சைவத்தின் வழி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண், ஆஸ்திரேலியா

பக்தி என்னும் கருவினை எந்த மொழியும் இலக்கியம் ஆக்கியதே இல்லை. ஆனால் பக்தியை உயர்வாக்கிப் பார்த்து அதனை இலக்கியமாய் காட்டிய பெருமை எங்கள் அன்னைத் தமிழ் மொழிக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. “பக்தி இலக்கியம்” என்று ஒரு பெரும் பகுதியை தமிழ் மொழியானது தன்னுடை இலக்கிய வரலாற்றில் கொண்டிருக்கிறது என்பதும் முக்கியம் எனலாம். பக்தி இலக்கியம் என்னும் பெருவெளியில் ஆண்களும் வருகிறார்கள். பெண்களும் வருகிறார்கள். பக்தி இலக்கியப் பாதையில் முகிழ்த்த பாடல்கள் அத்தனையும் – இறையருளைப் பற்றியன வாக இருந்த பொழுதும்அவை அத்தனையும் அன்னைத் தமிழின் அழகோவியமாய்அருங்கருத்துக்களை அடக்கியவனாவாய்இலக்கியச் சுவைகளை ஈவதாய்புலவர்க்கெல்லாம் நல்விருந்தாய்தமிழுக்கே பெரும் பொக்கிஷமாய் வாய்த்த நல் வரமென்றே எண்ண வேண்டி இருக்கிறது. அந்தப்பக்தி இலக்கிய வெளியிலே காலத்துக்காலம் ஆண்டவன் அருளால் பல அருளாளர்கள் வந்து இணைகிறார்கள். அந்தவகையில் ஈழத்தில் நல்லை நகரில் நாவலர் பெருமான் வருகின்றார். அவரின் அடிபற்றி  எங்கள் சைவத்தின் கொழுந்து, சைவ வழி பற்றிட வருகின்றார் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்கள்.

காரைக்கால் அம்மையார்திலகவதியார்மங்கையற்கரசியார்வழியில் பயணப்பட வந்தமைகின்றவராய்  எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களைப் பார்க்கின்றோம். முன்னவர்கள் வாழ்ந்த காலமும்சூழலும் வேறாகும். அதனால் அவர்களின் செயற்பாடுகளும் அக்காலத்துக்கு இயைபானதாக ஆகியிருந்தது. ஆனால் தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்கள் வாழ்ந்த காலமும்சூழலும் – அவரின் செயற்படுகின்ற பாங்கினைத் தீர்மானித்தது என்பதை மனமிருத்துவது முக்கியமாகும்.

சாதாரண குடும்பத்தில் சாதாரண பிள்ளையாகவேதான் தங்கம்மா அவர்கள் பிறக்கிறார்கள். அவர் பிறக்கும் வேளை எந்தவொரு அதிசயங்களோஅற்புதங்களோ நிகழ வில்லை. சாதாரணமாகவே பிறந்தார். சாதாரணமாகவே படித்தார். சாதாரணமாகவே ஒரு ஆசிரியர் வேலையும் பார்த்தார். ஆனால் அவர் மற்றவர்களைப்போல்  “சாதாரண மானவர் அல்லசாதிக்கப் பிறந்த சன்லே எழுதி வைத்துவிட்டான் என்பதுதான் யதார்த்தமாகும். இப்படியானவர்களைத்தான்  “கருவிலே திருவுடையார்”, “வரம்பெற்று வந்தவர்”, என்று வியந்து நிற்கிறார்கள் போலும். வரம் பெற்மார்க்க நங்கை என்பதை இறைவன் ஏற்கனவே அவரின் பிறப்பிறு வந்த காரணத்தால், தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் – தம் காலத்தில் செய்ய வேண்டிய சிறப்பான அத்தனையும் செய்து பயன் மிக்கவராய் ஒளிவிட்டு நின்றார் என்றால் அஃது மிகையாகாது.

தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களைப் பல பரிணாமங்களில் பார்ப்பதுதான் உகந்ததாகும். சைவத்தை நன்கு கற்று சைவப் புலவர் ஆகுகின்றார். தமிழை முறையாகக் கற்று தமிழ்ப் பண்டிதர் ஆகுகின்றார். அத்துடன் ஆசிரிய பயிற்சியையும் பெற்று நல்லா சிரியராகவும் மிளிர்கிறார். 

இலங்கையின் பல பகுதிகளில் கற்பித்து யாவரையும் நன்கு அறிந்தும் கொள்ளுகின்றார். கற்பிக்கும் வேளை கருத்தூன்றிக் கற்பித்து கற்கின்றவர்கள் மனத்தில் நற்கருத்துக்களையும் ஊன்றுகின்றார். வேலைபார்த்த இடமெல்லாம் வேலையெனக் கருதாமல் அதனை ஆத்மார்த்தப் பணியாக அகமிருத்தி மேற்கொள்ளுகின்றார். ஆசியரியப் பணியை அகமிருக்கும் அழுக்குகளை அகற்றிடும் பணியாகவே எண்ணிச் செயற்படுகின்றார். இதனால் அன்னையாய், அறிவூட்டும் ஆசானாய் மதிக்கவும்படுகிறார் என்பதை மனமிருத்துவது அவசியமாகும்.

அழகானவர் தங்கம்மா அவர்கள். அறிவானவர் தங்கம்மா அவர்கள். இளமையில் அவரைப் பார்த்தவர்கள் அவர் வசம் ஈர்க்கவே படுவார்கள். சாதாரண பெண்தானே அவரும். ஆனால் அவர் மனத்தில் லெளகீகம் பற்றிய சிந்தனைக்கே இடம் இல்லாமல் போய் விடுகிறது. அவர் சிந்தனை எல்லாம் – சைவம் பற்றியும், சன்மார்க்கம் பற்றியும், சமூகம் பற்றியுமே சென்று விடுகிறது. இல்லறத்தில் தங்கம்மா அவர்கள் இணைந்திருந்தால் – சாதாரண ஒரு குடும்பத் தலைவியாய், பிள்ளைச் செல்வங்களுடன் வாழும் நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவரிடம் எழுந்த அரிய சிந்தனையால் – அனைவருக்கும் அன்னையாய், அநேக குழந்தைகளின் வழிகாட்டியாய், சமுதாயத்தின் சேவகியாய், சைவத்தின் காவலராய், தமிழ் பெரும் ஆளுமையாய், யவரும் வியந்து பார்த்து வாழும் வாய்ப்பு வாய்த்தது என்பதை எவருமே மறுத்து ரைத்து விடல் முடியாது.

தெல்லிப்பளையில் பிறந்தவர்தான் தங்கம்மா அவர்கள். அவரின் முன்வினைப் பயனாகவேதான் சாதாரண சிறிய கோவிலான துர்க்கை அம்மன் கோவில் தென்படுகிறது. அந்தத் துர்க்கை அம்மாதான் எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மாவின் வாழ்வி னையே மாற்றப் போகிறது என்பதை எவருமே எதிர்பார்க்கவே இல்லை. ஏன்.. தங்கம்மா அவர்களே எதிர்பார்த்திருக்கவும் மாட்டார். இதைத்தான் திருவருள் என்று எண்ணத் தோன்றுகிறது. தெல்லிப்பளையில் பிறந்தவரின் சமய, சமூக, ஆன்மீக, அறப்பணிகள் தமிழ்ப்பணிகள், அத்தனையும் ஆரம்பிக்கும் இடமாக அன்னை துர்க்கையின் ஆலயமே நிலைக்களனாக அமைகிறது அமைந்தது என்பதை அனைவரும் அகமிருத்துவது மிக மிக அவசியமாகும். சாதாரண தமிழ்ப்பண்டிதர், சைவப்புலவர், பயிற்றப்பட்ட ஆசிரியர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் “துர்க்கா துரந்தரி” என்று போற்றப்படுவதற்கும் நிலைக்களனே தெல்லிப்பளையில் சாதாரணமாய் இருந்த துர்க்கை அம்பாளின் சிறிய கோவிலே ஆகும். தங்கம்மா அவர்கள் துர்க்கை அம்பாள் கோவிலைக் கண்டதுதான் அவரின் வாழ்வில் மிகப் பெரிய தருணம், மிகப்பெரிய திருப்பு முனை என்று எண்ண முடிகிறதல்லவா !

நாவலரை நன்றாகவே மனத்தில் பதித்திருக்கிறார் தங்கம்மா அவர்கள். அதனால் அவரின் தடம் பற்றி நடக்க முற்பட்டிருக்கிறார். நாவலர் பெருமானின் பின்னர் புராணங்கள், திருமுறைகள், சைவசமயச் சிந்தனைகளைக் கோவில்களில் யாவரும் கேட்டிடப் பிரசங்கம் செய்யும் பாங்கு இல்லாமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய சூழலில் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் அந்தப் பணியை ஆத்மார்த்தமாய் அகமிருத்தி ஆலயங்கள் தோறும் இடைவிடாமல் பிரசங்களை அழகு தமிழால் தக்க எடுத்துக் காட்டுக்களுடன் மிகவும் பக்குவமாய் செய்தமை மீண்டும் நாவலர் யுகம் தோன்றி விட்டதோ என்றே எண்ணிட வைத்தது. தங்கம்மா அவர்களின் சைவப் பிரசங்கங்கள் இலங்கையில் எல்லாக் கோவில்களிலும் இடைவிடாது இடம் பெற்றன. இலங்கை மட்டும் அல்லாது – இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளிலும் அவரின் பிரசங்கங்கள்  இடம் பெற்றன என்பதை மனமிருத்துவது அவசியமாகும்.

பேச்சுடன் நின்று விடாமல் எழுத்திலும் தன்னுடைய ஆளுமையினைப் பதித்தும் நின்றார். “கந்த புராணச் சொற்பொழிவுகள்” நூல் மிகவும் கருத்தாளம் மிக்க நூல். இந்த நூலின் பெறுமதியை வியந்து பாராட்டி இலங்கை அரசாங்கம் 1978 ஆம் ஆண்டு ” சாகி த்திய மண்டல விருதினை”  வழங்கியது. 

தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சைவசமயத் தொண்டினையும் சொற்பெருக்காற்றும் ஆற்றலையும் வியந்து மதுரை ஆதீனத்தால் “செஞ்சொற் செம்மணி” பட்டம் வழங்கப்பட்டது. காரைநகர் மணிவாசக சபையினால் “சிவத்தமிழ் செல்வி”, தமிழ் நாடு இராகேசரி பீடாதிபதியினால் “சைவதரிசினி”, சிலாங்கூர் மலேசியா இலங்கைச் சைவச் சங்கத்தினால் “திருவாசகக் கொண்டல்”, வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தினால் “திருமுறைச் செல்வி”, ஈழத்துச் சிவனடியார் கூட்டத்தால் சிவமயச் செல்வி” அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் “சிவஞான வித்தகர்”, “தெய்வத் திருமகள்” ஆகிய இரண்டு விருதுகள், துர்க்காதேவி தேவஸ்தானத்தால் “துர்க்கா துரந்தரி”, மாதகல் நுணசை முரு கமூர்த்தி தேவஸ்தானத்தினால் “செஞ்சொற் கொண்டல்”, இணு வில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானத் தினால் “திரு மொழி அரசி” கொழும்புக் கம்பன் கழத்தால் “கம்பன் புகழ் விருது”, என எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை நாடிப் பட்டங்கள் வந்து குவிந்தன. அம்மா அவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைப்புகள் அத்தனையும் – பட்டங்களை வழங்கியதால் பெரும் பேற்றினைப் பெற்றதாகவே எண்ணிக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களுக்குப் பல பட்டங்கள் வந்து அமைந்தாலும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தால் வழங்க ப்பட்ட “சிவத்தமிழ் செல்வி” என்னும் பட்டந்தான் மிகவும் சிறப்பானதாய் ஒளி விட்டு விளங்கியது எனலாம். தங்கம்மா என்றால் “சிவத்தமிழ் செல்வி” என்றே அனைவர் அகத்திலும் பதிந்து விட்டது என்பதை எவருமே மறுத்துரைக்க மாட்டார்கள். சிவ மயமாய் சிந்தித்து, சைவத்தைக் காத்திடும் அன்னையாய், காலத்தின் வருகையாய், ஏன் காலத்தின் காவலராய், விளங்கினார் என்பதுதான் உண்மையாகும். 

அம்மா அவர்கள் தன்காலத்தில் சைவத்தின் குரலாகவே ஓங்கி ஒலித்தார். சைவத்தின் வளர்ச்சியை இளையவர் விளங்கிடவும், சைவ நம்பிக்கை தளர்ந்தவர் நிமிர்ந்திடவும், துணிவாய் அதேவேளை மிகவும் பக்குவமாய் யாவரும் பக்குவத்தைப் பெறும் வண்ணம் பல வற்றை ஆற்றினார். பலருக்கும் நல் வழிகாட்டியாகவும் விளங்கினார்.

ஆன்மீகம் என்பது ஆலய வழிபாட்டுடன் மட்டும் நின்று விடுவதில்லை. ஆன்மீகம் என்பது அறம் சார்ந்ததாகும் என்று அம்மா அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். புராணங்கள் படிப்பதும், திருமுறைகளைப் போற்றுவதும், திருக்கோவில்களை வழிபடுவதும், நற்சிந்தனைகளக் கேட்பதும், அத்தியாவசியம் என்று அம்மா அவர்கள் கூறினார்கள். அதேவேளை ஆதரவற்றோரைக் காப்பதும், பசிப்பிணி போக்குவதும், கல்விக்கண்ணைத் திறப்பதும், நலத்தினைக்காக்க வழி வகுப்பதும் அவசியமானது என்பதையும் எங்கள் தங்கம்மா அவர்கள் எடுத்து உரைத்தார். உரைத்தோடு நின்று விடாமல் – தானே முன் வந்து “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” என்னும் அமைப்பினை நிறுவினார். “அன்னபூரணி அன்னதான மண்டபத்தை” அமைத்தார். அத்துடன் அமையாது  “கல்யாண மண்டம்” ஒன்றையும் அமைத் தார்கள். குறைந்த செலவில் கல்யாணங்களை நடத்துவதற்கு அதாவது வசதிகள் குறைந்தோரும் இல்லறமாம் நல்லறத்தில் இணைந்து இன்பமுற – அம்மாவின் இம்முயற்சி பெரும்பயனை அளித்தது எனலாம். இவை அத்தனையும் ஆன்மீகமே என்பதை நாமனைவரும் மனமிருத்துவது மிக மிக அவசியமாகும்.  

எங்கள் தமிழ்ச் செல்வி யாழ் மண்ணின் மாசில்லா மங்கை, சைவத்தின் காவலர், சன்மார்க்க வழிகாட்டி, செந்தமிழ்ப் புலவர் சிறப்புடை ஆசானுக்கு – அமெரிக்க ஹவாய் சிவாயசுப்பிரமணிய சுவாமி ஆசிரிமம் 2005 ஆம் ஆண்டுக்கான “சிறந்த இந்துப் பணி ” விருதும். 2003 இல் வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் இலக்கியப் பெருவிழாவில் “வட கிழக்கு மாகாண ஆளுனர் விருதும்” வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாது இலங்கை அரசாங்கத்தால் “கலாசூரி” விருதும் வழங்கப்பட்டது. அம்மா அவர்களின் அனைத்துப் பணிகளையும் கருத்தில் கொண்டு கல்வி நிலையில், கற்பித்தல் நிலையில் உயர்ந்தோங்கி நிற்பது என்று எல்லோர் மனத்திலும் இடம் பெற்றிருக்கின்ற பல்கலைக்கழகமானது அதாவது யாழ் மண்ணில் பொன்னம்பலம் இராமநாதப் பெரியோனின் கனவாய் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாய் பேருருப் பெற்ற பல்கலைகழகம் எங்கள் சிவத்தமிழ்ச் செல்விக்கு “கலாநிதிப் பட்டத்தினை” வழங்கி கெளரவப்படுத்தியது. இந்தப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கியதால் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமே பெரும் பேற்றினைப் பெற் றுக் கொண்டது எனலாம்.

சைவத்தின் காவலராய், தமிழ் மொழியின் ஆளுமையாய், எங்கள் நாவலர் பெரு மான் திகழ்ந்தார். அவரின் தடம்பற்றி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களும் – சைவத்தையும் தமிழையும் கண்ணாகவே கருதினார். நாவலர் பெருமான் சமயப்பணி யோடு சமுகப்பணி யினையும் மேற்கொண்டார். அம்மாவும் அவ்வழியில் பயணப்பட்டார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். 

நாவலர் பெருமானைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அவர் நடந்த மண்ணில் நடந்தும் இருக்கிறோம். அவரின் ஆற்றல்களை அவரின் வரலாற்றால் அறிந்தும் இருக்கிறோம். அவர் இம்மண்ணில் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்கும் பாக்கியம் எமக்கெல்லாம் வாய்க்கவில்லை. ஆனால் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் காலத்தில் நாமெல்லோரும் வாழ்ந்தோம், அவருடன் பழகினோம், அவரின் சொற்பொழிவுகளைக் கேட்டோம், அவரின் ஆன்மீகப் பணிகளை அறப்பணிகளை, கண்டோம் வியந்தோம் என்பதே பெரும் பேறு என்றுதான் எண்ண வேண்டும். சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர் களுக்குப் பின் அவரைப்போல் ஒரு ஆன்மீக, அறச்சிந்தனை மிக்க அருள் நிறைப் பெண்மணி யாழ்மண்ணுக்கு வாய்க்கவே இல்லை என்பதை எவருமே மறுத்து உரைத்திடல் முடியாது. 

சைவத்தின் வழிநடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்கள் ஆண்டவன் அருள் பெற்ற அருளாளர். சைவத் தமிழ் வரலாற்றில் சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்க ப்படுவது மிக மிக அவசியமானதாகும். 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.