ஒய்எம்சிஏ பக்தவத்சலம் விடைபெற்றார்!

பக்தவத்சலம் அவர்கள், என் மீது தனித்த அன்பு கொண்டவர். என் நூல்களை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அமுதசுரபி வெளியிட்ட நூல்களை இங்கே அறிமுகப்படுத்தினார். அதில் ஒரு நூலைக் கவிஞர் வைகைச்செல்வன் அறிமுகப்படுத்திப் பேசினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ஒரு வார நிகழ்வுக்கு புறநானூறு தொடர்பாக, ஔவை நடராசனார் உரையாற்ற, ஔவை பணித்தபடி அந்த அமர்வுக்கு நான் தலைமை தாங்கினேன். தொடர்ந்து இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை அனுப்பி, தொலைபேசியிலும் எனக்கு அழைப்பு விடுப்பார். சரியான நேரத்தில் நிகழ்வைத் தொடங்கி, குறித்த நேரத்தில் நிறைவு செய்வார். நற்றமிழில், செறிவாக உரையாற்றும் பாங்குடையவர். நிகழ்வுக்கு வரவேற்புரை ஆற்றுவதுடன், பேச்சாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தி, பேசிய பிறகு அதன் சுருக்கத்தையும் எடுத்துரைத்துப் பாராட்டுவார். பண்பாளர் பக்தவத்சலம் அவர்களின் மறைவுக்குத் தனிப்பட்ட முறையிலும் வல்லமை சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னார் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். – அண்ணாகண்ணன்

இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய்தோறும் சென்னையில் தமிழ்க்கூடலை நிகழ்த்தி வந்த பொறியாளர் கெ. பக்தவத்சலம் இன்று (ஆனி 16, 2051/30.06.2020) காலை 8.30 மணியளவில் அயராது ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளில் இருந்து விடைபெற்றார்.

கிறித்துவ இலக்கியக்கழகத்தின் (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் என்றதும் அறியாதார் கிறித்துவ அமைப்பின் வாதுரை மன்றம் என எண்ணுவர். ஆனால் தமிழ்வளர்க்கும்  தமிழ் ஆர்வலர்களின் சங்கமம் இது என்பதைத் தமிழன்பர்கள் அறிவர். சொல்லின் செல்வர் இரா. பி. சேது (பிள்ளை) அவர்களை முதல் தலைவர்களாகக் கொண்டு 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. இதில் 1966ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயலராகத் திறம்படச் செயலாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் அமைப்பு ஒன்றின் செயலராகத் தொடர்ந்து 54 ஆண்டுகள் தொண்டாற்றுவது அருவினைச்செயலாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் முதல்நிலைத் தமிழறிஞர்களும் வளர்நிலைத் தமிழாசிரியர்களும் மலர்நிலை தமிழ் ஆய்வாளர்களும் பங்குபெற்றுள்ளனர். அவ்வாறு பங்கேற்கா அறிஞர் யாருமிலர் எனலாம். இவரது செவ்வாய்க்கிழமை நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதும் சூழலை இவர் உருவாக்கினார்.

1958இல் இளநிலைப்பொறியாளராகத் தம் பணி வாழ்வை சென்னை மாநகராட்சியில் தொடங்கினார். பொறியியல் சான்றிதழ்க் கல்வியை முடித்தவர் தணியாத் தமிழார்வத்தால் குமுகவியலில் இளங்கலைப் பட்டத்தையும் அரசறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். என்றாலும் பள்ளிப்பருவத்தில் தமிழில் மிகுதியாக மதிப்பெண் பெற்ற இவர் நாட்டம் முழுமையும் தமிழில்தான் இருந்தது.  தம் வீட்டிற்கே ‘தமிழ் இல்லம்’ என்று பெயர் சூட்டியவர் தமிழை எங்ஙனம் மறக்க இயலும்? மாணவப் பருவத்திலேயே ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தனிஅரசு, சி.பி.சிற்றரசுவின் தீப்பொறி, கவியரசு கண்ணதாசனின் தென்றல், நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். பணிவாழ்க்கையில் இணைந்தாலும் தமிழ் வாழ்வாக மாற்றிக் கொண்டார்.

நித்திலக்கோ’ என்னும் புனைபெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இளந்தமிழன், தாமரை, ஓம் சக்தி வாசகர்கள் இவரை நன்கு அறியும் வகையில் அவற்றில் சிறப்பான கட்டுரைகளைப் படைத்து வந்தார்.

கி.இ.க. (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிஞர்களின் உரைகளைக் குறிப்பெடுத்து இலக்கிய இதழ்களுக்கு அனுப்பி வந்தார்.

தமிழக அரசின் திருக்குள்நெறி பரப்பு மையம் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருதும், பெரியார் நூலக வாசகர் வட்டம் ‘பெரியார் விருது’ம் வழங்கியுள்ளன. உலகத்திருக்குறள் பேரவை, வில்லிவாக்கம் திருக்குறள் வாழ்வியல் சங்கம், வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம், சென்னை நண்பர்கள் கழகம் முதலான தமிழ் அமைப்புகளும் இவருக்கு விருதுகளும் பாராட்டிதழ்களும் அளித்துச் சிறப்பித்துள்ளன. முகம்மாமணி, கவிதை உறவு முதலான இதழ்கள் இவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

வேதநாயகர், அறம் வளர்த்த ஆன்றோர்கள், புகழாளர்கள் முதலான நூல்களை எழுதித் தமிழான்றோர்களை இக்காலத்தலை முறையினர் உணரச்செய்தார். இலக்கியக்கூட்டங்களில் இவர் ஆற்றிய பொழிவுகளும் வானொலி, தொலைக்காட்சி உரைகளும் மென்மையும் நுண்மையும் மிக்கன. இச்சிறப்பின் காரணமாகத்தான் ‘சன்’தொலைக்காட்சியில் இவர் ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சியில் இருமுறை பங்கேற்றார்.

மேதை வேதநாயகம் மீது பற்று கொண்டு அவரது நினைவு மலரைச் சிறப்பாகத் தொகுத்து தந்தார். அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரைவயில் அவர் குறித்துச் சிறப்பாகப் புகழுரை வழங்கினார்.

வாசுதேவ(பிள்ளை) அறக்கட்டளையின் அறங்காவலராகத் திகழ்ந்தும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், வானவில் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பேற்றும் ‘கருணீகர் நல்வாழ்வு’ இதழின் சிறப்பாசிரியராக இருந்தும் பிற பொதுவாழ்விலும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

இலக்கிய உரைகள், கவிதைகள், தொடர் சொற்பொழிவுகள், இலக்கியத் திறனாய்வுகள் என அறுநூற்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளால் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்‘ எனத் தமிழன்னைக்கு வாரந்தோறும் தமிழ்மாலை அணிவித்து வந்த செம்மல் தம் பணிகளில் இருந்து விடை பெறுகிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் வாழும் கவிஞர்கள் குறித்து ஆற்றிய 200 தொடர் சொற்பொழிவுகளாகும்.

கணிணிவழிக் கிரந்தத்திணிப்பு எதிர்ப்பிற்காக “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா” என நிகழ்ச்சி நடத்தி என்னைச் சிறப்புரையாற்றச் செய்தார். என் தலைமையில் இவர் வள்ளலார்பற்றி ஆற்றிய உரை, வள்ளலார் குறித்த சிறந்த இலக்கிய ஆய்வாகும்.

ஆட்சித்துறையினர், நீதித்துறையினர், திரைத்துறையினர், இதழியல்துறையினர், கலைத்துறையினர், முதலான எத்துறையில் இருந்தாலும் தமிழ் ஆர்வலர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது இவரின் தனிச்சிறப்பு. அயல்வாழ் தமிழறிஞர்கள் இங்கு வரும்பொழுது அவர்களை அழைத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவார்.

அறிஞர்களின், கவிஞர்களின் பிறந்தநாள் விழாக்கள், நினைவு விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றைச் சிறப்புடன் நடத்துவதும் இவரின் செயற்சிறப்பு. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நடத்தியதுடன் அதற்கு முன்பும் பின்புமாகத் தொடர்ந்து 35 ஆண்டுகள் இலக்குவனார் நினைவரங்கம் நிகழ்த்தி அவர் மீதான அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தியுள்ளார். எந்த ஓர் அமைப்பும் எந்தத் தமிழறிஞருக்கும் இவ்வாறு தொடர்நினைவரங்கம் நிகழ்த்தியதில்லை!

இவருக்குத் தோன்றாத் துணையாக விளங்கிய மனைவி திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் ஈராண்டுகளுக்கு முன்னர் மறைந்து அவருக்குப் பெருந்துயரம் தந்தார். இன்றோ இவரே மறைந்து தம் வழியில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றப்பணிகளில் ஈடுபட்டுத் துணைச்செயலராகத் திகழும் மகன் பேரா. தாமரைக்கண்ணன், பெண் மக்கள் திருவாட்டி கல்யாணி, திருவாட்டி சுமதி, பெயரர்கள், தமிழ்ச்சுற்றத்தார் துயருற நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார்

வாழும் பொழுது ஓய்வு எடுக்காமல் பணியாற்றியதால் வாழ்வில் இருந்து பெறும் ஓய்வே தமிழ்ப்பணிக்குமான ஓய்வானது.

அண்மையில் உடல் நலமுற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அலைபேசி வழி உரையாடினார். மகுடைத் தொற்றால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாதது குறித்து வருந்தினார். அவருக்கான ஓய்வுக்காலமாகக் கருதுமாறும் வரும் தைத்திங்களில் பட்டிமன்ற நிகழ்ச்சி, பட்டிமன்ற முத்துவிழா, தமிழர்திருநாள் எனச் சிறப்பாக  நடத்தலாம் என்றும் அமைதிகாக்குமாறும் தெரிவித்தேன். திசம்பரில் வரும் அவரின்பிறந்தநாள் பெருமங்கலத்தையும் அப்பொழுது இணைத்துக் கொண்டாட வேண்டும் என்றேன். ஆனால், காலன் அதற்கான வாய்ப்பை நல்கவில்லையே!

தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், இலக்குவனார் இலக்கிய இணையம் இலக்குவனார் இலக்கியப்பேரவை, அம்பத்தூர், அகரமுதல இதழ் ஆகியவற்றின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

இனியும் கி.இ.க.பட்டிமன்றத்தில் “செவ்வாய்தோறும் செந்தமிழ்” முழங்கும். ஆனால், அங்கே தமிழ்த்தாய் இவரைத் தேடுவார்!

நன்றி: அகரமுதல

About admin

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க