நாலடியார் நயம் – 37
நாங்குநேரி வாசஸ்ரீ
37. பன்னெறி
பாடல் 361
மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? – விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.
மேகம் தவழும் மாடி உள்ளதாய்
மேன்மைமிகு காவல் உடையதான வீட்டில்
மின்னும் அணிகளே விளக்காய் ஒளிவீசினும்
மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெறாதவனின்
மனை பார்க்கக் கூடாத சுடுகாடேயாம்.
பாடல் 362
வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் – இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
தளர்வில்லா வாளின் காவலிருந்தும்
தம்ஒழுக்கம் தவறி மகளிர் நடப்பாராயின்
சில சொற்களே பேசும் அவர்தம் குற்றம்
செய்யாக்காலம் சிறிதேயிருப்பினும் ஒழுக்கத்தைப்
பெறாத காலம் பெரிது ஆகும்.
பாடல் 363
எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
கணவனை அடிக்கச்சொல்லி எதிர்நிற்பவள்
கொண்டவனுக்கு எமன் போன்றவள்
காலையில் சமையலறைக்குள் புகாதவள்
காலத்துக்கும் போக்க முடியா நோய்
கணவனுக்குச் சமைத்த உணவைத் தராதவள்
கொண்டவன் வீட்டிலுள்ள பிசாசு
கணவனைக் கொல்ல உதவும் படையொத்த
கொலைக் கருவிகளாம் இம்மூவரும்.
பாடல் 364
கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; – பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.
இல்வாழ்வை நீக்கச் சொல்லிப் பெரியோர்
இயம்பியும் நீக்காது தலையே வெடிக்குமளவு
இறப்பில் பறை ஒலிக்கக் கேட்டும்
இல்வாழ்க்கை நிலையில்லாதது என
இருக்காது மறுபடியும் திருமணம் புரிந்து
இன்புற்றிருக்கும் மயக்கம் ஒருவன் கல்லை
இயல்பாய் எடுத்துத் தன்மேல் எறிந்துகொள்ளும்
இன்னாச் செயல் போலும் குற்றமாம்.
பாடல் 365
தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் – கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.
தவத்துக்குரிய செயலில் முயன்று வாழ்தல்
தலையாய நிலையாம் இனிய குணமுள்ள
தம் மனைவியுடன் வாழ்தல் இடைப்பட்ட நிலை
தனக்குக் கிட்டாதெனினும் பொருளாசையால்
தம் பெருமையுணராரைத் தொடர்தல் கடையாய நிலை.
பாடல் 366
கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
நல்ல நூலைக் கற்று வாழ்நாளை
நல்ல பயனுடையதாய்க் கழிப்பர்
நல்லறிவுடைத் தலைமையான அறிவினர்
நல்லபொருளை அனுபவித்துத் தம் வாழ்வை
நடத்துவர் இடைப்பட்டவர், கீழ்மக்களோ உண்ண
நல்லுணவு கிட்டவில்லையே, செல்வத்தை மிகுதியாய்
நாம் பெறமுடியவில்லையே என வருந்தி
நல்லுறக்கமின்றி நாளும் கழிப்பர் தம் வாழ்வை.
பாடல் 367
செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.
நல்ல நெற்களால் உண்டான நல்விதைகள்
நற்செம்மை நெல்லாகவே விளைவதால்
நிறைந்த வயல்சூழ் நாட்டின் வேந்தனே!
நல்லறிவு தந்தைக்கு வாய்க்கப்பெற்றாலந்த
நல்லறிவு மகனுக்கும் இருக்கும்.
பாடல் 368
உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
பெருஞ்செல்வரும் சான்றோரும் தம்நிலை தாழ்தலும்
புறப்பெண்டிரின் மக்களும் கீழ்மக்களும் உயர்வெய்தலும்
காலருகே இருக்கவேண்டியது தலைப்புறமாகி
குடையின் காம்புபோல் உலகம் கீழ்மேலாய்
கிடக்கும் நிலையற்ற தன்மை கொண்டது.
பாடல் 369
இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; – மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
இரத்தினங்களை வாரிக்கொண்டு விழும்
இனிய அருவிகளுடை மலைநாட்டு மன்னனே!
தம் நண்பர்கள் மனத் துன்பத்தைக்கூற அதைத்
தீர்க்க நினையாக் கல்நெஞ்சம் உடையோர்
வாழ்வதை விட மலை மேலேறிக் குதித்து
வீழ்ந்து உயிர்விடுதல் நல்லதாம்.
பாடல் 370
புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; – புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.
புது வெள்ளத்தால் வந்த நீரும்
பொதுமகளிரின் நட்புமாகிய இரண்டும்
பொறுமையாய் ஆராய்ந்தால் வேறல்ல.
புதுநீர் நீங்கும் மழைநின்றால்
பொதுமகளிரின் அன்பு நீங்கும்
பொருள் வரவு நீங்கின்.