Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • பாரதி கண்ட கண்ணம்மா இன்று அவள் யார்?

    பாரதி கண்ட கண்ணம்மா இன்று அவள் யார்?

    பாரதியின் கவிதைகளை ஒவ்வொரு காலமும் புதிதாக வாசித்துக்கொண்டே இருக்கிறது. தேசிய விடுதலை, சமூகச் சமத்துவம், பெண்ணுரிமை என்று பல்வேறு கோணங்களில் பாரதி நம்மிடம் அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் அவரது கவிதைகளில் தொடர்ந்து தோன்றும் கண்ணம்மா போன்ற பெண் உருவங்களை இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி இன்னும் சுவாரசியமானது. பாரதியின் கண்ணம்மா ஒரு பெயராக மட்டும் நிற்கவில்லை; காதல், கலை, அழகு, தெய்வீகம், பெண்மை எனப் பல்வேறு உணர்வுகளின் சந்திப்பாக அவள் கவிதைகளில் உருவெடுக்கிறாள்.

    ஒரு படைப்பாளியின் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் அப்படியே படைப்புகளுக்குள் நுழைவதில்லை. நினைவு, கற்பனை, பண்பாட்டு மரபு, தனிப்பட்ட உணர்வு ஆகியவை ஒன்றோடு ஒன்று கலந்தபின் அவர்கள் புதிய இலக்கிய உருவங்களாக மாறுகிறார்கள். பாரதியின் கண்ணம்மாவையும் இத்தகைய கற்பனை மாற்றத்தின் வழியாகத்தான் அணுக வேண்டும். அவள் ஒரு குறிப்பிட்ட பெண்ணின் நேரடி உருவமா என்பதைவிட, பாரதியின் கவிதை உலகில் பெண் எவ்வாறு கற்பனை செய்யப்பட்டிருக்கிறாள் என்பதே முக்கியமான கேள்வியாகிறது.

    கண்ணம்மா என்ற பெயருக்குள்ளேயே ஒரு பண்பாட்டு நினைவு இருக்கிறது. கண்ணன் என்ற பெயரின் பெண்பால் வடிவமாக ஒலிக்கும் கண்ணம்மா, பக்தி மரபின் நினைவையும் காதலின் நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் தாங்குகிறது. அதனால் பாரதி கண்ணம்மாவை அழைக்கும் இடங்களில் காதலும் பக்தியும் தனித்தனி அறைகளில் இருப்பதில்லை. மனிதக் காதலின் நெருக்கமும் தெய்வீக உணர்வும் ஒரே மொழியில் கலந்துவிடுகின்றன.

    கண்ணன் பாட்டுத் தொகுப்பில் கண்ணம்மாவை நேரடியாகக் காதலியாக அழைக்கும் பாடல்கள் இதற்குச் சான்றாக உள்ளன. இங்கு கண்ணம்மா ஒரு தெய்வத்தின் தொலைவான உருவமாக மட்டும் இல்லை; கவிஞனுக்கு மிக அருகில் நிற்கும் காதலியாகவும் தோன்றுகிறாள். காதல் என்பது இங்கு வழிபாட்டிலிருந்து வேறுபட்டதாக இல்லை; வழிபாடே காதலின் மொழியை ஏற்றுக்கொள்கிறது.

    இதனோடு வள்ளி என்ற உருவத்தையும் இணைத்துப் பார்க்கலாம். தமிழ் மரபில் வள்ளி என்பது வெறும் புராணப் பாத்திரமல்ல. இயற்கையோடு நெருக்கமானவள்; தன் விருப்பத்தையும் காதலையும் வெளிப்படுத்தும் பெண்; வழக்கமான அரண்மனைப் பெண் உருவத்திலிருந்து மாறுபட்டவள். எனவே வள்ளி என்ற பெயர் பாரதியின் கவிதைக்குள் வரும்போது, அது காதல், இயற்கை, விருப்பம் ஆகியவற்றின் பண்பாட்டு நினைவையும் உடன் கொண்டு வருகிறது.

    இதனை இன்னும் தெளிவாகச் சொல்லும் வகையில் பாரதி பாடுகிறார்:

    “வேடத்திசிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா
    பீடத்தில் ஏறிக்கொண்டாள் — மனப்
    பீடத்தில் ஏறிக்கொண்டாள்.”

    இந்த வரிகளில் வள்ளியும் கண்ணம்மாவும் ஒரே உணர்வுப் பரப்புக்குள் வந்து நிற்கின்றனர். வெளிப்புற உலகில் அவள் யார் என்பது முக்கியமல்ல; கவிஞனின் மனத்தில் அவள் எங்கே அமர்ந்திருக்கிறாள் என்பதே முக்கியமாகிறது. “மனப் பீடம்” என்பது இங்கு வெறும் காதல் உணர்வின் இடமல்ல. ஒருவரை நம் உள்ளத்தின் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் நினைவின் அடையாளம்.

    வள்ளி என்ற புராணப் பெயரும் கண்ணம்மா என்ற காதல் அழைப்பும் ஒன்றாக இணைவது இதனால் பொருள் பெறுகிறது. ஒரு புறம் மரபின் வள்ளி; இன்னொரு புறம் கவிஞனின் மனத்தில் வாழும் கண்ணம்மா. இருவரும் சேரும்போது, பாரதியின் கற்பனையில் பெண் ஒரு குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்கும் உருவமாக மாறுகிறாள்.

    இன்றைய காலத்தில் இந்த “மனப் பீடம்” என்ற உருவகத்தை நாம் வேறு விதமாகவும் வாசிக்கலாம். ஒருவரை நேசிப்பது என்பது அவரை நமது விருப்பத்தின் வடிவமாக்குவது அல்ல; அவருடைய தனித்தன்மையை ஏற்றுக்கொள்வது. ஒருவரை மனதில் உயர்த்திப் போற்றுவது அழகானது. ஆனால் அந்தப் பீடம் அவருடைய குரலை அடக்கக்கூடாது. அவர் நம் கற்பனையில் மட்டுமே வாழ வேண்டியதில்லை; தன் வாழ்க்கையிலும் தன் குரலோடு வாழ வேண்டும்.

    இதுதான் பாரதியின் கண்ணம்மாவை நவீன பெண்ணியப் பார்வையோடு இணைக்கும் முக்கியமான இடம்.

    பாரதியின் கவிதைகளில் பெண் உயர்த்திப் பேசப்படுகிறாள். அவள் காதலியாகவும், தெய்வமாகவும், சக்தியாகவும், அழகின் வடிவமாகவும் தோன்றுகிறாள். ஆனால் இன்றைய வாசிப்பை அங்கேயே நிறுத்திவிட முடியாது. பெண்ணை உயர்த்திப் போற்றுவதும், பெண்ணை ஒரு முழுமையான மனிதராக ஏற்றுக்கொள்வதும் ஒன்றல்ல. அவளுக்கு விருப்பம் இருக்கலாம்; மறுப்பு இருக்கலாம்; தனிப்பட்ட முடிவு இருக்கலாம்; தன் வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருக்கலாம்.

    பெண்ணைத் தெய்வமாக்குவதற்கு அப்பால், அவளை மனிதராக மதிப்பதே நவீன காலத்தின் அடுத்த படி.

    பாரதியின் மற்றொரு பாடல் இந்தக் காதல் உணர்வின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது:

    “பிள்ளைப் பிராயத்திலே — அவள்
    பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேனங்கு;
    பள்ளிப் படிப்பினிலே மதி —
    பற்றிடவில்லை.”

    இங்கு காதல் என்பது வெறும் வெளிப்புற அழகைக் காண்பதல்ல. ஒரு பெண்ணின் பெண்மையைக் கண்டு மனம் மயங்கும் தருணம், கல்வி உட்பட மற்ற உலகங்களின் மீதான கவனத்தையே திசைதிருப்பும் அளவுக்கு ஆழமான உணர்வாகக் கவிஞனால் பதிவு செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் தன்னை ஆட்கொண்ட உணர்வை, காலம் கடந்தபின் கவிஞன் திரும்பிப் பார்க்கிறான். அந்தப் பார்வையே அதை கவிதையாக்குகிறது.

    இந்த வரிகளை இன்று வாசிக்கும்போது, அவற்றை வெறும் காதல் வெளிப்பாடாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஓர் உணர்வு மனித மனத்தை எவ்வளவு வலிமையாக ஆட்கொள்ள முடியும் என்பதன் கவித்துவமான பதிவு இது. அதே நேரத்தில், அந்தக் காலத்தின் உணர்வுகளை இன்றைய குழந்தைப் பருவத்திற்கான வாழ்க்கை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. காலம் மாறும்போது ஓர் உணர்வை அணுகும் சமூகப் பார்வையும் மாறுகிறது.

    இதில்தான் இலக்கியத்தின் நவீன வாசிப்பு தொடங்குகிறது. பாரதி தன் காலத்தில் ஓர் உணர்வைக் கவிதையாக்கினார். நாம் நமது காலத்தில் அந்த உணர்வை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்கிறோம். பழைய கவிதைக்குப் புதிய பொருள் கொடுப்பது கவிஞனை மறுப்பதல்ல; அந்தக் கவிதையுடன் தொடர்ந்து உரையாடுவதாகும்.

    பாரதியின் பெண் உருவங்களில் கலைக்கும் முக்கியமான இடம் உண்டு. குயில் பாட்டு போன்ற படைப்புகளில் இசை, பெண்மை, காதல், அழகு ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைகின்றன. அழகை ரசிப்பதற்கும் அதை வெறும் உடலாகப் பார்ப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் நுண்ணுணர்வு அங்கு உள்ளது. கலை உணர்வு இல்லாத பார்வை ஒரு பெண்ணின் திறமையைக்கூட அவளுடைய உடலுக்குள் சுருக்கிவிடக்கூடும்.

    இந்தக் கருத்து இன்றைய சமூக ஊடக உலகில் மிகவும் பொருத்தமானதாகிறது.

    ஒரு பெண் பாடுகிறாள் என்றால் அவளுடைய குரலைக் கேட்பதற்குப் பதிலாக அவளுடைய தோற்றத்தைப் பற்றிப் பேசும் பார்வை இன்னும் இருக்கிறது. அவள் நடனமாடினால் அவளுடைய கலைத்திறனை ரசிப்பதற்குப் பதிலாக அவளுடைய உடலை மதிப்பிடும் பார்வை இருக்கிறது. அவள் ஒரு கருத்தை முன்வைத்தால் அந்தக் கருத்தோடு உரையாடுவதற்குப் பதிலாக அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயும் பழக்கமும் உள்ளது.

    ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கலைக்கும் பெண்மைக்கும் பண்பட்ட ரசனை தேவை என்பதை உணர்த்திய பாரதியின் சிந்தனை, இன்று டிஜிட்டல் உலகில் புதிய கேள்வியாக நம்முன் நிற்கிறது.

    நாம் பெண்ணைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறியிருக்கிறதா? அல்லது திரை மட்டும் மாறியிருக்கிறதா?

    இந்தக் கேள்வி பாரதியின் பெண் உருவங்களை நவீனமாக வாசிக்க உதவுகிறது.

    பாரதி பெண்களின் கல்வி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றைப் பற்றி தன் காலத்தைக் கடந்து சிந்தித்தவர். அந்தச் சிந்தனையை இன்று இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. பெண் கல்வி கற்றுவிட்டாள் என்பதாலோ, தொழிலில் முன்னேறிவிட்டாள் என்பதாலோ அவளுடைய விடுதலை முழுமை பெற்றுவிட்டது என்று சொல்ல முடியாது. இணையத் தொல்லை, உடலை மையப்படுத்தும் பார்வை, தனிப்பட்ட வாழ்க்கையின் மீதான சமூகக் கண்காணிப்பு போன்ற புதிய சிக்கல்கள் அவளுடைய சுதந்திரத்திற்கு புதிய சவால்களாக மாறியிருக்கின்றன.

    எனவே பெண் விடுதலை என்பது முடிந்துபோன ஒரு போராட்டமல்ல. ஒவ்வொரு காலத்திலும் அது புதிய வடிவம் பெறுகிறது.

    பாரதியின் காலத்தில் பெண் கவிதையின் பொருளாக இருந்தாள். இன்று பெண்ணே கவிதையை எழுதுகிறாள். ஒரு காலத்தில் கவிஞன் அவளுக்கு பெயர் சூட்டினான். இன்று அவள் தன் பெயரையும் தன் அடையாளத்தையும் தானே உருவாக்குகிறாள். இந்த மாற்றம்தான் பாரதியின் கண்ணம்மாவை நவீன காலத்தில் மீண்டும் வாசிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

    கண்ணம்மா பாரதியின் கவிதையில் ஒரு பெயராக இருக்கலாம். ஆனால் இன்று அவள் ஒரு கேள்வியாகவும் இருக்கிறாள்.

    ஒரு பெண்ணை நாம் எப்படிப் பார்க்கிறோம்?அவளைப் பற்றி பேசுகிறோமா? அல்லது அவள் பேசுவதையும் கேட்கிறோமா?
    அவளுடைய அழகைக் காண்கிறோமா? அல்லது அவளுடைய அறிவையும் திறமையையும் கேட்கிறோமா?
    அவளை நம் கற்பனையின் பீடத்தில் வைக்கிறோமா? அல்லது அவள் தன் வாழ்க்கையின் பீடத்தில் தானே நிற்க இடமளிக்கிறோமா? இந்தக் கேள்விகளுக்குள் தான் பாரதியின் கண்ணம்மா இன்றும் உயிருடன் இருக்கிறாள். அவள் கவிஞனின் மனப் பீடத்தில் ஏறிக்கொண்ட கண்ணம்மாவாகத் தொடங்கியிருக்கலாம். ஆனால் காலம் அவளுக்குப் புதிய இடத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த இடம் இப்போது ஒரு கவிஞனின் மனம் மட்டும் அல்ல; அவளுடைய சொந்த வாழ்க்கை. இதுதான் பாரதியின் பெண் உருவங்களை நவீனமாக வாசிப்பதன் மிக முக்கியமான பொருள். கண்ணம்மாவுக்கு இனி பெயர் சூட்ட வேண்டியதில்லை. அவளுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை. அவள் தன் குரலில் பேசட்டும். அவள் தன் பெயரில் எழுதட்டும். அவள் தன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கட்டும். அவள் தன் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தானே உருவாக்கட்டும்.

    கவிதையில் பிறந்த கண்ணம்மா, காலத்தில் தன் குரலைக் கேட்கட்டும்!

    ஆசிரியர் பற்றிய  அறிமுகம்.

    சொற்களால் சமூகத்தைத் தொட்டுச் செல்லும் படைப்பாளி.

    தமிழ் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், கல்விப் பணியின் மீது அர்ப்பணிப்பும் கொண்டவர் முனைவர் நா. சியாமளா. 

    ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர், பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நூலாசிரியர் எனப் பல்வேறு முகங்களுடன் தமிழ் உலகில் தனித்த அடையாளம் பதித்திருக்கும் ஆளுமை.

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்ற இவர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் மகுடேசுவரன் கவிதைகள் குறித்த ஆய்வின் மூலம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

    இவரது ஆய்வேடு பல்கலைக்கழக வல்லுநர்களால் “மீயுயர்தகுதி” பெற்ற சிறப்பைப் பெற்றது.

    இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக கல்வித் துறையில் பணியாற்றி வரும் இவர், தற்போது கோயம்புத்தூரிலுள்ள குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

    வகுப்பறையில் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியராக மட்டுமல்லாமல், அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

    இலக்கிய உலகில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 

    வாசல்தோறும் வெற்றி, வெண்பா வனம், 

    சிறகு முளைத்த கவிதைகள், 

    சொற்கள் மீட்டிய மெல்லிசை 

    உள்ளிட்ட நூல்கள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

    கவிதை, ஆய்வு, சுயமுன்னேற்றம், மொழிபெயர்ப்பு, ஆன்மிகம் எனப் பல துறைகளில் இவரது எழுத்துப் பயணம் விரிகிறது. 

    இதழ்கள், ஆய்விதழ்கள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், இலக்கிய மேடைகள் என எங்கும் இவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    தமிழ் மொழியின் இனிமையையும், மரபுக் கவிதையின் செழுமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இவரது பெரும் கனவு. 

    கவிதை எழுதுதல், இலக்கிய ஆய்வு, ஆன்மிகச் சொற்பொழிவுகள், மேடைப் பேச்சு, மாணவர்களைப் படைப்புலகிற்கு வழிநடத்துதல் ஆகியவை இவரது முக்கிய ஆர்வங்களாகும்.

    “நம்பிக்கை நாயகி விருது”, 

    “மகாகவி பாரதி விருது”, “குறிஞ்சித் தமிழ் நல்லாசிரியர் விருது”, “பைந்தமிழ்ச் செல்வர் விருது” 

    உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரது இலக்கிய மற்றும் கல்விப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரங்களாகும்.

    சொற்களை வெறும் வரிகளாக அல்லாமல், மனித மனங்களைத் தொடும் மெல்லிசையாக மாற்றும் திறன் கொண்டவர் முனைவர் நா. சியாமளா. 

    வகுப்பறையிலும், கவியரங்கத்திலும், ஆய்வரங்கத்திலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் இவர், தமிழ் மொழியின் அழகையும், வாழ்வின் நம்பிக்கையையும் தலைமுறைகளுக்கு விதைத்து வரும் படைப்பாளி

    Share
  • குறுந்தொகையில் ஆற்றாமை புலப்படுத்தும் அகவுணர்வு நிலைப்பாடுகள்

    குறுந்தொகையில் ஆற்றாமை புலப்படுத்தும் அகவுணர்வு நிலைப்பாடுகள்


    உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உணர்வுகளால் பீடிக்கப்பட்டவை. மனதில் தோன்றும் எண்ணவோட்டங்கள் பல நேரங்களில் மற்றவருக்குப்  புலப்படுத்த முடியாததாகவோ அல்லது வெளியே கூறக்கூடாததாகவோ அமைந்து விடுதல் உண்டு. உணர்வுகளைக் கூடுமானவரை கட்டுப்படுத்தும் ஆற்றல் சிலருக்கு உண்டு. எனினும் தடை செய்ய முடியாது. காதல் சார்ந்த செயல்பாடுகளுள் மனதின் ஓட்டம் கரைபுரண்டு ஓடும் ஆற்றாமையாய் வெளிப்பட்டு விடுவதை இலக்கியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பலவும் பிரதிபலித்துள்ளன. ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அனைவரும் வாழ்வினில் ஆற்றாமையை அனுபவித்தல் கண் கூடு. அவ்வகையில் ஆற்றாமை புலப்படுத்தும் அகவுணர்வுகளை சங்க இலக்கிய நூலான குறுந்தொகையின் வழிநின்று ஆராய்வதாகக் கட்டுரை அமைகின்றது.

    கையில் ஊமன் கண்ணில் காத்தல்
    தலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான். தலைவியைச் சந்திக்க இயலாத சூழலில் பலவாறு புலம்புகிறான். கடமைகளிலிருந்து தலைவனின் கவனம் சிதறுகிறது. உறவு, நட்பெனப் பலரும் தலைவனின் நிலையைக் கண்டு கடிந்துரைத்தனர். தன்னுடைய ஆற்றாமை எப்படிப்பட்டது என்பதை உவமை காட்டி உணர்த்த முற்படுகிறான்.

    “இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
    நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
    ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
    கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.”
                                         – (குறுந். 58)

    தலைவியுடன் இருக்க வாய்ப்பில்லை. கடமையையையும் செய்ய முடியவில்லை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் தலைவனின் மனம் தடுமாறுகிறது. ஆற்றாமை கால்கோளிட்டது. ஆற்றாமைக்கான காரணிகளுள் பிரிவு முக்கியமான ஒன்றாகின்றது. கடமையைச் செய்வதற்கான செயல்பாடுகளை செய்யவொட்டாமல் செய்கிறது. பகலவனின் ஆற்றல் உச்சமடையும் வெயில்  நேரத்தில் வெம்மையான பாறையிடத்தில் இருக்கும் வெண்ணையைப் பாதுகாக்க, கைகளைக் கொண்டு பாதுகாக்கலாமென்றால் கைகளில்லை. ஊமையாய் இருப்பதால் யாரிடமாவது தெரிவித்து காக்கச் செய்யவும் வழிவகை இல்லை. உருகுவதைப் பார்த்துத் துயரப்பட கண்கள் மட்டும் உண்டு வெண்ணெய் உருகுவதுபோல் மாளாத காதல் தீ பற்றி உருக்குகிறது. அது பொறுத்துக்கொள்வதற்கு அரிதாக இருக்கின்றது. இதுவே ஆற்றாமையாய் புலப்படுகின்றது. ஒருவரின் துன்பம் அதனை அனுபவிப்பவரைத் தவிர மற்றவர்களால் உய்த்துணர முடியாது. சில நேரங்களில் கைகளிலிருந்தும் பேசுவதற்கான ஆற்றல் இருந்தும் செயல்பட முடியாத நிலையைப் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. இப்பாடல் தலைவனாகிய ஆண் மனநிலையில் வெள்ளிவீதியார் என்ற பெண்புலவரால் படைக்கப்பட்டது. பெண்ணாக இருந்து வெளிப்படுத்த முடியாத உணர்வைப் புலவர் ஆணைக் கருத்தாவாகக் கொண்டு உணர்த்தியுள்ளார் எனக் கொள்ளவும் இடமுண்டு.

    உயவுநோய் அறியாத ஊர்
    பிரிவு நிகழும் போது மகிழ்ச்சியைத் தரக்கூடியவையும் துன்பத்தைத் கொடுக்கும் என்பதைத் தலைவி ஒருத்தி தெரிவிக்கும் பாடலொன்றில் இடம் பெற்றுள்ளது. ஆற்றாமையின் வெளிப்பாடு உச்சத்தை அடைந்திருக்கிறது. இரவு நேரத்தூக்கமும் காற்றின் மகிழ்ச்சியும் மனிதனுக்கு மிகவும் பிடித்தமானவை. தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவிக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய எந்த நிகழ்வும் நடக்கவில்லை. மாறாகத் துன்பத்தை வலுப்படுத்தும் சூழல்கள் மிகுகின்றன. சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்கும் தலைவியானவள் ஆற்றாமை அலைக்கழிக்க வாய்விட்டுப் புலம்பி அரற்றுகிறாள்.

    “முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
    ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
    ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
    அலமரல் அசைவளி அலைப்பவென்
    உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.”
                                            – (குறுந். 28)

    இரவுப்பொழுதில் இதமாகக் காற்று வீசுகின்றது .ஊரில் உள்ளோர் ஆழ்ந்து துயில் கொண்டுள்ளனர். தலைவனின் மீது கொண்ட அன்புப்(காமம்) பெருக்கம்  தலைவியின் உறக்கத்தைப் பாழ்படுத்தியது. துயர் பொறுக்க முடியாதவள் அரற்றுகிறாள். எல்லோருக்கும் கிடைத்த ஒன்று தனக்கு மட்டும் கிடைக்கவில்லையே என்ற காழ்ப்பு தலைவியின் சினத்தீயைப் பரவச் செய்கிறது. எனக்கு மிகுதியான துயரம் தரும்  என்னுடைய நோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் இவ்வூர் மக்களை நினைத்து  நான் முட்டிக் கொள்வேனா? அவர்களை ஏதாவது ஒன்று செய்து  தாக்குவேனா? ஒரு போலிக் காரணத்தை முன்வைத்து, வாய்விட்டு ஆவென்றும் ஒல்லென்றும் கூச்சலிட்டு எல்லோரையும் கூப்பிடுவேனா?  என்ன செய்வது என்பதை அறியேன் என்ற கையற்ற நிலையைத் தெரிவிக்கிறாள். மனதால் முட்டுதல்,  மெய்யினால் தாக்குதல், வாயினால் அரற்றுதல் என்ற மூன்றையும் (மனம், மெய், வாக்கு) செய்ய எத்தனிக்கிறாள். இச்செயலால் ஊரார் அலர் தூற்றியோ வேறு ஏதாவது செய்தோ தன்னையும் தலைவனையும் சேர்த்து வைத்துவிடுவார்கள் என்ற உள்ளுதலின் வெளிப்பாடாக தலைவியின் இக்கூற்று ஒளவையாரால் காட்சிப் படுத்தப்பட்;டுள்ளது. தாங்கமுடியாமை, இயலாமை, மனத்துயரம் இவை மூன்றும் கலந்து ஆற்றாமை அமைந்துள்ளது.

    “இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
    எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
    பசி அட நிற்றல் பசலை பாய்தல்
    உண்டியின் குறைதல் உடம்பு நனி சுருங்கல்
    கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
    பொய்யாக் கோடல்…
                            –  (தொல். மெய்ப். நூ.எ.22)

    தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் தலைவியிடத்து நிகழ்வனவாகக் குறிப்பிடும் மெய்ப்பாடுகளுள் பல ஆற்றாமைப் புலப்பாடுகளாக விளங்குவது இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

    ஆற்றாமையில் பாகுபாடு
    தலைவியால் தன் காதல் ஏற்கப்படாத நிலையில் தலைவன் மடலேறுவான் என இலக்கியங்கள் பகர்கின்றன. தன்குறை தீரப் பெறாத தலைவன் பனங்கருக்கால் குதிரைபோல் ஒன்றைச் செய்வான். தன் உடல் முழுவதும் சாம்பலோ, திருநீறோ பூசிக்கொண்டு எலும்பு, எருக்கம்பூ உள்ளிட்டவற்றை மாலையாகக் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டு தனக்குப் பிடித்த தலைவியின் உருவத்தை பலரும் பார்க்கும்படியாக ஒரு துணியில் ஓவியமாகத் தீட்டி எடுத்துக் கொண்டு பனங்கருக்குக்குக் குதிரையை தன் உடலில் கட்டி இழுத்த வண்ணம் முச்சந்தி,நாற்சந்தி எனப் பல இடங்களுக்கும் செல்வான். பனங்கருக்கால் தலைவனின் உடல் கீறப்பட்டு, இரத்தம் வெளியாகி இறப்பினைக் கொடுக்கும் எல்லை வரை  செல்வான். இதுவே மடலேறுதல் எனப்படுகிறது. தலைவியை அடையமுடியாத ஆற்றாமையில் தலைவன் உயிர்விடத் துணியும் நிலை இதுவாகும். தலைவிக்கும் இதனால் பழி நேரும். தலைவி மடலேறுவதுபோல் சங்ககாலப்பாடல்கள் பதிவு செய்யவில்லை. பிற்கால பக்தி இலக்கியங்களுள் கடவுளைக் காதலனாகக் கொண்ட பெண் மடலேறுவதாகக் கூறும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பெண் மடலேறக் கூடாது என்பது சங்ககாலத்தில் சட்டம் போல் இருந்ததாக எண்ணமுடிகிறது. குறுந்தொகையில் மடலேறுதல் பற்றிய செய்திகள் உண்டு. தலைவன் மடலேறுவேன் எனக் கூறிப் பாடுவதாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தலைவன் மடலேறினான் என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.

    “மாவென மடலும் ஊர்ப பூவெனக்
    குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
    மறுகி னார்க்கவும் படுப
    பிறிது மாகுப காமங்காழ் கொளினே.”
                        (குறுந். 17)

    தலைவி தன் காதலை ஏற்காவிட்டால் மடலேறுவேன் எனத் தலைவியின் தோழியிடம் தலைவன் தெரிவிப்பதாக மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என வாதிட்டாலும் பெண் மேற்கொள்ளக் கூடாது என்ற சில சட்டங்களில் ஒன்றாக மடலேறுதல் இருப்பதனை,

    “கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்கது இல்”
                                – (குறள். 1137)

    “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற்
    பொற்புடை நெறிமை இன்மையான”
                                  – (தொல்.அகத். நூ.எ.28)

    திருக்குறளும் தொல்காப்பியமும் குறிப்பிட்டுள்ளன. ஆற்றாமையிலும் பாகுபாடு இருந்ததனை இதன்கண் அறிய முடிகிறது.

    மயிலின் முட்டை மந்தியின் குட்டி
    தலைவன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாள் தலைவி. தலைவனின் மீது மிகுதியான காதல் கொண்டு துடித்தாள். வருவேன் எனக் கூறிச் சென்றவன் வரவில்லை. துயரத்தில் ஆழ்ந்தாள் தோழி சமதானம் செய்ய முற்பட்டாள். முயற்சி பலனளிக்கவில்லை . ஆற்றாமை வெற்றி கொண்டது.

    “கான மஞ்ஞை யறையீன் முட்டை
    வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
    குன்ற நாடன் கேண்மை என்றும்
    நன்றுமன் வாழி தோழி உண்கண்
    நீரொ டொராங்குத் தணப்ப
    உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.”
                                                   –   (குறுந். 38)

    மந்தியாகிய குட்டிகள் மயிலின் முட்டையை ஓர் உயிராகக் கருதாமல் உருட்டி விளையாடுவதால் முட்டை உடைந்து அழியக்கூடும். அதுபோல், தலைவனுடைய பிரிவால் தலைவியின்  உயிராகிய காதல்  அழியலாம் என்று உள்ளுறை உவமமாகத் தலைவி குறிப்பிடுகின்றாள். மயிலின் முட்டையைக் குரங்குக் குட்டிகள் உருட்டி விளையாடுவதைப் போல் தலைவனின் பிரிவினால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதல் ஊராரால் அலர் தூற்றப்பட்டு சிரிப்புக்குக் காரணமாகிவிடும் நிலையைப் பாடல் எடுத்துரைக்கிறது. குரங்குக் குட்டி மயிலின் முட்டையைப் பாவம் எனக் கருதாதது போல் தலைவனும் தன்னைப் பற்றி நினையாது துயரப்படுத்துகிறார் என்பதைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். ஆற்றாமை துயர் மிக்கது என்பதைத் தலைவி உணர்த்திவிடுகின்றாள்.
    கொல்லன் உலைத் துருத்தி
    இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருளினைப் பெற தலைவனின் உள்ளம் விழைகிறது. தலைவியைப் பிரிந்து செல்லுதல் துயர் தரினும் பொருள் ஈட்டுதல் இன்றியமையாததது என்பதைப் புரிந்து தலைவன் பிரிந்து சென்றான். தலைவியால் பிரிவுத் துயரைத் தாள முடியவில்லை. பிரிவுத் துயரினும் மிகுதியாக  பொருள் தேடச் சென்ற இடத்தில் அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ  என்ற எண்ணமும் அவளைப் பதைபதைக்கச் செய்துவிடுகிறது. பிரிவுத் துயரால் தவிக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள். தலைவி தன் துயரத்தின் மிகுதியை வெளிப்படுத்துகிறாள்.

    தாஅ அம் சிறை நொப்பறை வாவல்
    பழுமரம் படரும் பையுள் மாலை
    எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
    தமியர் ஆக இனியர் கொல்லோ?
    ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலை வாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.
                      –   (குறுந். 172)

    வலிமையினையுடைய  அழகான சிறகினையும், பறக்கும் இயல்பையும் உடையன வெளவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும் வெளவால்களும் மாலையில் தனக்குரிய இருப்பிடத்தை அடைந்துவிடும். துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நாம் தனியாக இருக்கும்படியாயிற்று,  இங்கு எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, வரையறுக்க முடியாத துன்பத்தை அடைந்து என் நெஞ்சம் துடிக்கிறது என்கிறாள் தலைவி.

    ஓர் ஊரில் இருப்பவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்வதே கடினமான செயல். அவ்வாறிருக்க ஏழு ஊரில் உள்ளவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரே ஒரு உலையில் உள்ள துருத்தி இடைவிடாமல் வேலை செய்வதுபோல், என் நெஞ்சு இடைவிடாமல் தலைவனை நினைத்து வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள். கொல்லன் உலைக்களம் வெப்பத்தால் தகிப்பதைப் போலவும் ஏழு ஊரில் இருப்பவர்களுக்கு தனியொராளாக இருந்து உலைக்களத்தில் இருந்து பணியாற்றுவது மிகவும் கடினம் என்பதும் பெறப்பட்டுள்ளது. தனது ஆற்றாமையின் தீவிரத்தைக்  கொல்லன் உலைத் துருத்தியோடு உவமிக்கிறாள் தலைவி.

    நிறைவுரை

    வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் இரண்டு கண்களாகத் திகழ்பவை. இன்பத்தின் இனிமையைச் சுவைத்தவர்களை விடவும் துன்பத்தின் துவர்ப்பை சுவைத்தவர்களே அதிகம் என்று என்னும்படியாகப் பலரின் வாழ்வியல் அமைந்துள்ளது. எதையும் செயல்படுத்த முடியாத சூழலில் ஆற்றாமை அங்கு ஆசனம் போட்டு அமர்ந்து விடுகிறது. ஆண் பெண் பேதமின்றி அனைவரிடமும்  ஆற்றாமை நிலைத்திருக்கிறது. இருப்பினும் பெண்ணின் ஆற்றாமை மிகுதியாக இருக்கின்றது. அதன் வெளிப்பாடாக அரற்றலும் புலம்பலும் அழகையும் புலனாகிவிடுகிறது என்பதைக் குறுந்தொகைப் பாடல்கள் சுட்டியுள்ளன. தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்வதும் எதையும் ஏற்று அதன் வழியில் நடப்பதும் ஆற்றாமையின் பிடியிலிருந்து விலகி ஆற்றலுடன் செயல்பட வழிவகுக்கும்.

    துணை நின்ற நூல்கள்

    1. குறுந்தொகை – உ.வே. சாமிநாதையர் உரை
    2. தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை
    3. திருக்குறள் – மு.வ. உரை

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 ( பகுதி 4)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 ( பகுதி 4)

    அன்பினியோரே

    மடலின் நான்காவது பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    பகுதி – 4

    கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி – லிபரல் டெமகிரட்ஸின் தேடல் – பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை

    பிரிட்டனின் அரசியல் வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் ஒரு உண்மையை நன்கு அறிவார்கள்.

    அரசியல் கட்சிகள் தோற்கலாம். ஆனால், அரசியல் சிந்தனைகள் எளிதில் தோற்றுவிடுவதில்லை.

    கன்சர்வேடிவ் கட்சி அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

    மூன்று நூற்றாண்டுகளுக்கு அண்மையில் வரலாற்றைக் கொண்ட இந்தக் கட்சி, உலகப் போர்கள், பொருளாதார நெருக்கடிகள், பேரரசின் வீழ்ச்சி, தொழில்துறை மாற்றம், ஐரோப்பிய ஒன்றிய விவாதம் என எண்ணற்ற புயல்களைக் கடந்துள்ளது. பலமுறை தோல்வியடைந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய முகத்துடனும் புதிய கொள்கைகளுடனும் மீண்டும் எழுந்திருக்கிறது.

    அதனால்தான், இன்று அதன் அரசியல் பலம் குறைந்திருந்தாலும், “கன்சர்வேடிவ் கட்சி முடிந்துவிட்டது” என்று கூறுவது அரசியல் வரலாற்றை அறியாதவர்களின் அவசர முடிவாகவே நான் கருதுகிறேன்.

    இன்றைய கன்சர்வேடிவ் கட்சியின் நெருக்கடி

    எனது பார்வையில், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப்பெரிய எதிரி லேபர் அல்ல.

    அவர்களின் மிகப்பெரிய எதிரி அவர்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள அடையாளக் குழப்பம்.

    ஒருபுறம், மிதவாத மரபைத் தொடர வேண்டும் என்ற அணியினர்.

    மறுபுறம், குடியேற்றம், தேசிய இறையாண்மை, குறைந்த அரசு தலையீடு போன்ற விஷயங்களில் இன்னும் உறுதியான வலதுசாரி நிலைப்பாட்டை விரும்பும் அணியினர்.

    இந்த இரு சிந்தனைகளுக்கு இடையில் சமநிலை காண முடியாத நிலைதான், கட்சியின் வாக்காளர் அடித்தளத்தைச் சிதைத்துள்ளது.

    அதன் பலனை ரீபோர்ம் கட்சி அறுவடை செய்து வருகிறது.

    ரீபோர்ம் – கன்சர்வேடிவ் உறவு

    ஒரு அரசியல் ஆய்வாளராக நான் கவனிப்பது என்னவென்றால், ரீபோர்ம் கட்சி இன்று லேபரின் வாக்குகளை அதிகமாகப் பறிப்பதில்லை.

    அவர்கள் பெரும்பாலும் கன்சர்வேடிவ் கட்சியின் பாரம்பரிய வாக்காளர்களையே ஈர்க்கிறார்கள்.

    இதனால் வலதுசாரி வாக்குகள் இரண்டாகப் பிரிகின்றன.

    பிரிட்டனின் First Past the Post தேர்தல் முறையில் இது மிகப்பெரிய அரசியல் விளைவுகளை உருவாக்குகிறது.

    ஒரு தொகுதியில் லேபர் வேட்பாளர் 38% வாக்குகள் பெற்றாலும், கன்சர்வேடிவ் 32% மற்றும் ரீபோர்ம் 20% பெற்றால், வெற்றி லேபருக்கே.

    அதாவது, வாக்குகள் பிரிவதே சில நேரங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றுகிறது.

    இதுவே இன்றைய பிரிட்டிஷ் அரசியலின் முக்கியமான கணிதம்.

    லிபரல் டெமகிரட்ஸ் – அமைதியான அரசியல் சக்தி

    பிரிட்டிஷ் அரசியலில் மிகவும் சுவாரசியமான கட்சி லிபரல் டெமகிரட்ஸ்.

    அவர்கள் பெரும்பாலும் தீவிர அரசியலை விரும்புவதில்லை.

    சமரச அரசியலை விரும்புகிறார்கள்.

    ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவு…

    குடிமக்களின் உரிமைகள்…

    உள்ளாட்சி அதிகாரப் பகிர்வு…

    கல்வி மற்றும் சமூக நலன்…

    இவற்றில் அவர்கள் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    ஆனால் பிரச்சினை என்னவென்றால், மக்கள் அரசியலில் கோபமாக இருக்கும் காலங்களில், மிதமான குரல்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.

    உணர்ச்சிவசப்பட்ட அரசியல், சமநிலையான அரசியலை மறைத்துவிடுகிறது.

    இதுவே லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் நீண்டகால சவாலாக உள்ளது.

    51 ஆண்டுகளில் நான் கண்ட மாற்றம்

    நான் முதன்முதலில் பிரிட்டனில் தேர்தலைப் பார்த்தபோது, குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே கட்சிக்கே வாக்களிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    “எங்கள் குடும்பம் எப்போதும் லேபருக்குத்தான்.”

    “நாங்கள் தலைமுறையாக கன்சர்வேடிவ்.”

    இப்படிப்பட்ட உரையாடல்கள் சாதாரணமாகக் கேட்கப்பட்டன.

    இன்று நிலைமை மாறிவிட்டது.

    இளைஞர்கள் கட்சியை விட கொள்கையைப் பார்க்கிறார்கள்.

    முதியவர்கள் நிலைத்தன்மையைத் தேடுகிறார்கள்.

    நடுத்தர வர்க்கம் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்துகிறது.

    குடியேற்றக் குடும்பங்கள் வாய்ப்புகளையும் சமூக ஒற்றுமையையும் மதிக்கின்றன.

    இந்தப் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு ஒரே பதிலை எந்தக் கட்சியும் வழங்க முடியாத நிலையே இன்றைய அரசியலின் உண்மை.

    எனது அரசியல் மதிப்பீடு

    ஒரு அனுபவமிக்க அரசியல் பார்வையாளராக நான் சொல்ல விரும்புவது இதுதான்.

    லேபர் கட்சி ஆட்சியில் உள்ளது; ஆனால் அதன் வெற்றியை மக்கள் தினமும் சோதிப்பார்கள்.

    ரீபோர்ம் கட்சி வேகமாக வளர்கிறது; ஆனால் எதிர்ப்புக் குரலிலிருந்து ஆட்சிக்குரிய நம்பிக்கையாக மாற வேண்டிய சவால் இன்னும் உள்ளது.

    கன்சர்வேடிவ் கட்சி தோற்றுள்ளது; ஆனால் வரலாறு சொல்லுவது, இந்தக் கட்சியை அரசியலில் இருந்து யாரும் எளிதாக நீக்க முடியாது.

    லிபரல் டெமகிரட்ஸ் அமைதியாக வளர்கிறது; ஆனால் தேசிய அளவிலான மாற்று ஆட்சிக் கட்சியாக மாற இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது.

    முடிவுரை

    பிரிட்டனின் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அழகு என்னவென்றால், இங்கு அரசியல் பகை நிரந்தரமல்ல.

    எதிர்க்கட்சி நாளை ஆட்சியாகலாம்.

    ஆளும் கட்சி நாளை எதிர்க்கட்சியாகலாம்.

    ஆனால் ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

    அந்த நம்பிக்கையே இந்த நாட்டின் உண்மையான பலம்.

    (தொடரும் – இறுதிப் பகுதி: “பிரிட்டனின் நாளைய அரசியல் – ஒரு புலம்பெயர் தமிழனின் நம்பிக்கையும் எச்சரிக்கையும்.” இதில் முழுக் கட்டுரையின் சாரம், எதிர்கால அரசியல் கணிப்புகள் மற்றும் நிறைவுரை இடம்பெறும்.)

    Share
  • போனேன் Phu Quok

    போனேன் Phu Quok

    நிர்மலா ராகவன்

    ‘செழிப்பான நாடு’  என்ற அர்த்தம்கொண்டது Phu Quok. இயற்கை, கடல் என்ற ஆர்வம்கொண்ட உல்லாசப்பயணிகளின் சொர்க்கம் இது.

    கம்போடியா, வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் ப்ரெஞ்சு நாட்டின் அதிகாரத்தில் இருந்தனவாம். முதலில் கம்போடியா நாட்டுக்குச் சொந்தமாக இருந்த இத்தீவு ஒரு போரின் விளைவாக வியட்நாமின் கைக்கு வந்தது.

    கோலாலம்பூரிலிருந்து ஒன்றரை மணி நேர விமானப்பயணம் என்பதால், பலருக்கும் தெரிந்திராத இத்தீவிற்கு போய்த்தான் பார்ப்போமே என்று நானும் என் மகள் சித்ராவும் திட்டம் போட்டோம்.

    நாங்கள் தங்கிய Ocean Bay Resort என்ற இடத்தை இயற்கையைக் காக்கவேண்டும் என்ற முனைப்புடன் அமைத்திருக்கிறார்கள். தெருவுக்கு இருபுறங்கிலும் காட்டையொத்த அடர்ந்த மரங்கள். மரங்களாலான இருப்பிடங்கள். குளியலறையில் நீர்யானை குளிக்க ஏற்ற, நீளமும் அகலமுமான குளியல் தொட்டி (bath tub). முழுவதும் கருங்கல்லால் ஆனது. எல்லாச் சுவர்களும் மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்தன.

    இங்கு வந்திருந்தவர்கள் சீனா, ரஷ்ஷியா மற்றும் 1,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வியட்நாமிலிருந்து வந்தவர்கள். ஆங்கிலத்தைத்தவிர, அம்மொழிகளில்தாம் எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் காணப்பட்டன.

    நாங்கள் கால்வைத்த நேரம் மழை கொட்டொ கொட்டென்று கொட்டியது. `நல்லவர் ஒருவர் உளரேல்,’ என்று நான் பெருமைப்பட முடியவில்லை. இது மழைக்காலம். இடியோ, மின்னலோ இல்லாது, காற்று பலக்க மழை. பேய்க்காற்றில் மரங்களின் கிளைகள் அசைய, அருகிலிருந்த கடல் அலைகள் ஆர்ப்பரிக்க, மிக இனிய அனுபவம். வராந்தாவைத்  தாண்டி, படுக்கையறைக்குள்ளும் சாரல் அடித்து, எங்களைச் சிரிக்கவைத்தது.

    `மழை சற்று விட்டு விட்டதே!’ என்று நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தவுடன் மழை பலத்துவிடும். முதல்நாள் என் புடவை முழுக்க தொப்பலாக நனைய, மறுநாளிலிருந்து உடையை ஷார்ட்ஸ், முருநீளக் கால்சட்டை என்று மாற்றினேன். எங்கள் அறையிலிருந்து வெளியே பார்த்தால், கூப்பிடு தூரத்தில் கடல். அலையோசையை ரசித்தபடி முதல் நாளைக் கழித்தேன். அவ்வளவு நனைந்தும், உடலுக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்பது விசேஷம். அரிதான, மிகத் தூய்மையான காற்றின் மகிமை.

    மறுநாளிலிருந்து, டுக் டுக் (tuk tuk) என்ற வாகனத்தை வரவழைத்தோம். ஆறுபேர் உட்காரலாம். அதில் ஏறமுடியாது திணற, அதை ஓட்டிய இளம் வாலிபன் என்னைத் துக்கி ஏற்றிவிட்டான்.

    இங்கு என்ன சிறப்பு என்றால், வாடகைக்காரில் எங்காவது போகும்போதும், என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். `என்னால் நடக்க முடியும்,’ என்று கையை உதறினாலும் விடமாட்டார்கள்.

    சாப்பாட்டுக்கூடத்தில் வேலை பார்த்த இளைஞன், “உங்களுக்கென்று, முட்டை போடாமல் pan cake பண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன்!’ என்று, தன் வேலையை விட்டுவிட்டு, என் மேசையில் கொண்டுவைத்தான். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, அதன்மேல் வெண்ணை, பலவித ஜாம், தேன் என்ற இனிப்பு வகை அது.

    தென்கிழக்கு ஆசியாவின் பிரத்தியேகமான குணம் — முதியவர்களுக்கு உதவி செய்வது பெரும்பாக்கியம் என்பதுபோல் புன்னகையுடன் செய்வது.

    பார்க்கவேண்டிய இடங்கள் இரண்டு: Pearl Farm (முத்துப்பண்ணை) மற்றும் பட்டுப்பண்ணை.

    முத்துப்பண்ணை

    ஒரு மீனவர் முத்துக்குளிக்க இப்பகுதிக்கு வந்தபோது, பல நூற்றாண்டுகளுக்குமுன் கடலில் மூழ்கிவிட்ட கப்பலைக் கண்டார். அதில் காணப்பட்ட சாமான்களை எடுத்துவந்தார். பன்முறை இப்படியே செய்து, அவர் சேர்த்துவைத்தவை இங்கு காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் கிடைத்த பீங்கான் சாமான்களோடு, பெரிய பெரிய முத்துச்சிப்பிகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான கோப்பைகள் உடையாது இருந்தது ஆச்சரியம். கொலுவைப்போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

    கடலிலிருந்து எடுக்கப்படும் முத்து விலை உயர்ந்தது. ஆற்றிலிருந்து மனிதனால் உற்பத்தி செய்யப்படுவது சற்றே மலிவு. பளபளப்பு குறைவு. இரு முத்துக்களை ஒன்றோடொன்று உரசினால் வெள்ளை மாவுபோல் கையில் ஒட்டுகிறது. பிறப்பிடம் ஆறோ, கடலோ, அவைதாம் நல்ல முத்துக்கள்.  எத்தனை காலம் ஆற்றில் விட்டுவைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிறம், அளவு ஆகியவை மாறும் என்றெல்லாம் ஒருவர் விளக்கினார் – முத்துச்சிப்பிகளின் உள்ளே கீறி.

    பட்டுப்பண்ணை

    பட்டுப்பூச்சி மற்றும் மூங்கிலால் செய்யப்படும் பட்டு வகைகளை இங்கு பார்க்கலாம். மிக அழகான, மெலிதான பட்டின் விலை அதிகம் என்று, வழவழப்பாக இருக்கும் மூங்கில் பட்டாலான ஆடைகள், காலுறை, மேசையிலும், தரையிலும் படிந்த கறைகளை நன்றாகத் துடைக்க துண்டுகள் ஆகியவற்றை மகிழ்வுடன் வாங்கினோம்.

    `பார்க்க வேறென்ன இருக்கிறது?’ என்று கேட்பவர்களுக்கு: இது ஒரு சிற்றூர். பேரங்காடிகள் கிடையாது. பலரும் ஸ்கூட்டரில்தான் போகிறார்கள். ஆனால், ஏழ்மையான தோற்றமில்லாது, ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

    `நாகரிகம்’ என்ற பெயரில் கரடுமுரடாக நாம் செய்துவிட்ட வாழ்க்கையில் இம்மாதிரியான இயற்கைச்சூழலும், மனிதத்தன்மையுடன் வலம் வரும் மனிதர்களும் அருமருந்து.

    Share
  • கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    சக்தி சக்திதாசன்

    “கலைமகள் கைப்பொருளே”

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் என்ற தொடரில் இன்று நாம் ஆராயப் போகும் பாடல், “கலைமகள் கைப்பொருளே”.

    வசந்த மாளிகை எனும் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் , வாணிஸ்ரீ சம்பந்தப்பட்ட காட்சி.

    திரைப்படத்தில் இது ஒரு எளிய காட்சியாகத் தோன்றுகிறது.

    அன்பிற்காக ஏங்கும் ஒரு இளைஞன். செல்வம் இருந்தும் மனநிம்மதி இல்லாத வாழ்க்கை.

    தவறான பழக்கங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவன்.

    அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் வரும் ஒரு இளம் பெண்.

    கவனிப்பாரற்று மூலையில் கிடந்த வீணையை எடுத்துத் தூசி தட்டி இசைக்கிறாள்.

    கதைக்கு இது போதும்.

    ஆனால் கவியரசருக்கு அது போதாது.

    அவரது சொற்கள் கதையைத் தாண்டி மனித வாழ்க்கைக்குள் நுழைகின்றன.

    அதையும் தாண்டி ஆன்மாவின் வாசலைத் தட்டுகின்றன.

    வீணை என்பது வெறும் இசைக்கருவி அல்ல.

    அது மனித மனம்.

    அதன் நரம்புகள் மனிதனின் எண்ணங்கள்.

    அதை மீட்டும் விரல்கள் இறையருள் அல்லது ஞானகுருவின் வழிகாட்டுதல்.

    இவ்வாறு பார்க்கத் தொடங்கும்போது இந்தப் பாடல் முழுவதும் ஒரு ஆன்மீக உபநிடதமாக நமக்குள் விரிகிறது.

    **”கலைமகள் கைப்பொருளே
    உன்னை
    கவனிக்க ஆளில்லையோ”**

    இங்கு வீணையைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி, உண்மையில் மனிதனைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி.

    ஒவ்வொரு மனிதனும் கலைமகளின் படைப்பே.

    ஒவ்வொரு உயிரும் இறைவனின் அற்புதமான வடிவமைப்பு.

    அளவற்ற திறமைகள், கருணை, அன்பு, அறிவு, ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷம்.

    ஆனால் அந்தப் பொக்கிஷத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்?

    பெரும்பாலான மனிதர்கள் வெளி உலகத்தை வெல்வதற்காக வாழ்கிறார்கள்.

    ஆனால் தங்களுடைய உள்ளத்தை அறிந்து கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை.

    வீணை தூசி படிவது போல மனித மனமும் ஆசை, அகந்தை, பொறாமை, பயம், கோபம் ஆகிய தூசிகளால் மூடப்படுகிறது.

    அந்தத் தூசியை துடைக்காமல் இசை வராது.

    மனதைத் தூய்மைப்படுத்தாமல் ஆன்மீகம் மலராது.

    **”விலையில்லா மாளிகையில்
    உன்னை
    மீட்டவும் விரலில்லையோ”**
    இந்த “விலையில்லா மாளிகை” என்பது மனித உடல்.

    உலகிலுள்ள எந்த அரண்மனையையும் விட விலைமதிப்பற்றது.

    ஏனெனில் இதில் உயிர் இருக்கிறது.

    உணர்வு இருக்கிறது.

    சிந்தனை இருக்கிறது.

    ஆன்மா இருக்கிறது.

    இவ்வளவு அற்புதமான உடலுக்குள் இருக்கும் மனம் இசைக்கப்படாமல் கிடக்கிறது.

    வீணை தனியாக இசைக்க முடியாது.

    அதை மீட்டும் விரல்கள் வேண்டும்.
    அதேபோல மனித வாழ்க்கைக்கும் விழிப்புணர்வு வேண்டும்.

    அது தியானமாக இருக்கலாம்.
    ஞானமாக இருக்கலாம்.

    குருவின் உபதேசமாக இருக்கலாம்.

    இறையருளாக இருக்கலாம்.

    **”உன்னிடம் ஆயிரம் ராகங்களே
    என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே”**

    இந்த வரிகளில் கவியரசர் மனிதனின் எல்லையற்ற ஆற்றலைச் சொல்கிறார்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணற்ற திறமைகள் உறங்கிக் கிடக்கின்றன.

    அதேபோல ஆன்மீகப் பயணத்திற்குத் தேவையான எல்லா விதைகளும் அவனுக்குள்ளேயே உள்ளன.

    அன்பு…
    கருணை…
    மன்னிப்பு…
    அமைதி…
    தியாகம்…
    பேரானந்தம்…

    இவை வெளியிலிருந்து வருவதில்லை.

    அவை அனைத்தும் உள்ளேயே இருக்கின்றன.

    ஆனால் அவை விழித்தெழ வேண்டும்.

    ஒரு விதைக்குள் முழு மரம் இருப்பது போல, ஒரு மனிதனுக்குள் முழுமையான ஞானியின் சாத்தியமும் மறைந்தே இருக்கிறது.

    அதனால்தான் கவியரசர் “ஆயிரம் ராகங்கள்” என்று கூறுகிறார்.
    அதாவது எண்ணற்ற பரிமாணங்கள்.

    எண்ணற்ற உயர்வுகள்.

    எண்ணற்ற சாத்தியங்கள்.

    **”இசையறிந்தோர்கள் மீட்டுங்களே
    இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களே”**

    இது பாடலின் மிக ஆழமான ஆன்மீக வரிகளில் ஒன்று.

    இசையறிந்தோர் என்றால் வீணை வாசிப்பவர்கள் மட்டுமல்ல.

    வாழ்க்கையின் இசையை அறிந்தவர்கள்.

    உள்ளத்தின் மொழியை அறிந்தவர்கள்.

    ஞானிகள்.
    சித்தர்கள்.
    மகான்கள்.
    உண்மையான குருக்கள்.

    நமக்குள் இருக்கும் இறையொளியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

    அவர்களால் நம்மை விழித்தெழச் செய்ய முடியும்.

    அப்படி யாரும் இல்லையெனில்,
    “எனக்காவது வழி காட்டுங்கள்” என்று பணிவுடன் வேண்டுகிறது இந்த வரி.

    ஆன்மீகத்தின் முதல் படி பணிவே.

    “எனக்கெல்லாம் தெரியும்” என்று நினைப்பவன் கற்றுக்கொள்ள மாட்டான்.

    “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக்கொள்பவனே ஞானத்தை அடைகிறான்.

    “நான் யார் உன்னை மீட்ட வரும்”
    இது சாதாரண வசனம் அல்ல.

    இது மனிதனின் நித்தியக் கேள்வி.
    “நான் யார்?”

    இந்தக் கேள்வியே அனைத்து ஆன்மீகப் பயணங்களின் தொடக்கம்.

    உடலா நான்?
    மனமா நான்?
    எண்ணமா நான்?
    பெயரா நான்?
    புகழா நான்?
    இல்லை.

    இவை அனைத்தையும் கடந்து நிற்கும் சாட்சியே நான்.

    இந்த உணர்வை நோக்கிச் செல்லும் அழைப்பாகவே இந்த வரி ஒலிக்கிறது.

    **”ஏனோ துடிக்கின்றேன்
    அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்”**

    மனிதனின் அமைதியின்மைக்கு இதைவிட அழகான விளக்கம் இருக்க முடியுமா?

    ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    பணம்.
    புகழ்.
    பதவி.
    உறவுகள்.
    வெற்றிகள்.

    இவற்றையெல்லாம் அடைந்த பிறகும் ஏன் ஒரு வெறுமை?

    ஏனெனில் ஆன்மா இறைவனைத் தேடுகிறது.

    ஆனால் மனம் பொருள்களைத் தேடுகிறது.

    இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டம்தான் மனிதனின் தவிப்பு.

    அந்தத் தவிப்பின் காரணம்.

    தெரியாததால் அவன் வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிகிறான்.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே”
    இது ஆன்மீகத்தின் மிகப் பெரிய உண்மை.

    சொர்க்கம் ஒரு இடமல்ல.

    நரகம் ஒரு இடமல்ல.

    அவை மனநிலைகள்.

    அன்பு நிறைந்த மனம் சொர்க்கம்.

    வெறுப்பு நிறைந்த மனம் நரகம்.

    மன்னிக்கும் மனம் சொர்க்கம்.

    பகை கொள்ளும் மனம் நரகம்.

    தியானம் செய்யும் மனம் சொர்க்கம்.

    அமைதியற்ற மனம் நரகம்.

    வெளியில் சொர்க்கத்தைத் தேடுபவன் ஏமாறுகிறான்.

    உள்ளே சொர்க்கத்தை உருவாக்குபவன் ஞானியாகிறான்.

    “நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே”

    மனம் எப்போதும் வெளியில் ஓடுகிறது.

    ஆனால் ஆன்மாவின் குரல் எப்போதும் உள்ளிருந்து அழைக்கிறது.

    அந்தக் குரலைக் கேட்பதே தியானம்.

    அந்தக் குரலைப் பின்பற்றுவதே ஆன்மீகம்.

    அந்தக் குரலோடு ஒன்றுபடுவதே முக்தி.

    “சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே”

    மனித சமுதாயம் சட்டங்களால் நிலைப்பதில்லை.

    சத்தியத்தாலும் தர்மத்தாலுமே நிலைக்கிறது.

    சத்தியம் இல்லாத அறிவு அழிவைத் தரும்.

    தர்மம் இல்லாத அதிகாரம் கொடுமையை உருவாக்கும்.

    ஆகவே மனிதன் முதலில் தன்னுள் சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும்.

    பிறகு தர்மத்தை வாழ வேண்டும்.

    அப்போதுதான் உலகமும் அமைதியடையும்.

    “இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே”

    ஆன்மீகத்தில் இறைவன் பல வடிவங்களில் பேசுகிறார்.

    சில நேரங்களில் குருவாக.

    சில நேரங்களில் நண்பனாக.

    சில நேரங்களில் வாழ்க்கை அனுபவமாக.

    ஆனால் மிக உயர்ந்த வடிவம் தாய்மை.

    தாய் கண்டிப்பாள்.

    ஆனால் அன்பால்.
    தாய் திருத்துவாள்.

    ஆனால் கருணையால்.
    அதேபோல் இறையருளும் மனிதனை வழிநடத்துகிறது.

    இந்தப் பாடல் முழுவதும் அந்தத் தாய்மையின் அழைப்பாகவே ஒலிக்கிறது.

    கவியரசர் கண்ணதாசனின் பெருமை என்னவென்றால், அவர் எழுதிய பாடல்களை ஒரு காதல் பாடலாகவும் ரசிக்கலாம்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் சிந்திக்கலாம்.

    ஒரு ஆன்மீக உபதேசமாகவும் அனுபவிக்கலாம்.

    இந்தப் பாடலில் வரும் வீணை, ஒவ்வொரு மனிதனின் இதயம்.
    அதன் நரம்புகள் நமது எண்ணங்கள்.

    அதன் இசை நமது வாழ்க்கை.
    அதை மீட்டும் விரல்கள் ஞானமும் இறையருளும்.

    அந்த இசை ஒலிக்க வேண்டுமெனில் முதலில் நம்மீது படிந்துள்ள அறியாமை என்னும் தூசியை அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் நமக்குள்ளே உறங்கிக் கிடக்கும் ஆயிரம் ராகங்கள் விழித்தெழும்.

    ஆயிரம் கீதங்கள் ஒலிக்கும்.

    அப்போது மனித வாழ்க்கை வெறும் வாழ்வாக இருக்காது.

    அது இறைவன் இசைக்கும் ஒரு தெய்வீக வீணையாக மாறிவிடும்.

    “உன்னிடம் ஆயிரம் ராகங்களே; என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே” என்ற கவியரசரின் வரிகள்,

    ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் உறங்கிக் கிடக்கும் அளவற்ற ஆன்மீகச் செல்வத்தை நினைவூட்டும் நித்திய மந்திரமாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    Share
  • அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அண்ணாகண்ணன்

    ஏவுகணை, விண்வெளி, பாதுகாப்புத் துறையில் பல்வேறு திட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்தவர், அப்துல் கலாம். இவை மட்டுமின்றி, புத்தாக்கக் கருவிகள் இரண்டை அவர் உருவாக்கினார்.

    இலகுரகச் செயற்கைக் கால்கள் (lightweight floor / leg calipers and artificial prosthetics)

    டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தம் அறிவியல் குழுவினருடன் இணைந்து, ஏவுகணைகள் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகளுக்காக முதலில் பயன்படுத்தப்பட்ட மேம்பட்ட கார்பன்-கலவைப் பொருட்களைக் கொண்டு,புரட்சிகரமான இலகுரக தரை/கால் அளவிகளையும் செயற்கை உறுப்புகளையும் உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் புதுமை எடை குறைப்பு: இந்த விண்வெளிக் காலத்து கலவைப் பொருளானது, பாரம்பரிய கால் அளவிகளின் எடையை 4 கிலோவிலிருந்து சுமார் 300 முதல் 400 கிராமாகக் குறைத்துள்ளது (இதனால் அவை 10 முதல் 15 மடங்கு வரை எடை குறைந்தவையாக மாறியுள்ளன).

    மூலப்பொருட்களின் தோற்றம்:அக்னி ஏவுகணையின் மூக்குக் கூம்பிற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வெப்ப-எதிர்ப்பு கலவைப் பொருட்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

    கட்டுப்படியாகும் விலை: இது, சுமார் ₹500 முதல் ₹850 வரை செலவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ₹3,500 முதல் ₹4,000 வரை விலை கொண்ட பழைய, கனமான உலோகம் மற்றும் தோல் மாடல்களை விட கணிசமாக மலிவானது.

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent)

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent) என்பது இந்தியாவின் முதல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மிகக் குறைந்த விலையுள்ள இதய கரோனரி ஸ்டென்ட் ஆகும். 1994ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர் சோம ராஜு ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்:

    ஏவுகணைத் தொழில்நுட்பம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL), ஏவுகணைகளுக்காகப் பயன்படுத்திய உயர்தர மருத்துவக் தரத்திலான எஃகு (High-grade Steel) பொருளைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டது.

    விலைக் குறைப்பு: அந்தக் காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டென்ட்டுகள் ₹75,000 முதல் ₹1 லட்சம் வரை விற்கப்பட்ட நிலையில், இந்த சுதேசி ஸ்டென்ட் வெறும் ₹10,000 விலையில் ஏழை மக்களுக்குக் கிடைத்தது. இது சந்தை விலையை 50%க்கு மேல் குறைக்க உதவியது.

    உயிர் காத்த திருப்தி: “மக்களைக் கொல்லும் ஏவுகணைகளை உருவாக்கிய நான், வாழ்க்கையின் இறுதியில் மனித உயிர்களைக் காக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கலாம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    கலாமின் விஞ்ஞானப் பார்வையும் புத்தாக்க முனைப்பும் தலைமுறை தோறும் விரிவடைய வேண்டும். அதுவே அவரது நினைவைப் போற்றச் சிறந்த வழி.

    Share
  • காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்

    காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    முன்னுரை

    இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    அகிம்சையின் அவதாரம் – பெண்

    அகிம்சை என்றால் எல்லையற்ற அன்பு. அதற்கு எவ்வளவு துன்பம்வரினும் ஏற்கும் ஆற்றல் உண்டு. பெண் தனது தாயன்பை உயிரினங்கள் அனைத்திலும் வெளிப்படுத்துகிறாள். போரில் மூழ்கி அமைதிக்காகத் தவித்துக் கொண்டிருக்கும் உலகிற்கு அவ்வமுதைப் புகட்ட வேண்டியவர்கள் பெண்களே ஆவர். அகிம்சையின் அவதாரம் பெண் என்கிறார், காந்தியடிகள்.

    பெண் முன்னேற்றத்திற்கான அடிக்கல்

    பெண்முன்னேற்றம் குறித்து அண்ணல் காந்தியடிகள், முதலில் சீதை, தமயந்தி, திரௌபதி போன்ற தூய உறுதிவாய்ந்த தீரமாதரைத் தோற்றுவித்தாக வேண்டும். நாம் அவர்களை உண்டாக்கிவிட்டால், இன்றைய சூழலில் பெண்கள் சொல்லுபவையும் செய்பவையும் சாஸ்திரங்களைப் போலவே மதிக்கப்பெறும் என்கிறார்.

    தியாகத்தின் உறைவிடம்

    பெண்ணினத்தை பலவீனமானது என்றல்ல, ஆணை விட சிறந்ததே என்று கருதுகிறார் அண்ணல் காந்தியடிகள். ஏனென்றால் இன்றும் பெண்ணினமே தியாகத்திற்கும், வாய்திறவாது கஷ்டங்களைச் சகிப்பதற்கும், பணிவுக்கும், பக்திக்கும், ஞானத்திற்கும் உறைவிடமாக இருந்து வருகிறது.

    பெண்ணுரிமை

    வீட்டிலேயே பெண் அடிமையாக வாழ்வதனைக் காந்தியடிகள், நம் அநாகரிகத்தின் சின்னமென்று கருதினார். இன்று அதிகப்பெண்கள் அரசியலில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலோர் சுயமாகச் சிந்திப்பதில்லை. தம் பெற்றோர் அல்லது கணவர் ஏவலைச் செய்வதோடு திருப்தியாயிருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தியதன் விளைவாக கடுந்தண்டனையை ஆண்கள் அனுபவித்தேயாக வேண்டும். பெண் ஆணின் வலைக்குத் தப்பிஇ தன் தகுதியையும் பெருமையையும் உணர்ந்து அவர்கள் இயற்றியுள்ள சட்டங்கள்இ சம்பிரதாயங்கள் ஆகியவற்றை மீறிக் கிளம்பும்போது அது அகிம்சை முறையில் இருந்தால் தக்கபயன் அளிக்கத் தவறாது என்பது அண்ணல் காந்தியடிகளின் நம்பிக்கையாகும். ‘நான் பெண்ணாகப் பிறந்திருந்தால், பெண்களெல்லாம் தம் கைப்பாவைகள் என்று ஆண்களிடையே நிலவும் கட்டுக்கதையை எதிர்த்துப் புரட்சி செய்வேன்’ என்று 1927-ஆம் ஆண்டு யங்இந்தியா நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.

    பெண்களுக்கான உரிமையில் அண்ணல் காந்தியடிகள் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு இல்லாத சட்டரீதியான சிரமங்கள் எதுவும் பெண்களுக்கும் இருக்கக்கூடாது என்பது காந்தியடிகளின் கருத்தாகும். பெண் பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்கிறார்.

    ஆணும் பெண்ணும் சமம்

    ஆண்களும் பெண்களும் ஒரே கல்வி நிலையங்களில் பயிலும் கூட்டுக்கல்வி முறையை காந்தியடிகள் வலியுறுத்தினார். இந்தச் சோதனைமுயற்சியினை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது காந்தியடிகளின் விருப்பமாகும். பெண்களுக்குத் தக்க கல்வியளிக்க வேண்டுமென்று காந்தியடிகள் விரும்பினார். பெண், ஆடவனது சமஅறிவுள்ள சகி. அவன் ஈடுபடும் எல்லா காரியங்களிலும் கலந்து கொள்ள உரிமையுள்ளவள். ஆணைப்போலவே சுதந்திரமாக வாழ வேண்டியவள். ஆடவனுக்குத் தன்துறையிலுள்ள தலைமையும் உரிமையும் பெண்களுக்கும் தன்துறையில் இருத்தல் வேண்டும்.

    ஆணும் பெண்ணும் சமமென்றால் அவர்கள் செய்யும் வேலைகளும் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதல்ல. ஒரு பெண் வேட்டையாடுவதையோ ஈட்டியை எடுத்து வீசுவதையோ சட்டம் தடுக்காதிருக்கலாம். ஆனால், ஆண்களுக்கே உரிய இம்மாதிரியான காரியங்கள் செய்ய இயல்பாகவே கூசும் சுபாவம் கொண்டவர்கள். இயற்கை இருபாலரையும் ஒன்றையொன்று நிரப்பும் வகையில் அமைத்திருக்கிறது. உருவங்களைப் போலவே அவர்கள் வேலையும் வெவ்வேறானவை.

    பெண்களைத் தம்நண்பர்கள் என்று எண்ணாது, தம்மை அவர்களின் அதிபர்களென்று எண்ணி ஆடவர் உலகம் அடிமைப்படுத்துகின்றனர். பழக்கவழக்கமும் சட்டமும் சேர்ந்து பெண்ணை அடக்கி வந்திருக்கின்றன. தன்வாழ்க்கையை உருவாக்குவதில் ஆண்களுக்கு இருக்கின்ற உரிமை பெண்களுக்கும் உண்டு. தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருத்தல் வேண்டும். சமுதாயத்தில் வரதட்சணைக் கொடுமை ஒழிந்து, ஆணும் பெண்ணும் சமமாக வேண்டும்.

    கைப்பாவையல்ல பெண்

    நாட்டில் பெண்ணுக்கு அளிக்க வேண்டிய சரியான கல்வி, தனது கணவனுக்கு கைப்பாவையல்ல என்பதை உணர்த்த வேண்டும். ஆண்களைப் போன்று பெண்களுக்கும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய உரிமை உண்டு. சீதையை இராமனுக்கு அடிமைபூண்டு வாழ்ந்தவள் என்று எண்ணுகிறவர்கள், அவள் அனுபவித்த சுதந்திரத்தின் சிறப்பையோ இராமன் எல்லா விஷயங்களிலும் அவளுக்கு அளித்து வந்த மதிப்பையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் ஆகிறது. தன்னையும் தன்மானத்தையும் காத்துக்கொள்ள முடியாத கையாலாகாத பெண்ணல்ல சீதை என்பது அண்ணலின் கருத்தாகும்.

    கைம்பெண் மணம்

    கணவன் இறந்தபின்பு, பெண்கள் கைம்மை வாழ்க்கை மேற்கொள்கின்றனர். சிறுவயதினரான விதவைகளுள்ள வீட்டார் தைரியமாகத் தம்பொறுப்பிலுள்ள அக்குழந்தைகளுக்கு மறுமணமல்ல, முறைப்படி நன்றாக மணம்செய்வித்து இச்சீர்திருத்தத்தைத் தொடங்க வேண்டும். ‘மறுமணம்’ என்று சொல்லாதது அவர்களுக்கு முதலில் நடந்தது மணமே அல்ல என்பதனால்தான், என்று யங் இந்தியா நாளிதழில் 1926-இல் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

    தாய்மை

    பெண்ணின் தாயன்பு எப்போதும் காந்தியடிகளுக்கு உயர்ந்ததும் உவகையளிப்பதுமாகவே இருந்தது. ஒருதாய் தன்குழந்தைகளை உயிருக்கு உயிராக நேசிக்கும்போது அவர்களை வளர்க்கும் அறிவு அவளுக்கு இல்லாமல் இருக்கலாம் என்ற மிலிபோலாக்கின் கருத்திற்கு ‘அன்பே அவளுக்கு அதையும் கற்றுக்கொடுக்கும்’ என்கிறார், காந்தியடிகள்.

    கருத்தடைக்குப் புலனடக்கம்

    பிறக்கும் குழந்தைகளின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குள்ள தலையாய ஒரேமுறை புலனடக்கமே ஆகும். செயற்கை முறைகளினால் கட்டுப்படுத்துதல் மனித இனம் தற்கொலை செய்துகொள்ளுதலாகும். அவை சரியாக இருந்தபோதும் செயற்கைமுறைகளினால் தீங்கே விளையும் என்பது காந்தியடிகளின் கருத்தாகும்.

    பெண் மானம்

    பெண்ணைப் பாதுகாத்தல் ஆண்களின் கடமையென்றாலும் தன்னைக் காக்க ஆடவன் ஒருவன் இல்லாதபோதும், இப்புனிதப்பணியை அவன் செய்யத் தவறியபோதும் இந்தியப்பெண் யாரும் என்ன செய்வேன்? என்று ஏங்கக்கூடாது என்கிறார், காந்தியடிகள். ஒருபெண் தாக்கப்படுகையில் அவள் இம்சை, அகிம்சை பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்போது அவளின் முதற்கடமை ‘தற்காப்பே’ ஆகும். தன்மானத்தைக் காப்பதற்கு அவளுக்குத் தோன்றும் எந்த முறையையும் அல்லது சாதனத்தையும் அவள் உபயோகித்துக் கொள்ளலாம். கடவுள் அவளுக்கு நகங்களும் பற்களும் அளித்திருக்கின்றார். அவற்றை அவள் தன்னால் முடிந்த மட்டும் உபயோகித்துக் கொள்ளலாம். சாகத்துணிந்த ஆடவனாலும் பெண்ணாலும் தன்னை மட்டுமல்லஇ பிறரையும் தன்னுயிரை அளித்துக் காக்க இயலும்.

    தேவதாசிகள் ஒழிப்பு

    சட்டத்திற்கும் நியாயத்திற்கும் மாறாக தன் இச்சைக்காக செயல்படும் சிலரால் பல பெண்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. பெண்கள் சிலர் இதற்கு கட்டாயமாக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளது. இப்பெண்களை தேவதாசிகள் என்று அழைப்பதனால், மதத்தின் பெயரால் இறைவனையே அவமானப்படுத்துகிறோம். இத்தகு கொடுமைகளிலிருந்து விடுத்துப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும். தேவதாசி முறையை ஒழிப்பதற்காக, இந்தியா விடுதலை அடைந்ததை அடுத்து 1947, அக்டோபர் 9-ஆம் நாளன்று ‘தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது.

    பெண்களுக்கென்று இழைக்கப்பட்ட அநீதிகள் எண்ணிலடங்காதவைகள். இதுபோன்ற சமூகநோயிலிருந்து விடுபட, தூயோர் ஒவ்வொருவரும் தாம் எங்கிருந்தாலும் தம் சுற்றுவட்டாரங்களில் தீமையில்லாது பார்த்துக் கொள்ளவேண்டும் என்று காந்தியடிகள் வலியுறுத்தினார்.

    ஆபரணப் பித்தம்

    ஆபரண சேர்க்கையானது அழகு சேர்ப்பதற்காகப் பயன்படும் ஒரு சாதனமே ஆகும். விலை அதிகமுள்ள நகைகள் அணிவதனால், பொருளாதார அளவில் நாட்டிற்கு நிச்சயம் ந~;டமே என்பது அண்ணலின் கருத்து. ஏனெனில், தொழிலுக்குப் பயன்படக்கூடிய அவ்வளவு முதலீடுகளும் முடக்கப்பட்டும் தேய்ந்தும் போகிறது. இந்தச் சுயதூய்மை இயக்கத்தில் ஆண்களும் பெண்களும் தம் ஆபரணங்களை அளிப்பதால், சமூகத்திற்கு நிச்சயம் நன்மையே என்பது காந்தியடிகளின் எண்ணம் ஆகும்.

    போராட்டக் களத்தில் பெண்கள்

    உலகிலேயே பெண்களை அதிகஅளவில் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்களில் மிகவும் பிரம்மாண்டமானது இந்தியப்போராட்டம் என்றால், முன்னோடிப் போராட்டம் என்பது தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாக்கிரகம்தான். இவையாவுமே காந்தியடிகளால்தான் சாத்தியமானது. கிறிஸ்துவத் திருமணங்களைத் தவிர மற்ற திருமணங்கள் ட்ரான்ஸ்வாலில் செல்லாது என்று அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து, ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட 11பேர் கொண்ட குழுவானது காந்தியடிகளால் அமைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் நியூகேஸில் சுரங்கப்பகுதிகளுக்குச் சென்றார்கள். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தி பேரளவிளான போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றனர்.

    இந்தியாவில் பெண்களின் நிலை

    காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ஆணவக்கொலைகள் போன்றவை காந்தியடிகளை வேதனைக்குள்ளாக்கியது. இந்தியர்கள் தங்கள் பெண்களை அடிமையிலும் மோசனான நிலையிலேயே வைத்திருந்தனர். பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஒழிக்காமல், தேசவிடுதலை சாத்தியமில்லை என்றே காந்தியடிகள் கருதினார்.

    பொதுவாக பலகூட்டங்களில் பேசும்போது, காந்தியடிகள் தன்கையைக் காட்டி முதல்விரல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவம்; இரண்டாவது விரல் நூல் நூற்றல்; மூன்றாவது மது உள்ளிட்ட போதைவகைகளைத் தவிர்த்தல்; நான்கு இந்து – முஸ்லீம் ஒற்றுமை; ஐந்து ஆண்-பெண் சமத்துவம் போன்றவைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களையே தனது வழித்துணையாகவும் உறுதுணையாகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவரோடு விவாதிக்கும்படியும், மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்தால் தைரியமாக வெளிப்படுத்தும்படியும் பெண்களை காந்தியடிகள் ஊக்குவித்தார். முடிவுகளை எடுப்பதில் மனைவிக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்றும் காந்தி கூறினார்.

    தற்காலப் பெண்கள்

    பெண்கள், மேனாட்டாருக்கே பொருத்தமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றிப் பயனில்லை; இந்தியச் சூழ்நிலைக்கும் இயல்புக்கும் பொருத்தமான முறைகளைக் கையாள வேண்டும். நம் பண்பாட்டின் சிறந்த அம்சங்களை விடாது பற்றிப் பாதுகாப்பதில் கலங்காத உறுதியும்இ அதன் தீயஅம்சங்களைத் தயங்காது விலக்குவதில் திடமும் பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்காலப் பெண்கள் ஆடை அணிவது காற்று, மழை வெயிலிலிருந்து தன் உடலைக் காக்க அல்;ல. பார்ப்போர் கவனத்தைக் கவரவே! பல செயற்கை அழகுசாதனங்களைக் கொண்டு, பலபெண்கள் இயற்கை செய்யத் தவறியதைச் செய்து, விசித்திரமாகக் காட்சியளிக்கிறார்கள். அகிம்சைவழி இதுமாதிரியான செயல்கள் பெண்களுக்கு உகந்ததல்ல என்கிறார், காந்தியடிகள். சுதந்திர காலகட்டத்தில் இருந்த பெண்களின் நிலை கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. பெண்களின் முன்னேற்றமானது சமத்துவ சமுதாயத்திற்கு இன்றியமையாததாகும்.

    தொகுப்புரை

    பெண்களுக்கு அளிக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் அவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் குறித்தும் அண்ணல் காந்தியடிகளின் வலிமைமிக்க கருத்துகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

    சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் அவர்களின் அடிப்படைத் தேவைகள், உரிமைகள், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை அனைத்துத்தரப்பு பெண்களுக்கும் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளான வரதட்சணைக் கொடுமை, தேவதாசி முறை போன்றவற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதே அண்ணல் காந்தியடிகளின் கருத்தாகும் என்பது புலப்பட்டுள்ளது.

    பெண்களின் இயல்புகள் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும் தற்காலப் பெண்களின் மனநிலை குறித்தும் பலதளங்களில் குறிப்பிடப்பட்ட அண்ணல் காந்தியடிகளின் கருத்துகள், ‘காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்’ எனும் இக்கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

    Share
  • ஜனநாயகன் – விஜயின் பிரம்மாஸ்திரம்

    ஜனநாயகன் – விஜயின் பிரம்மாஸ்திரம்

    – அண்ணாகண்ணன்

    தேர்தலுக்கு முன்னால் இந்தப் படம் வெளியாகியிருந்தால், அத்தனைத் தொகுதிகளையும் விஜய் அள்ளியிருப்பார். இதைத் தடுத்து நிறுத்தியதால், எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள் இல்லை. அடுத்து, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், 2031 சட்டமன்றத் தேர்தல் என இனி நடக்கப் போகிற ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயகன், மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தும்.

    இதில் உள்ள குறிப்பிட்ட சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்தால், அதன் விளைவும் வீச்சும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கும். தமிழில் ஜனநாயகன், தெலுங்கில் ஜனநாயகுடு, இந்தியில் ஜன் நேதா எனப் பல மொழிகளில் வௌியாகியிருப்பதால், இந்திய அளவில் விஜயின் செல்வாக்கு உயரும்.

    அந்த அளவுக்குத் தேர்தலை மையப்படுத்திய படம் இது. குழந்தைகள், பெண்கள், கிராமத்து மக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் உடனே செயலாற்ற உந்தும் வகையிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வகையிலும் இந்தப் படம் அமைந்துள்ளது.

    விஜய் மட்டுமின்றி, அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோரும் திரையில் தோன்றுகிறார்கள். தளபதி வெற்றி கொண்டான் என்ற பெயரில் விஜயின் பட்டப் பெயர், விஜய் என்ற பெயரின் பொருளான வெற்றி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அத்துடன் இந்தப் பெயர்ச் சுருக்கமும் கட்சியின் பெயர்ச் சுருக்கமும் (டிவிகே) ஒன்றாக வருமாறு வைத்திருக்கிறார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றையும் இதில் விஜய் அதிரடியாகத் தீர்த்து வைக்கிறார். தங்களுக்காக ஒருவர் சூப்பர்மேனாக நின்று போராட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பரபரப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். பாடல்கள், அதிமுகவுக்கு இன்றும் வாக்குகளைச் சேர்த்து வருகின்றன. அது போல், இந்தப் படத்தின் காட்சிகளும் பாடல்களும் த.வெ.க.வுக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆரும் விஜய் பக்கம் இருப்பது போல் காட்சிகள் உள்ளதால், எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விஜய் பக்கம் வருவார்கள்.

    ஜனநாயகன் என்ற பெயரிலேயே கன் (Gun) இருப்பதால், படத்திலும் ஏராளமான துப்பாக்கிகள் வெடிக்கின்றன. வன்முறை அதிகம் என்பதால், வயது வந்தோருக்கான படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்குச் சில நல்ல செய்திகளை விஜய் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், வயது வந்தோருக்கான படம் எனச் சான்றிதழ் பெற்றுள்ளதால், குழந்தைகளிடம் அந்தச் செய்திகள் சென்று சேருமா? ஏனெனில் அவர்களால் திரையரங்கிற்குச் சென்று இதைப் பார்க்க முடியாது. தொலைக்காட்சியிலும் ஓடிடி தளங்களிலும் இந்தப் படம் வெளியாகும்போது, என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

    இதைப் பொழுதுபோக்குப் படம் என்பதை விட, அதிரடி அரசியல் திரைப்படம் என்றே சொல்ல வேண்டும். தனது திறமை என்ன, வலிமை என்ன என்று இயக்குநர் எச்.வினோத் நிரூபித்திருக்கிறார்.

    இதை எதிர்கொள்ள, இன்னும் நிறைய அரசியல் திரைப்படங்கள் வரலாம். ஆனால், ஜனநாயகனுக்கு வலிமை சேர்ப்பது கதை மட்டுமில்லை, விஜய் என்னும் ஆளுமை. அவரது பிரம்மாஸ்திரம், இந்த ஜனநாயகன். இது செல்லும் இடமெங்கும் வெல்லும்.

    Share
  • காதல் எதுவரை?

    காதல் எதுவரை?

    நிர்மலா ராகவன்

    நீடிக்கும் உறவுகள்

    அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    திரைப்படங்களில் நாம் காண்பது – கணவர் அலுவலகத்திற்குப் புறப்படுமுன் மனைவி வாசலுக்கு வந்து அவருக்குத் தேவையானவற்றைக் கையில் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவருக்குச் சுயமாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா?

    இப்படிப் பழக்கப்பட்ட ஆண் தன் மனைவி ஒரு தனி நபர், ஒரு பெண்ணுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கலாம் என்பதை உணர்வதில்லை.

    அவள் தன்னையும் கவனித்துக்கொண்டால், அது சுயநலமாகாது. அவளுக்கென்று ஆசைகள், தனிப்பட்ட கருத்துகள் இருக்காதா, இருக்கக்கூடாதா?

    `எனக்குத் திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்காது. அதனால் நீயும் பார்க்கக்கூடாது!’ என்றானாம் என் சக ஆசிரியையின் கணவன்.

    தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் இவனைப்போன்ற பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது. அது புரிந்து, மனைவியும் விட்டுக்கொடுத்துக்கொண்டே போகிறாள். அவளால் முடிந்தது – தன் தோழிகளிடம் சொல்லி வருந்துவதுதான்.

    பெண் அழகாக இருந்தாலும் ஆபத்துதான்.

    ஒரே பார்வையில், `அழகாக இருக்கிறாள்!’ என்று எடைபோட்டு ஒரு பெண்ணை மணக்கச் சம்மதித்துவிட்டு, மணமானதும் பிற ஆண்களும் அப்படித்தானே மயங்கிவிடுவார்கள் என்ற சந்தேகமும் பொறாமையும் எழ, அவளை ஒரேயடியாக அடக்குவார்கள் பல கணவன்மார்கள்.

    திருமணமானதும் பழக்கவழக்கங்கள் மாறிவிடும். அனேகமாக, பெண்கள்தாம் ஐந்திலிருந்து பத்து கிலோவரை எடை கூடுகிறார்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி.

    பதினெட்டு வயதுவரை உடல் வளர்வதால் சாப்பிடும் அளவும் அதிகரிக்கும். அதன்பின் குறைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    அழகாக இருந்தால் ஆண்களை வசீகரிக்கலாம் என்று கவனமாக உடலைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் திருமணம் நிச்சயம் ஆனதுமே வழக்கத்திற்கு விரோதமாக நிறைய சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். மகிழ்ச்சியால் பூரிக்கிறார்களாம்!

    பிள்ளை பெற்றதும், `வீட்டு வேலை, குழந்தைகளைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை! உடற்பயிற்சி வேறா!’ என்ற சாக்கு. சமையலுக்குப் பலவிதமான இயந்திரங்கள்வேறு. இதனால் உடல் பருத்துக்கொண்டேபோகிறது.

    நாற்பது வயதுக்குமேல் அழகு குறைந்துபோக, எப்போதும் தனக்கு அடங்கி நடக்கும் மனைவியைக் கண்டால் எரிச்சல் எழுகிறது. அவளைப்போல் இல்லாது, இளமையுடன் கலகலப்பாகவும் இருக்கும் பெண்களிடம் மனம் போகும். மனைவிக்கோ, தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போக, சற்றே கூனல் விழுகிறது.

    கதை

    என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.

    உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் `எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.

    நான் அமைதியாக, “நீங்கள் என்னைப்பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். `எல்லா பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாக பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.

    அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.

    மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் பேசும் சுதந்திரத்தைக்கூட தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார்.

    ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார் கணபதி.

    என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப்போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.

    கணவன் மனைவியருக்குள் போட்டி எதற்கு? தான் மனைவியைவிட ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற மனப்பான்மை கொண்டவன்தான் பிறர் முன்னிலையிலும் அவளைக் கட்டுப்படுத்துகிறான். குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, மனைவி தான் எதிர்பார்த்தபடி இல்லையே என்று வருந்தி என்ன பயன்?

    துணுக்கு

    ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.

    தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?

    பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.

    கதை

    திருமண வாழ்க்கையில் பெண்ணாலும் மகிழ்ச்சி குன்றுவிடக்கூடும்.

    புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல. உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது.

    அழகு, கல்வி, பொருளாதாரம் எல்லாவற்றிலும் கணவனைவிடச் சிறந்திருந்ததால் பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.

    `என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.

    மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்தியவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”

    கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.

    வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப்பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.

    காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!

    இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

    வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.

    ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.

    நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவைகளைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.

    பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப்போனீர்கள்?”

    “யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப்போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதை கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப்பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.

    அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?

    “குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி,” என்று முடித்தாள் பிரபாவின் தாய்.

    கதை

    அமெரிக்கப் பெண்மணி காதரின் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.

    சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”

    உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப்போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.

    வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் அவள். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.

    காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • கழுவேற்றம்!

    பண்டைய தமிழர்களின் வாழ்வியலின் எச்சமாக வாழும் சாட்சியாக, தமிழகத்தில் இருக்கும் கொலைக்கருவியான கழுமரங்களில் காளிங்கராயன் கால்வாய் அருகில் அமைந்துள்ள காத்தவராயன்  கோவிலில் உள்ள கழுமரமும் ஒன்று. மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களை “கழுவில் ஏற்றுதல்” என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் பல இனங்களில் இருந்தது. மரத்தால் செய்யப்பட்டிருப்பதனால்தான் அதனைக் ‘கழுமரம்’ என்று குறிப்பிட்டனர். இரும்பால் ஆன கழுவும் பழக்கத்தில் இருந்துள்ளது. அதனை ‘வெங்கழு’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கழுமரம் குறித்து, வரலாற்றில் நெடிய செய்திகளும் கோவில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் உள்ளன.  கொங்குநாட்டில் ஈரோடு நகர்  காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் பனை மரத்தால் ஆன “கழுமரம்” உள்ளது . இக்கழுமரத்தை இங்குள்ள மக்கள்  “காத்தவராயன்” என்ற பெயரில் வழிபட்டுவருகின்றனர். ஒரு பீடத்தில் உள்ள அந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருக்கின்றன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள். சுமார் 800 வருடங்களுக்கு முன்பாக உள்ள கழுமரம் அது என்கிறார்கள். கொலைக்கருவிகள் கடவுளாவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படித்தான் கடவுளாகியிருக்கிறது. இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள ‘அய்யனாரப்பன் கோவிலில்’ உள்ளது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வெங்கழுவை காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம். தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது.

    கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி பல கதைகள் உள்ளன.

    கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘மூன்றாம் வ்லாட் ட்ராகுலா’ என்னும் ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசர் ஆவார். இவருக்கு ‘கழுவேற்றும் வ்லாட்’ (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு. இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement  என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the Impaler ) என்று அழைக்கபட்டார். அவர் தான் பின்னாளில் டிராகுலாவாக உருமாறினார் என்ற கதைகளும் உள்ளன.

    திருஞான சம்பந்தர் அறையணிநல்லூர் ஈசவசுனை வந்த போது, சமணர்கள் கருவறைக்கு முன்னே பாறங்கல்லை வைத்து வழியடைத்தார்கள். வாயிலையும் மூடி அடைத்தார்கள். திருஞான சம்பந்தர் சிவன நினைந்து பாடிய பின், வாயில் திறந்தது. பாறாங்கல் விலகி வழிவிட்டது. அறையணிநாதரை வழங்கி வழிபட்டார். இந்த விவரம் அறிந்த அரசர் சமணர்களை கழுவேற்றச் செய்தார் என்பார்கள். கழுமரம் மணலூர் பேட்டை சாலையில் திருக்கோவிலூரில் இருந்து 8.கி.மீ தூரத்தில் உள்ளது. கழுவன் குளம் கிராமத்திலும், விழுப்புரம் சாலை 1கி.,மீ தொலைவில் உள்ள அங்குதான் இந்நிகழ்ச்சி நடந்ததாகச் சொல்கிறார்கள்.

    கழுவேற்றம் நடந்ததா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் இது தொடர்பான ஓவியங்கள் சில கோவில்களில் காணப்படுகின்றன. சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகுமாம்.

    தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள் .

    நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது. மக்களுக்காக போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அவர்களின் உயிர், அந்தக் கழுமரங்களில் உறைந்து, தெய்வத்தன்மை அடைந்து விடும் என, மக்கள் நம்பினர். அதனால், வீரர்களின் கழுமரங்களை, காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.

    பொங்கலுடன் ஆட்டுக் குறுதியை கலந்து, உருண்டையாக உருட்டி, புது மண்சட்டியில் இட்டு, அதிகாலையில் கருடனுக்குப் படைக்கின்றனர். இது கழுவேற்றப்பட்டோர், கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது. கழுமரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். அவை காலத்தால் அழிந்த பின், கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்த கழுமரங்களில், உயிர்விட்டவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    களவு புரியும் போலித் துறவிகளைக் கழுவேற்றுவதை,

    “கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்

    கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்”

    என்கிறார்  திருமூலர்.

    (திருமந்திரம் பாடல் எண் : 1655)

    தமிழகத்தில் மட்டுமின்றி, தொன்மையான கிரேக்க, உரோமானிய  நாகரிகங்களிலும் தொன்று தொட்டு இவ்வழமைகள் இருந்திருக்கலாம்.

    ‘வாதனையின் கழுமரம்’ என்ற சொற்றொடர், இயேசுவுக்குத் தண்டனை அளிக்கப்பட்ட பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கிரேக்க இலக்கியங்களில், இசுடவரசு என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து அறிய முற்பட்டால், அது, குறுக்குச் சட்டம் ஏதும் இல்லாததொரு செங்குத்தான  கம்பம் என்ற பொருளில் வருவதை அறியலாம். இயேசுவை ஆணியால் அறைவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிப்பதற்கு அப்போசுதலர்களான பேதுருவும் பவுலும் சீலோன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்; இது, எவ்விதக் குறுக்குச் சட்டமும் இல்லாத ஒரே செங்குத்தான கம்பம் என்பதைக் காட்டுகிறது.(அப்போசுதலர் 5:30; 10:39; 13:29; கலாத்தியர் 3:13; 1 பேதுரு 2:24) இலத்தீனத்தில் -கிருக்சு, கிரேக்கத்தில் இசுடவரசு  (மத்தேயு  27:40 – பைபிள்) .

    லூயிசு மற்றும் சார்ட் என்பவர்களுடைய இலத்தீன் அகராதி கிருக்சு என்ற வார்த்தைக்கு குற்றவாளிகள் அறையப்படுவதற்கோ தொங்கவிடப்படுவதற்கோ பயன்படுத்தப்படும் ஒரு மரத்தைக் குறிக்கிறது.

    நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனது வெப்புநோய் தீர்த்த திருஞான சம்பந்தரின் சைவ சமயம் தழுவிட, 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.

    “மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி

    துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்

    முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்

    கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற”

     

    “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்

    ஆதம் இல்லி அமணொடு தேரரை

    வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?”

    என்று சம்பந்தர் தனது மதுரைப் பாடல்களில் கூறுகிறார்.

    சைவம், சமணம், வைணவம்,கிறித்துவம், இசுலாமியம், புத்தம் என  அனைத்து மதங்கள் கடந்து வந்த பாதையிலும் இது போன்ற கொடுந்தண்டனைகள் அதன் வழிநெடுக உள்ள இரத்தக் கரைகளே சாட்சிகளாய்ப் படிந்திருக்கின்றன என்பதே நிதர்சனம்.. ஆம்.குற்றங்களுக்கான இதுபோன்ற கொடுமையான தண்டனைகள் அனைத்துலகிலும் வரலாற்றுச் சான்றுகளாக நிற்கின்றன !

    முன் காலத்தில் பெருங்குற்றம் புரிந்தவர்களுக்கு,  கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், வாளினால் தலையைத் துண்டித்தல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், யானையால் மிதிக்கவிட்டுக் கொல்லுதல், வெட்டவெளியில் தூக்கில் இட்டு உடலை விலங்குகளுக்கு இரையாக்குதல், அல்லது  உயிருடன் விலங்கிற்கு இறையாக்குதல், உயிருடன் மண்ணிற்குள் புதைத்தல், நஞ்சிட்டுக் கொல்லுதல்,  தீயிட்டுக் கொளுத்துதல் என்று பல வகையில் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டன.

    மனித உரிமைகளைக் காக்கும்பொருட்டு உலக நாடுகள் அனைத்தும், குற்றத்தை இழைத்தவர் என்ற சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காகவோ, “எவரொருவரும் சித்தரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான, சிறுமைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ உட்படுத்தப்படக் கூடாது” என்று  உலக மனித உரிமைப் பிரகடனம் (1948) 5ஆம் விதியாகக் கையெழுத்திட்டுள்ளன. இது பெரும்பாலும் நடைமுறையில் இருந்தாலும், எங்கோ ஒரு சில நாடுகளில் அவரவர்களின் வழமைக்கேற்ப தனிப்பட்ட சட்டங்கள்  அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு  முற்பட்ட இதுபோன்ற தண்டனை முறைகளையும் இன்றைக்கும்  நடைமுறைப்படுத்தி வருவது வருந்தத்தக்கது..

     

    Share
  • வெற்றிலையின் பாரம்பரியம்

    ஆதிகாலந்தொட்டு வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு இணைந்ததொரு அத்தியாவசியப் பொருளாக இருந்துவருகிறது. தெய்வ வழிபாடு, திருமணம், காதுகுத்து, திருவிழா, பண்டிகை என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மங்கலப் பொருளாக முக்கியமான இடத்தைப் பெறுவது வெற்றிலை, பாக்கு. தமிழர்தம் அக வாழ்வில் மகிழ்வுக்குரிய தருணங்களில் அன்பை வெளிப்படுத்தும் குறியீடாக – ஆரோக்கியத்தைப் பேணும் அருமருந்தாக அன்றாட வாழ்வில் அற்புதத்தை உண்டாக்கும் பச்சிலை, வெற்றிலை. இத்தனைக்கும் இந்த வெற்றிலையின் பிறந்தகம் நம் இந்தியா அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    வரலாற்றாசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார்,  “வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்’ என்று கூறியுள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது. நீலகண்ட சாஸ்திரியார் , “வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்துக்குப் பின் தோன்றியதாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார் (தென்னிந்திய வரலாறு, பக்.213). ஆனால், சங்க இலக்கியங்களில் வெற்றிலை, பாக்கு பற்றிய குறிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

    “நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்” (401) என்கிறது பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி. அதாவது வெற்றிலை சுண்ணாம்பு வணிகர்கள் மதுரை நகரில் இருந்துள்ளனர் என்கிறது.

    “எண்பேராயம்” என்பது பண்டைய தமிழகத்தில் அரசர்களுடன் இருக்கும் எண் வகை நபர்களைக் குறிக்கிறது. எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. இது வாகைத் திணையின் முப்பது துறைகளில் ஒன்று. தமிழ்நாட்டு மன்னர்கள் நல்லாட்சி புரிய உதவியாக இருந்தவர்களை ஐம்பெருங்குழு என்றும், எண்பேராயம் என்றும் பகுத்துக் காட்டுவது வழக்கம். மதுரைக்காஞ்சி என்னும் நூல் நாற்பெருங்குழு என்று ஒன்றினைக் குறிப்பிடுகிறது.

    .இந்தக் குழுவில் வெற்றிலை, பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். “எண்பேராயம்’ என்பதற்கு விளக்கம் எழுதிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர்  “சந்து பூக்கச் சாடை பாக்கிலை கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்” (இந்திர விழவூரெடுத்த காதை-157) என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில், “பாக்கிலை’ வைத்திருப்போரும் ஒருவர். இவரை “அடைப்பைக்காரன்’ என்று குறிப்பிடுவர். அந்த வகையில் வெற்றிலை, பாக்கு பழந்தமிழர் காலத்திலேயே பழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

    மதுரைக்கு வரும் கோவலனும் கண்ணகியும் புறஞ்சேரியில் மாதரி என்னும் இடையர் குலப் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தனர். அன்று அந்த இரவில் உணவு உண்டபின் அன்புக் கணவன் கோவலனுக்கு அருமை மனைவி, கண்ணகி வெற்றிலைப் பாக்கு மடித்துக் கொடுக்கிறாள். விதிவசத்தால் அவர்கள் இருவரும் இணைந்து இன்பமாக இருந்த இறுதி நாள் அதுதான். இதனை இளங்கோவடிகள்,

    “உண்டு இனி திருந்த உயர்பே ராளற்

     அம்மென் திரைலோடு அடைக்காயீத்த

     மையீரோதியை வருகெனப் பொருந்தி”

     (கொலைக்களக்காதை-54-56)

    வெற்றிலைச் சுருள்: “அம் மென் திரையலொடு அடைக் காய் ஈத்த மை ஈர் ஓதியை” (சில:16:55-6). 2. வெற்றிலைக் கொடி: “நறிய தாம்பூல வல்லி ….. இலைக் கொடிப் பேர் திரையல் மெல் இலையும் ஆகும்” (நிக.சூ:4:37).

    “பாசிலை சுருட்டி மைந்தன் கொடுகிய” (பா-1987). – சீவக சிந்தாமணி

    “அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்” (காட்சிப்படலம்-15) – கம்ப இராமாயணம்

    “பெருக்கத் தின்றீர், தாம்பூலம் பிழைக்கச் செய்தீர்…(585) – கலிங்கத்துப்பரணி

    “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்கிறார் நம்மாழ்வார் திருவாய்மொழியில் (6-7),

     

    தமிழ் மக்கள் வாழ்வில் வெற்றிலைக்குச் சிறப்பான இடமுண்டு. பூக்கள், வாழைப் பழம், தேங்காய், சந்தனம், கரும்பு, தென்னங்கீற்று, தென்னம்பாளை, இளநீர்க்குலை, மஞ்சள் போன்றவை எவ்வாறு நன்மங்கலப் பொருட்களாகப் பார்க்கப்படுகின்றனவோ அவ்வாறே வெற்றிலையும் ஒரு மங்கலச் சின்னமாக கருதப்படுகிறது. முக்கியமான பல்வேறு சடங்குகளுக்கு “வெற்றிலை மாற்றும்” வழமை தொன்றுதொட்டு வருவதும் கண்கூடு. திருமணச் சடங்குகளில் தாம்பூலம் என்பது பல வகையில் முக்கியத்துவம் பெறக்கூடியது.

    “இந்தியாவுக்கு ஐரோப்பிவிலிருந்து வருவதற்குக் கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் முதன்முறையாக வந்திறங்கியதும், கடற்கரையில் கண்ட காட்சிகளைத் தம் பயணக் குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார். இம்மண்ணில் வாழும் மக்கள் எந்நேரமும் ஒரு பச்சை இலையை வாயிலிட்டு மென்றபடியே இருப்பதாக எழுதியிருக்கிறார். வாஸ்கோடகாமா கூறிய அந்தப் பச்சை இலை வெற்றிலைதான். வெற்றிலை போடும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டே வழக்கத்தில் இருந்திருக்கிறது.

    வெற்றிலை என்பது கொடியிலை ஆகும். அந்தக் கொடியில் பூவோ காயோ பழமோ… எதுவுமே வளராது. வெறும் இலைகளாகவே இருக்கும். அதனால் இலையும் வெற்றிலை ஆனது. தாம்பூலம், திரையல், அடகு முதலான வேறு பெயர்களும் வெற்றிலைக்கு உள்ளன. உண்ணத் தகுந்த கீரைகளும் இலைகளும் அடகு எனப்படுவதால் வெற்றிலைக்கும் அப்பெயர் உண்டு.

    ஆரோக்கிய குறிப்புகளிலும் தொன்றுதொட்டு வெற்றிலை பயன்பாடு இருந்து வருவதை பாட்டி வைத்திய முறைகளிலிருந்து அறிய முடிகின்றது. கொடிய தேளின் நஞ்சையும் முறிக்க வல்லது வெற்றிலை என்ற வழமையும் இருந்து வருகிறது.

    இரண்டு வெற்றிலையோடு ஒன்பது மிளகையும் சேர்த்து, ஒன்றாக மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேளின் விடம் உடனே முறியும் என்கிறார்கள்.

    சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள், இரண்டு வெற்றிலையுடன், வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விட்டு, தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து  மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் சக்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள்ளாகவாவது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படுமாம்.

    உணவுக்குப்பின் வெற்றிலையை அளவாக  உபயோகிக்க உண்ட உணவு செரிமாணமாகும் என்பது பரம்பரையாக வழக்கத்தில் உள்ளது.

    சப்பானியர்களின் பாரம்பரிய விருந்துகளில் தேநீர் திருவிழா என்ற கொண்டாட்டம் உறுதியாக இருக்கும். அதேபோன்று தமிழர்களின் திருமணம், சடங்குகள், சம்பிரதாயங்களுக்குப் பிறகான விருந்தில், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  இவைகளைச் சேர்த்து, உறவினர்களுடன் கூடியிருந்து, அமர்ந்து இன்னுரையுடன், கேலி, கிண்டல், நக்கல்,நையாண்டி என்ற ஆனந்தமாக சூழலுடன் அவைகளை  இரசனையோடு மென்று உண்ணுவதும் ஒரு கலையாகக் காட்சியளிக்கும். தற்காலங்களில் வெற்றிலையுடன் வாசனைப் பாக்குகள், உலர்ந்த பழங்கள் என சிலவற்றை சேர்த்து ‘பீடா’ என்ற  பெயரில் நவீனமாக்கிக் கொண்டாலும் இன்றும் வெற்றிலை போடும் வழமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

    வெற்றிலை போடுவதும், அதனை மடித்துக் கொடுப்பதிலும் கூட ஒரு கலையுணர்வையும், அறிவியல், ஆரோக்கிய ஞானத்தையும் ஊட்டுபவன் தமிழன் என்பதை உணர முடிகின்றது. பெரிய விருந்தோ அல்லது இல்லத்தில் அமைதியாக அமர்ந்து அருந்திய பின்போ, மேலை நாட்டவர்களுக்கு ‘டெசர்ட்’ என்று சொல்லக்கூடிய இனிப்பு வகைகள் அல்லது பனிக்கூழ் உண்ணும் வழமை இருந்து வருகிறது. ஆனால் நம் தமிழர்கள் பாரம்பரியமாக தாம்பூலம் வழங்கும் வழமையேக் கொண்டிருக்கிறார்கள்.

    வெற்றிலையின் பின்புறம் இருக்கும், சற்றே புடைத்த நரம்புகளை நீக்கிவிட்டு, அதில் நல்ல சுத்தமான சுண்ணாம்பை குறிப்பிட்ட அளவில் சமமாகத் தடவ வேண்டும். வெற்றிலை, பாக்குடன்  சுண்ணாம்பு அளவாகச் சேரும்போது  அதுவே உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் தேவையானதொன்று. இதனால் பற்கள் வலுவடைகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இது ஒரு சிறந்த கருத்தடை மருந்தாகச் செயல்படுவதாக நம்புகிறார்கள்.

    வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும்.  இனிமையும் கூடும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

     

     

     

     

     

    Share
  • வாஸ்கோடகாமா

    Illustration of a Vasco De Gama

    இன்று, ஜூலை 8, இதே நாளில்  1497- இந்தியாவை நோக்கி வாஸ்கோடகாமாவின் பயணம் தொடங்கிய நாள்!

    பண்டைய காலத்திலேயே யவனர்களோடு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என பலப்பல பொருட்களை வணிகம் செய்தது நமது இலக்கியங்கள் மூலம் எளிதாக அறிய முடிகின்றது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின், அந்தப் பொருட்கள் கிடைக்கும் நாடுகளைத் தேடி அலைந்தவர்களில் பாரசீகர்களுக்கு முதலிடம் என்றால், போர்ச்சுகீசியர்களுக்கு அதற்கடுத்த இடம் உண்டு .

    நன்நம்பிக்கை முனையை 1497 இல் கடந்தவர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகம் ஆன வாஸ்கோடகாமா. பின்னர் அவர் அங்கிருந்து, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்பிரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைகிறார். மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் இரகசியங்கள் அனைத்தையும் அறிந்திருந்த – அதன் காற்றையும், அதன்

    வீச்சையும் நன்கறிந்த அங்கிருந்த ஒரு மாலுமி – அஹ்மத் இபின் மஜித் என்பவரின் துணையைப் பெறுகிறார். இதில் தமிழர் ஒருவரின் பங்கும் இருந்ததாகவும் தகவல்கள் உண்டு. வாஸ்கோடகாமா. 1498 இல், அஹ்மத் இபின் மஜித்தின் துணையுடன் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே

    இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு விரைவாக வந்து சேர்ந்தது சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர்திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. இப்படியாக, இந்தியாவிற்கான மற்றுமொரு பாதையை சாத்தியப்படுத்திக் காட்டினார் வாஸ்கோடகாமா.

     

    பழங்காலத்தில் போர்த்துக்கீசியர்களுடன் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். போர்த்துக்கீசியர்களுக்கான அவர்களின் முக்கிய ஏற்றுமதி மிளகு. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் வரக் காணவில்லை. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள் என்பது மட்டும்தான் போர்த்துக்கீசியர்களுக்குத் தெரியும். அவர்களிடமிருந்து விட்டுப் போன வணிக உறவைப் புதுப்பிக்க நூறு ஆண்டுகளாகத் தேடி அலைந்து கடைசியாக வந்து இங்கு வந்து சேர்ந்தவர்தாம் வாஸ்கோட காமா. அப்படிப் போர்த்துக்கீசியர்களுக்கு பண்டையகாலத்தில் தொடர்ந்து மிளகு ஏற்றுமதி செய்து வந்த அந்த மக்கள் தமிழர்தாம். அவர்கள் இடையில் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதால் மன்னர்களின் ஆதரவு அயல்நாட்டு வணிகத்திற்கு கிடைத்ததால் வணிகத்தை இழந்தனர். அவர்கள் செல்லாததால் ஐரோப்பியர் அவர்களைத்தேடி இங்கு வந்தனர். இங்கு தேடிவந்த வந்த ஐரோப்பிய தந்திரக்காரர்களுக்கு இந்தியா ஒரு வேட்டைக்காடாக மாறியது .

    வாஸ்கோடகாமாவிற்குப்பின் வந்த அஃபோன்சா டி அல்புகியர்கியூ என்பவர், இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்புக்கு வழிகோலிட கோவா என்றொரு போர்சுகீசிய பிரதேசம் உருவாகி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகள் வரையிலும் கூட அது போர்ச்சுகீசியர்கள் கையில் தான் இருந்தது. வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திலேயே வரப்போகிற ஆபத்தை உணராமல் விட்டு வைத்ததன் விளைவு எத்தனை நூற்றாண்டுகளுக்கு எத்தகைய இன்னல் விளைவித்தது என்பதை வரலாறு நமக்கு நன்கு உணர்த்துகின்றது. நன்னம்பிக்கை முனைவழியாக வரும் வழி தங்களுக்கு மட்டுமே உரியது என்று போர்ச்சுகல் அப்போதைய போப்பிடம் உரிமையும் கோரியதாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன . ஆனால் வாஸ்கோடகாமாவுக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு தமிழர்தான் இந்த வழியை

    சொல்லிக்கொடுத்ததாகவும் ஒரு கட்டுரை செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நூற்றாண்டு முழுவதும் அந்த வழியை அதிகம் போர்ச்சுகல் மட்டுமே பயன்படுத்தியது . அது

    இரகசியமாகவே இருந்தது. அப்போதெல்லாம் அத்தகைய வரைபடங்கள் புதையல் இருக்கும் வழி காட்டும் வரைபடங்களை விட மதிப்பு மிக்கதாக இருந்தது. ஏனெனில் இந்தியாவுடன் ஆன வணிகம் ஐரோப்பியர்களுக்கு அத்தனை மதிப்பு மிக்கது. அவர்களின் வாழ்நாள் இலட்சியமாக இருந்தது இந்தியாவிற்கு வருவது என்பதுதான். இதில் குறிப்பிடும் பல வரலாற்று செய்திகள் அந்நியர்கள் எழுதி வைத்த கையேட்டுக் குறிப்பு போன்ற ஆவணங்களில் இருந்துதான் கிடைக்கின்றன.

    இந்தியாவின் வரலாறு என்பது பெரும்பாலும் இங்கு பயணம் மேற்கொண்ட அந்நியர்களால் எழுதப்பட்டவற்றில் இருந்து உருவாக்கப்பட்டதுதான். பிரித்தானியருக்கு முன்னால் கிரேக்க, சீனப் பயணிகள் எழுதிய குறிப்புகளை வைத்துதான் தட்சசீலா, நாலந்தா பற்றிய கல்விக்கூடங்கள், பண்டைய பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்திகள் கிடைத்திருக்கின்றன.

    இசுலாமியர்களால் எழுதப்பட்ட சில வரலாறுகளும் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் வருகை 15-16-ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்திய வாழ்க்கை முறை, தத்துவங்கள், கலைகள், கல்வி என நம் வாழ்வின் பன்முக அம்சங்கள் குறித்த எந்தவித புரிதலும் இல்லாதவர்கள் அவர்கள். முற்றிலும் அந்நியமான தேசத்தில் இருந்து வந்து தங்களுடைய முன்முடிவுகள், புரிதலுக்கு ஏற்ப நம்மைப் பற்றி அவர்களுக்கு என்ன

    புரிந்ததோ அதை எழுதி வைத்தார்கள் ஆனால் நமக்கு வேறு வழி இல்லாததால் அவைகளை வைத்தே ஆங்காங்கே கிடைக்கும் உண்மை செய்திகளை தேடிக் கோர்க்க வேண்டி இருக்கிறது.

    இந்தியாவில் தென்னாட்டிற்குத்தான் ஐரோப்பியர்கள் முதலில் கடல் வழி வந்தனர். இங்கு வந்த சிறிது காலத்திலேயே அவர்களுக்குப் புரிந்து போனது அவர்கள் நினைத்தது போல இந்தியர்கள் நாகரீகமற்றவர்கள் அல்ல. அவர்கள் நாகரீகத்திலும் அறிவியலிலும் மிக மேன்மை கொண்டிருந்தனர். அதில் பலவற்றை ஐரோப்பியர்கள் அப்போது கற்பனை கூட செய்தது கிடையாது. எனவே மெக்ஸிகோ பெரு போன்ற நாடுகளில் செய்ததுபோல் அழித்தொழிப்பு செய்யாமல் இந்தியாவில் என்னென்ன இருக்கின்றன என்பதை முழுவதுமாகப் பதிவு செய்யவேண்டும் என முனைந்தனர். அவற்றில் இருந்து எதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதைப் பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. எங்கெல்லாம் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆராய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. ஆதியில் வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில்நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர்.

     

     

     

    Share
  • ஆதிகால தெய்வ வழிபாடு!

    தமிழ்க்கடவுளான முருகன் மலைத் தெய்வம் என்று போற்றப்படுபவன். ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் போற்றி படைக்கப்பட்டிருக்கலாம் என்பர்.

     


    வேலன் வெறியாடல், குன்றக்குரவை, வெறியாட்டு என்பன சிறப்பிடம் பெற்றன. இவ்விழாக்களின் போது ஆட்டைப் பலியிட்டு, முருகனுக்கு உகந்த பண்டங்களான தேன், திணைமாவு போன்றவற்றைப் படைத்து ஆடிப்பாடி வழிபட்டனர். இவற்றை மரபு சார் வழிபாட்டு முறைமைகள் எனக்கொள்ளலாம். ஆதி காலந்தொட்டு முருகன் என்பவன் மலை நிலத்துக்குரிய தெய்வமாகவும் தமிழ் கடவுளாகவும் வழிபடப்பட்டுள்ளான். அதே பண்புகளுடன் இன்றைய கலியுகத்திலும் சர்வதேசக் கடவுளாகத் தமிழ்க் கடவுளாக முருகன் திகழ்கின்றான்.

     கி.மு. 300 வாக்கில் எழுதப்பட்ட தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என அழைத்து, அவனைக் குறிஞ்சி நிலக் கடவுளாகச் சுட்டுகிறது. சேயோன் (சேய் = மகன்) மிக வலிமையான கொற்றவை எனும் தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு வருகிறான். முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத்
    தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்றும் கருத முடிகின்றது. மக்களின் வாழ்வு முதன்முதற் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து.
    விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ; என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகின்றார்.

     ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம் என்பர். ’குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பது மக்களின் நம்பிக்கை. குறிஞ்சிப் பகுதிவாழ் குமரனே முருகன் என்பது மானுடவியலாளரின் ஆய்வாளர்களின் கருத்து. இதன் அடிப்படையில் இவனே தலைவனாய் இருந்து காப்பவன்!

     பன்னிருதோள்களும், பன்னிரு உயிர்கள் பதினெட்டுக் கரங்களும் பதினெட்டு மெய்கள். ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துகள். அவனது கூரிய வடிவேல் ஆயுத எழுத்து. ;முருகு; என்ற சொல்லில் ;மு; மெல்லினம் ;ரு; இடையினம் ;கு; வல்லினம் என்ற சுவையான தகவல்களையும் வழங்குகின்றனர் தமிழறிஞர்கள். இவனே தமிழ்க் கடவுள். முருகு என்பதன் பொருள் அழகு. அழகானவன் முருகன்!

     மயிலில் முருகன் ஏறியதற்கு கூறப்படும் ஒரு காரணம்: மவுரியர் என்பதன் பொருள் மயில். மவுரியர்களின் சின்னம், மயில். ஆக மவுரியர்கள் முருகனை மயில் மேல் ஏற்றியதில் வியப்பு இல்லை. மவுரியர்களுக்குப் பின் வந்த குசான மன்னர்களான குப்தர்கள் காலத்திலும் முருக வழிபாடு, வட இந்தியாவில் பிரதானமாக இருந்தது.

     கிபி 150ஆம் ஆண்டு காலகட்டத்தில் குசான மன்னன், குவிசகன் அச்சிட்ட தங்க நாணயத்தில், ;ஸ்கந்த கொமானோ பிசாகோ; (விசாகோ) என கந்தனும், வேலேந்திய விசாகனும் இரட்டைக்
    கடவுளராக நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஆக கந்தனின் ஒரு வடிவமே விசாகன் அல்லது தனித் தெய்வமாக வழிபடப்பட்டு பின்னாளில் கந்தனுடன் இணைந்த வடிவமாக விசாகனைக்
    கொள்ளலாம். குப்தர் அரசவைப் புலவரான காளிதாசனின், குமார சம்பவம், முருகனின் வரலாறை நூலாக எழுதி அவனுக்கு அழியாப் புகழ் தேடிக் கொடுத்தான். ஆக இவர்கள் காலத்திற்கு முந்தைய காலத்தின் வரலாறுகளையும் சேர்த்தே காவியம் படைத்திருப்பார்கள்
    என்பது தெளிவு.

    Share
  • புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா!

    இன்று ஈரோட்டில், புதிதாக அரசு அமைத்துள்ள, த.வெ.க கட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு கே.கே. ஆனந்த மோகன் அவர்களுக்கும், ஈரோட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு அமைப்புகளின் மூலம் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
    இருவரும் மிக யதார்த்தமாக, இயல்பான உரை வழங்கியது மக்களிடையே மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றது. மக்கள் முன்னிலையில் தாங்கள் எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் 1 உரூபாய் கூட கையூட்டு பெறாமல், நேர்மையான முறையில் மக்கள் பணி ஆற்றப்போவதாக உறுதி மொழி அளித்தார்கள். தங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் தங்களுடைய ஆட்சி நிரந்தரமாக இன்னும் பல காலங்களுக்கு தங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆசிகளுடன் இந்திய அளவில் தொடர உறுதி கொண்டுள்ளதாகவும் பேசி அசத்தியுள்ளனர். இது உண்மையாக நடந்தால் மகிழ்ச்சிதான் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கைதட்டி வரவேற்றனர். ஈரோட்டில் கைத்தறித்துறையிலும், துணிகள் தயாரிப்பு, சாயக்கழிவுகள் என்று பலப்பல பிரச்சனைகள் தீர்வு காணப்பட வேண்டியுள்ளன . மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு மாவட்டத் தமிழியக்கத்தின் சார்பாக, மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும், வல்லமை இணைய இதழ் சார்பாகவும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாகவும் நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம். நலமே விளைக என்ற நம்பிக்கையுடன் நகர்கிறோம் ……

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    இங்கிலாந்திலே இன்று அரசியல் நிலைமைகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

    பிரதமர் கியர் ஸ்டாமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த முடிவு ஒரு தனிப்பட்ட தீர்மானமாக மட்டும் அல்லாமல், கடந்த சில வாரங்களாக உருவாகிக் கொண்டிருந்த அரசியல் அழுத்தங்களின் கூட்டுத் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது.

    இந்தச் சூழலைப் புரிந்துகொள்ள, மூன்று முக்கிய காரணிகளை நாம் ஆராய வேண்டியுள்ளது.

    அண்டி பேர்ன்காம் ( Andy Burnham ) பெற்ற அண்மைய வெற்றி, ரீபோர்ம் கட்சியின் எதிர்பாராத எழுச்சி, மற்றும் லேபர் கட்சியின் உள்ளக அழுத்தங்கள்.

    முதலில், அண்டி பேர்ன்காம்.

    சில காலங்களுக்கு.முன்னால் இரண்டுமுறை லேபர் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றதால் பாரளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார்.

    பாராளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கினாலும் அரசியலை விட்டு ஒதுங்கவில்லை.

    லேபத் கட்சியின் சார்பாக தான் வாழும் மான்செஷ்டர் பகுதி மேயர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டுமுறையும் வெற்றி பெற்றார்.

    வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அப்பகுதியின் பிரச்சனைகளை எதிர்கொண்டு பல தீர்வுகளை பெற்றுகொடுத்து அப்பகுதியில் மிகவும் பிரபல்யமடைந்திருந்தார்.

    இராண்டாவது தடவையாக கடந்த மேமாதம் தான் மீண்டும் மேயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பராளுமன்ற உறுப்பினராகும் முடிவெடுத்தார்.

    அவரது மான்செஷ்டர் பகுதி செயற்பாடுகளின் அடிப்படையில் செல்வாக்கு குன்றிய நிலையில் இருந்த கியர் ஸ்டாமருக்கு ஒரு மாற்று தலைவராக இவரால் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று பாராளுமன்ற லேபர் கட்சி உறுப்பினர்கள் எண்ணினார்கள்.

    அதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத அண்டி பேர்ன்காம் எவ்வாறு பிரதமராகலாம் ?

    இங்கேதான் மான்செஷ்டர் பகுதியில் அண்டி பேர்ன்காம் பிறந்து வளர்ந்த மக்கெல்ஸ்வீல்ட் எனும் பகுதி பாரளுமன்ற உறுப்பினர் அண்டி பேர்ன்காம் அவர்களை பாரளுமன்றம் அனுப்புவதற்கு ஏதுவாக தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்தார்.

    விளைவு அதற்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.

    அண்டி பேர்ன்காம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் கியர் ஸ்டாமர் அவர்களின் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் எனும் எதிர்பார்ப்பில் போட்டியிட்டார்.

    கடந்த வாரம் அவர் பெற்ற அரசியல் வெற்றி சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் பார்க்க முடியாது.

    அது லேபர் கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக மாறியுள்ளது.

    பாரம்பரிய தொழிலாளர் வாக்காளர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கம், மற்றும் இளைஞர் வாக்காளர்கள் இவர்கள் பலரும் ஸ்டாமரின் மிதமான, சில நேரங்களில் தயக்கமான அரசியல் அணுகுமுறைக்கு மாற்றாக, தெளிவான மற்றும் நேரடியான குரலை நாடி வருகிறார்கள்.

    பேர்ன்காம் இந்த இடைவெளியை நிரப்பியுள்ளார்.

    அவரது அரசியல் மொழி நேரடி, அவரது கொள்கைகள் மக்களோடு இணையும் வகையில் அமைந்துள்ளன.

    இதனால், லேபர் கட்சிக்குள் மறைமுகமான தலைமைப் போட்டி உருவாகி, ஸ்டாமரின் நிலையை பலவீனப்படுத்தியுள்ளது.

    இரண்டாவது, ரீபோர்ம் கட்சியின் எழுச்சி.

    இது இங்கிலாந்தின் அரசியல் அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.

    பாரம்பரிய கன்சர்வேட்டிவ் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், அரசியல் அமைப்பில் விரக்தி அடைந்த பலர் ரீபோர்ம் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

    குடியேற்றம், பொருளாதாரம், மற்றும் தேசிய அடையாளம் போன்ற கேள்விகளில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் கடுமையான நிலைப்பாடுகள், பொதுமக்களிடையே எதிரொலி பெற்றுள்ளன.

    இந்த எழுச்சி, லேபர் கட்சிக்கு இரு முனைகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு பக்கம் கன்சர்வேட்டிவ் வாக்காளர்கள் ரீபோர்முக்கு நகர, மற்றொரு பக்கம் லேபர் ஆதரவாளர்கள் மாற்று தலைமை தேடுகின்றனர்.

    இதன் விளைவாக, ஸ்டாமர் அரசியல் மையத்தில் நிலைத்து நிற்க முயன்ற போதும், அவரின் ஆதரவு தளரத் தொடங்கியது.

    மூன்றாவது மற்றும் மிக முக்கியமானது, லேபர் கட்சியின் உள்ளக நிலைமை.

    ஸ்டாமர் தலைமையில் கட்சி ஒரு நிலைத்தன்மையை அடைந்தது என்பது உண்மை.

    ஆனால், அந்த நிலைத்தன்மை உற்சாகத்தை உருவாக்கவில்லை.

    கட்சியின் பல உறுப்பினர்கள், குறிப்பாக இளம் தலைமுறை, திடமான மாற்றங்களை எதிர்பார்த்தனர்.

    அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, அதிருப்தி மெதுவாக வெளிப்படத் தொடங்கியது.

    இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கின.

    அந்த சூழலில், ஸ்டாமர் தனது பதவியைத் தொடர்வது கட்சிக்கே பாதகமாக இருக்கலாம் என்ற உணர்வு உருவாகியுள்ளது.

    அரசியலில், சில நேரங்களில் விலகுவது தோல்வி அல்ல.

    அது ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கும் தீர்மானமாகும்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல், புதிய சமநிலையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

    பழைய அரசியல் வரையறைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

    தலைமை, கொள்கை, மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகள் இவை அனைத்தும் புதிய வடிவம் எடுக்கின்றன.

    இந்த மாற்றத்தின் மையத்தில் நின்று, கியர் ஸ்டாமரின் விலகல் ஒரு முடிவாக அல்ல, ஒரு புதிய அரசியல் கட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது தற்காலிகமாக அனுகூலம், ஆனால் நீண்டகாலத்தில் சிக்கலும் உள்ளது.

    கியர் ஸ்டாமரின் ராஜினாமா லேபர் அரசின் மீதான சோர்வை அதிகரித்து, ஆளும் தரப்பில் குழப்பத்தை உருவாக்குவதால் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களுக்கு தாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

    குறிப்பாக “நிலைத்தன்மை” மற்றும் “ஆட்சி மாற்றம்” என்ற கதையை அவர்கள் முன்வைக்க முடியும் .

    ஆனால் 2024 பொதுத்தேர்தல் படுதோல்விக்குப் பிந்தைய பலவீன நிலை, கட்சிக்குள் தலைமைத் தெளிவின்மை, மற்றும் Reform UK-க்கு வாக்குகள் சிதறிச் செல்லும் அபாயம் காரணமாக, இந்த நெருக்கடி அவர்களுக்கு தானாகவே மீட்சியை தராது.

    மொத்தத்தில், இது கன்சர்வேடிவ்களுக்கு ஒரு வாய்ப்பும் ஒரு எச்சரிக்கையும் சேர்ந்த நிலை.

    ஸ்டாமர் விலகலால் அரசியல் விவாதத்தின் மையம் மீண்டும் ஆட்சியின் செயல்திறன், பொருளாதாரம், மற்றும் தலைமை நம்பகத்தன்மை என்பவற்றுக்கு திரும்புகிறது.

    இது கன்சர்வேடிவ்களுக்கு தாக்குப்பிடிக்க உதவும்.

    ஆனால் அவர்கள் தங்களை நம்பத்தகுந்த மாற்றாக காட்ட முடியாவிட்டால், அந்த அதிருப்தியின் பலனை Reform UK அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

    எனவே இந்த சூழல் கன்சர்வேடிவ்களுக்கு உடனடி அனுகூலம், ஆனால் அடிப்படை ரீதியில் இன்னும் பெரும் சிக்கலே .

    லிபரல் டெமகிரட்ஸ் க்கு இது பொதுவாக அனுகூலமான சூழல்.

    பெரிய இரண்டு கட்சிகளின் மீதான அதிருப்தி அதிகரிக்கும் போது, லிபரல் டெமகிரட்ஸ் பல இடங்களில் “நேர்மையான, மிதமான, உள்ளூர் பிரச்சினைகளை கவனிக்கும்” மாற்று சக்தியாக தங்களை முன்வைக்க முடியும்.

    குறிப்பாக நடுத்தர வர்க்கம், கல்வி பெற்ற வாக்காளர்கள், மற்றும் லேபர்-கன்சர்வேடிவ் இரண்டிலும் ஏமாற்றமடைந்தோர் இவர்களை நோக்கி நகர வாய்ப்பு உண்டு .

    தலைமை மாற்றமும், ஆட்சிக் குழப்பமும் அதிகமாகும் காலங்களில், அவர்கள் நிலைத்தன்மை மற்றும் சமநிலை எனும் அரசியல் மொழியை வலுப்படுத்தி, உள்ளூர் தேர்தல்களிலும் இடைத்தேர்தல்களிலும் முன்னேற முடியும் .

    ஆனால் அவர்களுக்கு சிக்கலும் இல்லாமல் இல்லை.

    நாட்டளவில் ஆட்சி மாற்றத்தின் வெற்றிடம் உருவானாலும், லிபரல் டெமகிரட்ஸின் ஆதரவு பெரும்பாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே வலிமை பெறும்.

    அதை தேசிய அரசியல் அலைக்காற்றாக மாற்றுவது கடினம்.

    மேலும், அதிருப்தி வாக்குகள் எல்லாம் ஒரே நேரத்தில் அவர்களிடம் வருவதில்லை.

    அவை சில நேரங்களில் Reform UK-க்கும், சில நேரங்களில் கன்சர்வேடிவ் மீள்சீரமைப்புக்கும் சிதறிவிடும் .

    எனவே இவர்களுக்கு இது “வாய்ப்புள்ள காலம்” என்றாலும், அதை பெரும் இடைநிலை வெற்றியாக மாற்றத் தெளிவான பிரச்சாரமும் உள்ளூர் அமைப்பும் அவசியம்.

    இது ஒரு தனிப்பட்ட அரசியல் கதையாக மட்டும் அல்ல.

    இது இங்கிலாந்து ஜனநாயகத்தின் இயக்கத்தின் ஒரு பிரதிபலிப்பு.

    Share