திருச்சி புலவர் இராமமூர்த்தி

ஆரம்என்பு புனைந்த  ஐயர்தம்   அன்பர் என்பதோர்  தன்மையால்
நேர வந்தவர்  யாவராயினும்   நித்த   மாகிய   பக்திமுன்
கூர வந்தெதிர்   கொண்டு கைகள்  குவித்து நின்று  செவிப்புலத்து
ஈர மென் மதுரப்பதம் பரிவெய்த  முன்னுரை செய்தபின்

உரை:

ஆரமும் எலும்பும் அணிந்த ஐயர்தம்   அன்பர்கள் என்ற ஒரே தன்மையினை எண்ணி, அதனையே காரணமாக வைத்து, அடியார்களை நோக்கி , முன்னே வந்தவர்கள் யாவரேயாயினும்,  உறுதியாகி நிலைத்த பத்தி கூர வந்து எதிர் கொண்டு  வாயார அழைத்துக் கை குவித்து எதிரே வணக்கமாக நின்று அவர்கள் கேட்குமாறு குளிர்ந்த அன்பான இனிய மொழிகளை அவர்கள் அன்புகொள்ளுமாறு சொல்லி அதன் பின்,  (அடுத்த பாடலுடன்  பொருள் முடியும்)

விளக்கம்:

கழுத்து மாலையாக  எலும்பை   அணிந்தவர் சிவபிரான். இவரை இப்பாடல் ‘’ஆரம் என்பு புனைந்த  ஐயர்‘’ என்று பாடுகிறது.  உலகம் அழியும் காலத்தில் இறந்து விட்ட பிரமன், திருமால் ஆகியோரின் எலும்புகளை அணிந்து சங்கார  நடனம் ஆடியவர் அவர். படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும், தேவர்களும்  அழிந்தபின்னும்,  நித்தியராய் உள்ளவர் அவர். அவரே தலைவர் என்பதை ஐயர் என்ற  சொல் குறித்தது! இதனைத்   திருவாசகம்,

‘’கண் நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
எண் இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண்‘’

என்றும்,

நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர்
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

என்றும், பாடுகின்றது. திருமந்திரம்

“எலும்புங் கபாலமு மேந்தில னாகில்,
எலும்புங்கபாலமு மிற்றுமண் ணாமே“

என்றவாறு, இவர் ஏந்திப் புனைந்ததனால் அவை இற்றுப்போகாது நின்றன. நித்தராகிய இவர் அன்பர்களும் தாமும் நித்தராவார்; தம்மை அடைந்தாரையும் நித்தர்களாக்குவார்; ஆதலின் அன்பர் என்பதோர் தன்மையை நாடினார் என்பது குறிப்பு.  அன்பர் என்ற ஒரே தன்மையினாலே  வேடம், பாவனை, செயல் என்பனவும் கொள்ளப்பெறும்.

‘’பத்திமுன்கூர’’  என்ற தொடர்  – தம்மிடத்திலே நித்தியமாய் – இயல்பாய் – அமைந்த அடியார் பத்தி முன்னே சிறப்பாய்க் கூர்ந்து கூடிற்று.

அடியார்களை வந்து எதிர்கொண்டபின், அவர் செவியில் அன்பு கலந்த மெல்லிய சொல் கூறினார். இவ்வாறு பரிவெய்த – அன்பர்கள் தம்மிடத்துக் கருணை கூரும்படி. முன்உரை செய்த பின் – முன் – அவர்கள் முன்பு. எதிர்கொண்டு  கைகுவித்து நிற்றலுக்குமுன் என்றலுமாம். வாக்கு இன்னுரை முன் சொல்லிக்கொண்டே செல்ல, அதனுடன் எதிர் கொள்ளுதலும் கைகுவித்தலும் நிகழ்ந்தன. ஆயினும் அன்பர்கள் கண்ணுக்கு அச்செயல்கள் முன்னர்த் தோன்றின; மொழிகள் பின்னரே கேட்டன. காட்சிப் புலப்படுக்கும் ஒளியலைகள் வேகத்தால் மிக்கனவும், செவிப்புலப்படுக்கும் ஓசையலைகள் வேகத்தால் அவற்றினும் மிகக் குறைந்தனவுமா மென்பர் விஞ்ஞான நூலார். ஆதலின் அம்முறையே கண்ட செயலை முன்னர்க் கூறிக் கேட்ட சொல்லைப் பின்னர்க் கூறினார்.

அடியார்களைக்ள் கண்டபோதே விரைந்து எதிர் செல்லுதலும், அவர்முன் நின்று மென்மையான சொற்களைக் கூறுதலும் விருந்தோம்பலின் செயல்கள் ஆகும்.  இப்பாடலுடன் அடுத்த பாடலையும் பொருளுணர்ந்து கூற வேண்டும்.

இப்பாடல் சைவ நன்மக்கள் நிகழ்த்தும் சங்கம வழிபாட்டின் அங்கமாகிய  மாகேசுர பூசையின் சிறப்பைக் காட்டுகிறது. இத்துடன் அடுத்த திருப்பாடலையும் சேர்த்துப் பாடுவது மாகேசுர பூசையில்  எப்போதும் நிகழ்வதாகும். அடியார்களை  வரவேற்கும் முறை இங்கே கூறப்பெறுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *