சக்தி சக்திதாசன்
கவியரசர் கண்ணதாசன் எனும் இலக்கிய ஊற்று சிறுகூடல் எனும் மலையிலே உருவாகி தமிழர் வாழும் நன்னிலமெங்கும் வற்றாது பாய்ந்து தமிழ் மனங்களெல்லாம் செழிப்புற வைத்திருக்கிறது.
கவியரசர் ஒரு இலக்கியப் பித்தர்.
சங்க இலக்கியங்களையெல்லாம் ரசித்துப் படித்தார்.
படித்து தன்னால் புரிந்து கொள்ளப்பட்டவை எல்லாம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என அவாக் கொண்டார்.
வகுப்பறையிலே ஒரு வாத்தியார் எமக்குப் பாடமாகப் புகட்டும் போது கசந்த சங்க இலக்கியங்களைத் தனது எளிமையான தமிழ் எனும் தேன் தடவி திரைப்படப் பாடல்களின் வரிகளாக்கினார்.
சங்க கால இலக்கியங்களில் கூறப்பட்ட விடயங்கள் என்று தெரியாமலே நாங்கள் தான் ஆக்கிய வரிகளை முணுமுணுப்பதைக் கண்டு அளவிலா ஆனந்தம் கொண்டார்.
சங்ககாலப் புலவர்களுக்கு தான் செய்யும் மிகப் பெரிய தொண்டு, தமிழன்னைக்கு தானாற்றும் சேவை என்றே அவர் இதை எடுத்துக் கொண்டார்.
இப்போது நாம் இதைக் கேட்கும் போது படிக்கும் போது இது ஏதோ இலகுவாகச் செய்து முடிக்கக்கூடிய விடயம் என்று கூட எண்ணுவோம்.
ஆனால் ஒரு விடயத்தைப் படித்துக் கிரகித்துக் கொள்வது சரி, ஆனால் அதை ஞாபகத்தில் வைத்து தேவையான இடத்தில் தேவையான காட்சிகளுக்கு அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரிகளை அமைப்பது என்பது கவியரசர் ஒருவராலேயே சாத்தியப்பட்டது.
அவரது இந்த அசாத்திய திறமையைப் படித்து ரசித்த போது அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.
அதன் விளைவாக,
காதல் இருக்கிறதே அது ஒரு விசித்திரமான உணர்வு.
அது யாருக்கு எப்போது எப்படி ஏற்படுகிறது என்பதை வரையறுத்து வைத்தவர் யாருமிலர்.
ஆனால் இவ்வுணர்வு எம் சங்க காலத்திலேயே மிகவும் பறந்து பட்ட உணர்வாக இருந்ததால் தான் இவ்வுணர்வுக்கு முதன்மை கொடுத்து பல சங்ககால இலக்கியங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வுணர்வுகளிலே காதலி காதலை நினைந்து அன்றி அதைப் பிரியும் போது ஏற்படும் சோகக்கணங்களை விவரிக்கும் வகையே தனிதான்.
சில உவமைகள், சில உதாரணங்கள் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவைகளாக இருக்காது.
இருப்பினும் காதலை விவரிக்கும் புலவர்கள் இதனை கையாளும் போது அது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவைகளே என்று பழமையான தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது.
”உண்டா குரிய வல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே”
(தொல்: 1156)
கனியை உண்கிறோம் ஆனால் கல்லை உண்ண முடியுமா?
ஆனால் காதல் உணர்வை விளக்கும் புலவர்கள் கல்லை உண்ணலாம் எனும் வகையில் அவ்வுணர்வை விளக்க எழுதும் கவிதைகளைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் என்கிறது தொல்காப்பியம்.
இதன் அடிப்படையிலே தான் கவியரசர் இவ்வரிகளை எழுதினாரோ?
”தென்றலிலே எனதுடல் தேய்ந்தது பாதி – அது
தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி”
தென்றலின் தன்மையே என்ன இனிமையாக உடலைப் ஸ்பரிப்பது தானே !
அப்படி அத்தென்றல் ஸ்பரிக்கும் உணர்வு அவளுக்கு அவள் காதலன் தனைப் ஸ்பரிசிக்கும் உணர்வைக் கொடுப்பதால் அவ்வுணர்வின் தாக்கம் அவளின் உடலை பாதியாக இளைக்கப் பண்ணி விட்டதாம் ….
அப்படியானால் அவள் உடலின் பாதியைத் தென்றல் தின்றதாகத் தானே அர்த்தம் .
அப்படி அத்தென்றல் தின்ற பாதி போக மீதியாக இருப்பதுதான் அவள் இப்போது கொண்ட இளைத்த தோற்றம் என்கிறாள்.
அக்காதலினால் வாழும் பெண் .
இரு வரிகளுக்குள் எத்தனை பெரிய விளக்கத்தை விதைத்து விட்டார் நம் கவியரசர் பாருங்கள் .
காதல் கண்களைக் குருடாக்கி விடும் என்பார்கள் .
நாம் கண்முன்னாலேயே பார்க்கும் நிகழ்வுகள் எத்தனையோ .
மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு பெண்ணின் மனதைக் கவரும் ஆடவர் பலர் மிகவும் இலகுவாக அப்பெண்ணை ஏமாற்றிவிடும் சந்தர்ப்பங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம் .
அதே சமயம் ஆண்களை ஏமாற்றும் பெண்கள் இல்லை என்பது என் வாதமல்ல .
காதல் கண்களைக் குருடாக்கிவிடும் என்பார்கள்.
தீர விசாரிக்காமல் , அவ்வாடவனைப் பற்றிச் சரிவர அறியாமல் காதலிலே விழுந்து விடும் பெண்களில் சிலர் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள் .
இதோ அகநானூறில் இதைப் பிரதிபலிப்பதாக வரும் பாடல் ஒன்று ,
நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த அன்பி லாளன் அறிவுநயந் தேனே (அகம் :260)
தன்னைக் காதலித்து கைவிட்டு , ஏமாற்றித் துன்பத்தைத் தனக்குப் புரிந்த அந்த அன்பற்றவனுடைய அறியாமையை அறியாது அவனை நம்பி ஏமாந்து போனேனே என்று புலம்பும் ஒரு பேதையின் நிலையைக் குறிக்கும் பாடலிது,
இதைத் தனது பாணியில் கவியரசர் எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போமா?
இறைவன் என்பவன் பரம்பொருள். அவனை நம்பியவர்களை அவன் எப்போதும் கைவிடுவதில்லை என்பது ஒரு பொதுவான நம்பிக்கை.
ஆனால் தன் காதலனை நம்பிய அப்பேதையின் நிலை?
அழகாய்ச் சொல்கிறார் கவியரசர்,
உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
என்கிறாள் அப்பேதை.
அது மட்டுமா?
ஒரு மரத்தில் விளையும் கனியின் தரத்தையும், அக்கனியின் சுவையையும் அம்மரம் அறியும் என்பதும், உண்மையான காதலை அக்காதலைத் தனதாக்கிக் கொண்ட மனம் அறியும் என்பதும் உண்மையே.
ஆனால் காதல் வயப்பட்ட ஆண்களின் மனதில் கனிவான தன்மை இருந்தால் தானே தம்மை விரும்பித் தவிக்கும் ஒரு மடந்தையின் மனதைப் புரிந்து கொள்ளும் வகை அவர்களுக்குத் தெரியும் .
இதோ மீண்டும் கவியரசர்,
கனியை மரமறியும் காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ கன்னியர் நிலை தெரியும்
என்று தனக்கேயுரிய பாணியில் ஒரு பேதையின் புலம்பலை அழகாய்க் கூறுகிறார்.
அன்பினிய வாசகர்களே!
என் மனதில் வாசம் செய்யும் கவியரசரின் தேன் துளிகளில் இரண்டை உங்களுடன் சேர்ந்து சுவைத்தேன் .
இந்தத் தேன்கூட்டில் இன்னமும் பலதுளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் சிலவற்றோடு மீண்டும் வருவேன்.


Leave a Reply