குறளின் கதிர்களாய்…(505)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(505)
கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.
-திருக்குறள் – 566 (வெருவந்த செய்யாமை)
புதுக் கவிதையில்…
எல்லோரிடமும்
கடுஞ்சொல் சொல்பவனாய்,
இரக்க குணம்
இல்லாதவனாய்
அரசன் அமைந்துவிட்டால்,
அவனது பெருஞ்செல்வமும்
அவனிடம் நிலைத்து நிற்காமல்
அப்பொழுதே
அழிந்துபோகும்…!
குறும்பாவில்…
கடுஞ்சொல் சொல்பவனாய் இரக்கமே
இல்லாதவனாய் அரசன் இருந்தால், அவனது
பெருஞ்செல்வமும் நிலைக்காதே அழியும்…!
மரபுக் கவிதையில்…
நாட்டை யாளும் மன்னனவன்
நல்ல வார்த்தை பேசாமல்
காட்ட மான கடுஞ்சொல்லைக்
கனிவே யின்றி உரைப்பவனாய்,
காட்டும் நெஞ்சில் இரக்கமது
கடுகின் அளவும் இலாதவனாய்
நாட்டுக் கமைந்தால் அவன்செல்வம்
நலிந்தே அழியும் நிலைக்காதே…!
லிமரைக்கூ…
சொல்பவனாய்க் கடுமையான சொல்லை,
இரக்கம் இல்லாதவனாயும் மன்னன் இருந்தால்
அவன்செல்வம் நிலைத்திருப்பதே யில்லை…!
கிராமிய பாணியில்…
செய்யணும் செய்யணும்
நல்லதே செய்யணும்
நாட்டு ராசா,
மக்களுக்கு
நன்ம தராதத
செய்யாம இருக்கணும்..
கடுஞ்சொல்லு
சொல்லுறவனாயும்
எரக்கமே இல்லாதவனாயும்
ராசா இருந்தா
அவனோட பெருஞ்செல்வமும்
அவங்கிட்ட நெலச்சி நிக்காம
அழிஞ்சியே போவும்..
அதால
செய்யணும் செய்யணும்
நல்லதே செய்யணும்
நாட்டு ராசா,
மக்களுக்கு
நன்ம தராதத
செய்யாம இருக்கணும்…!