நடிகைகளைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா?
அண்ணாகண்ணன்
நடிகைகளை, திரைக் கலைஞர்களைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா? அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பேசக் கூடாதா? இது, திரைக் கலைஞர்களைக் குறைத்து மதிப்பிடுவது. அத்துடன், அவர்களை அவமதிப்பது.
நாகை புத்தகத் திருவிழாவில் (2025 ஆகஸ்டு 1 – 11), புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் தனித் தனித் தலைப்புகளில் பேச இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல், நகைச்சுவை நிகழ்ச்சி, ஆடல், பாடல், பல்வகை இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற உள்ளன. நாகப்பட்டினம் ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் (Nagapattinam Collector) விரிவான விவரங்கள் உள்ளன.
கலைத் துறைகள் பலவற்றிலிருந்தும் புகழ்வாய்ந்த வல்லுனர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்கள் புதுமுகங்கள் அல்லர். தங்கள் துறையில் தங்கள் திறமையை நிரூபித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதை இரண்டு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும். முதலாவது, மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டு சேர்ப்பது. இரண்டாவது, இந்தக் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பது. இரண்டு தரப்பாருக்கும் இதில் நன்மை இருக்கிறது. புத்தகக் காட்சியாக முன்வைக்காமல், புத்தகத் திருவிழாவாக முன்னெடுக்கிறார்கள். சுற்றுவட்டார மக்களை வர வைக்க வேண்டும், அவர்களை ஈர்க்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள்.
புத்தகத் திருவிழா என்றவுடன் எழுத்தாளர்களே முக்கிய விருந்தினர்களாக இருக்க வேண்டும் என்பது பழங்கால எதிர்பார்ப்பு. புத்தகத் திருவிழாவில் உள்ள மொத்த நூல்களில் இன்று வாழும் எழுத்தாளர்களின் நூல்களின் எண்ணிக்கை, சொற்ப விழுக்காடே இருக்கும். இதற்கு முன் வாழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்களின் ஆக்கங்களே மிகுதி. மேலும், ஜோதிடம், சமையல், வணிகம், அரசியல், ஆன்மீகம், திரைப்படம் போன்று பல துறை சார்ந்த புத்தகங்கள் உள்ளன. எனவே, புத்தகக் காட்சி என்றவுடன் இலக்கியவாதிகள் இது தங்கள் இடம் எனத் நினைத்துக்கொள்ளக் கூடாது. இது, எல்லோருக்குமான இடம்தான்.
புத்தகக் காட்சி என்பது, அறிவியக்கத்தின் ஒரு பகுதி என்று கே.என்.செந்தில் எழுதியதைப் படித்தேன். இது, பழைய நம்பிக்கை. இது உண்மையாக இருந்தால், புத்தகங்கள் படித்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்களே. நாம் படிக்கும் புத்தகங்கள் பலவற்றை நாம் மறந்துவிடுவோம். நினைவில் இருக்கும் சிலவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புத்தக ஆசிரியர் எழுதிய அனைத்தையும் வாசகர் ஏற்றுக் கடைப்பிடிக்க மாட்டார். அப்படி இருந்தால், திருவள்ளுவரின் கருத்துகளை அதைப் படித்த பலரும் ஏற்று நடந்திருப்பார்களே. தாம் எழுதியபடி எழுத்தாளர்களே நடந்துகொள்வதில்லை. புத்தகம் ஒருவர் வாழ்வில் பெரிய மாற்றம் எதையும் நிகழ்த்திவிடாது. அப்படி ஒருவரிடம் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால், அதற்கு அந்தத் தனி மனிதரே காரணம். அந்தப் புத்தகம் இல்லை. இந்தத் தூண்டுதலை அவரது மனம், வேறு எதனிடமிருந்தும் பெற்றிருக்க முடியும். மாறுவதற்கு உரிய மனநிலை, அவரிடம் இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணம்.
புத்தகங்களால் அறிவை மழுங்கடிக்கவும் முடியும். மூட நம்பிக்கையை, வெறுப்பை, காழ்ப்பை வளர்க்கவும் முடியும். புத்தகங்களால் பொய் பேச முடியும். பொய்யை உண்மை என்று நம்ப வைக்க முடியும். எனவே, ஒட்டுமொத்தமாகப் புத்தகம் படித்தால் அறிவு வளரும் என்று கூற முடியாது. புத்தகக் காட்சிகளை அறிவியக்கத்தின் ஒரு பகுதி என்றும் கூற முடியாது.
நாகை புத்தகக் காட்சியில் நீயா நானா கோபிநாத் பேசுகிறார். அவருடைய ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! என்ற புத்தகம், விற்பனையில் ஐந்து லட்சம் பிரதிகளை நெருங்குவதாக அதன் அட்டையிலேயே அச்சிட்டிருக்கிறார்கள். முழுநேர எழுத்தாளர்களே நினைத்துப் பார்த்திராத விற்பனை இது. இவரிடமிருந்து எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள ஏதும் இருக்கிறதா? இல்லையா?
பதிப்பாளர்களுக்குப் புத்தகக் காட்சி என்பது பெரிய வணிகச் சந்தை. எது தேவையோ, எதை வெளியிட்டால் விற்குமோ அதை வெளியிடுவார்கள். இதர நுகர்பொருள்களைப் போல், புத்தகங்களையும் ஒரு நுகர்பொருளாகக் கருதுவது, இயல்பான வணிகக் கண்ணோட்டம். இதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
எழுத்தாளர்கள் பலருக்குச் சுவையாகப் பேசத் தெரியாது. அப்படிப் பேசத் தெரிந்தவர்களின் உதவி, அவர்களுக்குத் தேவை. தங்கள் படைப்பின் மீது, புத்தகத்தின் மீது சிறிதளவு வெளிச்சமாவது விழாதா என்ற அந்தரங்க ஏக்கம், பலருக்கும் உண்டு. சிறிய அங்கீகாரம், பாராட்டு அல்லது விமர்சனம், அவர்களின் இருப்பை நினைவூட்டும்.
திரைப்பட நட்சத்திரங்களை உரிய விதத்தில் பயன்படுத்தினால், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பயன் கிட்டும். நட்சத்திரத்திடம் பேசி, இன்னும் ஒரு மணி நேரம் அரங்கில் இருங்கள் எனக் கேட்கலாம். ஐந்நூறு ரூபாய்க்கு அல்லது ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினால், திரைப்பட நட்சத்திரத்துடன் சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ளலாம் என ஒரு திட்டத்தை அறிவிக்கலாம். இதன்வழியே ஒரு சிறிய உடனடிப் பயன் கிட்டும்.
எழுத்தாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது. தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் மிதக்கக் கூடாது. படிப்பவர்கள் யாரும் இல்லை என்றால், எழுதுவது யாருக்காக?
பேச வரும் நட்சத்திரங்களுக்கு அரசு தரும் சன்மானம் எவ்வளவு என்று தெரியாது. இது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவர்கள் இந்தச் சன்மானத்திற்காக இந்த அழைப்பை ஏற்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அரசு அழைப்பு என்பதை ஒரு பெருமையாகக் கருதியே வருவார்கள் என நினைக்கிறேன்.
நட்சத்திரங்களின் வலிமை, செல்வாக்கு, ஆளுமை என்பது அரங்கில் பேசுவதோடு முடியாது. ஊடகங்களில் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இதை ஆக்கப்பூர்வமான ஒன்றாகவே பார்க்க வேண்டும். இந்த நிகழ்வில் பங்கேற்காத, இதற்குச் சற்றும் தொடர்பில்லாத, இதனால் எந்த ஆதாயமும் பெறாத ஒருவனாகவே இதைச் சொல்கிறேன்.
