படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 38

0
1

முனைவர் ச. சுப்பிரமணியன்

38. இனிமை + எளிமை = தாரமங்கலம்

முன்னுரை    

வாய்பாடுகளை முன்னெழுதித் தளைகளைப் பின்னியெடுத்துக் கவிதைகளைச் சிக்கலுக்கும் சிணுங்கலுக்கும் முக்கலுக்கும் முனகலுக்கும் ஆளாக்குபவர் பலர். அவர்களிடம் மூன்று வினாக்களை நான் தொடர்ந்து முன் வைக்கிறேன். பொறுப்பான விடையிறுத்தார் ஒருவரும் இலர்.  வாய்பாடுகளையும் தளைகளையும் மட்டுமே கவிதை என்று நான் கருதிக் கொள்ளலாமா? கவிதையில் இவற்றைத் தேடுவதையே “கவிதை தேடுதல்”  எனக் கருதிக் கொள்ளலாமா? இரண்டும் இல்லை. கவிதையில் கவிஞனைத் தேடுவதைத்தான் கவியனுபவம் எனலாமா? இவைதாம் அந்த வினாக்கள். என் சங்கடம் தீர்ப்பார் இல்லை.  சஞ்சலம் தீர்ந்தபாடுமில்லை. அவர்கள் கவிதை எழுதியபாடுமில்லை. இந்த நிலையில் ‘உள்ளத்து உள்ளது கவிதை’ என்றாற்போல விளைவுகளைப் பற்றி எண்ணாது, எண்ணுவதை எல்லாம் எழுத்தில் வடித்துக் காட்டும் அன்பர்கள் சிலர் அவ்வப்போது முகநூலில் காட்சி தருகிறார்கள். வைத்துக் கொண்டு வஞ்சனை செய்யாத எளிய உள்ளத்தை இயல்பாகவே பெற்றவர்கள். அவர்களுள் தாரமங்கலத் தமிழாசிரியர் கவிஞர் முத்துசாமியும் ஒருவர். ‘உதடு ஒட்டாத குறள் வெண்பா’ என்றும் ‘கட்டளைக் கலித்துறை’ என்றும் ‘கொச்சக ஒருபோகு’ என்றும் ‘மூன்றடிக் குறள் வெண்பா’ என்றும் கவிதைத் தளவாடங்களால் கவிதையையும் என்னையும் கலவரப்படுத்தாமல் எழுதக் கூடிய அன்பர் முத்துசாமி. அன்னாருடைய படைப்புக்களில் நாட்டுப் புற வடிவங்களைக் கொண்ட சில பாடல்களை அறிமுகம் செய்வதையே கட்டுரையின் இந்தப் பகுதி தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது. உடல்நிலையும் மனநிலையும் தளர்நிலை காணும் இந்த எண்பது வயதில், அவ்வன்பருடைய கவிதைகளைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதில் ‘வல்லமை’ துணையை நான் எதிர்பார்க்கிறேன்.

நாட்டுப்புறப்பாடல்களின் வரலாற்றுப் பின்புலம்     

‘பண்ணத்தி’ என்று தொல்காப்பியர் கூறுவது ‘நாட்டுப்புறப் பாடல்களையே’ என்று அறிஞர்கள் சுட்டுகின்றனர். வேறு சிலர் தொல்காப்பியர் சுட்டும் ‘புலன்’ என்பதையே நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்பர். நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப்பாடல்களைப் ‘பண்ணத்தி’ என்றும் இசை குறைந்த பிற பாடல்களைப் ‘புலன்’ என்றும் கருதும் போக்கும் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து தமிழிசைப் பாடல்கள் உருவாகியிருப்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் செப்பம் செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் போலவே காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் குரவை, வரிப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றியவை. ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ எனும் மங்கல வாழ்த்துப் பாடலும் நாட்டுப்புறப் பாடல் வடிவைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். ‘கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்திய போக்கினைக் காணமுடிகின்றது. ஏராளமான சிற்றிலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. குறவஞ்சி, சிந்து, அம்மானை, ஊசல், பள்ளு, தாலாட்டு, ஏசல், ஏற்றம், தெம்மாங்கு முதலான ஏராளமான நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்றிலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மக்களை ஒருங்கிணைத்து, நாட்டுப்புற இலக்கியங்களை ஒரே இலக்கியமாகச் செயல்படுத்த வேண்டும் என்று கருதிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்களைப் பயன்படுத்தி எழுத்திலக்கியங்கள் உருவாக்கப்பட்ட போக்கினை அறியமுடிகிறது. நீதிக் கருத்துகளோ பக்திச் செய்திகளோ, தொன்மக் கதைப்பகுதிகளோ மக்களைச் சென்றடைவதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

நாட்டுப் புறப்பாடல்களின் தனித்தன்மை

கவிதையின் தலையாய பணிகள் இரண்டனுள் ஒன்று காட்சிப்படுத்துவது. மற்றொன்று அனுபவத்தை உணர்த்துவது. இன்னும் தெளிவாகச் சொன்னால் கவிதை என்பது அனுபவச் சித்திரிப்பு. சொற்களின் சரளி வரிசை அல்ல. பாட்டெழுதுவதாகச் சொல்லிக் கொள்ளும் பலரும் நினைவில் கொள்ளாத கருத்து இது. பாசிமணி கோப்பது போலக் கவிதையைக் கோக்க முடியாது. ‘ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! என்று வரிகள் நம்மை ஓடைக்கு அழைத்துச் செல்கிறதா இல்லையா? ‘பருத்தி எடுக்கையிலே என்ன பலநாளும் பாத்த மச்சான்’ என்ற தொடர் காதிலே விழுகிற போது கேட்பவர் மனக்கண்கள் பருத்தித் தோட்டத்திற்குச் செல்கிறதல்லவா? ‘ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே’ என்றவுடன் ஒரு பெண் தனிமையில் படும் விரகதாபம் கண்ணுக்குள் விரிகிறதா இல்லையா? இதுதான் கவிதையின் பணி. இந்தப் பணியினை முழுமையாகச் செய்வதுதான் நாட்டுப் புறப்பாடல்கள். அதனால்தான் அவற்றை நாம் ‘மக்கள் இலக்கியம்’ என்று போற்றுகிறோம்.

நாட்டுப் புறப்பாடல் தளங்கள்

தமிழில் யாப்புக்கும் பாடுபொருளுக்கும் தொடர்பு உண்டு. இன்ன  பாடுபொருளை இன்னவகை யாப்பில்தான் பாடவேண்டும் என்ற விதியும் மரபும் தமிழிலே இருக்கிறது. பெரும்பாலும் அந்தாதி கட்டளைக் கலித்துறையில் அமையும். புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை என்னும் நான்கும் மருட்பாவில் அமையும். பாடல் சான்ற புலனெறி வழக்கச் செய்யுட்கள் எல்லாம் கலிப்பா, பரிபாடல் என்னும் பாவகையில் அமையும். (பரிபாடல் என்பது ஒரு பா வகை)  ஆனால் இத்தகைய வரையறை நாட்டுப்புறப் பாடல்களுக்கு இல்லை. குழந்தையின் பெற்றவள் பாடும் தாலாட்டில் தொடங்கி உற்றாரும் உறவினரும் வைக்கும் ஒப்பாரிவரை எந்தப் பாடுபொருளும் அதற்கு இசைந்ததே. ஏனைய இயற்பா வகைகள் மக்கள் வாழ்வியலோடு அந்நியப்பட்டு நிற்க நாட்டுப் புறப்பாடல்கள்தாம் மக்களோடு கைகோத்து நிறகின்றன.  வள்ளற் பெருமான்  தொடங்கி வைரமுத்து வரை யாப்பியலை நான்குணர்ந்தறிந்தோரும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைக் கையாள்வதும் அவை அவர்களுடைய யாப்பியல் பாடல்களைப் பின்னுக்குத் தள்ளி மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்திருப்பதும் யாவரும் அறிந்ததே. எளிமையான மொழியமைப்பு, யதார்த்தமான வண்ணனை, இயல்பான அழகியல் நோக்கு, உயர்நிலை கற்பனைகள், வாழ்வியலோடு இரண்டறக் கலந்து நிற்கும் உணர்ச்சிகள் இவற்றின் ;கலவையாக இருப்பதே நாட்டுப் புறப் பாடல்கள் ஏனைய இலக்கியங்களைப் பின்னுக்குத் தள்ளுவதற்குத் தலையாய காரணம். சீர்களும் தளைகளும் புலமையின் அடையாளம். நாட்டுப் புறபபாடல்கள் கவிதையின் அடையாளம்.

கவிதையும் காட்சியும்

கவிதை, ஒன்றினைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று குறிக்கப்பட்டது. ‘தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்க’ என்னும் கம்பர் பாட்டில் மருதநிலக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதல்லவா? குயில் கூவிக் கொண்டிருக்கும் கோலமிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்’ எனச்  சஞ்சீவி பர்வதத்தின் சாரலைப் பாவேந்தர் காட்சிப்படுத்தியிருப்பதைக் காணலாம். இவைகளெல்லாம் வெறும் காட்சிகள் என்றால் மானுட உணர்வுகளையும் கவிதை காட்சிப்படுத்த வேண்டும். ‘மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும் இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்தது’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற எடுத்துக்காட்டுக்கள் ஏராளம் உண்டு. அந்த வகையில் முத்துசாமி தன் உறவுப் பெண்ணின் புற அழகை விரசம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

“கண்ணுல மைய வச்சுக் கார்குழலைத் தலையில் வச்சு
மண்ணிலே நடந்து வரும் மங்கம்மா – ஓம்
மனசுக்குள்ளே நான் வரவா சொல்லம்மா!

கக்கத்திலே கூடை வச்சுக் காட்டுமல்லி தலையில் வச்சு
வெக்கத்தை நெஞ்சில் வச்ச வெள்ளையம்மா  – ஓம்
விருப்பத்துக்கு நான் வரவா சொல்லம்மா!

ஆசைய மனசில் வச்சு அத்தை மவன நெனப்பில் வச்சு
பாசங்கொண்ட பைங்கிளியே பொன்னம்மா! – ஓம்
பக்கத்தில நான் வரவா பொன்னம்மா!

நெத்தியிலே பொட்ட வச்சு நெடுவிழியில் பத்தவச்சு
புத்தம் புது மலரான பூவம்மா! ஓம்
பொடவையாக நான் வரவா பொன்னம்மா!

“என்னடிமுனியம்மா ஒங் கண்ணுல மையி” என்னும் வெளிப்பாட்டைப் போல அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாட்டுப்புற வடிவத்திள் எளிமையாக அமைந்தாலும் ஒரு பெண்ணின் ஒய்யாரத்தைக் காட்சிப்படுத்திவிடுகிறது. இந்தப் பாட்டின் உள்ளடக்கத்தை யாப்பில் கொண்டுவரலாம். அதில் கவிஞர்களின் இலக்கணத் திறன் வெளிப்படுமே தவிர பெண்ணின் ஒய்யாரம் இருக்காது.

பாசத்தாலே அள்ளியவள்

நாட்டுப்புறப்பாடல்கள் தணிக்கைக்கு உட்பட்டதன்று. தற்கால இலக்கணப் புலிகள் நாட்டுப் புறப்பாடல்களுக்கும் தேமாஙகாய் புளிமாங்காய் என இலக்கணம் வகுத்து விருதுகளுக்கு விண்ணப்பம் போடுவார்கள்.  பாமரனுக்கு ஏது இலக்கணம்? அவனுக்குத் தளைகளும் இல்லை. விகற்பங்களும் இல்லை. உணர்ச்சியில் வந்து விழும் மீயுயர் கற்பனைகளும் காதல் பாடல்களில் சற்றே விரசமல்லாத விரசமும் அழகியல் நீரோட்டமும் நிறைந்தவையே நாட்டுப்புறப் பாடல்கள். மாமன் மகள் பாடுகிறாள்.

“ஆத்துக்கு அக்கரையில்
அத்த மவன் ஒருத்தனுண்டு
வாய் திறந்து பேசலையே
வாட (டை) பட்டுச் சூலானேன்!

ஒரு முறைப்பெண்ணின் காதலையும் விரகதாபத்தையும் பாமரத்தனமான வெளிப்பாட்டையும் இந்த வரிகள் காட்டுகின்றனவல்லவா? தான் அவனைச் சந்திப்பதற்கு ஆறு தடையாக இருக்கிறதே என்னும் வருத்தம், அத்தைமகன் வாய் திறந்து பேசவில்லையே என்னும் ஏக்கம், தாம்பத்யம் இல்லாமலேயே கருத்தரிக்க வேண்டும் என்னும் விரகதாபம் இத்தனையையும இந்த எழுதா இலக்கியத்தில எழுதப்பட்டிருப்பதைக் காணீர்.  அத்தை மகள் பாடுவதாக முத்துசாமி எழுதுகிறார்.

“வட்டவட்டப் பாறையிலே
வந்து நிற்கும் ஆசமச்சான்!
கிட்ட வந்து பேசினாலே
கிறுக்குப் புடிச்சுப் போகுதையா!

அத்தை மகளுக்கு இப்படிக் கிறுக்குப்பிடிக்க  மாமன் மகன் பாடுகிறான்

‘வெத்தலைய மடிச்சு கொடுக்க
வௌஞ்ச கதிர ஒடிச்சு கொடுக்க
பத்தலேன்னு சொல்லி – என்ன
பாசத்தாலே அள்ளி
தூண்டில் போடும் கண்ணு – என்
துணைக்கு வாடி கண்ணு

இந்த உறவின் வெளிப்பாடும் துடிப்பும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏக்கமும் இன்றைய இளைஞர் சமுதாயம் இழந்து நிற்கிறது என்பது ஒரு காலத்தின் சோகம். அவள் பாடுகிற பாடலில் வருகிற கிறுக்குப் புடிச்சுப் போச்சு என்கிற வரியைப் பின்னாலே வந்தவர்கள் இலக்கியத் தகுதியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். முருகன் மீது காதல் கொண்ட ஒருத்தி அவனுக்குக் காதல் கடிதம் எழுதுகிறாள். அவன் மீது கொண்ட மையலால் கடிதத்தில் எழுத்து சரியாக அமையாமல் கிறுக்கிவிடுகிறதாம். அதுமட்டுமன்று. அவள் உள்ளமும் கிறுக்காகிவிடுகிறதாம்.

“மாலை வடிவேலவர்க்கு
வரிசையாய் நான் எழுதும்
ஓலை கிறுக்காச்சுதே – கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே!”

அம்பா சமுத்திரம் சுப்பராயசாமி எழுதிய இந்த நாட்டுப் புறப்பாடல் சிந்தனையை ஆசிரிய வசனமாகக் கொண்ட பாங்கு இது. சந்திக்க முடியாத அத்தை மகளின் ஏக்கம் இதுவென்றால், ஒரு மாமன் மகளின் ஏக்கத்தைக் கண்ணதாசன் இப்படிப் பாடியிருக்கிறார்.

“மல்லிகை மலர் சூடிக் காத்து நிற்கவா?
மாலை இளந் தென்றல் தன்னைத் தூது விடவா?
நல்லதோர் நாள் பார்த்துச் சேதி சொல்லவா?
நாட்டோரைச் சாட்சி வைத்து வந்துவிடவா?”

“நீ வந்து பெண்கேட்டு என்னை மணம் முடிக்கும் வரை எனக்குப் பொறுமையில்லை. நானே வந்துவிடுகிறேன். ‘நான்; என் மாமன் மகனிடம் செல்கிறேன் என்று சான்றோர்களைச் சாட்சி வைத்து வந்துவிடுவாளாம். கண்ணதாசனின் இமாலய வெற்றிக்கு அவருடைய செட்டி நாட்டுப் பின்புலம் இன்றியமையாத ஒன்று.

தமிழ்நாட்டின் செல்வம் தாய்மாமன் சீர்வரிசை

தாய்மாமன் சீர்வரிசை என்பது தமிழ்நாட்டின் மரபுவழிப் பண்பாடு. பெண்ணுக்கு உரிமை பூண்டவன் தாய்மாமன். மாற்றானுக்கு அவன் முறைப்பெண் வாழ்க்கைப்படும் போது தாய்மாமன் இசைவு என்பது பின்பற்றப்பட்டு வந்த மரபு. செட்டிநாட்டுப் பாடல்களில் இந்தத் தாய்மாமன் மரபு பரவலாகப் பேசப்படுகிறது. ‘தாய்க்குத் தாயான தாய்மாமன் வாரானடி’ என்றெல்லாம் மாமன் பெருமை பேசப்படும். அவன் தன்பெருமையைச் சீர் வரிசையில் காட்:டுவான்

“ஒக்காந்து பால் கறக்க முக்காலி பொன்னாலே
அணைஞ்சிருந்து பால்கறக்க அணைகயிறும் பொன்னாலே”

எனச் சீர்வரிசையைச் சிம்மாசனம் ஏற்றியவன் தாய்மாமன். அவனுடைய வேட்டியைத்தான் தாய் தன் பேரப்பிள்ளைக்கு முதல் தூளியாகக் கட்டுவாள். செட்டி நாட்டுக் கவிஞர் கண்ணதாசன்

“தங்க கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் – மாமன்
தந்து மணம் பேசுவார் – மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் !”

என்று எழுதியிருப்பார். அதற்கு முன்பே காமாட்சி சுந்தரம் அருமையான தாலாட்டில் மாமன் சீர்வரிசை பற்றி எழுதியிருப்பார்.

“கொஞ்சு மொழி சொல்லும் கிளியே – செழும்
கோமளத் தாமரைப் பூவே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே – செழும்
கோமளத் தாமரைப் பூவே – ஒரு
வஞ்சமில்லா முழு மதியே – இன்ப
வானில் உதித்த நல்லமுதே

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாமன்மார் மூவர் தம்பி – நல்ல
வாழ்வளிக்க வருவார் – உனக்கு
மாமன்மார் மூவர் தம்பி – நல்ல
வாழ்வளிக்க வருவார் – உன்
மாம்பழக் கன்னத்திலே – முத்த
மாரி பொழிந்திட வருவார் – உன்
மாம்பழக் கன்னத்திலே – முத்த
மாரி பொழிந்திட வருவார்”

மாணிக்கப் பாலாடை – பச்சை
மாமணித் தொட்டிலுடன்
மாணிக்கப் பாலாடை – பச்சை
மாமணித் தொட்டிலுடன் – வெள்ளை
யானையும் வாகனமாய் – மாமன்
தருவார் சீதனமாய் – உன்தன் மாமன்
தருவார் சீதனமாய்

வெள்ளியினால் செய்த ஏட்டில் – நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
வெள்ளியினால் செய்த ஏட்டில் – நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத – உன்னைப்
பள்ளியில் சேர்த்திட வருவார் – மாமன்
அள்ளி அணைத்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

இது ஒரு தாலாட்டுப் பாடல்தான். ஆனால் தாய்மாமன் சீர்வரிசை கற்பனைக்கெட்டாத அளவுக்குத் தன் உடன்பிறப்புக்களின் மேல் வைத்த ஒரு தங்கையின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகச் சீர்வரிசைகளின் தொகுப்பாக இருப்பதைக் காண முடிகிறது. அன்பர் முத்துசாமி இந்த மரபுவழி வந்த கவிஞர் அவர் எழுதுகிறார்.

“பூவொன்று பூத்திருக்க
புதுமணமும் கலந்திருக்க
பச்சவோலை பின்னிக்கிட்டுப்
பயந்த மாமன் பாயஞ்சு வந்தான்!
ஊரெல்லாம் கூட்டி வந்து
உறவையெல்லாம் அழைச்சுகிட்டு
ஆரவார முழக்கோடு
ஆட்டையுமே ஓட்டி வந்தான்
தங்கத்தில கொடிசெய்து
தாய்மாமன் சீராக
அங்கமெலாம் மின்னும்படி
அலங்கரித்துப் பார்த்திருந்தான்

சீர் செய்யாமல் போனாலோ மனம் நிறைவாகச் செய்யாமற் போனாலோ ஊர்ப்பழிக்கு ஆளாகிவிடக் கூடாது என்று பயந்து வந்தானாம் தாய்மாமன். பயந்து பயந்து சீர் செய்தானாம் தாய்மாமன். இது ஒரு அனுபவச் சித்திரிப்பு.

தாய்மாமன் சீர் வரிசையும் தகப்பன்வீட்டுச் சீர் வரிசையும்

பொதுவாகத் தமிழ்நாட்டில் செய்யப்படும் சீர்வரிசைகள் தாய்வீட்டுச் சீர்வரிசை மற்றும் தாய் மாமன் சீர்வரிசை. இவற்றுள் தாய் மாமன் சீர்வரிசை பெண் பருவத்திற்கு வரும்போதும் அவள் புகுந்தவீடு செல்லும் போதும் செய்யப்படுவன. இன்றையச் சட்டங்களும் நீதிமன்றங்களும் சீர்வரிசைக்கும் வரதரட்சணைக்கும் வேறுபாடு தெரியாது தடுமாறுவது தனிக்கதை. வரதட்சணை என்பது உயர்சாதி மக்களிடையே நிலவிய ஒரு கொடுமையான  கேவலமான அருவெருக்கத்தக்க பழக்கம். அது போலிச் சமுதாயக் கட்டமைப்பில் எல்லாவகையிலும் தாழ்ந்த மக்களையும் ஊடுருவிப் பற்றிக் கொண்டது காலத்தின் கோலம். தாய்வீட்டிலிருந்து மணமகளாகப் புகுந்த வீடு செல்வதும் புகுந்த வீட்டின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டுப் பிணமாக வெளியே வந்து விழுவதும் ஒரு சமுதாய அவலம். வரதட்சணை தடைச் சட்டத்தை இருபாலாருமே மீறுகிறார்கள் என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். இதுபோக வரதட்சணை என்பது மந்தணமாகக் கொடுக்கப்படுவது கறுப்புப்பணத்தைப் போல. சீர்வரிசை ஊர் அறிய உலகறிய ஊர்வலமாய்ச் சென்று பெண்ணை வழியனுப்புவது. இரண்டும் ஒன்றல்ல. அந்தச் சீர்வரிசையில் தாய்மாமன் செய்யும் சீர்வரிசையை இப்படிப் பட்டியலிடுகிறது ஒரு பழம்பாடல்.

“கொத்துபடா நெத்தும் கோதுபடா மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும் பக்குவத்து மாங்கனியும்
அக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவெட்டும்
காய்ச்சிய பாலும் கற்கண்டும் செந்தேனும்
ஏலம் கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும்
சாதிக் களிப்பாக்கும் சங்குவெள்ளை வெற்றிலையும்

மாமன் சீர்வரிசையாக வருமாம். தன் உடன்பிறப்பின்மீது அந்தத் தாய்க்கு உள்ள நம்பிக்கை. பிறந்த வீட்டுப் பாசம். இயல்பாக வந்தமையும் தொடைவிகற்பங்களும் எண்ணுதற்கு இனிக்கும் இலக்கிய நயங்களும் அனுபவ முத்திரைகளும் வாழ்வியலின் நிலைத்த உண்மைகளும் பழகுதமிழை மட்டுமே பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் உவமங்களும் அழகிய சொலலாட்சியும் தடையில்லா நடைப் பெருமையும் நோக்கி இலக்கியங்களை மதிப்பிடுவதுதான் சரியான திறனாய்வு நெறி. இந்தப் பெருமையை இன்னும் தெளிவாக உணர வேண்டுமானால் நிலைபெற்ற ஏனைய இலக்கியங்களோடு நாட்டுப் புறப்பாடல்களை ஒப்பிட்டுக் காணவேண்டும்.

“ஏலவல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழமும் தேமாங்கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலிக் கொடியும்
கொழுந்தாள் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்”

கொண்டு வந்து கொடுத்து சேரனை வழிபட்டார்களாம் மலைவாழ் மக்கள் என்று ஆசிரியர் ;இளங்கோவடிகள் பாடுகின்றார்.  திருக்குறள் போன்ற உயர் பனுவல்களின் உள்ளீடுகள் எல்லாம் மக்கள் வாழ்வியலில் கண்டவையே. சென்ற விருந்தினை ஓம்பி வருகின்ற விருந்தினை எதிர்பார்க்கும் ஓரு பண்பாட்டுக் குடி தமிழர் குடி.

“செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”

என்னும் திருக்குறளுக்கு மூலம் எங்கேயிருக்கிறது  தெரியுமா?

“வாழை இலைபரப்பி வந்தாரைக் கையமர்த்தி
வருந்தி விருந்தழைக்கும் மகராசர் பெயரனோ?
தென்னை இலைபரப்பிச் சென்றாரைக் கையமர்த்தித்
தேடி விருந்தழைக்கும் திசைக்கருணர் பெயரனோ?

என்ற மக்கள் இலக்கியத்தில் இருக்கிறது. மொழியின் எளிமை இலக்கியத்தை எளிமையாக்கி அழகியலுக்கு ஒளி கூட்டுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் முத்துசாமி நிரல் படுத்தும் தகப்பன் சீட்டுச் சீதனத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. தாய்வீட்டுச் சீதனம் என்னும் சிந்தனையைக் கொஞ்சம் மாற்றி தகப்பன் வீட்டுச் சீதனமாய்ப் பாடியிருக்கும் மரபு மாற்றத்தைத் தமிழ்க் கவிதையுலகம் தளர்வில்லா பூரிப்போடு வரவேற்கிறது.

“பெரியப்பன் பொழச்சா என்ன? பெருநெல்லி காச்சா என்ன?
சித்தப்பன் பொழச்சா என்ன? சிறு நெல்லி காச்சா என்ன?”

எங்கப்பன் பொழச்சாதான் எனக்கெல்லாம் தேடிவரும்!
நாலுவண்டி பருப்பு வரும் நாவிரும்பும் பருப்பு வரும்”

இந்த இரண்டு கண்ணிகளில் இரண்டு உண்மைகளைப் பதிவு செய்கிறார் முத்துசாமி. ஒன்று சித்தப்பன், பெரியப்பன் உட்பட எல்லா உறவுகளும சடங்குகளுக்கானவை. பெத்தப்பன் உறவு ஒன்றுதான் கடைசிக்காலம் வரை தொடரும். அடுத்ததாக இந்தப் பெண் தாயைப் பின்னுக்குத் தள்ளித் தந்தையை முன்னிலைப்படுத்துவதன் மூலம் தந்தைக்கு மகள் மீது இயல்பாகவே இழையும் பாசத்தினைக் குறிப்பாகக் காட்டுகிறார். இன்னுஞ் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் தாய்வீட்டுச் சீதனம் என்பதைத் தந்தை வீட்டுச் சீதனமாக மாற்றிக் காட்டுகிறார். நாட்டுப் புறப்பாடல்களிலும் இயல்பான மரபு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை முத்துசாமி உறுதி செய்கிறார்.

“மளிகைப் பொருளனைத்தும் மற்ககாமல் வீடுவரும்!
சின்னமனூர் சேலைவரும்! சிலுக்குத்துணி கூட வரும்!
கண்ணாடி வளையலொடு கால்கொலுசு சிணுங்கவரும்!
கண்மையும் பவுடரொடு  கழுத்துக்கு ஆரம் வரும்!
வெள்ளாடு ரெண்டு வரும்! வெடக்கோழி மூணு வரும்!
மாவாட்டக் கிரைண்டர் வரும்! மிளகரைக்க மிக்சி வரும்!
பூவாட்டம் இட்ளிசுட்டுப் புதினா சட்னி கூடவரும்!
மாவு வைக்க பிரிட்ஜ் வரும் மனங்குளிர ஏசி வரும்!
ஆடலுடன் பாடலுக்கு அறுபது இன்ச்சி டிவிவரும்!
வண்ணத்திலே பீரோவரும் வகவகையாய் சேர்கள் வரும்!
என்ன பெத்த கடனுக்கு எங்கப்பா எனக்குத் தரும்!

மகள் கை நோகுமென்றுதாய்வீட்டிலிருந்தே சமைத்து வருகிறதாம்! மரபு சார்ந்த நாட்டுப் புறப்பாடல்களின்; கற்பனையை விஞ்சியது இது.

சரி! பாட்டிலே எங்கே கவித்துவம் இருக்கிறது? பாட்டின் இறுதிச் சீரில் இருக்கிறது. என்னப்பா எனக்குத் தருவார் என்றிருந்திருந்தால் பெத்தவனுக்கு மரியாதை கிடைத்திருக்கலாம். நமக்குக் கவிதை கிடைத்திருக்காது. என்றைக்குத் தமிழ்நாட்டில் பெற்றோர்களை ‘நீங்க வாங்க’ என்று அழைக்கப் பழக்கினோமோ அன்றைக்கே பாசம் படுபாதாளத்திற்குச் சென்று விட்டது. ‘ஆத்தா சொல்லுச்சு காசு குடு’ என்பதுதான் பண்பாட்டு வெளிப்பாடு. தற்காலத்தில் புழக்கத்தில் இருப்பது போலிப் பண்பாடு. குழந்தையைக் கொஞ்ச வேண்டிய ‘செல்லம்’ என்ற சொல்லால் எருமை மாட்டுக் கணவனை அழைப்பார்கள். சிலம்பிலே இளங்கோவடிகள் குறவர் கொண்டு வந்ததாகச் சொல்லிய சீர்வரிசைகளுக்குக் குறையாத சீர்வரிசை தந்தை கொடுத்தது.  அந்தத் தந்தையைப் பாசம் கொப்பளிக்க ‘தரும்’ என அஃறிணை வினைமுடிபால் முடித்துக்காட்டியிருப்பது இந்த மண்ணின் மணம் வீசும் ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. தமிழில் இறைவனை யாரும் ‘நீங்கள்’ என மரியாதையோடு அழைத்திருப்பதாகப் பதிவுகள் இல்லை. காரணம் இறைவனை அவ்வாறு அழைக்கிறபோது உரிமை பறிபோகிறது. நெருக்கம் குறைகிறது இறைவன் அந்நியப்பட்டுப் போகிறான்.

மயங்க வைக்கும் மரபு

அசலைப் பார்த்து நகலெடுப்பது மரபாகாது. திட்டமிட்டு மாற்றுவதும் மரபாகாது. ‘நான் மரபை மீறுகிறேன்’ என்பதெல்லாம் அறியாதவர் புலம்பல். மரபு என்பது தாக்கம். அதன் தாக்குவுறவுக்கு நாம் ஆளாகலாம்.  அல்லது அதற்கு நாம் மயங்கலாம்.  இங்கே சில மயக்கங்களைக் காணலாம். படைப்பொன்றின் சொல், தொடராக்கம், பாடலின் இசையமைப்பு, வடிவத்தில் நிலவும் தாளகதி இவற்றுள் ஏதேனும் ஒன்றில் நம் மனம் லயித்துவிடுமானால் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதும் மரபே.

  1. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாடல்கள் பின்னாலே வந்த படைப்பாளர்களைத் தாக்குறவுக்கு ஆளாக்கின. அவர்களும் ஆளானார்கள். பல பாடல்களை எடுத்துக்காட்ட இயலும்.
  1. ‘சிந்தாமணி படத்தில் பாகவதர் பாடிய ‘ராதே உனது கோபம் ஆகாதடி’ என்ற பாடலின் ;இசை பின்னாளில் குலமகள் ராதையில் சௌந்தரராசனைப் பாடவைத்திருக்கிறது.
  1. 1956இல் வெளியான காலம் மாறிப் போச்சு என்னும் திரைப்படத்தில் வந்த ஏரு பூட்டிப் போவாயோ அண்ணே என்ற நாராயண கவியின் பாடலின் இசை மதுரைவீரன் படத்தில் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் ஜி.இராமநாதனையும் கட்டிப் போட்டது.
  1. ‘காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே’ என்னும் மகாகவியின் பாடல் ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே’ என்று கண்ணதாசனை எழுதத் தூண்டியது.
  1. கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்களும் வள்ளற் பெருமான் பாடல்களும் பாரதியாரைப் பாதித்திருக்கின்றன என்பது அவருடைய படைப்புக்களிலிருந்து தெரியவரும் உண்மையாகும்.
  1. ‘எந்நாள்?’ என்பதற்கும் ‘எந்நாளோ?’ என்பதற்கும் உணர்ச்சி வேறுபாடுகள் உண்டு. எந்த நாள் என்பதும் எந்த நாளோ என்பதற்கும் இது பொருந்தும். பத்ரகிரியார் புலம்பலை ‘எக்காலக்கண்ணி’ என்றே அழைக்கிறார்கள். இந்த எந்நாள் கண்ணிகள் மரபு வழியாகத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன முத்துசாமி உட்பட.
  1. ‘திருநீலகண்டர்’ என்னும் திரைப்படத்தில் பாபநாசம் சிவன் எழுதி ஜி.இராமநாதன் இசையமைத்த ‘தீனகருணாகரனே நடராஜா! நீல கணடனே” என்னும் பாடலின் தாக்கம் மதுரை வீரன் திரைப்படத்தில் ‘ஏச்சுப் பிழைக்கும தொழிலே சரிதானா என்னைப் பாருங்க’ என்னும் பாடலில் தெரிந்தது.
  1. ‘பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய்போட’ என்று கவச இசையினைக் காதல் பேசும் திரைப்படப்பாடலுக்குப் பயன்படுத்தினார் இளையராஜா.

இத்தகைய மரபுவழித் தாக்கம் முத்துசாமியின் பாடல்களிலும் இழைவதை ஒரு எடுத்துக்காட்டினால் விளக்க முடியும்.

தாயுமானவர் – பத்ரகிரியார் – பாரதிதாசன் – முத்துசாமி

ஏகாரமும் ஓகாரமும் உணர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தும் எழுத்தொலிகள் ஆகும். ஏகாரம் மொழிக்கு முன்பும் பின்பும், ஓகாம் மொழிக்குப் பின்பும் நின்று இந்தப் பணியைச் செய்கின்றன. பத்ரகிரியாரின் பாடல் வடிவமும் உணர்ச்சியும் தாயுமானவர் பாடலில் இப்படி அமைந்திருக்கிறது.

“வெஞ்சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ?
அஞ்சு முகம் காட்டாமல் ஆறுமுகம் காட்டவந்த
செஞ்சரணச் சேவடியைச் சிந்தை வைப்பது எந்நாளோ?”

பத்ரகிரியார் பாடலின் இந்த நாட்டுப் புற வடிவம் தாயுமானவர் பாடலில் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

“புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம்?”

“கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம்”

“போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
காக்குமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம்”

“புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம்?”

“கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம்”

போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
காக்கமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம் 181

திருவாசகச் சிவபுராணத்தின் உள்ளடக்கத்தை நாட்டுப் புறப் பாடலின் வடிவ வெற்றி கருதிப் பத்ரகிரியார் இவ்வாறு எழுதியிருக்கலாம். இந்தப் பாடல்களின் சொல்லாட்சியிலும் ஒலி நயத்திலும்  இதயத்தைப் பறிகொடுத்த பாவேந்தர் தமிழ், தமிழினம் இவற்றின் ஆக்கத்தையும் ஆதங்கத்தையும் பாடுகிறபோது பயன்படுத்திக் கொள்கிறார்.

(தமிழர்கள்)

உன்னத இமம  லைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல் எந்நாளோ,?

(தமிழர்களைக்)

கள்ளத்தால் நெருங்கொணாதே
என வையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாள்? உள்ளம
சொக்கும் நாள் எந்த நாளோ?

(தமிழர்கள்)

ஆட்டும்சுட்டு விரல் கண்டே
ஆடிற்று வையம் என்றே
கேட்டுநான் இன்ப ஊற்றுக்
கேணியில் குளிப்பதெந்நாள்?

என்று பாடுகிறார். ஏக்கத்தை வெளிப்படுத்தும் இந்த ஒலிநயமும் சொல்லாட்சியும் வடிவச் சிறப்பும் முத்துசாமியைப் பாதித்திருக்கிறது. ஆனால் என்ன ஒரு மாற்றம்? ஆன்ம விசாரணைக்காகப் பத்ரகிரியார் கையாண்ட இந்த வடிவத்தை மொழிக்காகவும் இனத்திற்காகவும் கையாண்டிருக்கிறர் பாவேந்தர். இவ்விரு பாடுபொருளையும் தவிர்த்துக் காதல் ஏக்கத்தையும எதிர்பார்ப்பையும் பதிவிட முத்துசாமிக்கு இந்த வடிவம் கைகொடுத்திருக்கிறது.

“ஒத்தைவிழிப் பார்வையிலே உலகளந்த நாயகியே!
கத்தைக் குழல்பற்றிக் கரைசேர்வ தெந்நாளோ?

பாதிமுகம் காணலியே! பாவி உனை மறக்கலியே!
மாது முகம் காணுதற்கு மறுபிறப்பும் எந்நாளோ?

தேன்வடியும் பூமுகத்தில் தென்றல் வந்து கிசுகிசுக்க
நான் புரட்டிப் பார்க்கின்ற நன்னாளும் எந்நாளோ?

கூந்தல் அலைபாய குதிகாலும் தாளமிடச்
சேர்ந்து கதைபேசிச் சிலிர்த்திருப்பது எந்நாளோ?

விடியக் கதைபேசி விடிந்தபின் கண்ணுறங்கும்
முடியாத பொழுதெனக்கு நீளுவதும் எந்நாளோ?

முந்தைய பத்தியொன்றில் குறித்தவாறு மரபு என்பது படிவது. ஆற்றில் மணல் படிவது போல. திணிப்பது அல்ல. சென்ற பத்தியிலே குறிப்பிடப்பட்ட கவிஞர்களையோ அவர்தம் படைப்புக்களையோ அவர் அறிந்திருக்கிற வாய்ப்பில்லை. ஆனால் அந்தப் பெருமக்களுடைய கவிதைச் சாயல் அப்படியே இவர் பாடலில் படிந்திருக்கிறது. யாப்பிலே எழுதப்படுவதெல்லாம் மரபுக் கவிதை என்பது மூளைக் கோளாறு உள்ளவர்களின் ‘முதுமை உளறல்’.  பொருள் கட்டமைப்பு, வடிவ நேர்த்தி, உத்திச் சிறப்பு, சொல்லாட்சித்திறன் ;இவற்றில் மரபு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாயின் முகச் சாயல் மகளுக்கு என்றால் அது படிவதேயன்றி வெட்டி ஒட்டுவது அன்று. அப்போதுதான் அது மரபுக்கவிதை. முத்துசாமிக்கு மிக ஆழமான யாப்பறி புலமை  இருப்பதாகக் கருத முடியாது. அவர் கட்டளைக் கலித்துறை எழுதவில்லை. நேரிசை வெண்பாவில் காவியம் படைக்கவில்லை. மடக்கும் தெரியாது. கொச்சக ஒரு போகும் தெரியாது. சிற்றெண் தெரியாது. பேரெண் புரியாது. இருந்தாலும் அவர் கவிதை எழுதுகிறார். அவர் எழுதுவது கவிதையாகப் பரிணமிக்கிறது. காரணம் அவரிடம் கவியுள்ளம் இருக்கிறது. கவிதையை அவர் இனங்கண்டு கொள்கிறார். அதனைவிட யாரிடம் சேரவேண்டும் என்று தடம்பார்த்துக் கவிதை அவரிடம் சேர்ந்து விடுகிறது.

திரிகூட ராசப்பக் கவிராயர் – கண்ணதாசன் – தாரமங்கலம்

ஒரு பாட்டு ஏதோ ஒரு வகையில் கற்பவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி அவனையும் அது போல எழுதத் தூண்டினாலும் அது மரபின் தாக்கமாகவே கருதப்படும். தொல்காப்பியத்தின் தாக்கத்தினால்  திருக்குறளில் வந்திருக்கும் பதிவுகள் பல. ஒரு இலக்கண நு}லுக்கே இத்தகைய தாக்கம் இயலுமெனின் இலக்கியத்திற்குச் சொல்ல வேண்டிய தேவையில்லை. குற்றாலக் குறவஞ்சியில் நாட்டுவளம் கூறும் ஒரு பாடல்.

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்!!
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்!
வாடக் காண்பது மின்னார் மருங்குல்!
வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு!
போடக்காண்பது பூமியில் வித்து!
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து!
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி!
திருக்குற்றாலர்தென் ஆரிய நாடே!

“குற்றால நாட்டிலிருந்து மக்கள் வெளியேற மாடடாரகள். ஆற்றில் வெள்ளந்தான் வெளியேறுமாம். யோகியரின் உள்ளங்கள் ஒடுங்கும். மக்கள் உள்ளம் விரிவடையும். கன்னியரின் இடை வாடுமே தவிர மக்கள் முகத்தில் வாட்டமில்லை. வருத்தமடைவதெல்லாம் கரு தரித்த சங்குகளேயன்றி மனிதர்கள் அல்லர். போடுவதெல்லாம் மண்ணில் வித்துக்களேயன்றிப் பயனற்றவர்கள் என யாரையும் கழிப்பதில்லை. காதில் அசைவதினால் ஒலியெழுப்பிப் புலம்புவதுபோல் வசப்படுத்துவது கிண்கிணியேயன்றி ஏழைமக்கள் அல்லர். இந்த மக்கள் தேடுவதெல்லாம் நல்ல அறத்தையும் அதனால் வரும் புகழையுமேயன்றி நிலையற்ற செல்வங்கள் அல்ல”

என்னும் நாட்டுவளத்தைக் கூறும் அரிய பாடல் கண்ணதாசனைக் கவர்ந்திருக்கிறது, இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்தப் பாட்டுக்கு முன்னர் ஒரு பாட்டு உண்டு. அது இதனைவிடச் சிறந்தது.

நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்!
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்!
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து!
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து!
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை!
வெடிக்கக் காண்பது கொல்லையில் முல்லை!
ஏங்கக் காண்பது மங்கலப் பேரிகை!
ஈசன் ஆரியர் நாடெங்கள் நாடே!

என்பது அந்தப் பாடல். இந்தப் பாடல்களில் உள்ள ‘காண்பது’ என்ற சொலலாட்சியில் மனம் பறிகொடுத்த கண்ணதாசன் தான் எழுதிய திரையிசைப்பாடலில் இந்தச் சந்தத்தைத் தனக்குச் சொந்தமாக்கியிருக்கிறார்.

“ஆடக்காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஓடக்காண்பது பருவத்துக் காற்று”

நகலை அசலாக்கும் முயற்சி என இதனைக் கருதிவிடக் கூடாது. கவிதை மூளையைச் சீண்டிப் பார்க்கக் கூடாது. இதயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும். பிசைந்து  பார்க்க வேண்டும். திரிகூடராசப்பக் கவிராயரும் கண்ணதாசனும் முத்துசாமியின் இதயத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறார்கள். மனத்தைக் கொள்ளை கொண்ட இதே சந்தத்தில்  இன்றைய சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

ஓடக் காண்பது சாலையில் மக்கள்!
ஒடுங்கக் காண்பது வீதியின் வெளிகள்!
பாடக் காண்பது பாமரர் வயிறு!
பழிக்கக் காண்பது பணக்காரர் தொப்பை!
வாடக் காண்பது ஏழைகள் உள்ளம்!
வதங்கக் காண்பது மழலைகள் முகங்கள்!
தேடக் காண்பது தெருக்களில் வெறுமை!
தெரியக் காண்பது மக்களின் வறுமை!

ஆடக் காண்பது ஆட்சியர் நோக்கு!
அடக்கக் காண்பது அதிகார வர்க்கம்!
சூடக் காண்பது சாலையில் மரங்கள்!
சுழலக் காண்பது வீட்டினில் விசிறி!
நாடக் காண்பது நாட்டினில் ஓலம்!
நடுங்கக் காண்பது நடுத்தர வாழ்க்கை!
போடக் காண்பது பிச்சையில் சிறிது!
பொலியக் காண்பது தொழிலாளர் கவலை !

சந்தத்தையும் சொல்லாட்சியையும் பயன்படுத்திப் பாடுபொருளில் இன்றைய சமுதாயத்தின் அவல நிலையை அழகியல் குறையாமல் அங்கதம் பழுதுபடாமல் நாசுக்காகப் பதிவு செய்திருக்கிறார் முத்துசாமி. பொறுமையாக உட்கார்ந்து இந்தப் பாடல்களை ஒப்பிட்டு நோக்கினால் தொடர்ந்து வரும் கவிதை மரபினை முத்துசாமி எவ்வாறு தன் சமுதாயத்தைப் பாடுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்  என்பதைப் புரிந்து கொள்ளலாம். தங்குதடையில்லாத எளிய நடை கவிதையை இனிமையாக்குகிறது.

கழிந்ததற்கு இரங்கல்

இறந்த காலத்தை எண்ணி அசைபோடுவது எலலாருக்கும் இயல்பு. பெரும்பாலும் கவிஞர்கள் வாழ்க்கை வறுமையில் தொடங்கி வறுமையில் முடிகிறது. வேறு வாய்பாட்டில் சொன்னால் கவிஞர்களை வறுமை தின்ற போது, கவிதை வளமாக இருந்தது, கவிஞர்கள் வளமாக வாழ்கிறபோது கவிதை வாழாவெட்டியாகிவிடுகிறது. நான் முன்பே கூறியபடி ஒரு கவிதையின் வெற்றி இறுதிவரியில் ஒளிந்திருக்கும். தன் நண்பனை எண்ணி முத்துசாமி பாடுகிறார்.

“கட்டணத்தில் படிக்கின்ற காலமொன்று இருந்ததாலே
எட்டாவது மாதத்திலே கட்டுதற்குப் பணமில்லை!

என்னைப்போல் ;இன்னொருவன் இணைந்திட்டான் என்னோடு!
புன்னை மரநிழலில் பொழுதெல்லாம் கதைபேசி

மணியடிக்கும் வேளையிலே படித்து முடித்ததைப்போல்
தனியாளாய் வீடு வந்த சங்கடத்தை என்ன சொல்ல?

எப்படியோ பள்ளிக்குள் எடுத்து  அடிவைத்தோம்!
தப்பாமல் படித்துத் தனித்தனி ஆளானோம்!”

இதுவரை பள்ளி வாழ்க்கையின் போராட்டத்தைப் பதிவு செய்திருக்கும் முத்துசாமி, இறுதிவரியில் அவர்களுடைய இன்றைய நிலையைப் பதிவு செய்கிறார் இப்படி!

“அள்ளிவந்த விதியாலே கோடீசுவரன் அவனாக
எள்ளி நகையாட எளிய கவியானேன்!

இந்த முழுப்பாடலிலும் பள்ளி நிகழ்வுகளின் ஆழம் வெளிப்பட்;டிருக்க வேண்டும். இதுபோன்ற கடந்த கால நினைவுகளைக் காலத்தால் அழியாக் கவிதையாக்குவது கவிஞர் கடன். முத்துசாமி இதில் போதிய வெற்றியை அடைய முடியாமற் போனதற்குக் கடந்த கால நிகழ்வை ‘அருமையான கவிதைக் கரு’ என அவரால் கருத முடியாமற் போனதுதான். இதே போன்ற ஒரு சாதாரண நிகழ்வைத் “தோழிமார் கதை” என்னும் தலைப்பில் கவிஞர் திரு வைரமுத்து பாடியிருப்பதையும் ‘அளிதோ தானோ யாண்டுண்டு கொல்லோ?” என்னும்  தொடித்தலை விழுத்தண்டினார் வரிகளையும் இங்கே நினைவு கூறலாம். என்றாலும் சமுதாயத்தின் இரக்கத்திற்கு ஆளாகிப் போன ஒரு சாதாரண கவிஞனாக ஆன முத்துசாமி  தன்னுடைய விதியை நொந்து கொள்வது கவித்துவம் நிறைந்த அடியாகும்.!

சுடுகின்ற நிஜமும் குளிர்கின்ற நிழலும்

மரணம் இனிக்காது. மரணம் பற்றிய கவிதை இனிக்கும். பிரிவு  இனிக்காது. பிரிவு பற்றிய கவிதை இனிக்கும். நிஜம் சுடும். நிழல் தழுவும். ஒப்பாரி வேறு. ஒப்பாரியைக் கேட்டுக் கலங்கி நிற்பது வேறு. கலையின் வியத்தகு போக்கு இதுதான். தமிழ்க் கவிதைகளின்  சுற்றுவட்டப் பாதை என்பது காதல், மானுடம், சமுதாயச் சிந்தனை, இயற்கை என்னும் சிலவற்றுக்குள் அடங்கி விடும். இவை இணையான பகுப்புக்கள் அல்ல. விகிதாசாரம் மாறுபடும். காதல் தொண்ணூறு விழுக்காடு இடத்தை அடைத்துக் கொள்கிறது. காதலைப் பாடுபொருளாக்காத கவிஞன் மகாகவி பாரதி ஒருவனே. மாறாகப் பாரதிதாசன் அறுபது விழுக்காட்டு இடத்தைக் காதலுக்கு ஒதுக்கியவன். இது தமிழ்க் கவிதையியலின் நீண்ட நெடிய மரபின் பெருந்தாக்கமாக இருக்கலாம். சுற்றுவட்டப் பாதையின் நிறுத்தங்களில் ஒன்றான சமுதாயச் சிந்தனைகளை உள்ளுணர்வோடு பாடுங்கவிஞர்கள் எண்ணிக்கையில் குறைவு.

சமுதாயம் பாதிப்பது கண்டு மனமுருகிப் பாடுவதும் சமுதாயச் சிந்தனைகளைப் பாடுவதுதான். நேரடியாகத் தன்னைப் பாதிப்பதைக் கவிதையில் வெளிப்படுத்துவதும் அத்தகையதே. 2019 – 2022 ஆகிய மூன்றாண்டுக் காலத்தில் இந்த மக்கள் உலகம் கொரானா என்னும் கொடிய நச்சுக்கிருமி நோயால் பட்ட பாடு பெரும்பாடு. தமிழ்க்கவிதை உலகினைப் பொருத்தவரையில் உதட்டளவில் பேசப்படும் ஈழப்போர் பற்றியும் அவ்வளவாகக் கவிதைகள் இல்லை. கொரானா பாதிப்புப் பற்றியும் அவ்வளவாகப் பாதிப்புக்கள் இல்லை. அன்பர் முத்துசாமி கொரானாவைப் பற்றிய தன் சுய அனுபவத்தை எளிய கிளிக்கண்ணிகளில் வடித்துக் காட்டியிருக்கிறார்.

“கொரானா வந்ததனால் குதூகலம் போனதடி!
குடும்பம் குலைந்ததடி – கிளியே
கூறுகெட்டுப் போனோமடி!

மாதம் பலவாக மனையடைத்துக் கிடப்பதனால்
ஏதும் அறியோமடி! கிளியே!
அறிந்தவர் யாரடியோ?

சோற்றுக்கு வழியின்றிச் சோம்பிக் கிடந்தோமே!
மாற்றுவழி காணோமடி! கிளியே!
மந்தையாடு ஆனோமடி!

வாழ வழியில்லை! வாழ்க்கை தெரியவில்லை!
ஏழையாய் போனோமடி! கிளியே!
எதிர்காலம் எங்கேயடி?

‘கிளிக்கண்ணி’ என்பது ஒரு எளிய நாட்டுப்புறக் கவிதை வடிவம்.  கல்லிடைக் குறிச்சி  சுப்பராயலு இதனை  இருபகுதிகளாகப் பாடியிருக்கிறார். ‘உத்தரகோச மங்கை கிளிக்கண்ணி என்று ஒரு நூல் உண்டு. சிவபெருமானைப் பாடும் அந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மகாகவி பாரதியார் முருகனிடம் மையல் கொண்ட தலைவி, கருப்பொருள் சிறக்கக் கிளியைத் தூதுப் போருளாகப் பாடியிருக்கிறார்.

“அல்லி குளத்தருகே — ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே அங்கொர்
முல்லைச் செடியதன்பால் – வினை
முற்றும மறந்திடக் கற்றதென்னே  என்று
சொல்ல வல்லாயோ கிளியே!”

என்பது பாரதியின் பாட்டு, எல்லாரும் அறிந்து பெரும்புகழ் பெற்ற “நடிப்புச் சுதேசிகள்” என்னும் கவிதை ‘கிளிக்கண்ணி’ வடிவத்தில் அமைந்ததாகும். சமயப் பொருண்மை தழுவியும் சமுதாய மாந்தர் இழிநிலை தழுவியும் பெருங்கவிஞர்களால் பாடப்பெற்ற இந்தக் கிளிக்கண்ணியில் எளிய தமிழ் கொண்டு கொரானாவின் பாதிப்புக்களை உள்ள்ம் நெகிழுமாறு பாடியிருக்கிறார் முத்துசாமி. அவசரமாகக் கவிஞராக முயலும் அன்பர்கள் கொரானாவின் கொடுமைகள் பற்றி எத்தனைப் பேர் பாடியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கவிதையும் முத்துசாமியும்

வறட்டு யாப்பிலக்கணத்தையே ‘கவிதை’ என்று எண்ணி மருளும் குருட்டுப் பேர்வழிகளில் ஒருவர் அல்லர் முத்துசாமி. தமிழில் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் கவிதை என்பது உணர்வின் வெளிப்பாடு. உணர்ச்சியின் உந்துதல், இயற்கை ரசிப்பின் எழிலான தோற்றம், இளகிய மனத்தின் அழகிய ஓவியம் என்று எண்ணிக் கவிதை புனைபவர். இந்தப் பொருண்மையில் என்னோடு முழுமையாக அவர் ஒத்துப் போகாவிட்டாலும் கவிதையை யாப்பிலக்கணத்தால் அளவிடுவது தவறு என்பதை நன்கு புரிந்து கொண்டவர்.

பழம்பெரும் தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தொகுத்துச் சாகித்திய அகாடமி வெளியிட்டிருக்கும் தமிழ்க்கவிதைக் களஞ்சியத்தில் மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுப் பதிவாகியுள்ளன. ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன்; அந்த நூலை மட்டும் படித்தால் போதுமானது. அந்த நூலில் திரைப்படப் பாடல் ஒன்றினை இலக்கியத் தகுதிக்கு உயர்த்திப் பதிவிட்டிருக்கிறார் பிள்ளை. அந்தப் பாடல்

“மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சிலநாளில் பொன்னாகலாம்!
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?

என்ற கண்ணதாசன் பாடல்தான் அது. பொருள் முரண்களையும் வாழ்வியல் முரண்களையும் அழகியல் மேம்பட கண்ணதாசன் பாடிய பாடல் அது. அந்தப் பாடலில் மனம் பறிகொடுத்த முத்துசாமி அதே வாய்பாட்டில் கவிதை எது என்பது பற்றி எழுதிய பாடல் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

வான்கோழி மயிலாகலாம்!
வான்மழையும் புயலாகலாம்! வெறும்
வார்த்தை கவியாகுமா? ‘சீர்’
வரிசை எனையாளுமா?

காளான் மரமாகலாம்! – சுவைக்
கற்கண்டும் கசப்பாகலாம்!
தேமா கவியாகுமா? – கனிச்
சீரெல்லொம் கனியாகுமா?

ஆர்ப்பாட்டம் கொண்டாடுதே! தினம்
அரைகுறைகள் வென்றாடுதே!
போர்ப்பரணி என்றாடுதே – குறைப்
புலமையால் திண்டாடுதே!

கலைஞர் சங்கத்தமிழ் மக்களிடம் சென்று சேரவேண்டும் எனக்கருதி எழுதியதுதான் சங்கத்தமிழ். அதில் அவர் புறநானூற்றை மீட்டுருவாக்கம் செய்யவில்லை. ஒரு நூறு சங்கப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கத்தை வசனகவிதையில் தனக்கே உரிய அழகியல் உணர்வோடும் மொழியுணர்வோடும் புதுக்கவிதைப் போக்கில் எழுதிக்காட்டினார். இதற்கு மாறாக எழுத்தாளர் சுஜாதாவும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் புறநானூற்றையே வேறு வடிவத்தில் எழுதித் தடுமாறினர். வேறு சில பேர்வழிகளும் புறநானூற்றைத் தங்கள் வறட்டு மொழியில் வடிவமைத்தனர். இதில் கொடுமை என்ன வென்றால் அவர்கள் தங்களைக் கலைஞர் என்று எண்ணிக் கொண்டதுதான். அவர்களுக்குக் கலைஞர் என்ன செய்தார் என்பதையும் விளங்கிக் கொள்ளும் திறனும் இல்லை. ஒரு இலக்கியத்தை இன்னொரு வடிவத்தில் படைப்பதால் விளையும் பயனேதும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும் திறனும் இல்லை.

விருதுகளுக்காக அலைந்து திரியும் பலருக்குமான களமாகத் தமிழகம் மாறிவிட்டது. எத்தனை ஆயிரம் கவிஞர்கள்?. யாருடைய கவிதை பொதுவெளியில் பேசப்படுகிறது? பேசப்படாமல் போனதற்கு என்ன காரணம். ஆர்ப்பாட்டம் இசையாகாது! வாய்பாடுகளைக் கவிதை என்று எண்ணி மருகும் பரிதாப நிலை நீடிக்கும் வரை இங்கே கருப்பைக் குழந்தையாகவே கவிதை ஒடுங்கிவிடும். சிந்து போன்ற சந்தப்பாடல்களைப் பாட எத்தனிப்போர் தாம் எழுதியதை வாய்விட்டுச் சொல்லிப் பார்ப்பதில்லை. எழுதுகிற கவிதைகளிலும் ஒற்றுப் பிழைகள். வாங்குகிற விருதுகளிலும் வல்லினப் பிழைகள். ‘மலிவுப் பதிப்பு’ என்பதற்குப் ‘பிழை மலிவு பதிப்பு’ என்று பொருள் போலும்

தண்டியலங்காரமும் தாரமங்கலமும்

எந்த வகையிலும் தமிழிலக்கணத்திற்கோ, இலக்கியச் பயிற்சிக்கோ தமிழ்க்கவிதைக்கோ எள்ளின் முனையளவும் பயனளிக்காத நூல் தண்டியலஙகாரம். இதுபோன்ற நூல்களே தமிழில் அதுபோன்ற நூல்கள் இல்லை என்னும் போலிக் கருத்தியலை முன்னெடுக்கக் காரணமாகும். எழுத்து, சொல், பொருள் என்பதே தமிழ் நெறி. எழுத்து, சொல், பொருள் யாப்பு, அணி என்பது வடமொழி மரபு. தமிழ்க்கவிதைகளில் அணியிலக்கணம் ஆராயப்படவில்லை. தமிழ்க்கவிதைகளுக்கும் அணிகளுக்கும் தொடர்பே இல்லை.  உவமம் அணியன்று. அது பொருட்பகுதி. அதனால்தான் தொல்காப்பியர் அதனைப் பொருட்பாலில் வைத்தார். அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பகுதியே உவமம். உவமம் புறம் சார்ந்ததன்று. அகம் சார்ந்தது. அகப்பொருளுக்குத்தான் உவமம். சங்க இலக்கியம் உட்பட பின்னாலே வந்த இலக்கியங்கள் உவமத்தைப் பொருள் விளக்கத்திற்காகவே பயன்படுத்தியிருக்கின்றனவேயன்றிச் செய்யுளின் அழகுக்காகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பிறமொழி அறிவும் தள்ளத்தக்கதன்று என்னும் விரிந்து பரந்த மனநிலை தமிழிலக்கணக் கற்றலிலும் நிலைபெற்றது. இதன் விளைவாகவே தண்டியலங்காரம் என்னும் வடமொழி நூல் பல்வகை அணியிலக்கணங்களை முன்னெடுக்கிறது. உவமம் அதில் ஒன்று. இந்தத் தண்டியலங்காரந்தான் உவமத்தை ‘உவமை’ என்று பிழையாகக் கூறியது. உவமம் தமிழ்ச் சொல். ‘உவமை’ உவமத்தின் பண்பைக் குறிக்கும் மையீற்றுப் பண்புப் பெயர்.  இந்த உவமத்துள் ஐயவுவமை என்பதும் ஒன்று. அதற்கான பொருள் பாட்டைத் தண்டியலங்கார ஆசிரியரே எடுத்துக்காட்டியுள்ளார்.

“தாது அளவி வண்டு தடுமாறும் தாமரை கொல்?
மாதர் விழி உலவும் வாள் முகம் கொல் – யாது என்று
இருபால் கவர்வு உற்று இமை ஊசலாடி
ஒருபடாது என் உளம்”

இந்தப் பாட்டில் கண்களை வண்டுக்கும் முகத்தைத் தாமரைக்குமாக்கி ஐயப்பட்டது காண்க. இந்த மரபு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் இருந்திருக்கிறது.

“ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம்மா அரிவையோ அல்லள்!
தெனாது ஆஅய் அணங்குடைச் சிலம்பில்
கவிரம் பெயரிய உருகெழு கவான்
ஏர்மலர் நிறைமலர் உறையும்
சூரமகள் மாதோ? எனும் என் நெஞ்சே!”

என்பது அகநூனூற்றில் “அரிவையோ அல்லள்”. என்றும் “சூரமகளிர் மாதோ?” என்றும் தலைவன் ஐயப்பட்டது காண்க. இதனை வழிமொழிந்த திருவள்ளுவர் கண்ட தலைமகன்

“அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு”

என்று ஐயப்படுகிறான். இந்த நெடிய மரபில் வந்த கவிஞன் ஒருவன் எழுதுகிறான்

“பூவிடத்தில் வைகும் புதுவித பொன்வண்டோ?
தாவிஎனைத் தாக்கும் கண் தான் இதுவோ? –ஆவிக்குள்
சென்று அலைக்கழிக்கச் செய்வ தறியாது
நின்று தவிக்கின்றேன் நீண்டு!”

என்று. இந்தப் பாட்டில் கண்ணா? வண்டா என்பதுதான் தலைவனின் ஐயம். தன்னிகரற்ற திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் இதனை வேறு வாய்பாட்டில் பதிவு செய்திருக்கிறார்.

பேசுவது கிளியா? இல்லை
பெண்ணரசி மொழியா?
கோவில் கொண்ட சிலையா?
கொத்துமலர்க் கொடியா?

பாடுவது கவியா? இல்லை
பாரி வள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?..

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா? — இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா?

வில்லேந்தும் காவலன்தானா?
வேல்விழியாள் காதலன்தானா?
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் நாவலன்தானா?

மன்னாதி மன்னர்கள்
கூடும் மாளிகையா?
உள்ளம் வண்டாட்டம் மாதர்கள்
கூடும் மண்டபமா?

செண்டாடும் சேயிழைதானா?
தெய்வீகக் காதலிதானா?
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

இங்கே வாய்பாடு மாற்றம் என்பது மரபு மாற்றம். அல்லது மரபின் வளர்ச்சி. அதாவது பெண்ணைத்தான் ஆண் ஐயப்படுவான். தலைவியைத்தான் தலைவன் ஐயுறுவான். தலைவி தலைவனை ஐயுறுவது மரபன்று. இந்த மரபை உடைத்தவர் சேக்கிழார்.

“முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகொளியால்
தன்னேரில் மாறனோ? தார்மார்பின் விஞ்சையனோ?
மின்நேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?
என்னே? என் மனம் திரிந்த இவன் யாரோ?

என்று சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்ட பரவை நாச்சியார் ஐயுற்றதாகப் பாடிப் புதுமரபுக்குத் தடம் காட்டியிருக்கிறார். .கண்ணதாசன் பழந்தமிழ் மரபையும் சேக்கிழார் மரபையும் ஒரு சேரத் தழுவியிருக்கிறார். “பேசுவது கிளியா” என்ற இந்தப் பாடலில் தலைவனும் தலைவியும் ஒரே சூழலில் ஒருவொரையொருவர் ஐயப்பட்டுக் கொள்கிறார்கள் என்பது தமிழ்க்கவிதை உத்திக் களத்ததில் ஓர் புதுமை. இந்த மரபைத் தாரமங்கலத்தார் இப்படிப் பாடியிருக்கிறார். .

“வானில் தவழும் தாரகையோ?இங்கே
வந்தெனை வாட்டும் மேனகையோ?

புன்னகை பூக்கும் புதுநிலவோ? இன்று
புதிதாய்ப் பூத்த பூச்சரமோ?

கண்ணில் ;இனிக்கும் கற்கண்டோ? – எனைக்
கவர்ந்தே இழுக்கும் காரிகையோ?

செவ்விதழ் பதித்த திருமுகமோ? என்
சிந்தை கவர்ந்த திருக்குறளோ?

கவ்வத் துடிக்கும் கன்னங்களோ? கனிச்
சாறு நிறைந்த கிண்ணங்களோ?

கண்களா? இல்லை மீனினமா? உயிர்க்
கற்பைக் காப்பதில் மானினமா?

கரிய கூந்தல் வான்முகிலா? அவள்
கலைதவழ் முகமொரு வெண்ணிலவா?

நெளியும் மின்னல் நேர்வகிடா? இவள்
நிமிர்ந்து நடப்பது தேர்த்தடமா?

இந்தக் கவிதையில் எதுவும் புதுமையில்லை.  ஆனால் இயல்பாக வந்த மரபின் தாக்கம் இது என்பதைத் தெளிவாக்குகிறது. இது மரபை மீறியதோ மீறுவதோ அன்று.. இயல்பாக அமைவது. மொழியின் எளிமை மரபுக்கு எதிரானது அன்று. உடன்போக்குக்கு உரியது. இதுதான் மரபுக் கவிதை. இரண்டு காய், நாலு கனி, மூன்று விளம், ஐந்து மா என்றெல்லாம் கணித வாய்பாடுகளை எழுதிவைத்துக் கொண்டு கவிதை என்று நம்ப வைக்க முயல்வார் ஏராளம்.  மரபு, மரபு மாற்றம், மாற்றங்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல், அதற்கேற்பப் படைத்துக் காட்டுதல் என்னும் சீரான கவிதைத் தொழிலைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் தாரமங்கலம்!

மாலை மயக்கமும் மது மயக்கமும்

தமிழ்நாடு எதிர்நோக்கும் சிக்கல்களில் தலையாயது இளைஞர்களிடத்தில் நிலை கொண்டிருக்கும் போதைப் பழக்கமாகும். இது சாராயத்தில் சொடங்கிக் கஞ்சா வரை நீளுகிறது. போதைப் பொருட்களின் பொருள்களுக்கு அகராதிகள் பொருள் தேடிக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் கள்ளத்தனமாகப் புழங்கும் இந்தத் தொழிலில் இருப்பவர் அதிகார வர்க்கத்துக்கு வேண்டியவர்களாக இருப்பதும் எண்ணிப்பார்க்க முடியாத சிக்கலாகும். எதனையும் அரசியலாகப் பார்க்கப் பழகிப் போன ஒரு அழுகிய சமுதாயத்தில் அந்த ஒட்டு மொத்த சமுதாயமும் அழிவுத் தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அவ்வளவு எளிதாகப் புரிந்து  கொள்ள முடியாது. இளங்குழந்தைகளுக்கு நாளும் நடந்து வரும் பாலியல் கொடுமைகளுக்கு அரசு எப்படிக் காரணமாக இருக்க முடியும்? அதே நேரத்தில் தெருவுக்கு மூன்று கடை திறந்து வைத்துவிட்டுக் குடிக்காதே என்றால் என்ன பொருள்? எந்த மட்டத்திலும் சமுதாய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. சமுதாய இழிநிலைகளைப் பாடுபொருளாக்குவதில் கவிஞர்கள் ஈடுபாடு கொள்வதில்லை. பள்ளிமாணவன் பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனிப்பதைக் கூட அரசியல் கட்சிகள் அரசியலாக்கும் ஒரு பரிதாபமான நிலை இங்கே நிலவுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் முத்துசாமி மதுவின் கொடுமையைப் பாடியிருக்கிறார். குழந்தைகளுக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

“எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய் !

மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்தில் நீயிருப்பாய் ;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை !

இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும் ;
மதுகுடித்த போதையிலே
மயங்குகிற பேதையரீர்!

சதிசெய்யும் சாத்தானாய்ச்
சந்ததிக்கே ஊறுசெய்யும் ,
மதிமயக்கி உமையழித்து
மானமதைக் கெடுத்துவிடும் !

விதிமுடிக்க வருமுன்னே
விழித்துவிடு குடிமகனே !
அதுவுன்னை முடிக்குமுன்னே
நீ அதனை முடித்துவிடு!”

கவிதையின் முதல் வெற்றி பாடுபொருள் தேர்வில் இருக்கிறது, காரணம் கவிஞனை முதலில் பாதிப்பது அதுதான். அந்தப் பொருளுக்கான வடிவம் அதன் முழுவெற்றியைத் தீர்மானிக்கிறது. பாமர வழக்கில் பாமரர்களுக்காகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் இனிமையும் எளிமையும் இணைந்து தாரமங்கலத்தாரின் சமுதாய அக்கறையை வெளிப்படுத்துகிறது. கற்பனை குறைவான கவிதைதான். யதார்த்தங்களைப் பட்டியல் போட்டு மதுவின் கேடுகளை நிரல்படுத்தி எளிய தமிழில் எல்லார்க்கும் புரியும் வண்ணம் பாடியிருக்கும் சதுரப்பாடு போற்றத்தக்கதா, இல்லையா?

எளிய தமிழில் இன்றைய வாழ்வியல்

தமிழிலக்கியத்தின் சாரமே சமுதாய வாழ்வியலைப் பாடுவதுதான். வெற்றுச் சொல்லாடல்களை வெறுங் கற்பனைகளோடு கலந்து படைக்கப்பட்ட இலக்கியங்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழின் அமுதவடிவமான ஆழ்வார்ப் பாசுரங்கள் கூட அவ்வளவாக மக்களால் பேசப்படவில்லை. பகதியை மக்கள் உணர்வுப் பூர்வமான நாட்கடமையாகக் கொண்டனரேயன்றி அதனை இலக்கியத்தில் காண்பதற்கு அவர்களுக்குக் காலமில்லை போலும்!. இடைக்கால இலக்கியங்கள் எல்லாம் அந்தப்புர அந்தரங்கங்களைப் பாடுவதாகவே அமைந்து போனதால் அவை இலக்கிய வரலாற்றிலன்றி மக்களின் இதயத்தில் இடம் பெறவில்லை. பழைய கணக்குப்படி அமைந்த தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களில் வெகுமக்கள் செல்வாக்கினைப் பெற்ற இலக்கியம் என்று ஒரு சிலவே இருக்கின்றன. திரையிலே கற்பனைக் கதாநாயகர்களையே பார்த்த மக்கள், பாரதிதாஜாவின் ‘பதினாறு வயதினிலே’ பார்த்த பிறகுதான் தங்களையே திரையில் கண்டார்கள். அந்தப் படத்திற்குப் பிறகு வந்த சிறு நூறு படங்கள் யதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டின. ஒரு வீடு கட்டுவதில் உள்ள நடைமுறைத் துன்பங்களைப் பாலுமகேந்திரா ‘வீட்டில்’ காட்டினார்’ அரசியல் வாதிகளின்  கொடூர மறுபக்கத்தை ‘நிழல்கள்’ காட்டின. மருத்துவமனைகளின் அவலநிலையையும் மருத்துவர்களின் பணத்தாசையையும் ‘ரமணா’ காட்டியது. கற்பனைகளைவிட நடப்பியல் உண்மைகளையே மக்கள் இலககியங்களில் தேடுகிறார்கள் என்பதை இதனால் உணர முடியும்.

“கையில வாங்கினேன் பையிலே போடல
காசு போன இடம் தெரியல”

என்று பட்டுக்கோட்டை எழுதுகிற போது ஒரு தொழிலாளி தன் வாழ்க்கையை  அதில் காண்கிறான்.

“காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையும் காலுந்தானே மிச்சம்”

என்று அவன் பாடுகிறபோது ஒரு விவசாயி தன் உருவத்தைத் தானே பார்த்துக் கொண்டான். நடப்பியலைப் பாடுவதுதான் மக்களைக் கவர்கிறது. இதனால் மற்றவைகளை வெறுக்கிறார்கள் என்று பொருளன்று.  முத்துசாமி

“வெலவாசி ஏறிப்போச்சு! வௌஞ்ச பொருள் கொறஞ்சு போச்சு!
மழைக்காலம் மாறிப்போச்சு மக்களுக்கு அவஸ்தையாச்சு!
கலிகாலம் முத்திப் போச்சு! கடமை குணம் வத்திப்போச்சு!
பிழையாக நடப்பதெல்லாம் பெருமையாக மாறிப்போச்சு!

பணப்புழக்கம் கொறஞ்சு போச்சு! பாவச்செயல் பெருகிப் போச்சு!
மனப்புழுக்கம் அதிகமாச்சு! மக்கள் மனம் அழுக்குமாச்சு!
தினந்தோறும் கவலையாச்சு! திரிஞ்ச வாழ்வு வழக்கமாச்சு!
அனல் மேல் புழுவுமாச்சு! அழுத கண்ணீர ஆறாச்ச!

என்று எழுதுகிறார். யாப்பிலக்கணம் அறியாத பாடல் இது. வெண்டளை வெறுந்தளை ஆன தருணம். காய்ச்சீரும் கனிச்சீரும் இல்லாத இந்தப் பாட்டில் கவிதை இருக்கிறது. மக்களின் கவலை இருக்கிறது. கனிச்சீர் விரவி வருவதாலேயே ஒரு பாட்டு இனித்துவிடும் அல்லது இனித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் பிடிவாதம் செய்யாதவர் முத்துசாமி!.

நிறைவுரை

யாப்பிலக்கண வாய்பாடுகளே கவிதை என்னும் மயக்க, மாய உலகிலிருந்து இயற்கையிலேயே விடுபட்டவர் முத்துசாமி. இது  மேலே சுட்டப் பெற்றிருக்கும் அவர் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆழமான சிந்தனையுடையவனுக்குச் சொற்களஞ்சியப் பெருக்கம் தேவையில்லை. திருக்குறள் இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு, ஆனால் சொற்களைத் தேடும் ஆவேசமும் தீவிர மனநிலையும் இயல்பாக இருப்பவனே கவிஞன். வண்ணமும் து{ரிகையும் கையில் வைத்தவனெல்லாம் எப்படி இரவிவர்மா ஆக முடியாதோ அதுபோல்தான் எழுத்துக்களையும் அசைகளையும் வாய்பாடுகளையும் அறிந்தவனெல்லாம் கவிஞனாகிவிட முடியாது. மனநேர்த்தி பெற்றவனே கவிஞனாக முடியும். அழகான புலக்காட்சிகள் எவனுக்கு இயல்பாகத் தோன்றுகிறதோ அவனே கவிஞன். மனித இனததின் இயல்பையும் இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பையும் வெளிப்படுத்தாதவனை நிகழ்காலமே நிராகரித்துவிடும். தாரமங்கலத்தார் கவிதைகளில் இழையும் இனிமையும எளிமையும் சமுதாயச் சிக்கல்களை ஒரு வகை மனிதநேயத்துடன் அணுகும் அணுகுமுறையும் பண்பாடு காக்கும் போர்க்குணமும் கவியுலகத்தால் நிராகரிக்கக் கூடியன அல்ல.  இனிமையும்  எளிமையும் கலந்த கலவையே கவிதை என்பது பாரதியின் தாரகமந்திரம்  அந்தத் தாரகமந்திரத்தைத் தனது கவிதைகளில் இழையவிட்டிருக்கும் முத்துசாமிக்கு வாழ்த்துக்கள்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.