Category: சொற்சதங்கை

  • கருத்தரங்கிற்கு வாரீர்!

    கே. ரவி

    அனைவருக்கும் வணக்கம். என் இனிய நண்பர்கள் சிலர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியோடு இணைந்து, என் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார்கள். டாக்டர் வி.சி.குழந்தைசாமி, திரு.பி.எஸ். ராகவன், முனைவர் ஒளவை நடராஜன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், திரு.இல.கணேசன் போன்ற பெருமக்கள் முன்னின்று நடத்துமாறு இந்தக் கருத்தரங்கை வடிவமைத்துச் செயலூக்கம் தந்துவருவோர் பாலக்காடு டாக்டர் ராஜாராம் அவர்களும், புதுவை டாக்டர் அ.அறிவுநம்பி அவர்களும்.

    பிப்ரவரி மாதம் 21 சனிக்கிழமை அன்று கருத்தரங்கம் சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை கருத்தரங்கத்தின் தொடக்கவிழாவைச் சிறப்பாக அமைக்க இருக்கிறார்கள். அழைப்பிதழ் தயாரானதும் முகநூலிலும் இந்த வாட்ஸாப் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.

    கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    தங்கள் வருகையை 044 24350506 என்ற எண்ணில் பதிவு செய்து கொண்டால் அழைப்பிதழ் அனுப்ப வசதியாக இருக்கும். நன்றி.

    கே.ரவி

    என் படைப்புகள்:

    1. நமக்குத் தொழில் கவிதை
    2. உன்னோடு நான் (கவிதைகள்)
    3. மின்னற்சுவை
    4. சொற்களுக்குள் ஏறிக்கொள்
    5. இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு
    6. Tha verses of wisdom
    7. Justice vs Natural Justice
    8. Law, logic and liberty.
    9. வள்ளுவரின் வாயிலில்
    10. காற்று வாங்கப் போனேன் (சுயசரிதைக் குறிப்புகள்: வல்லமை மின்னிதழில் வெளிவந்த தொடர்)
    11. கவிதைக்குப் பொய்யழகு (இலக்கிய வேல் பத்திரிகையில் வெளிவந்த தொடர்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 53

    கே. ரவி

    aravi
    கேரளாவில், ஆதி சங்கரர் பிறந்த ஊரான காலடியில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    1985 அல்லது 86 என்று நினக்கிறேன். காலடிக்குச் சென்று அங்கிருந்த பூர்ணா நதியில் நீராடி விட்டுச் சிருங்கேரி சங்கர மடத்தாரால் பராமரிக்கப்படும் மண்டபத்தில், சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சன்னிதிக்கு எதிரில், வாராஹி, வைஷ்ணவி, கெளமாரி, ப்ராஹ்மி, இந்திராணி, சாமுண்டி, மாஹேஸ்வரி என்ற ஏழு சக்தி வடிவங்களும் செதுக்கப்பட்ட ஒரு தூணுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு த்யானத்தில் ஆழ்ந்திருந்தேன். சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து நான் கண்மலர்ந்தேன். தியான நிலையில் நான் இரண்டு கைகளிலும் சின்முத்திரையோடு உள்ளங்கைகளை மேற்காட்டி அமர்ந்திருந்த போது என் வலது உள்ளங்கையில் ஒரு வண்ணத்துப் பூச்சி, அதாவது, பட்டாம் பூச்சி வந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்த காட்சியை என்னிடம் ஷோபனா விவரித்த போது என்னையறியாமல் எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

    மீண்டும் ஒருமுறை சபரிமலை யாத்திரை முடித்து வரும் வழியில் நண்பர்களோடு காலடி சென்றேன். நான் பூர்ணா நதியில் குளிக்க இறங்கிக் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நதியிலேயே பத்மாசனம் இட்டுத் தியான நிலையில் அமர்ந்து விட்டதாகப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு ஒன்று மட்டும் நினைவுக்கு வந்தது. அப்போது நான் தியானத்தில் இருந்த சிறிது நேரத்துக்குள், துத்த நாகம் போன்ற நீல நிறத்தில் இருந்த ஒரு பெரிய தடாகத்தில் மூழ்கி உள்ளே சென்றதும், அங்கே நீருக்கடியில் ஒரு குகை தெரிந்ததும், குகைக்குள் வரச் சொல்லி ஒரு குரல் என்னை அழைத்ததும், நான் குகைக்குள் நுழைந்ததும், அங்கே ஒரு பீடத்தில் ஒளிமயமாக ஆதி சங்கரர் போல ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்ததும், என்னை வா என்று அழைத்தவரோ, பார்த்ததும் அச்சம் உண்டாக்கும் ரத்தச் சிவப்பான கண்களுடன் தலையிலிருந்து தரையில் புரளும் ஜடாமுடியுடன் வீற்றிருந்ததையும், அவர் சொல்லாமலே எப்படியோ அவர்தாம் மார்க்கண்டேய மஹரிஷி என்று நான் தெரிந்து கொண்டதையும் என் நண்பர்களுக்குச் சொன்னேன்; சென்னை வந்த பிறகு டாக்டர் நித்யானந்தம் அவர்களிடமும் சொன்னேன். அவர் கண்களை மூடிக் கொண்டு “கைலாசத்தில் உள்ள மானசரோவர் ஏரி” என்று மெதுவாகச் சொன்னர்.

    பிறகு, இப்போது நாலைந்து ஆண்டுகளுக்கு முன் நானும் ஷோபனாவும் பத்ரிநாத் சென்றிருந்தோம். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் உள்ள சங்கரர் ஆசிரமத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு மரத்தடியில் ஒரு குகை இருந்தது. ஆனால் அது பூட்டியிருந்தது. அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் சொல்லித் திறக்கச் செய்து, உள்ளே சென்று சிறிது நேரம் தியானம் செய்தோம். தியானம் முடிந்ததும், “இந்த இடத்துக்கும் மானசரோவருக்கும் ஏதோ தொடர்புள்ளது போலத் தெரிகிறது” என்று ஷோபனாவிடம் குறிப்பிட்டேன். அதன் காரணம் எனக்கு அப்போது விளங்கவில்லை.

    அங்கிருந்து பத்ரிநாத் சென்று கண்ணபிரானைக் கண்குளிரக் கண்டுவிட்டு, அருகில் இந்தியா, திபெட் எல்லையில் இருந்த கடைசி இந்திய கிராமமான மன்னாவுக்குச் சென்றோம். அது, அலகாநந்தா நதியுடன் சரஸ்வதி நதி கலக்கும் இடம். அதன் மேல் பீமன் கட்டியதாக நம்பப்படும் ஒரு பெரிய கல்பாலம் இருந்தது. அதைக் கடந்து சென்றால் ஸ்வர்க்க ஆரோகணி வருமாம். அதாவது, பாரதப் போர் முடிந்த பிறகு, பாண்டவர்கள் அங்கேதான் ஸ்வர்கத்துக்கு ஏறிச் சென்றார்களாம்! எங்குமே பிரஸ்ஸன்னம் ஆகாமல் நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொண்டே இருக்கும் சரஸ்வதி நதி அங்கே மட்டும் வெளியில் வந்து காட்சி தருகிறது. கிட்டத்தட்ட பச்சை கலந்த நீல நிறத்தில் அந்த நதி இருந்தது. அங்கேயும் ஒரு குகையிருந்தது. அதன் சுவரில் இருந்து துளித்துளியாக ஈரம் கசிந்து கொண்டிருந்தது, நீல நிறத்தில்! அதுதான் அந்த நதியின் ஊற்றுக்கண் என்பது புரிந்தது. அந்தச் சுவரில் எழுதப்பட்டிருந்த செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. ‘இங்கே வருகின்ற நீர்த்துளிகள் மானசரோவரில் இருந்து வருகின்றன!’

    என் பழைய கவிதையொன்றை என் மனம் எதிரொலிக்கிறது:

    யார் கொடுத்த ஞாபகத்தை யார் சுமக்க வேண்டுமோ

    எப்படியோ, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரலாற்றைக் காலத்தில் முன்னும், பின்னுமாகப் போய், அலைபாய்ந்து, எழுத்தில் படம்பிடித்துத் தந்துவிட்டேன். அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளின் சம்பவங்களை இப்போது சொல்வதைக் காட்டிலும், இன்னும் எனக்கு ஆயுள் மீதம் இருந்தால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அசை போட்டுப் பார்த்துச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதை இரண்டாவது பாகமாக நான் எழுதக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்.

    இதுவரை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டவை மிகவும் விறுவிறுப்பான சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது என்ற மனநிறைவோடு இந்தத் தொடரை, அல்லது இதன் முதல் பாகத்தை, இப்போது நிறைவு செய்கிறேன்.

    தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், குப்புசாமி வாத்தியார், கிருஷ்ணராமானுஜம் பிள்ளை போன்ற ஆசிரியப் பெருமக்களும், ஜகன்னாதாச்சாரியார், டாக்டர் டி.என்.கணபதி போன்ற பேராசிரியப் பெருந்தகைகளும், சுகி சிவம், சு.ரவி, சசி, சீனி சுந்தரராஜன், வ.வே.சு., ரமணன், சுப்பு போன்ற நண்பர்களும், அமரர் நா.பா., ஒளவை நடராஜன், பாரதி சுராஜ் போன்ற வழிகாட்டிகளும், டாக்டர் நித்யானந்தம் என்ற குருநாதரும், என் சிந்தனையின் போக்குக்குத் தடம் அமைத்துக் கொடுத்த தத்துவ மேதைகளும், இறுதியாக, ஆனால் உறுதியாக, என் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரே தீபமாகச் சுடர்விடும் ஒளிவிளக்காகவும், என் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கும் பராசக்தியாகவும், என் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஷோபனாவும், இப்படிப்பட்ட சுடர்ப்பொறிகளும், தாரகைகளும் கதாபாத்திரங்களாக வந்து கெளரவப் படுத்திய இந்தக் கவிதை வரலாற்றில் நானும் இடம்பெற்றேன் என்பதே என் பிறவிப் பயன் என்று நான் கருதுகிறேன்.

    எஞ்சியுள்ள நாட்களில், பாதி முடிந்த நிலையில் இருக்கும் பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை எப்படியாவது நிறைவு செய்து வெளியிடப் பராசக்தி அருள்செய்வாள் என்று நம்புகிறேன்.

    பொறுமையுடன் என் ஞாபகப் பயணத்தில் என்னோடு வந்த வாசகர்களுக்கும், இந்தப் பயணத்துக்கு வாகனம் அமைத்துத் தந்த வல்லமை இதழின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி.

    2001-ஆம் ஆண்டு எழுதிய ஒரு கவிதையுடன், “காற்று வாங்கப் போனேன்” முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:

    அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்

    அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்

    கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்

    கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்

    அணையாத சுடரேற்றுவேன்!

    விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான

    விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற

    எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்

    விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள

    அணையாத சுடரேற்றுவேன்!

    பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்

    போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி

    பொய்யாகிப் போய்மறைய – எந்தப்

    பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ

    அணையாத சுடரேற்றுவேன்!

    மாயை விரித்த வலையோ – ஜனன

    மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ

    தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்

    தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்

    அணையாத சுடரேற்றுவேன்!

    சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி

    சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று

    கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்

    கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்

    பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து

    பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியில் – ஒரு

    சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்

    சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)

    அணையாத சுடரேற்றுவேன் – இந்த

    அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!

    அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற

    அருளாட்சி மலரநான் அறைகூவியே

    அணையாத சுடரேற்றுவேன்!

    நன்றி.

    Share
  • உன் கன்னங்களில்!

     

    கே.ரவி

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%99%E0%AE%95/[/mixcloud]

     

    நங்கையுன் கன்னங்களில்South Indian Beautiful Girls Wallpaper7

    பொன்னந்தி வண்ணங்களில்

    நாணவில்லை வரைந்த பின்னே

    வானவில்லைக் காணவில்லையடி ஹோ!

    தங்கத் தடாகத்தில் தாமரைபோல் என்

    நெஞ்சத் தடாகத்தில் அழகு முகம்

    பேரொளியாக மலர்ந்த பின்னே

    வேறொளி இங்கே தேவையில்லையடி ஹோ!

    (நங்கை உன் கன்னங்களில்)

     

     

    கங்கையைப் போலுன் அங்கமெலாம் ஒரு

    காதல் நதிபுரள – என்

    கண்ணசைவில் ஒரு மின்விசையாய் உன்

    சின்ன இடைதுவள – உன்

    தோள்களிலே ஒரு தூளியமைத்துத்

    தூங்கட்டுமா அழகே – உன்

    வேல்விழிகள் என் மேல்படும் போதின்ப

    வேதனைதான் உயிரே

    (நங்கை உன் கன்னங்களில்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (52)

    கே. ரவி

    என்னப்பா ‘ஸிந்தடிக் விஷன்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டுகிறாய்?

    பொறு தம்பி, இன்னும் பெரிய, பெரிய வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கிறேன். ஒருங்கிணைந்த பார்வை என்பதைப் புரிந்து கொள்ள நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. நம் புலப்பாட்டு இயக்கமே போதும்.

    உளவியல் துறையில் பயிலும் மாணவர்கள் புலன் நுகர்ச்சி எப்படி உண்டாகிறது என்பது பற்றிப் பல்வேறு கொள்கைகளைப் படிப்பார்கள். புலனுகர்ச்சிக் கொள்கைத் திரட்டு, ஆங்கிலத்தில், “தியரீஸ் ஆஃப் பெர்ஸெப்ஷன்” (Theories of Perception) என்று அழைக்கப் படுகிறது.

    நமக்கு வெளியுலகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் எல்லாமே ஐந்து புலன்கள் மூலமாகத்தான் கிடைக்கின்றன என்று பொதுவாக நம்பப் படுகிறது. திருவள்ளுவர் மிக அழகாக, அதுவும் காமத்துப் பாலில் உள்ள ஒரு குறட்பாவில், ஐந்து புலன்களையும் ஒரே வரியில் குறிப்பிட்டு விடுகிறார்:

    கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்

    ஒண்டொடி கண்ணே உள

    ஐந்து விதமான புலப்பாடுகள் ஏற்பட உதவும் சாதனங்களே கண், காது, நாக்கு, மூக்கு, சருமம் எனப்படும் தோல் ஆகிய ஐந்து பொறிகள். பொதுவாகப் புலநுகர்ச்சிக் கொள்கை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல், காட்சிப் புலன் என்பது பற்றி மட்டும் குறிப்பாக இங்கே நோக்குவோம்.

    ‘காண்பது’ என்பதே காட்சிப் புலன். இந்தப் புலப்பாட்டை உண்டாக்கும் சாதனமே ‘கண்’ என்ற பொறி.

    காட்சிப் புலப்பாடு எப்படி உண்டாகிறது? வெளியில் உள்ள ஒரு பொருள் மீது (அது நம் உடலாகவோ அதன் ஒரு பகுதியாகவோ கூட இருக்கலாம்), ஒளிக்கற்றைகள் விழுந்ததும், அந்தப் பொருளால் தடுக்கப்பட்டு மீளும் ஒளிக்கற்றைகள் நம் விழி வழியாக நுழைந்து, விழிக்குள் உள்ள ‘ரெட்டினா’ என்ற விழித்திரையில் விழுந்து, தம்மைத் தடுத்தனுப்பிய பொருளின் பிரதிபிம்பத்தை அந்தத் திரையில் ஏற்படுத்துகின்றனவாம்; அந்தப் பிரதிபிம்பத்தை இன்ன பொருளின் பிம்பம் என்று அறிவு நமக்கு அறிவுறுத்துமாம். இப்படித்தான் காட்சிப் புலப்பாட்டில் நாம் பொருள்களைப் பார்க்கிறோம் எந்று அறிவியல் விளக்குகிறது!

    எல்லாம் சரி, ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறி விட்டோமே! நாம் ஒற்றைக் கண்ணால் பார்ப்பதில்லையே! இரண்டு கண்களால் காண்கிறோம். ஆங்கிலத்தில் இதை பைனாகுலர் விஷன் (Binocular Vision) என்கிறார்கள். நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் இரண்டு விழித்திரைகளில் பதிவாகின்றன. ஆனால் ஒரு காட்சியைத்தானே பார்க்கிறோம்! நாம் ஒரு மாம்பழத்தைப் பார்க்கிறோம் என்றால், நம் இரண்டு விழிகளுக்கும் உள்ளே உள்ள ரெட்டினா என்ற இரண்டு திரைகளில் அந்த மாம்பழத்தின் இரண்டு பிரதிபிம்பங்கள் பதிவாகி, அந்த இரண்டு பிம்பங்களை நம் அறிவாகிய சாதனம் ஒரே மாம்பழமாக மீண்டும் ஒருமைப் படுத்தி நமக்குக் காட்சிப் படுத்துகிறது. வள்ளலார் கண்ணாடியில் முருகப் பெருமானைப் பல அம்சங்களும் ஒருங்கிணைந்த தணிகாசலமாகக் கண்ட ‘சிந்தடிக் விஷன்’, அதாவது, ஒருங்கிணைக்கப்பட்ட பார்வை பற்றி முன் பகுதியில் சொன்னதை நினைவு கூர வேண்டும். இரண்டு விழித்திரைகளில் தோன்றும் பிம்பங்களை ஒருங்கிணைத்து, ஒரே காட்சியாக்கி அதற்கு இடம், காலம் ஆகிய முத்திரைகள் குத்தி அறிவு நமக்கு அதை விளங்கத் தருகிறது. அப்படியென்றால், இடமும், காலமும் புறவுலகில் உள்ள பொருட்களைப் போல வேறு பொருட்களா, இல்லை அவை இரண்டுமே அகச்சாதனங்களா? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் ஒத்தி வைப்போம். இப்பொழுது விவாதம் இடம், காலம் பற்றியில்லை. அது, இரண்டு கண்களில் உள்ள திரைகளில் விழும் பிம்பங்களை ஒருமைப்படுத்தும் அகச்சாதனம் பற்றியது.

    எவ்வளவு அழகாக, எளிமையாக நம் அருமைக் கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டார்:

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா

    சாதாரணத் திரைப்படப் பாடல்தானே என்று எதையும் நினைத்துவிடக் கூடாது தம்பி. பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே கவிஞனுடையது. அவனை ஆட்கொண்டு பாடுவதோ ஆகாச சக்தி! அது வேறு கதை.

    சாதாரண விஷயங்களுக்குள் இருக்கும் அசாதாரணங்களைக் காண்பதே தரிசனம் எனப்படுகிறது.

    மீண்டும் இம்மானுவெல் கன்ட் என்ற தத்துவ ஞானியைக் கூப்பிட வேண்டும். அவன் கேட்கிறான், ஐந்து புலன்கள் வழியாகத்தான் நீ எல்லா வெளி விவகாரங்களையும் நுகர்கிறாயா? நீ பார்க்கும் மாம்பழத்தின் மஞ்சள் நிறம், அதன் உருண்டை வடிவம், அதன் மணம், சுவை, மென்மை இவையெல்லாம் உன் ஐந்து புலப்பாட்டுச் சாதனங்கள் மூலமாகத்தான் வருகின்றன. ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அந்த மாம்பழம் ஓரிடத்தில் உள்ளதாக, ஒரு காலக்கட்டத்தில் உள்ளதாக, அதாவது இடம், காலம் என்ற இரண்டு குறியீடுகளோடுதானே உனக்குப் புலப்படுகிறது? எந்த இடத்திலுமே இல்லாத, எந்தக் காலப் பரிமாணத்துக்கும் உட்படாத எதையும் நீ புலனுகர்ச்சி செய்வதில்லையே. அந்த இடத்தையும், காலத்தையும் நீ எந்தப் பொறி மூலம், எந்தப் புலனாக அறிகிறாய்? இதுதான் அவன் கேட்ட கேள்வியின் சாரம்.

    இன்னும் சற்று வேறு விதமாக நினைத்துப் பார்க்கலாம். நம் ஐந்து பொறிகளின் மூலம் ஐந்து வகைப்பட்ட புலப்பாடுகளாக நம் அகத்துக்குள் நுழைய வெளியுலகப் பொருட்களும், காட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. அவற்றை நம் அறிவு புரிந்து கொள்ளும் முன்பு, அவை இன்னின்ன பொருட்கள், காட்சிகள் என்று நம் அறிவு வகைதொகை செய்து உணர்ந்து கொள்ளும் முன்பு, ஒவ்வொரு பொருள், அல்லது காட்சியின் மீதும், அது புலன் நுகர்வு செய்யப்பட்ட இடம், காலம் என்ற இரண்டு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளைக் குத்திப் பிறகுதான் அறிவின் சேமிப்புக் கிடங்குக்குள் அனுமதிக்கிறது. இந்த இடமும், காலமும் எந்தப் பொறி வழியாகவும் நுகரப் படுவதில்லை. இடமும், காலமும் பொறிகளின் மூலம் நுகரப்படும் எந்தப் புலப்பாடும் இல்லை. அப்படியென்றால் அவை என்ன? இடம், காலம் ஆகிய இரண்டு முத்திரைச் சாதனங்கள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளடங்கியவை. அந்தச் சாதனங்களோடுதான் அறிவே உருவாகிறது. இடம் என்பதையோ, காலம் என்பதையோ நாம் ஒரு நிறம், வடிவம், சுவை, வாசனை இப்படி ஏதாவது ஒரு புலன் நுகர்ச்சியாக அறிவதே இல்லையே! இவ்வாறு, புறத்தில் இருந்து, புலன் வழியாகப் பெறாத சில உள்ளீடுகள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளன, எனவே, புலன் நுகர்ச்சியைச் சாராமலேயே, பொறிகளின் வழியே பெறாத உள்ளீடுகள் அறிவின் அகத்தே உண்டு என்று சுட்டிக் காட்டிச் சூனிய வாதத்தை இம்மானுவெல் கன்ட் எதிர்கொண்டான்.

    இவ்வளவு கனமான, கடினமான ஒரு தத்துவப் பிரச்சினையை இங்கே நான் குறிப்பிடக் காரணம் உண்டு. அதை விளக்குவதற்கு அந்த ஜெர்மானிய தத்துவ மேதை பயன்படுத்திய இரண்டு கலைச் சொற்களை இங்கே பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அவை ஆங்கிலத்தில், “ஆ ப்ரையாரி” (a priori) என்றும், “ஆ பாஸ்டீரியோரி” (a posteriori) என்றும் குறிக்கப் படுகின்றன. முதலில், இந்தக் கலைச்சொற்கள் எந்தக் கருத்துச் சூழலில், என்ன பொருளில், எதை விளக்கப் பயன்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘நேற்று காலை 7 மணிக்கு நான் மக்கள் தொலைக்காட்சியில் பேசினேன்’ என்று ஒருவர் சொன்னதும் அதை இன்னொருவர் நம்ப மறுத்தால், அந்தத் தொலைக்காட்சியின் பதிவுகளைப் பார்த்து அக்கூற்று மெய்யா, பொய்யா என்பதை அறிந்து கொள்ள முடியும். நயாகரா நீர்வீழ்ச்சி கானடா, அமெரிக்க எல்லையில் உள்ளது என்ற கூற்றை யாரேனும் சந்தேகப் பட்டால், அதை நேரில் கண்டு தெளிய முடியும். ஐந்து புலன்களில் ஏதேனும் ஒன்றின் அல்லது சிலவற்றின் மூலமாக மட்டுமே நிறுவக் கூடிய கூற்றுகளை ‘ஆ பாஸ்டீரியோரி கூற்றுகள்’ என்றும், அப்படியன்றி, எந்தப் புலச்சான்றும் தேவைப்படாமலேயே ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றுகளை ‘ஆ ப்ரையாரி கூற்றுகள்’ என்றும் கன்ட் குறிப்பிட்டான். ஒரு பிரும்மச்சாரி திருமணம் செய்து கொள்ளாதவன் என்பதற்குப் புலச்சான்று எதுவும் தேவை இல்லை. காரணம், திருமணம் செய்து கொண்டிருந்தால் அவனை பிரும்மச்சாரி என்று சொல்ல முடியாதே. அதே போல், ஒருவன் இறந்து விட்டான் என்றால் அவன் இதயத்துடிப்பு நின்றிருக்கும் என்பதற்கு எந்தப் புலச்சான்றும் தேவையில்லை. இதயத் துடிப்பு நின்றால்தான் ஒருவன் இறந்து விட்டதாகச் சொல்ல முடியும். இதயத் துடிப்போடு, கிட்டத்தட்ட இறந்து விட்ட நிலையில் இருப்பதை மூளைச்சாவு (Brain Death) என்று குறிப்பிடும் வழக்கம் உண்டே தவிர அது மரணம் ஆகாது.

    இன்னொரு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சென்டி மீட்டர் விட்டம் உள்ள ஓட்டை போட்ட ஒரு தட்டில் நிறைய நாணயங்களைக் கொட்டினால் அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்துவிடும் நாணயங்களைப் பற்றி ஒரு செய்தி நிச்சயம் சொல்லி விடலாம். கீழே விழுந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான விட்டம் உள்ளவையாகத்தான் இருக்க முடியும். இதை அளந்து, புலப்பாட்டுக்கு உட்படுத்திப் பிறகுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. புலப்பாடே தேவையில்லாமல் இந்தச் செய்தியை நிறுவ முடிவதற்குக் காரணம், தட்டின் கட்டுமானம், அதில் ஒரு சென்டி மீட்டர் விட்டமுள்ள ஓட்டை இருப்பது நமக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதுதான்.

    இவையெல்லாம் புலச்சான்று தேவைப்படாமலேயே நாம் ஒப்புக் கொள்ளும் ‘ஆ ப்ரையாரி’ கூற்றுகள். இடமும், காலமும் புலச்சார்பு இல்லாத ‘ஆ ப்ரையாரி’ கருத்தீடுகள் என்பதுதான் கன்டின் வாதம். இவ்வளவு சிரமமான, தர்க்க ரீதியான பாடத்தை எங்களுக்கு நடத்தி விட்டு, எங்கள் தத்துவப் பேராசான் முனைவர் டி.என்.கணபதி வகுப்பில் சொன்னதை நான் மறக்கவே முடியாது. வகுப்பில் அவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னது இதுதான்:

    ‘ஆ ப்ரையாரி’ என்றால் என்னவென்று புரிய வேண்டுமா. ஒளவையாரிடம் கேளுங்கள். “அன்னையும் பிதாவும் முன்னறிatr தெய்வம்” அதாவது, ஆங்கிலத்தில் சொன்னால், Mother and Father are a priori gods. எந்தப் புலன்விசாரணையும் இல்லாமல் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தெய்வம் அன்னையும் பிதாவும். அவர்களே முன்னறி தெய்வம். அதாவது, புலன் விசாரணை மேற்கொள்ளும் முன்பே, நாம் முந்தி அறிந்து கொள்ளும், முன்னதாக அறிந்து கொள்ளும் தெய்வம்; a priori gods; முன்னறி தெய்வம்.

    அடாடா! பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் மொழியில் இம்மானுவெல் கன்டும், இருபதாம் நூற்றாண்டில் அவனுடைய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நார்மென் கெம்ப் ஸ்மித்தும் சிரமப்பட்டுப் பக்கம் பக்கமாக விளக்க முற்பட்டதை இரண்டாயிரம் அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் ஒளவைப் பாட்டி எவ்வளவு அநாயசமாக, ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லிவிட்டார் என்பதை என் பேராசான் சொல்லச் சொல்ல மலைத்துப் போனேன்.

    இதுதான் மறைமொழி என்பது. இங்கே திருவள்ளுவர் வாக்கை நினைவு படுத்திக் கொள்வோம்:

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

    மறைமொழி காட்டி விடும்

    மிகச் சுருக்கமாகச் சொல்லப் படும் மறைமொழி, அறிஞர் பெருமக்கள் நிறையச் சொல்லி அறிவுறுத்தும் உண்மைகளை எல்லாம் எளிதில் காட்டி விடும். இப்படித்தான் இந்தக் குறள் பொருள்படும் என்று நான் சொல்லவில்லை. இப்படியும் பொருள்படலாம். நிறைவாழ்வு வாழ்ந்து நீத்தாரின், அதாவது, வாழ்வாங்கு வாழ்ந்து உடல்நீத்த அருளாளர்களின் பெருமையை மறைமொழி காட்டிவிடும் என்றும் பொருள் கொள்ளலாம். திருக்குறளே மறைநூல் ஆயிற்றே!

    avvaiyarசித்தர் இலக்கியங்களில் தோய்ந்து, போகர் பற்றியும், திருமூலர் பற்றியும், சிவவாக்கியர் பற்றியும் அற்புதமான பலநூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி அரும்பணியாற்றிக் கொண்டிருக்கும் 80 வயது இளைஞர் கணபதி என் தத்துவப் பேராசான் என்பதை நான் பெருமையாகக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? அந்தப் பெருமையை, அவர் பாடம் நடத்தும் போது சுட்டிக் காட்டிய ஒளவையாரின் மறைமொழியே காட்டிவிடும். சரிதானே!

    இந்த இடத்திலே ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். அன்னையும் தந்தையும் நமக்கு முன்னறி தெய்வங்கள், அதாவது நாம் எந்த விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லாமல் முந்தி அறியும் தெய்வங்கள். இது எவ்வளவு உண்மையோ, அதே போல, நம் ஒவ்வொருவரையும் தக்க தருணத்தில் ஏதேனும் ஒரு குருவின் வடிவில் பரம்பொருளே வந்து ஆட்கொண்டு வழிசெலுத்துவதால், குருவே நம்மை நமக்கு முன்பாகவே அறிந்த தெய்வம் என்பது மறுக்க முடியாத உண்மை. அன்னையும், தந்தையும் நாம் முன்னறிந்து கொள்ளும் தெய்வங்கள். குருவோ நம்மை முன்னறிந்து கொள்ளும் தெய்வம்.

    ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த என் நண்பர் அமரர் சிவகுமார் எழுதிய ஒரு பாடல் கனமாக நெஞ்சில் வந்து அமர்கிறது :

    எங்கிருந்தாலும் என்னை அறிபவன் ஒருவன்

    எண்ணத்தினால் வளர்ப்பான் என்குல இறைவன்

    சங்கல்பம் ஓய்ந்துவிடச் சரண்புகுந் திருந்தாலும்

    சஞ்சித சாகசத்தால் புறம்புறம் திரிந்தாலும்

    தன்கையில் பிள்ளையெனத் தாங்கும் அவன்பரிவு

    தடம் மறந்தாலுமங்கே தேடிவரும் உறவு

    என்னப்பா, காட்சிப் புலன் என்று தொடங்கி, தரிசனம் என்று பேசிவிட்டுக் கடைசியில் குருவிடம் அடைக்கலம் கொண்டுவிட்டாய் என்ற கேள்வி ஒலிக்கிறது. சித்தன் போக்கு சிவன் போக்கு!

    என் குருநாதர், டாக்டரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்: சீடன் குருவைத் தேட வேண்டுமா, குரு சீடனைத் தேடி வருவாரா?

    அவர் சொன்ன பதில்: யார் தன் குரு என்று தேர்ந்தெடுக்கும் அறிவு சீடனிடம் இருக்கக் கூடுமோ? அந்த அறிவு அவனுக்கு இருந்து விட்டால் அவனுக்குப் பாடமே தேவையில்லையே. குருதான் சீடனைத் தக்க தருணத்தில் அடையாளம் கண்டு வரவேண்டும்.

    நான் மேலும் கேட்டேன்: இராமபிரானுக்கு வசிஷ்ட முனிவரும், அகத்திய முனிவரும் குருநாதர்களாக உபதேசம் செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களைக் காட்டிலும், பரம்பொருளாகிய இராமபிரான் அறிவில் குறைந்தவனா?

    டாக்டர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது நாங்கள் இருவரும், சென்னை சென்ட்ரல் ரயில்நிலயம் அருகில் இருந்த ‘த செளத் இண்டியா அத்லெடிக் அஸோஸியேஷன்’ (SIAA) என்ற சங்கத்தின் வளாகத்தில் ஓர் அறையில் தனியாக அமர்ந்திருந்தோம். 1986-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சிறிது நேர மெளனத்துக்குப் பின் அவர் கண் திறந்தார். அப்பப்பா, அதில் தெரிந்த ஒரு கோபச் சிவப்பை நான் மறக்கவே முடியாது. பயந்து விட்டேன்.

    அவர் பேசினார்: பெரியவன், சிறியவன் என்றெல்லாம் பேசக் கூடாது. தக்க தருணத்தில் பிரசவம் பார்த்துக் குழந்தையை வெளியே கொண்டுவரும் மிட் வைஃப் மாதிரி, ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இருக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரத் தக்க தருணத்தில் குருநாதன் வருவான். அது கடவுளின் ஆக்ஞை. கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் அவருக்குள் இருக்கும் மகத்துவம் வெளிப்பட ஒரு குருநாதன் கண்டிப்பாகத் தேவை.

    நான் மெளனமானேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அவர் என்னைப் பாடச் சொன்னார். மனத்தில் இருந்து பொங்கி வந்த சொற்களைச் சிந்து பைரவி ராகத்தில் பாடினேன்:

    நினைத்தேனா இங்கு வருவேன் என்று

    ஜென்மங்கள் ஆயிரம் எடுப்பேன் என்று

    நினைத்தேனா இங்கு வருவேன் என்று

    … … ..

    … … …

    (தொடரும்)

    Share
  • அணையாத சுடரேற்றுவேன்!

    -கே. ரவி

    அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்
    அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்
    கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்
    கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்
    அணையாத சுடரேற்றுவேன்!

    விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான                             flame-symbol
    விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற
    எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்
    விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள
    அணையாத சுடரேற்றுவேன்!

    பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்
    போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி
    பொய்யாகிப் போய்மறைய – எந்தப்
    பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ
    அணையாத சுடரேற்றுவேன்!

    மாயை விரித்த வலையோ – ஜனன
    மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ
    தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்
    தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்
    அணையாத சுடரேற்றுவேன்!

    சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி
    சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று
    கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்
    கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்
    பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து
    பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியிலொரு
    சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்
    சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)
    அணையாத சுடரேற்றுவேன் – இந்த
    அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!
    அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற
    அருளாட்சி மலரநான் அறைகூவியே
    அணையாத சுடரேற்றுவேன்!

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 51

    — கே.ரவி.

    கானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா! பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாநாயகி!

    தானே வெடித்துச் சிதறிய ஒற்றைப் புள்ளியும் அவள்தான். அதிலிருந்து பொலபொலவென்று பிரிந்து பரவும், பரவிக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச சக்தியும் அவள்தான். “ஊடலும் கூடலும் கோவலர்க் களித்து” என்று இளங்கோ சொன்னது போல் ஊடலும், கூடலும் பாவலர்க்களிக்கும் மாதவிப் பொன்மயிலாளள் அவள்தான். கூடல் மாநகரையே தீக்கிரையாக்கிய கண்ணகியைப் போல், மனக்காட்டை எரிக்கும் அக்கினிக் குஞ்சும் அவள்தான்.
    அவளை ஆராதிக்கவே இந்தத் தொடர்.

    ‘அதெல்லாம் சரி, கவிதை எழுதுவதில் என் பங்கு என்ன என்று தெளிவாகச் சொல்லுவே’ என்று எரிச்சலுடன் கேட்கிறான் புத்தி சிகாமணி.

    சொல்கிறேன். எழுதும் போது அடங்கியிருக்கும் நீ, எழுதி முடித்தபின் போடும் ஆட்டம் இருக்கிறதே அது பேயாட்டம் அப்பா! கவிஞன், அவன் மனம் போன போக்கில் ஏதேதோ எழுதிவிட, அதை வைத்துக் கொண்டு நீ செய்யும் வியாக்கியானம் இருக்கிறதே, அது தலைசுற்ற வைப்பது!

    சிகாமணி கேட்கிறான்: ‘ஏம்பா, நீ கூட போன பகுதியில் கானல், கோணல் என்று என்னென்ன வியாக்கியானம் செய்தாய், இப்போது என்னைக் குறை சொல்கிறாயே!’

    நானா செய்தேன், இல்லை. அது, கவிதை தானே தனக்குச் செய்து கொள்ளும் அலங்காரம். எந்த அனுபவக் களத்தில் அது ஊற்றெடுத்து வந்ததோ, அதன் ஆபரணங்களை அது அணிந்து கொண்டுதான் வரும். எழுதும் கவிஞனுக்குப் புலப்படாத அந்த நுட்பங்கள் படிக்கும் ரசிகனுக்குப் புலப்படத்தான் செய்யும்.

    ‘நானும் அதைத்தானே செய்கிறேன்’ என்று சீறுகிறான் சிகாமணி.

    இல்லை, ரசிகனின் பார்வைக்கு அணிகள் புலப்படலாம். ஆனால், ரசிகனே அணிகள் செய்து அவளுக்கு மாட்டிவிடக் கூடாது. புரிகிறதா?

    என்ன புரிந்ததோ போ என்று சிகாமணி அலுத்துக் கொள்கிறான்.

    vairamuthuஎப்படி ஒரு கவிதை தானே அணிகள் அணிந்து வருகிறது என்பதற்குத் தற்கால எடுத்துக் காட்டு ஒன்று சொல்கிறேன். கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. தோழன் என்ற தமிழ்ச்சொல் இருக்க அவர் ஏன் சினேகிதனே என்று எழுதினார் என்ற கேள்வி ஒரு மேடையில் எழுந்த போது, நான் பதில் சொன்னேன்: அந்தப் பாடலை முதலில் சரியாகப் படிக்க வேண்டும். அதில் “சினேகிதனே” என்று அவர் எழுதவில்லை. “ஸ்னேகிதனே” என்றுதான் எழுதியிருக்கிறார்.

    “ஸ்னேகிதனே, ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே”

    இதுதான் அந்தப் பாட்டின் முதல் வரி. இதைத் ‘தோழனே ரகசியத் தோழனே’ என்று பாடிப் பாருங்கள். ஜீவனே இருக்காது. ‘ஸ்’ என்ற உச்சரிப்புத்தான் இந்தக் கவிதையின் உயிர்நாடி. ரகசியத்தின் குறியீடு ‘உஸ்’ தானே! ரகசியத் தோழமையை ஒலிக்குறிப்பாலேயே உணர்த்தும் உச்சரிப்பு அது. ரகசியமாகக் காதுக்குள் யாரோ பாடுவது போன்ற அனுபவத்தைத் தரவல்ல உச்சரிப்பு அது. எப்படி அந்தக் கவிதை தன் அனுபவக் களத்தில் இருந்தே தன் அணிகலனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டது பார்த்தாயா, சிகாமணி, உன் உதவி இல்லாமலேயே!

    இன்னொரு கவிதை, சற்றே பழைய கவிதை:

    murugaசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
    தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
    கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
    கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

    என்னய்யா இது வள்ளலாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதா என்ன? ஆறு வதனங்கள், பன்னிரு தோள்கள், இரண்டு தாள்கள், ஒரு வேல், மயில்வாகனம், கோழிக்கொடி, தணிகாசலம், ஆக மொத்தம் 24 விஷயங்களைச் சொல்லிவிட்டு, இவ்வளவும் தம் ‘கண்ணுற்றது’ என்று ஒருமையில் சொல்லி விட்டாரே!
    vallalpic1இந்தப் பாடலின் அனுபவக் களம் என்ன தெரியுமா? கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன? இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொருத்தம்! இதை ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ‘ஸிந்தடிக் யூனிட்டி’ (Synthetic Unity) என்று சொல்ல வேண்டும். அதாவது, ஒன்றிய நிலை அல்லது ஒருமை நிலை.

    நான் ஏதோ கதையளப்பதாகக் கருத வேண்டாம் தம்பி! ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா? அவன் சொன்னது இதுதான். நாம் ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்க்கும் போது, சிவப்பு நிறம், மென்மையான தோல், குளுமையான சுவை, உருண்டையான வடிவம் என்றெல்லாம் அதன் பண்புகளைத் தனித்தனியாக நுகர்ந்து, அவற்றைப் பிறகு ஒன்றிணைத்து ஆப்பிள் என்ற ஒரு பொருளை அறிவில் உருவகப் படுத்திக் கொள்கிறோமா, இல்லை, ஆப்பிள் என்ற ஒரு பழத்தைப் புலன்களால் பலவாறு நுகர்ந்து, அதன் பண்புகள் இன்னின்னவை என்று பகுத்துத் தெளிகிறோமா என்பதுதான் அவன் கேட்ட கேள்வி.

    பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் ஒரு விதமான சூனிய வாதம் எழுந்து, பரவி, ஆதிக்கம் செய்தது. அது என்ன வாதம்? நாம் புலன்களால் நுகரும் பண்புகள் தவிர்த்துப் பொருண்மை என ஒன்றுமே இல்லை, அதாவது, சிவப்பு, மென்மை, குளுமை, உருண்டை ஆகிய பண்புகளைத் தவிர ஆப்பிள் என்ற ஒரு பொருளை நாம் நேரடியாக நுகர்வதே இல்லை, எனவே பொருண்மை என்பதே இல்லை. இதுதான், பார்க்லீ, ஹ்யூம் ஆகிய பிரிட்டிஷ் சிந்தனையாளர்கள் உலவ விட்ட சூனிய வாதம். அது ஒரு பெரிய அறிவியற் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த போதுதான் கன்ட் மேற்சொன்னவாறு கேள்வி கேட்டு அந்தச் சூனிய வாதத்தை எதிர் கொண்டான் என்பது மெய்யியல் வரலாறு.

    வள்ளற் பெருமானின் கவிதையில் வந்த ஒருமை-பன்மை மயக்கம் எவ்வளவு பெரிய தத்துவக் குழப்பத்துக்கு விடையாகித் தெளிவு சேர்த்தது! ஆனால், சமீபத்தில், என் இனிய நண்பர், நல்ல கவிஞர் ஒருவர் எழுதிய பாடல் தேசிய விருது பெற்றது. அது கருத்து ரீதியாக மிக நல்ல பாடல்தான். ஆனால், அதன் தொடக்க வரியில் உள்ள ஒருமை-பன்மைக் குழப்பத்தை யாராலும் தீர்க்க முடியாது.

    “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே”

    இதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிப் பார்க்கலாமே:

    EVERY FLOWERS TELLS!

    என்ன சொல்லி இதை அமைதி செய்வது!

    நான் அந்தக் கவிஞரின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. இதற்கு ஒரு நல்ல சமாதானம் அவரோ, வேறு யாரோ சொல்லிவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எனக்கு அந்தச் சமாதானம் தோன்றாமற் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். உரைநடைக்கும், செய்யுளுக்கும் வடிவ வேற்றுமை உண்டு. ஆனால் உரைநடைக்கும், கவிதைக்கும் வடிவத்தில் மட்டுமா வேற்றுமை காண்பது? உரைநடையில் சொல்ல முடிவதைக் கவிதையில் சொல்வது தேவையற்றதோ என்று தோன்றுகிறது. படிப்பவருடைய சிந்தனையை நோக்கித் தொடுக்கப்படும் வாக்கியங்கள் உரைநடையில் அமைவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுதான் நேரடியான அறிவுத் தொடர்புச் சாதனம். ஆனால் எதை உரைநடையில் சொல்ல முடியவில்லையோ அதைச் சொல்ல முற்படுவதே கவிதை என்று ஒரு தீர்மானம் போட்டுவிடலாமா?

    என்னப்பா சட்டசபையா நடத்துகிறோம், தீர்மானம் போடுவதற்கு? நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார்? அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா? இல்லை அது சாத்தியமா? எதை உரைநடையில் சொல்ல முடியாது? “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும்? அதைப் புரிந்து கொள்ளத் தேவையே இல்லை; உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான் தன் நூலுக்கே, “மின்னல் உறங்கும் போது” என்ற அருமையான ஒரு கவிதைத் தலைப்பைத் தந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அது புரிந்து கொள்வதற்காக இல்லை, ரசிப்பதற்காக.

    கவிஞர் மருதகாசியின் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:

    தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

    பாரதியின் குயில் பாட்டில் வரும் அமர வரிகள்:

    மின்னற் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
    வந்து பரவுதல் போல் ……

    இதை உரை நடையில் எழுதி யாருக்கு என்ன புரிய வைக்க முடியும்! கவிதையின் சமாச்சாரமே வேறு சாமி!

    மேலே சொல்லப்பட்ட வள்ளலார் பாட்டில் ஒன்றை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம். “அருள் கார்கொண்ட தணிகாசலமும்” என்று சொல்கிறாரே! அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலை. புறக் கண்களுக்குப் புலனாகும் தணிகை மலை கார்மேகங்கள் சூழ்ந்த மலைதான். ஆனால் அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலையாக முருகப் பெருமானே இருப்பது புறக் கண்களுக்குப் புலப்படாது. கவிஞன் எந்தக் கண்களால் தரிசனம் பெறுகிறான் என்பதை இந்தப் பாடல் எப்படித் தெளிவாக்குகிறது பார்த்தாயா தம்பி!

    “என்கவிதை எந்நாளும் பயன்படாது” என்ற என் கவிதையை முன்பே முழுசாகத் தந்து விட்டேன். அதில் வரும் ஒரு புலம்பல் வரி இப்போது கொஞ்சம் புரியத் தொடங்குகிறதோ?

    தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
    தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை

    ஆனால் அந்தத் தறியில் தான் எத்தனை வண்ண வண்ண ஆடைகள் நெய்து கொள்கிறோம்!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (50)

    கே. ரவி

     

    சொற்களுக்குள் ஏறிக் கொண்டேன். என்ன செய்யப் போகிறாய்?

    தம்பி, உனக்கும் எனக்கும் பதில் சொல்லவே வந்தது ஒரு கவிதை, 1978-ல்:

    என்

    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்

    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்

    மேகங்களிலே தேகம் இழைத்து மேனி படைத்திடலாம்

    மின்னலைப்போல் துள்ளித்துள்ளி வானில் குதித்திடலாம்

    நிலாப்பிறையைத் துந்துபியாக்கி நாதம் எழுப்பிடலாம்

    வானவில்லை வளைத்துக் கட்டி ஆடை நெய்திடலாம்

    என்

    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்

    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்

    நீர்க்குமிழிக்குள் நினைவிழந்துபோய் நித்திரை செய்திடலாம் – அங்கு

    நேர்ப்படுகின்ற காற்றை நமக்குக் காவல் அமர்த்திடலாம்

    நட்சத்திரங்களை எல்லாம் நமது வார்த்தை வயிரங்களால்

    வெட்கப்பட வைத்து நெஞ்சம் விம்மிப் புடைத்திடலாம்

    என்

    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்

    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்

    உயிர்க்கருவுக்குள் ஊடுருவிப்போய் உண்மை யறிந்திடலாம் – அங்கு

    வடிவம் எடுத்து வளரும் புதிய மாயம் உணர்ந்திடலாம்

    உலக விளிம்புக் கோடிச்சென்றே உருண்டு விழுந்திடலாம்

    விழுந்து கொண்டே வீரக் கதைகள் பேசிக் களித்திடலாம்

    ஆனால் என்

    சொற்களூக்குள் ஏறிக்கொண்டால் மீண்டுவர மாட்டாய்

    சொற்களோடு சொற்களாகக் கரைந்துபோய் விடுவாய்

    விழிதொடாத இடமெலாமென் மொழிநுழைந்து செல்லும்

    அழிவிலாத அட்சரங்கள் அமரவாழ்வு நல்கும்

    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்

    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்

    அதோ அந்தக்

    கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வரும்

    கானல் நீரை எப்படிக் கடப்பது? கானல் நீர் ஒரு தோற்ற மயக்கம்தானே. அது மெய்யில்லையே! பிறகு அதை எப்படிக் கடந்து செல்வது? இருக்கும் ஒன்றைக் கடப்பதற்கு முயற்சி செய்யலாம். இல்லாத ஒன்றைக் கடக்க என்ன செய்ய முடியும்? இல்லாத ஒன்றைக் கடப்பது வெகு சுலபம். அது இல்லை என்பதை உணரும் கணமே அதைக் கடந்து சென்று விடுகிறோம். கானல் நீரைக் கடந்து செல்கிறோமோ இல்லையோ, இப்படிப்பட்ட வியாக்யான, விளக்கங்களை எல்லாம் கடந்து சென்றால்தான் கவிதையாகிய கற்பகச் சோலை வரும்!

    புரிகிறது. ஆனாலும் அறிவு, அதான் நம்ம புத்தி சிகாமணி, எப்பொழுதும் இப்படிப்பட்ட வியாக்யானங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். மனம், அதாங்க நம்ம மனோன்மணி, பாவம், இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் மாலையில், சென்னை, மெரினா கடற்கரை சாலையில் நான் காலார நடந்து சென்று கொண்டிருந்தேன். என் கூட ஒரு நங்கையும் நடந்து வந்தாள். ஒளவையார் சிலையருகே வந்ததும், ‘வாக்குண்டாம்’ என்ற செய்யுளை உரக்கச் சொல்லிக் கொண்டே நடந்தேன். ஏன் என்று கேட்க வேண்டாம். நான் எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும் அதை எப்படியாவது ஒரு கவிதையுடனோ, செய்யுளுடனோ தொடர்பு படுத்திவிடும் என் மனம். இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்குச் சமீப கால எடுத்துக்காட்டு ஒன்று சொல்கிறேன். எனக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்திருந்த மாத்திரையை என் ஓட்டுநர் சிவசங்கரன் வாங்கி வந்து கொடுத்ததும் அந்த மாத்திரையின் பெயரைப் பார்த்தேன். ரேஜோ டி (Razo D) என்று எழுதியிருந்தது. உடனே, ‘ரேஜோ, ரேஜோ டி என்னோட மருந்து’ என்று ‘யாரோ யாரோடீ’ என்ற திரைப்படப் பாடல் மெட்டில் என் மனம் முணுமுணுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பைத்தியம் முற்றி விட்டது.

    சரி, மீண்டும் மெரினா கடற்கரை, ஒளவை சிலை, வாக்குண்டாம் என்ற சமாசாரத்துக்கு வருகிறேன். நான் அந்தச் செய்யுளைச் சொன்னதும் அருகில் நடந்து வந்த நங்கை அதன் அர்த்தத்தைக் கேட்டாள். அதை அப்படியே சொன்னாலே போதுமே, பொழிப்புரையே தேவையில்லையே என்று நினைத்து அர்த்தம் சொல்லத் தொடங்கியதும், என் குரலும், போக்கும் மாறிவிட்டதை உணர்ந்தேன். வேறு ஏதோ ஓர் அதிர்வுக்கு ஆட்பட்டு நான் பேசுவது போல் எனக்கே தோன்றியது. பேசினேன்:

    வாக்கு உண்டாகும். சாதரணச் சொல் இல்லை வாக்கு என்பது. ‘மணிவாக்கு’ என்று பாரதி குறிப்பிட்டானே அந்த வாக்கு உண்டாகும். நல்ல மனம் உண்டாகும். அந்த ‘நல்ல’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டுமா:

    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டுமுடனே

    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

    இந்த வாசகத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்க வேண்டும். அப்போது புரியலாம், ‘நல்ல’ என்ற சொல்லின் அர்த்தம். அத்துடன், மாமலராள் நோக்கு உண்டாகும். அதாவது, ‘மலரின் மேவு திருவே’ என்று பாரதி பாடினானே, அந்தத் திருமகளின் நோக்கு உன் மேல் விழும் என்பது ஒருபுறமிருக்க, மாமலராகிய இந்தப் பிரபஞ்சத்தையே ஆள்கின்ற நோக்கு உனக்கு ஏற்படும். பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று எளிதாக முடித்து விடக் கூடாது, தோழி! “மேனி நுடங்காது” என்ற சொற்றொடரை விட்டுவிடக் கூடாது. அதாவது மேனி வளையாமல், பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று படிக்க வேண்டும். இது என்ன குழப்பம்! மேனி வளைந்துதானே இறைவனைத் தொழுவது வழக்கம். அதுதானே நமஸ்காரம் செய்யும் முறை. மேனி வளையாமல் என்றால்…? மேனி வளையாமல் த்யான நிலையில் அமர்ந்து கொண்டு வணங்க வேண்டுமோ? இல்லை மகளே. மேனி வளையாமல், பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம்! அதாவது, த்யான நிலையில் அமர்ந்து கொண்டு, உன் மேனி வளையாமல் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, தும்பிக்கையான் பாதத்தைச் சார வேண்டும். எது சார வேண்டும்? துப்பார் திருமேனி சார வேண்டும்! ஸ்தூல சரீரம் எனப்படும் திட்பவுடல் வளையாமல், நிமிர்ந்து த்யான நிலையில் அமர்ந்து கொண்டால், சூக்ஷ்ம சரீரம் எனப்படும் நுட்பவுடல் நீர்போல் தெளிவாக இருக்குமாம். வெறும் மேனி வளையாமல் த்யான நிலையில் உட்கார வேண்டும். மனம் அடங்கியிருக்க வேண்டும். அப்போது திருமேனியாக, தூய நீர்போல் ஆசாபாசங்கள் எதுவும் இன்றி நுட்பவுடல் துலங்கும். அப்போது அதில் பூக்கின்ற ஞான மலரைக் கொண்டு தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம். தும்பிக்கையைச் சொல்லி, அப்படிப்பட்ட கையுடையவனின் திருப்பாதத்தைக் காட்டுக்கிறாளே இந்தப் பாட்டி! கைகாட்டிக் கால்காட்டும் வித்தை என்ன வித்தையோ! தும்பிக்கை என்பது யோக மார்க்கத்தில், பன்னிரண்டு அங்குலத் தொலைவு பாயும் ஸ்வாஸத்தை, மூச்சுக் காற்றைக் குறிக்கும் ஒரு பரிபாஷை வழக்கு. அதன் பாதம் என்பதோ மூலாதாரச் சக்கரம் என்ற நுட்ப ஸ்தானம். அந்தத் திருப்பாதத்தைச் சேர்ந்தவர்க்கு என்று சொல்லாமல் ‘சார்வார் தமக்கு’ என்று சொல்கிறாளே!

    சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றொழித்துச் சார்தரா சார்தரு நோய்

    உலகப் பொதுமறையின் சாரத்தை அன்றோ பாட்டி இங்கே குறிப்பிடுகிறாள்!

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டே அருகில் நடந்து வந்து கொண்டிருந்த நங்கையின் கண்கள் பனித்தன. “சார், இப்படியெல்லாம் இந்தப் பாடல் பற்றி நான் யோசித்ததில்லையே” என்று நாத்தழுதழுக்க அவள் சொன்னதும், “யோசித்து வருவதில்லை இது. யோகத்தில் வருவது!” என்று நான் பதில் சொன்னதாக ஞாபகம்!

    a23ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகள் என் செயலாளராகப் பணிபுரிந்ததோடு, எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்துவிட்டு, இப்பொழுது லண்டனில் சென்று வாழும் செல்வி ராணி ஶ்ரீநிவாசன் என்பவர்தான் அந்த நங்கை. இந்தச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில், தான் ஒரு சொற்பொழிவு ஆற்றப் போவதாகவும், அதில் ‘வாக்குண்டாம்’ பாடலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்ல ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டு, அந்த விளக்கத்தை மீண்டும் நினைவு படுத்தி எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் என்னைக் அவள் கேட்டிருந்தாள். கேட்டதும் வருமா விளக்கம்? யோசித்து வருவதில்லை பெண்ணே, அது யோகத்தில் வருவது என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அவள் கேட்டபடி விளக்கம் அனுப்பாமலேயே விட்டுவிட்டேன். அவள் அந்தக் கூட்டத்தில் என்ன பேசினாளோ தெரியவில்லை.

    இப்படியெல்லாம் வியாக்யானம் சொல்வது சரியா என்பது மிகவும் நியாயமான கேள்வி. ஆனால், ‘மறை’ என்று நம்பப்படும் படைப்புகளில் படிப்பவர் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு அடுக்குகளாக அர்த்தங்கள் பொதிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. ‘The Occult Element in Tamil speech’ என்று பாரதி ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதியிருந்தான். அதில் மறை வல்லுநர்கள் பொதுவான சமூக மொழியைப் பயன்படுத்தும் போது கூடத் தாங்கள் சொல்லும் சொற்றொடர்களில் மறை பொருள் இருக்கும் வண்ணமே பேசுவார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, ‘அப்படிப்பட்டவர்கள், ‘உட்கார்’ என்று சொன்னால், அது, உட்(கு)+ ஆர் எனப் பிரிந்து, ‘உள்ளமைதி பெறுக’ எனப் பொருள்தரக் கூடும் என்று எழுதியுள்ளான்.

    பதினைந்து அண்டுகளுக்கு முன், மெரினா கடற்கரை சாலை ஓர் ஆரண்யமாக, அதாவது, வனமாக ஆனதும், அங்கே, நெருங்கியமர்ந்து கொண்டு ஓர் உபநிடதப் போக்கில் ராணியும் நானும், கார்க்கியும் யக்ஞவால்க்யரும் போல் உரையாடியதும் இப்போது மனத்திரையில் நிழலாடுகிறது. அதெல்லாம் ஒரு கண நேர அனுபவம். யோசித்து வாராது தம்பி. வெறும் புத்தி முயற்சியில் விரித்துப் பேசும் வியாக்யானம் இல்லையது. ஆட்கொள்ளப்பட்ட நிலையில் உள்ளிருந்து ஊற்றெடுத்து வரும் உணர்வு தம்பி. ஆங்கிலத்தில் ‘ஞானத் தாழிசை’ விளக்க நூலாகிய ‘த வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ எழுதும் போது என்னை என் குருநாதர் அப்படிப்பட்ட நிலையில்தான் வைத்திருந்தார்.

    ‘தம்பட்டம் போதுமண்ணே’ என்று இடித்துரைக்கிறான் சிகாமணி.

    தம்பட்டம் இல்லை தம்பி, தத்துவம். இப்பொழுது விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

    நம் திட்ப உடலைக் கடந்த நிலையில் இன்னோர் அதிர்வுக்கு நாம் வசமாவதுதான் ‘பரவசம்’ என்ற செய்தியைச் சொல்லத்தான் இந்தக் கதை. அப்படிக் கடந்த நிலையில் வசமாவதைத்தான் ‘பரவசம்’ என்று குறிப்பிடுகிறோம். ஆங்கிலத்தில் இதுதான் ‘எக்ஸ்டஸி’ எனப்படுகிறது. இதையே தத்துவ மொழியில் சொன்னால், ‘Transcendental Experience’.

    வியாக்யானமே தேவைப்படாத என் பாடல் ஒன்றின் வரிகள் இப்பொழுது மேலும் சுடர் விட்டுப் பிராகாசிப்பதைப் பார்க்க முடிகிறது. பாரதியை நினைத்து எழுதிய அந்தப் பாட்டு முழுமையும் முன்பே ஒரு பகுதியில் தந்து விட்டேன். இருந்தாலும், பரவசம் பற்றிய விளக்கத்துக்குப் பிறகு மேலும் ஒளிபெற்று விளங்கும் அந்த வரிகளை மட்டும் இங்கே மீண்டும் நினைவு கூரலாம்:

    கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே

    காட்டு வழியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே

    தேடிச் சென்ற திசையெல்லாம் பெருந் தீ வளர்த்தானே

    தேகம் எடுத்ததனாலே அவனும் தேய்ந்து விட்டானே

    கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வருமா, வராதா?

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 49

    கே.ரவி

    புயல் வந்ததா, முயல் வந்ததா?

    ஒன்றும் வரவில்லை தம்பி. காத்துக் கொண்டிருக்கிறேன். காலம் மட்டும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்? தெரியாது. ஆனால், காத்துக் கொண்டே இருக்கிறேன்.

    சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்

    கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்

    என்று கம்பன் சொன்னது போல், நானும் ஓர் அசோக வனத்தில்….!

    என் நூல்களைப் பொதுவாக நான் விரைவில் எழுதி முடித்து விடுவேன். “நமக்குத் தொழில் கவிதை” என்ற நூலை ஒரு மாதத்துக்குள் எழுதி முடித்ததாக ஞாபகம். ஆங்கிலத்தில் எழுதிய சட்ட நூல்கள் இரண்டும் அப்படித்தான். ஆனால் “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற நூல் எழுதி முடிக்கச் சில ஆண்டுகள் ஆயின. காரணம், பாடமாக நான் படிக்காத அறிவியல் பற்றிய நூல் அது. பல ஆங்கில நூல்கள் படித்துப் பயின்று நான் எழுத வேண்டியிருந்தது. அதே போல், “வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்” (Verses of Wisdom) என்ற ஆங்கில நூல் எழுதவும் பல ஆண்டுகள் ஆயின. அது நான் என் போக்கில் சிந்தித்து எழுதிய நூல் இல்லை. அதன் ஒவ்வொரு பகுதியையும் எழுதும் போதும், சிந்தனை முயற்சி அதிகம் குறுக்கிடாமல், உள்ளூக்கம் என்னைத் தூண்டக் காத்திருந்து, காத்திருந்து எழுதிய நூல் அது. அப்படித்தான் “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற ஆங்கில நூலைக் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்சொன்னவாறு காத்திருந்து, காத்திருந்து எழுதி வருகிறேன். அதை எழுதி முடிக்கும் பணியை இறைவன் எனக்குத் தந்திருந்தால், என் உடலும், மனமும் தளர்ந்து போவதற்குள், என் உலக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருவதற்குள், அந்த நூலை எழுதி முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

    நான் எதற்காக எழுதுகிறேன்? ஒரே பதில். எதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லையோ அதை எழுதுகிறேன். அதை எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை என்பதுதான் நான் அதை எழுத ஒரே காரணம்; நானறிந்த ஒரே காரணம்.

    ‘ப்ரும்ம சூத்ரம்’ என்ற மிகப் பழைய சமஸ்க்ருத நூலுக்கு ஆங்கிலத்தில் ஒரு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கேன் ஏற்பட்டது? தெரியாது என்பதுதான் சரியான விடை.

    நூல்கள் எழுதி அதன் மூலம் பேரும், புகழும் பெற்று வாழ வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. என்னுடைய எந்த நூலையும் ஓரிருவருக்கு மேல் எவரும் முழுமையாகப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. இருந்தும், நான் தொடர்ந்து எழுதுகிறேன். என் ஆயுட்காலத்துக்குள் இந்த நூல்களை நிறைய பேர் படிக்க வேண்டும் என்ற ஆசையோ, அவசரமோ எனக்கில்லை. இந்த நூல்களை ஈன்றெடுத்த காலமே அவை எங்கே, எப்போது போயடைய வெண்டும் என்பதை நிர்ணயம் செய்யும்.

    ஆங்கிலத்தில் நான் எழுதிய ஒரு சட்ட நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசும் போது என் இனிய நண்பர், திரு.ப.சிதம்பரம் ஒரு கேள்வி கேட்டார். அவர் ஆங்கிலத்தில் கேட்ட அந்தக் கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் இங்கே தருகிறேன்: Ravi, how do you find time to write such books ? என் ஏற்புரையில், ஆங்கிலத்தில் நான் சொன்ன பதில்:

    I do not find time, but, Time finds me.

    தமிழில், கிட்டத்தட்ட, இப்படிச் சொல்லிப் பார்க்கலாமோ?

    காலத்தை நான் தேடிப் போவதில்லை. காலமே என்னைத் தேடி வந்து பற்றிக் கொள்கிறது.

    எத்தனையோ அடியார்கள் இறைவனைத் தேடி அலைபாய்ந்திருக்கும் வரலாறுகளுக்கு இடையில் ஃபிரான்ஸிஸ் தாம்ஸன் என்ற ஆங்கிலக் கவிஞன் மட்டும் வேறுவிதமாகச் சொல்கிறான். அவனைத் தேடிவந்து துரத்துகிறதாம், சொர்க்கத்தின் வேட்டை நாய். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் அலைபாய்கிறான். எங்கெங்கோ ஓடுகிறான். நட்சத்திர மண்டலங்களுக்கெல்லாம் சென்று புகலிடம் கேட்கிறான். எல்லாமே அவனை ஒளித்து வைத்துக் கொள்ள முன்வராத நிலையில், “ஐயோ, நான் தோற்றேன்” என்று அவன் வீழ்கிறான்! அவனைத் துரத்தி வந்த சொர்க்கத்தின் வேட்டை நாயான இறைவனே தன் உண்மையான புகலிடம் என்பதைக் கடைசியில் உணர்கிறான். “The Hound of Heaven” என்ற அந்த அருமையான ஆங்கிலக் கவிதை என்னை மிகவும் தாக்கிய படைப்புகளில் ஒன்று. அதன் தொடக்க வரிகளே அந்தக் கவிதையின் விறுவிறுப்புக்கும், ப்ரும்மாண்டமான அரங்க அமைப்புக்கும் கட்டியம் கூறுகின்றன:

    I fled Him, down the nights and down the days;

    I fled Him, down the arches of the years;

    I fled Him, down the labyrinthine ways

    Of my own mind; and in the midst of tears

    I hid from Him, and under running laughter.

    Up vistaed hopes I sped;

    And shot, precipitated,

    Adown Titanic glooms of chasmed fears,

    From those strong Feet that followed, followed after.

    But with unhurrying chase,

    And unperturbèd pace,

    Deliberate speed, majestic instancy,

    They beat—and a Voice beat

    More instant than the Feet—

    ‘All things betray thee, who betrayest Me’

    இரவு பகலாக அவனிடமிருந்து தப்பிக்க நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். காலச் சந்திகளின் ஊடே, என் மனத்தின் நெறியற்ற குறுக்குப் பாதைகளின் ஊடே …. கண்ணீர்த் துளிகளுக்கிடையில் ஒளிந்து கொண்டேன்; ஏதோ ஒரு நம்பிக்கைத் தோற்றம் காட்டிச் சலசலக்கும் சிரிப்பலைகளினூடே விரைந்தேன். எதிர்பாராமல், திடீரென்று அச்சம் என்ற அதல பாதாளத்தில் வீழ்ந்தேன். ஆனால், நிதானமான விரட்டலில், நிலைகுலையாத கதியில், கணிக்கப்பட்ட விரைவோடு, கம்பீரமான அவசரத்தோடு என்னைத் துரத்தித் துரத்தி வரும் அந்த வலிமையான பாதங்கள்; அவற்றைக் காட்டிலும் ஓர் அவசர அருகாமையில் ஒலிக்கிறது ஒரு குரல்: ‘என்னை விட்டு ஓடும் உன்னை எல்லாமே கைவிட்டு விடும்.’

    அடாடா! மலைக்க வைக்கும் சொல்லோவியம்!

    அந்தக் கவிஞனைத் துரத்திய சொர்கத்தின் வேட்டை நாய் போல், காலம் என்னைத் துரத்தித் துரத்திப் பிடித்து எழுத வைக்கிறது என்று நான் சொன்னால் அது கொஞ்சம் அதிகப்பிரசங்கமாகத் தோன்றலாம்; ஆனால், வேறு விதமாக அதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

    எழுத்தாளன் தான் வாழும் காலத்திலேயே புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதில் தவறெதுவும் இல்லை. ஆனால், புகழ் என்று நான் கருதுவதே வேறு.

    பிரபலமாக இருப்பது வேறு. புகழ் என்பது வேறு.

    இருவே(று) உலகத்(து) இயற்கை திருவேறு

    தெள்ளியர் ஆதலும் வேறு

    ஒருவருடைய பிராபல்யம் அவர் முகம் ஊடகங்களில், திரையில் தினம் வந்து கொண்டிருக்கும் வரைதான். 1940-களில், எம்.கே.தியாகராஜ பாகவதர் புகைவண்டியில் பயணம் செய்தால், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பாகவதரைப் பார்க்க நூற்றுக் கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அலைமோதுவார்கள்; அந்தப் புகைவண்டி, ஏழெட்டு மணிநேரம் தாமதமாகத்தான் இலக்கைச் சென்றடையும்; ஆனால், அவரே திரையில் தோன்றாமல் ஏழெட்டு ஆண்டுகள் சிறை சென்று வந்த பிறகு, அவர் ரிக்க்ஷாவில் சென்றால் கூடப் பார்க்க ஆளற்ற நிலையும் உருவானது. திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தே நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரை இப்பொழுது ஏழெட்டு வயதான தமிழ்ச் சிறுவர்களுக்குத் தெரியவில்லை.

    ஒரு வேடிக்கையான சம்பவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். 1972-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அப்போது, நான் ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகைக்குப் பல ஊர்களில் மாணவப் பிரதிநிதிகள் இருந்தார்கள். ‘இதெல்லாம் ஒண்ணும் கொறச்சலில்லை’ என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறதே! சரி, சம்பவத்துக்கு வருகிறேன். டில்லி நகரத்துக்கான பிரதிநிதியாக இருந்த ராஜா என்ற நண்பர் அப்போது சென்னைக்கு வந்திருந்தார். அவர் சென்னையில் இருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் தொலைபேசியில் சொன்ன போது, நான் ஏ.வி.எம். படப்பிடிப்பு நிலையத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். மாணவரிஸத்துக்குப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, இயக்குநர் ஶ்ரீதர் என்னை அங்கே அழைத்திருந்தார். அப்போது அவர் “ஹீரோ 72” என்ற படம் எடுத்துக் கொண்டிருந்தார். அது சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘வைர நெஞ்சம்’ என்ற தலைப்போடு வெளியாகியது.

    ஶ்ரீதர் சொன்னபடியே நான் அந்தப் படப்பிடிப்பு நிலையத்துக்குச் செல்லத் தயாரான போதுதான் ராஜாவின் அழைப்பு வந்தது. ராஜாவையும் அங்கேயே வரச் சொன்னேன். நான் போய்ச் சேரவும் அங்கே ராஜா எனக்காகக் காத்திருந்தான். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தடுமாற்றம்தான். ஆங்கிலம், ஹிந்தி பேசுவான். டில்லியிலேயே பிறந்து, வளர்ந்தவன். அவனும், நானும் ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததும் அங்கே ஒரு தளத்தின் வெளி வாயிலில் இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் இயக்குநர் ஶ்ரீதர். அவர் அருகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு பிரபலமான பிரமுகர் அமர்ந்திருந்தார். என்னைச் சுட்டிக் காட்டி, “தயாரிப்பாளர் கல்யாணராமனின் புதல்வர்” என்று என்னை அந்த பிரபலமானவருக்கு ஶ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார். ‑அவரும், வணக்கம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “வாத்யார் செளக்கியமா?” என்று என் தந்தை விஸ்வம் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு பதில் சொல்லிவிட்டு, அருகில் இருந்த ராஜாவிடம் ஶ்ரீதரைக் காட்டி, “இவர்தான் இயக்குநர் ஶ்ரீதர்” என்றேன். அவன் உடனே அருகில் முழு மேக் அப்பில் அமர்ந்திருந்த பிரபலமானவரைச் சுட்டிக்காட்டி அவர் யார் என்று கேட்டு விட்டான். எனக்கு பகீர் என்றது. இயக்குநர் ஶ்ரீதரோ எழுந்து நின்று கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். தன்னைத் தெரியாத ஒரு தமிழன் இருப்பது அந்தப் பிரபலமானவருக்கே, அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே வியப்பாக இருந்தது. நான் ராஜாவிடம் மெதுவாக “டேய், இவர்தாண்டா சிவாஜி” என்றதும், அவன் இன்னும் சத்தமாக “ஓ, நான் இவர் நடித்து ஒரு படம் ரொம்ப நாட்களுக்கு முன் பார்த்திருக்கிறேனே, பாசமலர் என்று நினைக்கிறேன்” என்றதும் இயக்குநர் ஶ்ரீதர் இன்னும் அடக்க முடியாமல் சிரித்ததை நினைத்துக் கொள்கிறேன். பிரபலத்தின் பலம் அவ்வளவுதான்!

    அதே சமயத்தில், நாம் இன்னொன்றைக் கருதிப் பார்க்க வேண்டும். எந்தப் புலவனின் நூலைத் தமிழ்ச்சங்கம் அங்கீகரிக்கத் தயங்கியதோ, அந்தப் புலவனின் நூலை உலகப் பொதுமறை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடி வருகிறோம்; எந்தக் கவிஞனின் இறுதி யாத்திரையில் இருபதுக்கும் குறைவானவர்களே கூடச் சென்றனர் என்று நாம் இன்னும் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ, அந்தக் கவிஞனின் கவிதைகளைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் லட்சக் கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் பயில்வதுடன், அவனுடைய வரிகளைச் சொல்லாமல் எந்த மேடைப் பேச்சும் நிறைவு பெறுவதில்லை என்ற நிலையும் உருவாகி விட்டது. பூமியைச் சுற்றிக் கதிரவன் வருவதாகச் சொல்லப்பட்ட புவிமையக் கருத்தோட்டத்தை மறுத்துக் கதிர்மையப் படிவத்தை முன்மொழிந்ததற்காக யார் சித்திரவதை செய்யப் பட்டானோ, அவனைத்தான் தற்கால அறிவியலின் தந்தை என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகம் கொண்டாடுகிறது.

    பிரபலமாக இருப்பது கொஞ்ச காலத்துக்குத்தான். புகழோ காலம் கடந்தது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இசை வாழ்ந்து கொண்டிருக்கும்; விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கும். ரவிவர்மன், சில்பி போன்ற மேதைகளின் ஓவியங்களும், கோபுலுவின் கோட்டோவியங்களூம் எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்கப் படும். கல்கி, நா.பா., இந்திரா பார்த்தசாரதி போன்ற வல்லுநர்களின் எழுத்தோவியங்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். இசைக்கவி ரமணன், வ.வே.சு., சு.ரவி ஆகியோர் கவிதைகள் போல் என் கவிதைகளும் காலம் கடந்து நிற்கும். ஒரு நம்பிக்கைதான்!

    என் மூலமாக என்னென்ன படைப்புகள் உருவாக வேண்டும் என்பது இறைவன் திட்டமோ அவை உருவாகியே தீரும். காத்திருப்பது மட்டுமே என் பணி. கொக்குத் தவத்தில் காத்திருக்கிறேன். தக்க நேரத்தில் அதன் குத்தொக்கச் செயல்படுவேன்.

    போதும் நிறுத்துவே. கொஞ்சம் வுட்டா ஒரேடியா அளந்து கொட்டிடுவீகளே! சிகாமணி அதட்டுகிறான். மனோன்மணி புன்முறுவல் பூக்கிறாள்.

    ஏன், நான் காத்திருப்பதில் என்ன தவறு? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், மன்னிக்கவும், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், ஏன், பல யுகங்களுக்கு முன் நிகழ்ந்து முடிந்த பிறகும், கோடானு கோடி ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஆகாச கூடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அனுபவக் களங்கள் தம்முள் பிரவேசிக்க மீண்டும் ஒரு கவிஞன் வரும்வரைக் காத்திருக்க முடியும் என்றால், நான் காத்திருக்கக் கூடாதா? மனோன்மணி முணுமுணுக்கிறாள், 36 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு பாடலை:

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்

    அந்த

    உலகத்திலே நான் எனக்கொரு வடிவம்

    செய்ய நினைத்தேன் செயலிழந்தேன்

    நிலவொளி கொண்டு கதிரவனைத்

    தேடுகின்றேன் எங்கும் ஓடுகின்றேன்

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    நினைவுத் திரையில் நிழல் தெரிந்ததும்

    நீரில் வண்ணங்களைக் குழைத்தேன்

    தூரிகையால் அதைத் தீண்டிய போது

    திரையே நிழலென்று தெரிந்து கொண்டேன்

    வானவில் போல நானிங்கே

    வளைகின்றேன் பின்பு கலைகின்றேன்

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    கனவுக் கடலின் நடுவினிலே நான்

    காகிதப் படகாய் மிதந்திருந்தேன் – என்

    கலங்கரை விளக்கங்கள் மூழ்கியதாலே

    காற்றின் கருணையைப் பார்த்திருந்தேன்

    கரைவரும் என்று காத்திருந்தேன்

    காத்திருந்தே மெல்லக் கரைகின்றேன்

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்

    கூட்டிக் கழித்துப் பார்த்தால் வார்த்தைகள், வெறும் வார்த்தைகள்! இதைத்தானே சொன்னான் விட்ஜென்ஸ்டைன்! ஆனால் சொல் என்பது என்ன, அவ்வளவு எளிதானதா? ஆதியில் சொல் இருந்தது என்றுதானே விவிலியம் தொடங்குகிறது!

    தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ

    இதுதானே கம்பராமாயண சாரம்!

    சொல் ஒன்று வேண்டும்

    இதுதானே பாரதியின் பிரார்த்தனை!

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை

    இதுதானே நம் அருமைக் கவிஞர் கண்ணதாசனின் கணிப்பு.

    ம்! என் சொற்களுக்குள் ஏறிக்கொள்!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (48)

    கே.ரவி

    என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர் பெருமக்களில், லலிதா பாரதி அம்மையாரையும், நான் பெரிதும் மதிக்கும் இலக்கியப் படைப்பாளர்களான அமரர் தொ.மு.சி.ரகுநாதனையும், அமரர் தி.க.சிவசங்கரனையும், பாரதி கலைக் கழக நிறுவனர் பாரதி சுராஜ் அவர்களையும், முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களையும், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களையும், குறிப்பிடாமல் இருக்க முடியாது.

    லலிதா பாரதி அம்மையாரின் வாழ்த்தை அவருடைய தாத்தாவின் வாழ்த்தாகவே, அதாவது, என்றைக்குமே இளமையாகவே நம் நெஞ்செல்லாம் நிறைந்துவிட்ட பாரதியின் வாழ்த்தாகவே எண்ணிப் பரவசப் பட்டேன்.

    பாட்டினிலே சொல்வது பராசக்தி சொல் என்றால் ஏட்டினிலே சொல்வது எழுத்தாளன் கவிஞன் ரவியின் சொல் அல்லவா? …………… உங்கள் மனத்தில் பாரதியின் கவிதைகள் ஆழ்ந்த சிந்தனைகளைத் தோற்றுவித்து, கருத்து அலைகளோடு மோதி ஒரு வியப்பான, நயமான விமரிசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது….. வாழ்க உங்கள் பாரதி பக்தி.

    தம்மால் நடமாட முடிந்த வரை வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொண்ட அந்த அம்மையாரின் உள்ளூக்கம் வியக்கத் தக்கது. அவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய புகைப்படத்தில்தான் அவர் முகத்தில் எத்தனைப் பொலிவு, கம்பீரம்!

    as1

    as2தொ.மு.சி.ரகுநாதன் அவர்களுடைய கடிதம் படித்துக் கண்கலங்கினேன்:

    நூலைப் படித்து முடித்து விட்டேன். என்றாலும் …. Arthritis நோயினால் வலது கையும், விரல்களும் பாதிக்கப்பட்டு, கடிதம் எழுதுவது கூடச் சிரமமாகி, என் எழுத்துப் பணியே முடங்கிவிட்ட நிலையில், தங்கள் நூலைப் பற்றிச் சற்று விரிவான கருத்துரை கூற இயலாமைக்கு வருந்துகிறேன்………. தங்கள் பாரதி ஆய்வுப்பணி தொடர என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

    தி.க.சி.யின் இரண்டு கடிதங்கள் என் கோப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள். முதல் கடிதம், “நமக்குத் தொழில் கவிதை” என்ற என் நூலைப் படித்துவிட்டு, 1997-ல் அவர் கைப்பட எழுதிய கடிதம். 73 வயதில் கண்புரை நோயின் தொல்லைக்கிடையே நூலைப் படித்து முடித்த செய்தியைச் சொல்லிவிட்டு அவர் எழுதியிருந்த வரிகள் மறக்க முடியாதவை:

    சொல்புதிது; பொருள் புதிது; சுவை புதிது என்ற பாரதியின் திறனாய்வு இலக்கணம், இந்நூலுக்குப் பொருந்துகிறது. அதுவேas3 – கருத்து வேற்றுமைக் கிடையிலும் – இந்நூலின் சிறப்பு. இந்நூல் பரவலாகப் படிக்கப்பெற வேண்டும்; விவாதிக்கப் பெற வேண்டும் என்பது என் அவா. இந்த விவாதத்தில், நா.சீ.வரதராஜன், சுராஜ் போன்ற என் நண்பர்களோடு, வல்லிக்கண்ணன், ச.செந்தில்நாதன், திருப்பூர் கிருஷ்ணன், இன்குலாப், அப்துல் ரகுமான், பழமலய், ஈரோடு தமிழன்பன் முதலிய படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் பங்கேற்க வேண்டும் என்பது என் விழைவு. வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன், ப.சிவகாமி, திலகவதி முதலியோரும் பங்கேற்றால் நல்லது. குறைந்த பட்சம், ‘இலக்கியச் சிந்தனை’க் கூட்டத்திலாவது, இந்நூல் ஆராயப்பெற வேண்டும்; முயல்க! வெல்க! …….

    இரண்டாவது கடிதம், சில ஆண்டுகள் கழித்து, ‘மின்னற் சுவை’ என்ற என் நூல் கிடைக்கப் பெற்றவுடன் அவர் எழுதியது. “மகாகவி பாரதி பக்தர்/பித்தர்” என்று என்னை விளித்துவிட்டுக் கண்புரை நோயின் கடுமையாலும், இதயநோயின் காரணமாகவும் தாம் உடல்நலம் குன்றியிருந்த வேதனைச் செய்தியைச் சொல்லி, “பாரதி பாதையில் புதுயுகம் படைப்போம்” என்ற நல்வாக்குடன் கடிதத்தை நிறைவு செய்திருந்தார்.

    தி.க.சி. விழைந்த வண்ணம் என் நூல்கள் அவர் குறிப்பிட்ட பெருமக்களால் அவருடைய ஆயுட்காலத்தில் ஆய்வு செய்யப்படவில்லை. அனால், அதற்கான வாய்ப்பு இப்பொழுது, ஒரு மாமாங்கக் காலத்துக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. ஆம், அடுத்த ஆண்டு, 2015, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் என் நூல்கள் குறித்த முழுநாள் கருத்தரங்கம் ஒன்றை, திரு.பி.எஸ்.ராகவன், முனைவர் ஒளவை நடராஜன் போன்ற பல நல்ல பெருமக்கள் துணையுடனும், வழிகாட்டுதலோடும் நடத்தப் பாலக்காடு பேராசிரியர் திரு.கே.ஏ.ராஜாராம், முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் உலகநாயகி பழனி ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    as4இந்தியாவைப் பொறுத்தவரை, இலக்கியத் திறனாய்வின் முன்னோடி என்று கருதப்படுபவர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார். அவருடைய மகளும், மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளரும் ஆன முனைவர் பிரேமா நந்தகுமார் என் நூல்களைப் படித்துவிட்டு ஒரு நல்ல திறனாய்வுக் கடிதமே வரைந்திருந்தார். என் நூல்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அதில் தம்மைக் கவர்ந்த அம்சங்களையெல்லாம் எடுத்துக்காட்டும் போக்கில், என் இனிய நண்பர் கவிமாமணி மீ.விஸ்வநாதனின் அற்புதமான இரண்டு வரிகளை நான் ஒரு கட்டுரையில் எடுத்தாண்டிருந்ததை உன்னிப்பாகக் கவனித்து, அந்த வரிகளை மனம்திறந்து பாராட்டியிருந்தார். அந்த வரிகள்:

    குருவை எண்ணிக் கோலம் போட்டால்

    திருவே வீட்டில் திருவிளக் கேற்றுவாள்

    என் கவிதைத் தொகுப்பில் உள்ள ‘குருமந்திரம்’ என்ற நூறு பாடல்களை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். குருபக்தி எந்த அளவு டாக்டர் பிரேமா நந்தகுமாரின் இதயத்தை ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறதே!

    கவிதை விமர்சனத்தில் மிகக் கறார் பேர்வழியான பாரதி சுராஜ், என்னுடைய கவிதைத் தொகுப்பை ‘இன்னொருas5 கீதாஞ்சலி’ என்று எழுதியிருந்ததை முன்பே சொல்லிவிட்டேன். அவர், ‘முரண்பாடுகளும் முண்டாசுக் கவிஞனும்’ என்ற என் கட்டுரையைப் படித்து விட்டு ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார். நான் நல்ல நூலாசிரியனாக உருவாகி வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து விட்டு நிறைவாக இப்படி எழுதியிருந்தார்:

    இந்தப் பேனா இனி ஓயாமல் எழுதிக் கொண்டேயிருக்க வாழ்த்துகிறேன்

    அவர் வாழ்த்துப் பாதி பலித்தது. ஆம் அதன் பிறகு நான் நிறையவே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவும் ஓயாமல். அதாவது, என் வக்கீல் பணியில் இருந்து ஓய்வு பெறாமலேயே, எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏன் பாதிதான் பலித்தது என்று சொன்னேன் தெரியுமா? இப்பொழுதெல்லாம் நான் பேனாவால் எழுதுவதே இல்லை. எல்லாவற்றையும் நேரடியாகக் கணினியில் மின்னச்சு செய்து விடுகிறேன், இதோ, இப்பொழுது இந்தக் கட்டுரை உட்பட! பாரதியின் “எழுதுகோல் தெய்வம்” இனி என்னாகும்? அந்தத் தெய்வத்தின் கல்கி அவதாரம்தான் கணினி என்று சிகாமணி முணுமுணுக்கிறான். எப்படியோ!

    as6போற்றுதலுக்குரிய பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம், ‘மின்னற்சுவை’ என்ற என் நூலைப் படித்துவிட்டு மிக நல்லதோர் ஆய்வுக் கடிதம் எழுதியிருந்தார். அவர் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையுடையவர் என்பதை நாடறியும். கம்பன் என்றதும் நீதிபதி மகராஜனும், நீதிபதி இஸ்மாயிலும் நினைவுக்கு வருவது இயல்பே. தெ.ஞா. அவர்கள் தம் கடிதத்தில், என் நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் பற்றி விரிவாகத் தம்முடைய பாராட்டைச் சொல்லிவிட்டு, என் நூலைப் படித்த போது சில இடங்களில் நீதிபதி மகராஜன் பேசுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று என்று குறிப்பிட்டுவிட்டுப் பின்வருமாறு அக்கடிதத்தை முடித்திருந்தார்:

    நீதித்துறை தமிழுக்குக் குறிப்பிடத்தக்க தொண்டாற்றியுள்ளது. அம்மரபு தங்களால் மேலும் தொடரப் படுகிறது.

    இதையெல்லாம் நான் இங்கே குறிப்பிட மூன்று காரணங்கள் உண்டு.

    எந்த நூலை யார் படித்தாலும் தமக்கென உள்ள தனிப்பார்வையோடுதான் அந்த நூலின் உள்ளடக்கத்தை அணுகுகிறார்கள் என்ற இயல்பான உண்மையையும், அதே நேரத்தில் தம் கருத்துக்கு உட்படாத அல்லது உடன்படாத கருத்தானாலும், அதைக் கருதிப் பார்த்துப் பாராட்டும் பண்பு மேலே நான் குறிப்பிட்ட பெரியவர்களிடம், அவர்களைப் போன்ற உண்மையான இலக்கிய ஆய்வாளர்களிடம் உண்டு என்பதை நான் உணர்ந்து கொண்டதையும் இங்கே பதிவு செய்ய விரும்பியது முதற் காரணம்.

    மாங்கு மாங்கென்று கைவலிக்க நான் எழுதிய நூல்களை யாருமே படிப்பதில்லையோ என்று நான் சிலசமயம் உள்ளுக்குள் குறைபட்டுக் கொண்டது தவறு என்று, இக்கடிதங்களை இப்பொழுது மறுவாசிப்புச் செய்த போது, நான் உணர்ந்து கொண்டதைப் பதிவு செய்ய விரும்பியது இரண்டாவது காரணம்.

    தெரிந்தோ, தெரியாமலோ சுயசரிதை போல நான் எழுதத் தொடங்கிவிட்ட இந்தச் சுயபுராணத் தொடரில் என்னைப் பற்றிச் சற்றேனும் புகழுரையாகச் சொல்லிக் கொள்ள என் நூல்களையும், இந்தக் கடிதங்களையும் விட்டால் வேறு சான்றுகள் எதுவுமில்லை என்ற அப்பட்டமான உண்மையை ஒப்புதல் வாக்குமூலமாகப் பதிவு செய்ய நினைத்தது மூன்றாவது காரணம்.

    ஆனாலும் எனக்கொரு குறை. 1962-63-ல், நான் சரிவரத் தமிழ் பயில்வதற்க முன்பே, அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளன்று ஆசிரியர் தின வாழ்த்தாக அவருக்கு எழுதி அனுப்பியிருந்த ஆங்கிலக் கவிதையும், அதைப் படித்துவிட்டுப் பாராட்டி அவரிடம் இருந்து வந்த கடிதமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, நினைவிலும் இல்லை.

    இவ்வளவு பாராட்டுகளையும் இத்தனைப் பெரிய மனிதர்களிடம் பெற்ற பின்னும், அதை உள்வாங்கிக் கொள்ளாமல், இன்னும் நான் என்ன எழுத வேண்டுமோ அதை எழுதிவிடவில்லை என்ற தாகத்தோடு தவித்துக் கொண்டிருப்பதைத்தான் “முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்” என்ற கவிதையில் சொல்ல முயல்கிறேனோ? என்ன முயலோ அது! புயல் வரும் என்பதை முயல் வரும் என்பதுபோல் புரிந்து கொண்டு, ஆறு வயதில் குழந்தை ஷோபனா காத்திருந்ததைப் போல, நான் இந்த அறுபது வயதிலும், ஏதோ முயல் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேனோ! புயலா, முயலா? விடிந்தால் தெரியும் கதை!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 47

    கே. ரவி

    “அப்ப, கணம் என்பது ஒரு நிமிடத்தை விடக் குறைவான நேர அளவா?” சிகாமணி கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டதும் தலையில் அடித்துக் கொள்கிறேன். தலைதானே சிகாமணியின் தலைமைச் செயலகம்!

    கிழிஞ்சுது கிருஷ்ணாவதாரம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டாயே, சிகாமணி! கணம் என்பது ஓர் அளவவே இல்லை. அது ஒரு புள்ளி. கணிதத்தில் புள்ளிக்கு எப்படிச் சுற்றளவு, ஆரம் எதுவும் கிடையாதோ, அப்படித்தான் கணமும். இடத்துக்குப் புள்ளி எப்படியோ, காலத்துக்குக் கணம் அப்படி. ஆனால், சாதாரண அளவுகோல்களுக்குச் சிக்காத புள்ளியும், கணமும் ‘நுட்ப உடல்’ என்று மேலே நான் குறிப்பிட்ட சாதனத்துக்கு வெகு சுலபமாக அகப்பட்டு விடுகின்றன. நுட்பத்தின் பரிமாணங்களே வேறு.

    கவிதை ஜனிக்கும் கணங்களில், நான் வேறு வேறு பரிமாணங்களில் நுட்பமாக அனுபவம் பெற நேரிடுகிறது. நுட்பமாக என்றால்…? இதை எப்படி உரைநடையில் சொல்லி விளங்க வைக்க முடியும்? அதனால்தான், கவிதையிலேயே சொல்ல முற்பட்டேன்:

    பாடலைக் கேட்க : https://soundcloud.com/vallamai/sets/www-vallamai-com

    முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்

    கருவத் திற்கோர் உருவம் அளித்துக்

    கருவுக் குள்ளே வைத்து வளர்த்திவ்

    வுலகுக் கென்னை அழைத்தாலும்

    கால்கள் கைகள் விழிகள் எனக்

    காவல் அமைத்துக் கொடுத்தாலும்

    காதல் நட்பு சுற்றமெனப்

    பாடல் நூறு படித்தாலும்

    முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்

    ஓலமெழுப்பும் கடலோரத்தில்

    ஒற்றை மரத்தின் வெற்று நிழலில்

    உடைந்த நிலவை உரசிப் போகும்

    கருமேகக் காட்சிகளில்

    மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்

    மல்லாந்த படித்துடிக்கும்

    பூச்சிகளின் உயிர்ப் போராட்டங்களில்

    பேச்சிழக்க வைத்துவிடும்

    பெருவெளியின் ஒருநினைப்பில்

    அட

    அனுபவத்திற் குள்ளேயும் ஓர் அதல பாதாளம் – என

    மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்

    வானப் பரப்பை வாரிச் சுருட்டி

    வார்த்தைக ளுக்குள் ளேவைத் துருட்டிக்

    கணமென் றிங்கோர் அணுவைப் பிளந்து

    கனவுப் பொருளாய் மாறி நுழைந்து

    யார்யார் தலையோ சிதறி வெடிக்கக்

    கதைகள் நூறு சொல்லி முடிக்க

    மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம் – அட

    அனுபவத்திற் குள்ளேயும் ஓர் அதல பாதாளம்

    “புரிந்து விட்டது!” குதிக்கிறான் சிகாமணி, ‘யுரேகா’ என்று கத்திக் கொண்டே ஓடிய ஆர்க்கிமிடீஸைப் போல, ஆனால், நல்ல வேளை, நிர்வாணமாக இல்லை.

    அவன் சொல்கிறான்: “வாத்யாரே. புரிந்து விட்டது. கம்ப்யூட்டர், அதாம்பா, கணினி. அதற்கு ஹார்ட் வேர், ஸாஃப்ட் வேர் என்று இரண்டு உறுப்புகள் உண்டென்கிறோமே, அதாவது, புலன்களால் கண்டு, தீண்டி அறியப்படும் திண்பொருள், புலன்களுக்கு அகப்படாத மென்பொருள்! அது போல் நமக்குத் திட்ப உடல், நுட்ப உடல் என இரண்டு உடல்கள் உண்டென்கிறாய். அவ்வளவுதானே?”

    எவ்வளவு அனாயசமாகச் சொல்லி விட்டான். இதை விளக்கத்தான் நான் இவ்வளவு நேரம் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். புத்தி சிகாமணி புத்திசாலிதான்! அவன் வேறு எப்படி இருக்க முடியும்!

    திண்பொருள், மென்பொருள். அடேடே! சரிதான் என்று தோன்றுகிறது.

    கண் என்பது திண்பொருள், பார்வையோ மென்பொருள். கண்ணிருந்தும் பார்வை இல்லாதவர்கள் உண்டே.

    கவிதை திண்பொருள், அதன் கற்பனை அல்லது ப்ரதீபா மென்பொருள்.

    உடல், அதாவது ஸ்தூலமாகிய திட்ப உடல் திண்பொருள், அதையியக்கும் சக்தி அல்லது மனம் என்று சில சமயம் குறிக்கப்படும் சாதனமாகிய நுட்பவுடல், மென்பொருள். நுட்பவுடலும் மனமும் ஒன்றா, வேறுவேறா என்ற விவாதத்தை இங்கே ஆரம்பிக்க வேண்டாம். அதைப் பிறகு வைத்துக் கொள்வோம்.

    மேலே உள்ள கவிதை என்ன சொல்கிறது?

    ‘கணம்’ என்பது காலத்தின் அணு. அதைப் பிளக்க முடியும். அதற்குள் கனவாக மாறித்தான் நுழைய முடியும். இதையெல்லாம் விளக்க முடியுமா?

    அது போகட்டும். மேலே உள்ள கவிதை 1980-ல் வந்தது. அப்போது எனக்கு வயது 27. அந்த வயதில் வரவேண்டிய கவிதையா இது! எவ்வளவுதான் கை, கால் அமைத்துக் கொடுத்தாலும், உலகம் என்ற பொம்மையை, பொம்மலாட்டத்தைக் காட்டிச் சமாதானம் செய்தாலும், வேதாளம், மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்கிறதாமே! எப்படி? எது வேதாளம்? எது முருங்கை மரம்? விக்கிரமாதித்தன் உண்டா? எப்படி அலைஅலையாய்க் கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கவிதை!

    போதும் இதற்கு மேல் நானே என் கவிதைக்கு பாஷ்யம், வியாக்யானம் எல்லாம் எழுதக் கூடாது, உஷ்!

    எனக்கு மேற்சொன்ன கவிதையின் அர்த்தத்தில் உள்ள நாட்டத்தை விட, அதில் வரும் ‘மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்’ என்ற வரியை, ‘மழைய்ய் ஓய்ய்ந்த மாலைப் பொழுதில்’ என்று வாசகர்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைதான் அதிகம்!

    மொத்தத்தில் அவரவர்க்கு எதில் விருப்பம் அதிகமோ அதில்தான் நாட்டம் செல்லும். இயற்கைதானே! இசைக் கச்சேரியில், தனக்குத் தெரிந்த ஒரு பாடலைப் பாடகர் பாடும் பொழுது, ரசிகரின் கவனம் அதிகம் ஈர்க்கப்படுவதை அன்றாடம் பார்க்கிறோமே.

    நான் எழுதிய நூல்களை எல்லாம் எனக்குத் தெரிந்தவர்களுக்கு, அதாவது, அவர்களுக்கு என்னைத் தெரிந்திருக்கா விட்டாலும், நூல்கள் பயிலும் நாட்டம் உள்ளவர்கள் அவர்கள் என்று நான் தேர்வு செய்தவர்களுக்கு, அனுப்புவது வழக்கம். காசு கொடுத்துக் கடையில் என் நூல்களை யார் கேட்டு வாங்கிப் படிக்கப் போகிறார்கள் என்று என் நூல்களை எந்தக் கடையிலும் விற்பனைக்காக நான் வைத்ததே இல்லை. நம் வாசகர்கள் மீது எனக்கு அப்படியொரு நம்பிக்கை!

    அப்படி நான் அனுப்பிய நூல்களை முழுதும் படித்து, உடல் முடியாத நிலையிலும் எனக்குக் கடிதங்கள் எழுதிய சில பெரியவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். உடனே நினைவுக்கு வருபவர், மிகச் சமீபத்தில் அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம். அவர் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக நடத்திவரும் வள்ளலார்-காந்தி விழாவன்று விழாமேடையிலேயே, விழா நடக்கும் போதே, காந்தி ஜெயந்தியான அக்தோபர் 2-ஆம் தேதி அவருடை ய உயிர் பிரிந்த செய்தி, அவருக்கு அந்தப் பெரிய மஹான்கள் இருவரிடத்திலும் இருந்த பக்திக்குச் சான்றாகிறது.

    apm1971 அல்லது 72 என்று நினைக்கிறேன், பொள்ளாச்சியில் அருட்செல்வர் ஒரு திருமண மண்டபம் திறந்த போது அவர் அழைப்பை ஏற்று நான் அந்த விழாவில் கலந்து கொள்ளப் பொள்ளாச்சி சென்றிருந்தேன். அங்கே சென்ற பிறகு எனக்கு உடல்நலக் குறைவால் காய்ச்சல் ஏற்பட்டது. அதை அறிந்த மகாலிங்கம் அவர்கள், சென்னைக்குப் புகைவண்டியில் போக வேண்டாம் என்று என்னைத் தடுத்துத் தன்னுடனே தன் காரில் சென்னைக்கு அழைத்து வந்த அன்பை என்னென்பது! அன்று ஓரிரவு முழுவதும் காரில் அவர், எழுத்தாளர் திரு.பகீரதன், நான் ஆகிய மூவரும் இலக்கியம், ஆன்மிகம் என்று ஓயாமல் பல செய்திகள் பேசிக் கொண்டே வந்ததை மறக்க முடியாது. வரும்வழியில் ஏதோ ஓர் ஊரில் சக்தி சுகர்ஸ் ஓய்வு விடுதியில் தங்கிவிட்டு, காலையில் புறப்பட்டதும், வண்டியை திசைத்திருப்பிப் பாண்டிச்சேரி நோக்கி விடச்சொன்னார். பகீரதன் ஏனென்று கேட்டதும், ரவிக்கு நான் சித்தி வளாகத்தைக் காட வேண்டும் என்று சொல்லி என்னை அங்கே அழைத்துச் சென்று, வள்ளலார் ஜோதியில் கலந்து மறைந்த அறையை தரிசிக்க வைத்து, அதன்பிறகு பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் அழைத்துச் சென்று, மாலையில் சென்னைக்குக் கொண்டுவந்த சேர்த்த அவருடைய அன்புள்ளத்தை என்னென்று சொல்ல!

    2-682b796ae3

    நான் எழுதிய சில நூல்களை 2007-ல் அருட்செல்வருக்கு அனுப்பினேன். சில நாட்களிலேயே அவரிடம் இருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது. அதில் என் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, ‘உன்னோடு நான்’ என்ற என் கவிதைத் தொகுப்பில் இருந்து, அவர் மனத்தைத் தொட்ட ஒரு கவிதையைக் குறிப்பாகப் பாராட்டி எழுதியிருந்தார். அது எண்சீர் விருத்தங்கள் பத்து அடங்கிய நீண்ட கவிதை. அதன் முதல் விருத்தத்தை மட்டும் இங்கே தருகிறேன். அதன் முதல்வரியே அருட்செல்வரை ஈர்த்திருக்கும்:

    நாதமய மானஅருட் சோதி யேவுன்

    நாடகத்தில் என்வேடம் என்ன அப்பா

    போதுமினி பொய்மாயப் பூட கங்கள்

    போட்டுடைக்க வேண்டும்நீ உண்மை யெல்லாம்

    வேதனையின் வெறியாட்டம் ஓய்ந்து போக

    வேதவொலி கேட்கட்டும் விரைந்து சொல்க

    சாதகங்கள் வெற்றிபெறக் கூடு மென்றால்

    சத்யயுகம் மலரட்டும் தேவ தேவா

    ‘அருட்பெருஞ் சோதி’ என்ற மந்திரத்திலேயே சதா லயித்திருந்த அந்த நல்ல உள்ளத்தை, ‘அருட்சோதியே’ என்ற விளியுடன் தொடங்கிய கவிதை ஈர்த்தது இயற்கைதானே! அந்தப் பத்து விருத்தங்களில் ஒன்றைக் குறிப்பிட்டு அவர் நிறைவாக எழுதியிருந்த வரிகள் என்னை நெகிழ வைத்தன:

    அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை

    அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை

    வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும்

    வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும்

    எனும் கவிதை வரிகள், உங்கள் கவிதைத் தொகுப்பெனும் குன்றின் உச்சியில் படர்ந்துள்ள கதிரவனின் ஒளி போன்று அமைந்துள்ளதை அகம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

    அந்தத்தை எண்ணி அஞ்சாமல், தம் இறுதி மூச்சு வரை, நல்ல விஷயங்கள் பற்றிப் பல இதழ்களில் எழுதிக் கொண்டும், பல நல்ல பணிகள் ஆற்றிக் கொண்டும், 90 வயதுக்கு மேல் வாழ்ந்த அருட்செல்வரின் நினைவைப் போற்றுகிறேன்.

    என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர்avr பெருமக்கள் பலரில், இன்னொரு கிழவரை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் சாதாரணக் கிழவர் இல்லை. சாமான்ய மக்களுக்கும் நீதிதேவதைக் கோயிலின் ஆலயக் கதவுகளைத் திறந்து விட்ட நீதிக்கிழார்; உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்த போது பல புரட்சித் தீர்ப்புகள் மூலம் நீதித்துறைக்கே புதுப்பொலிவும், உந்துசக்தியும் தந்தவர்; நூறு வயதை நெருங்கிய முதுமையிலும் கூர்மையாகச் சிந்திக்கும் ஆற்றல் சற்றும் குறைவு படாமல் இன்னும் பத்திரிகைகளில் தம் நெஞ்சுக்குச் சரியென்று படும் கருத்துகளை எழுதி வரும் இளைஞர், நீதியரசர் திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

    நான் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, 2000-ஆம் ஆண்டில் அவர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார்.

    என் மேஜை மீது இந்த நூல் ஒரு குறிப்புநூலாக இருக்கும் (“It will be a reference book on my table”)

    1-6950a51e1c

    இப்படி அவரே தீர்ப்பு வழங்கிய பிறகு வேறு யாரிடம் சென்று நான் சான்றிதழ் பெற வேண்டும்?

    “கடிதம் எழுதும் வழக்கமில்லை கவிதை எழுத முடியும்” என்று சற்றே கர்வம் தொனிக்கப் பாடிய நான் எழுதிய நூல்களைப் படித்துவிட்டு எத்தனைப் பெருமக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதித் தங்கள் மேலான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்! இன்னும் பல பெரியவர்கள்! அவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 46

    கே. ரவி

    என்ன, வக்கீல் புத்தியைக் காட்டி விட்டேனோ? கட்சி பேசுவது, சாட்சி சொல்வது என்றெல்லாம் பழக்க தோஷத்தில் எழுதி விட்டேனோ?

    சாட்சி சொல்வது என்றதும் என் நினைவில் நிழலாடும் ஒரு நண்பர், ஒரு பிரபல நடிகர். அவர் இப்பொழுது நம்மிடையே இல்லை; ஆனால், தமிழ் மக்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம்பெற்று விட்டவர். அவர் என் கட்சிக்காரராகவும் வந்து சேர்ந்தார், 1980-களில். அவருடைய திரையரங்கம் குறித்து ஒரு வழக்கு ஏற்பட்டு, அதில் நான் அவருக்காக வாதாடும் வழக்குரைஞனாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாலைந்து நாட்கள் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் ஆறுமுகம் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சி சொன்னார். நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதியரசரும், அந்த நடிகருடைய நகைச்சுவையான பதில்களைப் பதிவு செய்துகொண்டே, நிதானமாக ரசித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதி:

    எதிரியின் வக்கீல்: என் கட்சிக்காரர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காசோலை வழங்கினாரா?

    நடிகர் : வழங்கினார்.

    எதிரியின் வக்கீல்: காசோலையை என்ன செய்தீர்கள்?

    நடிகர்: வங்கியில் போட்டேன்.

    எதிரியின் வக்கீல்: காசோலை, காசாக மாறியதா?

    நடிகர்: மாறியது.

    எதிரியின் வக்கீல்: பிறகு என்ன செய்தீர்கள்?

    நடிகர்: என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்.

    நீதிமன்றத்தில் சிரிப்பொலி அடங்கச் சில நிமிடங்கள் ஆயிற்று. நீதியரசரும், ஏன், எதிர்க்கட்சிக்காரரின் வக்கீல், என் இனிய நண்பர், மூத்த வழக்கறிஞர் திரு.ஆர்.கிருஷ்ணசாமி உட்பட எல்லாரும் சிரித்துவிட்டனர். அதுவும், “என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்” என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமியின் பாணியில் நாகேஷ் அவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொன்னதும் யார்தான் சிரிக்காமல் இருந்திருக்க முடியும்?

    nageshநாகேஷ் போன்ற நல்ல நகைச்சுவை உணர்ச்சி மிக்க நடிகரைப் பார்ப்பது அரிது. அத்துடன் அவர் குழந்தை உள்ளம் படைத்தவர். தினமும் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதி, மாலை நேரத்தில் என் அலுவலக மேலாளர் திரு.ஹரிஹரன் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அன்றைய கோர்ட் நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொள்வதோடு, ஹரியின் அம்மா செய்து தரும் தோசையைச் சாப்பிட்டு விட்டு, மறுநாள் அதுபற்றி என்னிடம் வானளாவப் புகழ்வார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தினமும் ஒரு முறையாவது என்னைப் பார்ப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ஹைதராபாத்தில் இருந்து அவரும் நானும் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லி ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலை விமானத்திலேயே மெல்லிய குரலில் மிக இனிமையாக அவர் பாடியதை நான் மறக்கவே முடியாது. அப்பொழுது அவர் சொன்னார், “ரவி சார்! (என்னை விட வயதில் மிகவும் மூத்த அவர், நான் எவ்வளவு சொல்லியும் அப்படித்தான் என்னை அழைத்தார்). இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடும் மங்கையின் கனவுக்குள்ளேயே நாம் சென்று விடுகிறோம் இல்லையா”.

    அன்று நாகேஷ் சொன்னதை இன்று நினைத்துக்கொள்கிறேன். இன்னொருவரின் கனவுக்குள், அதுவும், அனுபவக் களத்துக்குள் தன் ரசிகர்களை அழைத்துச் செல்லும் சாதனையைக் கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு சுலபமாகச் செய்து விட்டார்! இந்தப் பாடலாகட்டும், “கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்” என்ற பாடலாகட்டும், அவற்றில் ஒரு மங்கையின் ஏக்கம் மட்டுமா வெளிப்படுகிறது. எந்தப் புருஷோத்தமனின் முன் ஆண்கள், பெண்கள் ஆகிய நாம் அனைவருமே கன்னிப் பெண்களோ, அந்தக் கண்ணனிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற உயிரின் ஜீவ தாகத்தையன்றோ இந்தப் பாடல்கள் எதிரொலிக்கின்றன!

    “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்” என்ற பாடலைக் கண்ணதாசன் எழுதிய காலத்தில், தமிழகத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களே இல்லை. அவர் பாடிய எட்டடுக்கு மாளிகை என்பது இந்த எண்சாண் உடம்புதான் சாமி! அதில் சிறைப்பட்டிருக்கும் ஜீவனின் பிரிவுத் துயரத்தையும், பரம்பொருளோடு கூடிவிடத் துடிக்கும் ஏக்கத்தையும் அந்தப் பாடலில் அவர் பிழிந்து தரவில்லையா?

    வ.ரா. சொன்னது இப்பத்தான் ஜோராப் புரியுது! சாட்சி சொல்வது வேறு, கட்சி பேசுவது வேறு. நாகேஷ் சொன்னது சாட்சி. கண்ணதாசன் பேசியது கட்சி. கண்ணதாசனுக்கும் கட்சிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு; ஆனால் அது மாறிக்கொண்டே இருந்த அரசியல் தொடர்பு. அது வேறு கதை.

    என் இசையில் எஸ்.பி.பி. பாடி, 1994இல் வெளியான ‘தெய்வ கானாம்ருதம்’ ஒளிப்பேழை வெளியீட்டு விழாவில் நாகேஷ் கலந்துகொண்டார். ‘என் வக்கீல் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கி நகைச்சுவையோடு பேசினார். அதே விழாவில் கலந்துகொண்டு சுகி சிவம் பேசும் போது, அந்த ஒலிப்பேழையில் இருந்த “கல்மனம் உருகிக் கனிவதும் எக்காலம் அகலாதா இந்த அகலிகையின் சாபம்” என்ற பாடலைக் குறிப்பிட்டு ஒரு கருத்துச் சொன்னார்: இராமன் திருவடி பட்டுச் சாபம் நீங்கி அகலிகை மீண்டும் பெண்ணானதும், இராமன் அவளைத் தாய் என்றே குறிப்பிடுகிறான். அன்னையைப் போன்ற இந்த மங்ககைக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்று இராமன் விஸ்வாமித்திர முனிவரிடம் வினவுவதாகக் கம்ப சித்திரம் பேசுகிறது:

    அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக

    கெளசல்யா, பத்து மாதம்தான் அவனைக் கருவில் சுமந்தாள். ஆனால், அகல்யா எத்தனை ஆண்டுகள் அவன் வரவுக்காக அவனை நெஞ்சில் சுமந்தாளோ! எனவே, அவளை இராம பிரான் தாயென்றது பொருத்தமே. இதுதான் சிவம் சொன்ன கருத்தின் சாரம். விழாவின் பரபரப்பில் நான் சிவம் பேச்சைச் சரிவர கவனிக்கத் தவறியிருந்தேன். ஆனால், விழா முடிந்த மறுநாள் நாகேஷ் என்னிடம் தொலைபேசியில் சிவம் சொன்ன இந்தக் கருத்தைச் சொல்லி வெகுவாகப் பாராட்டினார். நாகேஷுக்குள் கவிதை ரசனை ஒளிந்திருந்ததை மீண்டும் உணர்த்திய சம்பவம் இது.

    Semmangudiஅந்த விழாவில்தான் செம்மங்குடி சீனிவாச மாமா என்னைக் ‘கவிரவி’ என்று அழைத்தார். அன்று முதல் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர் அப்படியே அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அமரராகும் வரை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், வானவில் பண்பாட்டு மையம் நடத்திய ஒவ்வொரு பாரதி விழாவையும் முன்னின்று நடத்தித் தந்த அந்தப் பெரியவரை என்னால் மறக்கவே முடியாது.

    சாட்சி சொல்லியாகி விட்டது, கட்சி பேசியாகி விட்டது. தீர்ப்பு எப்போது சாமி? நல்ல தீர்ப்பு வருமா? இன்றைய கேள்வி இதுதானே!

    சரி, நுட்ப உடலானது கனவில் கூடத் திட்ப உடலை நீங்கிப் பறக்கிறது என்று சொன்னேனே, அதில் ஒரு சிறு கவனக் குறிப்பை இணைக்க வேண்டும். கனவில் ஓரளவு ஆழம் அல்லது ஓரளவு உயரத்துக்கு மட்டுமே நுட்ப உடல் போகிறது. அதற்குமேல் தாண்டிப் போக அதனால் முடிவதில்லை. அது, முற்றிலுமாகத் திட்ப உடலை நீங்கிப் போவதில்லை. நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட நாய் போல் கொஞ்சம் தொலைவுதான் அதன் சுதந்திரம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், என்னுடைய தனிப்பட்ட அனுபவக் களத்துக்குள்தான் கனவில் என் நுட்ப உடல் அல்லாடுகிறது. நான் அனுபவித்தே இராத எதையும் அது அங்கே எதிர்கொள்வதில்லை. என் அனுபவக் களத்தில் உள்ள, தொடர்பற்ற இரண்டு அனுபவங்களை வேண்டுமானால் தொடர்பு படுத்தி அது அனுபவிக்கலாமே தவிர, என் அனுபவக் களத்தைக் கடந்து செல்ல அதற்கு உரிமை இல்லை. அதாவது, பெரோலில் (Parole) வெளியாகும் கைதி போலத்தானே ஒழிய, பெய்லில் (Bail), அதாவது, பிணையில் வெளியாகும் கைதி போல இல்லை. மீண்டும் வக்கீல் புத்தி!

    ஆனால், கவிதை உதிக்கும் கணத்தில், ஒரு கணம், அது அந்தச் சுதந்திரம் பெறுகிறது. அந்த ஒரே கணத்தில், பல யுகக் கணக்குகளைக் கடந்தும், பல அண்டத் தொலைவுகளைக் கடந்தும் சென்று மீள்கிறது. அப்பொழுதுதான், அது வேறு யுகங்களில், வேறு பரிமாணங்களில் எதிர்ப்படும் அனுபவக் களங்களில் பிரவேசிக்க முடிகிறது.

    கொஞ்சம் இயல்பியல் பாடம் படிக்கலாம். அதுவும் ‘க்வாண்டம் ஃப்ஸிக்ஸ்’ (quantum physics) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளிநிலை இயல்பியல் பாடம்! அணுக்கருவுக்குள் கருவின் ஈர்ப்புச் சக்தியை மீற முடியாமல் சிறைப்பட்டுச் சுழலும் சிற்றணுத் துகள் ஒன்று, மிகச் சிறிய, அதாவது, கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு மிகச் சிறிய கால அவகாசத்துக்குக் கடனாக அபார சக்தி பெற்று, அதன் மூலம் கருவின் ஈர்ப்புச் சக்தியில் இருந்து விடுபட்டு, வெளிச்சென்று, திரிந்து விட்டு, அந்த கால அவகாசம் முடிவதற்குள் கடன் வாங்கிய சக்தியைத் திருப்பிக் கொடுத்து விட்டு, கருவின் அமைப்பு வட்டத்துக்குள் வந்து ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சுழன்று கொண்டிருக்குமாம். நான் சொல்லவில்லை தம்பி, விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அது போல், நுட்ப உடல் மிகச் சிறிய கால அவகாசம் ஆன ஒரு கணத்துக்குள் அபார சக்தியைக் கடனாகப் பெற்றுத் தன் பிரக்ஞை வட்டத்தை விட்டு வெளியேகிப் பல யுகங்கள், பல அண்டத் தொலைவுகள் கடந்து சென்று அனுபவங்கள் அள்ளி வந்து மீண்டும் தன் நுட்ப உடலை ஆண்டு கொண்டு உழலும் என்பதை நான் சொல்லவில்லை தம்பி, சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    “ஆளை விடப்பா!”

    புத்தி சிகாமணிக்கே தலை சுற்றுகிறது!

    “ஒரு கணத்தில் பல யுகங்களா? இது சாத்தியமா?”

    அதுதானப்பா மனோவேகம். மனோன்மணிக்குத் தெரியும்.

    ஒருமுறை, 1978ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ரமணன் அப்போது பங்களூரில், (அப்போது அது பங்களூர் தாங்க!) ஹிண்டு பத்திரிகையில் வேலை பார்த்து வந்தான். அவன் அடிக்கடிக் கடிதங்கள் எழுதுவான், அதுவும் நீண்ட கடிதங்கள். எனக்கென்னவோ, கடிதங்கள் எழுதுவது மட்டும் அவ்வளவாகக் கைவரவில்லை. கவிதை எழுதி விடுவேன், ஆனால் கடிதங்கள் எழுதச் சோம்பல் படுவேன். நான் பதில் கடிதம் எழுதாதது பற்றி ரமணன் சற்று வருத்தப்பட்டு எழுதியிருந்தான். பதிலுக்கு நான் எழுதினேன், கடிதம் இல்லை, கவிதை! அதைக் கூடத் தொலைபேசியில்தான் அவனுக்குப் பாடிக் காட்டினேன் என்று ஞாபகம்:

    கடிதம் எழுதும் வழக்கம் இல்லை

    கவிதை எழுத முடியும் – வெறும்

    சேதி கேட்க ஜீவன் இல்லை

    தேம்பி அழத் தெரியும் – மனம்

    தேம்பி அழத் தெரியும்

    முடிவு கூடப் புலப்படாத பாதை யிந்த வாழ்க்கை – இதில்

    அன்பு நட்பு காதல் பாசம் அளவி லாத சேர்க்கை

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒருக ணத்தில் உருவம் எய்தி ஒரு கணத்தில் மறையும் – மனம்

    உலகம் என்றும் யுகங்கள் என்றும் உருவகங்கள் புனையும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    வான மிங்கு மழை பொழிந்து வாழ்த்துகின்ற போதும் – இருள்

    வடிவ மொன்று மின்னலாய் ஒளி வழங்குகின்ற போதும் – இனிய

    கானம் ஒன்று கவிதையாகக் காதில் வந்து மோதும் – உன்

    ஞாபகத்தை உறுதி செய்யப் பாடல் ஒன்று போதும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒரு கணம் போதும். மனம், உருவம் எடுக்கவும், உலகம், யுகங்கள் என்று பல உருவகங்கள் புனையவும்!

    பாரதி என்ன சொல்கிறான் கேட்கலாம். கண்ணபிரான் தன் சக்கராயுதத்தை எடுப்பது ஒரு கணம்தான்; அடுத்த கணமே, அதாவது, மறுகணமே, உலகத்தில் தர்மம் நிலைநாட்டப்படுமாம்.

    “அப்படியா சங்கதி,” சிகாமணி நீட்டி முழக்குகிறான். “ஓ, அதான், அர்ஜுனன் சுபத்திரையை, அதாவது கண்ணனின் தங்கையைக் கடத்தக் கண்ணனிடமே ஐடியா கேட்டப்ப, கன்ணன் ரெண்டு நிமிடம் எடுத்துக்கிட்டாரோ?”

    சிகாமணி சிண்டு முடியப் பார்க்கிறான். பாரதி படாரென்று அவன் முதுகில் தட்டி, ” அடே, உன் நிமிடக் கணக்கைக் குப்பையில் போடு. கண்ணன் கணக்கோ கணக் கணக்கு. அதாவது கணங்களால் ஆன கணக்கு, கன ஜோரான கணக்கு. அவனுடைய ஒரு கணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் நடுவில் இன்னொரு கணம் கிடையாது. இரண்டு கணங்களும் ஒரே கணம்.”

    சக்கரத்தை எடுப்ப தொருகணம்

    தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்

    இக்கணத்தில் இடைக்கணம் ஒன்றுண்டோ

    சிகாமணி தலையைப் பிய்த்துக் கொள்கிறான்: இதானே வேணாங்கறேன். 2 = 1. என்னப்பா தப்புக் கணக்குச் சொல்லித் தருகிறாய்!

    “தப்புக் கணக்கில்லை தம்பி. தப்பாத கணக்கு. இன்னும் புரியவில்லை என்றால் மேலும் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு பாரதி மடமடவென்று கவிதை பொழிகிறான்:

    கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

    கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

    கணம்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்

    கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே

    கணம்தோறும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்

    காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம்

    கணம்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்

    கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்

    அப்பா, உண்மையிலேயே தலை சுற்றுகிறதப்பா.

    இந்தக் கணங்கள் அடுக்குத் தொடராய் இருந்தாலும், சுபத்திரையைக் கடத்தக் கண்ணன் இரண்டு கணங்கள் எடுத்துக் கொண்டாலும், சரணம் என்று ஒருவன் அவனே கதி என்று வந்து அடைக்கலம் கேட்டுவிட்டால் ஒரே கணத்தில் அவனுக்கு அபயம் அளிப்பவன் கண்ணன். அதையும் பாரதி சொல்கிறான்:

    பொன்னவிர் மேனி சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே – இனி

    என்ன வழியென்று கேட்கில் உபாயம் இருகணத்தே உரைப்பான் – அந்தக்

    கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன்றில்லேன் – வந்திங்கு

    உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒருகணத்தே உரைப்பான்

    நான் சமீபத்தில், அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்னால் எழுதிய பாடல் ஒன்று இப்பொழுது நினைவுக்குள் அடியெடுத்து வைக்கிறது!

    தோன்றிய பிறகு, வந்து சேர இரண்டு ஆண்டுகளா, எவ்வளவு மெதுவாக வருகிறது?

    அப்படிச் சொல்லாதீர்கள். அது வந்த வேகம் அசாத்திய வேகம். தான் தோன்றிய கணத்தையும் அது முந்திக் கொண்டு வந்து விட்டதாம். நான் சொல்லவில்லை. அதுவே சொல்கிறது. பாட்டைக் கேளுங்கள்:

    இந்தக் கணம் இன்னும் வரவில்லை – அதை

    முந்தி வந்த திந்தப் பாடல்

    சந்தம் எதுகை உவமை புலமை

    எந்த நகையும் அணிந்துகொள் ளாமல்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    வந்த கணத்தை வழியனுப்பி – வர

    விருக்கும் கணத்தை வரவேற்கச்

    சொந்தக் கணமொன் றில்லாமல் – அதி

    சூட்சுமமாய் ஒரு சொப்பனமாய்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    அந்தரமோ நிரந்தரமோ – இந்த

    அனுபவத் தையென்ன சொல்லுவது

    காந்தநிலை ஏகாந்தநிலை – இது

    காலத்தை யும்வெற்றி கொள்ளுவது

    இந்தக் கணம் என்றும் தொடருவது – பேர்

    ஒளியாய் நெஞ்சில் படருவது

    சரி தம்பி. இந்தக் கணத்துக்கு இவ்வளவுதான்! அடுத்த கணத்தில் சந்திப்போம்.

    (தொடரும்)

    Share
  • தோகமயில் ஒண்ணு!

    கே. ரவி

     

    “(சிற்றுந்தில் பயணம் செய்த போது, என் தோளில் சாய்ந்த படி அவள் தூங்கிவிட்டாள். என் மனம் பாடியது. ஓ! அது நிகழ்ந்தது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!)

     

    தோகமயில் ஒண்ணு!

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

     

    imb5

     

    தோகமயில் ஒண்ணு தோள்மேல சாஞ்சு தூங்குதடீ
    எட்டநின்னுக் காத்தும் ஏக்கப்பெரு மூச்சு வாங்குதடீ
    பூங்குயில் கூவுது ஆராரோ பொன்வண்டு பாடுது தாலேலோ

    காத்தாச் சிலுக்குறா கண்ணத் தொறந்தா
    கனவா மொதக்குறா நெஞ்சில் சொமந்தா
    ஆத்துமணல் எல்லாம் அள்ளித் தெளிச்ச – ஒரு
    வெள்ளிநெலவா என் மேல படர்ந்தா – என்
    உள்ளத்துல சூரியனப் போல எழுந்தா
    (தோகமயில் ஒண்ணு)
    ஓட தூங்க இந்த ஊர்தூங்க
    ஓசையில்லாம காத்தும் தூங்க
    மானம் தூங்கப் பச்ச வயல் தூங்க – என்
    மார்பில் சாஞ்சபடி அவ தூங்க – என்
    மனசு மட்டும்தான் தூங்கலடீ – அதில்
    பாட்டுச் சத்தம் இன்னும் ஓயலடீ
    (தோகமயில் ஒண்ணு)

    ஓவியத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • காற்று வாங்கப் போனேன் (45)

    கே. ரவி

    என்னைய்யா இது, சோகத்தைக் கூட ரசிக்கணும்னு சொல்றீக!

    ஏன் ரசிக்கக் கூடாது. இலக்கிய ரசனை என்பது சந்தோஷ சமாச்சாரம் மட்டுமே என்பது தப்புக் கணக்குத் தம்பி!

    இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.

    அங்கே பார், அந்த மங்கை அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். அவளருகே ஒருவன் குருதி வெள்ளத்தில் இறந்து கிடக்கிறானே! யாரவன்? அவள் கணவனோ? ஆம், அதோ தொலைவில் நின்று கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்தபடி ஒரு மூதாட்டி ஏதோ சொல்கிறாளே அதைக் கேள்: என்னத்த சொல்ல! இன்னைக்குக் காலைலதானுங்க இந்தப் பொண்ணு தலைல பூமுடிச்சு விட்டு அவன் பிரியா விடைபெற்றுக்கிட்டுப் போனான். அப்படிப் பூமுடிச்சப்ப, அவ கூந்தல்ல வச்சு விட்ட பூச்சரத்துல வண்டு ‘ஞொய்’னு ரீங்காரம் செஞ்ச சத்தம் கூட இன்னும் ஓயலீங்க! அப்ப அவனக் கட்டித் தழுவி அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினா இந்தப் பொண்ணு. இப்பப் பாருங்க, இந்த சாயரட்ச வேளைல ரத்த வெள்ளத்துல செத்துக் கெடக்குற அவனப் பாக்க வேண்டிய நெலமைக்கு ஆளாயிட்டாளே அந்த மஹாபாவி! பாக்க சகிக்கலேங்க இந்த சோகக் காட்சி!

    எப்படி ஒரு சோகக் காட்சி நம்மை உலுக்குகிறது பார்த்தாயா! உனக்கு நேர்ந்த சோகம் இல்லை. யாருக்கோ நேர்ந்ததுதான். ஆனால் ஒரு கணம், ஒரே ஒரு கணம்தான், அந்தச் சோகத்தை நீ அனுபவிக்குமாறு அந்த மூதாட்டியின் வார்த்தைகள் செய்துவிட்டனவே! அந்த ஒரு கணத்தை, அதன் கனத்தை, உன் வாழ்நாளில் நீ மறக்க முடியாதவாறு, அவ்வப்போது நீ நினைத்துக் கொள்ளுமாறு ஆகிவிட்டதே!

    வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேல்

    கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்

    புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்

    கண்டாள் அவன்தன்னைக் காணாக் கடுந்துயரம்

    ஆம், காலையில் கோவலனிடம் பூச்சூடிக் கொண்டு அவனை வழியனுப்பி வைத்த கண்ணகி, மாலை அவனைப் பிணமாகக் கண்டு அழுத காட்சியை நாம் என்றைக்கும் மறக்க முடியாமல் செய்து விட்டாரே இந்த இளங்கோவடிகள்! அந்தச் சோக அனுபவக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல, வண்டுகளைப் பாட வைத்தும், குஞ்சம் துவளத்துவளத் தொங்கிய பூமாலையை அசையச் செய்தும், கணவனும் மனைவியும் ஆரத் தழுவிக் கொண்டு பிரிய முடியாமல் பிரிந்ததை “தழீஇ” என்று நீட்டி முழக்கியும், புண் தாழ்ந்து குருதி பொங்கி வழிந்ததைப் படம் பிடித்துக் காட்டியும், எப்படியெல்லாம் பாடுபடுகிறார் புலவர்!

    இதென்னய்யா, மத்தவன் அவஸ்தையை வேடிக்கை பாக்க வைக்கறதுதான் புலவன் வேலையா?

    இல்லை, வேடிக்கை பார்க்க வைப்பது இல்லை அவன் வேலை, அந்த வேதனையை அப்படியே, கொஞ்சமேனும் அனுபவிக்க வைப்பதுதான் அவன் வேலை. ஏன் அனுபவிக்க வேண்டும்? அறுசுவை விருந்திலே கசக்கும் பாகற்காய்ப் பொறியல் ஏன் படைக்க வேண்டும்? அட, சும்மா வசனத்துலியே பேசிக்கிட்டிருந்தா எப்படி, நாமும் பாடுவோம் அப்பு:

    சோகத்தில் கூடசுகம் உண்டு தோழி

    சோகத்தின் சாரத்தைச் சொல்ல வந்தேன்

    தேகத்தில் ஒளிந்திருக்கும் தினவை எல்லாம்

    தீவைத்துக் கொளுத்துவது சோக மன்றோ

    வேகத்தை விறுவிறுப்பைப் பிடித்தி ழுத்து

    வெறுமையினைக் காட்டுமொரு தீப மன்றோ

    சோகத்தைப் பயில்வதற்குத் துணிந்து விட்டால்

    சோதனைகள் இல்லைமனம் துவள்வ தில்லை

    இதயத்தைப் பிழிந்துவிடும் சோகத் தாலே

    இருக்கின்ற சுமையெல்லாம் கண்ணீ ராகி

    உதிர்ந்துவிடும் நீயாக மட்டும் உன்னை

    உள்ளுக்குள் நீகாண முடியும் நெஞ்சின்

    அதிர்வுகளை நீவிவிடும் அனுப வத்தை

    அரைநொடியில் ஏற்படுத்தும் இசையி னாலோர்

    அதிசயத்தை உருவாக்கும் அதற்கும் மேலே

    அமரநிலை உண்டென்று நினைவு றுத்தும்

    இருட்டென்றா எண்ணுகிறாய் இல்லை இல்லை

    ஏகாந்த நீழலடி நுழைந்து பாரேன்

    உருண்டுவரும் மேகங்க ளூடு செல்லும்

    ஒளிநிலவை நினைத்துக்கொள் ஒருக ணம்தான்

    விருட்டென்று பயமெல்லாம் விலகி யோடும்

    வியர்வையெல்லாம் பூப்பூக்கும் சோகம் உன்னை

    அருட்கரத்தால் நெஞ்சாரத் தழுவிக் கொள்ளும்

    அமைதியுடன் நீயுறங்கக் கவிதை சொல்லும்

    எப்படி இருக்குத் தம்பீ!

    என்ன சொன்னாலும் சரி அப்பு, சோகத்தை ரசிக்கணும்னு சொல்றத ஒப்புக்க முடியலே!

    தம்பி, ரெண்டு ரூவா கொடுத்து டிக்கெட் வாங்கிப் போய்ப் பாசமலர் படம் பாத்து, சிவாஜியும் சாவித்திரியும் அழுதபோதெல்லாம் கூடவே அழுதியே, மறந்துட்டியா? காசு கொடுத்து வாங்கிய கண்ணீர் தம்பி! ஏன்?

    கப்பலோட்டிய தமிழன் படம் நான் பலமுறை பார்த்து ரசித்த படம்தான். 1986 அல்லது 87, தொலைக்காட்சியில் அந்தப் படத்தை, ஐந்தாவது முறையாக என்று நினைக்கிறேன், நான் பார்த்துக் கொண்டிருந்த போது, முழுதும் பார்க்க முடியாமல் என் கண்களை மறைத்த கண்ணீர்த் துளிகளை நான் துடைத்துக் கொண்டே இருந்தேன். தான் அமர்ந்திருந்த நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, படத்தைப் பார்க்காமல், நான் அழுவதை என் நண்பன் முரளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும்தான் நான் சுதாரித்துக் கொண்டேன்.

    தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா – இப்பயிரைக்

    கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ!

    அடாடா, நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் பாடல். அந்த எட்டையபுரத்துச் சுப்பய்யாவின் பாடலை எஸ்.வி.சுப்பையா திரையில்ars பாரதியாராகத் தோன்றிப் பாடியபோது நான் எப்படி அழாமல் இருந்திருக்க முடியும்? சுதந்திரப் போராட்டத்தின் போது நான் பிறக்கவே இல்லை. ஆனாலும் அந்தக் காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று, அதன் அனுபவக் களங்களில் என்னை நனையச் செய்து, அந்த வீர சக்தியையும், தன்மான உணர்வையும் எனக்குள் ஊட்டிய மாயத்தை இதுபோன்ற படங்களும், பாடல்களும் செய்யவில்லையா?

    திரைப்படம் எடுக்கும் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே, வார்த்தைகள் மூலமாக மட்டுமே, பல காட்சிகளை நம் மனத்திரையில் கவிஞர்கள் ஓடவிட்டிருக்கிறார்கள்.

    இந்தப் பகுதியின் தொடக்கத்தில் சொன்ன அமரவாக்கியத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:

    இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.

    போச்சு, திரும்பவும், ‘ஒருவருக்குள் இன்னொருவர் நுழைந்து’ங்கற பழைய வேதாளம் வந்து விட்டது ஓய்! அது வரத்தான் செய்யும். சபரிமலை செல்லும் போது, பேருந்தில் எனக்கும், சு.ரவிக்கும் ஏற்பட்ட அனுபவத்தை, எங்களுக்குள் நடைபெற்ற உரையாடலை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்!

    இப்படி அனுபவிப்பதால் ஏதேனும் பயன் உண்டா? இதுதானே உன் கேள்வி?

    அதுவும் ஒரு கேள்வி.

    அப்படியானால் வேறேதோ கேள்வியும் இருக்கிறதோ?

    உண்டு. நீர் என்னமோ கோத்தகிரி எஸ்டேட் என்றெல்லாம் சொல்லிவிட்டு ஒருவர் அனுபவத்தை இன்னொருவர் அனுபவிப்பதுன்னு பழைய பாடத்துக்கே வந்து விட்டீரே என்பதுதான் இன்னொரு கேள்வி.

    தம்பி, அது கோத்தகிரி எஸ்டேட் இல்லை, கேட்டகிரி மிஸ்டேக், அதாவது, வகுப்புத் தப்பிதம். அதற்கும் நம்முடைய இப்பொழுதைய விஷயத்துக்கும் தொடர்பு உண்டு. சொல்கிறேன்.

    நீ, கேட்கிறாயே, மேலே சொன்னவாறு இன்னொருவருடைய அனுபவக் களத்துக்குள் புகுந்து அனுபவிப்பதால் ஏதேனும் பயனுண்டா என்று, அதுவே ஒரு கோத்தகிரி எஸ்டேட். மன்னிச்சுக்க தம்பி, சகவாச தோஷம் தொத்திக் கொண்டது. கேட்டகரி மிஸ்டேக். எப்படி? ஒரு அனுபவம் பயனுள்ளதா, பயனற்றதா என்ற கேள்வியே தவறு. அனுபவம் என்பது பயன் கருதி வருவதில்லை. நாம் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, நுகர்ந்து, தொட்டு அனுபவிக்க உலகமே அதன் உள்ளடக்கங்களோடு விரிந்து கிடக்கிறது. அதனால் பயன் அடைவதும், பயன் பெறாததும் அனுபவிப்பவரைப் பொறுத்தது.

    நான் இந்த உடல் மட்டும் இல்லை. இந்த உடல் என் கூடுதான். பஞ்ச பூதங்கள் தைத்து வழங்கிய சட்டையாகத்தான் நான் இதை அணிந்து கொண்டிருக்கிறேன். இப்படி ஓர் ஆழமான நம்பிக்கை பலருக்கு உள்ளது. நானும் நம்புகிறேன்.

    என் நம்பிக்கை மேற்சொன்ன நிலையையும் தாண்டிச் செல்கிறது. நமக்கு ஸ்தூல உடல் இருப்பது போலவே, சூக்ஷ்ம சரீரம் என்று ஒன்று உண்டு. அது திட்ப உடல் போல் சதை, எலும்பு, குருதியால் ஆன உடல் இல்லை. அதை எந்தப் புலனாலும் உய்த்துணர முடியாது. ‘ஸாஃப்ட் வேர்’ (software) என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போன்ற நுட்ப உடல் அது. பூதவுடல் என்பது ஹார்ட்வேர், சூக்ஷ்ம உடல் என்பது ஸாஃப்ட்வேர். பின்னது முனைப்புகளால் ஆனது. முனைப்புடல் என்றும் சொல்லலாம். ஒருவன் அல்லது ஓருயிர் இன்ன வடிவில், இன்ன உடல் எடுத்து, இன்னவாறு இயங்கப் போவதை நிர்ணயம் செய்வது இந்த நுண்ணுடல் அல்லது முனைப்புடல்தான். ஒருவன் மரணம் அடைவதற்கு முன்பே, அதாவது அவன் உயிர்நிலை திட்ப உடலைப் பிரிவதற்கு முன்பே, உடல் எடுக்கும் முனைப்பால் மட்டுமே உருவான நுட்ப உடலைக் கலைத்து விட வேண்டும். அதாவது, வடிவ மோகம் அறவே இன்றி ஆக வேண்டும். அப்படியாகித் தன் திடவுடலை முழுதுமாகக் கழற்றிப் பஞ்சபூதங்களில் கலந்துவிடச் செய்யாவிட்டால், அவனுடைய திடவுடலைப் பிரிந்த பின்னும் நுண்ணுடல் அல்லது முனைப்புடல் தன் முனைப்புக்கு ஏற்ப ஒரு திடவுடல் பெற ஏங்கித் திரியும். அப்படியோர் உடல் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததும், செய்து கொண்டு அதை ஆளத் தலைப்படும். இதுவே அதன் அடுத்த பிறவி எனப்படுகிறது. இதெல்லாம், ஓரளவு அனுபவ ரீதியாக எனக்குள் மலர்ந்த நம்பிக்கை.

    முன்பே நான் குறிப்பிட்டேனே, 101 பாடல்கள் அடங்கிய குருமந்திரம் என்ற படைப்பு 1986-ல் எனக்குள் மலர்ந்து வந்தது என்று. அதில் இரண்டு பாடல்கள் இங்கே நினைவு கூரத் தக்கது:

    பூதங்களில் கலந்து போகாத சூக்குமம் தன்

    வாதனைக் கேற்ப சாயல் வனைந்திடும் வனைந்த வண்ணம்

    பூதங்கள் நெய்த சட்டை புனைந்திடும் புனைந்து கொண்டு

    சாதனை போல மீண்டும் சகதியில் ஜனிக்குமாமே!

    தூலத்தில் வைத்த பற்றே தூலத்தை விட்ட பின்னும்

    தூலமே போல எண்ணும் சூக்கும வடிவம் பின்னும்

    தூலத்தில் பற்றறுந்து தூலத்தின் கட்டவிழ்ந்தால்

    மூலத்திற் கலப்ப தென்ற முக்திகை கூடுமாமே

    இதையெல்லாம் இங்கே நான் சொல்லக் காரணம் தம்பி நீ கேட்ட கேள்விதான். ஆம், ஸ்தூல உடலாகிய திட்ப உடலை நுண்ணுடல் நிரந்தரமாக நீங்கிச் சென்றுவிடும் மரணம் சம்பவிப்பதற்கு முன்பே, அவ்வப்போது, திட்ப உடலில் இருந்து நீங்கிச் செல்லும் பயிற்சியைத்தான் கனவு நிலை தருகிறது.

    ஆனால், இரண்டு குறைபாடுகள் இந்தப் பயிற்சியில் உண்டு. பெரும்பாலும் கனவுகள் நினைவில் பதிவாகித் தங்குவதில்லை என்பது முதற்குறைபாடு. கனவில், அறிவின் துணை சிறிதும் இன்றி நுண்ணுடல் அலைபாய நேர்வதால், அது தான்தோன்றித் தனமாக, எந்த வழிகாட்டுதலும், நெறிமுறையும் அற்ற தாறுமாறான அனுபவமாகிறது.

    ஆனால், இந்தக் குறைபாடுகள் இன்றி அறிவு விழித்திருக்கும் நிலையிலேயே, திட்பவுடல் நீங்கி நுண்ணுடல் பயணம் மேற்கொள்பவன் கவிஞனும், யோகியும்தான்.

    கவிதை ஜனிக்கும் வேளையில் தானன்றிப் பிறிதான ஓர் அனுபவக் களத்தில் கவிஞன் சஞ்சரிக்கிறான். அந்த அனுபவத்தை அவனுடைய அறிவு, விழிப்பு நிலையிலேயே உள்வாங்கிக் கொண்டு, அதை வார்த்தைகளில் வடித்து, நிரந்தரமாக்குகிறது.

    யோகியின் கதை வேறு. அவன், திட்பவுடல் நீங்கிப் பயணம் மேற்கொள்ளும் போது தன்னை வரவேற்கும் எந்த அனுபவக் களத்திலும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துத் தான் நுண்ணிலையிலும் இல்லாமல் தானாக, எந்த முனைப்பும் அற்ற தானாக, ஆகும் ஒரே முனைப்பில் லயிக்கிறான். அவன் களம் விரிய, விரிய முக்காலங்களுக்கும், எல்லா லோகங்களுக்கும் பொதுவான எல்லா அனுபவங்களுமே தானாக உணரும் அத்வைதானந்த அனுபவமே அவனுடைய இலக்காகிறது. அதுவே கடவுள் நிலை. இதுதான் இந்தக் கணத்தில் என் நம்பிக்கை.

    எனவே, தம்பி, இப்போது சொல்லு, ஒருவன் இன்னொருவனுடைய அனுபவக் களத்துக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து செல்வதால் ஏதேனும் பயனுண்டா, இல்லையா? உன் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

    சபரி மலை யாத்திரைக்குப் பெரிய பாதையில் செல்பவர்கள், மாலை அணிந்து கொண்ட நாளில் இருந்தே செருப்பில்லாமல் நடந்து பழகுவார்கள். அப்படிப் பழகி விட்டால், யாத்திரையின் போது, செருப்பில்லாமல் பெரிய பாதையில், கல்லும் முள்ளும், குண்டும் குழியும் கடந்து, இரண்டு நாட்கள் நடந்து செல்லும் போது அவ்வளவு சிரமம் தெரியாது. அது போலத்தான், திட்ப உடலை நீங்கிச் சில கணங்கள் விழிப்புடன் பயணம் செய்யும் பயிற்சி மேற்கொண்டால், மரணம் சம்பவித்து, அப்படிச் சிலகாலம் இருக்க நேரிடும் போது அதிக சிரமம் இருக்காதோ என்று நினைக்கிறேன். இது ஒரு பயன் இல்லையா?

    அப்படிப் பயணம் செய்யத் தெரியாதவர்களும் அந்த அனுபவக் களத்தில் பங்கேற்க வாய்ப்பாகும் வண்ணம், அதைச் சொற்களில் நிரந்தரம் செய்து விடுவது ஒரு பெரிய சமூகப்பயன் இல்லையா? சரி தம்பி, நீயே முடிவு செய்துகொள்.

    முன்பு நான் எழுதிய இன்னொரு கவிதை நினைவு வருகிறது. அட எல்லாவற்றையும் என் கவிதை சொல்லி விடுகிறதே!

    நிழலுக் கென்றே சோலை அமைத்து

    நிம்மதியாக வாழ்கின்றேன்

    பழத்துக் கென்றோ பனிமலர்க் கென்றோ

    பயனைக் கருதாமல்

    நிழலுக் கென்றே சோலை அமைத்து

    நிம்மதியாக வாழ்கின்றேன்

    மீண்டும் முதலில் சொன்ன அமர வாக்கியத்தை நினைவு படுத்திக் கொள்வோம்:

    இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.

    இதை ஏன் அடிக்கடி அமர வாக்கியம் என்கிறேன். மரணத்துக்குப் பிறகு நிகழக் கூடிய ஒன்றை மரணத்துக்கு முன்பே நிகழ்த்திக் காட்டி, மரணத்தை வெல்லும் வழியைக் காட்டுவதால் இது அமர வாக்கியம் தானே!

    arsபாரதியுடன் நெருங்கிப் பழகி, அவனால் உள்ளூக்கம் பெற்ற வ.ராமசாமி என்ற வ.ரா., அறிஞர் அண்ணாவால், ‘அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ என்று போற்றப்பட்ட எழுத்தாளர், கவிஞனைப் பற்றிச் சொன்ன ஒரு குறிப்போடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.

    ஒரு கவிஞன் மலரைப் பாடினால் மலாரகவும், கடலைப் பாடினால் கடலாகவும், புயலைப் பாடினால் புயலாகவும் தானே மாறிவிடும் ரசவாதத்தை வியந்துவிட்டு, வ.ரா. ஓர் அமர வாக்கியம் எழுதுகிறார். அதாவது நான் மிகவும் சிரமப்பட்டுச் சொல்ல முற்பட்ட கருத்து வெகு சுலபமாகவும், இயல்பாகவும் வந்து அமர ஒரு வாக்கியமாக அமைந்ததால் அது அமர வாக்கியம்:

    கவிஞன் கட்சி பேசலாமே தவிர சாட்சி சொல்ல முடியாது.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன்! (44)

    கே. ரவி

    இப்பொழுதெல்லாம் கவிஞன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொண்டால், மரபுக் கவிதைகள் எழுதும் கவிஞனா, இல்லை, புதுக்கவிதைகள் எழுதும் கவிஞனா என்ற கேள்வி உடனே கேட்கப்படுகிறது. பெரிய விவாதங்களைத் தவிர்த்து எளிமையாகச் சொல்வதென்றால், தமிழ் யாப்பிலக்கண நூல்களில் சொல்லப்படும் செய்யுள் வகைகளில் எழுதப்படும் கவிதைகள் மரபுக் கவிதைகள் எனவும், அப்படியின்றி எந்த யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல், கிட்டத்தட்ட உரைநடை வடிவில் எழுதப்படும் வெளிப்பாடுகள் புதுக்கவிதைகள் எனவும் பொதுவாகக் குறிக்கப் படுகின்றன.

    நான், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்த போது சரியாகத் தமிழ் எழுதக் கூடத் தெரியாமல் இருந்த கதையையும், ஆனால் எட்டாம் வகுப்பில் நுழையும் போது தமிழில் கவிதை எழுதுபவனாக மாறிவிட்ட ரசவாதம் பற்றியும் முன்பே அளந்து கொட்டிவிட்டேன். ஏறக்குறைய மூன்று மாதங்களில் அப்படியொரு மாற்றம் ஏற்படும் வண்ணம் என் நாவில் தேன்பிலிற்றிய தேவதை யாரோ, தெரியவில்லை. எல்லாம் பராசக்திதானே!

    எட்டாம் வகுப்பில் நுழையும் போது கவிஞனாக மட்டுமன்றித் தமிழ் இலக்கணம் ஓரளவு படித்த புலவனாகவும் மாறியிருந்தேன். திரு.கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என்ற ஆசிரியர் எங்களுக்குத் தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தார். அவரிடம் பயின்ற போது, இலக்கணத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். இலக்கணம் என்பது என்றைக்குமே மாறா விதிகளின் தொகுப்பு இல்லை, காலத்துக்கு ஏற்ப, மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ப, எழுதும் நடைக்கு ஏற்ப, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் விதிகளின் தொகுப்பே என்பதைப் புரிந்து கொண்டேன். இலக்கண விதி ஒவ்வொன்றின் பின்னணியிலும் அந்த விதிக்கான காரணம், அல்லது, தேவை மறைந்திருப்பதை விளங்கிக் கொண்டேன். அந்த விதிகள், மக்கள் மொழியிலிருந்தும், படைப்பாளிகளின் எழுத்துகளில் இருந்தும் தேர்வு செய்யப் பட்டுத் தொகுக்கப் படும் உண்மையை அறிந்து கொண்டேன். இந்த அடிப்படைக் கருத்துகளை என் ஆசிரியர் கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என் நெஞ்சில் ஆழமாகப் பதித்ததால், கல்லூரி சென்ற பிறகு, தமிழ்க்கடல் என்றே போற்றப்படும் ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியரிடமே தமிழ் இலக்கணம் பற்றி எதிர் கருத்துச் சொல்லும் அளவுக்குத் துணிந்தேன்.

    Arv11968-69, விவேகானந்தா கல்லூரியில், புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் அப்படியோர் வகுப்பு இருந்ததாம், அதற்கு ஆங்கிலத்தில் பி.யூ.சி. என்று பெயராம்! அப்போது நான் எழுதிய இலக்கணக் குறிப்பு ஒன்றைத் தவறு என்று சொல்லி என் தமிழாசிரியர் அதற்கு மதிப்பெண் தரவில்லை. நான் அவரிடம் வாதம் செய்தும் பயனில்லை. வகுப்பு முடிந்ததும் அந்த விடைத்தாளை எடுத்துக் கொண்டு தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்க்கடல் என்று குறிப்பிட்டேனே, பேராசிரியர் ஜகன்னாதாச்சாரியாரிடம் சென்றேன். நான் விடுவதாக இல்லை. அது வெறும் வகுப்புத் தேர்வுதான், பொதுத் தேர்வு இல்லை. ஆனால், அந்தக் குறிப்புத் தவறென்றால் அது எனக்கு இழுக்கு இல்லை, எனக்குத் தமிழ் இலக்கணம் சொல்லித் தந்த கிருஷ்ணராமானுஜம் பிள்ளைக்கு இழுக்கு என்றுணர்ந்து விடாப்பிடியாக ஜகன்னாதாச்சாரியார் வரும் வரை காத்திருந்தேன். அவர் வந்ததும் விடைத்தாளை அவரிடம் தந்து விளக்கினேன். ” ஏந்தெழில் இராமன்” என்ற சொற்றொடரில் முதற்சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு வரைக என்ற கேள்விக்கு, முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று நான் எழுதியதை ஆசிரியர் தவறு என்று அடித்து விட்டு அது வினைத்தொகை என்று கூறி எனக்கு மதிப்பெண் தர மறுத்துவிட்ட விவரத்தை அவரிடம் சொன்னேன். “அட, விடுப்பா! பத்துக்கு இரண்டு மதிப்பெண் போனால் போகட்டும்” என்றார் அவர். நான் விடவில்லை. மதிப்பெண் முக்கியம் இல்லை சார், எனக்குத் தமிழ் சொல்லித் தந்த ஆசானின் மதிப்புப் பிரச்சினை இது என்று நான் சொன்னதும், பலே, இங்கே கொண்டா என்று என் விடைத்தாளை வாங்கிச் சற்று நேரம் பார்த்துவிட்டு, “நீ சொல்வதை ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ‘ஏந்தெழில்’ என்பது வினைத்தொகை தானே. அத்துடன் தமிழ் இலக்கணத்தில் முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை கிடையாதே!” என்று அவர் சமாதானம் செய்ய முயலும் போது, கல்லூரி முதல்வரிடம் இருந்து அவசர அழைப்பு வரவே, அவர் சென்று விட்டார். நான் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன். அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் ஒருவன் வந்து என்னை ஜகன்னாதாச்சாரியார் அழைப்பதாகத் தெரிவித்தான். விடைத்தாளுடன் ஓடினேன். மீண்டும் அதை வாங்கிப் பார்த்து விட்டு, நீ இப்படிக் குறிப்பு வரைந்ததற்குக் காரணம் சொல்லு என்றார். நான் சொன்னேன்: ஏந்திய எழில், ஏந்தும் எழில், ஏந்தப் போகும் எழில் என்று பொருள் கொண்டால் அது வினைத்தொகை. ஆனால் அதை அப்படிப் பொருள் கொள்ள என் மனம் இடம்தரவில்லை. எழிலை ஏந்துகின்ற இராமன் என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. எழிலை ஏந்துகின்ற என்பது முன்பின்னாகவும், இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ” மறைந்தும் இருப்பதால் ‘ஏந்தெழில்’ என்பதை முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று எழுதினேன், ஏந்து இராமன் என்றிருந்தால் அதை வினைத்தொகை என்று போட்டிருப்பேன் என்று நீண்ட பிரசங்கம் செய்தேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு, “முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என ஒன்று இலக்கணத்தில் இல்லையே!” என்று அவர் கேட்டார். அதற்கு நான் இலக்கியத்தில் இருக்கிறதே என்றேன். சரி, இந்தத் தொடர் கம்பராமாயணத்தில் வருகிறது. இதே போல் வேறு இலக்கியத்தில் எங்காவது உண்டா என்று கேட்டார். உடனே சொன்னேன், பெரிய புராணத்தில் “ஏந்துபூம் பந்தர்” என்ற சொற்றொடர் வருகிறதே என்று. ஜகன்னாதாச்சாரியார் என் விடைத்தாளில் தம் கைப்பட என் இலக்கணக் குறிப்புக்கு முழுமதிப்பெண் போட்டுக் கொடுத்த்து விட்டு, மறுநாள் என் வகுப்புக்கு வந்து இது பற்றிச் சொல்லிப் பாராட்டி ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்ற நிகழ்ச்சியை நான் மறக்க முடியுமா?

    கிட்டத்தட்ட ஜகந்நாதாச்சாரியார் சாயலில் ‘தமிழ் ப்ரொபஸர் தாத்தாச்சாரியார்’ என்ற தலைப்பிட்டுப் பல்லாண்டுகளுக்கு முன் நண்பன் சு.ரவி வரைந்த ஒரு கோட்டோவியத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம்.

    arv

    இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு கடிதத்தில், ‘மாக்கவிஞன் பாரதி’ என்றுநான் எழுதியிருந்ததைப் படித்து விட்டு நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர், ‘மாகவி’ என்பதுதான் சரி, மாக்கவி என்று நான் எழுதியது தவறு என்று சொன்னதாக நண்பர் சுப்பு என்னிடம் சொன்னதும் அந்த நண்பரையே தொலைபேசியில் அழைத்து, அப்படி எழுதும் துணிவைக் கவிச்சக்கரவர்த்தியே எனக்குத் தந்தான் என்று சொல்லிவிட்டு, கம்பராமாயணத்தில் வரும், “தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே” என்ற வரியை நினைவு படுத்தினேன். அவரும் சமாதானம் அடைந்தார் என்று நினைக்கிறேன்.

    ஆண்டுதோறும், பாரதி பிறந்தநாளை ஒட்டி வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் விழாவை, “பாரதித் திருவிழா” என்றே எழுதி வந்தேன். பெயர்ச்சொல்லுக்குப் பிறகு ஒற்று மிகாது என்று பல புலவர்கள் எடுத்துரைத்தும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. இலக்கணத்தை விடவும் த்வனியில் அதிக ஈடுபாடு கொண்டதாலோ என்னவோ எனக்கு பாரதித் திருவிழா என்று சொல்லும் போது கிடைக்கும் உணர்ச்சி, ‘பாரதி திருவிழா’ என்றால் கிடைக்கவில்லை என்று தோன்றியது. மேலும், கந்தனுடைய புராணம் கந்த புராணம் என்று இருந்தாலும், கந்தனாகிய கடவுள் என்பதைக் கந்தக் கடவுள் என்றுதானே சொல்கிறோம். அது போல், இந்த விழாவை பாரதியுடைய விழா என்பதைக் காட்டிலும், பாரதியாகிய திருவிழா, அதாவது, பாரதியையே ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் வைபவம் என்று கொண்டால் அதை பாரதித் திருவிழா என்றுதானே சொல்ல வேண்டும்! சிவக்கொழுந்து, ராமச்சந்திரன், கிருஷ்ணப் பிரேமி, என்ற சொற்றொடர்களை என்ன சொல்வது? ஒரு வேளை ஈறுகெட்டு, அதாவது, கடைசி எழுத்து மறைந்து வருவதால், ஒற்று மிகலாம் என்பார்களோ? அப்படியானால், ‘சக்திக் கனல்’ என்பதற்கு என்ன சமாதானம்? ‘கண்ணகி காப்பியம்’ என்பது சரி. ஆனால், ‘கண்ணகித் தெய்வம்’ என்பதுதானே சரி! அப்படித் தானே ‘பாரதித் திருவிழா’? நானே என் மனத்துக்குள் வாதங்களை அடுக்கி வைத்திருந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் பெரிதும் மதிக்கும் ஒரு கவிஞர், சிந்தனையாளர், குலோத்துங்கன் என்ற முனைவர் வா.செ.குழந்தைசாமி, தம் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், இந்தப் பிரச்சினை குறித்து இரண்டு பக்கங்களுக்கு எனக்கு ஒரு கடிதம் எழுதி மாற்றச் சொன்னதும் மறுபேச்சுப் பேசாமல், “பாரதி திருவிழா” என்று மாற்றி விட்டேன். இலக்கணத்தை விட, த்வனியை விட, நட்பும், நாகரிகமும், பெரியோரை மதித்தலும் முக்கியம் இல்லையா? ‘மானுட யாத்திரை’ என்ற அரிய காப்பியம் வடித்த அந்த மாபெரும் புலவர் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை.

    ஒருமுறை, பகுத்தறிவுப் பாசறை நண்பர்கள் குழுமியிருந்த இடத்தில் போய், நான் கடவுள் பற்றிச் சில கருத்துகள் பேசி விட்டேன். நான் பேசிக் கொண்டிருந்த போதே ஒரு நண்பர் எழுந்து, என்னை மறுத்துக் கருத்துரைத்தார். நான் என் வாதங்களை எடுத்து வைக்க இடம்தராமல் சற்றுக் கடுமையாகப் பேசத் தொடங்கினார். உடனே நான், சரி ஐயா, கடவுள் இல்லை என்று சொன்னால்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே சொல்லிவிட்டுப் போகிறேன், எனக்குக் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதை விட நம் நட்பு முக்கியம் என்று சொல்லிவிட்டு, நான் இல்லை என்று சொல்வதால் கடவுள் நிச்சயம் கோவித்துக் கொள்ள மாட்டார் என்றதும் அந்த நண்பரே சிரித்து விட்டார்.

    வாதமே தொழிலாக அன்றாடம் செய்து வரும் நான் வாதத்தால் நட்பை இழக்க எப்போதும் உடன்பட்டதில்லை. எனக்குக் கருத்தை விட மனிதர்கள் முக்கியம். பாரதி ஒரு கவிதையில் சொல்கிறானே:

    அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்

    ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால்

    நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு

    நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

    நான் இவ்வளவு பீடிகை போட்டது மரபுக் கவிதை, புதுக் கவிதைப் போராட்டத்துக்குள் செல்வதற்குத்தான். மரபுவழியில் மட்டுமே எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தால் எப்படி ஒரு கவிதை உயிரற்றுப் போக வாய்ப்புண்டோ, அப்படியே, மரபை மீறித்தான் எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தாலும் நிகழக் கூடும். கவிதை எப்படி வருகிறதோ, அது எந்த வடிவத்தை ஏற்றுக் கொண்டு வருகிறதோ அதை அப்படியே வரவேற்க முடிந்தாலே போதும். பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் வடிவம் இப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து, அப்படிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தாயால் முடியுமா? ஆனால், குழந்தை பிறந்த பிறகு அதற்குப் பெயர் சூட்டி, ஆடை, அணிகலன்கள் அணிவித்து, அழகு செய்து, பார்த்து ரசிக்க அன்னைக்கு உரிமையும் உண்டு, அது சாத்தியமும் கூட.

    யாப்பிலக்கணப் படியே கவிதையொன்று எழுத வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒருவன் கவிதை எழுத உட்கார்ந்தால் அந்தக் கவிதையில் உயிர் இருக்குமா?

    கொஞ்சம் சந்தம், கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் பாலியல் உணர்ச்சி என மூன்றும் கலந்த ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டதும் கணினி இரண்டு வரிகள் தந்ததாக சுஜாதா ஒரு கதையில் எழுதியிருப்பார்:

    கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜ சோழன்

    விதவைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜ சோழன்

    முயன்று எழுதப்பட்ட கவிதைகள் இப்படித்தான் அமையும். கவிதை எழுதும் போது, அடுத்த வரியில் என்ன சொற்கள் வருமோ என்று தெரியாமல் முதல் வரியில் தொடங்கி, அந்த வரிகள் எங்கே போய் முடியப் போகின்றன என்று புரியாமல் அந்தக் கவிதையின் போக்கில் சென்று, முடிந்த பிறகு அதைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்று, முயன்று, முழுதாகப் புரிந்து கொள்ள முடியாமல் தோற்றுப் போய்க் கொஞ்சம் புரிந்தது விட்டது போல் கற்பித்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி மகிழும் கவிதைகளின் சுகமே தனி. சரிதானே மனோன்மணி! புத்தி சிகாமணியை அவன் போக்கில் விட்டால் கணினி தந்த கவிதை போலத்தான் கவிதைகள் வரும்.

    பிறக்கும் குழந்தைக்கு எப்படி வடிவிலும், குணங்களிலும் பெற்றோர்களின் சாயல் இருக்குமோ, அந்த அளவுக்கு நான் எழுதும் கவிதைகளில் என் அறிவு, என் மனம் ஆகியவற்றின் சாயல் இருக்கத்தான் செய்யும். அவ்வளவே! சிகாமணி-மனோன்மணியின் கூட்டுத் தயாரிப்புத்தானே என் கவிதைகள்! அவர்களின் சாயல் என் கவிதைகளுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், என் கவிதைகள் அந்தச் சாயல்களைக் கடந்தவை. சாயல்கள் வெறும் சாயங்களே!

    யாப்புக்கு ஒத்து வர வேண்டும் என்ற முயற்சியில் தேவையற்ற சொற்களைப் பெய்வதால்தான் மரபுக் கவிதைகளுக்கு எதிர்ப்பியக்கமாகப் புதுக்கவிதை இயக்கம் மலர்ந்தது. பாரதி வசன நடையில் நல்ல கவிதைகள் எழுதித் தொடக்கி வைத்த பாதையில் பிச்சமூர்த்தியும், சி.சு.செல்லப்பாவும் அடித்தளம் போட்டுக் கட்டிடம் கட்டவும், அதில் வசிக்க குபுகுபுவென்று எத்தனைக் கவிஞர்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து விட்டனர்! தற்போது, புதுக்கவிதை என்பது வெறும் ஒரு வடிவப் புரட்சி இல்லை, அதன் உள்ளடக்கமே தனி என்பதாக அந்தத் துறையை மேலும் வளம் செய்து கொண்டிருக்கும் பலர், கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், கல்யாண்ஜி போன்ற பல நல்ல கவிஞர்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

    “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற அருமையான நூலைப் படைத்த அமரர் வல்லிக்கண்ணனை நினைத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்து, ஆண் புகைப்படத்தை அட்டையில் போடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த குமுதம் பத்திரிகை தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தது வல்லிக்கண்ணனின் நூல் சாகித்ய அகதெமியின் பரிசு பெற்ற போதுதான் என்று நினைக்கிறேன். அதற்காகக் குமுதம் நிருபர் பால்யூ அரும்பாடு படவேண்டியிருந்தது. கடைசியில் அவர் முயற்சி வென்றது. குமுதம் தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டது. அதுவும் கொஞ்சம்தான் தளர்த்திக் கொண்டது. ஆம், ஒரு பெண் புகைப்படத்துடன் வல்லிக்கண்ணன் புகைப்படத்தைச் சேர்த்து அட்டையில் போடக் குமுதம் இசைந்தது. பால்யூ, ஒரு வெற்றிப் புன்னகையுடன், வல்லிக்கண்ணனை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து ஷோபனாவை விட்டு அவரைப் பேட்டி காணச் செய்து, இருவர் புகைப்படத்தையும் அடுத்த வாரக் குமுதம் அட்டைப் படத்தில் போடச் செய்தது ஒரு வரலாற்று நிகழ்ச்சி இல்லையா?

    Arrv2

    அதெல்லாம் இருக்கட்டும், வைதாரையும் வாழ வைப்பவன் என்று இறைவனைச் சொல்வது வழக்கம். எனக்கென்னவோ, கவிதையில் வைதால் மேலும் அருள் செய்வான் இறைவன் என்றே தோன்றுகிறது. இறைவனை விடுங்கள். ஒரு நல்ல கவிதை ரசிகனான மனிதன் அப்படித்தான். ஒரு தமிழாசிரியர், வகுப்புக்கு வந்ததும் நோட்ஸ் கொடுத்து எழுது என்று எங்களைத் தினமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். தாங்கவில்லை சாமீ! ஒருநாள், அவர் வகுப்புகு வரும் முன்பே, கரும்பலகையில் ஒரு குறட்பா எழுதி வைத்து விட்டேன்:

    தாராதீர் நோட்ஸெமக்குத் தந்தீரேல் நீரிங்கு

    வாராதீர் வன்சொல் பட

    அந்த ஆசிரியர் வந்ததும் அதைப் படித்துவிட்டு, யார் எழுதியது என்று கேட்டார். எல்லாரும் மெளனம் சாதித்தோம். சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும் என்று அவர் அச்சுறுத்தியதும், நான் எழுந்து நின்றேன். “ஓ! நான் முழுதும் சொல்லும் வரைக் காத்திருக்காமல் எழுந்து நின்று விட்டாயே. சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும், சொல்லி விட்டால் எழுதிய மாணவனுக்குப் பாராட்டுக் கிடைக்கும் என்று சொல்ல நினைத்தேன்” என்றார், திரு. ராமமூர்த்தி என்ற அந்த ஆசிரியர். யார் ‘ஏந்தெழில்’ இலக்கணக் குறிப்புக்கு எனக்கு மதிப்பெண் தர மறுத்தாரோ, யாரை மீறிச் சென்று துறைத் தலைவரிடம் நான் மதிப்பெண் பெற்று வந்தேனோ, அதே ராமமூர்த்தி என்ற ஆசிரியர்தான், அவரை விமர்சித்து நான் எழுதிய குறட்பாவை ரசித்துப் பாராட்டினார்.

    கவிதை ரசிப்பதற்கே! அதில் சோகம் விளைந்தாலும், வீரம் வெளிப்பட்டாலும், சினமே பொங்கிக் கனன்றாலும், குதூகலம் நிரம்பி வழிந்தாலும், கவிதை ரசிப்பதற்கே!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (43)

    கே.ரவி

    ‘கடவுள் உண்டா, இருந்தால் காட்டு’ என்று வெறிகொண்டு அலைந்த நரேந்திரனையும் நான் பார்த்ததில்லை. அவனுக்குத் தொடுகுறி மூலமாக அநுபூதி தந்து, அவனை விவேகானந்தன் ஆக்கிய காளி கோயில் பூசாரியையும் நான் பார்த்ததில்லை. ஆனால், பராசக்தியைப் பார்ப்பதொன்றே தன் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி, மற்ற எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்த்த ஒருவனை, ஏறக்குறைய நரேந்திரன் போலக் காட்சி தந்த ஒரு நண்பனை, நான் கண்டு வியந்தேன். அவனும் டாக்டர் நித்யானந்தத்தின் சீடனாக வந்தடைந்தான். ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று டாக்டர் கேட்ட போதெல்லாம், “பராசக்தியைப் பார்க்க வேண்டும்” என்பதைத் தவிர வேறெந்த பதிலும் சொல்ல மறுத்த அவனுடைய வீராப்பில் ஒரு லட்சிய வெறி இருந்தது. பல மாதங்கள் ஆகியும், வேறேதாவது கேளப்பா என்று அவனிடம் டாக்டர் சொல்லியும் மறுத்துக் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் பராசக்தி தரிசன வேட்கை தவிர வேறெதுவும் கேட்காமல், அதிகம் பேசாமல், டாக்டரையே தினமும் பார்த்து வந்தான்.

    ஒருநாள், மந்தைவெளி தெருவில் நாங்கள் வசித்த போது, வேர்க்க, விறுவிறுக்க என் வீட்டுக்கு ஓடி வந்தானாம். ஷோபனா மட்டுமே வீட்டில் இருந்தாள். அப்போது அவன் சொன்னது, நடந்தது எல்லாவற்றையும் தான் எழுதிய ‘கேடலிஸ்ட்’ (Catalyst) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஷோபனா எழுதியுள்ளாள். அந்த நண்பன், அவன்தான் இன்றைய திராவிட மாயை சுப்பு, அவனும் என் காதுபடப் பலமுறை இந்த நிகழ்ச்சியைச் சொல்லியிருக்கிறான். அந்த நிகழ்ச்சியை இங்கே விவரிக்கிறேன்:

    asமிகுந்த பரப்போடு காணப்பட்ட சுப்பு, “ஷோபனா, அந்த ஆளைப் பற்றி எச்சரிக்கவே இங்கே வந்தேன்” என்றானாம். “பராசக்தியைக் காண வேண்டும்” என்று அவன் விடாமல் செய்த நச்சரிப்புத் தாங்காமல், அதற்கு முந்தின நாள் பகல் வேளையில், டாக்டர் அவனைத் திருவொற்றியூர் கடற்கரையில் இருந்த (இப்போது இல்லை!) ஒரு பழைய, பாதி இடிந்த, மிகச்சிறிய கோயிலுக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு ஒரு பராசக்தி சிலை மட்டுமே இருந்ததாம். அழுக்கான கந்தல் ஆடை அணிந்த ஒருவன் அங்கே இருந்தானாம். அவன் குடித்து விட்டு உளறிக் கொண்டிருந்தானாம். அவன் தன்னை டாக்டரின் சீடன் என்று வேறு சொல்லிக் கொண்டானாம். டாக்டருக்கும் அவனை நன்றாகத் தெரிந்திருந்தது. “அம்மாவை ஒழுங்கா பாத்துக்க மாட்டே?” என்று டாக்டர் அவனைக் கண்டித்துவிட்டுக் கொஞ்சம் எண்ணை கொண்டுவரச் சொன்னாராம். சிலைக்கு எண்ணையூற்றித் தேய்த்து விட்டுத் திரும்பி சுப்புவைப் பார்த்தாராம். அவன் குனிந்து, கண்ணை மூடிக் கொண்டிருந்தானாம். அந்தக் குடிகாரன் கெட்ட, கெட்ட வார்த்தைகளில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தானாம். நடுநடுவே பராசக்தியை வேறு திட்டிக் கொண்டிருந்தானாம். சுப்புவுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அப்போது டாக்டர் சுப்புவிடம், “ம், நிமுந்து பாரு. கண்ணத்தொற!” என்று அதட்டினாராம். சுப்பு நிமிரவும் இல்லை, கண்ணைத் திறக்கவும் இல்லை. மீண்டும் டாக்டர் அதே சொல்ல, சுப்புவும் அப்படியே குனிந்தபடிக் கண்மூடியபடியே இருந்தானாம். குடிகாரன், உளறலின் உச்சக் கட்டத்தில் கூவிக் கொண்டிருந்தான்: “அவளப் பாக்கறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? பாத்துடுவியா? (கெட்ட வார்த்தைகள் …..) அவ அதுக்கெல்லாம் மசிய மாட்டா…..”

    அச்சம் என்பதையே அதுவரை அறிந்திராத சுப்புவின் மனத்தில் அச்சம் சூழ்ந்து கொண்டது. பீதி என்று கூடச் சொல்லலாம். தான் அமர்ந்திருந்த தரை அப்படியே பிளந்து, நழுவுவதைப் போல் அவன் உணர்ந்தான். இதுவரை தான் அறிந்திராத இன்னொரு பரிமாணத்துக்குள் யாரோ தன்னை இழுத்துச் செல்வது போல் …… “சரி, சரி போய் வெளியே சற்றுக் காற்று வாங்க நடந்து விட்டு வந்து பார்” என்று டாக்டர் சொன்னதும் தப்பித்தேன், பிழைத்தேன் என்று அங்கிருந்து புறப்பட்டு ஓடிச் சென்று பேருந்தில் ஏறி வீட்டுக்குப் போய்விட்டான் சுப்பு.

    மறுநாள் என் வீட்டுக்கு வந்து ஷோபனாவிடம் நடந்ததைச் சொல்லி டாக்டர் பற்றி அவளை எச்சரித்து விட்டுப் போய் விட்டான். பிறகு, சில நாட்கள் கழித்து எப்படியோ மீண்டும் டாக்டரின் இணைபிரியாத சீடனாக அவனே ஐக்கியமான கதையும், மேலும் சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் டாக்டரின் வட்டத்தில் இருந்து பிரிந்துவிட்ட கதையும் இங்கே, இந்தச் சூழலில் விவரிக்கத் தேவையில்லை.

    யாரை அல்லது எதைப் பார்க்க வேண்டும் என்பதே ஒரே லட்சியமாக சுப்பு கொண்டிருந்தானோ, அவளை, அதை அவனால் பார்க்க முடியவில்லை.

    பராசக்தி என்பது கோடானு கோடி அண்டங்களை உள்ளடக்கி இன்னும், இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தி. அதன் வீரியத்தை எப்படிக் கணக்கிட முடியும்? கோடானு கோடி சூரியக் கோளங்களையும் ஒளி மங்கச் செய்யும் ஜ்வாலை அது. அதை எப்படிப் புறக்கண்ணால் பார்க்க முடியும்? ஶ்ரீ கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனால் முழுதாகப் பார்க்க முடிந்திருக்குமா? இந்தப் புவிமிசை நின்று கொண்டே பூமிப் பந்தின் முழுத் தோற்றத்தை ஒருவனால் நேரில் காண முடியுமா? பூமிப்பந்தில் இருந்து மேலெழும்பி வெகுதூரம் பறந்து சென்றால், பூமியின் முழுத்தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் முழுமையாகப் பிரபஞ்சத்தையே காண வேண்டுமென்றால், பிரபஞ்சத்தை விட்டு வெளியே போக வேறு இடம் ஏது? ‘கண்ணத் தொறந்து நிமுந்து பாருப்பா’ என்ற டாக்டர் சொன்ன போது சுப்பு நிமிர்ந்து, கண்ணைத் திறந்திருந்தால் என்ன பார்த்திருப்பான்? யாருக்குத் தெரியும்?

    தர்க்க ரீதியாக மெய்யியல் பாடத்தில் படித்து நான் குழம்பிக் கொண்டிருந்த சில உண்மைகளை அனுபவ ரீதியாக விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எனக்கு உதவின. விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்டிரிய நாட்டு தத்துவ ஆய்வாளர் பற்றி நான் முன்பே குறிப்பிட்டேன் இல்லையா? அவருடைய கருத்துப் பள்ளி ‘வியன்னா வட்டம்’ (the vienna circle) என்றே பிற்பாடு பெயர் பெற்றது. மோரிட்ஜ் ஷ்லிக், ருடால்ஃப் கார்னாப் போன்ற தத்துவப் பேராசிரியர்களின் குழுவால் வளர்க்கப் பட்ட வியன்னா வட்டத்தின் பாதிப்பில் “தர்க்க உடன்பாட்டியல்” (Logical Positivism) என்ற இன்னொரு கருத்துப் பள்ளி இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் வளர்ந்தது. அந்தப் பள்ளியைச் சார்ந்த கில்பர்ட் ரைல், ஏ.ஜே.அயர் போன்ற தர்க்க நிபுணர்கள் ஒரு கருத்தை முன்மொழிந்தனர். பராசக்தியைப் பார்க்க வேண்டும் என்ற சுப்புவின் ஆசையோடு தொடர்புடைய அந்தக் கருத்தோட்டத்தைப் பொருத்தம் கருதி நான் இங்கே விவரிக்க வேண்டியுள்ளது. முடிந்தவரை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். சற்று என்னோடு ஒரு தர்க்க ரீதியான பயணம் மேற்கொள்ள உங்கள் மனத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

    கில்பர்ட் ரைல் என்ற பேராசிரியர் “மனம் என்ற கருத்தீடு” (The Concept of Mind) என்ற தம்முடைய நூலில் “கேட்டகரிas1 மிஸ்டேக்” (Category Mistake) என்ற ஒரு கருத்தீடு பற்றிக் குறிப்பிடுகிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைக் காண வரும் ஒரு நபர், அங்குள்ள வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “அது சரி, பல்கலைக் கழகம் எங்கே?” என்று கேட்டாராம். இதைத்தான் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று ரைல் சொல்கிறார். வகுப்பறைகள், நூலகம், சோதனைக் கூடம் போலவே பல்கலைக் கழகம் என ஒன்று தனியாகக் காட்சிதர வேண்டும் என்று அந்த நபர் தப்பிதமாக நினைத்துக் கொண்டார். அதைத்தான் ரைல் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று குறிப்பிடுகிறார். தமிழில் அந்தக் கருத்தை, “வகுப்புத் தப்பிதம்” அல்லது “முறைமாற்றுத் தப்பிதம்” என்று சொல்லலாமா? அந்தத் தப்பில் ஓர் கள்ளம் கபடமற்ற அறியாமை கலந்திருப்பதால், அதை இதம் செய்யவே தப்பிதம் என்ற சொல் பயன்படுகிறது.

    கால்பந்தாட்டத்தில் சில விதமான ஆட்டங்கள் “ஃபவுல்” (foul) எனப்படும். அதாவது, தப்பாட்டம் எனப்படும். ஆனால் கால்பந்தாட்டமே ஃபவுலா இல்லையா, தப்பாட்டமா இல்லையா என்ற கேள்வி கேட்கலாமா? அப்படிக் கேட்பதே “வகுப்புத் தப்பிதம்”. சரி, இன்னும் எளிமையாக, வாழ்க்கையிலிருந்து ஓர் உதாரணம் தருகிறேன்.

    வானம் இருண்டு காணப்பட்ட ஒரு பகல் வேளையில், அன்று புயல் வரப்போகிறது என்று தன் பாட்டி சொன்னதைக் கேட்ட ஒரு நாலைந்து வயதுப் பெண் குழந்தை, மழைச் சாரலையும் பொருட்படுத்தாமல், வீதியைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் வெளியே அமர்ந்து கொண்டிருந்தாளாம். அதைப் பார்த்துவிட்டு, அவளுடைய அம்மம்மா, பாட்டியை அந்தக் குழந்தை அப்படித்தான் அழைப்பாள், ‘உள்ளே வா’ என்று சத்தம் போட்டாளாம். குழந்தையோ, எப்படியும் புயலைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று நினைத்திருந்தாளாம். “புயல் வந்து போய் விட்டது” என்று கேட்டதும் அவளுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டதாம். அந்தச் சின்னக் குழந்தை ‘புயல்’ என்பது முயல் போல ஒரு சிறிய மிருகம் என்று நினைத்து அதைப் பார்க்கக் காத்திருந்ததாம். அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, ஐந்தாறு வயதில் ஷோபனாதான். அவள் இந்தக் கதையைப் பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன். என்ன ஒரு கள்ளம் கபடமற்ற தவறு பார்த்தீர்களா? முயல் போலப் புயல் வரும் என்பது ஒரு வகுப்புத் தப்பிதம்தானே!

    இந்த உலகத்தில் ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்து இது நிஜமா என்று கேட்டால், அந்த நோட்டு செல்லுபடியாகும் நோட்டா, இல்லை கள்ள நோட்டா என்று பொருள் படும். அதே போல், ஒரு பூனை வடிவைப் பார்த்து இது நிஜமான பூனையா என்று கேட்டால், அது உயிருள்ள பூனையா, இல்லை பூனை பொம்மையா என்று அர்த்தம். கண்ணுக்கு நீர்த்தடாகம் போல் தெரியும் ஒன்றை நிஜமா என்று கேட்டால், அது கானல் நீரா இல்லை குளமா என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த உலகமே நிஜமா என்ற கேள்வியை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? நிஜமான உலகம் எது என்பதும், அதன் பொய்த்தோற்றம் எது என்பதும், ஆகிய இரண்டும் தெரிந்திருந்தால்தான் அந்தக் கேள்விக்கு அர்த்தம் புரியும். இதுதான் “வகுப்புத் தப்பிதம்” என்பது.

    ஏலகிரி மலையைக் காட்டிலும் நீலகிரி மலை உயர்ந்தது என்று சொல்லலாம். சரி, நீலகிரியைக் காட்டிலும் அடக்கம் உயர்ந்ததா என்ற கேள்விக்கு அர்த்தம் உண்டா? அது வகுப்புத் தப்பிதம் இல்லையா? அடக்கத்துக்கு உருவமே கிடையாதே, அதன் உயரத்தை எப்படி அளந்தறிவது?

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுருக்கம், சுருக்கமாக 1330 பாக்கள் எழுதி வைத்த தாடிக்காரக் கிழவருக்கு என்ன தெரியும்? அவர் ரைலைப் படித்திருக்க வாய்ப்பில்லையே. அதனால்தான் தப்பிதமாகச் சொல்லி வைத்தார்:

    நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

    மலையினும் மாணப் பெரிது

    அடக்கம் உடையவரின் தோற்றம் திருவள்ளுவரின் மனக்கண்ணுக்குத் தெரிந்தது பற்றியும், அது மலையைக் காட்டிலும் உயரமாக அவருக்குத் தோற்றம் தந்தது பற்றியும் நாம் கில்பர்ட் ரயிலிடம் விவாதிக்கத் தேவையில்லை.

    இதையாவது அடக்கமுடையவனின் தோற்றம் என்று கொள்ளலாம். இன்னொன்று சொல்கிறாரே:

    காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது

    அதாவது, உதவி என்பது அகில உலகத்தையும் விட மிகப் பெரிது என்று சொல்கிறாரே! உதவிக்கு உருவம் ஏது? அப்பா, இந்தக் கவிஞர்களின் பார்வையே தனி! அவர்களை வைத்துக் கொண்டு அறிவு சார்ந்த விஷயங்களை ஆராய முடியாது. இதை நன்கறிந்த ப்லேட்டோ (Plato) என்ற க்ரேக்க தத்துவ ஞானி, தான் கனவு கண்ட இலட்சியக் குடியரசில் இருந்து கவிஞர்களை நாடு கடத்திவிட வேண்டும் என்று எழுதி விட்டான்.

    பராசக்தி என்பது பிரபஞ்சத்தின் மூல சக்தி; அதன் ஒட்டு மொத்த சக்தியும் அதுவே. எப்படி வித்தே விருட்சத்தின் மூலமோ, வித்துக்குள் விருட்சம் அடக்கமோ அது போல. இந்த பிரபஞ்சத்தின் காரண மூலமான சக்தியே இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்தமான சக்தியாகவும் இருக்கிறது என்பதைப் பகுத்தறிவு ரீதியாக விளக்கிச் சொல்வதில் சிக்கல்தான் ஏற்படும். ஆனால், அதை அனுபவமாக்கப் பராசக்தியே குருநாதன் மூலம் தயாரான போது, அச்சத்தால் அந்த வாய்ப்பை ஒருவன் இழக்க நேரிட்டதைத்தான் மேலே சொன்னேன்.

    பிறகு ஷோபனாவிடம் டாக்டர் சொன்னாராம்: “பராசக்தி தரிசனம் எல்லாருக்கும் கிடைக்காது. சுப்புவுக்கு அந்தத் தரிசனத்தைத் தரச்சொல்லி எல்லாரும் பரிந்துரைத்தார்கள். அதனால்தான் அந்த வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். அவன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.”

    அந்த ‘எல்லாரும்’ யார், யார்? மஹரிஷிகளா, தெய்வங்களா? முப்பத்து முக்கோடிப் தேவர்களா? யாருக்குத் தெரியும்?

    1990-ஆம் ஆண்டு, ஒருநாள், நண்பர்களும் நானும் டாக்டரைச் சூழ்ந்து கொண்டு அமர்ந்திருந்தோம். திடீரென்று டாக்டர் என் மடியில் தலைசாய்த்துப் படுத்துக் கொண்டு, ” பாடுப்பா” என்றார். எப்படிப் பாட முடியும் என்பதையே ஒரு பாட்டாகப் பாடினேன்:

    வான்மதியைத் தூங்க வைக்கச் சின்னமலர் பாடுவதா
    சூரியனைத் தூங்க வைக்கத் தீபமெழுந் தாடுவதா
    நானிசைக்கும் பாட்டினிலே நீயுறங்கப் போவதில்லை
    என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

    தேன்பொழியத் தேன்பொழிய வண்டுறங்கிப் போவதுண்டா
    தென்றலுக்குத் தோள்கொடுத்து மாமலை துயில்வதுண்டா
    எ ன்மடியில் நீயுறங்க விண்ணுமண்ணும் சேர்ந்துறங்கும்
    மண்டலங்கள் நம்மருகில் செண்டுகளைப் போலிறங்கும்
    என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

    வானமழை பொழிந்தவுடன் சின்னவிதை கண்விழிக்கும்
    சின்னவிதை கண்விழித்தால் ஆலமரம் நிழல்விரிக்கும்
    ஆலமரத் தின்நிழலில் ஆவினங்கள் படுத்திருக்கும்
    ஆவினங்கள் கண்வளர நீலக்குயில் பண்ணிசைக்கு ம்
    என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

    புயல் வருகிறதா என்று காத்திருந்து பார்ப்போமே!

    (தொடரும்)

    Share