ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9

மீ. விசுவநாதன்

“பிறவி நீங்க வழி”

பிறவியாம் கடலில் நீந்திப்
பேரின்பக் கரையில் ஏறத்
துறவியின் பாதம் பற்றத்
தோன்றியதோர் நேரம் என்னுள்
குருவிபோல் சிறக டித்துக்
குழந்தையென வந்த மர்ந்த
குருஎவர் சொல்சொல் என்றால்
சொல்பார தீதீர்த் தர்தான்.  (81)

“ஸ்ரீ சங்கர வழி”

திங்களைச் சுமக்கும் ஈசன்
தேடிக் காலடி தோன்றி
சங்கரர் என்ற பேரால்
அத்வை தப்பயிர் பேண
அங்கவர் செய்த தெல்லாம்
அகிலம் போற்றிடும் வண்ணம்
இங்கவர் சீடர் செய்தார்
எளியோர்க் கிரங்கிடும் தீர்த்தர். (82)

பொறுமை, கனிவு, கல்வி,
புதுமை, பக்தி, ஞானம்
வெறுமை தோன்றா உள்ளே
வேத கோஷப் பள்ளி;
வறுமை கொண்ட பேர்க்கு
வாரி வழங்கும் வள்ளல்
இருமை வென்ற யோகி
இவரே என்று சொல்வேன்  (83)

“கல்யாணபுரி விஜயம்”

கல்லிடைக் குறிச்சி ஊரில்
கணக்கிலா பக்தர் உண்டு.
நல்மனம் கொண்ட பேர்கள்
ஞானியைப் போற்று கின்ற
துல்லிய தூயோர் உண்டு;
துயரென வருவோர்க் கெல்லாம்
நெல்மணி வாரித் தந்து
நிம்மதி பெறுவோர் உண்டு. (84)

அங்கொரு வருடம் வந்தார்
அரும்பெரும் குருநா தர்தான்!
எங்குமே சீடர் கூட்டம்
இணையிலா பக்தி யோடு
தங்களின் குருவைக் கண்டு
தங்கமாய்ப் பொலிந்தி ருந்தார்!
அங்கொரு கோவில் காண
அழைத்தனர் ஆசார் யாளை ! (85)

“கிராமக் கோவில் தரிசனம்”

அழகினைச் சுமந்த கோவில்
அற்புதத் தெய்வக் காட்சி
பழகிய நண்பர் போலே
பரமனைத் தொழுதார் யோகி!
“பழமையாய் இருந்த தெல்லாம்
பார்த்துநான் புதுமை செய்தேன்
தொழுகிற இடங்கள் எங்கும்
தொடர்பணி செய்து வந்தேன் ” (86)

“பக்தரின் நானை நீக்கிய குருநாதர்”

என்றவர் நடக்கும் போது
இடறிய நேரம் கொஞ்சம்
நின்றவர், ” இந்தக் கல்லே
இடித்ததால்  விரலில் ரத்தம்
என்றதும், “ஓய்ஓய் நீங்கள்
இதுவரை என்ன சொன்னீர்!
மன்றிலே எல்லாம் நானே
மதிப்புடன் செய்தேன் என்றீர்!  (87)

நடந்திடும் போது கல்லில்
நறுக்கென நீர்தான் முட்டி
படக்கென விழவும் பார்த்தீர்!
பழிதனைக் கல்லில் போட்டீர்!
திடமுடன் இதையும் நானே
செய்ததாய்ச் சொல்லும்” என்று
மடமதி அகந்தை நீக்க
வழியதைச் சொன்னார் ஞானி ! (88)

“பணிந்த சீடருக்கு ஆசி”

குறைதனை உணர்ந்த சீடர்
குருவினை வணங்கி விட்டு,
“இறைவனே எனக்கு நீங்கள்!
இப்படி என்னுள் உள்ள
கறைதனை நீக்கி உங்கள்
கருணையால் என்னைக் காத்தீர்!
மறையினைப் போன்ற உங்கள்
மகிமையைப் பணிவே னென்றார் ! (89)

    “மதுரைக்கு விஜயம்”

“உழைப்பாலே உயரும் பூமி
உமையாளின் செல்ல ஊர்தான்
பிழைப்புக்காய் வந்த பேரை
பிரியமுடன் காக்கும் மீனாள்!
அழைத்தவுடன் அவளைக் கண்டு
அருள்மழையில் நனைய எண்ணி
மழைக்காக மக்கள் ஏங்கும்
மதுரைக்கு விஜயம் செய்தார்!   (90)

Leave a Reply

Your email address will not be published.