வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30

0

தி. இரா. மீனா

மல்லிகார்ஜூனபண்டிதராத்திய

ஆந்திராவைச் சேர்ந்தவர். பசவேசர் அனுப்பி வைத்த திருநீற்றின் மகிமையால் இவர் கன்னடம் கற்றார் என்றும் பசவேசரைப் பார்க்கப் போகும் வழியில் பசவேசர் இறைவனிடம் ஐக்கியமானார் என்ற செய்தி கேட்டு தன் இஷ்டலிங்கத்தில் அந்த காட்சியைக் கண்டு ஆறுதலடைந்தார் என்றொரு கதையுண்டு. ’மல்லிகார்ஜூனா’ இவரது முத்திரையாகும்.

 “இளமை செல்வம் உள்ளவரையில் சிவனை வணங்கமாட்டார்
மனிதனே நினை நினை, நீ கெடுவதற்கு முன்னால்
இளமை நிலைக்காது செல்வம் நிலைக்காது
நீ கெடுவதற்கு முன்னால் மல்லிகார்ஜூனனை
நினைப்பாய் நினைப்பாய்“

மளுபாவிய சோமண்ணா

’மளுபாவிய சோம ’என்பது இவரது முத்திரையாகும்.

“சமயத்திற்குக் கிடைக்காத செல்வம்,
ஆயுளற்ற வாழ்க்கை, சுகமற்ற சம்சாரம்,
பலம்குறைந்த உடலின் நட்பு,
சோர்வடையச் செய்யும் உயிர்தன்மை
இத்துணை கொந்தளிப்புகள் அழிந்தாலொழிய
மளுபாவி சோமனை அறியமுடியாது”

மாதர சென்னய்யா

தொடக்க காலத்தில் அரசின் குதிரைக்குப் புல் வைக்கும் காயகம் இவருடையதாக இருந்தது. சோழ நாட்டைச் சேர்ந்த இவர் கல்யாண் நகருக்கு வந்தபிறகு சரணர்களின் சிறப்பு மரியாதைக்கு ஆளானவர். கல்யாணில் மிதியடி செய்யும் தொழில் செய்தவர். இறைப் பெயர் மற்றும் தன் குலத் தொழிலான செருப்புத் தைக்கும் தொழில் பற்றிய பேச்சு வழக்குகளை பயன்படுத்தியவர். ’நிஜாத்ம இராமைராமன்’ இவரது முத்திரையாகும்.

“சொல் செயல் சித்தாந்தத்தில் தூய்மை மாசு தீட்டில்லை
சொல் நன்று செயல் தீதெனில்
அதுவே முக்தியில்லாத மாசுடையது
களவு விபச்சாரத்தில் மாசறியாமல்
செயல் கெட்டபின்பு நற்குல உடலுடையோருண்டோ?
இரு ஒழுக்கம் நிலையறிய வேண்டும்
தோல் தைக்கும் ஊசி,கத்திரி,கல்லுக்கு அடிமையாக வேண்டாம்
அறிவாய் நிஜாத்ம இராமைராமனை“

மாதார தூளய்யா

மிதியடி தைப்பது இவரது காயகம்.அந்தணன் ஒருவனின் தொழுநோய் போக்கியவன் என்ற செய்தி இவரது வரலாற்றில் சொல்லப்படுகிறது ’காமதூம தூளேஸ்வர’ இவரது முத்திரையாகும்

1. “விதையின் எண்ணெய், பழத்தின் சாறு
தங்கத்தின் நிறம், இறைச்சியுள் பால்
கரும்புச் சாற்றின் இனிப்பு
உள்ளிருப்பது வெளியாகவில்லையெனில் குலத்தீட்டு விடாது
கடவுளிடம் காட்டும் நம்பிக்கை தெரிவதன்றி
கல்லின் குலத்தீட்டு விடாது
விட்டொழிக்கும் வரையில் ஞானசூன்யமில்லை
காமதூம தூளேஸ்வரனே“

2. “கானல்நீர் பருகியவருண்டோ?
வானவில்லேந்தி இழுத்தவருண்டோ?
நீர்மணிக்கு நூல் கோத்தவருண்டோ?
வெட்டவெளியில் அடக்கம் பிரம்மன்,
கல்லுள் அடங்கிய நீரின் நிலையறியாத மாசுடையவர்களுக்கு
மேன்மையின் பாதையேன் காமதூம தூளேஸ்வரனே?

3. “சுழல் காற்றிற்கு உடலெல்லாம் கை
சுடும் நெருப்பிற்கு செயலனைத்தும் வாய்
பாயும் நீருக்கு தன் உடலெங்கும் கால்கள்
அறியாமல் மறக்காமல் தொட்டவர்க்கு
முதல் இடைகடையென அர்ப்பணமில்லை
இல்லையெனும் சூதகத்திற்கு ஆதியில்லை
காமதூம தூளேஸ்வரனே“

மாரேஸ்வரொடையா

’மாரேஸ்வரன் ’ இவருடைய முத்திரையாகும்.

“ஊட்டினால் உண்ணாமல் உடனே பதில் சொல்லாமல்
பார்க்காமல், பேசாமல், யாசிக்காமல், துன்புறுத்தாமல்
காட்டு வரட்டியைக் கையில் கொடுத்து
சொல்லாமல் சென்றாயே மாரேஸ்வரனே“

முக்தாயக்கா

அஜகணன் என்னும் சிவயோகியின் தங்கை முக்தாயக்கா. முக்தாயக்கா இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட வசனங்களை எழுதியுள்ளாள் இளம்வயதில் பெற்றோர் இறந்துவிட அஜகண்ணன் அவளுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருக்கிறான். திடீரென்று அவன் இறந்துவிட அந்தச் சோகம் அவளை வாட்டுகிறது. எதிலும் விருப்பமின்றி எந்தநேரமும் வருந்திக் கொண்டிருக்கும் அவளை வசனகார மும்மூர்த்திகளில் ஒருவரான அல்லமாபிரபு பார்க்கிறார். அவளை மாற்ற விரும்பி ஒருவரின் முயற்சியாலும், பயிற்சியாலும்தான் மெய்யுணர்வு பெறமுடியும் என்கிறார். அந்த நேரத்திலும் அவள் அல்லமபிரபுவுடன்  வாதம் செய்வது குறிப்பிடத்தக்க தாகும். சரியான பயிற்சிசெய்ய ஒருவருக்கு கண்டிப்பாக ஒரு குருதேவை என்கிறாள். வழிநடத்திய  தனது ஆசானும், அண்ணனும் இல்லாத வருத்தத்தை வாதமாக்குகிறாள். சிறிது காலகட்டத்திற்குப் பிறகு ஓரளவு ஆறுதலடைந்து வீரசைவப் பணிகளில் ஈடுபடுவதாக அவள் வரலாறு அமைகிறது. வேதாந்தமும், அதோடு மனித மனநிலையும் பொருத்தப்படுவதாக அவள் வசனங்கள் அமைந்துள்ளன. ’அஜகண்ணா’ அவளது முத்திரையாகும்.

 1. “நான் பேசமாட்டேன் என்னும்போதே
அதில் பேச்சிருக்கிறது
நான் செயல்படமாட்டேன் என்னும்போதே
அதில் செயலிருக்கிறது
நான் சிந்திக்கமாட்டேன் என்னும்போதே
அதில் சிந்தனையிருக்கிறது
எனக்குத் தெரிந்தது மறந்துபோனது என்னும்போதே
அதில் அறிவும் மறதியும் தெரிகிறது
உடலைத் துறந்தேன் என்னும்போது
உடலோடான நெருக்கம் அதிகமாகிறது
நான் நான் என்னும்போதே
அது ஆன்மாவிற்கு மறுப்பாகிறது.
ஓ..அஜகண்ணா!

2. “தீய சொற்களைப் பேசக் கூடாது;
தீயவழிகளில் நடக்கக் கூடாது.
பேசினால் என்ன ஆகும்,பேசாவிட்டால் என்ன ஆகும்?
உறுதிமொழியை மீறாமல் செயல்படுவதே
அறிவின் பயிற்சியில்தான்
ஓ..அஜகண்ணா! “

 3. “இருமையை ஒழித்து விட்டோம்
ஒருமையை நிறுவியிருக்கிறோம் என்று சொல்பவர்கள்
கனவு காணும் குழந்தைதான்
அவர்கள் அதைப்பற்றிப் பேசும்வரை
இருமையாளர்கள் அன்றி வேறென்ன?
ஒ..அஜகண்ணா!“

4. “தன்னைத் தானறிந்தவனுக்கு அறிவே குருவாம்
அறிவு மறைந்து மறதியழிய
அடையாளமே குருவாம்.
அடையாளமழிந்து தானே குருவாக
யாரும் வழிகாட்டவில்லையெனில் என்ன?
உண்மையை  நிலைநாட்டி உறுதியில் நின்றவனே
குருவாம் காணாய் !
தானே குருவாயினும் தனக்கொரு குரு வேண்டும்
எந்தை அஜகண்ணனைப் போல“

5. “நீர்பொம்மைக்கு காணாத சலங்கை கட்டி
வெட்டவெளியெனும் பொம்மை கொடுத்து
கொஞ்சி விளையாடினானய்யா !
கற்பூர பொம்மைக்கு நெருப்பின் சிம்மாசனமிட
நெருப்பு கரைய கற்பூரம் நிலைத்தது கண்டு
வியந்தேனய்யனே அஜகண்ணனின் யோகம் கண்டு”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *