அப்பா எனும் பொழுது ஆண்டவனே தெரிகிறார்!

0
1

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

அப்பா எனும் பொழுது
அன்பு தெரிகிறது
அப்பா எனும் பொழுது
கருணை தெரிகிறது
அப்பா எனும் பொழுது
ஆண்டவனே தெரிகிறார்
அப்பா எனும் வார்த்தை
அனைவர்க்கும் மந்திரமே !

அன்னையால் நாம் பிறந்தோம்
அப்பாதான் வேராவார்
அவரருகில் இல்லை என்றால்
அனைத்துமே அகன்றிடுமே
வழித் துணையும் அவரே
மருத்துவரும்  அவரே
மா மருந்தாய் இருந்து
காத்திடுவார் அப்பா !

பெருமை கொள்வார் அப்பா
பிறந்ததுமே பார்த்து
மழலை குரல் கேட்டு
மயங்கிடுவார் அப்பா
உச்சி தொட்டுக் கொஞ்சி
உருகிடுவார் அப்பா
உள்ள வரம் அனைத்தும்
பிள்ளையென நினைப்பார் !

தன் முகத்தைப் பார்த்து
மழலையைப் பார்ப்பார்
தனை மறந்து அப்பா
மூழ்கிடுவார் மகிழ்வில்
இறை கொடுத்த வரமாய்
எண்ணிடுவார் அப்பா
இவ் உலகு அவர்க்கு
இன்பமாய் தெரியும் !

பிள்ளை மனம் அறிந்து
பேணிடுவார் அப்பா
உள்ளம் எலாம் பிள்ளை
நினைவுடனே இருப்பார்
அள்ள அள்ள குறையா
அன்பினையே கொடுப்பார்
அவர் என்றும் துணையாக
ஆகியே இருப்பார்  !

கற்கின்ற கரு அதனை
கருத்திலே கொள்வார்
கல்வி கற்க வாழ்வினிலே
கண்ணாக இருப்பார்
தன் பிள்ளை ஆளுமையாய்
வரவெண்ணி உழைப்பார்
கற்றவர்கள் சபை அமரக்
காத்திருப்பார் அப்பா !

நல்லவனாய் வல்லவனாய் வர
அப்பா நினைப்பார்
எல்லையில்லாப் புகழ் பெறவே
எல்லாமே கொடுப்பார்
நல்ல பிள்ளை என்று
நாடெல்லாம் சொல்ல
நாழும்  எண்ணி அப்பா
வாழ்ந்திடுவார் மண்ணில்  !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.