திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி திருக்கோயில்
திருஅஞ்சைக்களம் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: அஞ்சைக்களத்தீசுவரர், மகாதேவர்
இறைவியார் திருப்பெயர்: உமையம்மை
தல மரம்: கொன்றை மரம்
தீர்த்தம் : சிவகங்கை
வழிபட்டோர் : பரசுராமர், அப்பர், சேரமான் பெருமான் நாயனார், சுந்தரர், சேக்கிழார்
கோவில் திறந்திருக்கும் நேரம் – காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்.

அமைவிடம்
இக்கோயில் கேரளாவில் சென்னை – கொச்சி இருப்புப்பாதையில் இரிஞாலக்குடா நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திருச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இத்தலம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.
பரசுராமர் தன் தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு வழிபட்டுள்ளார். கழற்றறிவார் நாயனாரின் அவதாரத் தலமும், முத்தித்தலமும் இதுவே ஆகும். கழற்றறிவார் நாயனார் பெருமாக்கோதையார் என்றும், சேரமான் பெருமாள் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
சேரநாட்டை ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார் இத்தல இறைவனின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மகாதேவரை வணங்கும்போது, அவருக்கு இறைவனின் சிலம்பொலி கேட்கும். அதனைக் கேட்ட பின்பே, உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் இறைவனை வழிபடும்போது, சிலம்பொலி கேட்காததால், தன் வழிபாட்டில் குறை இருப்பதாக எண்ணி தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அப்போது அங்கு சிலம்பொலி கேட்டது. அங்கு காட்சியளித்த சிவபெருமான், தான் சோழ நாட்டிலுள்ள சுந்தரர் எனும் பக்தரின் இனிமையான பக்திப் பாடலில் மெய்மறந்து அவரை கவனிக்க முடியாமல் போய்விட்டதாகவும், அதனால் சிலம்பொலி கேட்கச் சிறிது காலதாமதமானதாகவும் கூறினார். உடனே மன்னன், சுந்தரரைப் பற்றி இறைவனிடம் கேட்டறிந்து, அவரைத் தேடி அவரோடு நட்பு கொண்டார். பின்னர் சேர மன்னனின் அழைப்பை ஏற்ற சுந்தரர் திருவஞ்சைக்குளம் சென்று இறைவனை வழிபட்டுவிட்டு சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை மண்டலம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் வழிபட்டார். அவருக்கு மீண்டும் சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழவே, அங்குள்ள பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு இறுதியாக திருவஞ்சைக்களம் சென்று, இப்பூவுலக வாழ்வினை அகற்ற வேண்டி ‘தலைக்குத் தலை மாலை’ என்னும் பதிகம் பாடினார்.
“தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே
அதன்மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள்
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங் கரைமேல் மகோதை
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.”
——(சுந்தரர் தேவாரம்
இதைக் கேட்ட இறைவன் அவரை அழைத்து வரும்படி, சிவ கணங்களை அனுப்பினார். அவர்களும் சுந்தரரை ஒரு வெள்ளை யானையில் அழைத்துச் சென்றனர். அப்போது சுந்தரர், தனது உயிர் நண்பரான சேர மன்னனை நினைத்தார். உடனே, சேர மன்னன் குதிரை ஒன்றில் அங்கு வந்து சுந்தரரை மூன்று முறை வலம் வந்து, அவருக்கு முன்பாக இறைவனிருப்பிடம் சென்றடைந்தார்.
சிறப்புகள்
கேரள பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இங்கும் வெடிவெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடை யானை வந்த மேடை எனப்படுகிறது. கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை இங்கு வந்து சுந்தரரை கைலாயத்திற்கு அழைத்துச்சென்ற பெருமையுடையது.
மூலவர், பிற சன்னதிகள்
இத்தல மூலவர் மகாதேவர் என்றும் அஞ்சைக்களத்தீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் மிகச்சிறிய சிவலிங்கம். விமானத்தில் யோக நரசிம்மர் உருவம் அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர், சேரமான் பெருமாள் பூசித்த பஞ்சலோகச்சிலை. இதன் கீழ் “திருவஞ்சைக் களத்து சபாபதி” என்றெழுதப்பட்டுள்ளது. இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் மூலவர் கருவறைக்குள் இணைந்து சதாசிவ மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். மக்கள் வழக்கில் திருவாஞ்சிக்குளம் என்று வழங்கப்படும் இக்கோயில் பெருவாயில் மேற்கு நோக்கியது – சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரத்தில் எண் திசை நாயகர்களின் உருவங்கள் உள்ளன. இங்கு கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், காளை, நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருக்கான இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சன்னிதிகள் உள்ளன. சுந்தரருக்கும், சேர மன்னனுக்கும் தனிச்சன்னிதி இருக்கின்றன. மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. கிழக்கு இராசகோபுர முன்புறத்தில் நுழையும்போது, பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன. (யானை வந்து ஏற்றிச் சென்றதாக ஐதீகம்)
விழாக்கள், வழிபாட்டு நேரம்
மாசி மாதம் மகா சிவராத்திரியும், அமாவாசையில் ஆறாட்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுந்தரர் கைலாயம் சென்ற ஆடி சுவாதி நாளன்று ஆண்டுதோறும் சுந்தரருக்கும், சேரமானுக்கும் திருநீராட்டு செய்து விழா கொண்டாடப்படுகிறது. கேரள வழிபாட்டு முறையில் இத்திருக்கோயிலில் (தந்திரமுறையில்) வழிபாடுகள் நடந்தாலும், இந்த ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம வழிபாடு நடைபெறுகின்றது. இங்குள்ள மர வேலைப்பாடுகள் காணத்தக்கவை. சங்க காலச் சேரர்களின் தலைநகரம் வஞ்சி. சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று, ஆண்டுதோறும் கோவை, சேக்கிழார் திருக்கூட்டத்தார் இத்தலத்திற்கு வந்து சுந்தரர், சேரமானுக்கு திருநன்னீராட்டு செய்து இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு கருதி, கொடுங்கோளூர் பகவதி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சுந்தரர், சேரமான் சிலைகளுக்கு அங்கேயே உள்ள திருமண்டபத்தில் நன்னீராட்டு செய்து அலங்கரித்து யானை குதிரை வாகனங்களில் வைத்து, திருஅஞ்சைக்களத்திற்கு விழாப்பொலிவுடன் எடுத்துச் செல்லப்பட்டு, இத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இறைவனின் பெரும் கருணையை அறிந்து மகிழ்ந்த சுந்தரர் இறைவனைப் போற்றி, ‘தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே” என்னும் பதிகம் பாடினார்.
வெள்ளையானையின் மீதேறிக் கயிலை சென்றபோது சுந்தரர் பாடியருளியது வருமாறு:
“தான்எனை முன் படைத்தான்; அதுஅறிந்து,
தன் பொன் அடிக்கே
நான்எனைப் பாடல்? அந்தோ! நாயினேனைப்
பொருட்படுத்து,
வான்எனை வந்து எதிர்கொள்ள,
மத்த யானை
அருள் புரிந்து, ஊன்உயிர் வேறு செய்தான் –
நொடித்தான்மலையே.”
— சுந்தரர்
இந்தப்பாடல் முடிவடைந்த நிலையில் சுந்தரரும் இறைவன் இடத்திற்கு வந்து சேர்ந்தார். சுந்தரர் இறுதியாகப் பாடிய பாடலைத் திருவஞ்சைக்களம் கோவிலில் சேர்ப்பிக்கும்படி இறைவன் ஆணையிட, வருண பகவான் அப்பாடலைக் கோவிலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார் என்கிறது ஆலயத்தின் வரலாறு.
இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரான குலசேகர ஆழ்வார் அவதரித்த தலம் இது.
சேரமன்னர்களின் பிரதான தெய்வமாதலால் இவ்விறைவனுக்கு திருவஞ்சிக்குளம் மகாதேவர் என்று பெயர். இது மருவி அஞ்சைக்களம் என்று ஆனது. இங்கு சங்காபிசேகம் சிறப்பான வழிபாடாகும். பிரம்மோத்சவம் மாசி மாதத்தில் 8 நாள் நடைபெறுகிறது. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக உள்ளன. வெள்ளைக் கிணறு முக்கியமானது. அமாவாசையில் ஆறாட்டு (தீர்த்தவாரி) உற்சவம். திருக்கோயிலின் முன்பு இருந்த கோபுரங்கள் 1670ல் இடாய்ச்சுக்காரர்கள் தாக்குதலில் உடைக்கப்பட்டன. மேற்குப் பகுதி கோபுரத்தின் கீழ் இரண்டு நிலைகள் மட்டும் எஞ்சின. திப்பு சுல்தானின் கொடிய தாக்குதலால் திருக்கோயில் பெரும் சேதத்திற்கு உள்ளானது. திருக்கோயில் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள மலையாள எழுத்தில் உள்ள சமசுகிருதக் கல்வெட்டு, ‘சமயப் புறத்தோனால் தகர்க்கப்பட்ட திருக்கோயிலை பலியத் கோவிந்தன் அச்சன் என்பவர் மீண்டும் எடுத்துக் கட்டிய’ செய்தியைத் தெரிவிக்கிறது.
“சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே
சிறியார் பெரியார் மனத்தேறலுற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
முனிகள் முனியே அமரர்க்கமரா
சந்தித்தடமால் வரைபோற்றிரைக (ள்)
தணியாதிடறுங் கடலங்கரைமேல்
அந்தித் தலைச் செக்கர் வானே யத்தியா (ல்)
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே” (சுந்தரர்)
“நஞ்சை களத்துவைத்தநாத எனத் தொண்டர் தொழ
அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே.‘ (அருட்பா)
அஞ்சல் முகவரி –
மகாதேவ சுவாமி திருக்கோயில்
திரு வாஞ்சிகுளம் – அஞ்சல்
(வழி) கொடுங்களூர் – 680 664.
கேரளா – திருச்சூர் மாவட்டம்.
