படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 31 [கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை]
முனைவர் ச. சுப்பிரமணியன்
கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை
முன்னுரை
கவிஞர்கள் வறுமைக்கு ஆட்பட்டிருந்தபோது கவிதைகள் செழுமையாய் இருந்தன. அவர்கள் கொஞ்சம் வசதியாய் வாழ்கிறபோது கவிதைகள் வாடிப்போயிருக்கின்றன. இது பெரும்பான்மை பற்றிய கருத்து. ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்பது பொருளற்ற தொடர் அன்று. மகாகவி பாரதியைத் தொடர்ந்து பாவேந்தர் தமிழ்க்கவிதையுலகைத் தன்னாட்சிக்கு உட்படுத்தினார். அவருக்குப் பிறகு பெருஞ்சித்திரனார், சுரதா, வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், கம்பதாசன், தமிழ்ஒளி ஆகியோர் தமிழ்க்கவிதையுலகைத் தம் கவிதைகளால் அலங்கரித்தனர். ஆட்சி செய்தனர். அவர்களுக்கும் பின்னாலே அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்துல்ரகுமான், மீரா, முருகுசுந்தரம், தமிழன்பன், மேத்தா, சிற்பி, பொன்னிவளவன், தணிகைச் செல்வன், தாராபாரதி வரை இது நீண்டது. கலைஞர் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக இருந்து கொண்டே தமிழ்க்கவிதையின் சாரங்களை அவ்வப்போது தாம் தலைமையேற்கும் கவியரங்கங்களுள் பிழிந்து வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்க் கவிதைகளுக்கு அஸ்தமன காலமாகியிருக்கிறது. ஆறு கோடி தமிழர்கள் என்றால் ஏழு கோடி கவிஞர்கள் இருக்கிறார்கள். எட்டு கோடி பட்டங்கள் இருக்கின்றன. ஏழரைக்கோடி விருதாளர்கள் இருக்கின்றன. கவிதைதான் ஒன்று கூடக் கண்டபாடில்லை. “இந்த நிலையை மாற்ற வேண்டும். மீண்டும் தமிழ்க்கவிதை மக்கள் இயக்கமாக மாறவேண்டும்” என்று எண்ணுபவர்கள் எண்ணிக்கையில் சிலர். அந்தச் சிலருள் நாகை பொன்மணிதாசனும் ஒருவர். இவருடைய கவிதைகளை நான் தொடர்ந்து முகநூலில் படித்து வருகிறேன். அவருடைய கவியாளுமையை ஒரு சில சான்றுகளால் இந்தக் கட்டுரை விளக்க முற்படுகிறது.
கவிதைகள் அருகிப் போனது ஏன்?
கவிஞர்கள் அருகிக் கவிதைகள் சிறக்குங்காலம் கவிதைக்கு வசந்த காலம். கவிஞர்கள் பெருகிக் கவிதைகள் அருகிப்போவது நசிந்த காலம். இலக்கணத்தைச் செய்யுள் வழியாகக் கற்ற காலம் ஒன்றிருந்தது, மக்கட்தொகை குறைந்த காலத்து, ஆழ்ந்த படிப்பும் தெளிவான சிந்தனையும் உடையவர்கள் கவிதைகளுக்கான சட்ட வரம்புகளைத் தகுந்த தகுதியான சான்றோர்களிடம் கற்றறிந்த காலம் அது. கவிதைகளுள் செழுமையும், அடர்த்தியும் அழகியலும் ஆழ்ந்த கருத்தும் பன்முக நுண்ணியமும் கலந்து கவிதை மிளிர்ந்ததற்கு அந்தச் சூழல்தான் காரணம். அந்தப் பழக்கம் சிறுகச் சிறுகக் குறைந்து பின்னாலே அதாவது தற்காலத்தில் யாப்பறிந்த சிலபேர் பொருள்நோக்கத்தோடு யாப்பிலக்கணத்தை முழுமையான பார்வையின்றி, விதிவிலக்குகள் பற்றி அறியாது, ஒழிபியலை நோக்காது தங்களுக்குத் தோன்றியவாறே இலக்கணம் என்ற பெயரில் எதையெதையோ கற்பித்து வருகின்றனர். இதனைவிடக் கொடுமை என்றால் யாப்பிலக்கணந்தான் கவிதை அதாவது ஒரு கருத்து யாப்பில் வந்து அமைந்து விடுமானால் அது கவிதையாகிவிடும் என்ற தவறான புரிதல் காழ்கொண்டு விட்டதாகும். யாப்பு ஒரு கருவி என்னும் நிலைப்பாட்டிலிருந்து விலகி அதுதான் மூலப்பொருள் என்ற நிலைக்குச் சென்று விட்டது, படிக்கின்ற பழக்கம் குறைந்து போனது. மலிந்து போன உணர்ச்சிகளைப் பாடுபொருளாக்குவது. தலைவர்களைப் பாடுவதையே பிறவிப்பயன் என எண்ணிவிடுவது இப்படிப் பல காரணங்களால் கவிதைகள் சவலைகளாகிவிட்டன. இயற்கை அசைவுகளுக்கும கவிதைகளுக்கும் இருக்கும் இசைவை உணர்ந்து அனுபவித்தவர்கள் எண்ணிக்கையில மிகவும் குறைவு என்பதும் ஒரு முக்கியமான காரணம். ‘அழகின் சிரிப்பு’ போல ஒரு பாவியத்தை இனித் தமிழில் காணமுடியுமா என்பது விடைகாண முடியாத வினாவாக நிற்கிறது. சிறந்த தத்துவஞானியாக இல்லாதவன் கவிஞனாக முடியாது என்னும் கோட்பாட்டைப் புறக்கணித்ததும், தத்துவப் பார்வையே இல்லாமல் போனதும் கவிதைகள் அருகிப் போனதற்கு இன்றியமையாக் காரணிகள் ஆகும். பட்டினத்தாரையோ, பாரதியையோ பாரதிதாசனையோ, கண்ணதாசனையோ தமிழ்க்கவிதை உலகம் எதிர்காலத்தில் காணும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. எல்லாவற்றையும் விட தலைமைக் காரணம் ஒன்றுண்டு. அது தற்புகழ்ச்சி!. தஙகளைத் தாங்களே புகழ்ந்து கொள்வதும் அல்லது தங்களைப் புகழ்வதற்காகவே முகநூலில் ஒரு குழுமத்தை உருவாக்கிக் கொள்வதும் வெகுசாதாரணம். இவரை அவர் பாராட்டுவதும் அவரை இவர் பாராட்டுவதுமாகப் போய்விடுவதால் கவிதையின் கசடுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தூர்வாராக் கேணிகள் சுரப்பது எப்படி;?
முகநூலில் பொன்மணிதாசன்
பொழுதின் பொன்னான நேரங்களைக் கவிதையில் கழிக்கிறார், கவிதைக்காகவே கழிக்கிறார் பொன்மணிதாசன். நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள் பல இருப்பினும் நாளும் முகநூலில் அவர் கவிதைகள் வெளிவருவது தடைபடுவதில்லை. தனக்குத் தெரிந்ததைத் தெரிந்து என்று ஒத்துக் கொள்வதைவிடத் தனக்குத் தெரியாததைத் தெரியாது என ஒத்துக் கொள்வதில் அவரிடம் ஒரு பக்குவத்தைக் காணமுடிகிறது. மரபுவழியான சந்தங்களையும் புதிய சந்தங்களையும் தமது கவிதையாக்கத்தில் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி வருபவர். யார் தம்முடைய படைப்பினை எப்படித் திறனாய்வு செய்தாலும் மெய்ப்பொருள் காணுகிற தெளிவு இவருக்கே உரிமை. எழுபது வயது நிரம்பிய இந்த இளைஞரின படைப்புக்கள் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் இயங்கும் வல்லமை கொண்டவை.
வித்தியாசமான தமிழ்த்தாய் வணக்கம்
தமிழ்க்கவிஞர்கள் பொதுவாகப் பாடுவது தமிழ்த்தாய் வணக்கம்! தமிழைக் கன்னித் தமிழ் ;என்றாலும் அவளைத் தாயாக எண்ணிப் போற்றுவதே தமிழ்க்கவிதை மரபு.
“பொன்னும் ;பொருளுமொரு மண்ணில் வைரமலை
என்னை மயக்கவில்லை தாயே! — கேள்!
பண்ணும் பரதமொடு இன்னும் பலவிருந்தும்
என்னை மயக்கவில்லை தாயே! — அட
மின்னல் விழியிரண்டில் கன்னல் மொழியிருந்தும்
என்னை மயக்கவில்லை தாயே! — நீ
தன்னந் தனியே வந்து என்னை ஈர்த்துவிட்டாய்
தாள்களிலே நான் பணிந்தேன் தாயே!”
என்பது கவிக்கோ துரை வசந்தராசனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். தாயும் காதலியும் பெண்ணாக இருந்தாலும் தாயன்பிற்கு முன்னால் அவள் பாசத்திற்கு முன்னால் அவள்மீது கொணட பக்திக்கு முன்னால், அவள் தன்மீது வைத்திருக்கும் நேசத்திற்கு முன்னால் கன்னிப் பெண் கடைக்கண் பார்வை எடுபடுவதில்லை என்பதை அழகியல் மீது{ரப் பாடியிருக்கிறார் துரை.வசந்தராசன். அந்த மரபைப் பின்பற்றி, மரபு வழிச் சிநதனையாளரான பொன்மணிதாசன
“ஆசையில் மிதக்குமென் அழகான உள்ளத்தை
நேசிக்கும் நெஞ்சம் கொண்டாள்
ஓசைக்கும் நயத்துக்கும் ஓருங்கிய உள்ளத்தில்
உறையத்தான் ஆசை கொண்டாள்”
தமிழைப்பாடும் பேரவா கொண்ட தன்னுடைய அழகான கள்ளம் கபடமற்ற உள்ளத்தைத் தமிழ்த்தாய் நேசிப்பதாகவும் சந்த நயமும் பொருள் நயமும் நிறைந்த தம் பாடல்களில் தமிழ்த்தாய் விரும்பி வந்து உறைகிறாள் என்று பாடுகிறார். தமிழைத் தேடிப் பாடிவரும் உலகில், தமிழை முன்னிலைப்படுத்திப் பாடிவரும் உலகில், கவிஞனைத் தேடித் தமிழ்த்தாய் வருகிறாள் என்பது கொஞ்சம் வேறுபட்ட சிந்தனை. “தசைநாறு என்புக்கும் தானமாய் தன்னையே தமிழாளும் தந்து நின்றாள்” என்னும் அடியில் தன் எலும்பிலும் சதையிலும் தமிழே கரைந்து நிற்கிறது என்பதை உணர்ச்சி மேலிடப் பாடுவதைக் காணமுடிகிறது.
காலந்தோறும் வேண்டும் கவிஞர்கள்
பரந்துபட்ட உள்ளம் கொண்ட கவிஞன் இயற்கையை நேசிப்பதிலும் மானுடத்தை மதிப்பதிலும் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபடுகிறான். அப்படி வேறுபட்டால்தான் அவன் கவிஞன். அவன் கவிதையில் அவன் உள்ளம் எதிரொளிக்க வேண்டும். தனக்கான வேண்டுதலை ஒழித்துச் சமுதாயத்திற்காக வேண்டிக்;கொள்ளும் பரிணாமம் அவனுக்குப் படிப்படியாகக் கிட்டுகிறது, சமுதாயத்தின் கரிசுகளைத் தன்னுடைய பாவங்களாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவனுக்கு வந்துவிடுகிறது, குழந்தைக்கு எது தேவை என்பதறிந்து ஊட்டும் தாயைப் போலத் தான் வாழும் சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து கொடுப்பவனே கவிஞனாவான். கணவனால் வணங்கப்பட்ட காரைக்காலம்மையார் இறைவனிடம்
“இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்!”
என வேண்டுகிறார். இதனைத் தொடர்ந்து வந்து சமரச சுத்த சன்மார்க்கம் கண்ட வளளற் பெருமான்
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும் !
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!”
என மானுடம் மனமாசினின்று விடுதலையடைய வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கூறுவதைக் காணமுடிகிறது. பல்லாயிரம் கவிதைகளை எழுதிக் குவித்த மகாகவி பாரதி தனக்கு என்ன வேண்டும் என்பதையும் கேட்கிறான். உலகியல் வாழ்க்கைக்கான
“மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்!
நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.”
மனிதன் கவிஞனாக முடியாமல் இருக்கலாம். ஆனால் கவிஞன் மனிதனாக இருந்தே ஆக வேண்டும். மனிதனாகவே ஆக முடியாதவன் கவிஞனாகவே முடியாது. மகாகவியின் கூரிய தீஞ்சொற்கள் ஒவ்வொரு தனிமனிதனின் சமுதாயக் கடமையைப்; பட்டியலிடுவதாகவே கருத வேண்டும்.
இந்த நெடிய மரபில் வந்த பாவேந்தர் அவர் காலத்திய சமுதாய நிலை நோக்கி மனம் வருந்திப் பாடுகிறார்.
“வீழ்ச்சியுறு தமழகத்தில் எழுச்சி வேண்டும்
விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
சூழ்ச்சிதனைப் பொறாமைதன்னை வஞ்சகத்தைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
கடல்போலச செந்தமிழைப் பெருக்க வேண்டும்
எனத் தன் உள்ளத்து வேணவாவைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். மேலே சுட்டப்பட்ட கவிஞர்கள் மாறுபட்ட சமுதாயச் சூழல்கள நிலவிய காலங்களைச சார்நதவர்கள். அவர்கள் படைப்பின் நோக்கமும் மாறுபட்டது. இருந்தாலும் ஏதோ ஒருவகையில் மானுடம் பாடுவதில் ஒன்றுபட்டு நிற்பதைக் காணமுடிகிறது. இந்த இழைதான் மரபு. இதுதான் மரபியல் சிந்தனை.
“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் — இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை – நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை”
தன்னை மனிதனாகவும் கவிஞனாகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் மானுடப் பரப்பின் நலம் நோக்கியதே கவிஞனின் பார்வையாக அமைந்திருக்கிறது . அமைய வேண்டும். அந்த வழியில் பொன்மணிதாசன் பாடுகிறார்
“உள்ளறை அழுக்கது உறையாது நீக்கிட
உணர்வினில் தூய்மை வேண்டும்
கல்லுறை வல்லமை கலவாது இருந்திட
கனிவுறும் மனமும் வேண்டும்
முள்ளது தைக்காது மொழிந்திட சொற்களை
முனைப்போடு தேட வேண்டும்
வெள்ளமாம் இன்பம் விழல் நீருமாகாமல்
வினையது ஆற்ற வேண்டும்!
நல்லதோர் தோழமை நாடியே நாமதன்
நலமாக நடத்தல் வேண்டும்
பல்லதும் தெரிந்திடின் பலரதும் போற்றவே
பணிந்தது கொள்ள வேண்டும்
உள்ளமா கோவிலில் உறையவே தெய்வமும்
உத்தமத் தெளிவு வேண்டும்
நல்லறம் தழைத்திட நமதறம் செழித்திட
நமக்கென பொறுப்பு வேண்டும்!
வாழுதற் கரியஓர் வாழ்வினை பெற்றநாம்
வாழ்வதை வாழ்த்த வேண்டும்
ஊழ்வினை பயனதை உணர்ந்தது வரமென
உளமார ஏற்றல் வேண்டும்
தாயுமானவரின் பராபரக் கண்ணிபோல் அமைந்த இந்த அடிகளில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டிய பண்பு நலன்களைத் தன்னுடைய வேண்டுதலாகக் கூறும் ஒரு மானுடக் கவிஞனைக் காணமுடிகிறது. இன்றையச் சமுதாயச் சூழலில் எந்த மனநிலையில் கவிஞன் இருந்திருந்தால் இப்படிப் பாடியிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். உணர்வினில் தூய்மை, அறிவினில் தெளிவு, பழக்கத்தில் பணிவு, நல்ல நட்பு, வினைத்தூய்மை, பொறுப்புணர்வு என்பனவற்றையெல்லாம் வற்புறுத்திய கவிஞன் இந்த வாழ்க்கையை வாழத்த வேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கூறியிருப்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வாழ்க்கை மிகவும் இனியது என்பது மகாகவியின் பார்வை. பாரதிக்கு முன்பே அப்பர் பெருமான் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று மானுடத்தின் மகத்துவத்தைப் பாடியிருக்கிறார். “மானுடம் வென்றதம்மா” என்பது கவச்சக்கரவர்த்தியின் வியப்பு! தமிழின் நீண்ட நெடிய கவிதை மரபில் மானுடத்தைப் போற்றுவதும் அதன் பெருமை பேசுவதும் அதனை வாழ்த்துவதும் அதனை வலியுறுத்துவதும் ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து வருவதைக் காணவேண்டும். தமிழிலக்கியத்தின் சாரம் மானுடம் பாடுவதே! பொன்மணிதாசன் அதனைத்தான் செய்திருக்கிறார்.
பொன்மணிதாசனின் தத்துவப் பார்வை
தத்துவஞானி கவிஞனாயிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் கவிஞன் உறுதியாகத் தத்துவஞானியாகத்தான் இருக்க வேண்டும். தத்துவஞானியாய் இல்லாதவன் கவிஞனாக இருக்க முடியாது. “No man was ever yet a great poet without being at the same time a profound philosopher” – Coleridge)
குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்
தட்டுகெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்;தம்
என்னும் வரிகளை ஒரு இருபத்தேழு வயதுடைய இளைஞன் எழுதியிருப்பான் என்பதை எத்தனைப் பேர் நம்புவார்கள்? பிறவியிலேயே கவித்துவமும் தத்துவப்பார்வையும் இணைநதவன் எழுதிய வரிகள் இவை.
“எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா! என்
இதயத்தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா!”
என்று ஒரு சாதாரண திரையிசைப்பாடலிலேயே மாபெரும் தத்துவத்தைப் பதிவு செய்யும் ஆற்றல் கண்ணதாசனுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. “தொட்டபின் பாம்பு என்றும் சுட்டபின்நெருப்பு என்றும் பட்டபின் தேறலே” கண்ணதாசனின் பழக்கமென்றானதால் வந்த முதிர்ச்சி அவனை ஒரு தத்துவ ஞானியாக்கியது.
“எத்தனை பேருக்கு இரவு விடியும்
இதற்கு விடையேது?
அத்தனை பேருக்கும் அமைந்த இரவும்
அதனை அறியாது!”
எனத் தத்துவம் பேசுகிறார் பொன்மணிதாசன்! விடியலை நோக்கியதுதான் இரவின் பயணம்! ஆனால் வாழ்வியலில் எத்தனைப் பேருக்கு எப்போது விடியும் என்பதே தெரியவில்லை. அது மட்டுமன்று அந்த விடியல் எப்போது வருமென்று பயணிக்கிற இருட்டுக்கே தெரியவில்லை.
“இறப்பு பிறப்பு இதனதன் மறைப்பு
இயல்பின் பெருங்கூற்று
சிறப்பு என்பது இறப்பின் பின்னே
பிறக்குமொரு ஊற்று!
மறக்கும் நிலையே மனித குலத்துக்கு
மருந்தெனில் பொய்யில்லை
மறக்கா நிலையில் மனிதன் வாழ்வெனில்
மனிதம் மெய்யில்லை!”
கடந்த காலத்தை மறந்து எதிர்கால இலட்சிங்களோடு பயணிப்பதுதான் மானுடத் தத்துவம். அந்த மறதி இல்லாவிடின் வாழ்க்கை தடுமாறும். கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருந்தால் நிகழ்காலமும் குழம்பும். எதிர்காலமும் விளங்காது. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி என்பதை இந்த அடிகள் காட்டுகின்றன. படித்துத் தத்துவம் பேசுவது வேறு. பட்டறிந்து தத்துவம் பேசுவது வேறு. பொன்மணிதாசன் பட்டறிந்து தத்துவம் பேசுகிறார். மானுடத்தின் மீது கொண்ட தான் கொண்டிருக்கும் மாறாக் காதலால் தத்துவம் பேசுகிறார். தத்துவம் பேசுகிற கவிஞனைத் தத்துவக் கவிஞன் என்று அழைப்பதே பொருத்தமற்றது. கவிஞனே தத்துவஞானிதான்.
சாதிப்பிணக்குகளும் தமிழ்க்கவிஞன் தத்துவமும்
இனக் குழுக்களே சாதிகளாகப் பிரிந்தன என்பதுதான் ஆய்வாளர் முடிவு. தெளிவாகச் சொன்னால் சமயத்திற்கும் சாதிக்கும் தொடர்பேயில்லை. இருந்திருக்குமானால் தொடர்பற்ற பல சாதி மக்கள் எப்படி ஒரே சமயத்தைப் பின்பற்ற முடியும்? சாதிக் கரணைகளைச் சமயச் சங்கிலி பிணைத்திருப்பதன் பின்னனி என்ன? சாதிக்குப் பின்னால்தான் சமயம் ஒளிந்து கொள்கிறது. அகச்சமயங்களில் நிலவிய இந்தக் கொடுமை புறச்சமயங்களிலும் இன்று ஊடுருவியிருப்பதும் பொருளதார மற்றும் வேலை வாய்ப்புக்காகச் சாதிகளையே மாற்றிக் கொள்வதும் மதங்களையே மாற்றிக் கொள்வதும் நேர்மை என்னும் உயரிய பண்பின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகும். “சாதிகள் இல்லையடி” என்னும் பாரதியின் வாக்கில் ‘இல்லை’ என்னும் சொல் வெகு ஆழமானது, உள்பொருள்களான மனிதநேயத்தைப் புறந்தள்ளி, இல்பொருளான அதாவது அருவப்பொருளான சாதியை முன்னெடுப்பது ஒரு வளர்நிலைச் சமுதாயத்தின் பின்னடைவுக்குக் காரணமாகும் என்பதுதான் பாரதியின் சாரம்
ஓரிடம் பிறந்து ஓடும் ஒப்பற்ற நதிகளெல்லாம்
வேறிடம் சென்றபோதும் சேர்வது ஓரிடந்தான்!
ஆறுடன் சென்ற நீரும் அதனிலே பிரிந்த நீரும்
மாறியே நடந்தால் கூடமறவாமல் கடலைக் கூடும்!
என எல்லாரும் அறிந்த இனிய எளிய உவமத்தால் சாதி வேறுபாடு களைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். சாதி ஒரு வகையான தற்காலிக அமைதியைத் தரலாம். உலகின் எதிர்காலம் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதால் சாதி என்னும் அருவப்பொருள் நடப்பியல் வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்துவிட முடியாது. பாவ புண்ணியம் என்பன மறுமைக்கு உரியது. மகாகவி பாரதி குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றதன் மூலம் அதனை மறுமைக்குரிய பாவமாகவே கருதுகிறான் ஒரு மரபுவழிச் சிந்தனையாளரான பொன்மணிதாசன் அதனை வழிமொழிகிறார் எனலாம்.
மரணம் மட்டுமே உண்மை!
இந்த உலகில் யாராலும மறுக்க முடியாத நடப்பியல் என்பது மரணந்தான். மரணத்தை வென்றவர் எப்படி இல்லையோ அப்படியே மரணத்தைத் தடுத்தவரும் இல்லை. “மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்நதிடலாம் கண்டீர்” எனக் கூறிச்சென்ற வள்ளற் பெருமானும் இளம் வயதிலேயே மறைந்தார் என்பதுதான் வரலாறு. மரணத்தை நிஜமாக்கியதற்குப் பின்னால் புரியாத பல உண்மைகள் உண்டு. ஆனால் அது நிஜமெனத் தெரிந்தும் மனிதனின் ஆணவம் குறைந்தபாடில்லை. தான் என்னும் அகப்பற்றும் தனது என்னும் புறப்பற்றுமே மானுடச் சிதைவுக்கான காரணங்கள். இந்த இரண்டு காரணங்களையும் அகற்றுவதற்கான ஒரே வழி மரணம் பற்றிய உண்மையை உணர்வதுதான். காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே எனச் சித்தர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். நந்த வனத்தில் ஓராண்டி அவன நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்று அவர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். பத்ரகிரியார், பட்டினத்தார் போன்ற பெருமக்கள் உலகியலைத் துறந்து போனதற்கும் அவர்கள் மரணம் பற்றிய தெளிவைப் பெற்றிருந்தனர். “இருப்பது போய் போவது மெய்”
“அஞ்சினால் விலகிப்போமோ? அகற்றவும் செய்யவாமோ?
நெஞ்சிலே பாரம்கூடும் நினைவிலே மரணம்நின்றால்
கெஞ்சினால் தரவாக் கூடும்? கேட்டுயிர் நிலைப்பதற்கு
விஞ்ஞானம்கூடத் தோற்கும் விந்தையே மரணமென்பேன்!
மரணமே இல்லாவாழ்வு மண்ணுயிர்க்கேது உண்டு
பிறப்பது உள்ளமட்டும் இறப்பது இருந்தேதீரும்
வரவது அறியாவண்ணம் வாழ்க்கையில் சிறப்பே என்றால்
இறப்பது ஒன்றேயன்று இல்லையே சொல்லுதற்கு!
நடப்பதை நடத்தத்தானே நாயகன் உள்ளானிங்கு!
நடைபேறும் நாடகத்தில் நாளுமே முடிவும் உண்டு!
கிடைத்தது அரியதென்று கிடைத்ததை மகிழ்ச்சியாக்கு
உடைகின்ற நாளும் வந்தால் பானையும் உடைந்திடாதா?
நேற்று இருந்தது இன்றைக்கு இல்லை என்பது நிலையாமை அன்று. முற்கணம் பிறந்தது இக்கணம் இல்லாது ஒழிவதுதான் நிலையாமை. இந்த வாழ்க்கையை நீர்க்குமிழி என்றதற்கும் அதுதான் காரணம். ‘இருப்பது போய் போவது மெய்’ என்பார்கள் சித்த்ர்கள். ‘நான்கு விலங்குகளில் நாட்டியமாடுகிறோம்’ எனபார் கண்ணதாசன்! பிறப்பு இறப்பை நோக்கியது என்பது உண்மை இந்த உண்மை தெரிந்த பின்னும் மானுடப் பண்புகள் ஏதுமின்றி, மானுடம் சிறக்க வேண்டிய நோக்கங்கள் இன்றி ‘வெந்தது தின்று விதிவந்தால் மரணம்’ என்பது பொருளுடையது அன்று. பிறந்த நாள்கள் என்பன கழித்தல். பலபேர் அதனைக் கூட்டல் என்று கருதி மயங்குகிறார்கள். பிறந்த நாள் தெரிந்தவர்களுக்கு இறக்கப்போகும் நாள் தெரியாமல் போனதுதான் இறைவனின் சூத்திரம். அல்லது இயற்கையின் மந்தணம். நீண்ட நெடிய தமிழ்க்கவிதைகளின் உள்ளடக்கச்சாரமே நிலையாமைதான். பொன்மணிதாசனும் தன் கவிதையில் அந்தச் சாரத்தைப பிழிந்திருக்கிறார
வாழ்வியல் சூழல்
மனிதன் ஒரு சமுதாய விலங்கு. இச்சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அது நேர்முகமாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அவனைப் பாதிக்கிறது, படித்த அறிவாலும் பட்டறிவாலும் பக்குவப்பட்ட எவனுக்கும் தானே தனித்துச் செயல்படுத்துவதற்கான ஆக்கப் பூர்வமான நம்பிக்கையான ஒரு வாழ்வியல் சூழல் இங்கே நிலவவில்லை. எதிர்மறைப் பண்புகளை அறிமுகம் செய்து கொள்வதும். அதற்கு நியாயம் கற்பிப்பதும் பின்னால் அதனையே வழக்கமாக்கிக் கொள்ளுவதும் இங்கே வாழ்வியல் நெறி ஆகிப்போனது. பொன்மணிதாசன் பாடுகிறார்
“உண்ண உணவு உடுத்த உடை
இன்னும் கிடைக்கல
எண்ணப்படி இன்னு மிங்கே
எதுவும் நடக்கல
கன்னம் சாத்தும் கால மிங்கு
இன்னும் மறையல
கண்ணு முன்னே கற்ப ழிப்பு
ஒண்ணும் தொலையல!”
“ஆட்கள் வளர்ந்த அளவுக் கின்னும்
அறிவு வளரல
ஆளுக்காளு அமுக்க நினைக்கும்
ஆசை மறையல
சொல்லும் செயலும் வேறு வேறு
சொல்ல முடியல
சொல்லப் போனா சுதந்திரப் போர்
வெல்ல முடியல!”
“நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
நாடு விடியல
நாளைக் கென்ன சட்டம் வரும்
நமக்கும் புரியல
ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
ஆளத் தெரியல
ஆள வந்தார் அதி காரத்தால்
மீள முடியல!”
மக்களோடு மக்களாகப் பழகி, பாமரத் தமிழறிவு இருந்தாலே உணர்ச்சியுள்ள எவனும் கவிஞனாகலாம் என்பதை நிருபித்திருக்கிறார் பொன்மணிதாசன்.!
“நீ அமுதசுரபியைத்தான்
கொடுத்துவிட்டுச் சென்றாய்!
எங்கள் கையில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்”
என்பார் மேத்தா. அது புதுக்கவிதை என்பார்கள்.
“சொல்லப் போனா சுதந்திரப் போர்
வெல்ல முடியல!”
என்று இன்னும் ஆழமாகச் செதுக்கியிருக்கும் இந்தக் கவிதை மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?
“நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
நாடு விடியல
நாளைக் கென்ன சட்டம் வரும்
நமக்கும் புரியல!
நாடு விடுதலையடைந்ததிலிருந்து அண்ணல் காந்தி அவர்கள் படமும் இந்த நாடும் மட்டுந்தான் சட்டத்திற்குள் இருக்கின்றன. அந்தச் சட்டங்கள் மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கானது என்றால் இன்னும் சட்டம் ஏன்? எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் சட்டம், நாளையும் சட்டம் என்றால் வாழ்வியலில் அமைதி நிலவுவது எப்போது என்னும் விடைகாண முடியாத வினாவிற்குப் பதில் சொல்லப்போவது யார்? எப்படி ஆள்வது என்று ஆள்வோருக்குத் தெரியவில்லை! எப்படி வாழப்போகிறோம் என்பது மக்களுக்குத் தெரியவில்லை!.
“ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
ஆளத் தெரியல
ஆள வந்தார் அதி காரத்தால்
மீள முடியல!”
நடப்பியல் அரசியலை இதனைவிடத் தெளிவாக்கிவிட முடியுமா? அதுவும் கவிதையில்! ஆள்வதற்காகக் கட்சி தொடங்கியவர்களுக்கு ஆளத் தெரியவில்லையாம்!. தெரிந்து அதிகாரத்திற்கு வந்து விட்டவர்களுக்கு அந்த அதிகாரப் போதையிலிருந்து விடுபட முடியவில்லையாம்! யோக்கியனாகத்தான் ஒருவன் வாழ எண்ணுகிறான். சூழல் எதிர்மறையாகிப போனது. பத்தினியாகத்தான் வாழ நினைக்கிறாள். சூழல் எதிர்மறையாகிப் போனது. பொதுப்பணி செய்யத்தான் விரும்பி வருகிறான். வந்தபின் அறிந்து கொள்கிறான் சூழல் தனக்கு எதிராக இருப்பதை.
காலத்தால் அழியாத காதல்
கவிதையின் பாடுபொருளை அகம் புறம் எனச செம்பாதியாகத் தமிழ்ச் சான்றோர்கள் பிரித்திருந்தாலும் தொண்ணூறு விழுக்காடு இலக்கியங்கள் அகம் சார்ந்ததாகவே அமைந்துள்ளன. அல்லது அது சார்ந்த பாடல்களே கிட்டியிருக்கின்றன. காதல் மிகவும் மென்மையான பாடுபொருள். பிரிவு துன்பம் தரும். ஆனால் அதுபற்றிய கவிதை இன்பம் தரும். மலரினும மெல்லிது காமம் என்பார் வள்ளுவர். இங்கே காமம் என்பது பருப்பொருளால் நுகர்கின்ற காம இன்பத்தினையும் உணர்வுகளால் நினைக்கப்படும் காதல் நினைவுகளையும் குறிக்கும். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன் பறறித் திருக்குறள் பேசுவதால் அது பருப்பொருளால் நுகரப்படும் இன்பம். ‘நெஞ்சத்து காதலவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து எனத் தலைவி தயங்குவதால் அது ஓர் தனித்த உணர்வு. இரண்டையும் ஒரு சேரக் கலந்து கவிதை படைப்பாரும் உண்டு ஒரு பாடல் கண்டேன்!
“எங்கே உனைக் கூடடிச் செல்ல?
சொல்வாய்! என்றன் காதில் மெல்ல!”
“என் பெண்மையும இளைப்பாறவே
உன் மார்பில் இடம் போதுமே!”
உன்னை எங்கே கூட்டிச் சொல்ல வேண்டும் சொல் என்று தலைவன் கேட்கிறான். எங்கேயும் வேண்டாம். என் பெண்மை இளைப்பாற மார்பு போதும் என்று தலைவி விடைதருகிறாள். ஆபாசமில்லாமல் காதலைப் பாடுவது சங்கச் சான்றோர்களுக்கு கைவரப் பெற்றதாக இருந்தது. அதற்குப் பின்னால் அந்த நிலை இன்று வரை கைகூடுவதற்கு அருமையாக இருக்கிறது. ஈர்ப்பு, மோகம், காதல், பக்தி, வழிபாடு, பித்து, மரணம் என்னும் உணர்ச்சிகளின் பரிணாமம்தான் காதல். உண்மைக்காதல் இப்படித்தான் தொடங்கி இப்படித்தான் முடிகிறது. இத்தகைய பாடல்களைச் சிந்தித்து எழுதுவதற்குப் பொன்மணிதாசன் முயல்கிறார் என்பது அவரது பதிவுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது, கொஞ்சம் சிரமமான வேலைதான். ஏனைய பாடுபொருள்களைக் கவிஞன் பாதிக்கிறான். ஆனால் காதல் என்னும் உணர்வுதான் கவிஞனைப் பாதிக்கிறது. அனுபவம்தான் கவிதை என்பது காதலுக்குப் பொருந்துவதைப் போல மற்ற பாடுபொருளுக்கு அவ்வளவாகப் பொருந்துவதில்லை. தொடர்பில்லாத உணர்வுகளை மனத்தில் கொண்டு வந்து நிறுத்தி தலைவனாகவும் தலைவியாகவும் தன்னை எண்ணிக் கொண்டு காதல் பாடல்கள் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றன்று.
“நின்னை நினைக்கும் நினைவை விதைத்தாய்
நிறைய விளைச்சல் ஏக்கம
நின்னால் நித்தம் நீங்கிப் போனது
நிலவில் தானடி தூக்கம்!
கண்களில் நிறைய கனவுகள் வந்தன!
கனலாயத் தானே மூசசும்!
கன்னா பின்னா காதல் மொழிகள்
கணக்கில் அடங்காப் பேச்சும்!
தப்பும் தவறும் கூடிப் போச்சு
தவிப்பில் இப்ப நானும்!
தப்பித் தவறி உண்ணுகிறேன் என்
தழைத்த உடலைக் காணோம்!
எப்போதிருந்து இப்படி என்றே
என்னை மருத்துவர் கேட்டார்!
எப்படிச் சொல்வேன நீதான் என்று
இடிப்பார் எங்கள் வீடடார்!
…………………………………………………………………………………………
இலலையெனக்கு வாழ்வே இலலை
இதுதான் முடிவு! தோழா!
கடிதம் இதனைக் கண்ணீர் கசிய
காணாதாரும் எழுதி
விடியுமுனே விடுத்தேன் அஞ்சல்
விடையும் உடனே தருக!
இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
இன்றே நானும மடிவேன்!
எனத் தனிமனிதக் காதல் உணர்ச்சிகளை மந்தணமாகவும் மென்மையாகவும் பாடும் திறன் பெற்ற பொன்மணிதாசன் சமுதாய மட்டத்தில் பெண்ணின் பெருமையைத் தூக்கிப் பிடிப்பதில் ஒரு மாபெரும் சமுதாய ஆர்வலராகவே காட்சியளிக்கிறார்.
“ஆசை வச்சேன் உம்மேலே! அரளி வச்சேன் கொல்லையிலே!
பாத்தேனடா ஒம்மொகத்த! பகைச்சேனடா எஞ்சனத்தை!”
என்பது வாய்மொழி இலக்கியம். படைப்பிலக்கியங்களைவிட காதல் உணர்ச்சி சற்று தூக்கலாக இருப்பது நாட்டுப்புற இலக்கியங்களில்தான் என்பது ஆய்வாளர் கருத்து, உணர்வுப்பூர்வமான காதலை வாய்மொழி இலக்கியங்கள் உணர்த்துவதுபோலப் படைப்பிலக்கியங்கள் உணர்த்துவதில்லை. காரணம் படைப்பிலக்கியங்களில் உணர்வுக்கு மொழியின் வரி வடிவம் ஊடகமாகப் பயன்படும் போது, கூச்சமும் தயக்கமும் ஏற்படுவது இயல்பு. அவ்வாறின்றி உணர்வுகளுக்கு ஆடைகட்டாமல் அப்படியே பாடப்படும் வாய்மொழி இலக்கியங்கள் நேராக நெஞ்சுக்குள் சென்று தைக்கின்றன. எனவேதான் படைப்பிலக்கியக் கரத்தாக்களும் வாய்மொழி இலக்கிய வடிவத்தைத் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்துகிறார்கள். பொனமணிதாசன்
“இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
இன்றே நானும மடிவேன்”
என்று வாயமொழி இலக்கியச் சாயலில் பாடுவதற்கு இதுதான் காரணம். பெண்ணைக் காதற் கருவி என்று மட்டும் கருதாமல் வணங்கத்தக்க மானுடத்தின் அடையாளம் என்பதிலும் பொன்மணிதாசன் உறுதியாய் இருக்கிறார்.
“பெண்ணை நீ போற்றிப் பாடு!
பெருமையைத் தூக்கிப் பாடு!
பெண்ணிலா தேசந்தன்னைப்
பெயர்த்துமே கடலில் போடு!
பெண்களே நமது கண்கள்!
பெண்ணின்றேல் ஆண்கள் இல்லை!!
பெண்களே குடும்பச் சொத்து
பெண்ணன்றோ இன்ப முத்து!
பெண்ணின் பெருமையைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க உரைநடையில் பேசியதைப் பொன்மணிதாசன் கவிதையில் பேசுகிறார். தனிமனித உணர்ச்சிகளை எளிய தமிழில் பாடும் பொன்மணிதாசன் சமுதாயச் சிந்தனைகளையும் தன்னைப் பாதிக்கும் நிகழ்வுகளையும் கவிதையில் கொண்டுவருவதில் சுணக்கம் காட்டுவதில்லை. அங்கதமும் அழகியலும் காதலும் கடமையுணர்வும் மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் இறையுணர்வும் தத்துவப் பார்வையும் அவருடைய முகநூல் கவிதைகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் இழையோடுகின்றன.
நிறைவுரை
கவிதை யாப்புக்குள் இல்லை! சமுதாயத்திலிருந்து இதயத்திற்குப் பயணமாவது. பாதிப்பிலிருந்து தன பயணத்தைத் தொடங்குவது. ஒப்பாரிக்கும் தாலாட்டுக்கும் தகுதி தேவைபடாதது போலவே எழுதப்படுகிற கவிதைக்கும் ஏந்தத் தேவையில்லை. தன்னைப் பாதிக்கின்ற அலலது தான் பாதிக்கின்ற பொருண்மைகளைப் பாடுவதுதான் கவிதையின் நதிமூலம். பாதிப்பின்றிக் கவிதை வராது. வந்தால் அது கவிதை இல்லை. வாசலில் அழகிய கோலம் இடுவதற்கும் அதற்கு அடிப்படையான புள்ளிகளை வைப்பதற்கும் அடிப்படை வரைபடப் புலமை தேவையில்லை. அழகியல் உணர்ச்சி மட்டுமே!. அளவுகோலை வைத்துக் கொண்டு புள்ளிகளை வைத்தால் கோலம் அலங்கோலமாகும். முகநூல் கவிதைகளும் படைப்பிலக்கிய வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுதலின் பிழையின்றி எழுதினால் போதும். எந்தப் பொருளைப் பற்றியும் எழுதலாம். இன்றைக்கு முகநூல் வெகுமக்களை இணைக்கின்ற சமுதாய ஊடகமாகப் பெரிதும் பயன்படுகிறது, பொன்மணிதாசனின் கவிதைகள் இணைப்புச் சங்கிலியாகவும் பயன்படுகிறது. தன்னுடைய கவியாளுமை மூலம் எல்லாருடைய கவனத்தையும் பெறுவதாகவும் அமைந்திருக்கிறது. தமிழ்க்கவிதை உலகிற்கு இவரை அறிமுகம் செய்வதில் ‘வல்லமை’ பெருமைப் பட போதுமான காரணங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்!
(தொடரும்)