மீனாட்சி பாலகணேஷ்

          ஈழத்தில் எழுதப்பட்ட மற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்களும் பார்வைக்குக் கிட்டியுள்ளன. அவற்றுள் ஒன்று திருமால் மீதானது. மற்றவை நாவலர் பிள்ளைத்தமிழ், பாரதி பிள்ளைத்தமிழ், சுந்தரர் பிள்ளைத்தமிழ் முதலியனவாம். இவற்றின் பெருமைகளைக் காண்போம்.

                                        “””””””””””””””””””””””””””””””””””””””

  1. வல்லிபுர மாயவன் பிள்ளைத்தமிழ்

          இதனை இயற்றியவர் மு. கந்தையா என்னும் புலவர். 1989ஆம் வருடம் முதல் பதிப்பு கண்டுள்ளது. இப்புலவர் பெருமான் பிள்ளைத்தமிழ் பாடுவதில் வல்லவர். மாவை பிள்ளைத்தமிழ், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார் என முன்பே கண்டோம்.

          முதலில் வல்லிபுரத்தைப் பற்றிய சில விவரங்களைக் காண்போம். வல்லிபுரத் திருக்கோவில் ஈழத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. சிங்கை மன்னர்களால் ஆளப்பட்டு சிங்கைநகர் எனப் பெயர் பெற்ற இடம்தான் வல்லிபுரம். புராதனமான க்ஷேத்ரம் எனவும் பெருமை பெற்றது. வள்ளிபுரம் எனவும் சில குறிப்புகளில் காணப்படுகின்றது. வல்லிபுரத்துடன் தொடர்புடைய சில வரலாற்றுக் குறிப்புகள், புராணக்கதைகள், மக்களது வாழ்வியல் குறிப்புகள் ஆகியன இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

          பிள்ளைத்தமிழிலக்கணப்படி காப்புப்பருவத்தில் பிள்ளையைக் காக்க முதலில் திருமாலை வேண்டித் துவங்கியுள்ளார் ஆசிரியர். இந்நூல் பத்துப்பருவங்களில் பருவத்திற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டமைந்தது.

          அனைத்துப் பருவப் பாடல்களும் யாப்பும், சந்தமும், பொருளும் நயமும் இனிதமைந்து விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு வருகைப் பருவப் பாடலைக் காண்போம்.

          முதலையின் வாயிலகப்பட்டு ஆதிமூலமே எனவழைத்த யானைக்கும் வல்லிபுரத்தில் வாழ்ந்த பக்தை ஒருத்திக்கும் (இவர் வரலாறு அறியக் கிட்டவில்லை) மோட்சத்தை அருளிய அமலப் பிரான் வருக! அன்றொருநாள் காத்திருந்த சிசுபாலனை வென்று ருக்மிணியை அணைத்த (மணம் கொண்ட) கண்ணாளனே, வருக! பக்திச்செங்கனி ரசம் எனும் தேனைப் பொழியும் தமிழ்ப் பாகாய்க் கனிந்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் பாடல்களை (ஆழ்வார்கள் எனும் உன் அடியார்கள்) இயற்ற அருள்பாலித்த பரமனே வருக!

          வல்லிபுரம் வனமும் புனங்களும் மலிந்தது; அங்கு தலையைக் கொத்திச் சிதறச் செய்யும் மயிலும் அதன் பகையான அரவும் குலவி விளையாடும் புதர்கள் உண்டு; கொல்லைப்புறங்களில் மான் புல்லினை மேயும். அவ்வல்லிபுரத்தின் நாதனே வருக. வேதத்தின் மூலம் அறியவொண்ணாதது; ஆதலால் அது வித்தில் விளையாதது எனப் போற்றப்பட்டது. அந்த வேதத்தின் மூலம் அவ்விறைவனே. அவனே வித்து, முளை, விளைவு, அதன் பயன் என யாவுமாகப் பரிணமிப்பவன். அவனே முதல் விகிர்த வேதகன். அவனை வருகவே என விளிக்கிறார்.

         அத்திக்கும் வல்லிபுர பக்தைக்கும் முத்தியருள்

                          அமலப்பிரான் வருகஅன்

                 றண்ணாந் திருந்தவன் அயிர்க்கருக் மிணியையணை

                          கண்ணாளன் வருகவருக

         பத்திச்செங் கனிரசத் தேன்பிலிற் றித்தமிழ்ப்

                          பாகாய்க் கனிந்தஞ்சானப்

                 பரவசத் தீஞ்சுவைப் பாடல்நா லாயிரம்

                          பாலித்த பரமவருக

         கொத்திச்சி ரங்குதறு மயிலயல் கோளராக்

                          குலவியா டும்புதர்கொள்

                 கொல்லையம் புறவுமான் புல்லுமேய் புனமுமலி

                          வல்லிபுர நாதவருக

         வித்தில்விளை யாததோர் வேதமூ லம்வருக

                          விமலப் பிரான்வருகவே

                 வித்துமுளை விளைவுபயன் யாவுமாய் மெத்துமுதல்

                          விகிர்தவே தகவருகவே.

          மேலும் பலப்பல பாடல்கள். வாசகர்கள் படித்து மகிழ வேண்டும்.

                              “””””””””””””””””””””””””””””””””””””””

  1. நாவலர் பிள்ளைத்தமிழ்

          இந்த பிள்ளைத்தமிழ் நூலானது மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரால் 1979ம் ஆண்டு முதற்பதிப்புக் கண்டுள்ளது,

          ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணியை அறியாத தமிழ் மக்கள் இல்லை எனலாம். இவர் ஒரு இலங்கைத் தமிழர். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழுக்கும் சைவத்துக்கும் இவர் செய்த பணிகள் அளப்பரியன. முதல்முறையாகத் தமிழ் நூல்களை நல்ல முறையில் பதிப்பித்தவர். இவற்றுள் திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூல் காண்டிகையுரை, திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் இவற்றைச் சிறப்பாகக் கூறலாம்.

          நாவலர் தமிழ் மட்டுமன்றி வடமொழியாகிய சமஸ்கிருதம், ஆங்கிலம் இவற்றிலும் கூட நன்கு தேர்ச்சி பெற்றவர். இவரது தமிழ், சைவப்பணி இலங்கையில் மட்டுமின்றித் தமிழகத்திலும் பரவியிருந்தது.  சென்னையில் தங்கசாலை எனுமிடத்தில் வித்தியானுபாலன இயந்திரசாலை எனும் அச்சகம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். இவர் நினைவாக இவரைப் போற்றும் வகையில் இலங்கை அரசு தபால்தலை ஒன்றினை வெளியிட்டது.

          இவர்மீது பெருமதிப்புக் கொண்டிருக்கும் பெரியோர்களும் அறிஞர்களும் பலர். அவர்களுள் ஒருவரே இப்பிள்ளைத்தமிழினையும் இயற்றியுள்ளார். இந்நூலில் அன்னார் தமிழுக்குச் செய்த தொண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

          பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்குட்பட்டு காப்பு முதல் சிறுதேர்ப்பருவம்வரை பத்துப்பருவங்களும் பாடப்பட்டுள்ளன. நாவலரின் கம்பீரமான தோற்றமானது பலராலும் போற்றப்பட்டது. இதனைப் பிள்ளைத்தமிழ்ப் புலவர் பொருளாலும் செய்யுளின் சந்தத்தாலும் ஒரு செங்கீரைப்ப்ருவப் பாடலில் அழகுற விவரிக்கிறார்.

          பொங்கியெழும் சிவப்பொலிவு எங்கும் விரிந்து பரவி நிற்கின்ற தன்மையுள்ளவனே செங்கீரையாடுக; இந்தப் பூமியில் மலிந்துள்ள தீதுகளைனின்றும் நம்மைக் காக்கும் பொருளானவனே செங்கீரையாடுக; கங்கையைச் சடையிலணிந்த சிவபெருமான் தந்தருளிய மதலைக் கனியானவனே செங்கீரை; கனிரசம் நிரம்பிய கரும்பே, கரும்பினின்றும் கிட்டும் கற்கண்டே செங்கீரையாடுக; சிவநெறியினை இகழ்பவர்களையும் பழந்தமிழ்ப் பண்பாட்டை இகழ்பவர்களையும் அவர்கள் படாடோபங்கள் ஒடுங்கும்படிக்கு குற்றங்கள் களைந்து அவர்களெதிரே சென்று சிங்கமெனத் திகழும் நாவலனே செங்கீரையாடுக! தெய்வ நலம் பெருக விளங்கும் சைவ குலாதிபனே செங்கீரையாடுக!

                   பொங்கு சிவப்பொலி வெங்கு மெழுந்தொளிர்

                                  பொற்பே செங்கீரை

                          பூதல மிசைமலி தீதற நமையருள்

                                  பொருளே செங்கீரை

                 கங்கை புனைந்த சிவன்தரு மதலைக்

                                  கனியே செங்கீரை

                          கனிரச மல்கு கரும்பே கரும்பமர்

                                  கண்டே செங்கீரை

                 பங்க மறச்சிவ நெறியிகழ் பரிசினர்

                                  பழந்தமிழ்ப் பண்பிகழ்வார்

                          படாடோ பங்க ளொடுங்க எதிர்செல்

                                  பயங்கர கெம்பீர

                 சிங்க மெனத்திகழ் துங்கநன் னாவல

                                  செங்கோ செங்கீரை

                          தெய்வ நலங்கிளர் சைவ குலாதிப

                                  செங்கோ செங்கீரை.

எனும் இப்பாடல் வரிகள் நாவலருக்குரிய மிடுக்குடன் தாமும் நடந்து செல்வதாக அணிந்துரை எழுதியுள்ள யாழ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த திரு. வித்தியானந்தன் கூறுகின்றார்.

          இது போலும் பல இனிய பாடல்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். அனைவரும் படித்து இன்புற வேண்டும்.

                              “””””””””””””””””””””””””””””””””””””””””””

  1. பாரதி பிள்ளைத்தமிழ்

          இந்த பிள்ளைத்தமிழ் நூல் அரச பொற்கிழிப் புலவர் க. த. ஞானப்பிரகாசம் அவர்களால் இயற்றப்பட்டு 1983ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

          பாரதியார்மீது சில பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழ்நாட்டுப் புலவர்களாலும் எழுதப்பட்டுள்ளது.

          இந்த நூலில் வாழ்த்துரையாக ஒரு பாடலில்,

                    ஞானப் பிரகாசம் நலிந்ததமிழ் தானுயர

                 வானப் புகழ்தந்த வல்லவனைத்- தானப்பேர்

                 பிள்ளைத் தமிழ்பாடிப் பெட்பாம் அறம்பாடி

                 வள்ளல் அமிழ்தீந்தான் வாழ்த்து, எனக் காணலாம்.

          செவிக்கு மிகவும் இனிமையான பாடல்களாலமைந்த பிள்ளைத்தமிழ் நூலிது.

          எடுத்துக்காட்டாக முத்தப்பருவத்துப் பாடலொன்று:

          வெண் தாமரைமலரில் வீற்றிருக்கும் கலைமகளின் வீணையிசை காதினை அள்ளுகிறது; (தமிழை வளர்த்த) மூவேந்தர்களாகியோரின் சபை தனிலே சாமரை வீசும் (தமிழினை வளர்க்கும் அரசர்களை தமிழ்ப் புலவர்கள் மரியாதை செய்வர் எனக் கொள்ளல் வேண்டும்) கொள்ளவே குறையாத தெள்ளுதமிழ்ப் புலவர்களின் கூட்டம் அனைத்தும் வாழ்த்துகின்றனர். அரச சிம்மாசனத்தினில் தமிழ் இவ்வாறு அழகாக கொலு வீற்றிருக்கின்றது. அந்தத் தமிழை பாரதி எனும் குழந்தை கவர்ந்து வந்து விட்டது; பின் என்ன செய்கின்றது? உள்ளமெனும் தாமரையில் வைத்து வீரம் முதலான சுவைகளையும் நயங்களையும் அதில் ஏற்றி, மென்மையான பட்டுத்துகிலைச் சாற்றி, அணிகளால் அலங்காரங்கள் செய்து (இலக்கிய நயங்களான அணிகள் முதலியவற்றால் அலங்கரித்து) வீதியில் வருவோர்கள் அனைவரும் தங்கி இளைப்பாறும் அரசமரத்தின் கீழே வைத்துக் காப்பாற்றியது. இது எத்தகைய உயர்வான செயல்! அதனுடைய பொன்வாயின் முத்தத்தைப் புலவர் வேண்டுகிறார். புதுமையான இலக்கியங்கள் எனும் கடலில் புகுந்து முத்தான பாடல்களைக் கொடுத்தவனே! உன் பொன்வாயால் ஒரு முத்தம்தர வேண்டும் எனக் கேட்கிறார்.

         வெள்ளைமலர்க் கஞ்சமிசை வீற்றிருந் திடுதெய்வ

                          வீணையிசை காதை யள்ள

                 வேல்வேந்தர் மூவர்செங் கோலேந்து வேத்தவையில்

                          வீசுசா மரை யிரட்ட

         கொள்ளவே குறையாத தெள்ளுதமிழ்ப் புலவோர்தங்

                          கூட்டமெலாம் வாழ்த் தெடுப்பக்

                 கொற்றமுறு சிம்மாச னந்தனிலே கோலமொடு

                          கொலுவீற் றிருந்த தமிழை

         மெள்ளவே கவர்ந்துவந் துள்ளமெனுங் கமலத்தில்

                          வீரசுவை நயங்க ளேற்றி

                 மென்பட்டுச் சாத்தியணி யலங்காரச் சரமிட்டு

                          வீதிவரு வோர்கள் தங்கும்

         புள்ளுலவும் அரசமரத் தடிவைத்துப் புரந்தவா!

                          பொன்வாயின் முத்த மருளே:

                 புத்திலக்கி யக்கடற் புகுந்துமுத் தெடுத்தவா!

                          பொன்வாயின் முத்த மருளே.

          புதுமையான கருத்தமைந்த பாடல்! இதுபோலும் பற்பல. நூலைப் படித்துச் சுவைக்க வேண்டும்.

                              “”””””””””””””””””””””””””””””””””””””

  1. சுந்தரர் பிள்ளைத்தமிழ்

          இப்பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர்  சோ. தியாகராச பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. 1982ம் ஆண்டில் முதற்பதிப்பைக் கண்டுள்ளது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணத்தின் வெளியீடாகும் இது.

          சைவக் குரவர்கள் நால்வரில் சுந்தரரை மட்டுமே ஏன் பாடினார் என நாம் வியக்கலாம். அதற்கான காரணத்தை அவரே முன்னுரையில் கூறியுள்ளார். சுந்தரர் தேவாரத்தில் முப்பது ஆண்டுகளாக ஈடுபட்டவர் அதனால் எழுந்த ஆவலால் சுந்தரர் பிள்ளைத்தமிழைப் பாடினார். சுந்தரரின் வாழ்க்கை வரலாறு தனக்கு மிகவும் இனிப்பானது எனக் கூறுகிறார். கயிலையிலிருந்தவர் இறைவன் திருவுள்ளத்தால் பூவுலகில் பிறந்து, வாழ்ந்து பின் கயிலைக்கே திரும்பியது அவர் சரிதம்.

          திருவாரூர்ப் பதிகத்தில்,

                    ‘கயிலையில் மாயங்காட்டினார்

                 திருநாவலூரில் பிறவி காட்டினார்;

                 திருவெண்ணெய் நல்லூரில் மறவா மனங்காட்டினார்

                 ஆரூரில் கண்ணீர் கொண்டார்,’ எனத் தமது வரலாற்றை சுந்தரரே கூறியுள்ளார்.

          இதனால் புலவர் சுந்தரர்மீது ஒரு பிள்ளைத்தமிழை ஆவலாக இயற்றியுள்ளார் எனக் காண்கிறோம்.

          பிள்ளைத்தமிழின் அமைப்பு சிறிது வேறுபட்டுள்ளது. ஆக்கியவர் கூற்றில் ‘காப்புப்பருவத்தை வேறுவிதமாகப் பாடப்பட்டுள்ளது. இறைவர் தந்த நம்பிக்கு வேறு காப்பு மிகையாதலின் அவ்வத்தலத்து ஈசரையே காக்க என வேண்டிக் கொள்ளப்பட்டது,’ என்கிறார். அருமையான கருத்து.

          அவ்வண்ணமே திருவெண்ணெய்நல்லூர்ப் பெருமான், அதிகைப்பரமன், த்ில்லையீசர், பிரமபுரத்தீசர், ஆரூர்ப்பிரான், திருமுதுகுன்றத்தீசர், ஆதிபுரி நாதர், கச்சியேகம்பத்தீசர், அவிநாசிப்பிரான், அஞ்சைக்களத்தீசர் அனைவரையும் வேண்டியே காப்புப் பருவம் பாடப்பட்டுள்ளது.

          அம்புலிப்பருவம் கடினம் விடப்பட்டது என்கிறார். அதாவது ‘பிள்ளைக்கவிக்கு அம்புலி புலியாம்’ என்பது வழக்கு.    அம்புலிப்பருவத்தை சாம தான, பேத, தண்ட உபாயங்களுடன் அம்புலியை அழைத்துப்பாட வேண்டும். இதில் அவ்வாரு கடினத்தன்மை இல்லை என்கிறர் போலும். ஒரு பாடலைக் காண்போமே!

          ‘இந்த நம்பி ஓரிடத்தில் இட்டபொன் வேறோர் இடத்தில் ஆற்றில் எடுக்கக் கிட்டியது; ஓரிடத்தில் இவன் கூறிய ஓர் சொல்லினால் நெல் மலையாகக் குவிந்தது. மற்றோரிடத்தே ஒரு பொய்கையில் ஒரு முதலை தன் வாயில் இட்ட பிள்ளையைக் கரையினில் இவனுடைய ஒரு சொல்லால் உயிருடன் கொண்டுவந்து தந்தது. இவர் வேண்டிக் கொண்டதனால் ஈசனும் திருவாரூர் வீதிகளில் அலைந்து திரிந்தான் (பரவையிடம் சுந்தரருக்காகத் தூது சென்றலைந்தான் சிவபிரான்) இதெல்லாம் நீ அறியாத செய்திகளோ? ஒரு சொல்லைக் கூறியதனால் நீ படும் பாடும் கொஞ்சம் தானோ? அதனை உரைக்கவும் இயலாது. ‘வா’ எனும் ஓர் சொல்லால் இவன் உன்னை மகிழ்ச்சியாக அழைக்கின்றான். விளையாட வாராய். உலகம் புகழ்ந்தேத்தும் திருநாவலூர் நம்பியுடன் நீ விளையாட வாராய்,’ என்பது பாடலின் பொருள்.

         ஓர்சொலால் நதியொன்று உலவவழி விட்டது

                          ஒருநதி பொன் சுமந்தே

                 ஒருபொய்கை தன்னிலே கொடுவந்து தந்தது

                          உயர்ந்தகோ ளிலி தன்னிலே

         ஓர்சொலால் நென்மலை உவந்தே சொரிந்தது

                          உலகமும் காண நின்றே

                 ஒருபொய்கை முதலைவாய்ப் பிள்ளையைக் கரைதனில்

                          உய்ந்திடக் கொடுவந் ததால்

         ஓர்சொலால் இறைவனும் ஆரூ ரலைந்தனன்

                          உண்மைநீ அறியா ததோ

                 ஓர்சொலால் நீபடும் பாடுதான் கொஞ்சமோ

                          உரைக்கவும் முடியாது காண்

         ஓர்சொலால் உன்னையே உவந்தழைக் கின்றனன்

                          உவப்புடன் ஆட வாவே

                 ஒருநாவ லூர்வளரு முலகுபுகழ் நம்பியுடன்

                          உவப்புடன் ஆட வாவே.

                              “”””””””””””””””””””””””””””””””

          ஆக, அத்துணை நூல்களிலும் பலவிதமான நயங்களைக் கண்டு மகிழ்ந்தோம். காலத்திற்கேற்ப சில ஆசிரியர்கள் எளிய இன் தமிழிலும் இந்நூல்களை இயற்றியுள்ளனர். நாம் அவற்றைப் படித்து ரசித்து மகிழலாம்.

          இத்துடன் இத்தொடரை நிறைவு செய்கிறேன். லண்டனில் வசிக்கும் திரு. பத்மனாபன் ஐயர் மூலமாக ‘நூலகம்’ இணையதள’ நூற்தொகுப்பினின்றும் எனக்குக் கிட்டிய பிள்ளைத்தமிழ் நூல்களைக் கொண்டே இக்கட்டுரைத்தொடர் எழுதப்பட்டது. அன்னாருக்கு எனது உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

                                                  (நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *