காவல் துறை அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது

அண்ணாகண்ணன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் என்ற இளைஞர், காவல் துறையின் காவலில் இருக்கும்போது இறந்துள்ளார்.

முன்னதாக இவர் அளித்த வாக்குமூலத்தில், காவல் துறையினரே தன்னை அடித்தனர் எனக் கூறியுள்ளார்.

“வெள்ளைத் துணியால் என்னுடைய கண்களைக் கட்டினர். என் கெண்டைக்காலுக்கும் இரண்டு முட்டிக்கும் இடையில் இரண்டு கற்களை வைத்தனர். ஈரமான சாக்கை வைத்துச் சுற்றினர். பின்னர் இரும்புக் கம்பியால் காலில் பலமாக ஒரு முறை அடித்தனர். இதில் என்னுடைய வலது கால் எலும்பு முறிந்து ரத்தம் வழிந்தது. நான் வலியால் துடித்தேன். யார் என்னுடைய காலில் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. பின்னர் என்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டது என்று தான் கூற வேண்டும் என போலீசார் மிரட்டினர்” என ஆகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்குப் பிறகு அவர் இறந்தும் போயுள்ளார்.

இது முதல் நிகழ்வு இல்லை. விசாரணை என்ற பெயரில் இப்படியான கொடிய தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், 2025 ஜூன் மாதம் நிகிதா என்ற பெண் அளித்த போலி நகை திருட்டுப் புகாரின் பேரில், தனிப்படைக் காவலர்களால் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

பற்பல வழக்குளில் கைது செய்யப்பட்டவர்கள் வழுக்கி விழுந்ததாகக் கூறி, மாவுக்கட்டுப் போட்டு அனுப்பப்படுகிறார்கள்.

காவல் துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தாங்களே தண்டனையும் வழங்குவது மிகத் தவறானது. இது, சட்டத்தின் ஆட்சியையும் நீதித் துறையின் தேவையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மேலும், காவல் துறையினர் தங்கள் தவறுகளை உணர்வதே இல்லை. இது சரிதான் என்ற மனப்போக்குடன் உள்ளனர்.

அண்மையில் ஏராளமான பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைச் சம்வங்கள் நடந்துள்ளன. இதைக் கண்டித்த அனைவரும் காவல் துறையின் மீது குற்றவாளிகளுக்குப் பயம் போய்விட்டது. காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கடும் நடவடிக்கை என்பதைக் காவல் துறையினர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தாமதமின்றி, சமரசமின்றி, பாரபட்சம் இன்றிச் செய்ய வேண்டும். மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தாங்களே தாக்குவது, தண்டிப்பது கண்டிப்பாகக் கூடாது. இது, மனித உரிமைகளை மீறும் செயல். சட்ட – நீதி நெறிமுறைகளை மீறும் செயல்.

குற்றம் நடக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை குற்றம் நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்றத்தின் முன் சான்றுகளை அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து, அச்சுறுத்தி, சம்பவங்களைத் திரித்து, சித்திரித்து, குறுக்குவழியில் தண்டனை அளிப்பது, மிகப் பெரிய குற்றம். காவல் துறையினர் தங்கள் கடமையையும் அதன் எல்லையையும் உணர வேண்டும். தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.

குற்றத்தை யார் செய்தாலும் அது குற்றமே. தங்கள் செயலுக்கான விளைவுகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், தெய்வம் நின்று கொல்லும் என்ற கூற்றுகள், பல முறைகள் நிறுவப்பட்டுள்ளன.

காவல் துறை, மக்களின் நண்பனாகவே இருக்க வேண்டும்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *