Category: மறு பகிர்வு

மறு பகிர்வு

  • பிரபஞ்சம் எத்தனை பெரியது?

    பிரபஞ்சம் எத்தனை பெரியது?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 

    பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல்
    விரிகிறது யார் ஊதி ?
    பரிதி மண்டலக் கோள்களை
    கவர்ச்சி விசை
    ஈர்க்கிறது யார் ஓதி ?
    சுருள் சுருளாய்
    ஆக்டபஸ் கரங்களில்
    ஒட்டிக் கொண்ட
    ஒளிமயத் தீவுகள் நகரும்
    கால வெளியினிலே !
    ஓயாத
    பாய்மரப் படகுகளின்
    உந்து சக்தியை
    அலைகள் எதிர்க்க மாட்டா !
    விலக்கு விசைப் பயணத்தில்
    ஒளிமய மந்தைகள்
    உலவும் குமிழி !
    கலியுகத்தில் மனிதன் படைத்த
    அகில வலை யுகத்தில்
    திரும்பவும்
    பொரிக்கோள மாகும்
    பிரபஞ்சம் !

    “பிரபஞ்சத்தின் முழுத் தோற்றம் அது கொண்டுள்ள அண்டப் பொருட்களின் கூட்டுத் தொகையை விடப் பெரியது !”

    *******

    பிரபஞ்ச மெய்ப்பாடுகளைத் தேடிச் செல்லும் நமது விஞ்ஞான விதிகள் எல்லாம் குழந்தைதனமாய் முதிர்ச்சி பெறாத நிலையில் உள்ளன!  ஆயினும் அவைதான் நமது ஒப்பற்ற களஞ்சியமாக உதவிடக் கைவசம் இருக்கின்றன !

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    கிறித்துவத் தேவாலயம் விஞ்ஞானிகளைச் சமயப் பகைவர்கள் என்ற தரத்தில் எடை போட்டிருக்கிறது! ஆனால் பிரபஞ்ச ஒழுங்கமைப்பை உறுதியாக நம்பும் அவர்கள்தான் உண்மையான மதச்சார்பு மனிதர்கள் !

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    இதுவரை வானியல் விஞ்ஞானிகள் காணாத பூர்வீக ஒளிமய மந்தையை (Galaxy), விண்வெளியில் ஊர்ந்து செல்லும் ஹப்பிள் தொலைநோக்கி நெடுந்தூரத்தில் படமெடுத்து அனுப்பியுள்ளது.

    டாக்டர் டேவிட் ஒயிட்ஹௌஸ் பி.பி.ஸி விஞ்ஞான பதிப்பாசிரியர் (ஜனவரி 16, 2004)

    விண்டுரைக்க அறிய அரியதாய்
    விரிந்த வானவெளி யென நின்றனை !
    அண்ட கோடிகள் வானில் அமைத்தனை !
    அவற்றில் எண்ணற்ற வேகம் சமத்தனை !
    மண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவ தெத்தனை
    அத்தனை யோசனை அவற்றிடை வைத்தனை !

    மகாகவி பாரதியார்

    ஹப்பிள் தொலைநோக்கி கண்ட பூர்வீக அகிலக் காலாக்ஸி

    2003 செப்டம்பர் முதல் நான்கு மாதங்கள் ஹப்பிள் தொலைநோக்கி தொடர்ந்து கூர்மையாய்ப் பார்த்து 2004 ஜனவரி 16 ஆம் தேதி பிரபஞ்ச விளிம்பிலே ஓரிடத்தில் படம் பிடித்து அனுப்பிய காலாக்ஸியின் பிம்பம் மகத்தானது!  அது பிரபஞ்சத் தேடல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகிப் பிரபஞ்சத்தின் பரிமாணத்தை ஓரளவு துல்லியமாய்க் கணக்கிட ஓரரிய வாய்ப்பளித்தது! 2003 செப்டம்பர் முதலே ஹப்பிள் விண்ணோக்கி விண்வெளியில் அக்குறியை நோக்கிக் கண்வைக்க ஏற்பாடு செய்தவர் வானியல் விஞ்ஞான ஆளுநர், ஸ்டீவன் பெக்வித் [Steven Beckwith Director Space Science Institute].  அவரின் குறிக்கோள் பிரபஞ்சத்தில் நெடுந்தூரத் துளை ஒன்றையிட்டு மிக மங்கலான பூர்வீகக் காலாக்ஸி ஒன்றை ஆராய வேண்டும் என்பதே! அப்பணியைத் துல்லியமாகச் செய்ய “ஹப்பிள் நெடுந்தூர வெளிநோக்கி” [Hubble Deep Field (HDF)] கருவி பயன்படுத்தப்பட்டது.

    ஹப்பிள் படமெடுத்த அந்த பூர்வ காலாக்ஸியின் ஒளிப் பண்பாடுகள், வாயுப் பண்டங்கள் ஆராயப் பட்டதின் மூலன் அதன் வயதைக் கணிக்கிட முடிந்தது.  அந்த விண்வெளி இடத்தின் ஒளியாண்டு தூரம் [Distance in Light Years (ஒளி ஓராண்டில் செல்லும் தூரம்)] கணிப்பாகிப் பிரபஞ்சத்தின் அந்த விளிம்பின் தோற்ற காலம் கண்டுபிடிக்கப்பட்டது !

    பிரபஞ்சம் எத்தனை பெரிய வடிவம் உடையது ?

    யுக யுகமாகக் கேட்கப்படும் ஒரு கேள்வி “பிரபஞ்சத்தின் பரிமாணம் என்ன?” என்பதே. அதன் பரிமாணத்தை அளப்பதற்கு எந்த அளவுகோலைப் பயன்படுத்துவது என்று இரண்டு வானியல் விஞ்ஞான வல்லுநர்கள் தர்க்கம் புரிந்தனர் !  ஒருவரின் பெயர் ஹார்லோ ஷேப்லி [Harlow Shapley]. இரண்டாமவரின் பெயர் ஹெர்பர் கெர்டிஸ் [Herber Curtis].  நடந்த இடம்: சுமித்ஸோனியன் கண்காட்சிக் கூடம், இயற்கை வரலாற்றுப் பகுதி அரங்கம். வாஷிங்டன். டி.சி. [Natural History Museum Smithsonian Institution Washington. D.C.]  1920 ஆண்டு ஏப்ரல் தர்க்கம் நிகழ்ந்த காலம்.  அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்க வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் (1889-1953) காலாக்ஸிகளின் இயல்பான பண்பாடுகளை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து எழுதினார்.

    ஹெர்பர் கர்டிஸ் கூறியது:  அகிலமானது (The Cosmos) பல்வேறு தனித்தனி பிரபஞ்சத் தீவுகளைக் (Islands of Universes) கொண்டது.  அதாவது சுருள் நிபுளாக்கள் [Spiral Nubulae or Galaxy] என்பவை நாம் வாழும் பால்மய வீதி (Milky Way) காலாக்ஸிக்கும் வெகு தூரத்துக்கு அப்பால் இருக்கிறது என்னும் அனுமானத்தில் தர்க்கம் செய்தார்.  ஹார்லோ ஷேப்லி சொல்லியது:  “சுருள் நிபுளாக்கள் என்பவை பால்மய வீதியின் வாயு முகில்களே.”  அத்துடன் பரிதியின் இடத்தைப் பிரபஞ்சத்தை முழுமையாகக் கருதிப் பால்மய வீதியின் விளிம்பில் கொண்டு வைத்தார்.  ஆனால் கர்டிஸ் பரிதியை காலாக்ஸியின் மத்தியில் வைத்தார். கர்டிஸ் பிரபஞ்சத்தின் பேரளவைப் பற்றிக் கூறியது உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது.  ஆனால் பரிதியானது பால்மய வீதியின் மத்தியில் உள்ளது என்பது தவறென அறியப்பட்டது.  ஷேப்லி கூறியபடி பால்மய வீதியின் விளிம்பில் பரிதி இருப்பது மெய்யென நம்பப் படுகிறது.  அதே சமயத்தில் ஷேப்லி சொன்ன சிறிய பிரபஞ்சம் என்பது தவறாக ஒதுக்கப்பட்டது.

    எழுபத்தியைந்து ஆண்டுகள் கடந்து மீண்டும் தர்க்கம்

    பல்வேறு காலாக்ஸிகளைக் கண்டுபிடித்த பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டில் பிரபஞ்சத்தின் பரிமாணத்தின் மீது தர்க்கம் எழுந்தது.  பிரபஞ்சத்தின் வயதுக்கும் அதன் பரிமாணத்துக்கும் ஓர் உடன்பாடு உள்ளது.  இரண்டும் ஹப்பிள் நிலையிலக்கத்தின் (Hubble Constant) மூலம் கணிக்கப்பட்டவை.  விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும்.  அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும்.  அப்போது தர்க்கத்தில் கலந்து கொண்டவர் சிட்னி வான் டன் பெர்க் (Sidney Van den Bergh) & கஸ்டாவ் தம்மன் (Gustav Tammann).

    வானியல் நிபுணர் சிட்னி தன் தொலைநோக்கிக் கண்டுபிடிப்புகள் மூலம் பெரிய ஹப்பிள் நிலையிலக்க மதிப்பைக் (Hubble Constant: 80 km/sec/Mpc) (படத்தில் Mpc பற்றி விளக்கம் உள்ளது) கூறினார்.  அதாவது ஓர் இளைய வயது, சிறிய வடிவுப் பிரபஞ்சத்தை அவர் சான்றுகளுடன் விளக்கினார்.  ஆனால் கஸ்டாவ் தன் கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு சிறிய ஹப்பிள் நிலையிலக்கத்தை (சுமார்: 50 km/sec/Mpc) கணித்தார்.  அதாவது அவரது பிரபஞ்சம் பூர்வீகமானது! பிரமாண்டமானது! இவர்கள் இருவரது கணிப்பு எண்ணிக்கைகள் போதாத சான்றுகளால் உருவாக்கப் பட்டதால், அவரது கொள்கைகளும் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை!

    பிரபஞ்சத்தின் முடிவான பரிமாணத் தீர்மானங்கள்

    கடந்த நூற்றாண்டுக் கண்ணோக்க முடிவுகளிலிருந்து, பிரபஞ்சத்தின் பரிமாண எல்லைகளை ஓரளவு வரையறுக்க முடியும்.  உலகிலே இருக்கும் ஆற்றல் மிக்க தொலைநோக்கி களின் பதிவுகளை ஒழுங்குபடுத்தி ஆராய்ந்ததில், வானியல் வல்லுநர்கள் 10-12 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் காலாக்ஸிகளைப் பார்க்க முடிந்தது.  (ஓர் ஒளியாண்டு = 6 டிரில்லியன் மைல் அல்லது 10 டிரில்லியன் கி.மீ.)  ஆதலால் மனிதக் கண்ணோக்கு வானத்தில் (Human Vision Horizon) 24 (12+12) மில்லியன் ஒளியாண்டு விட்ட முள்ள பிரபஞ்ச வெளியை நாம் காண முடிகிறது!

    ஆனால் அந்தப் பரிமாண பிரபஞ்சம் பூதளத்தில் நிற்கும் மனிதக் கண்களுக்கு மட்டுமே ஏற்ற முறையில் இருக்க முடியும்.  ஆனால் விண்வெளியில் நகரும் காலாக்ஸியில் ஒருவர் நின்று விண்வெளி விளிம்பைப் பார்த்தால் எத்தனை அளவுப் பேரளவு பிரபஞ்சம் தெரியும் என்பது அறியப் படவேண்டும்.  நிச்சயமாக நமது பூதள அரங்கிலிருந்து பார்க்கும் பிரபஞ்சத்தை விட, காலாக்ஸியில் நின்று பார்ப்பவருக்குப் பிரபஞ்சம் பேரளவு பெரிதாகத் தென்படும்.

    அத்தகைய “வீக்க நியதியை” (Inflation Hypothesis) எடுத்துச் சொன்ன எம்.ஐ.டி. நிபுணர் அலன் கத் (M.I.T.’s Alan Guth) தனது கருத்துக்கு விளக்கம் தந்தார்.  மிக இளமையான பிரபஞ்சம் தீவிரமாய் உப்பிப் பெருகியிருக்க வேண்டும் என்றார்.  அதாவது ஒப்புமையாகக் கூறினால் அணு வடிவிலிருந்த பிரபஞ்சம் ஒரு நொடியில் பலமடங்கு பெருத்துப் பந்தளவுக்கு பலூனாய் உப்பியது !  அத்தகைய அகில வீக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தால் நமது தற்கால உளவுச் சாதனங்களிலிருந்து ஒரு பேரளவுள்ள பிரபஞ்சத்தை எதிர்பார்க்கலாம்!

    பிரபஞ்சத்தின் குறைந்தளவுப் பரிமாணக் கணிப்பு என்ன?

    அலன் கத்தின் வீக்க நியதியில் ஒரு பெரும் ஐயம் எழுகிறது !  அவ்விதம் கண்ணுக்குத் தெரியாமல் அகில வானுக்கு அப்பால், காலவெளித் தொடர்வாக (Space-Time Continuum) எழுந்த வீக்கம் ஒன்றா ? இரண்டா ? மூன்றா ? முன்னூறா ? மூவாயிராமா? அல்லது முடிவில்லா எண்ணிக்கையா ? அந்த வினாவுக்கு விடை இல்லாததால் அந்தக் கொள்கையும் தர்க்கத்துக்குள் வீழ்ந்தது.  அந்த நியதி மெய்யானால் நமக்கு தெரியாமல் இருந்து, நம்மால் நிரூபிக்க முடியாத இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்திட லாம்! ஆனால் தற்போதுள்ள தொலைநோக்குச் சாதனங்களிலிருந்து விஞ்ஞானிகள் தீர்மானமாக அறிவது நாமிருக்கும் பிரபஞ்சத்தின் குறுக்களவு குறைந்தது 150 பில்லியன் டிரில்லியன் மைல்கள்! அதாவது அதன் விட்டம் 25 பில்லியன் ஒளியாண்டுக்கு (25 Billion Light Years Diameter) மிகையாக இருக்கலாம் என்பதே !

    *********************        

    தகவல்:

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)
    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)
    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.
    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)
    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)
    6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    Share
  • முடிவை நோக்கி! (நிஜ விஞ்ஞானப் புனைகதை)

    முடிவை நோக்கி! (நிஜ விஞ்ஞானப் புனைகதை)

    சி. ஜெயபாரதன், கனடா

    டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா? பேசியவள் லாரா ஃபெர்மி தான்! பேச்சில் நடுக்கமும் தடுமாற்றமும் கலக்கமும் எதிரொலித்தன!

    “ஆல்பர்ட்! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெருமூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

    “அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

    இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தறுவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன்முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் பாதிக்கும்! பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும்! விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார்? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார்? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள்! அவர்களது விஞ்ஞான அறிவு, மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத் தான் பயன்பட வேண்டுமா?

    அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·ஃபெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும்?

    ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவமனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

    யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரியவில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப்பட்டிருந்தன. அந்த பயங்கரக் பாலைவனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின!

    “பாவம் ஹாரி! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும்? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப்பட்டாள் லாரா.

    “உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

    “வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார். ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

    “இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது! ஹிரோஷிமாவும் நாகசாகியும் நாசமாகியிருக்காது! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

    ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச் சக்திக்கு விதை போட்டவனே நான்தான்! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்!  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று!” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன். லாரா இருவரையும் பார்த்து திகைத்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

    “என்ன, ஆல்பர்ட்! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர்? நம்ப முடியவில்லையே! விபரீதமான விஷப் பரீட்சை! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது! மறக்கவும் முடியாது!” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

    கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகட்டைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர். ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

    “ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

    “மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ்! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

    “இல்லை டாக்டர்! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை! வேறு யாரும் அருகில் இல்லை!” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

    “அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது? எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது? இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா?” பதற்றத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

    “புளுடோனியம் என்பது என் நினைவு!” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

    “கெட்ட வேளைதான்! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம். அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும்!” என்றார் வில்ஸன்.

    “ஹாரி பிழைக்க மாட்டாரா?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

    டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது!” என்றார்.

    “இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

    “பயங்கர அதிர்ச்சியடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி. ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

    பெருமூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயறைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது!

    எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி!  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக?

    “எப்படி இருக்கிறாய் ஹாரி?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்! இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும்?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

    விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள்? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

    “ஆல்பர்ட்! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன!” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடானு கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும்! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா!”

    ‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

    வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை! இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடானு கோடி விண்மீன்கள் கண்சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன! சக்தி இழந்து போய் தடுமாற்றத்துடன் மூவரும் வெளியே மருத்துவமனை நாற்காலில் அமர்ந்தனர்.

    “எப்படி நேர்ந்தது இந்தக் கோர விபத்து?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

    ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா? எப்படிச் சொல்வது?

    “பயப்படாதீர்கள் ஜேம்ஸ்! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான்! என் கணவர் சொல்லாத ரகசியங்களா? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

    அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா. அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும்! இன்று ஹாரிக்கு! நாளை நமக்கு!  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரி தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளன, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் தொடங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகி, கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கியிருக்கின்றன!”

    சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான்! அவன் தெரியாமல் செய்தது!  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம்! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி,  புளுடோனிய அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது! அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது! கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின!”

    “நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி, நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி!  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது ! ஆனால் என்ன பயன்? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது!  பல்லாயிரம் ராஞ்சன் வீரியமுடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக்கொண்டுவிட்டான்.  அது அவனுக்குத் தெரியும்! அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும்!”

    “நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்திவிட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகியிருக்கும்!”

    “அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிகைகள் அனைத்திலும் உடனே வெளியாகும்!”

    “லாரா!  அமெரிக்கா தொடக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

    “அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படியாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும். வாஷிங்டன் ராணுவ மருத்துவக் கூடத்திற்கு போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

    நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே! ஹாரியைக் காப்பாற்று! எங்கள் ஹாரியைக் காப்பாற்று!” என்று மனத்தில் பிரார்த்தனை செய்துகொண்டே நடந்தாள், லாரா.

    கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

    மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புகளையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிச்சை சாதனங்களை ஏற்றிக்கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொண்டார்.

    நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

    “யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

    ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான்! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள்!! குஷ்ட ரோகி போல் காணப்பட்டான் ஹாரி!

    “தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடியிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

    ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா! பார்! இப்போது நானொரு புத்த பிச்சு! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவற்றை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன்!  உயிர்களின் துணைவன்! அணு ஆயுத எதிரி! அணு ஆயுதப் பலிகடா!

    அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணுகுண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி!  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

    ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை! அது நம்மிடம் இல்லை!  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்டதல்லவா ஹைடிரஜன் குண்டு!” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர்! அவர்தான் அணுகுண்டின் பிதா! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி!

    இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணுகுண்டுகளா?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம்? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா?” என்று கடிந்தார், ஜேம்ஸ்!

    ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்தப் பயங்கர அமைதியைக் கலைத்தாற்போல் ‘ஓ’வென ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

    ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டுக் கத்தினான்!  டாக்டர் வில்ஸனும் நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக்கொண்டார்கள்.

    “டாம் ஓப்பி! லிட்டில்பாய் ஓப்பி! டாம் குருவ்ஸ்! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட்! கெட் அவுட்!” என்று ஆர்ப்பாட்டத்துடன் கத்தினான், ஹாரி !

    ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

    “என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

    “லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

    மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ! குடைக் காளான்! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு! அதில் நான் மிதக்கிறேன்! அதோ! அணுக் கோளம்! அனல் கோளம்! கதிர்க் கோளம்! கனல் கோளம்! ஒளிக் கோளம்! வெடிக் கோளம்! விஷக் கோளம்! அழிவுக் கோளம்! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள்! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

    பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்கினான் ஹாரி.

    ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோடு இருபத்து நான்காம் நாள்! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுதுகொண்டிருந்தன!

    ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே!  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதியும் !”

    கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்துகொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன!

    உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்துப் பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம்! அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள்! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம்!” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

    ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார். ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

    ***********************

    [ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மையான சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைகதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைவு]

    harry-daghlians-nuclear-experiment
    (1981 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

    தகவல்:

    http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

    Share
  • நிலவின் துணைச் சுற்று இல்லாமல் பூமியிலே நீடிக்குமா உயிரினம்?

    நிலவின் துணைச் சுற்று இல்லாமல் பூமியிலே நீடிக்குமா உயிரினம்?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பொங்கிவரும் பெருநிலவு
    இங்கில்லை என்றால்
    பூமி பரிதிக்கு அப்பால்
    தங்கி விடும் !
    தட்ப, வெப்பம் மாறிவிடும் !
    உயிரின மெல்லாம்
    மங்கி விடும் !
    நிலவில்லை யென்றால்
    கடல் வீக்கம் ஏது ?
    முடங்கிய
    கடல் வெள்ளத்தைக்
    குலுக்கிட அலை
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    காற்றின் இறக்கை
    முறிந்து விடும் !
    கடல் நீர் சுற்றியக்கம்
    தடைப்படும் !
    கடல் நீட்சியும் மீட்சியும்
    நடைபெறா !
    கடல் வெப்பம் சீர்ப்படாது
    முடங்கும் !
    காலநிலை மாறுபடும் !
    சூழ்வெளி வேறுபடும் !
    பயிரினம் பரிதவிக்கும் !
    உயிரினம் பாதிக்கப் படும் !
    பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
    நாள் மணிக் கணக்கு
    நீளமாகும் !
    கருநிலவு பூமியை விட்டு
    வருடந் தோறும்
    அங்குலக் கணக்கில்
    அப்பால் நகரும் !

    “காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாராத செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !

    பிரெஞ்ச் பழமொழி

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    fig-1-relative-sizes-of-earth-moon

    பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் !  திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது !  கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும்  அறியமாட்டார் !  படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ?  புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது !  சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது.  சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது !  ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது.  700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.

    fig-2-life-without-the-moon2
    4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது.  ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது.  நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது.  பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது.  பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன.  கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது !  பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது !  தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.).  பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !

    fig-5-sea-tides-in-12-hours1
    பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !

    பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது.  மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது.  பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது !  பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் .  எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் !  அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது.  அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது !  அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது !  அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது !  4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் !  அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது !  இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது.  அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !

    fig-1a-earth-tides
    படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது.  பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது !  இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !  பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை !  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லியமாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே !  2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது.  அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது.  1970 ஆண்டுகளில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !

    fig-1b-tidal-movements-on-earth

    நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?

    நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் !  கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை.  அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை.  சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும்.  ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது !  அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !

    பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகையாக்குகின்றன.  வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது !  நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம்.  பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.

    fig-1c-spring-tides

    மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது.  அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது.  நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது

    துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்

    நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும்.  அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும்.  அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும்.  நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே.  அவற்றில் முக்கியமானவை :

    fig-1f-the-structure-of-earth

    1.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது !  அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது.  அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !

    2.  அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது !  கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது !  அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.

    fig-1e-earths-lithosphere1
    3.  கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது.  அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.

    4.  நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது !  அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.

    5.  மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது.  அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது.  அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.

    fig-4-spring-tide-neap-tide

    6.  உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் !  நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் !  அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் !  பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !

    சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    fig-6-solar-eclipse-on-the-moon

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html (நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/ )
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 5

    இதயம் திறந்த அனுபவங்கள் – 5

    வெ. சுப்ரமணியன்

    நோயாளி ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருக்கலாம். நோயாளிக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்து அவரது சிகிச்சைக்காக முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் அனுமதித்து வழங்கப்பட்டிருப்பின் மீதமுள்ள தொகைக்கான கேட்பு (claim) மருத்துவமனையால் அனுப்பி வைக்கப்படும். காப்பீட்டு நிறுவனம் முன்பணத்தைக் கழித்துக் கொண்டு அனுமதிக்கக் கூடிய மீதமுள்ள தொகையை மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி விடும்.  காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகைக்கும் அதிகமாக நோயாளி  ஏதாவது தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதைச் செலுத்தியதும் மருத்துவமனையை விட்டு வீட்டிற்குச் செல்ல அனுமதிப்பார்கள். ஆரோக்கியக் காப்பீடு இல்லாத நோயாளி அவர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டபோது செலுத்திய முன்பணம் போக மீதமுள்ள தொகையைச் செலுத்துதல் வேண்டும்.

    நோயாளி வீட்டிற்குச் செல்லும் முன் அவரிடம் அவருக்குச் செய்யப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளின் முடிவுகளும் மற்றும் சுருக்கமான வெளியேற்றக் குறிப்பு (Discharge summary). ஆகியவை அடங்கிய கோப்பு (file) ஒப்படைக்கப்படும்.

    இக் கோப்பு மிக முக்கியமானது. இதில்தான் நோயாளியின் மருத்துவ வரலாறு, செய்யப்பட்ட அறுவைச்சிகிச்சை குறித்த மருத்துவக் குறிப்புகள்,  நோயாளிக்கு அடுத்த மருத்துவ ஆலோசனை நாள் (next consultation date) வரை கொடுக்கப்பட வேண்டிய மருந்துகளின் விபரம் அடுத்த முறை ஆலோசனைக்கு வருமுன் நோயாளி செய்து கொண்டு வர வேண்டிய பரிசோதனைகள் ஆகிய அனைத்தும் குறிக்கப்பட்டு இருக்கும். இந்தக் கோப்பு வருங்காலங்களில் மருத்துவரை ஆலோசனைக்காகநோயாளி சந்திக்கச் செல்லும் போதெல்லாம் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

    மேலும் அதில் அடுத்த மருத்துவ ஆலோசனைக்கு முன் வீட்டில் இருக்கும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற கீழ்க்காணும் பட்டியலும் (list) இருக்கும்.

    அ) 101. 5° F  அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் (fever of 101. 5° F  and above)

    ஆ) புதியதாக வலி ஏற்பட்டாலோ அல்லது பழைய வலி அதிகரித்திருப்பதாக உணரப்பட்டால் ( newly developed pain or worsening of old pain)

    இ) கீறல் தளங்கள்  சிவத்தல், வீக்கம் அல்லது அவற்றிலிருந்து இரத்தப்போக்கு அல்லது திரவம் வடிதல் (reddening and swelling of incision area or bleeding or liquid dicharge)

    ஈ) உணர்வு நிலையில் மாற்றம் (altered level of consciousness)

    உ) சுவாசிப்பதில் சிக்கல் (difficulty in breathing)

    ஊ) விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (fast or irregular heartbeat)

    எ) கால்களில் வீக்கம் ( swelling of legs)

    ஏ) கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை (numbness in hands and feet)

    ஒ) தொடர்ந்து குமட்டல் அல்லது வாந்தி (nausea or vomitting)

    ஓ) இவை தவிர வேறு குறிப்பிடத்தக்க கவலையளிக்கும் அறிகுறிகள் ( Any other symptoms of concern)

    வீட்டிற்கு வந்த பின் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த மூன்று நாட்களுக்குப் பின் மார்பு எக்ஸ்ரே படமும் (Chest X – ray image), முழு இரத்த அணுக்கள் சோதனையும் (Complete Blood Count – CBC) மேற்கொண்டு அதன் முடவுகளுடன்  இதய மருத்துவரையும் அறுவைச் சிகிச்சை நிபுணரையும் சந்திக்கும்படி என்னுடைய வெளியேற்றக் குறிப்பில் (Discharge Summary) தரப்பட்டிருந்தது.

    அடுத்து இரத்தச் சர்க்கரை அளவு சோதனைகளான உணவு உட்கொள்ளாநிலையில் (fasting blood sugar), உணவு உட்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின் (Post Prandial Blood sugar) ஆகியவற்றின் முடிவுகளுடன் நீரிழிவு நோய் நிபுணரிடம் ஆலோசனை பெறும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்பின் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மருத்துவ ஆலோசனை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    முதல் வாரம் ஆறு பத்து நிமிடங்களாகப் பிரித்துக் கொண்டும், இரண்டாம் வாரத்தில் நான்கு பதினைந்து நிமிடங்களாகவும், மூன்றாம் வாரத்தில் மூன்று இருபது நிமிடங்களாகவும், நான்காவது வாரத்தில் இரண்டு முப்பது நிமிடங்களாகவும் பிரித்துக் கொண்டு நடக்கலாம். ஐந்தாவது வாரத்திலிருந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் நடக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அதிகம் உடல் சோர்வு ஏற்படும்படி அதிக நேரம் தொடர்ந்து நடப்பதோ அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் இயங்காமல் இருப்பதோ கூடாது.

    அடிக்கடி இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை அளவுகளைப் பரிசோதித்து அறிந்து கொண்டு அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது இருமுறையாவது இயன்முறை மருத்துவர் சொல்லிக் கொடுத்த உடற்பயிற்சிகளையோ (physical exercises) அல்லது அரைமணி நேரம் யோகாவோ (yoga) கண்டிப்பாக செய்தல் வேண்டும்.

    அடுத்ததாக மருத்துவமனையின் சார்பாக கொடுக்கப்படும் உணவுத் திட்ட அட்டவணையில் (Diet chart)  உட்கொள்ள வேண்டிய காய்கறிகள், பழங்கள், தானியங்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் அன்றாடம் உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும்.

    அறுவை சிகிச்சையின் போது தையலிடப்பட்ட பகுதிகளைச் சுத்தமாகவும், உலர்ந்ததும் இருக்குமாறு வைத்திருப்பது முக்கியம்.

    மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை பரிந்துரைத்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவர் சொல்லும் வரையில் எந்த வகையான வாகனங்களையும் இயக்கக் கூடாது.

    கொரோனா காரணமாக இதய நோயாளிகள் இன்றைய கால கட்டத்தில் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அப்படித் தவிர்க்க இயலாமல் வெளியே செல்ல வேண்டியிருப்பின் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுதல் மற்றும் அதிகக் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கைகளைக் கண்டிப்பாகக் மேற்கொள்ள வேண்டும்.

    அறுவைச் சிகிச்சைக்குப் பின் மேற் சொன்ன ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தால் இதயப் பிரச்சினைகள் எதுவும் அணுக அதிக வாய்ப்பிருக்காது.

    முற்றும்.

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 4

    இதயம் திறந்த அனுபவங்கள் – 4

    வெ. சுப்ரமணியன்

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால்  நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit – PACU) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம்.

    கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே அமைந்திருக்கும் .

    Picture courtesy: https://www.venturemedical.com/blog/choosing-patient-monitor/

    இந்தக் கண்காணிப்புக் கருவியில் இதய மின் வரைவி (ECG) இதயத் துடிப்பு வீதம் (Heart rate), இரத்த அழுத்தம் (NIBP), மற்றும் தெவிட்டிய ஆக்ஸிஜன் நிலை (SpO2) போன்றவை கண்காணிக்கப் படுகின்றன.

    சில மருத்துவமனைகளில், இது பல நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் இடமாகவோ (Dormitory) அல்லது ஒரு தனி நபர் பயன்படுத்தும் அறையாகவோ (Single private room) இருக்கலாம்.

    நோயாளி மீட்பு அறையில்  முக்கால் மணி நேரம் முதல் முதல் இரண்டு மணி நேரம் சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்களால் தீவிரக் கண்காணிப்புக்கு உடபடுத்தப்படுவார். நோயாளிக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையைப் பொறுத்தும் மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து எவ்வளவு விரைவாக மீண்டு விழித்தெழுகிறார் என்பதைப் பொருத்தும் நோயாளி இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான காலத்திற்குக் கூட மீட்பு அறையில் இருக்க வேண்டியிருக்கலாம்.

    செவிலியர்கள் நோயாளியின் முக்கிய அறிகுறிகள் அனைத்தையும் கண்காணித்து அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள்.  மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவானது (Post Anesthesia Care Unit – PACU) நோயாளியின் முக்கிய அறிகுறிகளை உன்னிப்பாகக் கவனித்துத் தேவையான திரவங்களை உட் செலுத்தலும், வலி ​​மேலாண்மையும் (pain management) தொடங்கப்படும் ஒரு முக்கியமான பராமரிப்பு அலகு (care unit) ஆகும். நோயாளி மயக்கநிலை தெளிந்து எழுந்ததும் அவருக்குச் சில உடல் ரீதியான சங்கடங்கள் இருக்கலாம்.

    அடுத்து தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ)க்கு மாற்றப்படும் நோயாளி அங்கு உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார். நோயாளியுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் தொடர்ந்து  எலக்ட்ரோ கார்டியோகிராம் (E.C.G) தடமறிதல், இரத்த அழுத்தம், பிற அழுத்த அளவீடுகள், சுவாச வீதம் மற்றும் உங்கள் ஆக்ஸிஜன் அளவைக் காண்பிக்கும்.

    Picture courtesy: https://healthmanagement.org/products/view/resp-multi-parameter-monitor-nibp-temp-ibp-17-tft-vizor-17-heyer-medical

    இதயத் தமனி புறவழி இரத்தக்குழாய் ஒட்டு அறுவைசிகிச்சைக்குக்குப் பின்னர் (CABG) குறைந்தபட்சம் ஒருவாரம் மருத்துவமனையில் தங்க வேண்டும்.

    சுவாச இயந்திரம் அதாவது  வென்டிலேட்டர் (Ventilator) மூலம் சுவாசிக்க உதவுவதற்கு உங்கள் தொண்டையில் ஒரு குழாய் வைக்கப்பட்டு இருக்கும். நோயாளி போதிய அளவுக்கு நிலையாகத்  தானாகவே சுவாசிக்கும் வரையில் சுவாச இயந்திரம் இணைக்கப்பட்டு செயல்பாட்டிலேயே இருக்கும்.

    Picture courtesy: https://m.indiamart.com/proddetail/icu-ventilator-siemens-300-16415709891.html

    நான் சுய நினைவை மீண்டும் அடையப் பெற்ற பின்னர் எழுதப்பட்டவை என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலானவை.

    மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டுத் தொடர்ந்து நோயாளி சுயமாக சுவாசிக்கத் தொடங்கும் போது,  அதிக அளவில் சுயமாகச் சுவாசிப்பதை  அனுமதிக்கும் வகையில் மருத்துவர் சுவாச இயந்திரத்தின் செயல்பாட்டை மாற்றியமைக்கக்கூடும்.

    நோயாளி போதுமான அளவு விழித்திருந்து சுயமாகவும் முழுமையாகவும் சுவாசிக்க தொடங்கி அவரால் இருமவும் (cough) முடிந்தால், மருத்துவர் சுவாசக் குழாயை அகற்றி விடுவார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொதுவாக அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நாளிலோ அல்லது மறுநாள் அதிகாலையிலோ சுவாசக் குழாய் (Breathing tube) அகற்றப்படும். அவ்வாறு அகற்றும் போதே மருத்துவர்  வயிற்றுக் குழாயையும் அகற்றி விடுவார்.

    சுவாசக் குழாயை வெளியே எடுத்த பிறகு நோயாளியின் நுரையீரலில் சளி சேர்ந்து நிமோனியா (Pneumonia) ஏற்படாமல் தவிர்ப்பதற்கு ஆழ்ந்த மூச்செடுத்து இருமி சளியை வாய் வழியே வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியம். இதன் பொருட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நோயாளி ஆழ்ந்த மூச்சு எடுத்து இரும வேண்டும். இதனைச் செவிலியர் உதவியுடன் செய்தாலுமே மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள புண்கள் காரணமாக இது மிகச் சிரமமானதாக இருக்கும். ஆனால் மார்போடு ஒரு தலையணையை இறுக்கமாக அணைத்துக்கொண்டு இருமினால், இருமும் போது ஏற்படும் வலியையும் சிரமத்தையும் தணிக்கலாம். எனக்கு மருத்துவமனையில் மார்புடன் இறுக்கமாகப் பிணைத்துக் கொள்ளும் (chest brace) வெல்க்ரோ (velcro) அமைப்புடன் கூடிய சிறியதொரு சதுர வடிவிலான மார்பெலும்புத் திண்டு (sternum pad)  தரப்பட்டது.

    இதய அறுவைச்சிகிச்சைக் கீறல் காயங்கள் (CABG incision wounds) பல நாட்களுக்கு மென்மையாகவோ (tender) அல்லது புண்பட்டோ (sore) இருக்கலாம்.  இதனால் ஏற்படும் வலிக்கு மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணியை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரின் (Asprin) அல்லது வேறு சில வலிநிவாரணிகள் இரத்தப்போக்கு ஏற்படும் (bleeding) வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

    மருத்துவர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு உதவவும், இரத்தப்போக்கு தொடர்பான எந்தவொரு சிக்கலையும் கட்டுப்படுத்தவும்  IV குழாய் (IV line) மூலம் மருந்துகளை வழங்கலாம். நோயாளியின் உடல்நிலை சீராகும்போது, படிப்படியாக மருந்துகளின் அளவைக் குறைந்துப் பின்னர்  நிறுத்துவார். மருத்துவர் சுவாச மற்றும் வயிற்றுக் குழாய்களை அகற்றிய பின்னர் நோயாளி நிலையாக (stable) இருந்தால், அவர் திரவ உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கலாம். நோயாளியால் திட உணவுகளை உண்ண இயலுமானால் படிப்படியாகத்  திட உணவுகளை அதிகரிக்கலாம்.

    நோயாளி அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருப்பதாக மருத்துவர் தீர்மானிக்கும்போது, ​​ தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (ICU) அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நர்சிங் பிரிவுக்கு (Postoperative Nursing Care Unit – PNCU) மாற்றப்படுவார். நோயாளியின் மீட்பு (Recovery) அங்கு தொடரப்படும். காலை மாலை இரு வேளைகளிலும் படுக்கையில் இருந்து எழ வைத்துக் குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் நாற்காலியில் அமர வைக்கப்படுவார்.  ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பத்து முறை என்ற அளவில் மூன்று பந்து மூச்சுப் பயிற்சி ( tri ball breathing exercise) செய்வது நல்லது. ஆனால் உணவு எடுத்துக் கொண்ட இரண்டு நேரம் பயிற்சி செய்வது கூடாது. படிப்படியாக நோயாளியின்  செயல்பாடுகள் அதிகரிக்கப்படலாம். இதற்கிடையில் சிறுநீர் வடிகுழாய் (urine catheter) நீக்கப்படும். அறுவைச் சிகிச்சையின் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கசிவு நின்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் மார்பில் வைக்கப்பட்ட குழாயையும் மருத்துவர் எடுத்து விடுவார். நோயாளி திடமான உணவுகளை  எடுத்துக் கொள்ள முடிந்தால் அவற்றை உண்ணலாம். இந்தப்பிரிவில் இரண்டு  தினங்கள் இருந்த பின்னர் நோயாளி நிலையாக (stable) இருக்கும் என்று பட்சத்தில் மூன்றாம் நாளன்று இடது புறங்கையில் இரத்த நாளத்துடன் இணைக்கப்பட்ட ஐ.வி குழாய் தவிர மற்றவை எல்லாம் எடுக்கப்பட்டு விடும். நோயாளிக்கு மலமிளக்கி(laxative) தரப்பட்டு மலம் வெளியேற வழி செய்யப்படும். இடது கையில் உள்ள ஐ.வி குழாய் (IV cannula) அவசரத் தேவைக்காக நோயாளி மருத்துவமனையை விட்டு வெளியேறும் வரையில் விட்டு வைக்கப்படும். எல்லா கண்காணிப்புக் கருவிகளின் இணைப்பும் நீக்கப்பட்டு நோயாளி அறைத் தொகுதிக்கு  (ward) அனுப்பப்படுவார்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் வரையில் நோயாளிக்கு உதவியாக இருந்த செவிலியர் அவரது திரவ உணவு மற்றும் நீர் கொடுக்கப்பட்ட விபரங்களையும் (Input) மற்றும்  வெளியேறும் சிறுநீரின் அளவையும் குறித்துக் கொண்டு வருவார். அறைத் தொகுப்புக்கு வந்த பின்பு அதற்காகத் தரப்படும் படிவம் அவ்வப்போது நோயாளியின் உதவியாளரால் தவறாமல் நிரப்பப்பட வேண்டும்.  சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட திரவங்கள் காரணமாக உடலின் நிறை அறுவைச் சிகிச்சைக்கு முன் இருந்ததை விட அதிகமாக இருக்கும். திரவங்கள் வெளியேற வெளியேற உடல் நிறை குறையத் துவங்கும். உடல் நிறை தினசரி கண்காணிக்கப்படும்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் போது இயன் மருத்துவர் (Physiotherapist) மார்புச் சளியை வெளியேற்றும் பயிற்சிகளைத் துவக்கியிருப்பார். அறைத் தொகுதிக்கு வந்த பின் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நோயாளியை நடக்க வைத்துச் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வைப்பார். அறைத் தொகுப்புக்கு வந்த இரண்டாம் நாள் இயன்முறை மருத்துவர் நோயாளிக்கு மாடிப் படிகள் ஏறப்  பயிற்சி தருவார். இருப்பினும் ஆறு வார காலத்திற்கு அவசியம் ஏற்பட்டான்றி மாடிப்படிகளில் ஏறுவதை நோயாளி தவிர்க்கலாம்.

    அறைத் தொகுப்புக்கு (ward) வந்ததும் மறுநாள் மார்பு மற்றும் கால்களில் இடப்பட்ட தையல்கள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு ஆறியிருப்பின் பிரிக்கப்படும். இல்லாவிட்டால் நோயாளி மருத்துவ மனையை விட்டு வெளியேறும் தினத்தில் (day of discharge) தையல் பிரிக்கப்படும். அதன் பிறகு குளிக்கும் முறையை மருத்துவர் நோயாளிக்கு விளக்குவார். அந்த முறையில் தையல் இடப்பட்ட பகுதியில் நீர் சேராமல் உடனடியாக மிருதுவான துவாலையால் ஒற்றி எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தையல் இடப்பட்டிருந்த இடங்களை அழுத்தித் துடைக்கக் கூடாது. தையல் பிரிக்கப்பட்ட பகுதிகளில் நகத்தால் காயம் ஏற்படாவண்ணம் மெல்லிய ரப்பர் கையுறைகள் (gloves) அணிந்து தினமும் சோப்புத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தையல் பிரிக்கப்பட்ட பின்னர் நோயாளி தினமும் குளிக்கலாம். குளித்து முடித்ததும் மறக்காமல் பீட்டாடைன் (Betadine solution) கரைசலை தையல் பிரிக்கப்பட்ட இடங்களில் மருத்துவர் நிறுத்தச் சொல்லும் வரையில் தொடர்ந்து பூசி வர வேண்டும்.

    நோயாளியின் இரத்தச் சர்க்கரை அளவு தினமும் சோதனை செய்யப்படும். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோயாளியின் இரத்தச் சர்க்கரை அளவைச் சார்ந்து அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட காயங்கள் விரைவாக ஆற வேண்டி அவருக்கு இன்சுலின் ஊசி (Insulin injection) குறிப்பிட்ட காலத்திற்குச் செலுத்தப்படலாம். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்தால் அதனைக் கட்டுக்குள் வைக்க நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளும் (anti – diabetes drugs) தரப்படலாம்.

    அறுவைச் சிகிச்சை முடிந்த நாளுக்கு மறுதினம், அதாவது இரண்டாம் நாள் முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இதயத் துடிப்பலை வரைவிப்படம் (ECG) நோயாளிக்கு எடுக்கப்படும். தவிரவும் நோயாளியின் இரத்த மாதிரிகள் தினமும் அதிகாலையில் எடுக்கப்பட்டுப்  பரிசோதிக்கப்படும். என்னுடைய நேர்வில் (my case) இருமுறை முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கையும் (complete blood count) ஒருமுறை பிற பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

    அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்த மறுநாள் 

    மீண்டும் அதிகாலையில் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு

    சோடியம் (சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா) ஆகியவையும்

    முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count – CBC) யும் காணப்பட்டன.

    மீண்டும் அறுவைச்சிகிச்சை நடந்து முடிந்த மூன்றாவது நாளில் 

    முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count – CBC)யும் கூடுதலாக சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா) ஆகியவையும் காணப்பட்டன.

    நான்காவது நாளில் 

    முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count – CBC)யும் கூடுதலாக தொடர்பின்றி எடுக்கப்பட்ட இரத்தச் சர்க்கரை அளவும் (random blood sugar) காணப்பட்டன.

    இச் சோதனைகளின் அடுக்கு நிகழ்வு (frequency) மருத்துமனைக்கு மருத்துவமனை நோயாளிக்கு நோயாளி மாறுபடலாம்.

    அறுவைச்சிகிச்சைக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட எல்லாப் பரிசோதனை முடிவுகளும் திருப்தி அளிக்கும் பட்சத்தில் நோயாளி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து எட்டாவது நாளிலிருந்து பத்தாவது நாளுக்குள் மருத்துவமனையிலிருந்து முறைப்படி வெளியேறி (discharge) வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படலாம்.

    தொடரும்..

    Share
  • இதயம் திறந்த அனுபவம் – 3

    இதயம் திறந்த அனுபவம் – 3

    வெ. சுப்ரமணியன்

    அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம்.

    (1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் (Operation theatre crews) அறுவைச் சிகிச்சைக்கூடப் பணிகளுக்காகத் தனியே  இருக்கும்.

    (2) நோயாளியை அவரது அறைப்பிரிவில் பணியில் இருக்கும் செவிலியர் (ward duty nurse) அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு இட்டுச் செல்லும் போது கூடவே நோயாளி குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய மருத்துவக் கோப்புடன் (file) வருவார். அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் (operation theatre) பணியில் உள்ள செவிலியரிடம் நோயாளியை அவரது மருத்துவக் கோப்புடன் முறையாக ஒப்படைத்து விட்டு மீண்டும் தனது பணி அறைப்பிரிவுக்குத் (duty ward) திரும்பி விடுவார்.

    (3) குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சை நிபுணருடன் அன்றைய தினம் பணிபுரியப் போகும் பணிக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நோயாளியிடம் தனித்தனியாக வந்து நோயாளியின் பெயர் (Name of the patient), வயது(age), இதயமருத்துவரின் பெயர் (Name of the cardiologist) , அறுவைச் சிகிச்சை அளிக்கப் போகும் நிபுணரின் பெயர் (Name of the surgeon) மற்றும் என்ன அறுவைச் சிகிச்சைக்காக (Name of the Surgery) அனுமதிக்கப்பட்டுள்ளார் போன்ற விவரங்களைக் கேட்டறிந்து அதனை அவரது இடது கையில் கட்டப்பட்டுள்ள மணிக்கட்டுப் பட்டையுடன் (wristband) அவற்றை ஒப்பிட்டும் உறுதி செய்து கொள்வார்கள். இதனால் நோயாளி மாறிப் போவது மாதிரியான குழப்பங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.

    (4) இவ்வாறு குழுவினர்கள் அனைவருமே உறுதி செய்து கொண்ட பின்னரே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைக்கு செய்யப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிகளுக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் துவங்குவார்கள்.

    அடுத்தது தூக்குப் படுக்கையிலிருந்து (stretcher) மெதுவாக அறுவைச் சிகிச்சை மேசைக்கு (operation table) மாற்றம் செய்யப்பட்டு  நோயாளி மல்லாந்து (lying on back) இருக்குமாறு கிடத்தப்படுவார்.

    உடலின் புறப் பகுதியில் (peripheral) உள்ள சிரை இரத்தக் குழாய் (vein) வழியாகச் சிறியதொரு பிளாஸ்டிக் குழாயைச் (cannula) செருகுவது ஆங்கிலத்தில் ஐவி லைன் (IV line) அல்லது இன்ட்ரெவனஸ் கேனூலேஷன் (Intravenous cannulation)  என்றழைக்கப்படுகிறது.

    Image source: pixabay https://www.nursesclass.com/2020/06/20-iv-therapy-tips-and-tricks-improve-cannulation-skills.html

    அடுத்தடுத்து சிரை வழியாகத் திரவங்கள், மருந்து மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உடலுக்குள் செலுத்த இம்முறை பயன்படுத்தப்படும். சில சமயங்களில் இந்தக் குழாய் (cannula) வழியே இரத்த மாதிரிகளும் எடுக்கப்படும். இதனைத் தவிர இரத்த அழுத்தம் மற்றும் இதயச் செயல்பாடுகளைக் கண்காணிக்க மணிக்கட்டிலும் கழுத்திலும் சிலாகைகள் (Catheters)  இணைக்கப்படும்.

    என்னுடைய சொந்த அனுபவத்தில் இருகைகளிலும் ஐவி குழாய்களை  (IV line) இணைக்கும் வரை சிறு வலியை உணர்ந்தேன். அதன் பின்பு என்ன நடந்தது என்பதை உணரவில்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று விட்டேன். ஆகவே இதன் பின்னர் என்னென்ன செயல்பாடுகள் நிகழ்ந்தன என்பதை என் உறவினரான மருத்துவரிடம் துருவித்துருவிக் கேட்டு அறிந்து கொண்டேன்.

    அறுவைச்சிகிச்சை முழுவதும் மயக்க மருந்து நிபுணர்( anesthetist) இதயத்துடிப்பு (heart beat), இரத்த அழுத்தம் (Blood pressure), சுவாசம் (Breathing) மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பார். நோயாளி ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதும் தொண்டை வழியே ஒரு சுவாசக் குழாய் செலுத்தப்படும். இக்குழாய் செயற்கைச் சுவாசக் கருவியுடன் (Ventilator) இணைக்கப்படும்‌. அறுவைச்சிகிச்சை நடைபெறும் போது நுரையீரலின் சுவாசிக்கும் செயலைபாட்டை இக் கருவி மேற் கொள்ளும். அடுத்து ஒரு சிலாகை (Catheter) சிறுநீர்ப்புறவழி வழியாகச் சிறுநீர்ப்பையில் செலுத்தப்பட்டு சிறுநீரை வெளியேற்ற வழி செய்யப்படும். அனைத்துக் குழாய்களும் கண்காணிப்புக் கருவிகளும் (monitors) உடலுடன் சரியாக இணைக்கப்பட்டு அவற்றின் பழுதற்ற செயல்பாடு உறுதி செய்யப்பட்ட பின்னரே அறுவைச் சிகிச்சை தொடங்கப்படும்.

    அறுவைச் சிகிச்சை செய்யவிருக்கும் மார்பகப்பகுதியின் மேல் தோலின் மீது கிருமி நாசினித் திரவம் தேய்க்கப்பட்டுச் சுத்தம் செய்யப்படுகிறது. அடுத்ததாக அறுவைச் சிகிச்சை நிபுணர் கால் அல்லது கையில் இருந்து நீண்ட கீறல் அல்லது கீறல்களை (incisions) ஏற்படுத்துவதன் மூலம் புறவழி ஒட்டுப் (bypass grafting)  போடப் பயன்படுத்தப் போகும் சிரை இரத்தக் குழாயை அடைவார். அந்த இரத்தக் குழாய்களை வெட்டி நீக்கிய பின் கீறல்களைத் தையல் போட்டு மூடி விடுவார்.

    இதற்குப் பின்பு அறுவைச்சிகிச்சை நிபுணர் மார்பின் நடுப்பகுதியில் தொண்டையில் ஆதாமின் ஆப்பிளுக்குச் (Adam’s apple) சற்றே கீழிருந்து தொப்புள் (navel) சிறிது மேல் வரையில் அடுத்து நீளவாக்கில் கீறலிடுவார் (Incision).  மார்பெலும்பு (Sternum)  இரண்டு பாதியாக வெட்டப்பட்டு மார்பகத்தின் பகுதிகள் பரப்பி விரிக்கப்படுவதன் மூலம் இதயம் வெளிப்படுத்தப்படும்.

    இதயத் தமனி புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) –  அழுத்த விசைக்குக் கருவி இயக்க நிலை முறை (on – pump procedure)

    கரோனரி தமனிகள் மிகச் சிறிய அளவிலானவை. இவற்றின் மீது ஒட்டு இரத்தக் குழாய்களைத் தைக்க வேண்டுமானால் மருத்துவர் இதயத்தின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி விட வேண்டும். இதற்காக இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart- Lung bypass machine) மூலம் இரத்தத்தை உடலில் செலுத்தும் வகையில் வெளியிலிருந்து குழாய்கள் இதயத்திற்குள் வைக்கப்படும்.

    உடலின் இரத்த ஓட்டம் திசை திருப்பப்பட்டு இதய – நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாக  நடைபெறத் துவங்கியதும் மருத்துவர் இதயத்தில் ஒரு குளிர்ந்த திரவத்தை ஊசி மூலம் செலுத்தி இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுவார்.

    இதயம் 2 வழிகளில் குளிர்விக்கப்படலாம்:

    இதயம் – நுரையீரல் இயந்திரம் வழியாக செல்லும்போது இரத்தம் குளிர்ச்சியடைகிறது.  இந்தக் குளிரூட்டப்பட்ட இரத்தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் அடையும் போது உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது.

    குளிர்ந்த உப்பு நீர் (saline) இதயத்தின் மீது ஊற்றப்படுகிறது. குளிர்ந்த பிறகு, இதயம் மெதுவாக நின்று நிற்கிறது. ஒரு சிறப்பு பொட்டாசியம் கரைசலை (special potassium solution) இதயத்தில் செலுத்துவதன் மூலம், இதயத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும் செயலை விரைவுபடுத்தி இதயத்தை முழுவதுமாக நிறுத்தி விட முடியும். இப்போது இதயம் சுமார் 2 முதல் 4 மணி நேரம் வரையில் இதயத்திசுக்கள் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கும். புறவழி அறுவை சிகிச்சையின் போது, ​​மார்பெலும்பு (sternum) பிரிக்கப்பட்டு, இதயம் நிறுத்தப்பட்டு, இதய-நுரையீரல் இயந்திரம் மூலம் இரத்தம் அனுப்பப்படுகிறது. மற்ற வகையான இதய அறுவை சிகிச்சைகளைப் போல் இல்லாமல், பைபாஸ் அறுவை சிகிச்சையின் போது இதயத்தின் அறைகள் திறக்கப்படுவதில்லை.

    ஒற்றைப் புறவழி (single bypass), இரட்டைப் புறவழி (double bypass) , மூன்று புறவழி (triple bypass) அல்லது நான்கு புறவழி (quadruple bypass) ஆகிய சொற்கள் அடைத்துக் கொண்ட எத்தனை தமனிகளின் (blocked arteries) இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டிட்டு இணைக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றன. என்னுடைய நேர்வில் மூன்று தமனிகளின் இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டுப் போட்டு இணைக்கப்பட்டன (triple bypass) என்று அறிந்து கொண்டேன். 

    கீழே தரப்பட்டுள்ளது என்னுடைய புறவழி ஒட்டு அறுவைச் சிகிச்சையின் மாதிரிப் படம்.

    இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டதும், பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்படும். காலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வெட்டி எடுக்கப்பட்ட சிரை இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார். மருத்துவர் மார்புக்குள் உள்ள உள் நெஞ்சகத் தமனியை (internal mammary artery) புறவழி ஒட்டுக்குக்காகப் ( bypass grafting) பயன்படுத்தினால், தமனியின் கீழ் முனை மார்பின் உள்ளே இருந்து வெட்டப்பட்டு அடைப்புக்கு கீழே உள்ள இதயத் தமனி (Coronary Artery) யில் செய்யப்பட்ட ஒரு திறப்பு மீது வைத்துத் தைக்கப்படும். பெண்களுக்கு இந்த உள் நெஞ்சகத் (IMA) தமனியை புறவழி ஒட்டாகப்  பயன்படுத்துவது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.

    நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

    புறவழி இரத்தக் குழாய் ஒட்டுகள் பரிசோதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பின், மருத்துவர் இதய – நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாகச் செல்லும் இரத்தத்தை மீண்டும்  இதயத்தின் வழியாகச் செல்ல அனுமதித்து இயந்திரத்திற்குச் செல்லும் குழாய்களை அகற்றி விடுவார். நோயாளியின் இதயம் தானாகவே மீண்டும் இயங்கத் தொடங்கலாம் அல்லது அவ்வாறு நிகழாத நேர்வில் மறுபடியும் இயங்கச் செய்ய லேசான மின்சார அதிர்ச்சி (Electric shock) தரப்படலாம்.

    அவசியம் ஏற்பட்டால் மருத்துவர்கள் இதயத்தின் தொடக்க மீள் இயக்கத்திற்காக இதயத்தில் மின் கடத்திக் கம்பிகளைச் செலுத்தி அவற்றை இதய மின்முடுக்கியுடன் (Pace maker) தற்காலிகமாக இணைத்து இதயத்தை இயங்கச் செய்வார்கள்.

    இதயத் தமனிப் புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) – அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off – pump procedure)

    இந்த முறையில் இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படுவதில்லை. மருத்துவர் மார்பைத் திறந்து இதயத்தை வெளிப்படுத்தியதும் ஒரு சிறப்புக் கருவியால் இதயத்தின் எந்தத் தமனிக்குழாய்க்குப் புறவழி இரத்தக் குழாயைத் தைத்து ஒட்டுப்  போட்டு இணைக்க வேண்டுமோ அதைச் சுற்றியுள்ள பரப்பை நிலைப்படுத்தி விடுவார்கள்.

    நிலைப்படுத்தல் அமைப்பு (Stabilization system) ஒரு இதய இடப் பொருத்தியையும் (Heart positioner)  மற்றும் திசு நிலைப்படுத்தியையும் (Tissue stablizer) கொண்டுள்ளது. இதய இடப் பொருத்தி இரத்த ஓட்டத்தைச் சீர் குலைக்காமல் இதயத்தை உயர்த்தித் தாங்கிப் பிடித்து கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதயத்தை திருப்பி அடைபட்ட தமனிகளை (blocked arteries) அடைவதற்கான சிறந்த அணுகலைப் பெற (best access) வழிவகுக்கிறது. திசு நிலைப்படுத்தி இதயத்தின் ஒரு சிறிய பகுதியில்  அறுவை சிகிச்சை நிபுணர் வேலை செய்யும் போது அப்பகுதியை அசையாமல் நிலையாக வைத்திருக்கிறது.

    என்னுடைய இதய அறுவைச் சிகிச்சை அழுத்த விசைக் கருவி (off pump coronary artery bypass – OPCAB)  இயங்கா நிலையில் ஆக்டோபஸ் 4.3 (Octobus 4.3) என்ற நிலைப்படுத்தும் அமைப்பைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது என்பதை என்னுடைய அறுவைச் சிகிச்சை ஆவணங்களிலிருந்து  தெரிந்து கொண்டேன்.

     

    Picture courtesy: https://www.ahajournals.org/doi/full/10.1161/01.cir.0000120292.65143.f5

    திசு நிலைப்படுத்தியால் (tissue stabilizer)  நிலைப்படுத்தப்பட்ட இதயத்தின்  குறிப்பிட்ட சிறு பரப்பைத் தவிர பிற பகுதிகள் இயக்கத்திலேயே இருக்கும். மேலும் இரத்தத்தை உடலில் அழுத்திச் செலுத்தும் (Pumping) பணியைத் தொடர்ந்து செய்யும். இதயத்தின் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து செயல்பட்டு உடல் வழியாக இரத்தத்தை செலுத்தும்.

    ஒருவேளை இதயத்துடிப்பில் ஏதாவது எதிர்பாராத சிக்கல் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்டால் புறவழி இயந்திரம் புறவழி இரத்தக்குழாய் ஒட்டுதலை முடிக்கத் தேவைப்படக் கூடும். ஆகவே அத்தகைய நிலையில் இயந்திரமும் அதனை இயக்குவதற்குத் தொழில்நுட்பப் பணியாளரும் தயார் நிலையில் இருப்பார்கள். மற்றபடி இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart -Lung machine)  ஒரு மாற்று ஏற்பாடாக மட்டுமே இருக்கும்.

    பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்பட்டு இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார்.

    நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மார்பை மூடுவதற்கு முன் மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

    இப்போது சிஏபிஜியின் (CABG) அழுத்த விசைக்குக் கருவியின் இயக்க நிலை முறை (on pump) மற்றும் அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off pump) ஆகிய இருவகையான செயல்படும் முறைகளிலும் (Procedures) அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையை நெருங்கி விட்டது.

    அடுத்த கட்டமாகச் சில நேரங்களில் உடைந்த எலும்பை சரிசெய்யக் கம்பிகளைப் பயன்படுவது போல் சிறிய கம்பிகளால் மார்பெலும்பு(sternum) மருத்துவரால் தைக்கப்படும். இதயத்தைச் சுற்றிலும் சேர்ந்துள்ள இரத்தம் மற்றும் திரவங்களை வெளியேற்ற மார்பில் குழாய் செருகப்படும். அடுத்து மார்பெலும்பின் மீதுள்ள தோல் மீண்டும் ஒன்றாக இணைத்துத் தைக்கப்படும்.

    வயிற்றுப் பகுதியில் சேர்ந்துள்ள திரவங்களை வெளியேற்றுவதற்காக மருத்துவர் மூக்கு அல்லது வாய் வழியாக வயிற்றுக்குள் ஒரு குழாயைச் செலுத்துவார்.

    இதன் பின்னர் அறுவைச் சிகிச்சைக் (surgical wounds) காயங்களுக்கு கிருமித் தொற்று நீக்கப்பட்ட (sterilised bandage) புண் கட்டுத் துணியால் மருத்துவர் கட்டுகள்(dressing) இடுவார்

    தொடரும்..

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 2

    இதயம் திறந்த அனுபவங்கள் – 2

    வெ. சுப்ரமணியன்

    அறுவைச் சிகிச்சைக்குத் தயாராதல்

    நோயாளிக்கு சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச்சிகிச்சை ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை மருத்துவர் முதலில் கூறுவார். அதன் பின்னர் செயல்முறை (procedure) குறித்து விளக்கி அதில் சாத்தியமான  அபாயங்களைப் பற்றியும் எடுத்துரைப்பார். அப்போது நோயாளி தன் மனதில் தோன்றும் அனைத்து ஐயங்களையும் அச்சங்களையும் மருத்துவரிடம் தெரிவித்து அவற்றுக்கான தக்க விளக்கங்களைப் பெற்றுத் தெளிவு பெறலாம்.

    நோயாளி அறுவைச்சிகிச்சைக்கு வாய்மொழி ஒப்புதல் கொடுத்த பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு முன்னாதாக மேற் கொள்ள வேண்டிய சோதனைகளுக்கான எழுத்துப் பூர்வமான அனுமதி அளிக்கும் படிவங்களில்  நோயாளியின் கையொப்பம் பெறப்படும். கையொப்பம் இடுமுன் படிவத்தைக் கவனமாகப் படித்தும் தெளிவு பெற இயலாத பட்சத்தில் மருத்துவரிடம் வினாக்களை எழுப்பித் தெளிவு பெறலாம்.

    நோயாளியின் மருத்துவ  வரலாற்றை (medical history) மருத்துவர் குழு முழுமையாக மதிப்பாய்வு செய்தும் முழு உடற்பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் உடற்தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார். இது தவிர வேறு சில இரத்தப் பரிசோதனைகளும் பிற கண்டறியும் சோதனைகளும் கூடுதலாகத் தேவைப்படலாம்.

    எடுத்துக்காட்டாகத்  தற்போது முதலில் கோவிட் -19  தொற்றுச்  சோதனை நோயாளிக்குச் செய்யப்பட்டு எதிர்மறை (negative) என்று உறுதியான பின்னரே அடுத்த கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    (1) உள் நோயாளியாக (inpatient) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோயாளியின் இடது கையில் நோயாளியின் விவரங்கள் குறிக்கப்பட்ட மணிக்கட்டுப்பட்டை (wristband) கட்டப்படும்.

    படம் : மணிக்கட்டுப் பட்டை (wrist band)

    (2) அடுத்து வழக்கமாக அணியும் உடைகளுக்குப் பதிலாக மருத்துவமனையில் வழங்கப்படும் அங்கியையே அணிந்து கொள்ள வேண்டும். இதனால் மருத்துவமனையில் நோயாளியைப் பிரித்தறிய எளிதாக இருக்கும். மேலும் மருத்துவமனையில் செய்யப்படும் பல்வேறு சோதனைகளுக்கு வசதியாகவும் இருக்கும்.

    (3) அடுத்து அறுவைச் சிகிச்சைக்கு இடையூறாக இருக்கக் கூடிய நகைகள், தாயத்துகள் மற்றும் அரைஞாண் கயிறு போன்ற பிற பொருட்களும் அகற்றப்படும்.

    1) அறுவைச் சிகிச்சைக்கு முன் தினம் அதிகாலையில் இரத்தப் பரிசோதனைக்கு மாதிரி (sample) எடுக்கப்படும்.

    2) நோயாளிக்கு முழு உடற்சவரம் (Full body shave) செய்யப்படும். அதன் பின்னர் சோப்புத் தேய்த்து சிறப்புக் கிருமி நாசினி கலந்த வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

    அடுத்து காலைச் சிற்றுண்டி உண்ட  இரண்டு மணி நேரத்திற்குப் மீண்டும் பரிசோதனைக்காக இரத்த மாதிரி எடுக்கப்படும்.

    3) அடுத்து நோயாளிக்கு மார்பு எக்ஸ் கதிர் (Chest X – ray) படம் எடுக்கப்படும்.

    4) அடுத்து இருபரிமாண வண்ண டாப்ளர் (2D Colour Doppler) சோதனை செய்யப்படும்.

    இருபரிமாண எதிரொலி (2D Echo) என்பது இதயத்திற்கான ஒரு சோதனை, இதில் மீயொலி (ultrasound) நுட்பம் இதயத்தைப் படங்கள் எடுக்கப் பயன்படுகிறது. இது துடிக்கும் இதயம், இதயத்தின் அறைகள், வால்வுகள் மற்றும் இதயத்தின் முக்கிய இரத்த நாளங்களை குறுக்கு வெட்டு முதலியவற்றை ‘ஸ்லைஸ்’ (Slice)  காட்டுகிறது.  இதயத்தின் இரத்த ஓட்டத்தை மதிப்பிடும் ‘டாப்ளர்’ (Doppler) இந்த மீயொலிப் பரிசோதனையின் சிறப்பு உறுப்பாகும்.

    படம்: இருபரிமாண வண்ண டாப்ளர் (2D colour Doppler) கருவி

    4) காலை மற்றும் இரவில் துகள் தெளிப்பான் (nebulizer) கருவி உதவியுடன் நுரையீரலுக்கும் மற்றும் சுவாசப் பாதைக்கும் மருந்து செலுத்தப்படும். இதனால் சுவாசப் பாதையில் தடைகளும் நுரையீரலில் உள்ள பிரச்சினைகளும் நீக்கப்படக் கூடும்.

    5) நோயாளி தற்போது புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருக்கலாம் அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கலாம். இவர்களுக்கு நுரையீரல் இறுக்கத்தைக் குறைக்க அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகவே மூன்று பந்து  ஊக்க ஸ்பைரோமீட்டர் (Tri ball incentive spirometer) கருவியை ஒரு மணி நேரத்திற்கு 10 முறை பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைப்பார்.

     

    படம் : மூன்று பந்து  ஊக்க ஸ்பைரோமீட்டர் (Tri ball incentive spirometer)

    6) பல வகையான இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதயம் குறித்த விவரங்கள் ( Cardiac profile) சேகரிக்கப்படுகின்றன.

    அடுத்துவரும் பகுதியில் அறுவைச் சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பல்வேறு பரிசோதனைகளைக் குறித்து மிகச் சிறிய அளவில் எடுத்துக் கூறியுள்ளேன். உங்களுக்கு அப்பகுதி சலிப்பூட்டுவதாக உணர்ந்தால் நேராக  பகுதி (3) க்குச் செல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதாவது இச் சோதனைகள் நமக்குச் செய்யப்பட்டால் அவை ஏன் எதற்காகச் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

    (அ) இரத்தச் சர்க்கரை விவரங்கள்  (Sugar Profile)

    உணவு உட் கொள்ளாத நிலையில் இரத்தச் சர்க்கரை அளவு (Fasting Blood Glucose – FBG),

    உணவு உட்கொண்ட 2 மணி நேரத்திற்கு பின் இரத்தச் சர்க்கரை அளவு (Post Prandial Blood Glucose – PPBG) ,

    HbA1c சோதனை மூன்று மாத காலப்பகுதியில் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்பட்ட ஏராளமான ஏற்ற இறக்கங்களின் சராசரியை அளவிடுகிறது. மூன்று மாதங்களில் எந்த அளவிற்கு இரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தப்பள்ளது என்பதையும் HbA1c தெரிந்து கொள்ள உதவுகிறது.

    ஆ) கொலஸ்டிரால் கொழுப்பு விவரங்கள் (Lipid profile)

    கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு (Fat). கல்லீரல் (Lever) உடலுக்குத் தேவையான கொழுப்பை உருவாக்குகிறது. உண்ணும் உணவுகளிலிருந்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைப் பெறலாம். இறைச்சி, மீன், முட்டை, வெண்ணெய், சீஸ் மற்றும் பால் அனைத்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைக் கொண்டுள்ளன. பழங்கள், காய்கறிகள் மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்களில் எந்த கொலஸ்டிரால் கொழுப்பும் இல்லை.

    இந்த இரத்தப் பரிசோதனையில் மொத்தக் கொலஸ்டிரால் (Total cholesterol)

    டிரைகிளிசரைடு (Triglyceride),

    குறை அடர்த்திக் கொலஸ்டிரால் (LDL) அல்லது கெட்ட கொலஸ்டிரால் (Bad cholesterol),

    மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் (HDL) அல்லது நல்ல கொலஸ்டிரால் (Good cholesterol),

    மொத்தக் கொலஸ்டிரால் அளவுக்கும் மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் அளவுக்குமான (HDL) விகிதம் ஆகியவற்றின் மதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

    இ) சிறுநீரகச் செயல்பாடுச் சோதனைகள்

    இரத்த யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitrogen – BUN),

    கிரியாட்டினின் (Creatinine ),

    இரத்த யூரியா நைட்ரஜனுக்கும் கிரியாட்டினின் அளவுக்குமான விகிதம்.

    (ஈ) மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  

    மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  அல்லது குருதி ஊனீர்ச் சோதனை (serum electrolytes test)  என்பது உடலின் முக்கிய மின்பகு பொருட்களை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.

    மின்பகு பொருட்கள் (electrolytes) உடல் திசுக்களிலும், இரத்தத்தில் கரைந்த உப்புக்களின் வடிவத்தில் காணப்படும் தாதுக்கள். மின்பகு பொருட்கள் மின்னூட்டம் பெற்ற துகள்கள். இவை உடலின் உயிரணுக்களுக்கு (body cells)  ஊட்டச்சத்துக்களை உள்ளேயும், கழிவுகளை வெளியேயும் நகர்த்த உதவுகின்றன. ஆரோக்கியமான அளவில் உடலில் உள்ள  திரவங்களின் அளவை பராமரிப்பதிலும்,  உடலின்  அமில  காரச் சமநிலையைப் (acid – base balance) பேணுவதிலும், உடலின் அமில – காரத்தன்மை (pH) அளவை நிலைநிறுத்தவும் உதவுகின்றன.

    இவை தசை மற்றும் நரம்புச் செயல்பாடு (muscular and neural activity), இதயத்தின் தாளலயம் (heart rhythm) மற்றும் வேறு பிற முக்கிய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன.

    (1) சோடியம் (Sodium)  உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது

    (2) குளோரைடு (Chloride) உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது ஆரோக்கியமான இரத்த அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது

    (3) பொட்டாசியம் (Potassium)  உங்கள் இதயம் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது.

    (4) மொத்த கார்பன் டை ஆக்சைடு (Total Carbon di oxide – CO2) சோதனை என்பது  இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவை அளவிடும் எளிய இரத்த பரிசோதனையாகும் . கார்பன் ஆக்சைடு (Carbon di oxide – CO2) சோதனை சிறுநீரக மற்றும் சுவாசப் பிரச்சினைகளைக் கண்டறியவும்  உதவும்.

    உ) கல்லீரல் சோதனைகள் (Lever tests)

    பிலிரூபின்(Bilirubin) என்பது மஞ்சள் நிற நிறமி (Yellowish pigment) ஆகும், இது சிவப்பு இரத்த அணுக்கள் (Red cells) இயல்பாக முறியும் (normal breakdown) போது உற்பத்தியாகிறது. பிலிரூபின் கல்லீரல் (lever) வழியாகச் சென்று இறுதியில் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இரத்தத்தில் காணப்படும் பிலிரூபின் அளவை பிலிரூபின் சோதனை அளவிடுகிறது. சோதனையில்

    மொத்த பிலிருபின் அளவு (Total Bilirubin),

    இணைந்த பிலிருபின் (Conjugate Bilirubin) ஆகியவை அளவிடப்படுகின்றன.

    இயல்பான அளவை விட பிலிரூபினின் அளவு அதிகமாகக் காணப்படுவது பல்வேறு வகையான கல்லீரல் அல்லது பித்த நாளப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஹீமோலிசிஸ் (Hemolysis) என்ற சிவப்பு இரத்த அணுக்கள் அழிவடையும் வீதம் எப்போதாவது அதிகரித்தால் இரத்தத்தில் பிலிரூபின் அளவும் உயரலாம்.

    அல்கலைன் பாஸ்பேடேஸ் (Alkaline phosphatease -ALP) எனப்படும் கார பாஸ்பேடேஸ் சோதனை கல்லீரல் நோய் அல்லது எலும்பு கோளாறுகளைக் கண்டறிய உதவுகிறது. இது பெரும்பாலும் கல்லீரல் குழுச் சோதனைகளின் (Liver panel tests) ஒன்றாகச் செய்யப்படுகிறது.  கல்லீரலைப் பாதிக்கும் நிலைமைகளில், சேதமடைந்த கல்லீரல் செல்கள் இரத்தத்தில் அதிகரித்த ALP ஐ வெளியிடுகின்றன.

    மொத்தப் புரத சோதனை:

    இந்த இரத்தப் பரிசோதனை இரண்டு வகையான புரதங்களை அளவிடுகிறது.   (1) அல்புமின்  மற்றும் (2) குளோபுலின். புரத அளவு குறைவாக இருந்தால், நோயாளிக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் இருப்பதாகக் கருதலாம்.

    அல்புமின் (Albumin): 

    உடலின் திரவச் சமநிலையைப் பராமரிக்க உதவும் புரதங்கள் இரத்தத்தில் முழுவதுமாகப் பரவுகின்றன. அல்புமின் என்பது கல்லீரல் உருவாக்கும் ஒரு வகை புரதமாகும். இது உங்கள் இரத்தத்தில் மிகுதியாக உள்ள புரதங்களில் ஒன்றாகும். இரத்த ஊனீர் அல்புமின் சோதனை (Blood serum Albumin test)  என்பது  இரத்தத்தில் உள்ள அல்புமினின் அளவை அளவிடும் எளிய இரத்தப் பரிசோதனை ஆகும். அறுவை சிகிச்சை, தீக்காயம் அல்லது திறந்த காயம் காரணமாக குறைந்த ஆல்புமின் அளவை இரத்தத்தில் கொண்டிருப்பதற்கான வாய்ப்புள்ளது.. ஆனால்  மேற் குறிப்பட்ட எதுவும் இல்லாத நிலையில் இரத்த ஊனீர் அல்புமின் அளவு அசாதாரணமான நிலையில் காணப்பட்டால் கல்லீரல் (Liver) அல்லது சிறுநீரகங்கள் (Kidneys) சரியாகச் செயல்படாத  நிலையின்  அறிகுறியாகவோ  அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதையோ  குறிக்கலாம்.

    குளோபுலின்கள் (Globulins)

    குளோபுலின்கள்  இரத்தத்தில் காணப்படும் புரதங்களின் குழுவாகும். அவை  நோயெதிர்ப்பு மண்டலத்தால் கல்லீரலில் தயாரிக்கப்படுகின்றன. கல்லீரல் செயல்பாடு, இரத்த உறைதல் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் குளோபுலின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குளோபுலின்களில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஆல்பா 1, ஆல்பா 2, பீட்டா மற்றும் காமா என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான குளோபுலின்கள் இருப்பதைப் போலவே, பல்வேறு வகையான குளோபுலின் சோதனைகளும் உள்ளன.

    1. G) ஏமக்குறைவு நோய்கான சோதனை (AIDS – HIV)

    எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV – Human immunodeficiency virus) எனப்படுவது ஏமக் குறைவு நோயை உருவாக்கும் தீ நுண்மம் ஆகும். எச்.ஐ.வி சோதனையில்  நேர் மறையான முடிவு கிடைத்தால், நோயாளி  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் தீ நுண்மக்கிருமியால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொருள்.

    1. H) ஈரலழற்சி பி தீ நுண்மம் (HBsAg)

    HBsAg சோதனையில் நேர் மறையான முடிவு கிடைக்கப் பெற்றால், நோயாளி ஹெபடைடிஸ் பி தீ நுண்மக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே ஹெபடைடிஸ் பி  நுண்மத்தை அவர் இரத்தத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பரப்பக் கூடும்.

    1. H) இரத்த உறைதல் காலம் (Blood clotting time), புரோத்திராம்பின் காலம் (Prothrombin time) , இரத்தப் போக்கு நேரம் (Bleeding time)

    புரோத்ராம்பின் நேரம் (Prothrombin time – PT) என்பது உங்கள் இரத்தத்தின் திரவ பகுதியான பிளாஸ்மா (Plasma) உறைவதற்கு எடுக்கும் நேரத்தை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.

    1. I) முழு இரத்தப் பரிசோதனை(Complete Blood Count)

    ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கைச் சோதனை (சிபிசி) என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் இரத்த சோகை, தொற்று மற்றும் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான கோளாறுகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படும் இரத்த பரிசோதனையாகும். ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனை  இரத்தத்தின் பல கூறுகளையும் அம்சங்களையும் அளவிடுகிறது, அவற்றுள்:

    சிவப்பு இரத்த அணுக்கள் இவை ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன

    வெள்ளை இரத்த அணுக்கள் இவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன

    ஹீமோகுளோபின், சிவப்பு இரத்த அணுக்களில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்

    ஹீமாடோக்ரிட்,  இரத்தத்தில் உள்ள இரத்தக் கூறுகளின் விகிதம் அல்லது பிளாஸ்மாவுக்கும் சிவப்பு இரத்த அணுக்களும் உள்ள விகிதம்

    பிளேட்லெட்டுகள், இவை இரத்த உறைவுக்கு உதவுகிறது.

    அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒருமுறை மேற் கொள்ளப்படும் இந்த முழு இரத்த எண்ணிக்கைக் சோதனை அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறியும் பொருட்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல முறை செய்யப்படும்.

    J) தைராய்ட் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் சோதனைகள் (Thyroid stimulating Harmon tests – TSH)

    தைராய்டைத் தூண்டும் இயக்குநீர்ச் (டி.எஸ்.எச்) சோதனை இரத்தத்தில் உள்ள டி.எஸ்.எச் அளவை அளவிடுகிறது. உங்கள் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பியால் இந்த இயக்குநீர் தயாரிக்கப்படுகிறது. தைராய்டுச் சுரப்பி வெளியிடும்  இயக்குநீர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த இயக்குநீருக்கு உண்டு.

    தைராய்டுச் சுரப்பி கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சிறிய, பட்டாம்பூச்சி வடிவச் சுரப்பி ஆகும். இச் சுரப்பி மூன்று முக்கியமான இயக்குநீர்களை சுரக்கிறது. அவை

    (1) ட்ரியோடோதைரோனைன் – டி3 (triiodothyronine  – T3)

    (2) தைராக்ஸின் – டி4 (thyroxine – T4)

    (3) கால்சிட்டோனின் (calcitonin)

    இந்த மூன்று இயக்குநீர்களையும் வெளியிடுவதன் வாயிலாக வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் வளர்ச்சி (growth)  உள்ளிட்ட பல்வேறு உடற் செயல்பாடுகளை தைராய்டுச் சுரப்பி கட்டுப்படுத்துகிறது.

    H) நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை (Pulmonary function test – PFT)

    படம் : நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைக் கருவி

    நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைகள் PFT (பி.எஃப்.டி) நுரையீரல் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காட்டும் உடலின் தோலை ஊடுருவித் துளையிடவோ (pierce), கீறலிடவோ (incision) அவசிமற்ற சோதனைகள் (non invasive test). சோதனைகள் நுரையீரல் அளவு, திறன், ஓட்ட விகிதங்கள் மற்றும் வாயு பரிமாற்றம் ஆகியவற்றை அளவிடுகின்றன. அறுவைசிகிச்சைக்கு முன்னர் நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம்.  நுரையீரல், இதய பிரச்சினைகள் உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லது பிற சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளுக்கான செய்முறைகளுக்களுக்காக (Procedures)  பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம். PFT களின் மற்றொரு பயன்பாடு ஆஸ்துமா(asthma), எம்பிஸிமா (emphysema) மற்றும் பிற நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகளுக்காகத் தரப்படும் சிகிச்சையை  மதிப்பிடுவதற்கும் (assessment of treatment) பி.எஃப்.டி(PFT) சோதனை பயன்படுத்தப்படுகிறது.

    கடைசியாக மருத்துவர் நோயாளியின் கால்களைப் பரிசோதிப்பார். கீழ் இடது காலில் இருந்து மேலோட்டமான சிரை இரத்தக் குழாயை (superficial vein) எடுத்து அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் அந்த இரத்தக் குழாய் வீங்கிச் சுருண்ட சிரைப் புடைப்பு (varicose vein) இன்றி நல்ல நிலையில் உள்ளதா என்று  தெரிந்துகொள்வார்.

    எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறும் நாள் காலையில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு,

    சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா)

    மொத்த  லூக்கோசைட்ஸ் எண்ணிக்கைக் சோதனையில்

    வெள்ளைளை அணுக்களின் எண்ணிக்கை (WBC count)

    வகைவாரி லூக்கோசையிட்ஸ் எண்ணிக்கையில்

    நியூட்ரோஃபில்ஸ் எண்ணிக்கை

    ஈஸினோஃபில்ஸ் எண்ணிக்கை

    லிம்ஃபோசைட்ஸ்கள் எண்ணிக்கை

    மோனோசைட்ஸ்கள் எண்ணிக்கை ஆகியன காணப்பட்டன.

    தொடரும்…

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 1

    இதயம் திறந்த அனுபவங்கள் – 1

    வெ. சுப்ரமணியன்

    சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் எனக்கு இதயத் தமனி அடைப்புக்காகச் செய்யப்படும் பக்க வழி ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG) செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை என்றாலே பெரும்பாலானவர்களின் மனதில் இரு பெரும் அச்சங்கள் ஏற்படுகின்றன. முதலில் திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சங்கள் வரை செலவு செய்ய வேண்டுமே என்பதும் அடுத்தது  அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து உயிர் பிழைத்து வருவோமா என்பதும். இந்த இரண்டு அச்சங்களுமே இதய நோயாளிகளில் பலரைச்  சரியான நேரத்தில் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போடச் செய்கிறது.

    உண்மையில் அறுவைச் சிகிச்சை குறித்த மேற் சொன்ன இரண்டு அச்சங்களுமே பொருளற்ற தேவையற்ற அச்சங்களே.

    இந்தத் தொடர் கட்டுரைகள் சற்று நீண்டதாக இருந்த போதிலும் முழுவதும் படிப்பவர்களுக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை (Open heart surgery) குறித்த  புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

    தற்போதய சூழலில் மருத்துவம் என்பது எப்படி நாள்தோறும் நவீனமாகி வருகிறதோ அதேபோல அதிகச் செலவு ஏற்படுத்தக் கூடுதாகவும் உள்ளது. எனவே அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க அனைவரும் கண்டிப்பாக ஆரோக்கியக் காப்பீடு (Health insurance Policy) எடுத்துக் கொள்வதே சரியான தீர்வாக இருக்கும்.

    பலரும் ஆயுள் காப்பீடு (Insurance) என்றாலே ஆயுள் காப்பீடு (Life insurance) என்றே பொருள் கொள்கின்றனர். ஆயுள் காப்பீடும் ஆரோக்கியக் காப்பீடும் வேறு வேறு என்பதே இன்னும் நம் நாட்டில் உணரப்படவில்லை. மேலும் ஆரோக்கியக் காப்பீட்டின் முக்கியத்துவம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் பலராலும் உணரப்படுகிறது. என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன், அறுவைச் சிகிச்சைக்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் போது எந்தக் கட்டணமும் செலுத்தாமலே சேர என்னால் முடிந்தது. தவிரவும் என்னுடைய சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து புறப்படும் நாளில் அதுவரை சிகிச்சைக்கான செலவில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக நேரடியாக மருத்துவமனையின் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது.  மீதமுள்ள சுமார் 25 விழுக்காடுத் தொகையை மட்டும் செலுத்தி வீட்டிற்கு வர முடிந்தது. ஆகவே நிதிப் பிரச்சினை அதிகம் சிரமத்தைத் தரவில்லை.

    ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance)

    எந்த ஒரு நோயாளியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இரண்டு வகையான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதாவது, ஒன்று திடீர் உடல்நலக்குறைவு அல்லது விபத்து காரணமாக அவசர சிகிச்சைக்காகச் (emergency treatment) சேர்க்கப்பட்டுப் பின்னர் அதன் தொடர்ச்சியாக செய்யப்படும் சோதனைகள் அடிப்படையில் அறுவைச் சிகிச்சைக்கோ அல்லது வேறு வகையான சிகிச்சைக்கோ அனுமதிக்கப்படலாம்.

    இத்தகைய நேர்வில் நோயாளி மருத்துவக் காப்பீடு உடையவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கும், (Insurance company) காப்பீட்டு முகவருக்கும் (Insurance agent) தகவல் தொலைபேசி மூலம் சொல்லப்பட வேண்டும். .

    அடுத்து முடிந்த அளவுக்கு விரைவாகக் காப்பீடு ஆவணங்களையும், உரிய படிவங்களையும் பிழைகள் இன்றிப் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் சமர்ப்பித்து விட வேண்டும். காப்பீட்டு ஆவணங்கள் மருத்துவமனையில் சமர்ப்பிக்கப்பட்டதும் அவை மருத்துவமனை மூலமாகக் காப்பீட்டு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும். அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவமனை மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு காப்பீட்டு நிறுவனம் முன்பணம் வழங்குவது தொடர்பான ஒப்புதலை மின்னஞ்சல் வழியே பதிலாக அனுப்பி விடும். உங்கள் காப்பீட்டு முகவருக்குத் தனிப்பட்ட முறையில் தகவல் அளித்தால் அவரால் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு முன்பணத்திற்கு ஒப்புதல் வழங்குவதைத் துரிதப்படுத்தவும், ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களையும், காப்பீட்டுத் தொகை உரிமை கோரல் குறித்த (Claim) சரியான வழிகாட்டலையும் தர இயலும்.

    ஆரோக்கியக் காப்பீட்டின் மூலம் (Health insurance) மருத்துவமனையில் முன்பணமில்லாச் சிகிச்சைக்காகச் (Cashless treatment) சேர்க்கையை எளிதில் (Admission) பெற இயலும். நோயாளி சிகிச்சை பெறும்போதே ஒரு குறிப்பிட்ட முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்பளிப்பு (sanction) செய்யப்படும். ஒருவேளை முன்பணம் (advance amount) செலுத்தி இருந்தாலும் நோயாளி குணமடைந்து வீடு திரும்பும் போது தரப்படும் மொத்த செலவுப் பட்டியலில் அத்தொகை மருத்துவமனையால் காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் தொகையுடன் சேர்த்து வரவு வைக்கப்பட்டு மீதம் செலுத்த வேண்டிய தொகை எதாவது இருப்பின் அதற்கு நேர் (adjust) செய்து கொள்ளப்படும் அல்லது திரும்பத் தரப்படும்.

    இரண்டாவது வகை ஏற்கனவே மருத்துவர்களால் திறந்த இதய அறுவைச் சிகிச்சையோ அல்லது வேறு வகையான அறுவைச் சிகிச்சையோ மேற் கொள்ளப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நோயாளி தனது வசதிக்கு ஏற்பத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்க்கை (inpatient admission) பெறுவது.

    மருத்துவக் காப்பீடு உள்ளவர்கள் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காகத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் சேர்வதாக இருந்தால் சேர்க்கைக்கு (admission)  ஓரிரு நாட்கள் முன்னதாகச் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். உள் நோயாளியாகச் (Inpatient) சேருவதற்கு முந்தைய நாளில் மருத்துவக் காப்பீடு குறித்த ஆதாரங்களையும், உரிய வடிவங்களையும் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் கொடுத்தால் அவர்கள் மூலம் காப்பீட்டு நிறுவனத்திற்கு விவரம் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். அனுப்பப்பட்ட தகவல்கள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சைக்குத் தோராயமாகச் செலவாகும் என்று மருத்துவமனையால் குறிப்பிடப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடுத் தொகைக்கு முன்பணமாக காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விபரம் நோயாளிக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

    இத்தகைய நேர்வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நோயாளி முன் கட்டணமாக எதுவும்  செலுத்தத் தேவையில்லை. முன் பணமாகக் காப்பீட்டு நிறுவனத்தால்  ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை  மருத்துவமனையின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு விடும்.

    குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) குறித்த அனைத்து ஆவணங்களும் வீட்டில் எங்கிருக்கிறது  என்ற விவரத்தைக்  குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பது நல்லது. இதனால் குடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல்நலப்  பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது முன்பணம் செலுத்துவது தொடர்பாக சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

    எந்த ஒரு அறுவைச்சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு கோவிட்- 19 (Covid -19), எச்.ஐ.வி (HIV – AIDS),  மார்பு எக்ஸ் கதிர் படம்( Chest  x – ray),  இருபரிமாண வண்ண டாப்ளர் வரிக் கண்ணோட்டம் (2D colur Doppler scan) மற்றும்  இரத்தப் பரிசோதனைகள்(Blood tests) பலவும் செய்யப்பட்டு நோயாளியின் உடல் நிலை மருத்துவர் குழுவால் நன்கு ஆராயப்படுகிறது. அதன் அடிப்படையில் மட்டுமே நோயாளியின் அறுவைச் சிகிச்சைக்கான உடற் தகுதி முடிவு செய்யப்படுகிறது. அதன் பின்னரே நோயாளிக்கு ஏற்ற வகையில் உரிய சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. ஆகவே இரண்டாவதாகக் கூறப்பட்ட அச்சமும் அர்த்தமற்றதே. இனி சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை குறித்து விரிவாகக் காண்போம்.

    இதயத் தமனி இரத்தக் குழாய் அடைப்பு (Coronary Artery Blockage)

    இதய இரத்தத் தமனி அல்லது நாடி குழாயில் (Artery) அடைப்பு (block) ஏற்படும் போது மேற்கொள்ளப்படுவதே பக்கவழி இரத்தக்குழாய் ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG Surgery). இந்தச் சிகிச்சையே  நாம் பேச்சு வழக்கில் “பைபாஸ் சர்ஜரி” (Bypass surgery) என்று குறிப்பிடுகிறோம். இக்கட்டுரையில் பைபாஸ் சர்ஜரி  குறித்தே காணப் போகிறோம்.

    இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD)

    சிஏபிஜி (CABG) என்பது இதயத் தமனி இரத்தக்குழாய் நோய்க்கும் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் செயல்முறையாகும் (Procedure). இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD) என்பது இதயத் தமனி இரத்தக் குழாய்கள் விட்டம் குறுகிப் போவதாகும். இதயத் தசைக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச் சத்துக்களை வழங்குபவை  இதயத் தமனி இரத்தக் குழாய்கள். கொழுப்புப் பொருட்கள் இதயத் தமனி இரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் சி.ஏ.டி Coronary Artery Disease (CAD) ஏற்படுகிறது. இதனால் இரத்தக் குழாய் குறுகிப் போய் விடுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதயத்தசைக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிந்த இரத்தம் கிடைப்பது குறைந்து போகிறது.

    இதயத் தமனி இரத்தக்குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச்சிகிச்சையை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG) அடைபட்ட மற்றும் குறுகிப் போன ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரத்தக்குழாய்களுக்குச் சிகிச்சையளித்து இதயத் தசைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மருத்துவரால் மேற்கொள்ளப்படுகிறது.

    இதய இரத்தக்குழாய் நோயின் அறிகுறிகள் (Symptoms of Coronary Artery Disease – CAD)

    அடுத்து இதய இரத்தக்குழாய் நோயின் (Coronary Artery Disease – CAD) அறிகுறிகளாக நெஞ்சுவலி, கடும் சோர்வு, படபடப்பு, இயல்புக்கு மாறான சீரற்ற இதயத் துடிப்பின் தாள லயம் (Heart beat rhythm) மூச்சுத்திணறல், கை கால்களில் வீக்கம், செரிமானப் பிரச்சினை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும் இதய இரத்தக்குழாய் நோயின் ஆரம்ப நிலையில் துரதிருஷ்டவசமாக எந்த அறிகுறியும் வெளிப்படாமல் இருக்கலாம். இதனால் காலம் செல்லச்செல்ல தமனி இரத்தக்குழாய்களில் பெரிய அளவில் அடைப்பு அதிகரித்துச் சிக்கலை ஏற்படுத்தும் வரை நோயின் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும். இதனால் இதயத் தசைக்குப் போதுமான அளவிற்கு இரத்தம் கிடைப்பது குறைந்து கொண்டே போகும். இதயத் தசைக்குத் தடைப்படும் இரத்த ஓட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் இரத்த இதயத் தசையின் எந்தப் பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறதோ அப்பகுதியில் உள்ள திசுக்கள் இறந்து விடுவதால் மாரடைப்பு ஏற்படும். இது தவிர வேறு பிற காரணங்களுக்காகவும் மருத்துவர் சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம்.

    நகர்ப்புறங்களில் வசிக்கும்  பலரது இல்லங்களில் குழாய்க் கிணறுகளிலிருந்து (Bore wells) பெறப்படும் நீரையும் உபயோகிக்கிறோம். இந்த நீரில் கரைந்துள்ள உலோக உப்புக்கள் அதிக அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அந்த உப்புக்கள் குழாய்களின் உட்புறம் தொடர்ந்து படிந்து குழாய்களின் விட்டம் குறுகலாகும். இதன் காரணமாகக் குழாயில் நீர் செல்வது குறைந்து விடும். இந்தக் குறைபாட்டைக் கவனிக்காவிட்டால்  குழாயில் பயன்பாட்டுக்கு நீர் வருவதும் நீர் மேல் நிலைத் தொட்டிக்கு மேலேற்றப்படுவதும்  முற்றிலுமாகத் தடைப்பட்டு விடும். ஒரு கட்டத்தில் நீரிறைக்கும் மோட்டாரால் நீரை மேல் நோக்கித் தள்ள முடியாத நிலையில்  சூடாகிப் பழுதாகும்.  இதயத்தமனி இரத்தக் அடைப்பு நிகழ்வும் கிட்டத்தட்ட இது போன்ற நிலையே.

    முன்பெல்லாம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் வழியாகச் செல்லும். இப்போது நெடுஞ்சாலைகளில் பல நகரங்களை நகருக்குள் செல்லாமல் தவிர்த்துப் பயணிக்க புறவழிச் சாலைகள் (Bypass roads) போடப்பட்டுள்ளன. புறவழிச்சாலைகள் நெடுஞ்சாலையில் நகரங்களின் எல்லை தொடங்கும் முன்பாகவே பிரிந்து நகரங்களின் எல்லையைக் கடந்த பின்னர் மீண்டும் நெடுஞ்சாலையுடன் இணையும். இதனால் வாகனங்கள் நகரங்களின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துத் தடையின்றி விரைவாகச் செல்ல இயலுகிறது.

    இதய இரத்தக்குழாய் அடைப்புக்காகச் செய்யப்படும் ஒட்டு அறுவைச் சிகிச்சையும் (CABG – Coronary Artery Bypass Grafting surgery)  கிட்டத்தட்ட போக்குவரத்து தடைபடுவதைத் தவிர்க்கப் புறவழிச்சாலை ஏற்படுத்துதைப் போன்றதே.

    கொழுப்புப் பொருட்கள் படிந்து படிந்து குறுகலாகிப் போன தமனி இரத்தக் குழாய்களுக்கு மாற்றாக இணைப் பக்கப்பாதைகளை  நம் உடலின் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆரோக்கியமான தமனி  குழாய்களைக் கொண்டு தைத்து ஒட்டும்  அறுவைச்சிகிச்சைதான்  சி.ஏ.பி.ஜி வழி முறையாகும். இத்தகைய சிகிச்சைக்காக எடுக்கப்படும் இரத்த நாளம் காலிருந்தோ (leg), மார்பிலிருந்தோ (chest) அல்லது கையில் மணிக்கட்டுப் பகுதியிலிருந்தோ (wrist) எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட இரத்தக் குழாயின் ஒருமுனை  இரத்தக்குழாயின் அடைபட்ட பகுதிக்கு மேல்புறத்திலும் மறுமுனை அடைபட்ட பகுதிக்குக் கீழ்ப்புறத்திலுமாக இணைக்கப்படுகிறது. இதனால் இரத்தம் புதிய ஒட்டு இரத்தக்குழாயில் செல்வதால் இரத்த அடைப்பு தவிர்க்கப்படுகிறது.

    Picture courtesy:
    https://www.mayoclinic.org/tests-procedures/coronary-bypass-surgery/about/pac-20384589#dialogId19167970

    அடைபட்ட இதயத் தமனி இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG)

    அடைபட்ட இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சைக்கு  (சி.ஏ.பி.ஜி) மார்பைத் திறக்க மருத்துவர் மார்பில் கூரான கத்தியால் நீண்ட கீறல் (Incision) இடுவார். ஸ்டெர்னம் அல்லது மார்பெலும்பு என்பது மார்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நீண்ட தட்டையான எலும்பு ஆகும். இது குருத்தெலும்பு வழியாக விலா எலும்புகளுடன் இணைகிறது மற்றும் விலா எலும்புக் கூண்டின் முன்புறத்தை உருவாக்குகிறது, இதனால் இதயம், நுரையீரல் மற்றும் பெரிய இரத்த நாளங்கள் காயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஒரு கழுத்தணியைப் போல வடிவமைக்கப்பட்ட இது உடலின் மிகப்பெரிய மற்றும் நீளமான தட்டையான எலும்புகளில் ஒன்றாகும்.

    Picture courtesy: https://teachmeanatomy.info/thorax/bones/ribcage/

    பின்னர் (Sternam) நீளவாக்கில் பாதியாக வெட்டிப் பரப்பப்படும். இதனால் மார்புக்கூடு திறக்கப்பட்டு  இதயம் வெளிப்படும். இந்த நிலையில் மருத்துவர் இதய நுரையீரல் பக்கவழி இயந்திரத்தின் (Heart – Lung bypass machine) குழாய்களை இதயத்தில்  செலுத்தி இயந்திரத்தை இதயத்துடன் இணைத்து  விடுவார். இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் இதயத்தின் பணியான இரத்தத்தை அழுத்தி இரத்தக் குழாய்க்குள் செலுத்துவதையும் நுரையீரலின் அசுத்த  இரத்தத்தில் சேர்ந்துள்ள கார்பன் டை ஆக்சைடை அகற்றி அதில் ஆக்ஸிஜனேற்றுவதையும் இயந்திரம் மேற்கொள்ளும்.

    Picture courtesy: https://www.heart-valve-surgery.com/

    பலகாலமாகத் திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேலே குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதே பெரும்பாலும் பல சூழல்களிலும் விரும்பப்படுகிறது.

    இது ஒருபக்கம் இருந்தாலும் குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery) செய்யப்படுகிறது.

    குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery)

    1990 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சைச் செய்முறை (Minimally Invasive Surgical Procedure) அறிமுகமானது. இதில் இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படாமலே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதயநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் குறைந்தபட்ச ஊடுருவு இருதய அறுவை சிகிச்சையும் மிக நுட்பமானதோர் செய்முறையாகும். இது சாவித்துவார (Key hole surgery) அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

    வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையில் ஏற்படுத்தப்படும் பெரிய கீறல்களுக்கு மாற்றாக உடலில் சிறிய சாவித் துவார அளவிலான கீறல்களை (incisions) உருவாக்குவதன் மூலம் இந்தச் செய்முறையில் (Procedure) அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. பெரும்பாலும் சிறிய சாவித் துவாரக் கீறல்கள், சிறப்பு அறுவைச் சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

    Original picture courtesy : http://www.bypasssurgeryofmumbai.com/mica.aspx

    வழக்கமான அறுவை சிகிச்சைக்கு ஆறு முதல் எட்டு அங்குல நீளமுள்ள கீறல்கள் தேவைப்படும். ஆனால் குறைந்தபட்ச ஊடுருவு இதய அறுவை (Minimally Invasive Cardiac surgery)  சிகிச்சைக்கான கீறல்கள் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குலங்களே இருக்கும். மேலும் சாவித் துவார அறுவை சிகிச்சைகளில்  வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட மீட்சி நேரம் (Recovery time) மிகக் குறைவாகவே இருக்கும். மருத்துவர்கள் குறைந்த பட்ச ஊடுருவு அறுவை சிகிச்சைக்காக எல்லா இதய நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்யப்படுவதில்லை. சிகிச்சைக்குத் திட்டமிடும் முன்பு நோயறிதல்  தொடர்பான சோதனை முடிவுகளை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, நோயாளி குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery) ஏற்றதாக இருக்குமா அல்லது வழக்கமான திறந்த இதய அறுவைச் சிகிச்சையே (open heart surgery) அவருக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்பதை முடிவு செய்வார்கள்.

    குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery)  குறிப்பிட்ட சில இதய அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்துவதற்கே  அதிகம் விரும்பப்படுகிறது.

    எந்திரனியல் இருதய அறுவை சிகிச்சை (robotic heart surgery) என்பது மார்பில் மிகச் சிறிய வெட்டுத் துளைகள் (incisions) மூலம் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை ஆகும்.

    இதில் மிகச் சிறிய செயற் கருவிகளையும் (tiny instruments),  மற்றும் எந்திரனால் கட்டுப்படுத்தப்பட்ட கருவிகளையும்  (Robot controlled tools) பயன்படுத்துவதன் மூலம், திறந்த இதய அறுவை சிகிச்சையை விடக் குறைவான அளவில் ஊடுருவும் இதய அறுவைச் சிகிச்சையை (Minimally Invasive heart surgery) இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் செய்ய முடியும். இந்தச் செயல்முறை (Procedure) அதிக அளவில் பயன்படுத்தப்படும் எந்திரனின் (Robot) உற்பத்தியாளரின் பெயராலும் டா வின்சி அறுவை சிகிச்சை (Da Vinci Surgery) என்றும்  சில நேரங்களில்  அழைக்கப்படுகிறது.

    Picture courtesy: https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/robotic-cardiac-surgery?amp=true

    எந்திரனியல் இதய அறுவை  சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்தல்

    • இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தமனி பக்கவழி செயல்முறையில் (Artery Bypass Procedure)
    • கடினமான, விறைப்பான அல்லது கசியும் இதயத் தடுக்கிதழ்களை (Valves) சரிசெய்யும் போது அல்லது மாற்றும் போது
    • இதய ஊற்றறைத் துடிப்பு (Atrial fibrillation) என்பது அரித்மியா (arrhythmia) என்னும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மருத்துவநிலைகளின் (group of medical condition) பொதுவானதோர் வகை. நிமிடத்திற்கு100 துடிப்புகளை விடக் கூடுதலான அல்லது  நிமிடத்திற்கு 60 துடிப்புகளை விடக் குறைவான இதய ஊற்றறைத் துடிப்பைச்  சரி செய்ய
    • இதயத்தில் உள்ள கட்டிகளை(tumor) அகற்றுதல்
    • பிறவியிலேயே காணப்படும் இதயக் குறைபாடுகளை (congenital defects) நீக்குதல்

    போன்ற பிரச்சினைகளுக்காகப் பொதுவாக மருத்துவர்கள் எந்திரனியல் இதய அறுவை சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்கிறார்கள்.

    இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும் எதாவது அபாயம் அல்லது வெற்றியை உறுதி சொல்ல இயலாத நிச்சயமற்ற தன்மை கட்டாயமாக உண்டு. நூற்றுக்கு நூறு எந்தச் சிறு அபாயமோ அல்லது நிச்சயமாக வெற்றி தரக் கூடியதாகவோ எந்தச் செயல்பாடுமே இருப்பதில்லை. அது இயற்கையானது. மருத்துவமும் இதற்கு விலக்கில்லை. சொல்லப்போனால் அறுவைச்சிகிச்சையில் எதிர்பாராத சிக்கல்களும் அதனால் அபாயங்களும் ஏற்பட மிக அதிகமான வாய்ப்புகள் உண்டு. இதய இரத்தக் குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச் சிகிச்சையிலும் (CABG) எதிர்பார்க்கப்படும் மற்றும் எதிர்பாராத அபாயங்களுக்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.

    அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட வாய்ப்புள்ள அபாயங்கள்

    • அறுவைச் சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பின்னர் இரத்தப் போக்கு (Bleeding)
    • இரத்த உறைதல் ஏற்படும் நேர்வில் பக்கவாதம் (stroke) ,மாரடைப்பு (Heart attack) அல்லது நுரையீரல் பிரச்சனைகள் (Lungs Problem)
    • கீறல் (incision) செய்யப்பட்ட இடங்களில் நோய்க் கிருமித் தொற்று
    • நுரையீரல் அழற்சி (pneumonitis)
    • சுவாசக் கோளாறுகள்(Breathing problems)
    • கணைய அழற்சி (Pancreatitis)
    • சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure)
    • இயல்புக்கு மாறான இதயத்தின் தாளலயம் (abnormal heart rhythm)
    • இணைப் பக்கவழி ஒட்டு தோல்வி அடைதல் (Bypass grafting failure)
    • இறப்பு(Death) ஆகிய மேற் குறிப்பிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

    இவை தவிர நோயாளியின் தனிப்பட்ட உடல்நிலை சார்ந்து வேறு அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால் அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளும் முன்பாக நோயாளிகள் தங்கள் மருத்துவருடன் அவர்களின் கவலைகள் குறித்து தயக்கமின்றி விவாதித்தல் அவசியம்.

    அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய நாளிரவில்  இரவு 9 மணிக்கு முன்னதாக உணவு உட்கொண்டு விடுதல் நல்லது. மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு உணவோ உட்கொள்வது, நீர் அல்லது  எவ்வகையான பானமும் கட்டாயமாக அருந்தக் கூடாது.

    நோயாளி மருத்துவரிடம் கட்டாயமாகத்  தெரிவிக்க வேண்டிய தகவல்கள்

    • இதய நோயாளி பெண்ணாக இருக்கும் நேர்வில் அவர் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் தரித்திருப்பதாகக் கருதினாலோ அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
    • தனக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுத்தும் மருந்துகள் (medicines), ரப்பர் (Latex), அயோடின் (Iodine), நாடாக்கள் (tapes) பொது மயக்க மருந்து (General anaesthesia) மற்றும் குறிப்பிட்ட உடற்பகுதியை உணர்விழக்கச் செய்யும் மயக்க மருந்து (Local anaesthesia) ஆகியன குறித்த விவரங்களை மருத்துவரிடம் நோயாளி தெரியப்படுத்த வேண்டும்.
    • நோயாளி பயன்படுத்தி வரும் ஆங்கில, ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மற்றும் மூலிகை மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் பொது ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளும் கூடுதல் மருந்துகள் (Health suppliment medicines) ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
    • இரத்தப் போக்குக் கோளாறுகள் (Bleeding disorders) உள்ளனவா என்பது குறித்தும் மற்றும் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள், ஆஸ்பிரின்(Aspirin) அல்லது இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் (Anti blood clotting medicines) எடுத்துக் கொண்டிருப்பின் அது பற்றிய விவரங்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சில மருந்துகளை அறுவைச் சிகிச்சைக்குச் சில தினங்களுக்கு முன் மருத்துவர் நிறுத்தி விடக் கூறலாம். அதற்கு மாறாக வேறு ஊசி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

    இரத்தம் உறைய ஆகும் நேரத்தைக் (Time taken for clotting) கண்டறிய இரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்  மேற்கொள்ளச்  சொல்வார்.

    • நோயாளிக்கு செயற்கை இதய மின்னியக்கியோ (Pace maker) அல்லது வேறு இதய சம்பந்தமான கருவிகளோ பொருத்தப்பட்டிருப்பின் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.
    • நோயாளி புகைப்பிடிப்பவராக இருந்தால் எவ்வளவு விரைவில் அதனைக் கைவிட முடியுமோ அத்தனை விரைவில் கைவிடுதல் நல்லது. இதனால் ஓட்டு மொத்த உடலாரோக்கியம்  மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது என்பது மட்டுமல்லாமல் அறுவைச் சிகிச்சையின் தாக்கத்திலிருந்து விரைந்து குணமடையும் வாய்ப்புகளையும் அதிகரிக்கக் கூடும்.

    (7) வாயில் செயற்கைப் பற்கள் பொருத்தப்பட்டிருப்பின் அவை நிரந்தரமாக இணைக்கப்பட்டவையா அல்லது கழற்றி மாட்டிக் கொள்ளக் கூடியவையா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

    முதல் பதிப்பு

    Share
  • என் தமிழ் ஆசான்

    என் தமிழ் ஆசான்

    டாக்டர் இராதா தியாகராசன்

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டு நவம்பர் திங்கள் நான்காம் நாள், என் வாழ்வில் நினைவிற்குரிய ஒரு பெருநாள். என் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்ட நாள். வாழ்வின் உயிரெனப் போற்றப்படும் மொழித் திருப்பம் ஏற்பட்ட திருநாள்.

    மேற்கு மலைத் தொடர்களுக்கு அப்பால் பிறந்து, கன்னித் தமிழின் கடிமணம் கமழப் பெறாத என்னுள்ளத்தில், தமிழணங்கின் தனி நடம் நிகழத் தொடங்கிய தனி நாளது.

    நாளும் கோளும் நனி சிறந்த நன்னாளாகிய அந்நாளில், கலைத்தந்தை அவர்கள், பேராசிரியர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்களை எங்கள் வளமனைக்கு வரவழைத்து,பரிமேலழகரின் உரையோடு பொருந்திய திருக்குறளை அவர் கைகளில் வழங்கி, அடியேனுக்குத் தமிழ்ச் சுவையூட்டுமாறு பணித்தார்கள். “தண்டமிழின் மேலாந்தரம்” என்று சிறப்பிக்கும் திருமறையைக் கனிவோடு பெற்றுக்கொண்டு, ஔவையவர்கள் கலைத் தந்தையவர்களையும், தமிழின் நெடுங்கணக்கறியாத என்னையும், பரிமேலழகரின் உரையையும் மாறி மாறி விழித்த விழி, இன்னும் என் கண்விட்டகலாக் காட்சியாக நிற்கின்றது.

    எழுத்துகள் முப்பத்துமூன்றும் கற்பித்துப் பின், பரிமேலழகரின் உரைப் பாயிரத்துக்குச் சென்றார். அவருக்கே இயல்பாய் அமைந்த கணீர் என்ற வெண்கலக் குரலோசையுடன் பாடம் கற்பிக்கத் தொடங்கினார்.

    இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்
    அந்தமிழ் இன்பத்து அழிவில் வீடும்,
    நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு,
    உறுதியென உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு.

    நடுங்கினேன். குன்று முட்டிய குருவிபோல் திகைத்தேன். குறிஞ்சி புக்க மான்போல் விழித்தேன். அதை எழுத்துக் கூட்டிப் படிக்கவே தடுமாறிக் கலங்கிய என் நிலைமை கண்டு இரங்கி, “வரட்டும் – வரட்டும் – மெல்ல வரட்டுங்க” என்று கருணை நிறைந்த உள்ளத்தோடு ஆர்வமொழி புகன்று, ஆறுதல் கூறி, எனக்கு ஊக்கம் ஊட்டி, மேலும் சென்றார்.

    இங்ஙனம் மெல்ல, மெல்ல என்னுடைய நிலைமை அறிந்து, நான் எளிதில் உணர்ந்துகொள்ளும் பொருட்டு, மிக எளிமையாகவும், பெரும்பாலும் ஆங்கிலத்திலுமே கற்பிக்கத் தொடங்கி, எனக்குத் தமிழிலக்கியத்தின் பெருஞ் சுவையைக் காட்டினார். பவணந்தியார் கூற்றுக்கு ஏற்ப, “விழையாது, வெகுளாது, விரும்பி முகமலர்ந்து, கோட்டமில் மனத்தோடு என் உளம் கொள நூல் கொடுத்தார்.”

    பாடம் கேட்கும் பேறு பெற்ற நான், அவர்பால் ஆழ்ந்த புலமையும், செந்தமிழ்த் திறனும் மட்டுமின்றி, ஆன்று அவிந்தடங்கிய சான்றாண்மையும், அறம் பயின்றமைந்த நல்லடக்கமும் தெளிந்து தோன்றக் கண்டேன். நாநலமும் பாநலமும் நனி சிறக்கக் கண்டேன். அவர்பால் பணிவுடைமையும், இன் சொல்லும் மட்டுமல்ல, நூலறிவும், நுண்ணறிவும் களிநடம் புரியக் கண்டேன்.

    பயில்வோரும் பயிற்றுவிப்போரும் பல்லாயிரக் கணக்கில் உளராகலாம். தண்டமிழ் கற்போரும், கற்பிப்போரும் தமிழகம் எங்கும் காணப் பெறலாம். ஆனால் நல்வினை வயத்தால் எனக்குக் கிடைக்கப் பெற்ற இப்பேராசான் எங்குமுள்ள ஒரு வீட்டாசான் அல்லர். ஏதோ ஊதியம் கருதிப் பணியாற்றி, நேரத்தை ஓட்டிவிட்டுத் தம் வீட்டுக்குச் செல்வதே நினைவாகக் கடிகாரத்தை இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இயல்புடையார் வீட்டாசான்கள் சிலர்.

    ஔவையவர்களோ, ஏற்றுக் கொண்ட பணி, தாம் செவ்வன செய்து முடிக்கக் கடமைப்பட்ட ஓர் அறப் பணியாக கருதினார். ஒரு சிறிதும் அயர்வின்றி, உள்நிறை விருப்பினோடும், ஓங்குயர் ஆர்வத்தோடும் உளம் தொடும் உண்மையோடும், ஒரு தளபதியின் தறுகண்மையுடனும், வீரத்துடனும், துணிச்சலுடனும் எடுத்த பணியைத் தொடுத்து நடத்தினார். இத்தகைய தளபதிகளைத்தான், இன்றைய சூழ்நிலையில் தமிழன்னை வேண்டி நிற்கின்றார்.

    நூல் நயங்களையும் கருத்துச் செறிவுகளையும் விளக்கும் ஆர்வத்தில் பல மணி நேரங்கள் செல்வதைக் கூட அறிய மாட்டார். நான் அயர்வுற்று, அன்றைய பாடத்தை நிறுத்திக்கொள்ளும் எண்ணம் கொண்டு, அதனைக் குறிப்பாய் அறிவுறுத்த வேண்டி, “ஐயா நேரமென்ன ஆயிற்றோ” என்று வினவினால், “என்னிடம் கடிகாரம் இல்லைங்க” என்று சுருங்க உரைத்துப் பாடத்தை மேலும் தொடர்வார். இக்குறிப்பு பயனற்றதாகக் கண்டு, நான் சிறிது நேரம் கழித்து மீண்டும் “இன்றைக்கு இத்துடன் நிறுத்தலாமா?” என்று கேட்பேன். “முந்நூறாவது பாட்டுடன் நிறுத்தலாமே! இன்னும் –” என்று கூறிப் பின்னும் தொடர்வர்.

    இங்ஙனம் அயரா உள்ளத்துடனும் தளரா ஊக்கத்துடனும் உண்மை அன்புடனும் நான் நன்கு கற்க வேண்டுமென்ற நல் விருப்பத்துடனும் – அவரெனக்குத் தமிழ் நல்லறிவு கற்பித்திலரேல் நான் இன்று தமிழில் இந்தச் சிற்றறிவும் பெற்றிருக்க மாட்டேன். கற்க வேண்டுமென்ற எனதார்வத்தை விட, எனக்கு நன்றாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் எனக்குத் தமிழறிவும் சமய உணர்வும் வாரி வழங்கிய இச்செம்புலச் செல்வரின் செம்மனப் பாங்கு பெரிதும் போற்றத்தக்கது.

    Share
  • மகராசர் காமராசர்!

    மகராசர் காமராசர்!

    பாடல் எழுதியவர் : அண்ணாகண்ணன், சென்னை

    இசையமைத்து, மூன்று மெட்டுகளில் பாடியவர்: ஷைலஜா, பெங்களூரு.

    வாசிக்கக் கல்விச் சாலை
    வயிற்றுக்கு நல்ல சோறு!
    தேசத்தின் வளத்தைக் கூட்ட
    திக்கெட்டும் அணைகள்! ஆலை!
    யோசிக்கும் நொடியில் இந்த
    யுகம்வெல்லும் மனித நேயர்!
    மாசில்லை எனப்பார் போற்றும்
    மகராசர் காம ராசர்!

    வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
    வகுப்புகள் ஆறே கற்றார்!
    பாட்டாளி அவரின் பேரில்
    பல்கலைக் கழகம் இன்று!
    வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
    மீட்பராய் வந்து காத்தார்!
    நேயத்தின் எளிய செல்வர்
    நிகரில்லாக் காம ராசர்!

    இந்தப் பாடலை மூன்று மெட்டுகளில் கேட்க:

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒய்எம்சிஏ பக்தவத்சலம் விடைபெற்றார்!

    ஒய்எம்சிஏ பக்தவத்சலம் விடைபெற்றார்!

    பக்தவத்சலம் அவர்கள், என் மீது தனித்த அன்பு கொண்டவர். என் நூல்களை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அமுதசுரபி வெளியிட்ட நூல்களை இங்கே அறிமுகப்படுத்தினார். அதில் ஒரு நூலைக் கவிஞர் வைகைச்செல்வன் அறிமுகப்படுத்திப் பேசினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ஒரு வார நிகழ்வுக்கு புறநானூறு தொடர்பாக, ஔவை நடராசனார் உரையாற்ற, ஔவை பணித்தபடி அந்த அமர்வுக்கு நான் தலைமை தாங்கினேன். தொடர்ந்து இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை அனுப்பி, தொலைபேசியிலும் எனக்கு அழைப்பு விடுப்பார். சரியான நேரத்தில் நிகழ்வைத் தொடங்கி, குறித்த நேரத்தில் நிறைவு செய்வார். நற்றமிழில், செறிவாக உரையாற்றும் பாங்குடையவர். நிகழ்வுக்கு வரவேற்புரை ஆற்றுவதுடன், பேச்சாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தி, பேசிய பிறகு அதன் சுருக்கத்தையும் எடுத்துரைத்துப் பாராட்டுவார். பண்பாளர் பக்தவத்சலம் அவர்களின் மறைவுக்குத் தனிப்பட்ட முறையிலும் வல்லமை சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னார் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். – அண்ணாகண்ணன்

    இலக்குவனார் திருவள்ளுவன்

    செவ்வாய்தோறும் சென்னையில் தமிழ்க்கூடலை நிகழ்த்தி வந்த பொறியாளர் கெ. பக்தவத்சலம் இன்று (ஆனி 16, 2051/30.06.2020) காலை 8.30 மணியளவில் அயராது ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளில் இருந்து விடைபெற்றார்.

    கிறித்துவ இலக்கியக்கழகத்தின் (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் என்றதும் அறியாதார் கிறித்துவ அமைப்பின் வாதுரை மன்றம் என எண்ணுவர். ஆனால் தமிழ்வளர்க்கும்  தமிழ் ஆர்வலர்களின் சங்கமம் இது என்பதைத் தமிழன்பர்கள் அறிவர். சொல்லின் செல்வர் இரா. பி. சேது (பிள்ளை) அவர்களை முதல் தலைவர்களாகக் கொண்டு 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. இதில் 1966ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயலராகத் திறம்படச் செயலாற்றி வருகிறார்.

    தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் அமைப்பு ஒன்றின் செயலராகத் தொடர்ந்து 54 ஆண்டுகள் தொண்டாற்றுவது அருவினைச்செயலாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் முதல்நிலைத் தமிழறிஞர்களும் வளர்நிலைத் தமிழாசிரியர்களும் மலர்நிலை தமிழ் ஆய்வாளர்களும் பங்குபெற்றுள்ளனர். அவ்வாறு பங்கேற்கா அறிஞர் யாருமிலர் எனலாம். இவரது செவ்வாய்க்கிழமை நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதும் சூழலை இவர் உருவாக்கினார்.

    1958இல் இளநிலைப்பொறியாளராகத் தம் பணி வாழ்வை சென்னை மாநகராட்சியில் தொடங்கினார். பொறியியல் சான்றிதழ்க் கல்வியை முடித்தவர் தணியாத் தமிழார்வத்தால் குமுகவியலில் இளங்கலைப் பட்டத்தையும் அரசறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். என்றாலும் பள்ளிப்பருவத்தில் தமிழில் மிகுதியாக மதிப்பெண் பெற்ற இவர் நாட்டம் முழுமையும் தமிழில்தான் இருந்தது.  தம் வீட்டிற்கே ‘தமிழ் இல்லம்’ என்று பெயர் சூட்டியவர் தமிழை எங்ஙனம் மறக்க இயலும்? மாணவப் பருவத்திலேயே ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தனிஅரசு, சி.பி.சிற்றரசுவின் தீப்பொறி, கவியரசு கண்ணதாசனின் தென்றல், நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். பணிவாழ்க்கையில் இணைந்தாலும் தமிழ் வாழ்வாக மாற்றிக் கொண்டார்.

    ‘நித்திலக்கோ’ என்னும் புனைபெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இளந்தமிழன், தாமரை, ஓம் சக்தி வாசகர்கள் இவரை நன்கு அறியும் வகையில் அவற்றில் சிறப்பான கட்டுரைகளைப் படைத்து வந்தார்.

    கி.இ.க. (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிஞர்களின் உரைகளைக் குறிப்பெடுத்து இலக்கிய இதழ்களுக்கு அனுப்பி வந்தார்.

    தமிழக அரசின் திருக்குள்நெறி பரப்பு மையம் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருதும், பெரியார் நூலக வாசகர் வட்டம் ‘பெரியார் விருது’ம் வழங்கியுள்ளன. உலகத்திருக்குறள் பேரவை, வில்லிவாக்கம் திருக்குறள் வாழ்வியல் சங்கம், வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம், சென்னை நண்பர்கள் கழகம் முதலான தமிழ் அமைப்புகளும் இவருக்கு விருதுகளும் பாராட்டிதழ்களும் அளித்துச் சிறப்பித்துள்ளன. முகம்மாமணி, கவிதை உறவு முதலான இதழ்கள் இவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

    வேதநாயகர், அறம் வளர்த்த ஆன்றோர்கள், புகழாளர்கள் முதலான நூல்களை எழுதித் தமிழான்றோர்களை இக்காலத்தலை முறையினர் உணரச்செய்தார். இலக்கியக்கூட்டங்களில் இவர் ஆற்றிய பொழிவுகளும் வானொலி, தொலைக்காட்சி உரைகளும் மென்மையும் நுண்மையும் மிக்கன. இச்சிறப்பின் காரணமாகத்தான் ‘சன்’தொலைக்காட்சியில் இவர் ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சியில் இருமுறை பங்கேற்றார்.

    மேதை வேதநாயகம் மீது பற்று கொண்டு அவரது நினைவு மலரைச் சிறப்பாகத் தொகுத்து தந்தார். அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரைவயில் அவர் குறித்துச் சிறப்பாகப் புகழுரை வழங்கினார்.

    வாசுதேவ(பிள்ளை) அறக்கட்டளையின் அறங்காவலராகத் திகழ்ந்தும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், வானவில் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பேற்றும் ‘கருணீகர் நல்வாழ்வு’ இதழின் சிறப்பாசிரியராக இருந்தும் பிற பொதுவாழ்விலும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

    இலக்கிய உரைகள், கவிதைகள், தொடர் சொற்பொழிவுகள், இலக்கியத் திறனாய்வுகள் என அறுநூற்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளால் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்‘ எனத் தமிழன்னைக்கு வாரந்தோறும் தமிழ்மாலை அணிவித்து வந்த செம்மல் தம் பணிகளில் இருந்து விடை பெறுகிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் வாழும் கவிஞர்கள் குறித்து ஆற்றிய 200 தொடர் சொற்பொழிவுகளாகும்.

    கணிணிவழிக் கிரந்தத்திணிப்பு எதிர்ப்பிற்காக “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா” என நிகழ்ச்சி நடத்தி என்னைச் சிறப்புரையாற்றச் செய்தார். என் தலைமையில் இவர் வள்ளலார்பற்றி ஆற்றிய உரை, வள்ளலார் குறித்த சிறந்த இலக்கிய ஆய்வாகும்.

    ஆட்சித்துறையினர், நீதித்துறையினர், திரைத்துறையினர், இதழியல்துறையினர், கலைத்துறையினர், முதலான எத்துறையில் இருந்தாலும் தமிழ் ஆர்வலர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது இவரின் தனிச்சிறப்பு. அயல்வாழ் தமிழறிஞர்கள் இங்கு வரும்பொழுது அவர்களை அழைத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவார்.

    அறிஞர்களின், கவிஞர்களின் பிறந்தநாள் விழாக்கள், நினைவு விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றைச் சிறப்புடன் நடத்துவதும் இவரின் செயற்சிறப்பு. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நடத்தியதுடன் அதற்கு முன்பும் பின்புமாகத் தொடர்ந்து 35 ஆண்டுகள் இலக்குவனார் நினைவரங்கம் நிகழ்த்தி அவர் மீதான அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தியுள்ளார். எந்த ஓர் அமைப்பும் எந்தத் தமிழறிஞருக்கும் இவ்வாறு தொடர்நினைவரங்கம் நிகழ்த்தியதில்லை!

    இவருக்குத் தோன்றாத் துணையாக விளங்கிய மனைவி திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் ஈராண்டுகளுக்கு முன்னர் மறைந்து அவருக்குப் பெருந்துயரம் தந்தார். இன்றோ இவரே மறைந்து தம் வழியில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றப்பணிகளில் ஈடுபட்டுத் துணைச்செயலராகத் திகழும் மகன் பேரா. தாமரைக்கண்ணன், பெண் மக்கள் திருவாட்டி கல்யாணி, திருவாட்டி சுமதி, பெயரர்கள், தமிழ்ச்சுற்றத்தார் துயருற நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார்

    வாழும் பொழுது ஓய்வு எடுக்காமல் பணியாற்றியதால் வாழ்வில் இருந்து பெறும் ஓய்வே தமிழ்ப்பணிக்குமான ஓய்வானது.

    அண்மையில் உடல் நலமுற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அலைபேசி வழி உரையாடினார். மகுடைத் தொற்றால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாதது குறித்து வருந்தினார். அவருக்கான ஓய்வுக்காலமாகக் கருதுமாறும் வரும் தைத்திங்களில் பட்டிமன்ற நிகழ்ச்சி, பட்டிமன்ற முத்துவிழா, தமிழர்திருநாள் எனச் சிறப்பாக  நடத்தலாம் என்றும் அமைதிகாக்குமாறும் தெரிவித்தேன். திசம்பரில் வரும் அவரின்பிறந்தநாள் பெருமங்கலத்தையும் அப்பொழுது இணைத்துக் கொண்டாட வேண்டும் என்றேன். ஆனால், காலன் அதற்கான வாய்ப்பை நல்கவில்லையே!

    தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், இலக்குவனார் இலக்கிய இணையம் இலக்குவனார் இலக்கியப்பேரவை, அம்பத்தூர், அகரமுதல இதழ் ஆகியவற்றின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

    இனியும் கி.இ.க.பட்டிமன்றத்தில் “செவ்வாய்தோறும் செந்தமிழ்” முழங்கும். ஆனால், அங்கே தமிழ்த்தாய் இவரைத் தேடுவார்!

    நன்றி: அகரமுதல

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 10

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 10

    மீ. விசுவநாதன்

    “பக்தர்களின் பிராத்தனை”

    சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள்
    சுருண்டு தவித்த காலம்
    மொட்டுக்கள் மலர்கள் எல்லாம்
    மௌனம் காத்த நேரம்
    சிட்டுக்கள் பெரியோர்கள் கூடி
    சிருங்க கிரியின் யோகி
    பட்டுத்தாள் பணிந்த ழைக்க
    பாரதீதீர் தருமே வந்தார்! (91)

    வான்மழை வேண்டும்; மக்கள்
    மனங்குளிர வேண்டும்; பூஜை
    தேன்மலர்ச் சோலை வேண்டும்;
    தெய்வப்பெண் மீனாள் ஆட்சி
    தானெனும் சிறப்பு வேண்டும்;
    தவத்தோராம் பாதம் பட்டு
    நானெனும் அகந்தை நீங்கி
    நல்மதுரை வாழ வேண்டும்!  (92)

    மக்களின் பிராத்தனை கேட்டு
    மகானும் வழியைச் சொன்னார்!
    தக்கதோர் பூஜையும் செய்தார்;
    தட்டா வானம் கொட்ட
    திக்கெலாம் நீரது பாய
    தெரிந்த பச்சை எங்கும்
    தக்கதோர் செழிப்பினைக் காட்ட
    தரணி மகிழ்ந்த தம்மா!     (93)

    “அன்னை ஸ்ரீ மீனாட்சி தரிசனம்”

    மீனாட்சி சுந்தரர் பார்த்து
    முறையாய் தியானம் செய்தார்!
    ஆனாலும் அவருளே உள்ள
    அன்பு சிவமே பொங்கும்
    தேனாக எதிரிலே நிற்கும்
    தெய்வக் காட்சி என்று
    வானோர்கள் மெச்சிடும் யோகி
    வணங்கி வலமும் வந்தார்!   (94)

    “சொன்னபடி வாழும் யோகி”

    சொன்னால் செய்வார்; தானே
    சொன்ன வண்ணம் வாழ்வார்!
    தன்னால் முடியு மென்ற
    தலைக்க னமிலாப் பண்பால்
    பின்னால் வரும்நல் வம்சம்
    பிழைக்கே ஆளா காமல்
    முன்னோர் சென்ற பாதை
    முறையைப் போற்றி நிற்பார்! (95)

    “கற்றோரை விரும்பும் துறவி”

    தெரியா விபரம் தன்னை
    தெரிவிக்கும் மனிதர் முன்னே
    சரியாய்ச் செவிகள் தீட்டி
    தம்முள்ளே வாங்கிக் கொள்வார்!
    விரிவாய் விளக்கம் சொல்லும்
    வித்வத்மா சபையோர்க் கெல்லாம்
    அரிதாய்ப் பொருள் சொல்லி
    ஆன்றோரை மகிழ வைப்பார்!   (96)

    “குழந்தைகளின் உமாச்சித் தாத்தா”

    இந்தா மாம்பழ மென்று
    எதிரே குழந்தை கையில்
    பந்தா இன்றியே கொஞ்சி
    பச்சை மனத்தை எல்லாம்
    சொந்த மாக்கிடச் செய்வார்
    சூர்ய ஒளிபோல் தூயர்!
    இந்த பாரதீ தீர்த்தர்
    என்று சொல்லு வேனே ! (97)

    “அன்பே சிவமானவர்”

    அன்ன சாலை கட்டி
    அனைவரும் உண்ணச் செய்வார்!
    இன்னும் இன்னும் என்று
    எளியரும் கல்வி கற்கத்
    தன்னால் ஆன மட்டும்
    தரமுடை பாட சாலை
    நன்றாய் ஏற்ப டுத்தி
    நன்மையை ஓங்க வைப்பார்!  (98)

    மாணவ மணிகள் வந்தால்
    மந்திரம் சொல்லச் சொல்வார்!
    நாணமும் , பக்தி யோடும்
    மடமட வென்று கூறி
    ஆணவ மற்று நிற்கும்
    அழுக்கிலா குழந்தை யர்க்கு
    பாணதீர்த் தத்தின் நீராய்
    பாரதீ தீர்த்தர் காப்பார் !  (99)

           “மௌனம்”

    நதிநீ ராடல் இன்பம்;
    நல்லோர் நட்பு இன்பம்;
    உதிக்கும் கதிரோன் இன்பம்;
    உண்மை ஒளியே இன்பம்;
    விதியைப் பார்த்துக் கேலி
    செய்யும் துறவி கொண்ட
    மதியின் தெளிவு இன்பம்;
    மௌனம் மேலாம் இன்பம்!  (100)

    (ஸ்ரீ பாரதீ  தீர்த்த   யாத்திரை    முதல் பாகம் நிறைந்தது)

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9

    மீ. விசுவநாதன்

    “பிறவி நீங்க வழி”

    பிறவியாம் கடலில் நீந்திப்
    பேரின்பக் கரையில் ஏறத்
    துறவியின் பாதம் பற்றத்
    தோன்றியதோர் நேரம் என்னுள்
    குருவிபோல் சிறக டித்துக்
    குழந்தையென வந்த மர்ந்த
    குருஎவர் சொல்சொல் என்றால்
    சொல்பார தீதீர்த் தர்தான்.  (81)

    “ஸ்ரீ சங்கர வழி”

    திங்களைச் சுமக்கும் ஈசன்
    தேடிக் காலடி தோன்றி
    சங்கரர் என்ற பேரால்
    அத்வை தப்பயிர் பேண
    அங்கவர் செய்த தெல்லாம்
    அகிலம் போற்றிடும் வண்ணம்
    இங்கவர் சீடர் செய்தார்
    எளியோர்க் கிரங்கிடும் தீர்த்தர். (82)

    பொறுமை, கனிவு, கல்வி,
    புதுமை, பக்தி, ஞானம்
    வெறுமை தோன்றா உள்ளே
    வேத கோஷப் பள்ளி;
    வறுமை கொண்ட பேர்க்கு
    வாரி வழங்கும் வள்ளல்
    இருமை வென்ற யோகி
    இவரே என்று சொல்வேன்  (83)

    “கல்யாணபுரி விஜயம்”

    கல்லிடைக் குறிச்சி ஊரில்
    கணக்கிலா பக்தர் உண்டு.
    நல்மனம் கொண்ட பேர்கள்
    ஞானியைப் போற்று கின்ற
    துல்லிய தூயோர் உண்டு;
    துயரென வருவோர்க் கெல்லாம்
    நெல்மணி வாரித் தந்து
    நிம்மதி பெறுவோர் உண்டு. (84)

    அங்கொரு வருடம் வந்தார்
    அரும்பெரும் குருநா தர்தான்!
    எங்குமே சீடர் கூட்டம்
    இணையிலா பக்தி யோடு
    தங்களின் குருவைக் கண்டு
    தங்கமாய்ப் பொலிந்தி ருந்தார்!
    அங்கொரு கோவில் காண
    அழைத்தனர் ஆசார் யாளை ! (85)

    “கிராமக் கோவில் தரிசனம்”

    அழகினைச் சுமந்த கோவில்
    அற்புதத் தெய்வக் காட்சி
    பழகிய நண்பர் போலே
    பரமனைத் தொழுதார் யோகி!
    “பழமையாய் இருந்த தெல்லாம்
    பார்த்துநான் புதுமை செய்தேன்
    தொழுகிற இடங்கள் எங்கும்
    தொடர்பணி செய்து வந்தேன் ” (86)

    “பக்தரின் நானை நீக்கிய குருநாதர்”

    என்றவர் நடக்கும் போது
    இடறிய நேரம் கொஞ்சம்
    நின்றவர், ” இந்தக் கல்லே
    இடித்ததால்  விரலில் ரத்தம்
    என்றதும், “ஓய்ஓய் நீங்கள்
    இதுவரை என்ன சொன்னீர்!
    மன்றிலே எல்லாம் நானே
    மதிப்புடன் செய்தேன் என்றீர்!  (87)

    நடந்திடும் போது கல்லில்
    நறுக்கென நீர்தான் முட்டி
    படக்கென விழவும் பார்த்தீர்!
    பழிதனைக் கல்லில் போட்டீர்!
    திடமுடன் இதையும் நானே
    செய்ததாய்ச் சொல்லும்” என்று
    மடமதி அகந்தை நீக்க
    வழியதைச் சொன்னார் ஞானி ! (88)

    “பணிந்த சீடருக்கு ஆசி”

    குறைதனை உணர்ந்த சீடர்
    குருவினை வணங்கி விட்டு,
    “இறைவனே எனக்கு நீங்கள்!
    இப்படி என்னுள் உள்ள
    கறைதனை நீக்கி உங்கள்
    கருணையால் என்னைக் காத்தீர்!
    மறையினைப் போன்ற உங்கள்
    மகிமையைப் பணிவே னென்றார் ! (89)

        “மதுரைக்கு விஜயம்”

    “உழைப்பாலே உயரும் பூமி
    உமையாளின் செல்ல ஊர்தான்
    பிழைப்புக்காய் வந்த பேரை
    பிரியமுடன் காக்கும் மீனாள்!
    அழைத்தவுடன் அவளைக் கண்டு
    அருள்மழையில் நனைய எண்ணி
    மழைக்காக மக்கள் ஏங்கும்
    மதுரைக்கு விஜயம் செய்தார்!   (90)

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8

    மீ. விசுவநாதன்

    குருவின் மகிமை

    சாரதா பீடம் தன்னில்
    தரவழி குருவம் சத்தை
    பாரதீ தேவி என்றே
    பக்தரும் பணிவ துண்டு!
    ஆயிரம் சான்று சொல்லி
    அவைகளை விளக்க லாம்தான்!
    தாயது அன்பை எந்தத்
    தராசினால் கணக்குப் பார்க்க? (71)

    ஒன்றி ரெண்டு காட்ட
    உயர்வு தெரியு மென்று
    இன்றி தையே இங்கு
    எளிதாய் எழுது கின்றேன்!
    தென்றல் காற்று தங்கத்
    தேரில் வருதல் போல
    தென்தி சைக்கு ஆசான்
    சீட ருடனே வந்தார்! (72)

    குருவும் சீடரும் தென்திசைப் பயணம்

    சத்திய மங்கலம் வந்தார்
    சந்திர சூரியர் போல!
    நித்தியக் கடமையாம் பூஜை
    நியமமும் உரையுமே செய்தார்!
    சத்திய உரையினைத் தங்கள்
    சன்னிதா னம்தமி ழில்தான்
    சுத்தமாய்ப் பேசிய பேச்சில்
    சொக்கியே போனதாம் சத்யம்! (73)

    பன்மொழி வித்தகர்

    பன்மொழிப் புலமை கண்டு
    பாரதீ தீர்த்தர் மீது
    பன்மொழிப் புலவோர் கூட்டம்,
    பாமரர் கூட்ட மென்று
    அன்பினால் பக்தி செய்வோர்
    ஆயிரங் கோடி என்று
    நன்றியால்க் கண்ணீர் மல்க
    நானிலம் கூறக் கேட்டேன்! (74)

    பற்றறுத் தோன்தாள் பணி

    கல்லில் வடித்த சிற்பம்
    கணக்கில் கல்லா னாலும்
    நல்லுள் ளத்துள் தானே
    ஞான ஒளியாய்த் தோன்றும்!
    சொல்லி வருவ தில்லை
    துறவு! சொல்லா மல்தான்
    மல்லி மலரைப் போல
    மனத்துள் வாசம் செய்யும் ! (75)

    அமைதி வேண்டும் என்றால்
    அன்பு பெருக வேண்டும்!
    சுமையாம் வாழ்வு தன்னை
    சுகமாய் மாற்ற வேண்டி
    தமையே மறந்து கொஞ்சம்
    தனது கண்கள் மூட
    இமையோன் சிவனைப் போல
    இருப்பார் சன்னி தானம்! (76)

    தன்னைப் பணியும் பக்தன்
    தரத்தைப் பார்க்கா வண்ணம்
    அன்னை தரத்தில் நின்று
    அருளும் உயர்ந்த வள்ளல்!
    முன்னோர் சென்ற பாதை
    மூத்தோர் செய்த புண்யம்
    என்னைப் போன்ற வர்க்கு
    எளிதாய்ச் சேர்ந்த செல்வம்! (77)

    சிக்கெனப் பற்றுக பற்றுவிட

    ஊரென அறிந்தேன் அல்லேன்
    உறவினை அறிந்தேன் அல்லேன்
    பேரெனக் கேட்கும் முன்னே
    பிரியமாய் பக்தி செய்தேன்
    தூரென இருந்த உள்ளம்
    தூயதாய் ஆவ தற்கு
    பாரதீ தீர்த்தர் பாதம்
    பணிவதே என்று ணர்ந்தேன் ! (78)

    எதிலும் ஒழுங்கு

    திருநீற்றில் நேர்த்தி; ஆடை
    திருமேனி கொள்ளல் நேர்த்தி;
    வரும்வார்த்தை எல்லாம் நேர்த்தி;
    வண்ணப்பூ வெடுத்து ஈசன்
    உருமீது மெல்ல வைத்துப்
    பூஜைசெய்யும் நேர்த்தி என்று
    தருணமெலாம் நேர்த்தி யான
    தவசியேஸ்ரீ சன்னி தானம்! (79)

    அன்பே சிவம்

    மானிடம் அன்பு காட்டி
    மயிலிடம் பரிவு கூட்டி
    தேனிபோல் நல்ல தெல்லாம்
    தேடியே தினமும் சேர்த்து
    மானிடப் பண்பு ஓங்க
    மறைவழி வாழும் யோகி
    தானினை வென்ற சான்றோர்
    பாரதீ தீர்த்தர் என்பேன். (80)

    (யாத்திரை தொடரும்)

    Share
  • இனி விடமாட்டேன்

    இனி விடமாட்டேன்

    அண்ணாகண்ணன்

    ஆசிரியரின் குரலில் இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்.

     

    விட்டதைப் பிடிப்பேன்
    விடமாட்டேன் இனி விடமாட்டேன்
    தொட்டதை முடிப்பேன்
    விழமாட்டேன் தலை கவிழமாட்டேன்

    உள்ளதைச் சொல்வேன்
    கட்டமாட்டேன் இட்டுக் கட்டமாட்டேன்
    நல்லதைச் செய்வேன்
    ஒட்டமாட்டேன் தீயில் ஒட்டமாட்டேன்

    கண்டதை ரசிப்பேன்
    மூடமாட்டேன் விழி மூடமாட்டேன்
    கொண்டதைக் கொடுப்பேன்
    பாடமாட்டேன் பஞ்சம் பாடமாட்டேன்

    விண்ணிலே பறப்பேன்
    படமாட்டேன் அடை படமாட்டேன்
    மண்ணிலே விதைப்பேன்
    வேர்த்திருப்பேன் மலர் பூத்திருப்பேன்

    புன்னகை விரிப்பேன்
    அழமாட்டேன் அஞ்சித் தொழமாட்டேன்
    இன்றினில் வாழ்வேன்
    இசைத்திருப்பேன் திசை அசைத்திருப்பேன்!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share