வரலாறு சிரிக்கும் மன்னர் மாண்பு
சேசாத்திரி ஸ்ரீதரன்
பண்டைக் காலப் படை என்றதுமே நமக்கு நினைவில் வருவது தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, கால் ஆட்படை இவையே. இதற்கு மேல் படை குறித்து நமக்கு ஒன்றும் தெரியாது. நாற்படைகள் இருந்தாலும் படை வீரர் அத்தனை பேரும் ஒரே சமமான அந்தஸ்தில் இருந்தனரா என்றால் இல்லை என்பதே விடை. தேர்ப்படை, யானைப் படைகள் பெரும்பாலும் வேந்தர், மன்னர், அரையர், படைத் தளபதிகள் போன்றோரால் செலுத்தப்பட்டன. அடுத்ததாக குதிரைப்படை. இதில் தகுந்த பயிற்சி உடைய போர் வீரர்கள் மட்டுமே குதிரை ஏறிப் போர் புரிந்தனர். எல்லா வீரரும் குதிரை ஏற முடியாது. இந்தியாவில் குதிரைகள் அரேபியாவில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டன. இங்கே குதிரை இனப்பெருக்கச் சூழல் இல்லை என்பதே இதற்கு காரணம். இந்த குதிரைப் படை வீரர்களை விட மிக எளியோர் காலாட் படைவீரர்கள். இவர்கள் ஈட்டி, வேல், வாள், கோடாலி ஏந்திப் போரிட்டனர். இவர்கள் தான் போர்க்களத்தில் தேர், யானை, குதிரை வீரர்களுக்கு சூழ்காவலாய் இருந்தவர்கள் என்ற போதும் அந்தஸ்தில் அவர்களைவிட தாழ்ந்தவர்கள். இன்றும் கூட படையில் மேல் பதவிகள் கீழ்ப் பதவிகள் என்று இருப்பதை அறியலாம். இந்த அந்தஸ்து படையின் செயற்பாட்டிற்கும் மதிப்பிற்கும் தக்கவாறு அமைந்தது. இந்த அந்தஸ்து பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் தொழிலுக்கு தரப்பட்ட முக்கியத்துவ அடிப்படையில் அமைந்தது. படையில் இருந்த இந்த அந்தஸ்து நிலை தான் பின்னாளில் இந்தியச் சமூக நிலையிலும் மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கியது.
இப்படி படையில் சேர்ந்து போர்க்களத்தில் நேரடியாகப் போரில் பங்குபெறுவோர் என்று இல்லாமல் படைக்கு தேவையான சில துணைத் தொழில்களும் இருந்தன. காட்டாக, ஆயுதம் செய்யும் கம்மியத் தொழிலான உலைக்களப் பணி, குதிரைச் சேணம், அம்பாரி செய்யும் பணி, தேர் செதுக்கும் பணி என்று சில துணைத் தொழில்களும் இருந்தன. இது போக படை மக்களுக்குத் சமையல் செய்வோர், நீர் மொண்டு வருவோர், பாதையில் குறுக்கிடும் புல், பூண்டு, செடி, கொடிகளை அகற்றுவோர், குதிரை இலத்தி யானை இலண்டம் அள்ளுவோர், குதிரை யானைகளுக்கு புல், தழை இடுவோர், போரில் காயமுற்றோர் இறந்தோரை களத்தில் இருந்து அகற்றுவோர், வீரர்கள், குதிரைகள், யானைகளின் போர்க் காயம் ஆற்ற மருத்துவர்கள், மூலிகை பறிப்போர் எனப் பல பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் போரிடாவிட்டாலும் படைக்கு மிக இன்றியமையாதவர்கள். இவர் இல்லாவிடின் படையை நடத்துவதோ பேணுவதோ மிகக் கடினம். ஆனாலும் போரில் உயிர் துறக்கும், வெற்றி தேடித் தரும் வீரர்களை விட குறைவாகவே இவர்கள் மதிக்கப்பட்டனர். மன்னர்களும், படைத் தளபதிகளும் இவர்கள் பணியைக் குறைவாகவே மதிப்பிட்டனர். ஒரு படை வீரனும் காவல் காப்போனும் தகுதியால், மதிப்பால் ஒன்றல்ல என்பதையே கல்வெட்டுகள் காட்டுகின்றன. காவல் காப்போரிலும் வாயில் காப்போர், சிறைக் காப்போர், அரண்மனை உட் காவலர் ஆகியோரில் தகுதியும் மதிப்பும் வேறுபட்டிருந்தன. அரண்மனைக் காவலர் உயர்குடியினராக நம்பிக்கைக்கு உரிய தம் சாதி மக்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் வாயில் காப்போருக்கு குறைவான மதிப்பே இருந்தது.
இந்நாளில் ஒரு தொழிலகத்தில் பணிபுரியும் மேலாளர், பணியாளர் பதவியால் பொறுப்பால் வேறுபட்டாலும் பணி முடிந்த பின் இருவரும் ஒரே நாட்டின் சம அந்தஸ்துள்ள குடிமக்கள் என்று கருதி நடத்தப்படுகின்றனர். ஆனால் அந்நாளில் இப்படியான நிலை இருக்கவில்லை. பணி முடிந்த பின்னும் ஒரு கீழ்நிலைப் பணியாளர் மேல்நிலை அதிகாரிக்கு எந்நேரமும் கட்டுப்பட்டவர். இதற்கு வேலைநேர வரம்பு இன்மையே முகமைக் காரணம் ஆகும். பணியாளர் மட்டுமல்ல அவன் குடும்பத்தாரும் அதிகாரிக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலை தான் இருந்தது.
ஒரு அரசன் தன் குடிமகன் என்ற அளவிலாவது தன் படை, காவல் கீழ்நிலைப் பணியாளரை நல்ல முறையில் நடத்த வேண்டும், நல்ல கருத்து கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் பல்லவர் காலத்திலும், பேரரசுச் சோழர் காலத்திலும் பார்க்கப்பட்டது. ஆனால் 13 ஆம் நூற்றாண்டளவில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடுநாடு எனப்படும் வாணகோப்பாடியை ஆண்ட வாணகோவரையரும் கிளியூரில் இருந்து ஆண்ட மலையமான்களும் தம் படையினரில் கீழ்நிலைப்பணியாளரை தரக்குறைவாக எண்ணியதும் நடத்தியதும் அவர்களுடைய புனிதமான கோவில்களில் கல்வெட்டாக பதிவாகி உள்ளன என்பது அவர்களது அதிகாரத் திமிரையும் ஆணவத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. படைப் பணியாளருக்கே இப்படியானால் இன்னும் உள்ள படைச்சாரா பணியாளரை அவர்கள் எப்படி நடத்தியிருப்பர்? இத்தகு தரக்குறைவான கல்வெட்டுகள் நடுநாடு தவிர்த்து தொண்டை நாட்டிலோ கொங்கு நாட்டிலோ சோழ நாட்டிலோ அல்லது பாண்டிய நாட்டிலோ காண்பதற்கு அரிதாகவே உள்ளன. மன்னர்கள், அரையர்களின் இத்தகு நடக்கை உடனே அடுத்த நிலை அதிகாரத்தவர், படைத் தளபதிகளுக்கும் பரவி உள்ளது. பின்பு அது மெல்ல சமூகத்தில் புலையர், வெட்டியான், பறையருக்கு இழிவான அந்தஸ்தை ஏற்படுத்தியது. படைத்துறையில் கீழ்நிலைப்பணி அதனால் தான் இந்த இழிவு என்றால் சமூகத்திற்கு அதனால் என்ன பாதிப்பு வந்தது? ஏன் அந்த இழி கருத்தை சமூகமும் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த இழி கருத்து அடுத்தடுத்த நூற்றாண்டில் மேலும் வலுப்பெற்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி ஆளும் அதிகாரத்தாரால் அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று வளர்ந்த போது இந்த சமூகத்தால் அதை எதிர்க்க முடியாமல் போனது. இறுதியில் அது தீண்டாமையாக 16 – 17 ஆம் நூற்றாண்டில் அயல் மொழியார் ஆட்சியில் வடிவம் கொண்டது. அதற்கு முன் இவர்களுக்கு தீண்டாமைக் கொடுமை இல்லை. எந்த மன்னராட்சியிலும் சமத்துவம் இருந்ததில்லை. வேட்டைச் சமூகத்தோடு சமத்துவம் ஒழிந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் புரட்டி உருட்டுவது என்னவோ மதமும் மதசுயநலவாதிகளும் தான் வேற்றுமையை விதைத்தனர் என்பர் நிலவுடமை சாதியார்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த முக்காலமும் அறிந்த சப்தரிஷிகளான பிரபாது ரஞ்சன் சர்க்கார், ஈசுவர பட்டர் ஆகியோர் இன்றைய எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் நாடாண்ட மன்னவர்களே காரணம் என்றனர். கீழ் உள்ள கல்வெட்டுகளையும் விளக்கத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு முகவுரையாகவே மேற்கண்ட தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்து விளங்கிக் கொள்ள முடியாவிட்டால அதை விட அவமானம் வேறு இல்லை. அயல் மொழியாரின் பொய்களுக்கு காலம் எல்லாம் கட்டுண்டு கிடக்க வேண்டியது தான். இனி கல்வெட்டுகள்
வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதிரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளியன ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 27 வது பாண்டியநாடு கொண்டானான சம்புவராயநும்
- செங்கேணி அத்திமல்லந் வீராண்டானாந எதிரிலி சோழச் சம்புவராயநும் அத்திமல்லந் பல்லவாண்டானான குலோத்துங்க சோழச் சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான இராசராசச் சேதிராயநும் கிளி
- யூர் மலையமான் ஆகாரசூரந்நான இராசகம்பீரச் சேதிராயனும் குந்தந் நம்பூரலான இராசராச நீலகங்கரையனும் அம்மைஅப்பந் மருந்தந்நான இராசராச மூவேந்தரையனும் பாவந்தீத்தாநான இராஜேந்திர சோழச் சம்புவராயன் மலையன் நரசிங்க பந்மனான கரிகாலசோழ ஆடையூர் நாடாழ்வானும்
- சோமன் திருவெண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கநும் சோமந் வரந்தருவானான சோளேந்திரசிங்கப் பிருதிகங்கனும் இவ்வனைவோம் எங்களில் இசைந்து கல்வெட்டினபடியாவது நாங்கள் ஒருகாலமும் இராஜகாரியத்துக்குத் தப்பாமே நின்று சேதிராய தேவர் அருளிச் செய்தபடியே பணி
- செய்யக்கடவோமாகவும் இப்படி செய்யும் இடத்து மகதை நாடாழ்வானான வாணகோவரையனும் குலோத்துங்க சோழ வாணகோவரையனும் பக்கல் ஆளாதல் ஓலையாதல் போகக் காட்டுத்தல் உறவுபண்ணுதல் அறுதிசெய்தல் செய்யக்கடவோ மல்லாதோமாகவும் இவர்கள் அநுதாரத்துள்ளார் ப
- க்கல் ஆளாதல் ஓலையாதல் போகக்காட்டி சில காரியம் பார்த்தல் உறவு அறுதி செய்தல் செய்யக் கடவோமல்லாதோமாகவும் இவர்களும் யிவர்கள் ளநுதாரத்துள்ளார் பக்கலி நின்றும் ஆளாதல் ஓலையாதல் வந்த துண்டாகில் தேவர் சீபாதத்திலே போகக் காட்டக் கடவோமாகவும் இராசராச சேதிராயர் பக்கல் இரா
- சகாரியத்துக்கும் சேதிராயதேவர் கருமங் எங்களில் ஒருவர் காரியத்துக்கு விரோதமாயிருப்பன சொல்லி ஆளாதல் ஓலையாதல் போகவிடக்கடவோ மல்லாதோமாகவும் இவரும் அனுதாரத்துள்ளார் பாடு நின்றும் இப்படி சொல்லி வந்ததுண்டாகில் இப்படிக்கு இசையாதே சேதிராயதேவர் _ _ _ ட்டக்கடவோ
- மாகவும் நாங்கள் அனைவரும் எங்களில் ஒருகாலமும் ஒருவர் வேறுபடாதே இராஜகாரியத்துக்கு தப்பாதே நின்று சேதிராயதேவர் அருளிச்செய்தபடி பணி செய்யக்கடவோமாகவும் எங்களில் ஒருவர் வேறுபட நின்று இராஜகாரியத்துக்கும் சேதிராயதேவர் காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச் சில காரியம் பார்த்தாருண்டாகில் _ _ _
- ய்து தேவரும் நாங்களும் இவனை அறச்செய்யக்கடவோமாகவும் எங்களிலே ஒருவரை வாணகோவரையனாதல் குலோதுங்க சோழ வாணகோவரையனாதல் இராசராச காடவராயனாதல் வினை செய்தாருண்டாகில் படையுங் குதிரையும் முதலுக்கு நேராகக்கொண்டு _ _ _ _
- தக்கடவோமாகவும் இப்படிக்கு ஒருகாலமும் தப்பாதே நின்று செய்யக்கடவோமாகவும் இப்படி செய்திலோமாகில் வாணகோவரையனுக்கு கடை கா _ _ _ பறையற்க்கு செருப்பு எடுக்கிறோம். இப்படி சம்மதித்து
- உடையார் திருவண்ணாமலை உடைய னாயனார் கோயிலிலே கல்வெட்டிக் குடுத்தோம் இவ்வனைவோம்.
தப்பாமே – பிசகாமல்; அருளிச்செய் – சொல்லி ஏற்படுத்திய; பக்கல் – பக்கம் சாய்தல்; அனுதாரம் – பின்பற்றிகள், followers; அற – இல்லாமல் போ; வினை – போர்; கடைகாக்கும் – வாயில் காக்கும்
விளக்கம்: மதுரையும் ஈழமும் கருவூரும் ஆள்பவரை வென்று பாண்டியன் மணிமுடியும் கைப்பற்றி மன்னித்து அருளின மூன்றாம் குலோத்துங்கனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு1205 இல் பாண்டியநாடு கொண்டனான சம்புவராயனும் செங்கேணி அத்திமல்ல எதிரிலிச் சோழச் சம்புவராயனும் அத்திமல்லன் பல்லவாண்டனான குலோத்துங்க சோழ சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான இராசராச சேதிராயனும் கிளியூர் மலையமான் ஆகாரச்சூரண் இராஜகம்பீரச் சேதிராயனும் குந்தன் நம்பூராலான இராசராச நீலகங்கரையனும் அம்மையப்ப மருந்தனான இராசராச மூவேந்தரையனும் பாவம் தீர்த்தானான இராசேந்திர சோழ சம்புவராயனும் மலையன் நரசிங்கபன்மனான கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வானும் சோமன் திருவாண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிரிதிகங்கனும் சோமன் வரம்தருவானான சோழேந்திரசிங்க பிரிதிகங்கனும் ஆக 11 அரச குலத்தோர் ஒன்றுகூடி இந்த அனைவரும் கருத்தொற்றுமையுடன் கல்வெட்டிக்கொண்டது யாதெனில், “நாங்கள் ஒருகாலமும் மன்னனது அரசியல் செயற்பாட்டிற்கு பிசகாமல் உறுதியாகத் துணை இருந்து சேதிராயர் ஏற்படுத்தியபடி வேலையாற்றுவோம் இப்படி பணியாற்றும் போது மகதை ஆளும் வாணகோவரையன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் பக்கம் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், நன்மை தீமைகளுக்கு உறவு காட்டுதல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். வாணகோவரையரை பின்பற்றுவோர், நன்மதிப்பை விரும்புவோர் பக்கமும் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், சில வேலைகள் செய்து கொடுத்தல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். இவர்களுக்கு மட்டுமல்லாது இந்த பின்பற்றிகளின் பின்பற்றிகளாவோர், நன்மதிப்பு கொண்டோர் பக்கத்தில் இருந்து நம் பக்கம் சேருவதற்கோ, ஓலை பெறவோ சமயம் உண்டானால் சேதிராயர் திருக் கால்களில் போகும்படி காட்டுவோம். இராசராச சேதிராயரிடம் இருந்து அரசு காரியம் செய்வது சேதிராயர் வேலை, எங்களில் ஒருவரது வேலைக்கு பகையாய் இருப்பதைச் சொல்லி பக்கம் சேரல், ஓலை அனுப்பல் செய்யவிட மாட்டோம். இவர்களும் தம் பின்பற்றிகள் பக்கம் நின்று அதற்கு ஆதரவாக சொல்லிவருவது உண்டானால் அவ்வண்ணம் செய்யாதே சேதிராயரிடம் போகும்படி காட்டுவோம். நாங்கள் ஒருபோதும் கருத்து வேறுபடமால் இருந்து அரச காரியத்தில் பிசகாமல் இருந்து சேதிராயர் காரியத்திற்கு எங்கள் காரியத்திற்கும் எதிராக சிலர் வேலை செய்தால் சேதிராயரும் நாங்களும் இவரை இல்லாமல் அழிப்போம். எங்களில் ஒருவரை மகதை வாணகோவரையனோ அல்லது குலோத்துங்க சோழ வாணகோவரையனோ அல்லது இராசராச காடவராயனோ போருக்கு அழைத்தால் படை, குதிரையைக் கொண்டு நேராக போர் தொடுப்போம். இதை ஒருகாலமும் பிசகாமல் செய்வோம். இப்படி செய்யாமல் போனோமானால் மகதை வாணகோவரையனின் அரண்மனை வாயிலைக் காக்கும் பறைய காவலருக்கு காலில் அணிந்து கொள்ள செருப்பு தூக்குவோம். இதற்கு ஒப்புக்கொண்டு திருவண்ணாமலை இறைவன் கோவிலில் கல்வெட்டுவித்தோம் இந்த அனைவரும் என்று சூளுரைத்தனர்.
இதில் எந்த சேதிராயன் சார்பாக இவர்கள் இருக்கின்றனர் என்பதை பெயர் சொல்லித் தெளிவாகக் கல்வெட்டில் குறிப்பிடவில்லை. இவர்கள் வாயிற்காவல் பறையருக்கு செருப்பு தாங்குகிறேன் என்றதன் மூலம் பறையரை இழிக்கின்றனர் இன்பத்தை உணர முடிகிறது. சேதிராயனுக்கும் வாணகோவரையனுக்கும் ஏதோ பகை உள்ளதை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. அதனால் இவர்கள் இன்றைய NATO படை அமைப்பு போல போர்ப் படை ஒப்பந்தம் போட்டுவிட்டனர்.
அரண்மனை என்பது பல நாட்டவர், பண்டிதர், தூதுவர், அரச பிரதிநிதிகள் என பலரும் வந்து போகும் ராஜ வீதியில் அமைந்திருக்கும். அது காட்டிலோ அல்லது ஒதுக்குபுரத்திலோ அமைந்திருப்பதல்ல நகரத்தின் நடுவே அமைந்திருக்கும். எனில் அந்த அரண்மனையின் வாயில் காக்கும் பறையர் தாமும் அதே ராஜவீதி வழியாகவே வந்தாக வேண்டும். இது 13 ஆம் நூற்றாண்டில் பறையர் தீண்டாமை இருந்ததில்லை என்பதற்கு வலுவான சான்றாகிறது. ஆனாலும் சாதிமுறையாக அல்லாமல் தொழில்முறையாக பறையர் இழிவு அரசர்களால் 13 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.
பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 106 (Ariep 516 of 1902)
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறையின் முன்புற மண்டபத்தின் கிழக்குபுறச் சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 35 வது ஐய்யர்
- பொன்பரப்பின வாணகோவரையர்க்கும் ஐய்யர் குலோத்துங்க சோழ வாணகோவரையர்க்கும்
- மைச்சுனனார் காடவராயர்க்கும் செங்கேணி அம்மைஅப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழச் ச
- ம்புவராயநேன் ஆறகளூரில் திருக்காமீசுரமுடையார் கோயிலிலே தப்பாமைக்கு அடர்முறைமை சொல்
- லிக் கல்லு வெட்டிக்குடித்த பரிசாவது என்னக்கும் என் த_ _ _ றைக்கும் இவர்கள் விரோதமாய்த் தப்பின் ஒழி
- ய்தல் செய்வித்தல் செய்யாதேய் என்னை நோக்கக் கடவர்களாகவும், இவர்களுக்கு நான் உள்ளதனையு
- ம் ஒருநாளும் தப்பாதே இருக்க கடவேனாகவும் தப்பினேநாகில் எங்களுக்கு இன்னாதாராய் வ
- ருகிற மும்மலராயர்களுக்கும் மற்றும் என் சத்துருக்களாயிருப்பார்க்கும் செருப்பும் தம்பலமு
- ம் எடுத்தேநாகிறேன். பல்லவரையன் சத்தியமேய் இப்படி தப்பினேநாகில் அப்பாண்
- டார்க்கு பிறந்திலேநாகிறேன். இப்படிக்கு கல்லு வெட்டிக்குடுத்தேன் எதிரிலி சோழச் சம்
- புவராயனேன்.
தப்பாமை – பிசகாமை; அடர்முறைமை – மாறாமை, பிடிப்பு; பரிசு – ஏற்பாடு; இன்னாதார் – பகைவர்;
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆட்சி ஆண்டு 1213 இல் பொன்பரப்பின வாணகோவரையனுக்கும் குலோத்துங்க சோழ வாணகோவரையனுக்கும் இவர் மைத்துனர் காடவராயருக்கும் செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழ சம்புவராயன் அறகளூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் செய்து கொடுத்த சூளுரை இது. கொண்டநிலை பிசகாமல் மாறாதிருக்கும் முறையை அறிவித்து இக் கல்வெட்டுவித்த ஏற்பாடு யாதெனில் எனக்கும் என் தலைமுறைக்கும் இவர்கள் எதிராக திறம்பி அழிக்காமல் என்னை நட்புடன் பார்க்க வேண்டும். இவர்களுக்கு நான் உயிருடன் உள்ள வரை ஒருநாளும் பிசகாமல் உண்மையாய் இருப்பேன். அப்படி பிசகினேனாயின் எமக்கு பகைவராய் உள்ள மும்மல ராயர்களுக்கும் என் பகைவர்களுக்கும் காலில் அணிய செருப்பும் வாயில் மெல்ல வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தவன் ஆவேன். இது பல்லவராயன் சத்தியம் நடக்கும். இப்படி செய்யாமல் போனால் நான் என் தந்தைக்கு பிறவாமல் வேறு ஒருவனுக்கு பிறந்தவன் ஆவேன் என்று கல்வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழ சம்புவராயன். முதல் கல்வெட்டில் சம்புவராயர்கள் சேதிராயனுக்கு ஆதரவாக வாணகோவரையனுக்கு எதிராக இருந்ததைக் கண்டோம். ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சம்புவராயன் இன்னொருவன் வாணகோவரையனை ஆதரிப்பதை இந்த கல்வெட்டில் காண்கிறோம். அணி மாறுவது தான் மன்னராட்சி அரசியல்.
பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், ஆசிரியர் வில்லியனூர் ந. வெங்கடேசன், பக்.66 & AR No 453 of 1913; சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள் பக்.34
வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 7 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு 17 வது ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராஜராஜ தேவன் வாணகோவரையனேன்
- உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்க்குத் திருமடைப்பள்ளிப்புறமாக நாயநார் பொன்பரப்பின பெருமாளுக்கு நன்றாக பொன்பரப்பின பெருமாள் ச
- ந்திக்கும் எடுத்ததுவல்ல பெருமாள் திருநாளைக்கும் முடலாக விட்ட ராஜராஜ வளனாட்டு வாணகோப்பாடி பெண்ணை தென்கரை மேல் குந்றாநாட்டு கூவனூர் நா
- ற்பா லெல்லைக்குள்ளும் ஏந்தல் தாங்கல் உட்பட்ட நன்சை நிலமும் மேனோக்கின மரமுங் கீழ்நோக்கின கிணறுந் தரியிறை தட்டார்பாட்டம் ஆள்அமஞ்சி யெற்சோறு
- குற்றத்தெண்டம் பட்டிதெண்டமும் மற்றும் எப்பேற்பட்ட பல்லாயங்களும் உட்பட உடைய நாயநாற்கு தேவதானமாக சன்திராதித்தவரை செல்வதாக விட்டேன்
- வாணகோவரையனேன். மாறுவான் சிவத்துரோகியுமாய் மோவாய் புக்கு முலை யெழுன்தானுமா யொருவனுக்கும் யொருத்திக்கும் பிறன்தானு மல்லாதானாய் கோமாங்கிசத்தை
- பூஜிப் பானுமாய் கெங்கையிடை குமரியிடை குரால்பசு கொன்றான் பாவம் கொழ்வான் . இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.
பெருமாள் – மன்னன், வேந்தன்; உடலாக – மூலதனமாக; விட்ட – கொடுத்த; ஏந்தல் – ஆழமில்லா ஏரி, முலை எழுந்தான் – அலி; கோமாங்கிசம் – ஆவின் புலால்;
விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 1233 இல் ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராசராச தேவ வாணகோவரையன் இறைவன் திருவண்ணாமலை உடைய அப்பனுக்கு திருமடைப்பள்ளி அன்றாட்டுக்கு தலைவர் பொன்பரப்பின மன்னனுக்கு உடல்நலம் நன்றாகும் பொருட்டு பொன்பரப்பின மன்னர் பெயரில் அமைந்த சந்தி பூசைக்கும் எடுத்ததுவல்ல மன்னன் பெயரில் அமைந்த திருநாளுக்கும் மூலதனமாகக் கொடுத்த ராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி வடபெண்ணையாற்று தென்கரையில் உள்ள மேற்கு குன்றானாட்டு கூவனூரின் நான்கு பக்க எல்லைக்குள்ளே ஆழமில்லா ஏரி, தேக்கம் உட்பட நஞ்செய் நிலமும் அதில் மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு தறியால் வந்த வரி, தட்டார் தந்த வரி, நீர்நிலை பேணும் கட்டாய ஊழியம் (ஆளமஞ்சி), பொது ஊழியருக்கு பகலில் கொடுக்கும் சோறு (எச்சோறு), குற்றத்தால் வரும் தண்டத் தொகை, பசுக் கொட்டில் வரி, இன்னும் எப்பேர்பட்ட பல வரிகளும் உட்பட இறைவருக்கு தேவதானமாகச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை இருக்கக் கொடுத்தேன் வாணராயன். இதை இல்லாமல் செய்பவன் சிவத்துரோகி ஆவான். வாயுள் புகும் முலை எழும்பிய அலி ஆவான். முறையாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறவாத பரத்தை மகன் ஆவான். ஆவின் புலாலைப் பூசனை செய்பவன் ஆவான். கங்கைக்கும் குமரிக்கும் இடையே குரால் பசுவைக் கொன்ற பாவம் கொள்வான். இதை சிவனடியார் காக்க வேண்டும்.
இந்த மன்னன் அலியை இகழ்கிறான். அலிக்கு பாலுணர்வு ஏற்படும் போது முலை எழும் என்று குறிப்பதை வைத்து இவனது அரண்மனையில் அலிகள் இருந்துள்ளனர் என்று தெளிவாவதோடு அரசர் அலிகளுடன் பாலுறவு கொள்பவர் என்றும் தெரிகிறது. அரசர் என்போர் இப்படித்தான் நடத்தை கெட்டவராய், ஒழுக்கம் கெட்டவராய் (debauch) இருந்தனர். ஒருவரது சிந்தையும் செயலுமே ஒருவரது பேச்சில் வெளிப்படும் என்பது இந்த மன்னனது ஏச்சில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 80, AR No 490 of 1902
திரு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் இரண்டாம் பிரகாரம் நடுவிடம் 8 வரிக் கல்வெட்டு
- 13 வது ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பினான குலோத்துங்க சோழ வாணகோவரையணயற்குத் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான் எ
- ங்களில் நாடு நிற்குமிடத்து ஆழ்வினையாற்றுக்குத் தெற்கு இவற்கு நிற்கவும் இவ்வாற்றுக்கு வடக்கு எனக்கு நிற்கக் கடவதாகவும் கிழக்கு நாடு நிற்குமிடத்துக் கல்லியா
- டவதாகவும் எங்களிலிருவோமும் நாங்களுள்ளதனையும் பிழையாதே நின்று இராசகாரியஞ் செய்யினும் வன்னியஞ் செய்யினுங் கூடவே செய்யக் க
- டவோமாகவும். இவற்கு வினையுண்டாகுல் என் முதலிகளும் படையுங் குதிரையும் புகவிட்டு என் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவேனாகவும் இ_
- வனாகவும் எனக்கு வினையுண்டா _ _ கில் இவருந் தம் முதலிகளும் ப_ _ குதவிட்டுத் தம் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவராகவும். இத்தாலும் நோ _ _
- ழ மலையகுலராயன் வினையிடைப்பாட்டம் என்னுடனே கூட நோக்கித்தகடவராகவும் என் _ _ மென்று சொன்னாரை முதல்மையாக்கி பரிசரிக்கக் _ _
- காமையானுக்கு என் பெண்டுகளைக் குடுத்தேனாவேன். இப்படிக்கு ஆறகளூரில் உடையார் திருக்காமீசுரமுடைய கோயிலிலே கல்வெட்டுக் கு _ _ _
- குலராயன் எழுத்து
நிற்க – எல்லையாகக் கொண்டு ஆள; பிழையாதே – பிழறாது; வினை – போர்; முதலிகள் – படைத்தலைவர்கள்; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; முதல்மையாக்கி – முன்னிலைப்படுத்தி; பரி – குதிரை; சருக்க / sarga – குதிரை இலத்தி (சாணம்), ஸர்க என்பது சமசுகிருத சொல்.
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு 13 ஆம் ஆட்சி ஆண்டு 1191 இல் ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையருக்கும் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமானுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை அறிக்கை இது. எங்களுடைய ஆளுகையானது அழ்வினை யாற்றுக்கு (தென்பெண்ணை) தெற்கே மலையமானுக்கு செல்லவும் இந்த ஆற்றுக்கு வடக்கே எனக்கு செல்வதாகவும் இருக்கட்டும். கிழக்கு நாடு எல்லையாகும் இடத்தே கல் பாவிய பாதை அமைப்பதாகவும் ஒப்புக்கொண்டோம். எங்களில் ஒவ்வொருவரும் நாங்கள் உயிருடன் உள்ள வரை பிழறாது எங்கள் பகுதியிலேயே இருந்து அரச வேலை செய்யும் போதும், ஆட்சி செய்யும் போதும் ஒன்று சேர்ந்தே செய்வோமாக உறுதி பூண்டோம். இவர் ஆளுகையில் போர் உண்டானால் என் படைத் தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க்களத்தில் புகவிட்டு அதை எனது போர் போலவே ஏற்றுக்கொண்டு பார்ப்பேன். அதே நேரம் என் மீது போர் உண்டானால் மலையமானும் இவருடைய படைத்தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க் களத்தில் புகவிட்டு அதை தம் போராகவே ஏற்றுக் கொண்டு பார்க்க வேண்டும். இத்தோடு மலையமான் போர்ச்செய்யக் கொள்ளும் வரியையும் என்னோடு உடன் இருந்து கவனிக்கவேண்டும். என் சொல்லை நான் தவறினால் என்னை இகழ்பவரை முன்னிறுத்தி என் மனைவிமாரை குதிரை இலத்தி அள்ளும் காமையானுக்கு கொடுத்தவன் ஆவேன் என்கிறான் வாணகோவரையன். இப்படியாக ஆறகளூருடைய காமீசுவரர் கோவிலில் கல்வெட்டிக் கொடுத்தேன். இது (வாண) குலராயன் எழுத்து. இது NATO உடன்பாடு போல ஒரு போர் ஒற்றுமை ஒப்பந்தம் ஆகும். பாகூர் புலவர் செ குப்புசாமியின் “வரலாற்று வடிவங்கள்” என்ற நூலில் பக். 147 இல் எலவானாசூர் சிவன் கோவில் கல்வெட்டு எண் 46 இல் குலோத்துங்க சோழனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் ஏற்பட்ட இதே படை உடன்படிக்கையை காண முடிகிறது. அதில் மலையமான் சூரிய தேவர் நீரேற்றானும் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையனும் தமது நாடு எல்லை இது என்று வரையறுக்கின்றனர். ஆனால் தந்தையர் காலத்தில் ஏற்பட்ட இந்த உடன்படிக்கை மலையமான் மகன்கள் ஆட்சியில் தகர்ந்து போனதை முதலில் விளக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அறிந்து கொள்ள முடியும்.
இங்கே குதிரை சாணம் அள்ளும் காமையான் எந்த சாதி என்பதை அறிய முடியாமல் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதை பிற கல்வெட்டுகளைப் பார்த்து ஊகிக்கலாம்.
பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், பக். 67, வில்லியனூர் ந. வெங்கடேசன் AR No 440 of 1913 & சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 49, எண் 38, அ. கிருட்டினன்
தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீழுர் வீரட்டானேசுவரர் கோவில் வடக்கு சுவர் 13 வரிக்கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச் சக்கரவத்திகள் சீ குலோத்துங்
- க சோழ தேவற்கு யாண்டு 33 வது ஆற்றூர் கூ
- ற்றத்து ஆறகளூருடைய மகதேசந் இராசராச தேவந்
- பொந்பரப்பிநாந் வாணகோவரையந்நேந் உடையார்
- திருவீரட்டாநமுடைய நாயநாற்கு திருமேற்ப்பூச்சுக்கும் திருப்ப
- ரி சட்டத்துக்கும் திருக்கோயிலுக்கும் திருமடை விளாகத்திலும் உள்ள குற்ற
- தெண்டமும் தறியிறை காசும் கடையிறையும் கந்நாரிறையும் ஆசு
- வி காசும் படித்தெண்டமும் திருநாளில் சீ பாதம் தாங்க வாரா
- த ஆட் தெண்டமும் விளக்காள் தெண்டமும் உடையாற்கு விட்
- டு கல்வெட்டிநேன் வாணகோவரையநேன் இது இறங்குவா
- ந் குரால் பசுத் திந்றார் பாவமும் கொண்டு நாந் ஏறுகிற குதிரைக்கு பு
- ல் போடுகிற பறையநுக்கு தந் மணாட்டியை குடுப்பாந் இக்
- _ _ _ _ ஸ்வர ரக்ஷை.
பரிசட்டம் – இறைவனுக்கு உடுத்தும் ஆடை; இறக்குவான் – அழிப்பான்; மணாட்டி – மனைவி
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 33 ஆம் ஆட்சி ஆண்டு 2011 இல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகளூரில் இருந்து ஆளும் மகதேசன் இராசராச தேவன் பொன்பரப்பினான் வாணகோவரையன் இறைவன் திருவீரட்டானமுடைய அப்பனுக்கு திருமேனியில் பூசவும், ஆடை சாற்றவும், திருக்கோவிலுக்கும் திருமடைவிளாகத்தில் வாழ்வோரிடம் திரட்டப்படும் குற்ற தண்டனைக் காசு, தறி வரியும், கடை வரியும், கல்நார் வரியும், ஊர்காவல் ஆசுவிகள் கொள்ளும் காசும், படிக்கடப்போர் செலுத்தும் தண்டம், ஊரில் விளக்கு ஏற்றி அணையாமல் காப்போர் கட்டணம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்துக் கல்வெட்டுவித்தேன் வாணகோவரையனேன். இதை அழிப்பவர் குரால் பசு தின்றவன் கொள்ளும் பாவத்தைக் கொள்வதோடு நான் ஏறுகிற குதிரைக்குப் புல் போடுகிற பறையனுக்குத் தன்னுடைய மனைவியை கலவிக்கு கொடுப்பான் ஆவான். இது சிவனடியார் காப்பு.
மன்னன் கூறும் இந்த பறையர் இழிவு பிறந்த சாதியால் வந்த இழிவல்ல மாறாக அவர் செய்யும் கடைநிலைத் தொழிலால் வந்த இழிவு ஆகும். பிற்காலத்தில் இதுவே மேட்டுக்குடிப் படைசாதிகளால் சாதிப்பிறப்பு இழிவாக ஆக்கப்பட்டது. ஆனால் வாளோ வேலோ ஏந்தாத பிராமணர் படை நடத்தி வந்து தமிழகத்து புத்த மக்களை இந்துக்களாக மாற்றியதாகவும் ஆனால் இந்துவாக மாறாமல் புத்த மதத்தவராகவே இருந்த பறையரை தீண்டாமைக்கு உட்படுத்தி சேரியில் தள்ளிவிட்டனர் என்றும் அசோக மௌரியர் ஆட்சி தமிழகத்தில் பரவாததால் இங்கு பரவாத புத்த மதம் பரவி இருந்ததாக கற்பனையாக எழுதி பிராமணர் வெறுப்பை வளர்த்தும் தம் இனத்தார் கிருத்துவ மதத்தை தழுவவும் தவறாக வழிநடத்திச் சமூகக் கேடு (social disservice) செய்தவர் கற்பனை எழுத்தாளர் அயோத்திதாசர். இவரது கற்பனைக்கு கல்வெட்டு, செப்பேடு சான்று ஏதும் இல்லை என்பதே உண்மை. இப்படி தம் இனத்தாரை தவறாக வழிநடத்தியதால் பட்டியலின மக்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வீண் விரையம் ஆயின, பொன்னான காலம் பாழாய்ப் போனது. உண்மையாக பறையர் தாழ்விற்கு படைச்சாதி ஆண்ட பரம்பரை நிலவுடமை சாதியே காரணம் என்று சொல்லி இருந்தால் போராட்டம் அவர்களை எதிர்த்து நடந்திருக்கும். இதனால் இன்னும் பல கீழ்வெண்மணி நிகழ்வுகள் நடந்திருத்தாலும் வெற்றி உறுதி என்ற இலக்கை நோக்கி நகர்ந்திருக்க முடியும். இதை நடக்க விடாமல் செய்தார் அவர். தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு சொந்த சிந்தனை ஏதும் கிடையாது. திராவிடவிய, தலித்திய கருத்தியல் கற்பனைக் கதைகளைக் கடன் பெற்றுத் தான் அரசியல் பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்த கல்வெட்டுகளைப் படித்தாவது கற்பனையை விட்டு உண்மையின் பக்கம் வருகின்றாரா என்று பார்க்கலாம். பழி ஒரு பக்கம் குற்றம் ஒரு பக்கம் என்பதை இவர்கள் உணரட்டும்.
click https://www.facebook.com/reel/1505189110410648
பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7, எண் 912, AR 288 of 1902
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அயன்பேரையூர் முக்குடீஸ்வரர் கோவில் தென்புறச்சுவர் 23 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ
- இராஜராஜ தேவற்கு யாண்டு 25 வது 100 நூ
- று அபர பக்ஷத்துப் புதன் கிழமையும் பெற்ற திருவோ
- ணத்து நாள் ஸ்வஸ்திஸ்ரீமநு மஹாப்ரதானி
- குமரதேவண்ண தண்ட நாயக்கநேன் வ
- ன்னாட்டு பேரவூருடையார் திருமுக்கூடலு
- டைய நாயனார் தேவதாநம் நன்செய் புன்
- சை செம்பை இராஜராஜ தேவனான வாண
- கோவரையன் விட்டப
- டியே 25 ஆவது ஆனி மாதம் முதல் சந்
- திராதித்தவரையும் செல்லக் கடவதாக
- இறையிலியாக விட்டோம். இந்தச் சிவகா
- ரியத்துக்கு விக்நம் நிநைத்தாருண்டாகி
- ல் சிவத்துரோகியும் நாட்டுத்துரோகியு
- மாய் என் குதிரைக்குப் புல்லிடும் பறைய
- னுக்குத் தன் மினாட்டியை குடுப்பான்
- இப்படிக்கு _ _ _ _
- தேவதானம் கல்வெட்டிக் குடுத்தே
- ன் குமார தேவண்ண தெண்டநாயக்
- கநேன். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.
- சிவமஸ்து. அறஞ்செய்தான் செய்தா
- ன் அறங்காத்தான் பாதடி திறம்பாம
- ல் சென்னிமேல் வைத்து. ஸிவமஸ்து.
அபரபக்ஷம் – தேய்பிறை; விக்கினம் – தடை
விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 25 ஆம் ஆட்சி ஆண்டு 1241 இல் நாள் நூறு தேய்பிறை புதன்கிழமை அன்று திருவோண நாளில் படைத்தலைவர் குமார தேவண்ண தண்ட நாயக்கன் வன்னாட்டு பேரவூருடைய இறைவன் வெள்ளாறு, கல்லாறு, உப்பாறு கூடும் திருமுக்கூடலூருடைய அப்பனுக்கு தேவதானமாக நஞ்செய், புஞ்சை நிலங்களை செம்பை இராசராச தேவனான வாணகோவரையன் கொடுத்தபடியே இராசராச சோழனின் 25 ஆம் ஆண்டு ஆனி மாதம் சந்திராதித்த வரை தொடரட்டும் என்று இறையிலியாக கொடுத்தோம். இந்த சிவகாரியத்திற்கு எவரேனும் தடை ஏற்படுத்த நினைத்தால் அவர் சிவத்துரோகியும் ஊர்த்துரோகியும் ஆவார். என் குதிரைக்கு புல் போடும் பறையனுக்குத் தன் மனைவியை புணர்வதற்கு அனுப்புவான் ஆவார். இப்படியாக தேவதானத்தை கல்வெட்டிக் கொடுத்தேன் குமார தேவண்ண தண்ட நாயக்கனேன். இது சிவனடியார் பாதுகாப்பு. சிவமாகுக. இந்த அறம் செய்தானே தக்கது செய்தவன். இந்த அறங்காத்தன் பாதஅடியை பிழறாமல் என் தலைமேல் வைத்துக் கொள்வேன். சிவமாகுக.
கன்னடப் படைத் தளபதியும் பறையரை இழிவு செய்கிறார்.
பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 44
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர் 9 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு யாண்டு இருப
- த்தேழாவது வாணகோவரையன் செம்பை இராஜராஜ தேவனேன் கல்
- வெட்டிக் குடுத்த பரிசாவது வாலிகண்டபுரத்து உடையார் திருவா
- லீஸ்வரமுடைய நாயனாற்கு திருநாமத்துக் காணி இறையிலியாக
- ப்ரஹ்மதேசம் நன்செய் புன்செய் நான்கெல்லையும் சந்திராதி
- த்தவரையும் செல்வதாக கல்வெட்டிக் குடுத்தேன் செம்பை இராஜராஜ தே
- வனேன் இது மாறுவான் ஏழாநரகத்துக் கீழா நரகம் புகுவான் எ
- ன் குதிரைக்குப் புல்லிடுகிற பன்மையானுக்கு தன் மிணாட்டியைக்
- குடுப்பான். இது வல்லவரையன் சத்தியம். இப்படி மாஹேஸ்வர ரக்ஷை.
பரிசு – ஏற்பாடு, வகை, விதம்; திருநாமத்து காணி – நேரடியாக இறைவன் பெயரில் நிலம்; பன்மையான் – பருத்தவன், தடியன்
விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் செம்பை (ஜம்பை) இராசராச தேவ வாணகோவரையன் கல்வெட்டிக் செய்து கொடுத்த ஏற்பாடாவது வாலிகண்டபுரத்து இறைவர் திருவாலீசுவரமுடைய அப்பனுக்கு அவர் பெயரில் நிலத்தை இறையிலியாக பிரம்மதேசம் என்னும் ஊரில் நஞ்செய், புஞ்சை நிலங்கள் நான்கு எல்லையும் சுட்டினேன். இது சந்திர சூரியர் உள்ள காலம் வரை போவதாகக் கல்வெட்டிக் கொடுத்தேன் செம்பை இராசராச தேவன். இதை மாற்றுபவன் ஏழாம் நரகத்திற்கும் கீழான நரகத்திற்கு போவான். மேலும் என் குதிரைக்கு புல் போடுகிற தடியனுக்கு தன்னுடைய மனைவியை கூட்டிக் கொடுப்பான் ஆவான். இது வல்லவரையன் சத்தியமாக நடக்கும். இதை சிவனடியார் கூட்டம் காக்க வேண்டும். தடியன் எந்த சாதி என்ற குறிப்பு கல்வெட்டில் இல்லை.
பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 234
பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையார் கோயில் கருவறை வடக்கு மேற்கு குமுத பீடம், அர்த்த மண்டப வடக்கு சுவர் குமுத பீடம் 5 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஏழாவது மேஷநாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமியும் திங்கள் கிழமையும் பெற்ற சோதி நாள் வடகரை கரிகால கன்ன வளநாட்டு மேல்கரை நாட்டு உடையார் திருஆலந்துறையுறை உடைய நாயனார்ச் சித்திரைத் திருநாள் எழுந்தருளுகையில் இரா(ஜ)ரா(ஜ) தேவன் வாணகோவரையனேன் கும்பிட்டு திருவோலக்க மண்றபத்தே வினோ
- தேவாசிரியன் திருவுறைக்கூட வாசலாலே ஒரு சற்பம் திருவோலக்க மண்டபத்தே புகுந்து இதுக்குப் பட்டர்களை அழைத்து ப்ராயச்சித்தங் கேட்க உடையாற்க்கு சில தேவதானமும் மஹாயேசுரற்க்குச் சில பூமிதானமும் பண்ணவேணுமென்று விதிக்கையில் உள்ளூர்த் தேவதான இறையிலியாகையாலே மேல்கரை நாட்டவரை அழைத்து உங்கள் நாட்டு நாயனார் திருஆலந்துறை உடைய னாயனாருக்கு உங்களூர்கள்
- கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர்_ _ _ புன்செயிலும் நன்செ குழி இருநூறும் இறைஇலியாக கு
- டுத்தோம் இராராதேவரான வாணகோவரையனேன். இவ்வூர் (தந்மத்துக்கு யாதாமொருவன் அகிதம் செய்தால் என்) குதிரைக்கு புல்லிடும் வெட்டியானுக்குத் தன் பெண்டாட்டியைக் குடுத்தவனாவான். இது பன்மாஹேச்வர ரக்ஷை.
- இவை வாணகோவரையன் எழுத்து. ஸ்வஸ்திஸ்ரீ
மேழ நாயாற்று – சித்திரை மாதம்; பூர்வபக்ஷம் – வளர்பிறை; சோதி நாள் – சுவாதி நட்சித்திரம்; பட்டர் – குருக்கள்;
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 1185 இல் சித்திரை மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் திங்கட்கிழமை சுவாதி நட்சத்திரத்து அன்று வடகரை கன்னவளநாட்டில் மேல்கரை நாட்டின் இறைவர் திருவாலந்துறையில் இருக்கும் அப்பன் சித்திரைத் திருநாளில் எழுந்தருளிய போது இராசராச தேவன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் இறைவனை கும்பிட்டு வந்த போது திருவோலக்க மண்டபத்தே வினோ தேவாசிரியன் திருவுறைக் கூட வாயிலில் ஒரு பாம்பு திருவோலக்க மண்டபத்தே புகுந்து போனது. இதற்கு குருக்களிடம் கழுவாய் என்ன என்று கேட்ட போது இறைவனுக்கு சில ஊர் தானமும் மகேசுவரர்களுக்கு பூமி தானமும் கொடுக்க வேண்டும் என்று சொல்லினர். இது உள்ளூரில் கொடுக்க வேண்டிய தேவதான இறையிலி ஆவதால் மேல்கரை நாட்டவரை வரவழைத்து உங்கள் நாட்டின் இறைவன் திருவாலந்துறை ஈசனுக்கு உமது ஊர்கள் கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர் ஆகிய ஊர்களில் புஞ்சை நஞ்சை நிலங்களில் 200 குழி வாங்கி இறையிலி தானமாக கொடுத்தேன் இராசராச தேவ வாணகோவரையன். இந்த கொடைக்கு யாரேனும் ஒருவன் கேடு செய்தால் என் குதிரைக்கு புல் போடும் வெட்டியானுக்கு தன் மனைவியை புணரக் கொடுத்தான் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும். இது வாணகோவரையன் நேரடி எழுத்து. நன்மங்கலம் உண்டாகட்டும்.
இந்த கல்வெட்டில் வெட்டியான் அகப்பட்டுக் கொண்டான். எத்தனையோ பல சாதிகள் இருக்க புலையர், பறையர், வெட்டியான் போன்றோர் மட்டும் இவ்வாறு இழிவு படக் காரணம் என்ன? ஆரியக் குதிரைக்கு புல் போட்டதே காரணம். இவர்கள் இதில் இருந்து தப்பி இருந்தால் வேறு ஏதோ ஒரு சாதிமார் குதிரைக்கு புல் போட்டு இவ்வாறு அகப்பட்டிருப்பர். நாடாண்ட மன்னனை ஞாயத்திற்கு உட்படுத்தாமல் அவன் வீரத்தையும் கொடையையும் புகழ்ந்துவிட்டு மதத்தையும் பார்ப்பானையுமா கேள்வி கேட்பது? இது தமிழர்க்கு அறிவுடைமையா?
பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 12 & பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள்,பக். 128/129 இல. தியாகராஜன்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் ஆலந்தூர் நகர் வௌவால்கரட்டின் மேல் பாறையில் உள்ள 16 வரிக்கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ நன் மங்கல
- ம் சிறக்க திரிபுவனச் சக்கரவர்திகள்
- திரு வீரராஜேந்திர சோழ தேவற்கு
- யாண்டு ஆறாவது சேல நாட்டு
- பொன்பரப்பியில் நக்க சோழங்க தேவர்
- முதலிகளில் நங்கள்மரான சோழகோனே
- ன் ஆலந்தூரில் ஈசான தேவர் நாயனாற்கு
- என்னேரியில் கழனியிலே பத்துக் கழனி
- நாயனாற்கு விட்டேன் சோழங்க தேவர்
- திருமேனிக்கு நன்றாக விட்டேன். இத்தன்ம
- ம் இறங்காமே கொண்டு பெருகுமவன்
- அவன் சீ பாத மிரண்டும் என் தலைமேல்
- யித்தன்ம மிறங்கப் படுத்துவனுக்கு
- என் குதிரைக்கு புல் சுமக்கும்
- பறையனுக்கு தன் மிணாட்டியைக்
- குடுப்பான்
முதலி – படைத்தலைவன்; பெருகு – வாழ், வளர்;
விளக்கம்: கொங்கு சோழன் வீரராஜேந்திரன் கோநேரின்மை கொண்டான் என்ற பட்டம் உடையவன் ஆதலால் இந்த வீரராசேந்திரன் மூன்றாம் குலோத்துங்கனையே குறிக்கிறது எனக் கொள்ளப்படுகிறது. அவனது ஆறாம் ஆட்சி ஆண்டு 1184 இல் சேலம் நாட்டில் பொன்பரப்பியில் நக்கசோழங்க தேவர் என்ற அரையனுக்கு படைத்தலைவர்களாக உள்ளவர்களில் நங்கள்மரான சோழகோன் என்பவர் ஆலத்தூரில் ஈசானதேவ இறைவனுக்கு அவரது ஏரியில் அமைந்த கழனியில் பத்து கழனி நிலம் இறைவனுக்கு தானமாகக் கொடுத்தார். இதை தன் அரையன் சோழங்க தேவன் உடல்நலம் தேறும் பொருட்டு கொடுத்தார். இந்த கொடையை அழிக்காமல் வாழ்பவன் திருப்பாதம் இரண்டும் என் தலைமேல் வைப்பேன். இதை அழிப்பவன் என் குதிரைக்கு புல் சுமந்து வரும் பறையனுக்கு தன் மனைவியை புணரக் கொடுக்கட்டும் என்று சபிக்கிறான்.
இக்கல்வெட்டில் ஒரு படைத்தலைவன் தன் குதிரையை பேணுபவன் மீது கொண்ட இழிவுக் கருத்து வெளிப்பட்டுள்ளதானது பொதுவாகவே படை மேல்மட்டத்தாரிடம் தொழில் ஏற்றத்தாழ்வு எண்ணம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த படையினர் பிள்ளைகள் குதிரை பேணுபவர் பிள்ளைகளை இதே முறையில் தானே ஏளனம் செய்வர்? இந்த தொழில்முறை இழிவு தான் பிறப்புவழி இழிவாக காலப்போக்கில் 13 ஆம் நூற்றாண்டிற்கு பின் மாறியது. ஆனால் சனாதனம், மனுதர்மம் தான் பிறப்பு இழிவை ஏற்படுத்தியதாக ஆதாரம் இன்றி பொய் உரைக்கின்றனர். இந்த பொய் எழுந்த தமிழ்நாட்டிலேயே இந்த பொய்க்கு கல்வெட்டுகள் சம்மட்டி அடி கொடுக்கின்றன என்பது பிரகிருதியின் விளையாட்டு தானே.
பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 30, எண் 17, அ. கிருட்டினன்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்து திருவாலீசுவரர் கோவில் மகாமண்டபத் தென்பகுதி மேற்கு சுவரில் (1008 லிங்கம் உள்ள அறை) பொறிக்கப்பட்ட 9 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ போசள வீரசோமீஸ்வர தேவரைசர் ஓலை வன்னாட்டு வா
- லிகண்டபுரத்து உடையார் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோயில் தா
- னத்தார் கண்டு திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு 27
- வதில் தாதி பதுமவ்வை நமக்கு நன்றாக ஒரு சந்தி அமுது செய இன் நா
- ச்சியார் ஸ்ரீ கத்தத்து நீர்வாத்து இந்நாட்டு சிறுகூடல் ஏரிகீழ் நஞ்செய் நில
- த்து தேவதான இறையிலியாக இட்ட நிலம் அரை. இந்நிலம் அரை
- க்கும் திருச்சூல தாபனம்பண்ணித் திருக்கற்றளியிலே நம் சாதனப்
- ட்டி கல்வெட்டி கொள்வதே. இதுமாறுவான் தந் மிணாட்டியை பு
- லையற்கு குடுப்பாந். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.
கண்டு – பார்வைக்கு; தானத்தார் – கோவில் பொறுப்பாளர்; தாதி – வைப்பாட்டி; ஸ்ரீ கத்த – கெண்டி; சாதனப்படி – ஆவணப்படி; மாகேஸ்வரர் – சிவனடியார்
விளக்கம்: போசள வேந்தன் வீர சோமேஸ்வரனின் நேரடி ஓலை ஆணை இது. வன்னாட்டில் அமைந்த வாலிகண்டபுரத்து ஈசர் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோவில் பொறுப்பாளர் பார்வைக்கு வைப்பது யாதெனில் மூன்றாம் இராசராச தேவரின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் சொல்லியது. என் வைப்பாட்டி பதுமவ்வை என் உடல் நன்றாக ஒரு சந்திக்கு அமுது படைக்க வேண்டி இவளது கெண்டியால் நீர்வார்த்து இந்நாட்டில் சிறுகூடல் ஏரியின் கிழக்கே நஞ்செய் நிலத்தை தேவதான இறையிலியாக கொடுத்த நிலம் அரை மாவா? என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இந்த அரை நிலத்துக்கும் திருசூலக் கல்நாட்டி கோவிலிலே என் ஆவண ஓலைப்படி கல்வெட்டிக் கொள்க. இந்த ஏற்பாட்டில் இருந்து திறம்புபவன் தன் மனைவியை புலையர்களுடன் கலவி கொள்ள அனுப்புபவன் ஆவான். இது சிவனடியார் பாதுகாப்பு.
நலிந்து போன சோழப் பேரரசு போசள வேந்தனால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்ட இரட்டை ஆட்சிக் காலம் இது. இங்கே கன்னட போசள வேந்தன் புலையரை இழித்து பேசுகிறான். இதே நூலில் பக்கம் 233 – 234 இல் இடம் பெறும் கல்வெட்டு எண்: 293 இல் “அழித்தாருண்டாகில் எங்கள் குதிரைக்கு புல்லிடும் புலையர்க்கு தங்கள் மினாட்டிகளை குடுப்பார்களாகவும்” என்று உள்ளது. இது புலையர் படைக் குதிரையைப் பேணியதைச் சுட்டுகிறது.
பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள்; இல. தியாகராஜன், பக். 235
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகுபாடி காசி விசுவநாதர் கோயில் முன் கிடக்கும் கல் பலகையில் உள்ள 15 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு 2 வது திருப்பழனத்து உடையார்
- தொண்டைமானார் பூசற் செய்ய விட்டு கிடு இருந்து இடத்து இராவினையாக பாண்
- டியராயன் வந்து வளைந்தவிடத்து ஒளியன் பெற்றாந் ஆரியனை வெட்டிப்
- பிடித்து கிடு வந்து தொண்டைமானாரோடுங் கூட குலோத்துங்க வாணக வ
- ரையர் சீ பாதத்தேய் கண்டா இடத்து இவனுக்கு தண்டேறு வரிசையுங் குடுக்கப் புக்
- க இடத்து இவ் ஒளியின் பெற்றான் தெண்டனிட்டு அடியேனுக்கு இவை
- வேண்டாம் தண்டலையிற் பொய்கை ஈசுவரமுடைய நாயனார் கோ
- யில் திருக்கற்றளிச் சாத்த அன் நாயநாற் திருநாமத்துக் காணியில் பண்
- டாரத்துக் கிறுக்கிற சீகாரியப் பேறும் தூதவரி அடியேனுக்குத் தந்தருள
- வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய அப்போதேய் புரவரி முதலிகள் நால்வரு
- ம் எழிதிய எழுத்திட்டு திருவெழுத்துஞ் சாத்தி திருமுகப் பிரசாதம் பெற்று விடை கொ
- ண்டு போந்தேன் ஒளியன் பெற்றாநேன் இந்த திருநாமத்துக் காணிக்கு ந
- ன்செய் புன்செய் நத்தம் இதுக்கு விலங்கல் சொல்லுவான் தங்களம்மைக்கு
- த் தாநே மிணாளன் தன் உடன் பிறந்தாள் முந்தானை பிடிச்சாநாவான் இதுக்கு வி
- லங்கல் சொல்லாதவன் சீபாத மென் தலைமேலய்
பூசல் – போர்; உடையார் – மன்னர்; கிடு – படைக்கலப் பாசறை; இராவினை – இரவுப்போர்; வளைந்த – சூழ்ந்த; தண்டு ஏறு – படை கடத்தல், படைக்குள் புகல்; திருச்சுற்றளி – பிரகாரம்; திருநாமத்துக் காணி – இறைவன் பெயரில் வழங்கிய நிலம்; விலங்கல் – இடர், இன்மை
விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு 1218 இல் திருப்பழனத்து மன்னன் தொண்டைமான் என்வன் பாண்டியப் படையெடுப்பை எதிர்த்துப் போர் புரிகிறான். அவன் தன் படையினரை போர் செய்யவிட்டு படைக்கலப் பாசறையில் ஓய்வு கொண்ட போது இரவுப்போரில் பாண்டியன் அப்பாசறையை வளைத்து சூழ அப்போது ஒளியின் பெற்றான் என்ற படைத்தலைவன் பாண்டியப் படை ஆரியனை வெட்டிச் சிறைபிடித்து படைக்கலப் பாசறைக்கு பிடித்துவந்து தொண்டைமானோடு கூட குலோத்துங்க வாணராயரையும் பாதம் தொழுது நின்ற நேரத்தில் இவனுக்கு படையை கடந்ததற்கு பரிசு கொடுக்கப் போகும் நேரத்தில் இந்த ஒளியன் பெற்றான் தலைதாழ்த்தி அடியேனுக்கு இவை வேண்டாம் மாறாக தண்டலையில் (வரகுபாடி) உள்ள பொய்கை ஈசுவரமுடைய இறைவன் கோவிலில் பிரகாரம் கட்ட அந்த இறைவனுடைய திருநாமத்துக் காணியில் இருந்து கருவூலத்திற்கு செலுத்துகிற திருக்காரிய கட்டணமும், தூதவரியும் எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று வேண்டீடு செய்த போது அப்போதே அரசாங்க வரித்துறை அதிகாரிகள் நால்வர் எழுதிக் கையெழுத்திட்ட ஓலையில் மன்னர் கையெழுத்தும் இட்டு மன்னனின் வாழ்த்தும் பெற்றுக் கொண்டு விடை பெற்று வந்தேன் என்கிறான் ஒளியன் பெற்றான். இந்த திருநாமத்துக் காணியில் அடங்கும் நஞ்செய் புஞ்செய் நத்த நிலங்களுக்கு இடர் ஏற்படுத்துபவன் தன் தாயைத் தானே புணர்ந்தவன் ஆவான். தன் அக்காள் தங்கையின் முத்தானையை உருவியவன் ஆவான். இந்த அறத்திற்கு தடை சொல்லாதவன் திருப்பாதம் என் தலைமேல் வைக்கப்படும். ஒரு படைத்தலைவன் இவ்வாறு நாக்கூசும்படி சொல்வது படை உயரடுக்கில் ஏற்பட்டிருந்த எண்ணக் கேட்டையே வெளிப்படுத்துகிறது.
பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள், பக். 183/184, இல. தியாகராஜன்
வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் கோபுர இடது நுழை வாயிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு.
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்க்கு யாண்டு 20 உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்கு
- ஆறகளூர் சதிரன் வாணராயனேன் தேவதானமாக விட்ட பெண்ணை வடகரைச் செங்குன்ற நாட்டு கங்க நல்லூர் நாற்பாற்க்கெல்லைக் குள்ளும் நஞ்
- சை புஞ்சை யகப்பட விட்டேன் சதிரன் வாணராயனேன். இது மாறுவான் மிணாட்டியை பறையனுக்குக் குடுப்பான். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை.
அகப்பட – உட்பட, include; மாறுவான் – திறம்புபவன்
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டு 1198 இல் இறைவன் திருவண்ணாமலை நாயகனுக்கு ஆறகளூர் சதிரன் வாணராயன் தேவதானமாக பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்த செங்குன்ற நாட்டின் கங்க நல்லூரில் நாற்பால் எல்லைக் உள்ளே நஞ்செய், புஞ்செய் நிலங்களை கொடுத்தேன் இந்த சதிரன் வாணராயன் என்கிறான். இதை திறம்புபவன் தன் மனைவியை பறையன் கலவி கொள்ளக் கொடுப்பவன் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும் என்கிறான். இந்த வாணன் பறையர் குறித்து இழிவான கருத்து கொண்டிருந்தால் மட்டுமே இப்படி கூற முடியும். இது இவனது நேரடிக் கல்வெட்டு.
பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 139, AR No 548 of 1902
எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜ மலையகுலராயநான நீரேற்ற பெருமாளான எதிரிகள் நாயநுக்கு
- இவ்வேளக்காறியான தேவப்பெருமாளேன், எதிரிகள் நாயனுக்குப் பின்பு இருந்தேநாகில் என் மாடு ஓட்டிமாற்கு மண்டைய்யுமிட்டு இ
- வர்களுக்கு நீருங்குடுத்து இவர்கள் கலச் சோற்றையும் உண்கிறேன். என் மிணாளன் ஒடு என்னைச் சாவவேண்டாமென்பார் என் மி
- ணாளன் ஏறுகிற குதிரைக்குப் புல்லு இடும் காமிகந் எதிரிகன் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியையுங் குடுப்பான். நா
- ந் செயாதிருந்தேநாகில் என்னை நெருப்பில் கட்டி புகடுதல் கொல்லுதல் செய்தவன் தன் னோட்டயாற்கு தந் மிணாட்டியையுங் குடுத்து என்
- மிணாளன் ஏறுகிற குதிரைக்கு புல்லு இடுகிற காமிகநான எதிரிகள் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியை குடுப்பான் என்னைக் கண்டால் கொல்லாதான்.
வேளக்காரி – காவற் பெண்டு; மண்டையிட்டு – தலையால் பாதம் தொட்டு; ஓட்டையார் – மாடு அல்லது குதிரை ஓட்டி, driver; புகடுதல் – புகுத்துதல்;
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கிளியூர் மலையமான் சூரியன் நீரேற்றானான எதிரிகள் நாயனான இராஜராஜ மலையகுலராயனின் காவல் பணிக்கு சேர்ந்த தேவப்பெருமாள் என்ற பெண் உறுதி ஏற்கும் போது எதிரிகள் நாயன் இறந்த பின்னும் நான் உயிர் வாழ்வேனாயின் எனது வேலைக்காரர்களான என் மாடு ஓட்டிமார்க்கு மண்டியிட்டு வணங்கி அவர்கள் கைகால் கழுவ நீர் மொண்டு கொடுப்பேன். அவர்கள் எச்சில்பட உண்ட கலத்தில் மிகுந்து எஞ்சிய சோற்றை உண்பேன். இதே காவல் பணியில் சேர்ந்த அவள் கணவனோடு தானும் சாவேன் என்று உறுதிமொழி தருமிடத்து என்னை அவ்வாறு சாகவிடாமல் தடுப்பவர் தம் மனைவியை என் கணவன் ஏறும் குதிரைக்கு புல் போடுகிற காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுடன் கலவி கொள்ள தன் மனைவியை அனுப்பினவன் ஆவான். நான் அவ்வாறு சாகாது இருந்தேன் என்றால் என்னைக் கட்டி நெருப்பில் புகவிட்டுக் கொல்பவன் தன் மனைவியை தன் வண்டி ஓட்டிமார் கலவி கொள்ள அனுப்பினவன் ஆவான். என்னை உயிருடன் கண்டால் கொல்லாமல் விட்டுச் செல்லுகிறவன் தன் மனைவியை என் கணவன் ஏறுகிற குதிரைக்கு புல் போடும் காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுக்கு கலவி துய்க்க அனுப்பினவன் ஆவான்.
இந்த காவற்பெண்டு நெருப்பில் இட்டு கொன்றாலும் திட்டுகிறாள் கொல்லாமல் விட்டாலும் திட்டுகிறாள். இங்கு தான் குழப்பம் உண்டாகிறது. அப்படியானால் தன்னைக் குத்தியோ வெட்டியோ சட்டென்று கொன்றுவிட வேண்டும் நெருப்பில் மட்டும் இட்டால் அது பெருந் துன்பம் என்ற யாரோ ஒருவரது உடன்கட்டை ஏறிய துன்பத்தைப் பார்த்த அனுபவத்தில் இப்படி சொல்லி இருக்கலாம். தூங்குதலை கல்வெட்டுகளில் தன் தலைவன் இறந்தால் வீரன் தானும் சூளுரைத்தபடியே தலையை அரிந்து சாகிறான். அதே போல இந்த வேளக்காரப் பணிக்கும் தம் மன்னன் இறந்தால் இந்த அந்தரங்க காவல் பணிமக்களும் இறக்க வேண்டும் அதுவே நம்பிக்கைக்கு உரிய செயல் என்பதால் இப்படி உறுதி ஏற்கின்றனர் என்று தெரிகின்றது. ஒரு காவல் பெண்டு தன் பணியைவிட மாட்டு வண்டி ஓட்டும் பணியும் குதிரைக்கு புல்லிடும் பணியும் மிகத் தாழ்வானது என்பதை இங்கே உணர்த்துகிறாள். தானே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குற்றமும் புரியாத இன்னொருத்தன் மனைவியை அடுத்தவனுடன் கலவி கொள்வாள் என்று இவள் உரைப்பது இவளுக்கு ஞாய உணர்வு இல்லை என்பதையே உணர்த்துகிறது. ஒரு காவல் பெண்டே இப்படி என்றால் இதற்கும் மேல் பணியில் உள்ளோர், மன்னர், அரையரும் இப்படி தான் தாழ்வாக எண்ணி இருப்பார்கள் என்றே உணர்த்துகிறது இக்கல்வெட்டு. இது சாதிவழி வந்த இழிவு அல்ல மாறாக கீழ்மைத் தொழில் வழி வந்த இழிவு. இதை தான் மேட்டிமை மனநிலை என்பது. இந்த மேட்டிமையை மதமும் பிராமணருமா வளர்த்தனர்? இல்லையே. இது படை – காவல் (rank and file) ஏற்றத் தாழ்வு மேட்டிமை மனநிலை அன்றோ?
பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 54 பக். 153, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906
எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு
- எதிரிகள் நாயன் வேளக்காறன் திரிகை உடையான் எதிரிகள் நாயனுக்கு பி
- ன்பிருப்பான் தங்களமைக்குத் தாநே மிணாளன் எதிரிகள் ணாயனை தவிர
- என்னை சேவகங் கொள்வாந் தம் மிணாட்டிக்கு என்னை மிணாளநாக கொ
- ள்வான்
வேளக்காரன் – காவல் மகன்; மிணாளன் – கணவனைக் குறித்தாலும் இங்கு தவறான உறவு உள்ளவர் என்ற பொருள்; திரிகை – சக்கரம்
விளக்கம்: மலையமான் எதிரிகள் நாயனுடைய வேளக்காரன் திரிகை உடையான் எடுத்த உறுதி மொழி, “மலையமான் எதிரிகள் நாயன் சாவுக்குப் பின் சாகாமல் உயிருடன் இருப்பவன் தன் தாயுடன் கலவி கொண்டவனாவான். எதிரிகள் நாயனைத் தவிர்த்து என்னை வேறு ஒருவருன் பணியாளாகக் கொள்வானாயின் அவன் தன் மனைவியை என்னிடம் கலவிக்கு அனுப்பியவன் ஆவான்”.
ஒரு அகராதி வேளக்காரப்படை என்பது சோழரின் ஒரு படைப் பிரிவு என்கிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி அரசர்கள் போரில் அடிமை கொண்டு சிறைப்படுத்திய பகை நாட்டு அரசகுல பெண்டிரை காவல் காப்பவர் என்கிறது. இந்த கல்வெட்டிற்கு அரசனது அரண்மனை அல்லது அந்தரங்க இடத்து காவல் பெண், காவல் மகன் என்று கொள்வதே பொருத்தமானது.
பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 50, பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906
எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ எதிரிகள் நாயனுக்கு மொட்டயராய் வேளை புக்கு சாவாதே
- போவார். மிணாட்டி மிணாளந் தேவப்பிள்ளை எதிரிகள்
- நாயனுக்கு பிந்பு இருந்தேன்நாகில் எங்கள் அம்மைக்கு னானே
- மணாளன்
மொட்டையர் – மணமாகாதார் அல்லது ஆண்மை நீக்கியவர். மொட்டை என்றால் பொட்டை. ஆண் குறியும் விதையும் மழுக்கப் பட்ட அலி.
விளக்கம்: “மலையமான் எதிரிகள் நாயனுக்கு ஆண்மை நீக்கியவராக காவல் பணிக்கு போகிற அலிகள் அவன் இறந்த பின்னும் சாகாமல் உயிர் வாழ்வார். ஆனால் மனைவி கொண்ட கணவனாக தேவப்பிள்ளை நானோ எதிரிகள் நாயனுக்கு பின்னர் சாகாமல் உயிர் வாழ்ந்தால் என் தாயிடம் நானே கலவி செய்தவன் ஆவேன்” என்று உறுதி ஏற்கிறான்.
இப்படியான உறுதிமொழி அக்காலத்தே கட்டாயம் போலும். அதற்காக இப்படி நாக்கூசும் சொல்லாட்சி தேவையற்றது. மேலே உறுதி ஏற்கும் பெண்ணின் கணவன் இவன் என்று தெரிகிறது. அதோடு மன்னவர் அந்தப்புரத்தில் அலிகள் காவலுக்கு இருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே தேவப்பிள்ளை என்பவன் நான் அலிகளைப் போல் அல்லாமல் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்று அலிகளை மட்டம் தட்டுகிறான். அரண்மனைகளில் அலிகள் காவல்புரிவது முதன்முதலாக மேலை ஆசிய சுமேரியாவில் இருந்ததாகப் பதிவுள்ளது. காவலில் அலிகளை இந்தியாவிலும் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தியோர் மேலை ஆசிய வந்தேறி ஆட்சியாளர்களே என்பதில் ஐயம் இல்லை. கண்ணன் வழிகாட்டலில் அகத்தியருடன் தென்னகம் வந்த வேளிரில் மலையமான்களும் உண்டோ?
மீசை இல்லாதவரை பறையர்தாம் பெரும்பாலும் பொட்டை என்று திட்டுவர். ஒரு மீசையா வீரத்தையும் ஆண்மையையும் தீர்மானிக்கிறது, அதிலும் பிள்ளை பெற்றவனை பொட்டை எனத் திட்டுவது என்றால் இல்லை உயரமும் எடையும் தான் தீர்மானிக்கிறதே அன்றி மீசை அல்ல வீரத்தைத் தீர்மானிப்பது என்று சொல்லிவிட முடியும். என்றால் இப்படி மீசை இன்மையை இழித்துப் பழித்துப் பொட்டை என்று வாயாடுதல் அறிவுக்குறை அன்றோ? ஆம்! அது அறிவுமந்தம் தான். ஆயினும் ஒரு மூலம் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக பொட்டை என இழிக்கும் வழக்கம் பறையர்களிடம் தலைமுறை தலைமுறையாக வந்திருக்காது அல்லவா? மூலத்தை ஆராயுங்கால் இந்த வேளக்கார அலிகள் பறையரைத் தொழிலால் தாழ்த்தி இழுவுபடுத்தியதன் காரணமாகவே அந்த அலி வேளக்காரர்களை பதிலுக்கு பறையர் பொட்டை என்று இழிவுபடுத்துவாராயினர் எனக் கொள்ளமுடிகிறது. இப்படித் தான் பொட்டை என்று திட்டும் வழக்கம் அவர்களிடம் வழிவழியாக வேரூன்றி உள்ளது. இன்று அந்த அரண்மனைகள் இல்லை அதே நேரம் அலிகள் வேளக்காரராய் அல்லாமல் பிச்சைக்காரராய் உள்ளனர். எனவே பறையரின் இந்த அறிவுக் குறையை போக்க எவரேனும் அறிவுரை கூற முன் வரவேண்டும். அவர்களை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.
மீசை இல்லா அலெக்சாண்டர் படை மூன்று கண்டங்களில் தடுப்பார் இன்றி வெற்றிக் கொடி நாட்டியது. அதேபோல மீசையில்லா மங்கோலிய இன சப்பானியர் வீரத்தை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் முட்டாள்தனமாக “மீசை உள்ளவன் ஆம்பள, மீசை இல்லாதவன் பொட்டை” என்று வம்பு பேசி திரிகின்றனர். மீசை ஒன்றும் கிழிக்காது. நரம்பு வலுவும் தசை வலுவமே வீரனுக்கு காப்பு.
பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 51, பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906
எலவானாசூர் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு
- எதிரிக னாயனுக்கு வேளைபுக்கு எதிரிக னாயனுக்கு பிந்பு இ
- ருக்கும் வேளைக்காற மிணாட்டி மிணாளந் ஆள்ளுடையாந்நேன்
- நானும் எதிரிக நாயகநுக்கு பிந்பு இருந்தேநாகில் எந்நுடப் பிறந்
- தாளுக்கு நாநே மிணாளந். மொட்டையாய் கல்லு வெட்டி _ _ _ திருக் _ _ _ (கல்வெட்டு சிதைந்து விட்டது)
விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணியாகப் போய் எதிரிக நாயன் சாவிற்கு பின்பும் உயிரோடு இருக்கும் காவல் பணி மனைவி, கணவன்மார்களே ஆளுடையான் நான் சொல்வதைக் கேளுங்கள், நானும் உறுதி மொழி ஏற்கிறேன் “எதிரிக நாயன் மாண்ட பின்பு உயிரோடு இருந்தேனாகில் நான் என் உடன் பிறந்தாளோடு கலவி செய்தவனாவேன். நான் விதைகளும் தண்டும் மழித்து அலி ஆகிடுவேன் என்று கல்வெட்டி (கொடுத்தேன்) என்பதோடு கல்வெட்டு சிதைந்து விட்டதால் மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த உறுதிமொழியை இறவாத காவல் பணி இணையர் முன்பு ஆளுடையபிள்ளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இவனும் அலியை இகழ்கிறான். பெண்மை இல்லாதவனை நங்கை என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லால் திருநங்கை என்று குறிப்பது தவறு. திருநங்கை என்ற சொல்லாக்கம் தவறு. அலியே போதும்.
பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 52, பக். 152, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906
எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு
- எதிரிகள் நாயநுக்கு வேளைபுக்கு எதிரி நாயநுக்கு பிந்பு இருக்கும்
- வேளைக்காறர் மிணாளந் சூரியநேன் நானும் எதிரிக நா
- யகனுக்கு பிந்பு இருந்தேனாகில் எந்
- உடன் பிறந்தாளுக்கு நாநே மிணாளன்
புக்கு – போகும், சேரும்
விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணிக்கு போகும் எதிரிக நாயன் சாவுக்கு பின்னும் வாழப்போகும் வேளக்காரர்காள் நான் சொல்வது கேளுங்கள், “ஒரு பெண்ணுக்கு கணவனான சூரியன் எனும் பெயருடைய நான் எதிரிக நாயன் இறந்த பின் நான் உயிர் வாழ்வேனாகில் என் உடன் பிறந்தாளுடன் நான் கலவி கொண்டவனாவேன்” என்று உறுதிமொழி ஏற்கிறான்.
பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், எண் 53, பக்.153, புலவர் சு. குப்புசாமி
திருகோவிலூர் வட்டத்தில் வசந்தகிருஷ்ணபுரம் மேட்டுக்கொல்லைப் பாறை 5 வரிக் கல்வெட்டு
- உய்யக்கொண்டி வேளைக்காற தொண்ட
- மாற் படைச்சந் இவனுக்கு பின் இருப்பேனாகில்
- தம்மைக்குத் தாநேய் மிணாளன்
- கொண்டி வேளக்காறந் வாளி தொண்டமாந்
- இவநுக்கு பின்பு இருப்பார் தங்களம்மைக்கு மிணாளர்
கொண்டி – சிறப்பான, அடங்காத; படைச்சன் – படையாள்
விளக்கம்: மன்னர் பெயரும் ஆண்டுக் குறிப்பும் இல்லாத 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. உய்யக்கொண்டி என்னும் அடங்காத, சிறப்புடைய காவல் பணிக் குழுவை நடத்தும் தொண்டமானின் படையாள் இந்த தொண்டமான் இறப்பிற்கு பின் தான் உயிர் வாழ்ந்தேனாயின் என் தாயை நானே புணர்ந்தவன் ஆவேன் என்று சூளுரைக்கிறான். அடங்காத சிறப்புடைய காவல் பணிக்குழுவை நடத்தும் வாளி தொண்டைமான் இறந்தபின் உயிருடன் இருப்பவர் அவர் தம் அம்மைக்கு தாமே கலவியாளர் ஆவார். இங்கே தொண்டைமான் என்பவர் அரசன் அல்லன் ஆனால் ஏதோ ஒரு மன்னனின் காவல்பணிக் குழுவிற்கு தலைவன் ஆவான். அவன் மீது புதிதாய் சேரும் காவலர் சத்தியம் செய்கின்றனர். இரண்டு செய்திகளும் வெவ்வேறு காலத்தில் பொறித்தன போல உள்ளன.
பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 21
வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தென் பக்கத்தில் உள்ள முதல் பிரகாரத்தில் தரையில் பதித்த பலகைக் கல்லில் உள்ள 7 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கி யாண்டு 13
- ஆவது வாணகோவரையர் குணமந்தன் குறும்ப கோ
- லாலன் வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண்புலியூர்
- நாடன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரமதேயம் புலி
- யூர் நாடி ஸதுர்வ்வேதி மங்கலத்து ஏரிக்கு அறமாக குடு
- த்த பொன் முதல் இருபதின் கழஞ்சு துளைபொன் காற் ப
- லிசையால் ஆட்டு ஐங்கழஞ்சு பொன் பங்கினி பட்ட தலையா _ _
குணமந்தன் – குணக்குன்று; கொடுக்கன் – மகன்;
விளக்கம்: சோழன் முதலாம் ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டு 884 இல் வாணகோவரையர் குணம் நிறைந்தவன் குறும்பர் தம் தலைமைக் செங்கோலைக் கொண்டவன் வாணகோப்பாடி மன்னன் வயிரமேக வாணரைசன் மகன் சிற்றண்புலியூர் நாடன் திருவண்ணா நாட்டின் தேவதானப் பிரம்மதேச ஊர் நாடி சதுர்வேதி மங்கலத்தில் உள்ள ஏரியைப் பேண தர்மமாகக் கொடுத்த பொன் மூலதனம் 20 கழஞ்சு துளைப் பொன்னாகும். அதற்கு ஆண்டுக்கு கால் பொன் வட்டியாக ஐந்து கழஞ்சு பொன் பங்கு என்பதுடன் கல்வெட்டு சிதைந்துவிட்டது. அதனால் முழு விவரம் தெரியவில்லை.
இக்கல்வெட்டு முகமையாக தெரிவிக்கும் செய்தி வாணர் ஆடு மேய்க்கும் குறும்பர் இனத்தவர் என்பதே. வாணர் கோலாரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட கன்னடர் ஆவர். தமிழகத்தில் பல்லவர், முத்தரையர் கன்னியாகுமரி வரை பரவி ஆண்டது போல பரவி ஆண்டவர் வாணர்.
பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 65, பக். 32
இன்னும் சில கல்வெட்டுகளை காண click https://groups.google.com/g/vallamai/c/I8OUSI1Ipa8/m/3-GYDO4tAQAJ