கண்ணதாசன் பாடலில் பிற்போக்கான கருத்துகள்
அண்ணாகண்ணன்
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா? – உன்
கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 1962ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கண்கள் திரைப்படத்தில், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடிப்பில், கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு, எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையமைக்க, பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார்.
பிற்போக்கான பல கருத்துகள், இந்தப் பாடலில் உள்ளன.
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போல் உன் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு – தமிழ்க்
காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு
என்றும்
புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?
என்றும்
கண்ணாடி முன்னால் நில்லாதே – உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
என்றும்
இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்
என்றும் இதில் வரும் வரிகள், பெண்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக் காட்டும் வரிகள்.
பெண்கள் வெளியே வரக் கூடாது, சிரிக்கக் கூடாது, தங்கள் அழகைக் காட்டக் கூடாது, ஆண்களின் எதிரே செல்லக் கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது, முகத்தை மூட வேண்டும், தனியே வெளியே செல்லக் கூடாது என அன்று இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. அன்றைய சமூக நிலையைப் படம் பிடித்துக் காட்டும் பாடல். அதே நேரம் இன்றைய காலத்துக்குப் பொருந்தாத பாடல். நாம் கடந்து வந்த தூரத்தைக் காட்டும் பாடல்.
சில பிரிவினருக்குள் இன்றைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பலவும் அப்படியே இருக்கின்றன. இது, செய்திகளின் வாயிலாக நமக்குத் தெரிய வருகிறது. ஆயினும், இப்படியான கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெரும்பான்மைப் பெண்கள் இன்று வெளியே வந்துவிட்டார்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழத் தொடங்கிவிட்டார்கள். வீறுகொண்டு விழித்தெழுந்த பெண்ணினத்தின் ஒப்பற்ற ஒளியின் முன்னால், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
