கே.ரவி

‘கடவுள் உண்டா, இருந்தால் காட்டு’ என்று வெறிகொண்டு அலைந்த நரேந்திரனையும் நான் பார்த்ததில்லை. அவனுக்குத் தொடுகுறி மூலமாக அநுபூதி தந்து, அவனை விவேகானந்தன் ஆக்கிய காளி கோயில் பூசாரியையும் நான் பார்த்ததில்லை. ஆனால், பராசக்தியைப் பார்ப்பதொன்றே தன் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி, மற்ற எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்த்த ஒருவனை, ஏறக்குறைய நரேந்திரன் போலக் காட்சி தந்த ஒரு நண்பனை, நான் கண்டு வியந்தேன். அவனும் டாக்டர் நித்யானந்தத்தின் சீடனாக வந்தடைந்தான். ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று டாக்டர் கேட்ட போதெல்லாம், “பராசக்தியைப் பார்க்க வேண்டும்” என்பதைத் தவிர வேறெந்த பதிலும் சொல்ல மறுத்த அவனுடைய வீராப்பில் ஒரு லட்சிய வெறி இருந்தது. பல மாதங்கள் ஆகியும், வேறேதாவது கேளப்பா என்று அவனிடம் டாக்டர் சொல்லியும் மறுத்துக் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் பராசக்தி தரிசன வேட்கை தவிர வேறெதுவும் கேட்காமல், அதிகம் பேசாமல், டாக்டரையே தினமும் பார்த்து வந்தான்.

ஒருநாள், மந்தைவெளி தெருவில் நாங்கள் வசித்த போது, வேர்க்க, விறுவிறுக்க என் வீட்டுக்கு ஓடி வந்தானாம். ஷோபனா மட்டுமே வீட்டில் இருந்தாள். அப்போது அவன் சொன்னது, நடந்தது எல்லாவற்றையும் தான் எழுதிய ‘கேடலிஸ்ட்’ (Catalyst) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஷோபனா எழுதியுள்ளாள். அந்த நண்பன், அவன்தான் இன்றைய திராவிட மாயை சுப்பு, அவனும் என் காதுபடப் பலமுறை இந்த நிகழ்ச்சியைச் சொல்லியிருக்கிறான். அந்த நிகழ்ச்சியை இங்கே விவரிக்கிறேன்:

asமிகுந்த பரப்போடு காணப்பட்ட சுப்பு, “ஷோபனா, அந்த ஆளைப் பற்றி எச்சரிக்கவே இங்கே வந்தேன்” என்றானாம். “பராசக்தியைக் காண வேண்டும்” என்று அவன் விடாமல் செய்த நச்சரிப்புத் தாங்காமல், அதற்கு முந்தின நாள் பகல் வேளையில், டாக்டர் அவனைத் திருவொற்றியூர் கடற்கரையில் இருந்த (இப்போது இல்லை!) ஒரு பழைய, பாதி இடிந்த, மிகச்சிறிய கோயிலுக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு ஒரு பராசக்தி சிலை மட்டுமே இருந்ததாம். அழுக்கான கந்தல் ஆடை அணிந்த ஒருவன் அங்கே இருந்தானாம். அவன் குடித்து விட்டு உளறிக் கொண்டிருந்தானாம். அவன் தன்னை டாக்டரின் சீடன் என்று வேறு சொல்லிக் கொண்டானாம். டாக்டருக்கும் அவனை நன்றாகத் தெரிந்திருந்தது. “அம்மாவை ஒழுங்கா பாத்துக்க மாட்டே?” என்று டாக்டர் அவனைக் கண்டித்துவிட்டுக் கொஞ்சம் எண்ணை கொண்டுவரச் சொன்னாராம். சிலைக்கு எண்ணையூற்றித் தேய்த்து விட்டுத் திரும்பி சுப்புவைப் பார்த்தாராம். அவன் குனிந்து, கண்ணை மூடிக் கொண்டிருந்தானாம். அந்தக் குடிகாரன் கெட்ட, கெட்ட வார்த்தைகளில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தானாம். நடுநடுவே பராசக்தியை வேறு திட்டிக் கொண்டிருந்தானாம். சுப்புவுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அப்போது டாக்டர் சுப்புவிடம், “ம், நிமுந்து பாரு. கண்ணத்தொற!” என்று அதட்டினாராம். சுப்பு நிமிரவும் இல்லை, கண்ணைத் திறக்கவும் இல்லை. மீண்டும் டாக்டர் அதே சொல்ல, சுப்புவும் அப்படியே குனிந்தபடிக் கண்மூடியபடியே இருந்தானாம். குடிகாரன், உளறலின் உச்சக் கட்டத்தில் கூவிக் கொண்டிருந்தான்: “அவளப் பாக்கறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? பாத்துடுவியா? (கெட்ட வார்த்தைகள் …..) அவ அதுக்கெல்லாம் மசிய மாட்டா…..”

அச்சம் என்பதையே அதுவரை அறிந்திராத சுப்புவின் மனத்தில் அச்சம் சூழ்ந்து கொண்டது. பீதி என்று கூடச் சொல்லலாம். தான் அமர்ந்திருந்த தரை அப்படியே பிளந்து, நழுவுவதைப் போல் அவன் உணர்ந்தான். இதுவரை தான் அறிந்திராத இன்னொரு பரிமாணத்துக்குள் யாரோ தன்னை இழுத்துச் செல்வது போல் …… “சரி, சரி போய் வெளியே சற்றுக் காற்று வாங்க நடந்து விட்டு வந்து பார்” என்று டாக்டர் சொன்னதும் தப்பித்தேன், பிழைத்தேன் என்று அங்கிருந்து புறப்பட்டு ஓடிச் சென்று பேருந்தில் ஏறி வீட்டுக்குப் போய்விட்டான் சுப்பு.

மறுநாள் என் வீட்டுக்கு வந்து ஷோபனாவிடம் நடந்ததைச் சொல்லி டாக்டர் பற்றி அவளை எச்சரித்து விட்டுப் போய் விட்டான். பிறகு, சில நாட்கள் கழித்து எப்படியோ மீண்டும் டாக்டரின் இணைபிரியாத சீடனாக அவனே ஐக்கியமான கதையும், மேலும் சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் டாக்டரின் வட்டத்தில் இருந்து பிரிந்துவிட்ட கதையும் இங்கே, இந்தச் சூழலில் விவரிக்கத் தேவையில்லை.

யாரை அல்லது எதைப் பார்க்க வேண்டும் என்பதே ஒரே லட்சியமாக சுப்பு கொண்டிருந்தானோ, அவளை, அதை அவனால் பார்க்க முடியவில்லை.

பராசக்தி என்பது கோடானு கோடி அண்டங்களை உள்ளடக்கி இன்னும், இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தி. அதன் வீரியத்தை எப்படிக் கணக்கிட முடியும்? கோடானு கோடி சூரியக் கோளங்களையும் ஒளி மங்கச் செய்யும் ஜ்வாலை அது. அதை எப்படிப் புறக்கண்ணால் பார்க்க முடியும்? ஶ்ரீ கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனால் முழுதாகப் பார்க்க முடிந்திருக்குமா? இந்தப் புவிமிசை நின்று கொண்டே பூமிப் பந்தின் முழுத் தோற்றத்தை ஒருவனால் நேரில் காண முடியுமா? பூமிப்பந்தில் இருந்து மேலெழும்பி வெகுதூரம் பறந்து சென்றால், பூமியின் முழுத்தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் முழுமையாகப் பிரபஞ்சத்தையே காண வேண்டுமென்றால், பிரபஞ்சத்தை விட்டு வெளியே போக வேறு இடம் ஏது? ‘கண்ணத் தொறந்து நிமுந்து பாருப்பா’ என்ற டாக்டர் சொன்ன போது சுப்பு நிமிர்ந்து, கண்ணைத் திறந்திருந்தால் என்ன பார்த்திருப்பான்? யாருக்குத் தெரியும்?

தர்க்க ரீதியாக மெய்யியல் பாடத்தில் படித்து நான் குழம்பிக் கொண்டிருந்த சில உண்மைகளை அனுபவ ரீதியாக விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எனக்கு உதவின. விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்டிரிய நாட்டு தத்துவ ஆய்வாளர் பற்றி நான் முன்பே குறிப்பிட்டேன் இல்லையா? அவருடைய கருத்துப் பள்ளி ‘வியன்னா வட்டம்’ (the vienna circle) என்றே பிற்பாடு பெயர் பெற்றது. மோரிட்ஜ் ஷ்லிக், ருடால்ஃப் கார்னாப் போன்ற தத்துவப் பேராசிரியர்களின் குழுவால் வளர்க்கப் பட்ட வியன்னா வட்டத்தின் பாதிப்பில் “தர்க்க உடன்பாட்டியல்” (Logical Positivism) என்ற இன்னொரு கருத்துப் பள்ளி இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் வளர்ந்தது. அந்தப் பள்ளியைச் சார்ந்த கில்பர்ட் ரைல், ஏ.ஜே.அயர் போன்ற தர்க்க நிபுணர்கள் ஒரு கருத்தை முன்மொழிந்தனர். பராசக்தியைப் பார்க்க வேண்டும் என்ற சுப்புவின் ஆசையோடு தொடர்புடைய அந்தக் கருத்தோட்டத்தைப் பொருத்தம் கருதி நான் இங்கே விவரிக்க வேண்டியுள்ளது. முடிந்தவரை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். சற்று என்னோடு ஒரு தர்க்க ரீதியான பயணம் மேற்கொள்ள உங்கள் மனத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

கில்பர்ட் ரைல் என்ற பேராசிரியர் “மனம் என்ற கருத்தீடு” (The Concept of Mind) என்ற தம்முடைய நூலில் “கேட்டகரிas1 மிஸ்டேக்” (Category Mistake) என்ற ஒரு கருத்தீடு பற்றிக் குறிப்பிடுகிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைக் காண வரும் ஒரு நபர், அங்குள்ள வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “அது சரி, பல்கலைக் கழகம் எங்கே?” என்று கேட்டாராம். இதைத்தான் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று ரைல் சொல்கிறார். வகுப்பறைகள், நூலகம், சோதனைக் கூடம் போலவே பல்கலைக் கழகம் என ஒன்று தனியாகக் காட்சிதர வேண்டும் என்று அந்த நபர் தப்பிதமாக நினைத்துக் கொண்டார். அதைத்தான் ரைல் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று குறிப்பிடுகிறார். தமிழில் அந்தக் கருத்தை, “வகுப்புத் தப்பிதம்” அல்லது “முறைமாற்றுத் தப்பிதம்” என்று சொல்லலாமா? அந்தத் தப்பில் ஓர் கள்ளம் கபடமற்ற அறியாமை கலந்திருப்பதால், அதை இதம் செய்யவே தப்பிதம் என்ற சொல் பயன்படுகிறது.

கால்பந்தாட்டத்தில் சில விதமான ஆட்டங்கள் “ஃபவுல்” (foul) எனப்படும். அதாவது, தப்பாட்டம் எனப்படும். ஆனால் கால்பந்தாட்டமே ஃபவுலா இல்லையா, தப்பாட்டமா இல்லையா என்ற கேள்வி கேட்கலாமா? அப்படிக் கேட்பதே “வகுப்புத் தப்பிதம்”. சரி, இன்னும் எளிமையாக, வாழ்க்கையிலிருந்து ஓர் உதாரணம் தருகிறேன்.

வானம் இருண்டு காணப்பட்ட ஒரு பகல் வேளையில், அன்று புயல் வரப்போகிறது என்று தன் பாட்டி சொன்னதைக் கேட்ட ஒரு நாலைந்து வயதுப் பெண் குழந்தை, மழைச் சாரலையும் பொருட்படுத்தாமல், வீதியைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் வெளியே அமர்ந்து கொண்டிருந்தாளாம். அதைப் பார்த்துவிட்டு, அவளுடைய அம்மம்மா, பாட்டியை அந்தக் குழந்தை அப்படித்தான் அழைப்பாள், ‘உள்ளே வா’ என்று சத்தம் போட்டாளாம். குழந்தையோ, எப்படியும் புயலைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று நினைத்திருந்தாளாம். “புயல் வந்து போய் விட்டது” என்று கேட்டதும் அவளுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டதாம். அந்தச் சின்னக் குழந்தை ‘புயல்’ என்பது முயல் போல ஒரு சிறிய மிருகம் என்று நினைத்து அதைப் பார்க்கக் காத்திருந்ததாம். அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, ஐந்தாறு வயதில் ஷோபனாதான். அவள் இந்தக் கதையைப் பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன். என்ன ஒரு கள்ளம் கபடமற்ற தவறு பார்த்தீர்களா? முயல் போலப் புயல் வரும் என்பது ஒரு வகுப்புத் தப்பிதம்தானே!

இந்த உலகத்தில் ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்து இது நிஜமா என்று கேட்டால், அந்த நோட்டு செல்லுபடியாகும் நோட்டா, இல்லை கள்ள நோட்டா என்று பொருள் படும். அதே போல், ஒரு பூனை வடிவைப் பார்த்து இது நிஜமான பூனையா என்று கேட்டால், அது உயிருள்ள பூனையா, இல்லை பூனை பொம்மையா என்று அர்த்தம். கண்ணுக்கு நீர்த்தடாகம் போல் தெரியும் ஒன்றை நிஜமா என்று கேட்டால், அது கானல் நீரா இல்லை குளமா என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த உலகமே நிஜமா என்ற கேள்வியை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? நிஜமான உலகம் எது என்பதும், அதன் பொய்த்தோற்றம் எது என்பதும், ஆகிய இரண்டும் தெரிந்திருந்தால்தான் அந்தக் கேள்விக்கு அர்த்தம் புரியும். இதுதான் “வகுப்புத் தப்பிதம்” என்பது.

ஏலகிரி மலையைக் காட்டிலும் நீலகிரி மலை உயர்ந்தது என்று சொல்லலாம். சரி, நீலகிரியைக் காட்டிலும் அடக்கம் உயர்ந்ததா என்ற கேள்விக்கு அர்த்தம் உண்டா? அது வகுப்புத் தப்பிதம் இல்லையா? அடக்கத்துக்கு உருவமே கிடையாதே, அதன் உயரத்தை எப்படி அளந்தறிவது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுருக்கம், சுருக்கமாக 1330 பாக்கள் எழுதி வைத்த தாடிக்காரக் கிழவருக்கு என்ன தெரியும்? அவர் ரைலைப் படித்திருக்க வாய்ப்பில்லையே. அதனால்தான் தப்பிதமாகச் சொல்லி வைத்தார்:

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது

அடக்கம் உடையவரின் தோற்றம் திருவள்ளுவரின் மனக்கண்ணுக்குத் தெரிந்தது பற்றியும், அது மலையைக் காட்டிலும் உயரமாக அவருக்குத் தோற்றம் தந்தது பற்றியும் நாம் கில்பர்ட் ரயிலிடம் விவாதிக்கத் தேவையில்லை.

இதையாவது அடக்கமுடையவனின் தோற்றம் என்று கொள்ளலாம். இன்னொன்று சொல்கிறாரே:

காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

அதாவது, உதவி என்பது அகில உலகத்தையும் விட மிகப் பெரிது என்று சொல்கிறாரே! உதவிக்கு உருவம் ஏது? அப்பா, இந்தக் கவிஞர்களின் பார்வையே தனி! அவர்களை வைத்துக் கொண்டு அறிவு சார்ந்த விஷயங்களை ஆராய முடியாது. இதை நன்கறிந்த ப்லேட்டோ (Plato) என்ற க்ரேக்க தத்துவ ஞானி, தான் கனவு கண்ட இலட்சியக் குடியரசில் இருந்து கவிஞர்களை நாடு கடத்திவிட வேண்டும் என்று எழுதி விட்டான்.

பராசக்தி என்பது பிரபஞ்சத்தின் மூல சக்தி; அதன் ஒட்டு மொத்த சக்தியும் அதுவே. எப்படி வித்தே விருட்சத்தின் மூலமோ, வித்துக்குள் விருட்சம் அடக்கமோ அது போல. இந்த பிரபஞ்சத்தின் காரண மூலமான சக்தியே இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்தமான சக்தியாகவும் இருக்கிறது என்பதைப் பகுத்தறிவு ரீதியாக விளக்கிச் சொல்வதில் சிக்கல்தான் ஏற்படும். ஆனால், அதை அனுபவமாக்கப் பராசக்தியே குருநாதன் மூலம் தயாரான போது, அச்சத்தால் அந்த வாய்ப்பை ஒருவன் இழக்க நேரிட்டதைத்தான் மேலே சொன்னேன்.

பிறகு ஷோபனாவிடம் டாக்டர் சொன்னாராம்: “பராசக்தி தரிசனம் எல்லாருக்கும் கிடைக்காது. சுப்புவுக்கு அந்தத் தரிசனத்தைத் தரச்சொல்லி எல்லாரும் பரிந்துரைத்தார்கள். அதனால்தான் அந்த வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். அவன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.”

அந்த ‘எல்லாரும்’ யார், யார்? மஹரிஷிகளா, தெய்வங்களா? முப்பத்து முக்கோடிப் தேவர்களா? யாருக்குத் தெரியும்?

1990-ஆம் ஆண்டு, ஒருநாள், நண்பர்களும் நானும் டாக்டரைச் சூழ்ந்து கொண்டு அமர்ந்திருந்தோம். திடீரென்று டாக்டர் என் மடியில் தலைசாய்த்துப் படுத்துக் கொண்டு, ” பாடுப்பா” என்றார். எப்படிப் பாட முடியும் என்பதையே ஒரு பாட்டாகப் பாடினேன்:

வான்மதியைத் தூங்க வைக்கச் சின்னமலர் பாடுவதா
சூரியனைத் தூங்க வைக்கத் தீபமெழுந் தாடுவதா
நானிசைக்கும் பாட்டினிலே நீயுறங்கப் போவதில்லை
என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

தேன்பொழியத் தேன்பொழிய வண்டுறங்கிப் போவதுண்டா
தென்றலுக்குத் தோள்கொடுத்து மாமலை துயில்வதுண்டா
எ ன்மடியில் நீயுறங்க விண்ணுமண்ணும் சேர்ந்துறங்கும்
மண்டலங்கள் நம்மருகில் செண்டுகளைப் போலிறங்கும்
என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

வானமழை பொழிந்தவுடன் சின்னவிதை கண்விழிக்கும்
சின்னவிதை கண்விழித்தால் ஆலமரம் நிழல்விரிக்கும்
ஆலமரத் தின்நிழலில் ஆவினங்கள் படுத்திருக்கும்
ஆவினங்கள் கண்வளர நீலக்குயில் பண்ணிசைக்கு ம்
என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

புயல் வருகிறதா என்று காத்திருந்து பார்ப்போமே!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.