பல்லழகன் – பகுதி – 19
திவாகர்
“சரி, கல்யாண் ஞாபகமிருக்கா?”
“கல்யாண்.. அது யாரு? சாரி, மேடம் உங்களையும் நான் பார்த்ததில்லே.. கல்யாண் யாருன்னும் தெரியாது.!”
“ஓ! அப்போ நீங்க திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி இல்லையா?”
“அது நான்தான்.. என் பேரை அப்படி யாரும் கூப்பிடமாட்டேங்க.. மூர்த்தின்னுதான் கூப்பிடுவாங்க. இப்போ கூட என் தம்பியோட மோட்டார் சைக்கிள் திருட்டு போயிடுச்சு. அதுக்குக் கம்ப்ளயின் கொடுக்க என் பேரை மூர்த்தின்னுதான் கொடுத்தேன்.. எப்படியோ என் முழு பேரு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. அதுவும் அழகான பொண்ணு வாயால இப்படில்லாம் கூப்பிடறதுக்கே கொடுத்து வெச்சிருக்கணுங்க.. ரொம்ப தாங்க்ஸ்ங்க.. நான் வரேங்க..”
என்று சொல்லிவிட்டுப் போனவனைத் தடுக்கிறாள்.
“என்ன மிஸ்டர் திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி.. இவ்வளோ சீக்கிரம் மறந்துட்டா எப்படி? கொஞ்ச நாள் முன்னாடி நீங்க விசாகப்பட்ணம் ரயில்வே ஸ்டேஷன்ல ஹவ்ரா மெயில் ஏற வந்தீங்க.. உங்க நண்பர் கல்யாண் ஏஸி கோச்லயும் நீங்க எஸ்-! கோச்’லயும் ட்ராவல் பண்ணீங்களே.. மறந்துட்டீங்களா..”
“ஓ.. நீங்க அங்க இருந்தீங்களா.. ஆமாங்க நம்ம தெத்துப்பல்லன் இருந்தான் இல்லே…. ஓ.. ஆமாம்.. அவன் பேருதான் கல்யாண் இல்லே..ஓகே.. ஓகே.. இப்போ ஞாபகம் வந்துடுத்து.. நீங்க கூட அந்த ஏஸி கோச் கீழே நின்னுட்டிருந்தீங்க.. தெத்துப்பல்லன் மிஸஸா.. நீங்க.. ஓ! சாரிங்க.. அப்போ உங்க எதிருல இனிமே கல்யாண்னுதான் கூப்பிடணும்.. சின்ன வயசுலேர்ந்து திருச்சி ஸ்கூல்லேர்ந்து சினேகிதம் இல்லையா..”
அவன் பேச, அவள் பேச.. பேச்சு வளர்ந்து கொண்டே போகிறது. அவள் அவனிடம் விடைபெறுகிறாள்.
கோம்டி கல்யாண் வீட்டுக்கு வருகிறாள் அங்கே ரவியும் இருப்பதைப் பார்க்கிறாள்.
“என்ன கோம்டி! சுமதி பத்தி எனக்கு இப்போதான் கல்யாண் சொன்னான். சாந்தி கூட இப்போ வரைக்கு இதுபத்தி வாயே திறக்கலே.. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சுமதி ரொம்ப பாவப்பட்ட பொண்ணுதான்.’
‘சரிதான்.. பாவப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சுதான் நீ அவ கூட சுத்தறியாடா.. எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே..’
ரவி ஆச்சரியமாக் அவளைப் பார்க்கிறான்.. ‘ஹேய்.. உனக்கு எப்படித் தெரியும்? இது சாந்திக்குத் தெரியுமா?’
‘தெரியுமே.. நானும் அவளும் சேர்ந்துதானே உங்க மூணு பேரையும் பார்த்தோம். சூபர் மால்ல அன்னிக்குக் காலைல மேட்சிங்க் பார்த்துப் பார்த்து டிரெஸ் வாங்கினீங்களே..’
கல்யாண் எழுந்தான். மேலும் கீழும் அவளைப் பார்த்தான். ‘கோம்டி! உங்க மனசுல இன்னும் ஒரு குறை இருக்கு இல்லே!’
“கரெக்ட்! இன்னும் ஒரே ஒரு குறை இருக்கு கல்யாண். அதையும் தீர்த்துட்டோம்னா நாளைக்கு நிதானமா எல்லாத்தையும் முடிச்சுடலாம்.. நாம சுமதியை விசாரிக்கவே இல்லை.. எனக்கு அவளைப் பத்தி தெரியும்.. இருந்தாலும் இந்தக் கொலை நடந்த பிறகு ஒருவாட்டி சந்தேகம் தீர விசாரிச்சுட்டா எனக்கு ஒரு நிம்மதி இருக்கும்.. என்ன சொல்லறீங்க.. நீங்க ரெண்டு பேரும் கூடவே இருக்கணும்?”
“நிச்சயமா கோம்டி.. ஆனா இப்போ சுந்தர் வரணுமே.. நான் அவனுக்காக வெயிட் பண்றேன்..”
“சுந்தர் வரமாட்டான் கல்யாண்.. அவன் எஸ்கேப் ஆகறதுக்கு ட்ரை பண்றச்சே போலீஸ் பிடிச்சாச்சு. நாளைக்கு இன்ஸ்பெக்டர் மோகனோட வருவான்.”
“சுந்தர் தப்பிக்கப் பாத்தானா.. பிடிச்சுட்டாங்க இல்லே.. போகட்டும்.. இப்போ நாம சுமதி வீட்டுக்குப் போகணும்.. வாங்க இப்பவே போலாம். என் கார்லயே போலாம்.”
கல்யாண் காரில் போகிறாள். மூவரும் சுமதி வீடு இருக்கும் சாலையில் காரை நிறுத்தி விட்டு சுமதி வீட்டுக்குள் நுழைகிறார்கள்
சுமதி வீடு
சுமதி வீட்டின் முன்னறையில் சுமதியின் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். அவள் முகத்தில் கல்யாணைப் பார்த்ததும் புன்னகை.. கல்யாணும் அவளிடம் அன்பாகப் போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்துகிறான். சுமதி வருகிறாள். இருவரையுமே ஆச்சரியமாகப் பார்க்கிறாள்.
“என்ன டாக்டர்.. எப்படி இருக்கீங்க.. அட கல்யாண் அண்ணா கூட வர்றீங்க..”
சுமதியின் தோளில் தட்டி அன்பாகப் பேசுகிறாள்.
“இப்போ எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க? நான் லாஸ்ட் டைம் இங்க வரச்சே உங்கம்மா ரொம்ப கோபமா இருந்தாங்க.. ஆனா இப்போ சந்தோஷமா இருக்காங்க.. அன்னிக்கு நாம சரியா பேச முடியலே.. அந்தாளு கந்தசாமிகிட்டே ஜாக்கிரதையா இருக்கச் சொன்னே.. ஞாபகமிருக்கா.. இப்போ அந்த ஆளே போயாச்சு.. கல்யாண் சார்புல இந்த கேஸுல நான் தலையிட்டுருக்கேன். உனக்குதான் தெரியுமே.. இன்வெஸ்டிகேடிவ் வேலையும் நான் பண்ணறேன்னு.. அதனால உன்கிட்டே கொஞ்சம் தகவல் வேணும்னு கல்யாணையும் கூப்பிட்டுண்டு வந்திருக்கேன்.”
“எங்கிட்டே என்ன டாக்டர் தகவல் வேணும்? கந்தசாமிதான் போயாச்சே.. விட்டுடுங்கம்மா.. அந்த ஆளு ரொம்ப ரொம்ப மோசமானவன்மா.. அவன் போனது நல்லதுதான். நீங்களே பார்த்தீங்க இல்லம்மா.. விடுங்க..”
“இல்லே சுமதி! எனக்கு சில விஷயங்கள் தெரியணும்.. இந்த வீட்டுல மூணு பேருன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாரே.. அவரே பார்த்தாரே.. இன்னொருத்தர் எங்கம்மா?”
“ஓ.. என் தங்கையை கேக்கறிங்களா? அவளை இப்போ ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கேன்மா.. அடுத்த வாரம் ஆபரேஷன்மா. இதோ கல்யாண் அண்ணாதான் எல்லா செலவையும் ஏத்துண்டு இருக்கார்.”
“அவ உன் தங்கையா சுமதி.”.
ஆச்சரியமாக பார்த்தாள் சுமதி..
“டாக்டர்.. விட்டுடுங்க டாக்டர்.. எதுக்கு எல்லாம் மறுபடியும் சொல்லணும்..வேண்டாம்.. விடுங்க..”
“விடமுடியாது சுமதி.. நான் எங்கம்மாகிட்டயே அன்னிக்கு உனக்காக சண்டை போட்டேன் தெரியுமா.. எப்படியும் போலீசுக்குப் போயி தகவல் தெரிவிப்பேன்னு சொன்னப்போ நீ ஒரு விஷயம் சொன்னியாம்.. உனக்கும் கந்தசாமிக்கும் ஏதோ ஒரு உறவுன்னு.. நான் அன்னிக்கு விட்டுட்டேன். ஆனா போலீசுக்கு அன்னிக்கே சொல்லியிருந்தா அந்த ஆள் இன்னிக்கு ஜெயில் களி தின்னுண்டுருப்பார்.. ஒரு கொலையையும் தடுத்திருக்கலாம் இல்லையா..”
அப்போது வரை சும்மா இருந்த சுமதியின் அம்மா இப்போது வந்தாள். சுமதியைத் திட்டினாள்.
“எத்தனை நாளைக்கு மறைச்சு மறைச்சு வெச்சிருப்பேடி.. சொல்லிடு.. ஊருக்கெல்லாம் தெரியணும்.. இதோ கல்யாண் தம்பியும் வந்திடுச்சு இல்லே.. நம்ம மடியில கனமில்லேடி.. நமக்குப் பயமும் இல்லை..டாக்டரம்மா.. நான் சொல்லறேன்.. இதை நீங்க வெளியே சொல்லறதும் சொல்லாததும் உங்களுக்கு விட்டுடறேன்..”
‘ஆமாம் சுமதி.. எல்லாத்தையும் கோம்டி தெரிஞ்சுகட்டும்னுதான் நான் அவங்களை இங்கே அழைச்சுண்டு வந்தேன். அம்மா சொல்ற மாதிரி நம்ம மடியில என்ன கனம்? உண்மை ஊருக்கும் தெரியட்டுமே. ‘ கல்யாண் சொன்னதும் அவள் அம்மா அழுதாள். சுமதிக்கும் கூடவே கண்ணீர் வந்தது. கல்யாண் அவள் அம்மாவின் தோளைப் பற்றித் தடவிக்கொடுத்தான்.
சுமதி மெதுவாகப் பேசினாள். “டாக்டரம்மா.. இது ரொம்ப வருஷக் கதை.. அந்த கந்தசாமியைப் பத்தி நான் எதுவும் இப்போவரைக்கும் பேச விரும்பலேன்னா காரணம் இருக்கும்மா.. இதோ எங்கம்மா இருக்காங்களே.. இவங்க வேற யாருமில்லேம்மா.. கந்தசாமியோட பெண்டாட்டிதான்.”
கந்தசாமிக்கு கல்யாணம் ஆயிருச்சா? கோம்டி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
சுமதி பெருமூச்செறிந்தாள். ‘அதாவது தாலி கட்டாத பெண்டாட்டி.. அவங்களுக்குப் பிறந்தவதான் நான்.. இதெல்லாம் கல்யாண் அண்ணாவுக்குக் கூட சமீபத்துலதான் தெரியும். எங்கம்மாவை திருச்சியில பார்த்துட்டு அவங்க ரொம்ப அழகா இருந்தாங்கன்னு எப்படியோ வளைச்சுப் பிடிச்சுக் கல்யாணம் கட்டறேன்னு பொய் சொல்லி அங்கயே யாருக்கும் தெரியாம குடும்பம் நடத்திட்டு நான் பொறந்தவுடனே எங்கம்மாகிட்ட வர்றதையே நிறுத்திட்டாரும்மா..
எங்கம்மாக்கு என்ன பண்றதுன்னு தெரியாம என்னையும் தூக்கிண்டு அவங்க வீட்ல போய் அவங்க அப்பா அம்மாகிட்டே போய் சொல்லணும்னு போனா எங்கம்மாவை அவரே வாசல்ல நிறுத்தி எங்களை திருப்பி அனுப்பிச்சிட்டாரு. அதுக்கப்பறமா பணம் கொடுத்தாராம். எங்கம்மா அந்தப் பணத்தைத் தூக்கி அவரு மேலயே போட்டு தாலி கட்டிட்டு குழந்தைக்கு அப்பனா இருந்தா வா’ன்னு சொல்லிட்டு அவரை துரத்திட்டாங்க.. பாவம்.. அந்தாளோட இருந்த பாவத்துக்காக நான் பொறந்தாலும் எங்கம்மாவுக்கு என் மேல பாசம் அதிகம்.. நாலு வீட்டுல பத்துப் பாத்திரம் தேச்சு அதுல வந்த பணத்துலதான் என்னை வளர்த்தாங்க.. திருச்சிலயே நர்ஸிங்க் பண்ணவெச்சுட்டு வேலை பண்ண சென்னை வந்தோம்மா.. உங்க கிலினிக்லதான் எனக்கு முதல் வேலை கொடுத்தீங்க.. சந்தோஷமா பார்த்தீங்க.. எங்கம்மாவுக்கு மனசு சரியில்லாம இருந்ததாலே அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வரும்.”
“உங்கப்பாதான் கந்தசாமின்னு உனக்கு இவங்க எப்போ சொன்னாங்க சுமதி?”
“நான் உங்க கிலினிக்ல வேலை செய்யறச்சே முதல்ல தெரியாதும்மா.. எதுக்குன்னா அவரோட முகமே எனக்குத் தெரியாது, அந்த ஆளும் தனக்கு ஒரு குழந்தை பொறந்துருக்கு அது கஷ்டப்பட்டு வளருதுங்கிறது நல்லா தெரிஞ்சாலும் அந்த நினைவே இல்லாம இத்தனை வருஷம் காலம் தள்ளிட்டாரு.”
“அப்போ எப்போதான் இவருதான் உன் அப்பான்னு உனக்குத் தெரிஞ்சுது. நம்ம கிலினிக்ல கிட்டதட்ட ஒருவருஷம் வேலை செஞ்சிருக்கே.. எதிர்வீடு வேறே.. ஐ மீன் என் க்லினிக்ல அன்னிக்கு சண்டை வரச்சே உன்னைத் துன்புறுத்தி எதையோ உன்கிட்டேயிருந்து பிடுங்கினாரே.. அன்னிக்கு அவரு உங்கப்பாதானு தெரியாதா?”
“அன்னிக்குத் தெரியும்.. அதாவது அன்னிக்கு மூணு நாள் முன்னாடிதான் இவரோட உறவும் இவரோட கதையும் தெரியும். நான் உங்ககிட்டே வேலை பண்ணும்போதே மார்னிங்க் சமயத்துல இன்னொரு ஆஸ்பத்திரில பார்ட் டைம் வேலை பண்ணிண்டு இருந்தது உங்களுக்குத் தெரியும். அங்க எங்கம்மாவை ஒரு நாள் அட்மிட் பண்ணிட்டு க்ளூகோஸ் ஏத்திண்டிருந்தேன். அப்பதான் இந்த கந்தசாமி ஒரு சின்னப் பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்து அங்க அட்மிட் செஞ்சார். அந்தப் பொண்ணுக்கு உடம்பெல்லாம் காயம். அட்மிட் பண்ணிட்டுப் போனவுடனே எங்கம்மா அவரைப் பாத்துட்டு அந்தக் கடங்காரன் இங்கே ஏண்டி வந்தான்னு என்னைக் கேட்டாங்க. விவரம் சொன்னாங்க. எங்கம்மாவை அந்த ஆள் பாக்கலே. நானும் சரியா பாக்கலே. அவரு போனவுடனே உடம்பெல்லாம் புண்ணாகிப் போன அந்த சின்னப் பொண்ணைப் போய் கேட்டேன். அந்தப் பொண்ணு ஒரே அழுகைதான். என்னம்மா சொல்லும்மான்னு ரொம்பவே பயந்து போய் ஒடுங்கிப் படுத்துடுச்சு. ஆதரவா கேக்கறச்சே அது ஒரு அனாதைப் பொண்ணு.. இங்கே ஆசிரமத்துல இருக்கறச்சே இந்த ஆள் கடற்கரைக்குப் போகலாம்னு சொல்லி கடற்கரைல மயக்க மருந்து போட்டு அப்படியே யாருக்கும் தெரியாம கார் பின்னாடி டிக்கில படுக்க வெச்சிருக்கான். தன்னைக் கடத்திண்டு போய் சின்னஞ்சிறிசுன்னு கூடப் பார்க்காமே வெறி பிடிச்ச நாயாட்டம் குதறிக் கெடுத்துட்டு அத்தோட துணியில்லாம அவளோட உடம்பை கன்னா பின்னான்னு போட்டோ எடுத்துருக்கான். அது அழுது சத்தம் போடுதுன்னு சின்னக் குழந்தைன்னுப் பாக்காம அடிச்சிருக்கான்மா. இந்த ஆஸ்பத்திரி டாக்டர் தெரிஞ்சவர்னு இங்கே வைத்தியம் பண்ணியிருக்கான். ஆசிரமப் பெண்களுக்கு இவருதான் டாக்டராம்.. வாழவேண்டிய பொண்ணும்மா.. சின்னப் பிஞ்சுக் குழந்தைம்மா அது..” என்று சொல்லிவிட்டு சுமதி அழுதாள். சுமதியின் அம்மா கூடவே அழுதாள்.
கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். “இப்படிப்பட்ட வெறிபிடிச்ச நாய் ஜன்மத்தை என்ன செய்யலாம் கோம்டி?” அவன் கண்ணிலும் கண்ணீர் வந்தது.
கோம்டி கொஞ்சம் அமைதிப்படுத்தினாள்.
“புரியுதும்மா.. அவருதான் உங்கப்பாங்கிறதுக்கு ஏதாவது அடையாளம் இருக்காமா? தப்பா நினைச்சுக்காதே.. ஒரு லீகலாவும் உலகத்துக்குத் தெரியணும் இல்லையா?”
“இப்போவரைக்கும் அவர் லீகலா இருந்தாரா என்ன? இனிமேயும் அப்படியே இருந்துட்டாப் போச்சு. அதான் எனக்குத் தெரிஞ்சுடுச்சு இல்லையா.. இனிமே இவங்களை பாத்துக்கறது என் பொறுப்பு இல்லையா கோம்டி.””
கல்யாண் சொன்னதை மறுத்தாள் கோம்டி. “எல்லா விஷயங்களுக்கும் சட்டபூர்வமான சாட்சி இருக்கணும். எனக்கு முக்கியமா அது வேணும்.”
“எதுக்கும்மா?”
“எதுக்குன்னு சொல்லறேன்.. அதுக்கு முன்னாடி என்னோட க்லினிக்லேர்ந்து உன்னைத் தர தரன்னு வெளியே இழுத்துண்டு போயி உன் ஹேண்ட்பேக்லேர்ந்து ஒரு சாமானை எடுத்துண்டார் இல்லையா அது என்ன சுமதி?”
“டாக்டர்.. ஆஸ்பத்திரிலேர்ந்து விஜயா, அதுதான் அந்தப் பொண்ணோட பேரு.,. அவளைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணோம்.. டாக்டர்கிட்டே பேசினேன். அவர் சொன்னாரு.. அவள் கதையைப் பத்தி.. அனாதைப் பொண்ணும்மா.. அது எங்கே போனாலும் யாரும் கவலைப் படமாட்டாங்க.. நீ அழைச்சுண்டு போய் அவளைப் பாத்துக்கறதா இருந்தா தாராளமா அழைச்சுண்டு போ. ஆனா அந்த கந்தசாமிகிடே ஒரு வார்த்தை சொல்லிடு.: அப்படின்னாரு. எனக்கு கோபம்தான் வந்துது. அந்தாள்கிட்டே போய் நான் ஏன் கேட்கணும்னு நானே அந்தப் பொண்ணை இங்கே அழைச்சுண்டு வந்துட்டேன். விஷயம் கேள்விப்பட்ட கந்தசாமி எங்கவீட்டு அட்ரஸை ஆஸ்பத்திரிலே வாங்கிண்டு தேடிண்டு வந்தார். வந்தார்னு எதுக்குச் சொல்லணும்.. வந்தான்.”
தொடரும்
