முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
E.mail.Kumaritathithan@gmail.com

பக்தி இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களுள் தனித்த இடம் பெறுகின்றன. அவற்றுள் சைவத் திருமுறைகளும், வைணவ நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் பக்தியின் ஊற்றாய் விளங்குகின்றன.  இவற்றுள் சங்ககால அக இலக்கிய மரபுகள் பெரிதும் எடுத்தாளப்பட்டுள்ளன.  அதேநேரம் அகமரபுகளின் புதிய மரபுத்தோற்றம் இப்பக்தி இலக்கியங்களில் நிகழ்ந்துள்ளன.

அன்பின் ஐந்திணையில் தலைமக்களின் பெயர் சுட்டப்படாதது சங்க மரபு. அதில் இருந்து மாறுபட்டு பக்தி இலக்கியக்கால இலக்கியங்களில் சுட்டும் மரபினைக் காணலாம். அதேபோல பெண்பாற் கைக்கிளையும் பெண் மடலேறுவேன் எனக்கூறும் கூற்றுகளும் இடம்பெற காணலாம்.  இவை பக்தி இலக்கியக் காலக்கட்டத்தில், இலக்கிய அமைப்பில் ஏற்பட்ட படிநிலை வளர்ச்சி எனலாம்.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மடலேறுதல் என்பது தலைவியை மணம்புரிந்து கொள்ள ஆசைப்பட்டு தலைவியின் ஓவியத்தைத் தாங்கி பனை மரத்தின் கருக்குமட்டைகளால் செய்யப்பட்ட குதிரையின் மீது ஏறி ஊர்ந்து செல்வதாகப் பாவிப்பதாகும்.  பிற்கால இலக்கண நூல்கள் இதனை மடல் ஏற்றம், மடல் கூற்று என இரண்டாகப் பகுத்து விவரிக்கின்றன.  பனையின் கருக்கு மட்டைகளால் ஆன குதிரையின் மேல் ஏறி தான் விரும்பும் தலைவியின் ஓவியத்தைத் தாங்கி ஊரறிய வலம் வந்து, அவளின் பெயரைச் சொல்லிப் புலம்பும் நிலையானது மடல் ஏற்றம் என்றும், மடலேற முயல்வதாக மட்டும் கூறும் வகையில் அமைவதனை மடல் கூற்று எனவும்  வழங்கப்படுகின்றன.

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

“யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அம்கைப்பிரானுடைத்
தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
………………………………………………..”

என்னும் பாடலில் பெண் மடலேறுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தாம் மடலேறப் போவதாக இறைவன் மீது ஆசைகொண்ட தலைவி சொல்வதாக அமைந்தது இப்பாடல்.  திருமங்கையாழ்வார் ஒருபடி மேலே சென்று சிறிய திருமடல், பெரியத் திருமடல் என்று தனித்த சிற்றிலக்கிய வகை என்று கூறும் வகையில் பாடியுள்ளார்.

சங்க மரபில் பெண் மடலேறுதல் இல்லை என்றாலும், திருமங்கையாழ்வார் மடலேறத்துடிக்கும் பெண்ணை அறிமுகப் படுத்தியிருக்கும் பாங்கு சுவையுடையது, தமது பாசுரத்தின் நாயகியான பரகாலநாயகி இறைவனை அச்சுறுத்தும் வகையில் மடலேறப் போவதாக அச்சுறுத்தும் பாடல்கள் நயம் மிகுந்தவை.

இறைவன் மீது தணியாத, காதல் கொண்ட பரகாலநாயகி திவ்யதேசங்கள் அனைத்திற்கும் மடலேறிச் செல்வேன் என்கின்றாள்.  நாராயணன் தவம் புரிந்த திவ்ய தேசங்களுக்கெல்லாம், அவனது பெருமைகளுக்குரிய ஆயிரம் திருநாமங்களையும் கூறிக்கொண்டே மடலேறுவேன்

“ஊரார் இகழிலும் ஊரா தொழியேன் நான்
வாரார்பூம் பெண்ணை மடல்”

என்பதனால் ஊரார் அனைவரும் பழித்தாலும் விடேன். அழகிய பனைமட்டையினைக் கொண்டு மடலேறிச் செல்வதை விடமாட்டேன் என பரகால நாயகி கூறுவதை அறியலாம்.  அதே நேரம் சிறிய திருமடலாக இருந்தாலும், பெரிய திருமடலாக இருந்தாலும் அவற்றில் மடலேறப் போவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மடலேறியதாகக் குறிப்பிடப்படவில்லை.  இவ்வாறு மடல் நூல்களிலும் தலைவியின் துன்பத்தைக் கருவியாகக் கொண்டு, இறைவனின் புகழையும் இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களின் சிறப்புக்களையும் எடுத்துரைப்பது தனிச்சிறப்பாகும்.

இங்கு மக்களிடையே பக்திநெறி பரவ, அகமரபினை மீறி மடல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு பாசுரங்களைப் பாடியுள்ளனர்.  இதனை நுணுகி ஆராயுமிடத்து இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றம் என்றே குறிப்பிட வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.