பல்லழகன் – பகுதி 23
திவாகர்
“அதுதான் கல்யாண்.. முரளி ஒரு வெகுளிங்கறது எனக்கு முதல்லயே புரிஞ்சு போயிடுச்சு. அதனால அவர் கொலை பண்ணியிருக்க வாய்ப்பும் இல்லை. சுந்தருக்குக் கொலை செய்ய காரணம் இருந்தாலும் அது அப்படி ஒண்ணும் ஸ்ட்ராங்க் இல்லே.. அதே போல சுமதிக்கும் தன் அப்பாவைக் கொலை செய்யணும்கிற ஐடியாவும் இல்லே.. தன்னை விட்டு தூரம் போனா போதும்னு நினைக்கிறவ.. அப்பறம் கந்தசாமிக்கு உறவுன்னு நீங்க ஒருத்தர்தான்.. ஆனா நீங்களோ சம்பவம் நடந்த அன்னிக்கு ஹவுரா மெயில்ல என்னோட பிரயாணம் பண்ணறிங்கன்னு ஒரு அலிபியை உருவாக்கி இருக்கீங்க.. இப்படி ஒரு அலிபியை நீங்க எதுக்காக உண்டாக்கணும். நீங்க உங்க வாயாலே நடந்ததை சொல்லி நான் கேட்கணும். ஏன் தெரியுமா? நான் ஒருவாரமா பார்த்துண்ட வர்ற என் க்ளையண்ட் கல்யாண், இன்னும் ஒருபடி மேலச் சொல்லச் சொன்னா, என்னைக் கவர்ந்த ஒரு ஜெண்டில்மேன் கல்யாண், இந்தக் கொலையில இன்வால்வ் ஆகியிருக்கார்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும். நான் லா படிக்கலே.. வாதிக்கவும் தெரியாது.. என்னோட ஊகத்தை சாட்சியோடு சொல்ல முடியுமான்னும் எனக்குத் தெரியலே.. ஆனாலும் என்னாலே சொல்லமுடியும்.. கல்யாண் இந்தக் கொலையில மிகப் பெரிய அளவுல இன்வால்வ் ஆகியிருக்கார்.. அதனாலே நீங்களே சொல்லுங்க.. இந்தக் கொலை எப்படிப் பண்ணீங்க கல்யாண்?”
கல்யாண் எழுந்தான். தன் படத்தருகே போய் நின்றான்.. படத்தைத் துடைத்தான்.. அந்த ஃப்ரேமில் உள்ள கல்யாணைக் காட்டினான். “யெஸ்.. இவன் ஒரு குற்றவாளி.. ஆனால் இவன் இந்தக் கொலையைச் செய்யவில்லைங்கிற விஷயத்தை நீங்க நம்பணும்..”
“புரியலே..”
அவன் மறுபடியும் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
“கோம்டி! உங்களைக் கல்யாணம் பண்ணப் போறவர் யாராயிருந்தாலும் அவர் மிகப் பெரிய அதிருஷ்டக்காரர்.. ரியல்லி நீங்க ஒரு மிகப் பெரிய புத்திசாலிதான்.. ஆனா இந்த குற்றவாளிகளின் நல்லகாலம்.. உங்களை மாதிரி புத்திசாலிகள் இந்த மாதிரி டெண்டல் பிராக்டிஸ், இல்லைனா சாஃப்ட்வேர் இஞ்சினீர்’னு போகறதுதான். ஏன்னு கேட்டா நீங்கள்லாம் போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சா ஒரு குற்றவாளி வெளில சுத்தமுடியாது. நானும் குற்றவாளிதான்.. குற்றம் செய்யத்தான் வந்தேன்.. ஆனா விதின்னு ஒண்ணு இருக்கு இல்லையா.. அது நல்லவங்க வாழக்கூடாது.. கெட்டவங்க சாகக்கூடாதுன்னு சொல்லிடுத்து போல.. நான் சுட்ட குண்டு அவரைச் சாகடிக்கலே.. ஆனா அவர் சுட்டுகிட்ட குண்டு அவரை சாகடிச்சுடுத்து.. கடைசில எனக்கு வீரன்கிற பட்டம் போய் அவருக்கு கோழைங்கிற பட்டம் கிடைச்சுடுச்சு. அவ்வளவுதான்.”
“கல்யாண்..” என்றவளைத் தடுத்தான் அவன்.
“ரன்னிங்க் ரேஸ்ல கடைசிவரைக்கும் வேகம் வேகமா ஓடி முன்னால ஃபர்ஸ்ட்டா வந்தாலும் வரையப் பட்டிருந்த கோட்டைத் தொடலைன்னா அவன் சேம்பியன் இல்லே. நானும் அப்படித்தான் வேகம் வேகமா ஓடிவந்து கடைசியில கோட்டைத் தொடாமலே திரும்ப வந்துட்டேன்.”
“புரியுது!”
“இந்த கேஸுல நீங்க தெரிஞ்சுகிட்டது கொஞ்சம்தான் கோம்டி.. நீங்க கிட்டத்தட்ட எங்க குடும்பத்தையே அலசியாச்சுன்னு நினைக்கிறீங்க இல்லையா.. அது உண்மைதான்.. ஆனா இந்த ஒரு வாரத்துல நீங்க தெரிஞ்சுண்டதை விட நிறைய இருக்கு. கொஞ்சம் சுருக்கமா சொல்லறேன்.. நல்லகாலம் இங்கே யாருமில்லேன்னு சொன்னீங்க,, அதே போல நான் சொல்லப் போகறது கூட உங்க ஒருத்தருக்கு மட்டும்தான். ரவிக்கு எல்லாமே தெரியும்! இப்போ உங்கள்ட்ட ரிகார்டர்லாம் இல்லேன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வேஸ்ட்..”
“என்ன கல்யாண்.. இந்த ஒரு வாரப் பழக்கத்துல என்னை இவ்வளவுதான் புரிஞ்சிண்டிங்களா.. இல்லே.. நான் ரிகார்ட் பண்றதா இல்லே. நீங்க சொல்லுங்க”
“இல்லே கோம்டி.. ஏன் அப்படிச் சொல்லறேன்னா இது என்னோட சொந்த குடும்ப விஷயம்.. இது யாருக்கும் தெரியக்கூடாதுன்னுதான் நான் நினைக்கிறேன்.. சுமதியை நீங்க பார்த்தீங்க இல்லையா.. இதுவரைக்கும் நீங்க யாருமே என்னை ‘கல்யாண்! நீ எப்போ என்னிக்கு சுமதியை முதன் முதலா பார்த்தாய்’ன்னு கேட்கலை.. கேட்டால் நான் என்ன அப்போ பதில் சொல்லுவேன்னு தெரியாது.. ஆனா இப்போ சொல்லறேன்.. எல்லோருக்கும் நடந்தமாதிரிதான் நான் சொல்றதும் நாலு மாசம் முன்னாடிலேர்ந்து நடந்ததைத்தான் முதல்ல சொல்றேன்.. கேட்டுக்குங்க..”
கொஞ்சம் நிதானித்தான் கல்யாண்.. பின்னர் அதே நிதானம் அவன் குரலில் தெரிய பேசினான்.
“கோம்டி.. நான் வைசாக்’ல இருக்கறச்சே நாலு மாசம் முன்னாடி எனக்கு புதுசா ஒரு பொண்ணு கால் பண்ணினா.. ‘என் பேரு சுமதி.. உங்க வாட்ஸாப்’ல சில தகவல் அனுப்பறேன்.. அதைப் படிச்சுட்டு நீங்க எங்கிட்டே பேசணும்னு நினைச்சா பேசுங்க.. இல்லைன்னா கூட வருத்தப்படமாட்டேன்னு அந்தப் பொண்ணு சொன்னா’. சரின்னு சொல்லி அந்தக் கால் வெச்சுட்டு மெஸேஜ் மாத்திரம் பார்த்தேன்.. இருங்க.. நீங்களும் அந்த மெசேஜ்லாம் பாருங்க..”
அவன் தன் மொபைலை எடுத்து சுமதி அனுப்பிய வாட்ஸாப் மெஸ்ஸேஜ் எல்லாவற்றையும் காண்பித்தான்.
அவள் தமிழில்தான் அனுப்பியிருந்தாள்.. கொஞ்சம் சத்தமாகப் படித்தாள் கோம்டி.
“அண்ணா, என் பேர் சுமதி.. என் வாழ்க்கை கவலைகளைப் பற்றி எதுவும் இங்கே எழுதப் போறதில்லே.. ஆனா உங்களுக்கு உங்க பெரியப்பா பத்தி நிஜம் தெரியணும்.. அவர் ஒரு ராட்சஸ காமாந்தகர். அவரால ஒரு சின்னப் பொண்ணு, 13 வயசுக் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கு. எனக்கு உங்க உதவி வேணும்.. என்னாலே தனியா போராட முடியலே.. நீங்க இங்க வந்தா பல உண்மைகளைச் சொல்லறேன்.. என் விலாசம்.”
கோம்டி படித்தாள். அந்த செய்தியின் மேல் உள்ள தேதி டைம் பார்த்தால் நான்கு மாதம் முந்தையதுதான். அந்த ஃபோன் நம்பரும் சுமதிதான் என்று அவளுக்குப் புரிந்தது.
“கல்யாண்.. இந்த தேதி எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அன்னிக்குதான் நான் சுமதியைப் போய் அவங்க வீட்டுல பார்த்தேன்.. அன்னிக்கு முந்தைய தினம்தான் கந்தசாமி இந்த கிலினிக்குல கலாட்டா பண்ணி சுமதியைப் பிடிச்சு இழுத்துண்டு போன சங்கதி நடந்த தினம்..”
கல்யாண் தலையசைத்தான்.
“ஆமாம். ரவிக்கும் அதைக் காண்பிச்சேன். உடனே ரவியும் தானும் என்னோட புறப்பட்டு வரேன்னு சொன்னான். செய்தி வந்த அடுத்த நாள் நாங்க சென்னை வந்தோம். ரவியை அவன் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டு நான் இங்கே வந்தேன். பெரியப்பாவைப் பார்த்தேன். அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். என்ன கல்யாண் திடீரென வந்திருக்கே’ன்னாரு.. ஆஃபீஸ் வேலையா வந்தேன்னேன். அவர்கிட்டே ரொம்ப பேசலே. ஏன்னா.. அவரைப் பத்தி புகார் வந்திருக்கே தவிர இந்தப் பொண்ணு எதுக்கு என்னை அவசரமா கூப்பிடுதுன்னு தெரிஞ்சுக்கணுங்கிறதுதான் முக்கியம்னு பட்டுது. ஆஃபீஸ் வேலையா போகறதா சொல்லிட்டு நான் ரவிக்குச் சொல்லி, நானும் அவனும் கிளம்பி சுமதி வீட்டுக்குப் போனா எனக்கு எல்லா விவரமும் அதான் உங்களுக்குச் சொன்ன அத்தனை விவரமும் கிடைச்சுது. கோபம்.. என் மேலேயே எனக்குக் கோபம்.. அதுவும் ஒரு சின்னப் பொண்ணு.. பதிமூணு வயசுப் பொண்ணுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை.. அதைவிடக் கொடுமையா அவளைப் படம் பிடிச்சு வெச்சது.. சுமதி என்னோட தங்கச்சிங்கற விவரம் தெரிஞ்சதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே.
கல்யாண் சுமதியின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்குப் போகிறான். கல்யாண் அதிர்ச்சிக் குரலில் கத்துகிறான்.
“சுமதி.. சுமதி.. திருச்சில இருக்கறச்சயே இதையெல்லாம் எனக்கு ஏன் சொல்லலே? பெரியம்மாவுக்கு பெரியப்பா பெரிய தொல்லையா இருந்தாலும் நானும் அப்படிப்பட்டவன்னு ஒரு எண்ணம் ஏன் வரணும்.. ஏன் எங்கிட்டே சொல்லலே?”
சுமதியும் பெரியம்மாவும் அழுகிறார்கள். அந்த சின்னப் பெண்ணை அருகே கூப்பிடுகிறான். அது பயந்து வர மறுத்தது.. கல்யாணுக்குக் கண்ணில் நீர் வந்தது. துடைத்துக் கொண்டே பேசினான்.
“பெரியம்மா.. நான் உங்களை அப்படிக் கூப்பிடலாமா?”
“ஐயய்யோ.. ஏன்பா அப்படிச் சொல்லறே..”
“இல்ல பெரியம்மா.. எனக்கும் பொறந்ததிலேர்ந்தே இப்படி அம்மான்னு கூப்பிடணும்னுல்லாம் ஆசை.. எனக்குப் பெரியம்மானு ஒருத்தி இருந்தும் எனக்குத் தெரியாமப் போயிடுச்சே..”
“இல்லப்பா.. நீ சின்ன பையன்.. உன்னாலே என்ன பண்ணமுடியும்? சுமதிக்கு ஒரு நல்ல அண்ணா கிடைச்சாச்சுன்னு இப்பதாம்பா நிம்மதி.. அது போதும்பா.. எனக்கு வயசாயிடுச்சு.. இந்த வயசுலயாவது நிம்மதி கொடுக்க வந்திருக்கியேன்னு ஒரு நிம்மதி.. உங்க அம்மா குடும்பம் எனக்குத் தெரிஞ்சவங்கதாம்பா.. ரொம்ப நல்ல தங்கமான பொம்பிளை அவங்க..” என்று சொல்ல ஆரம்பித்தவள் திடீரென அழுதாள். விக்கி விக்கி அழுது அழுது கொஞ்சம் மயக்க நிலைக்கு வந்துவிட்டாள். அவளை ஆசுவாசப்படுத்தினான் கல்யாண்.
“சுமதி.. நீ கவலைப்படாதே.. இதை எப்படி டீல் பண்றதுன்னு யோசிக்கணும்.. எனக்கு மூளையே கலங்கிடும் போல இருக்கு.. சரி, இந்த விஜயாவுக்கு எவ்வளவு ஆபரேஷனுக்குச் செலவாகும்னு நினைக்கிறே..”
“அண்ணா.. நீங்க எதுவும் அங்கயிருந்து கொண்டு வர வேணாம் அண்ணா.. அந்தாளோட ஒவ்வொரு காசும் பாவப்பட்ட பணம்..”
“ஆனா எங்க.. சாரி, நம்ம தாத்தா பாட்டி சொத்துதானம்மா நிறைய வெச்சிருக்காரு.. அவருக்குன்னு தனியா ஒரு அக்கௌண்ட் வெச்சிருக்காருன்னு அவரே எனக்கு சொல்லியிருக்காரு.. அவரோட பணமெல்லாம் அந்த அக்கௌண்ட்ல போட்டுருக்கேண்டா.. தாத்தா சொத்துப் பணமெல்லாம் வழக்கமா எஸ் பி ஐ ல பழைய அக்கௌண்ட்லதான் இருக்குன்னார். போகட்டும். ஆனா நான் கொடுக்கப் போகிற பணம் நானும் ரவியுமா சுயமா சேர்ந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.. எவ்வளோ செலவாகும்னு நீ நினைக்கிறே.?”.
சுமதி தயங்கினாள். “ஒரு இருபத்தஞ்சு லட்சம் மினிமம் ஆகும்னாங்கண்ணா. ஏன்னா முக்கால்வாசி மெடிசின் அமெரிக்காலேர்ந்து இம்போர்ட் பண்ணினதாம்.”
“சரி, எனக்கு ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுப்பியா…”
“ஐய்யோ.. எடுத்துக்குங்க அண்ணா.. நாலு மாசமானாலும் பரவாயில்லே..”
“சரி, அப்ப ஒண்ணு பண்ணலாம்.. விசாகப்பட்டினத்துல நானும் ரவியும் நடத்தற ஷிப்பிங்க் பிஸினஸ்ல இருந்து ஏற்பாடு பண்றோம். கலக்ஷனுக்குதான் ரெண்டு மாசம் ஆகும். நான் அர்ரேஞ்ச் பண்ணிடறேன்.. நீ தைரியமா இரு.”
ஆமாங்க.. எவ்வளவு முடியுமோ அதை கலெக்ட் பண்ணமுடியும்! ரவியும் கூடவே சொன்னான்.
“அண்ணா.. எதுக்குண்ணா பிஸினெஸ் பணத்தை செலவு பண்ணிட்டு..”
“இல்லம்மா.. அங்க நான் பண்றது கப்பலுக்கு சாண்ட் ப்ளாஸ்டிங்க் காண்ட்ராக்ட்.. ரெண்டு கப்பல் வேலை பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து நான் இங்க வந்து கூட கண்டின்யூ பண்ணிக்கலாம். அத்தோட என் குடும்பம்னு நீங்க வந்தப்போ உங்களையும் நான் பாத்துக்கணும் இல்லையா.. ரெண்டு மாசம் டைம் கொடும்மா.. அதுவரைக்கும் மருந்து மாத்திரை எல்லாம் சரியா கொடு..”
தன் கையிலிருந்த பேங்க் டெபிட் கார்ட் ஒன்றைத் தருகிறான்..
“இந்த கார்டை இனிமே யூஸ் பண்ணிக்கோ.. மருந்து மாத்திரை மட்டுமில்லே.. இந்த வீட்டுச் செலவுக்குக் கூட இதுதான். அம்மாவையும் பார்த்துக்கோ.. நான் இனிமே வாரா வாரம் வருவேன். நான் இல்லேனா ரவியை அப்பப்ப அனுப்பறேன். இவன் என்னோட க்லோஸ் ஃப்ரெண்ட்மா.. நாங்க வரதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணிட்டுதான் வருவோம்.. நீ எதுக்கும் கவலைப்படாதே.”
பெரியம்மா மிகவும் மெதுவான குரலில் பேசுகிறாள்.. “அடிக்கடி வாப்பா.. உங்கிட்டே நிறைய விஷயம் பேசணும்..”
கோமதியின் கிலினிக், தற்கால நிலைக்கு வருகிறான் கல்யாண்.
“கோம்டி.. எனக்கு முரளியையோ சுந்தரையோ கவனிக்க நேரமே இல்லே.. வாரம் ஒரு முறை நானோ அல்லது ரவியோ மார்னிங்க் ஃப்ளைட் வந்துட்டு சுமதியையும் அம்மாவையும் பார்த்துட்டு ராத்திரி ஃப்ளைட்டுக்கு வைசாக் திரும்பிடுவோம். அப்படி வந்து பார்த்துட்டு போன எனக்கு ஒரு நாள் இடியை விட கொடுமையான நியூஸ் கொடுத்தாங்க பெரியம்மா. அப்போதான் எங்கம்மா விஷயம் பேசறச்சே எதுக்காக இவங்க மயங்கி விழுந்தாங்கன்னும் தெரிஞ்சது. பெரியப்பாவோட இறப்பு சம்பவம் நடப்பதற்கு பத்து நாள் முன்னாடிதான் நான் சுமதி வீட்டுக்கு வந்தேன். சுமதி ஃபோன்லயே சொல்லியிருந்தா. விஜயாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகறதாகவும் மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடறதாகவும் சொல்லிட்டுதான் போனா. நான் காலை விமானத்துக்கே வந்து பெரியம்மாவோட டிபன் சாப்பிட்டுட்டிருந்தேன்.”
சுமதி வீட்டுக்கு அவன் நினைவு திரும்புகிறது. வீட்டில் கல்யாணுக்கு பெரியம்மா டிபன் வைக்கிறாள்.
“பெரியம்மா.. நீங்களும் சாப்பிடலாமே.. என்னோடு சாப்பிடுங்கம்மா.. ஆமா.. அம்மான்னே உங்களைக் கூப்பிடறேனே.. அம்மா’ன்னு கூப்பிடட்டா?”
அம்மா மகிழ்ச்சியோடு தலையாட்டினாள். “இதைவிட எனக்கு என்ன பேறு வேணும்பா.. ஒண்ணு சொல்லட்டா.. உங்கம்மா இருக்கற வரைக்கும் நானும் அவளும் ரொம்ப நெருங்கிய தோழிங்கப்பா.. என்னோட உயிர்த் தோழின்னு கூட சொல்லுவேன். ஆனா அவ தூக்குல அதுவும் உங்கப்பாவோட சேர்ந்து தொங்குவான்னு எதிர்பார்க்கலே கல்யாண்.”
“ஆமாம்மா.. நான் நினைச்சு அழுது ஓய்ஞ்சு போயாச்சு. விடுங்க.. என்னைப் பெத்த அம்மாவின் உயிர்த்தோழியே எனக்கு அம்மாவா கிடைச்சுருக்கான்னா அது நான் செஞ்ச பாக்கியம்தான். அம்மா.. எங்கம்மா எப்படி இருப்பாங்க.. எங்கிட்ட போட்டோ இருக்கு. ஆனா நேருல எப்படி இருப்பாங்க?”
“ரொம்ப அழகுப்பா.. அந்த அழகுதான் ஆபத்தாச்சு. சரி விடுப்பா.. அந்தக் கதையெல்லாம் எதுக்கு இப்போ. காலம் ஓடிப்போச்சு, அத்தோட அவ காலமும் ஓடிப்போச்சு.”
“இல்லம்மா.. எதையோ சொல்ல வந்து எதையோ மறைக்கறீங்க..”
“என்னத்தை சொல்லறதுப்பா.. உங்கம்மாவோட தோழியா நான் உங்க வீட்டுக்குப் போகறச்சேதான் நான் இந்த மகாபாவி கண்ணுல பட்டேன். என் மேலேயும் தப்பு இருக்குப்பா.. எதுக்கு உண்மையை மறைக்கணும்.. தானா வந்து வலைல விழுந்த மீனை அவன் விடுவானா.. உங்கம்மாவோட மூத்த மச்சினர்ங்கிற முறைல நானும் கொஞ்சம் கந்தசாமி கூட நெருங்கிப் பழகினேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னான். தோழியோடயே இந்த வீட்டுல நிரந்தரமா இருக்கலாம்ன்னான்..’
அழுதாள் அந்தம்மாள். கல்யாண் ஆறுதலாகப் பார்த்தான். அவளே கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
தொடரும்
