பேஸ்புக் வழியே வருவாய் ஈட்டுவது எப்படி?

அண்ணாகண்ணன்
பேஸ்புக் பல வகைகளில் வருவாய் ஈட்ட வகை செய்கிறது. பேஸ்புக் ஸ்டார்ஸ் என்ற வகையில், நமது பதிவுகளைப் பிடித்திருந்தால், நம் நேயர்கள் பேஸ்புக்கிற்குப் பணம் கட்டி, இந்த ஸ்டார்களை வாங்கி நமக்கு இத்தனை ஸ்டார்ஸ் எனக் கொடுக்கலாம். அதாவது நேரடியாக நமக்கு அனுப்பாமல், சற்றே சுற்றி வளைத்து நமக்கு அனுப்புவது. இதில் பேஸ்புக்கிற்கும் ஒரு சிறு பங்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதிவில் ஒருவர் எவ்வளவு ஸ்டார்ஸ் பெற்றிருக்கிறார் என்பது பதிவிற்குக் கீழே தெரியும். நம் ஊரில் சுரேஷ் கண்ணனுக்கு இவ்வாறு நேயர்கள் ஸ்டார்ஸ் அனுப்பியிருப்பதை அவர் பகிர்ந்திருந்தார்.
இதன் அடுத்த நிலைதான், பேஸ்புக் சப்ஸ்கிருப்ஷன்ஸ். ஒவ்வொரு பதிவுக்கும் ஸ்டார்ஸ் அனுப்பாமல், ஒட்டுமொத்தமாகப் பதிவர் ஒருவருக்கு நேயர்கள் சப்ஸ்கிரைப் செய்யலாம். மாதம் ரூ.89 கட்டி அவருடைய பதிவுகளைப் படிக்கலாம். இப்படிப் பணம் கட்டியவர்கள் மட்டுமே படிக்கும் / பார்க்கும் வகையில் பதிவுகளை வெளியிடலாம்.
பேஸ்புக்கில் நாம் வெளியிடும் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்து, வருவாய் ஈட்டலாம். இதற்கு ஒருவருக்குப் பின்தொடர்பவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருக்க வேண்டும். நேரலை வீடியோக்களை வெளியிடும்போதும் இவ்வாறு விளம்பரங்கள் வழியே வருவாய் ஈட்டலாம்.
பேஸ்புக்கில் நிறைய நிறுவனங்களுடன் விளம்பரக் கூட்டாளியாக இருந்து, அவர்களின் பொருள்களை விளம்பரப்படுத்தி மக்களை வாங்கச் செய்யலாம். நம் பதிவின் வழியாக அவர்கள் குறிப்பிட்ட பொருள்களைச் சென்றடைந்து, பொருள்களை / சேவைகளை வாங்கினால், அதில் நமக்கும் வருவாய் உண்டு.
இவை அல்லாமல், நாம் பேஸ்புக்கில் எழுதும், வெளியிடும் ஆக்கங்களுக்கு அவற்றின் வரவேற்புக்கு ஏற்ப, பேஸ்புக் நமக்கு வருவாய் அளிக்கிறது. தோராயமாக ஒரு லட்சம் பார்வைகளுக்கு ஒரு டாலர் என்பது போல் இந்த வருவாய் இருக்கும். இதற்கு உங்கள் சுயவிவரத்தைத் தொழில்முறைப் பயன்முறைக்கு (புரபஷனல் மோடு) மாற்றிக்கொள்ள வேண்டும். இதை மாற்றுவதன் மூலம், நாம் படைப்பாளராக, படைப்புகளின் வெளியீட்டாளராக மனத்தளவில் மாறுகிறோம்.
உங்கள் சுயவிவர முகப்புப் பக்கத்தில் வலது புறம், மேலும் என்பதைக் குறிக்க, மூன்று புள்ளிகள் (“…”) இருக்கும். அதைச் சொடுக்கி, அதில் தொழில்முறைப் பயன்முறையை இயக்கு (“Turn on Professional Mode”) என்பதை இயக்க வேண்டும். பேஸ்புக்கின் கொள்கைகளை, விதிமுறைகளை ஏற்று, வரி விவரம் (PAN Number), வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் ஒவ்வொரு பதிவும் எவ்வளவு பார்வைகளைப் பெறுகிறது, அதற்கு எவ்வளவு பேர் பின்னூட்டம் அளிக்கிறார்கள், பகிர்கிறார்கள் என்பதைப் பொறுத்து வருவாய் ஈட்டலாம்.
இது சிறிய வருவாய் தான். ஆனால், சிறுதுளி பெருவெள்ளம் ஆகலாம். ஏராளமானோர் நாள்முழுவதும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள். எவ்வளவோ படிக்கிறார்கள், பார்க்கிறார்கள், பகிர்கிறார்கள். இவர்கள் சற்று முயன்றால் பார்வையாளர் இடத்திலிருந்து படைப்பாளர் நிலைக்கு உயரலாம். வருவாயும் ஈட்டலாம்.
இதற்காகவே அந்தந்த நேரத்தில் எது பரபரப்பாக இருக்கிறதோ அதைப் பற்றி எழுதுவோர் இருக்கிறார்கள். அப்படி எந்த அலை மேலே செல்கிறதோ அதில் தொற்றிக்கொண்டால் நம் பதிவுகளின் பார்வைகளும் உயரும். ஆற்றல் உள்ளோர் புதிய அலைகளையும் உருவாக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை. இருக்கும் அலைக்கு நாம் சற்று வேகம் கூட்டலாம்.
மற்றவர் பார்வையைக் கவர வேண்டும் என்பதற்காக, ஆர்வத்தைத் தூண்டும் விதமாகத் தலைப்பு வைத்து, படம் வைத்து, வசைபாடி, அவதூறு செய்து, போலிச் செய்திகளைப் பரப்பி, சாதி / மத / அரசியல் காழ்ப்புகளைக் காட்டிப் பதிவுகளை இட வேண்டியதில்லை. மற்றவர் பதிவுகளைத் திருடி, நம் பதிவு போல் காட்ட வேண்டியதில்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை, உண்மையான விவரங்களை, அனுபவப் பகிர்வுகளை நம் மனத்திற்கு உண்மையாக எழுதலாம். நம் தனித் திறமைகளை வெளிப்படுத்தலாம். இதுதான் நீடித்த பயன் தரும்.
எழுதும் செய்திகளைச் சுவையாக, சுருக்கமாக, புதுமையாக, விறுவிறுப்பாக, பயனுள்ளதாக எழுதுவது நம் கையில் தான் இருக்கிறது. இதை விரும்புவோர் நிச்சயம் இருப்பார்கள். நம் பதிவுகளில் தொடர்புடைய குறிச்சொற்களை இடுவதும் இவற்றை உரிய குழுக்களில், தளங்களில் பகிர்வதும் ஆர்வமுள்ள நண்பர்களுக்குத் தனிச் செய்தி அனுப்புவதும் இவற்றின் வீச்சை அதிகரிக்கும்.
யூடியூபை விட பேஸ்புக்கில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பேஸ்புக்கில் நம் பதிவை விரும்பும் நேயர், நம்முடன் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். இதில் படைப்பாளர் / பார்வையாளர் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும், பேஸ்புக்கின் நிரல், எந்த நேரத்தில் எந்தப் பதிவை அதிகப் பார்வைக்கு இட்டுச் செல்லும் எனக் கணிக்க இயலாது. திடீரென நமது பதிவு, பல லட்சம் பார்வைகளைப் பெறுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிது.
ஆனால், இது ஓரிரவில் நடைபெறுவதில்லை. இந்த எழுச்சிமிகு வீச்சுக்கு அடிப்படைப் பின்னணியாக, கடுமையான, தொடர்ச்சியான உழைப்பு இருக்கிறது. நாம் யாருக்காக எழுதுகிறோம் என்பதும் நம் நேயர்களைப் புரிந்துகொள்வதும் அவர்களை மதிப்பதும் அவர்களுக்குப் பதில் அளிப்பதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வளர்ச்சியை ஒரு வரியில் சொல்வதானால், முயற்சி திருவினையாக்கும்.