பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 27
63 நாயன்மார்கள் வரலாறு – 24. நமிநந்தியடிகள் நாயனார்



நமிநந்தியடிகள் நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்து, வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்த, அடியவர்கள்பால் மாறாத அன்பு கொண்டவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர். “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் நாயனார் பெருமான். சோழ வளநாட்டில் திருவாரூருக்குத் தெற்கே திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் ஆறாவது மைல் தொலைவில், தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படும் ஏமாப்பேரூர் எனும் தலத்தில் அவதரித்த இவர், திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானை வழிபடுவது வழக்கம். சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இத்தலத்தின் மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராசன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்.
இவ்வாரூர் திருக்கோயில் திருமதிலுக்கு அருகில் அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ள இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. நமிநந்தியடிகள் அரநெறி அண்ணலை கண்ணீர் சொரிந்து வழிபட்டார். அத்திருக்கோயிலில் அழகாக விளக்குகள் பல ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்றும் விரும்பினார். அப்போது கதிரவன் மறையும் பொழுது. தமது இல்லம் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்றலாம் என்றால் அதற்கு போதிய நேரம் இல்லை. ஆதலால் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, சமணர் வீடு என்று அறியாமல் எம்பெருமானுக்கு விளக்கேற்ற நெய் வேண்டுமென்று கேட்டார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன் கையில் தீயை வைத்துள்ள அவருக்கு விளக்குக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்” என்று ஏளனம் செய்தனர்.
கையில் விளங்கும் கனல் உடையார்
தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர்
ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு
உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப்
பொய்யும் மெய்யும் ஆம் என்னும்
பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.
சமணர்கள் எம்பெருமானை ஏளனம் செய்ததை எண்ணி அழுது தொழுத நாயனார், அரநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது வான்வெளியில் ஒரு குரல் ஒலித்தது. நமிநந்தி! கவலை வேண்டாம். திருவிளக்குப் பணி நிறைவடைய நெய்தானே வேண்டும். ஏளனம் செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.
பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஒரு விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! உலகம் வியக்க விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வெட்கம் அடைந்தனர். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும்
சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரநெறியார் கோயில்
அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு
நீரால் எரித்தார் நாடு அறிய
வீட்டில் அனுதினமும் வழிபாடு செய்வதற்காக நள்ளிரவில் புறப்பட்டுச் செல்வார். மீண்டும் திருவாரூரை அடைந்து திருக்கோயிலின் உள்ளும் புறமும், நீரினால் விளக்கேற்றினார். ‘நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே’ என்று நாவுக்கரசர் பெருமானார் பாடியருளினார்.
திருவாரூருக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப் பெருமாள் எழுந்தருளுவார். மக்களுடன் நமிநந்தியடிகளும் அங்கு சென்று வழிபட்டு வீடு வந்தவர், வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தவாரு, மனைவியை அழைத்து, பல தரப்பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பதால் வெந்நீர் தயார் செய்யவும் கூறினார். உடல் அசதி காரணமாக மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் திண்ணையில் கண்ணயர்ந்துவிட்டார். அப்போது அவருடைய கனவில் பேரொளியாகத் தோன்றிய திருவாரூர்ப் பெருமான், திருவாரூரில் பிறந்த அனைவருமே நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று கூறினார்.
மேன்மை விளங்கும் திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார்
போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார்
எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச்
செய்து அங்கு எதிர் அகன்றார்.
கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். திருக்கோயிலுக்கு வந்தவர்கள் யாராயினும் அவர்கள் சிவனடியார்கள் என்று கருதாதது மிகப்பெரிய குற்றம் என்று வருந்தினார். பின்னர் குளிக்காமலே உடனே சென்று வழிபாடு செய்யலானர். விடியற்காலை எழுந்து வழிபாட்டை முடித்துவிட்டு திருவாரூர் நோக்கிச் சென்றார். கனவில் பெருமான் குறிப்பிட்டது போன்று அவர் திருவாரூரில் பிறந்து வாழும் அனைவரும் சிவனடியார்களாகவும், ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சியைக் கண்டார். உடனே நமிநந்தியடிகள் நாயனார் தலைக்கு மேல் கைகூப்பி வணங்கினார். எம்பெருமான் திருமுன் வீழ்ந்து வணங்கி மன்னிப்பும் வேண்டினார். திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டு பல செய்து வந்தார்.
பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்ததும் இவ்வடியாரே ஆவார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூர் பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனி உத்தரப் பெருவிழாவை சிறப்புறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார்.
சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப்பதிகத்தில் தொண்டற்காணி என்று சிறப்பித்துப் பாடப்பட்டார்.
சிவபெருமானால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.
நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர்
நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க
வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு
ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற்
கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக்
காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே
யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க்
காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.
நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:
சிவாலயத் திருத்தொண்டுகளில் திருவிளக்குத் திருத்தொண்டு மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்
துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே
என்ற தேவாரப் பாடல் விளங்கச் செய்கிறது.
சிவ வடிவம் ஒளிமயமாதல் என்பதனை, தேவாரத்தில் “திருவையாறகலாத செம்பொற் சோதி” என்றும்,
திருவாசகத்தில், “ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி” – “சோதியாய்த் தோன்றும் உருவமே” – “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்றும், திருவிசைப்பாவில் “ஒளிவளர்விளக்கே” – “சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி” எனவும், கந்தரலங்காரத்தில் “ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு தூங்கார்” எனவும் வருவனவற்றாலும் அறியலாம்.
மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஆன்மாவும் ஒளிமயமாகவேயிருக்குமெனல், “விளக்கினை யேற்றி வெளியை யறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கை விளக்கும் விளக்கவர்தாமே” என்னும் திருமந்திரத்தால் அறியப்படும்.
“தாவியவனுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே”
எனும் தேவாரப் பாடலால் அறியலாம்.
“விளக்கில் விளக்கும் விளக்கவர்தாமே” என்ற திருமூலர் கூற்றுக் கிலக்கியமாய் விளங்கித் திகழ்ந்தவர் நமிநந்தியடிகள்.
“வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாள் தாம் என்றுந் திருவாரூராளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டொன்றுஞ் செயலும் பங்குனியுத்தரமாந் திருநாள் உயர்சிறப்பும் நின்று விண்ணப்பஞ் செய்தபடி செய்தருளும் நிலைபெற்றார்” எனவும்,
“இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ்செய்தே ஏழுலகும் மன்னு பெருமைத்திருவாரூர் மன்னரடியார் வழிநிற்பார் அன்ன வண்ணந் திருவிளையாட் டாடியருள எந்நாளும் நன்மை பெருக நமிநந்தியடிகள் தொழுதார் நாமுய்ய” எனவும் உள்ள திருத்தொண்டர் புராணச் செய்யுள்களால் அறியப்படும்.
திருச்சிற்றம்பலம்.
