ஈரான் – இஸ்ரேல் போரின் பரிமாணங்கள்

அண்ணாகண்ணன்
இப்போது ஈரான் வசம் அணு ஆயுதங்கள் மட்டும் இருந்திருந்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அதைத் தாக்கும் துணிச்சல் வந்திருக்காது. அண்மையில் தாக்கப்பட்ட உக்ரேன், பாலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்தும் அணு ஆயுதம் இல்லாத நாடுகள்.
ஈரான் மீதான தாக்குதலின் இன்னொரு பரிமாணம், அணு ஆயுதங்களின் அவசியத் தேவை. இன்றைய சூழலில் அணு ஆயுதம் இல்லாத நாடுகள், முழுமையான சுதந்திர நாடுகள் எனக் கொள்ள முடியாது. அவை, அணு ஆயுத நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாக வேண்டும். அவற்றின் வார்த்தையை மீறி ஏதும் செய்ய முடியாது. தங்கள் நாடுகளின் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க இயலாது. அவற்றின் வளங்களும் அவர்களுக்கே சொந்தம் எனக் கொள்ள இயலாது.
நாளை ஈரான் வெற்றி கொள்ளப்பட்டால், அதன் எண்ணெய் வளம் முழுவதும் கொள்ளை போகும். அவர்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் தன்மானத்துடன் வாழ்வதற்கும் வாய்ப்பு மறுக்கப்படும். காரணம், அவர்களின் எதிரிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
உலகில் அணு ஆயுதங்களை முற்றாக ஒழிக்க வேண்டும். அல்லது அவற்றை வைத்திருக்கும் உரிமையை அனைத்து நாடுகளுக்கும் வழங்க வேண்டும். அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே விதிகள் இருக்க வேண்டும். நாங்கள் வைத்திருப்போம். வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்பது ஒரு புதிய ஒடுக்குமுறை.
இந்தச் சூழலில் சீனா, வட கொரியா போன்ற அணு ஆயுத நாடுகள் மனம் வைத்தால் மட்டுமே ஈரான் பிழைக்க முடியும். மேலும் அமெரிக்க ஆதரவு அணு ஆயுத நாடுகள், அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள் என்பவற்றை இரு அணிகளாகவே பார்க்க வேண்டும். அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள், தங்கள் சார்பு நாடுகளைப் பாதுகாக்க வேண்டும். அவற்றுக்குக் கூட்டாக அணு ஆயுத வல்லமை அளிக்க வேண்டும். இதன் மூலம், உலக வரைபடத்தில் புதிய எல்லைக் கோடுகள் வரையப்படும். உலக நாடுகளின் நிதியில் பெருமளவைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும். இது ஆயுத வியாபாரிகளுக்கே நன்மை தரும்.
இதன் இன்னொரு பரிமாணம், நம் இன்றைய தலைமுறை மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்க்கையும் ஆபத்தில் இருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அச்சுறுத்தலின் நடுவே தான் வாழ வேண்டும். தங்கள் உழைப்பின், உற்பத்தியின் பெரும் பகுதியைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்கே செலவிட வேண்டும். எந்த நாடாவது தங்கள் முயற்சியால் அதிகம் வளர்ந்தால், இன்னொரு நாட்டால் ஒரே கட்டளையில் அதை நிர்மூலம் ஆக்க முடியும். ஏதேனும் ஒரு முட்டாள் முதல் அணுகுண்டை வீசிவிட்டால், அதன் பிறகு ஒட்டுமொத்த பூமியும் அதற்கு விலை கொடுக்க வேண்டும். அதன் பிறகு மனிதன் மட்டுமின்றி, பூமியின் கடைசி உயிரும் துடித்து அடங்குவதற்கு அதிக காலம் பிடிக்காது.