குறளின் கதிர்களாய்…(497)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(497)
எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.
-திருக்குறள் -392(கல்வி)
புதுக் கவிதையில்…
பாமரர்
எண்ணென்று சொல்பவை
எழுத்தென்று சொல்பவை ஆகிய
இரண்டையும்,
அறிந்தவர்கள்
அகிலத்து மக்களுக்கு
அறிவைக் காட்டும்
கண்கள் என்பர்…!
குறும்பாவில்…
எண்ணென்றும் எழுத்தென்றும் அறியார்
கூறுமிரண்டையும் அறிந்தோர் உலக மக்களுக்கு
அறிவுகாட்டும் கண்களவை என்பார்கள்…!
மரபுக் கவிதையில்…
எண்ணென எழுத்தென அறியாதார்
எடுத்துச் சொல்லும் இவ்விரண்டை,
மண்ணதில் வாழ்ந்திடும் மக்களுக்கே
மதிப்பில் உயர்ந்த அறிவுகாட்டும்
கண்ணெனும் உறுப்பென உயர்ந்ததுவாய்க்
கருத்தில் கொள்ளச் சொல்வாரே
திண்ணமாய் அதனையே நன்கறிந்த
திறைமை யதுதான் மிக்கோரே…!
லிமரைக்கூ…
எண்ணும் எழுத்தும் என்றாய்
அறியார் கூறுமிரண்டை, உலகோர்க்கு அறிவுகாட்டும்
கண்களென்பர் அறிந்தோர் நன்றாய்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
கல்வி வேணும்,
ஒலக மக்களுக்கு
அறிவைத் தருற
கல்வி வேணும்..
எண்ணு எழுத்துண்ணு
அறியாதவங்க சொல்லுற
ரெண்டையும்,
நல்லா அறிஞ்சவுங்க
ஒலக மக்களுக்கு
அறிவக் காட்டுற
கண்ணுண்ணு சொல்லுவாங்க..
அதால
வேணும் வேணும்
கல்வி வேணும்,
ஒலக மக்களுக்கு
அறிவைத் தருற
கல்வி வேணும்…!