போனேன் Phu Quok
நிர்மலா ராகவன்
‘செழிப்பான நாடு’ என்ற அர்த்தம்கொண்டது Phu Quok. இயற்கை, கடல் என்ற ஆர்வம்கொண்ட உல்லாசப்பயணிகளின் சொர்க்கம் இது.
கம்போடியா, வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் ப்ரெஞ்சு நாட்டின் அதிகாரத்தில் இருந்தனவாம். முதலில் கம்போடியா நாட்டுக்குச் சொந்தமாக இருந்த இத்தீவு ஒரு போரின் விளைவாக வியட்நாமின் கைக்கு வந்தது.
கோலாலம்பூரிலிருந்து ஒன்றரை மணி நேர விமானப்பயணம் என்பதால், பலருக்கும் தெரிந்திராத இத்தீவிற்கு போய்த்தான் பார்ப்போமே என்று நானும் என் மகள் சித்ராவும் திட்டம் போட்டோம்.
நாங்கள் தங்கிய Ocean Bay Resort என்ற இடத்தை இயற்கையைக் காக்கவேண்டும் என்ற முனைப்புடன் அமைத்திருக்கிறார்கள். தெருவுக்கு இருபுறங்கிலும் காட்டையொத்த அடர்ந்த மரங்கள். மரங்களாலான இருப்பிடங்கள். குளியலறையில் நீர்யானை குளிக்க ஏற்ற, நீளமும் அகலமுமான குளியல் தொட்டி (bath tub). முழுவதும் கருங்கல்லால் ஆனது. எல்லாச் சுவர்களும் மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கு வந்திருந்தவர்கள் சீனா, ரஷ்ஷியா மற்றும் 1,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வியட்நாமிலிருந்து வந்தவர்கள். ஆங்கிலத்தைத்தவிர, அம்மொழிகளில்தாம் எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் காணப்பட்டன.
நாங்கள் கால்வைத்த நேரம் மழை கொட்டொ கொட்டென்று கொட்டியது. `நல்லவர் ஒருவர் உளரேல்,’ என்று நான் பெருமைப்பட முடியவில்லை. இது மழைக்காலம். இடியோ, மின்னலோ இல்லாது, காற்று பலக்க மழை. பேய்க்காற்றில் மரங்களின் கிளைகள் அசைய, அருகிலிருந்த கடல் அலைகள் ஆர்ப்பரிக்க, மிக இனிய அனுபவம். வராந்தாவைத் தாண்டி, படுக்கையறைக்குள்ளும் சாரல் அடித்து, எங்களைச் சிரிக்கவைத்தது.
`மழை சற்று விட்டு விட்டதே!’ என்று நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தவுடன் மழை பலத்துவிடும். முதல்நாள் என் புடவை முழுக்க தொப்பலாக நனைய, மறுநாளிலிருந்து உடையை ஷார்ட்ஸ், முருநீளக் கால்சட்டை என்று மாற்றினேன். எங்கள் அறையிலிருந்து வெளியே பார்த்தால், கூப்பிடு தூரத்தில் கடல். அலையோசையை ரசித்தபடி முதல் நாளைக் கழித்தேன். அவ்வளவு நனைந்தும், உடலுக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்பது விசேஷம். அரிதான, மிகத் தூய்மையான காற்றின் மகிமை.
மறுநாளிலிருந்து, டுக் டுக் (tuk tuk) என்ற வாகனத்தை வரவழைத்தோம். ஆறுபேர் உட்காரலாம். அதில் ஏறமுடியாது திணற, அதை ஓட்டிய இளம் வாலிபன் என்னைத் துக்கி ஏற்றிவிட்டான்.
இங்கு என்ன சிறப்பு என்றால், வாடகைக்காரில் எங்காவது போகும்போதும், என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். `என்னால் நடக்க முடியும்,’ என்று கையை உதறினாலும் விடமாட்டார்கள்.
சாப்பாட்டுக்கூடத்தில் வேலை பார்த்த இளைஞன், “உங்களுக்கென்று, முட்டை போடாமல் pan cake பண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன்!’ என்று, தன் வேலையை விட்டுவிட்டு, என் மேசையில் கொண்டுவைத்தான். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, அதன்மேல் வெண்ணை, பலவித ஜாம், தேன் என்ற இனிப்பு வகை அது.
தென்கிழக்கு ஆசியாவின் பிரத்தியேகமான குணம் — முதியவர்களுக்கு உதவி செய்வது பெரும்பாக்கியம் என்பதுபோல் புன்னகையுடன் செய்வது.
பார்க்கவேண்டிய இடங்கள் இரண்டு: Pearl Farm (முத்துப்பண்ணை) மற்றும் பட்டுப்பண்ணை.
முத்துப்பண்ணை
ஒரு மீனவர் முத்துக்குளிக்க இப்பகுதிக்கு வந்தபோது, பல நூற்றாண்டுகளுக்குமுன் கடலில் மூழ்கிவிட்ட கப்பலைக் கண்டார். அதில் காணப்பட்ட சாமான்களை எடுத்துவந்தார். பன்முறை இப்படியே செய்து, அவர் சேர்த்துவைத்தவை இங்கு காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் கிடைத்த பீங்கான் சாமான்களோடு, பெரிய பெரிய முத்துச்சிப்பிகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான கோப்பைகள் உடையாது இருந்தது ஆச்சரியம். கொலுவைப்போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
கடலிலிருந்து எடுக்கப்படும் முத்து விலை உயர்ந்தது. ஆற்றிலிருந்து மனிதனால் உற்பத்தி செய்யப்படுவது சற்றே மலிவு. பளபளப்பு குறைவு. இரு முத்துக்களை ஒன்றோடொன்று உரசினால் வெள்ளை மாவுபோல் கையில் ஒட்டுகிறது. பிறப்பிடம் ஆறோ, கடலோ, அவைதாம் நல்ல முத்துக்கள். எத்தனை காலம் ஆற்றில் விட்டுவைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிறம், அளவு ஆகியவை மாறும் என்றெல்லாம் ஒருவர் விளக்கினார் – முத்துச்சிப்பிகளின் உள்ளே கீறி.
பட்டுப்பண்ணை
பட்டுப்பூச்சி மற்றும் மூங்கிலால் செய்யப்படும் பட்டு வகைகளை இங்கு பார்க்கலாம். மிக அழகான, மெலிதான பட்டின் விலை அதிகம் என்று, வழவழப்பாக இருக்கும் மூங்கில் பட்டாலான ஆடைகள், காலுறை, மேசையிலும், தரையிலும் படிந்த கறைகளை நன்றாகத் துடைக்க துண்டுகள் ஆகியவற்றை மகிழ்வுடன் வாங்கினோம்.
`பார்க்க வேறென்ன இருக்கிறது?’ என்று கேட்பவர்களுக்கு: இது ஒரு சிற்றூர். பேரங்காடிகள் கிடையாது. பலரும் ஸ்கூட்டரில்தான் போகிறார்கள். ஆனால், ஏழ்மையான தோற்றமில்லாது, ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
`நாகரிகம்’ என்ற பெயரில் கரடுமுரடாக நாம் செய்துவிட்ட வாழ்க்கையில் இம்மாதிரியான இயற்கைச்சூழலும், மனிதத்தன்மையுடன் வலம் வரும் மனிதர்களும் அருமருந்து.
