வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்வோம்

அண்ணாகண்ணன்
வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் அனைவரும் தொழிலாளிகளாகவே இருப்பதில்லை. அவர்களுள் சிலர் முதலாளிகளாகவும் இருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கியத் தொழில்களில் கணிசமான விழுக்காடு, வட இந்திய முதலாளிகள் வசம் உள்ளது. பெரு முதலாளிகளின் முதலீடும் முயற்சிகளும் பெரிது. இதே போன்று வட இந்தியச் சிறு முதலாளிகளும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
வட இந்தியச் சிறு முதலாளிகள் சிலரை அண்மையில் கவனித்தேன். இவர்கள் அனைவரும் பாதுகாப்பான தொழில்களில் இருக்கிறார்கள். அதாவது காய்கறி, பழங்கள், பால் போன்று விரைவில் கெட்டுப் போகும் தொழில்களை இவர்கள் அதிகம் தொடுவதில்லை. விரைவில் கெடாத, நீண்ட காலம் ஆனாலும் அப்படியே இருக்கிற தொழில்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் கடை நடத்துகிறார்கள்.
ஆயத்த ஆடை, ஜவுளித் துறை, மெத்தைகள், படுக்கை விரிப்புகள், பேன்சி கடைகள், காகிதக் கோப்பை, காகிதத் தட்டு, பிறந்த நாள் கொண்டாட்டப் பொருள்கள் (தொப்பி, ஜகினா, மெழுகுவர்த்தி.. போன்றவை), வாகன உதிரி பாகங்கள் (ஆட்டோமொபைல்ஸ்), மின்னியல், மின்னணுப் பொருள்கள் (எலக்ட்ரிக். எலக்ட்ரானிக்) டயர்கள், ஹார்டுவேர்ஸ், பொம்மைகள்… போன்றவற்றை விற்கும் தனிக் கடைகளைத் துணிவுடன் நடத்துகிறார்கள்.
பலர் தங்கள் கடையில் முழுநேரம் வேலை செய்கிறார்கள். எனவே, ஆள்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. பொருள் விற்காவிட்டாலும் கெட்டுப் போகும் என்ற கவலையில்லை. இந்தப் பொருட்களுக்கு எப்போதும் தேவை இருக்கும் என்பது இன்னொரு வசதி. பெரும்பாலும் பில் கொடுக்க மாட்டார்கள். பில் கேட்டாலும் துண்டுச் சீட்டில், எஸ்டிமேட் தாளில் எழுதிக் கொடுப்பார்கள். கடை வாடகை, முன்பணம் மட்டும் இருந்தாலே தனிக் கடை போட்டுவிடலாம்.
சிலர், ஒரு கடையில் நன்கு விற்பனை ஆகத் தொடங்கிய உடன், அதே போன்ற கடைகளை அக்கம் பக்கத்தில் நடத்துகிறார்கள். பெரிதாகப் பெயர்ப்பலகை வைத்து, வணிகப் பெயரை (பிராண்டு) வளர்க்காமல் அல்லது முன் நிறுத்தாமல், எளிமையாக நடத்துகிறார்கள். ஒரே ஊரில் ஒரே ஆள் ஐந்து பேன்சி கடைகள் நடத்துகிறார். ஐந்தையும் பார்த்தால் தனித் தனிக் கடைகளாகத் தெரியும். ஆனால், ஒரே ஆள் நடத்துவது. இதன் மூலம் இதில் ஏகபோகமாக முன்னேறுகிறார்கள்.
முக்கியச் சாலைச் சந்திப்புகளில் நன்றாக இயங்கும் உணவகங்களை, காபி கடைகளை, இனிப்பகங்களை அப்படியே கையகப்படுத்தி நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதைச் சென்னையிலும் கோவையிலும் கண்டேன். வெளியே பார்த்தால் தமிழ்ப் பெயராக இருக்கும். உள்ளே போனால் முழுக்க முழுக்க வட இந்திய உணவுகள்.
உணவகங்களில் சப்பாத்தி, பரோட்டா, பூரி, சமோசா, கட்லட், பானி பூரி, சாட் உணவுகள் போன்ற சற்றே நீண்ட ஆயுள் உள்ள உணவுப் பொருள்களாக வைக்கிறார்கள். அதாவது, வாடிக்கையாளர் வந்து உட்கார்ந்து ஆர்டர் செய்த பிறகு சப்பாத்தி, பரோட்டா போட்டு எடுக்கலாம். முதலிலேயே மொத்தமாகச் சமைத்து வைப்பதில்லை. தங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதை மட்டும் செய்கிறார்கள்.
தமிழ்ப் பெயரைப் பார்த்து உள்ளே நுழைந்து, இத்தகைய உணவுகளைப் பார்த்துவிட்டு அந்தச் சுவை பிடிக்காமல் வெளியே வந்திருக்கிறேன். ஆனால், தொடர்ந்து மக்கள் உள்ளே போய்ச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். லாபம் இல்லாமல் இப்படிக் கடை நடத்த மாட்டார்கள் என்பது உறுதி.
தமிழர்கள், வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.