்மன் யானும் துயருழப்பேன் ஆயிடைக்
    கண்ணின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்
    பெண்ணன்று உரைத்தல் நமக்காயின் இன்னதூஉம்
    காணான் கழிதலும் உண்டென்று ஒருநாளென்
    தோள்நெகிழ் புற்றதுயரால் துணிதந்து ஓர்
    நாணின்மை செய்தேன் நறுநுதால் ஏனல்
    இனக்கிளி யாம்கடிந்து ஓம்பும் புனத்தயல்
    ஊசலூர்ந்து ஆட ஒருஞான்று வந்தானை
    ஐய சிறிதென்னை ஊக்கி எனக்கூறத்
    தையால் நன்றென்று அவனூக்கக் கைநெகிழ்பு
    பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில் வாயாச்செத்து
    ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்
    மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ஆயிடை
    மெய்யறிந்து ஏற்றெழுவேன் ஆயின்மற்று ஒய்யென
    ஒண்குழாய் செல்க எனக்கூறி விடும்பண்பின்
    அங்கண் உடையன் அவன்.
    (குறிஞ்சிக்கலி – 37: கபிலர்)

    இங்கே தலைவியின் களவொழுக்கத்தை (காதல்) அறிந்து அவளுக்கு உதவுவதற்காகவே தோழி பொய் சொல்கின்றாள். எனவே, நல்ல நோக்கத்தோடு சொல்லப்பட்ட இந்தப் பொய்யும் மெய்யின் இடத்தைப் பெறுகின்றது எனலாம்.

    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்
    ” (292) என்பது வள்ளுவமன்றோ?

    தலைவியின் நலன்கருதித் தோழி அவளிடமும் தலைவனிடமும் இன்னபிற அகத்திணை மாந்தரிடமும் இவ்வாறு கற்பித்துச் சொல்வதை (fabrication) ’படைத்து மொழிதல்’  என்கின்றது தமிழிலக்கணம்.

    [படம், செய்யறிவு மென்பொருளின் துணையோடு நான் உருவாக்கியது.]

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
    2. https://vaiyan.blogspot.com/2017/01/37-kalittogai-37.html
    3. https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-kalithokai-37-65-kurinji/
    4. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
    Share
  • குறளின் கதிர்களாய்…(500)

    குறளின் கதிர்களாய்…(500)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(500)

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    யற்றந் தரூஉம் பகை.

    – திருக்குறள் – 434 (குற்றங்கடிதல்)

    புதுக் கவிதையில்…

    தனக்கு அழிவைத்
    தந்திடும் பகை
    தான் செய்யும் குற்றமே,
    அதனால்
    அக்குற்றம் செய்யாமலிருப்பதே
    நோக்கமாகக் கொண்டு
    தன்னைக்
    காத்துக்கொள்ள வேண்டும்…!

    குறும்பாவில்…

    குற்றம்தான் ஒருவனுக்கு அழிவினைக்
    கொணரும் பகையாகும், அதனால் அக்குற்றம்
    வராமல் காத்துக்கொள்ள வேண்டும்…!

    மரபுக் கவிதையில்…

    அழிவாம் முடிவைத் தருகின்ற
    ஆற்றல் மிக்கக் குற்றமெனும்
    இழிந்த பகையே வந்துலகில்
    இடரைத் தருமே மாந்தர்க்கே,
    அழிவைத் தடுக்கும் மார்க்கமதாய்
    அந்தக் குற்றம் அணுகிடாத
    வழியில் நம்மைக் காக்கின்ற
    வகையில் வாழ்தல் நலமாமே…!

    லிமரைக்கூ…

    குற்றமே அழிவுதரும் பகை,
    அதனை உணர்ந்தே வாழ்வில் தேர்ந்தெடு
    அக்குற்றம் வராத வகை…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    குத்தம் செய்யாத,
    கூண்டோட அழிக்கிற
    குத்தம் செய்யாத..

    ஓலக வாழ்க்கயில
    ஓனக்கு
    அழிவத் தருற பக
    நீ செய்யிற குத்தந்தான்,
    அத ஒணந்து
    அந்தக் குத்தமெதும்
    செய்யாம வாழ்ந்து
    ஒன்னக் காப்பாத்திக்கோ..

    அதால
    செய்யாத செய்யாத
    குத்தம் செய்யாத,
    கூண்டோட அழிக்கிற
    குத்தம் செய்யாத…!

    Share