மாற்றம் (சிறுகதை)

முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
E.mail.Kumaritathithan@gmail.com
கல்லூரியில் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பாடவேளை. மாணவன் கோகுல் வகுப்பறை சன்னல் வழியே தோட்டத்தில் எச்சிலைத் துப்பினான். வராந்தாவில் நடந்து சென்ற மாணவியர் முகம் சுழித்தபடி கடந்து சென்றனர்.
“கோகுல் நீ துப்பின இடத்த பாரு… பான்மசாலா கறை புல்வெளிய அசிங்கமாக்கிடிச்சி” என்றான் குமரன். அதற்கிடையில் பேராசிரியர் வந்துவிட அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். பக்கத்து வகுப்பிற்குச் செல்வதற்காக, பேராசிரியை வாயிலைக் கடக்க, வேகமாக கதவருகே வந்து, “வணக்கம் மேடம்” என்றபடி ஏதோ பேசத் தொடங்கினார் பேராசிரியர். கோகுல் பாக்கெட்டுக்குள் கைவிட்டு சிறிய பாட்டிலைத் திறந்து மாத்திரை ஒன்ரே எடுத்து விழுங்கினான்.
“என்ன மாத்திர சாப்புடுறே?” என்றான் குமரன்.
“எல்லாம் சந்தோசமா நம்மள வச்சிகிற மாத்திரதான் … போத மாத்திர”
“மாத்திர வயித்துல போயி அரிக்க போகுது… உடம்ப ஏன் கெடுத்துக்கிற…”
“ஏய் நேத்துதானே இந்த வாத்தியார் ஹாஸ்டல்ல சாப்பாடு சரி இல்லைனு கம்பிளைண்ட் பண்ணுனப்போ, வயித்துக்குள்ள கல்லைப் போட்டாலும் ஜீரணமாயிடுற வயசுனாறு, சோ…. எல்லாம் சரியாயிடும்.” என்றபடி மெதுவாகச் செல்போனை பையில் இருந்து எடுத்தான்.
“டேய் சார் பாத்திட போறாரு….”
“சாரும் மேடமும் பேசி முடிக்கதுக்குள்ள, ஒரு வாட்ஸ்அப் கான்வகேசனே முடிச்சிடுறேன்.” என்றபடி செல்போனை இயக்கிக் கொண்டிருந்தான்.
“இண்ணைக்கி மட்டும் நாலாது தடவயா கிளாஸ்ல போன் யூஸ் பண்ற…” என்று கோகுலுக்கு மட்டும் கேட்கும் வகையில் சீறினான் குமரன்.
கோகுல் பதிலளிக்க நிமிர்வதற்குள், பேராசிரியர் மேடத்திடம் பேசி முடித்துவிட்டு மாணவர்களிடம் தொடங்கிவிட்டார். சென்ற வாரம் நடந்த தேர்வின் விடைத்தாள்களைக் கொடுக்கத் தொடங்கினார்.
கோகுலிடம் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு, “நல்லா படிக்கிற பையனா இருக்கிறே. எல்லாத் தேர்விலேயும் 90%க்கு மேல் வாங்குற. ஒழுக்கம் தான் உன்னோட குறை. புருஞ்சுக்கோ கோகுல், ஒழுக்கம் தான் கடைசிவரை நம்மள காப்பாத்தும்.” என்று சலித்துக் கொண்டார்.
•••
வகுப்பு முடிந்து வராந்தாவில் குமரனும், கோகுலும் நடந்து சென்றனர்.
கோகுலிடம், “ஏன்டா சார் சொன்னத கவனிச்சியா, உன்னோட ஒழுக்கத்த பத்திதான் கவலைப்படுறாரு” என்றான் குமரன்.
“என்ன பண்ணுறது, நீ உயிர் நண்பனா பழகுறதுனால உங்கிட்ட சொல்றேன். எனக்குக் கூடதான் கவலையா இருக்கு.”
“அப்புறம் என்னடா… எல்லாத்தையும் விட்டிடு”
“போன வருசம்வர எந்த கெட்டப் பழக்கமும் கிடையாதுடா எனக்கு.”
“ எப்படிடா திடீர்னு”
“சூழ்நில… நிம்மதி இழந்த சூழ்நில… போன வருசம் அப்பா விபத்துல இறந்திட்டாரு… நோய்வாய்ப்பட்ட அம்மா, மரணம் எந்த நிமிடமும் வரலாம்ங்ற நிலையில. அவங்க நிம்மதியா இருக்க ஏதாவது செய்யணும். எப்படி தீர்க்க முடியும்ணே தெரியாத அளவு கடன். அக்கா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும். அவங்களுக்கு நல்ல டிரஸ், சாப்பாடு எதுவும் இல்ல. அபத்தம் எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி… பயமா இருக்கு, அவங்கள கரசேக்கணும். அவங்க எல்லாம் சந்தோசமா இருக்கிறமாதிரி வாழ்க்கை அமையணும்.”
“அதுக்கு நீ நல்லா இருந்தாதானே முடியும்.”
“எப்போ இன்னும் பத்து வருசம் கழிச்சா… அதுக்குள்ள குடும்பம் என்ன ஆகும்…”
“யாருக்கிட்டயாவது உதவி கேட்கலாம் இல்லையா”
“உனக்கு உலகத்தபத்தி புரியல…. பட்ட அவமானம், அசிங்கம் கொஞ்சம் கிடையாது. சொந்த பந்தம், ஊர் உறவு எல்லாம் ஏளனமா பார்த்தபோதான் இப்படி ஆகிட்டேன்.”
“எத்தனபேர் கிட்ட கேட்டே… யாருமே உதவலியா”
“ஆமா. ஆனா ஒருத்தன் கேட்காமலேயே உதவினான்.”
“உன்ன பார்க்க வருவானே… அந்த தாடிக்காரனா?”
“ம்… அவன் தப்பானவன்தான். பண்ண சொல்ற போதை யாவாரமும் தப்புதான். வேற வழி தெரியல… யாரையும் அண்டியிருக்காம பணம் சம்பாதிக்கிற வழின்னான். கையில் காசில்லாமலும், பிரதிபலன் இல்லாமலும் யாரும் எதையும் செய்றதில்லை. புரிஞ்சுதான் விழுந்திட்டேன்.” சொல்லும்போது கண்கள் கலங்கியிருந்தன.
“வேற ஏதாவது நல்லவழிய பாக்கலாம்டா, எங்க அப்பாகிட்ட பேசி பார்க்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாடிக்காரன் வந்துவிட, அவனை நோக்கி சென்றான் கோகுல்.
•••
மறுநாள் அதிகாலையிலேயே விடுதியில் கோகுலின் அறைக் கதவைத் தட்டினான் குமரன். அவன் முகத்தில் கரைகடந்த மகிழ்ச்சி. கதவைத் திறந்தான் கோகுல்.
“வா குமரா” என்றவனிடம் எவ்வித மகிழ் உணர்வோ, வெறுப்போ, பகையோ, எதிர்ப்போ எதுவும் இல்லை.
“கோகுல் எங்க அப்பாகிட்ட உன்னப்பத்தி பேசினேன். அவர் புதுசா ஒரு கோசாலா அதுதான் பசுமடம் ஆரம்பிக்றார். அத நிர்வகிக்கிற உதவிய உங்க அம்மா, அக்காலாம் செய்தா நல்லாயிருக்கும். அவங்களுக்கு உதவ அங்க ஆட்கள் இருப்பாங்க… கோகுல் இத அம்மாவ ஒத்துகிட சொல்லுடா… பிரதிபலனா எங்கப்பா மூலம் கிடைக்கிற ஊதியம், உங்க குடும்ப நிலைய மாற்றும். நீயும் நிம்மதியா புதுமனுசனா படிக்கலாம்” என மூச்சுவிடாமல் பேசி முடித்தான்.
அப்பொழுது குமரனுக்கு அவனது அப்பாவிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது.
“அப்பா இப்போதான் கோகுல்கிட்ட பேசினேன்… ம்… இதோ ஃபோனை அவன்கிட்ட கொடுக்கிறேன். இந்தாடா பேசு..”
“அப்பா நல்லா இருக்கீங்களா… ம் ஆமா…. குமரன் சொன்னான் …. சரிங்கப்பா…” செல்போனை அணைத்த கோகுல், குமரனைக் கட்டித் தழுவிக் கொண்டான். கோகுல் முகத்தில் நீண்டா நாட்களுக்குப் பின் நம்பிக்கை உணர்வு தென்படத் தொடங்கியது.