கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

1

சக்தி சக்திதாசன்

கண்ணதாசன் எனும் கவிதைப் பெருங்கடலின் உள்ளே நீச்சலடிக்கும் ஒரு தருணமிது .

ஆயிரமாய்ப் பாடல்கள்கவிதைகள்கட்டுரைகள் எனப் படைப்புகளின் அத்தனை அங்கங்களினுள்ளும் தனது முத்திரையைப் பதித்தவர் எம் கவியரசர்.

ஆண்டுகள் பல பத்து கடந்து போயிடினும் தமிழர் மனங்களில் அழியாது நிலைத்திருக்கும் வகையான படைப்புகளைத் தந்தவர் கவியரசர்.

அன்றாட வாழ்க்கையிலே ஆண் பெண் இருபாலருக்கும் இடையில் ஏற்படும் விரக தாபங்கள் விரக்தி இந்த உணர்வுகளை அதற்குரிய அழுத்தங்களோடு எமக்கு எளிமையான வரிகளில் தந்தவர் கண்ணதாசன்.

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் பாடல் இல்லறம்துறவறம் என இரண்டுக்கும் இடையிலான ஒரு விவாதக் களம் போன்று அமைத்திருக்கிறார் கவியரசர்.

அன்றைய தலைமுறையில் இருந்து இன்றைய தலைமுறை வரை அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் அருமையான பாடல்.

குணச்சித்திர வேடங்களைத் தனக்கேயுரிய தனித்தன்மையுடன் மிளிர வைத்த ஏ.வி.எம் ராஜன் அவர்களின் பாத்திரம் பங்கு பற்றும் ஒரு பாடல் காட்சி.

தரிசனம் எனும் படம். .வி.எம் ராஜன் அவர்கள் இரட்டை வேடமேற்று நடித்த ஒரே ஒரு திரைப்படம்.

இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதன் இசையமைப்பாளர் சிறந்த பாடகியான சூலமங்கலம் ராஜேஸ்வரி என்பதே !

அற்புதப் பாடகர் அமரர் ஐயா டி.எம்.எஸ் அவர்களும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்த பாடலிது.

இல்லறத்துக்குள் துறவறத்தைப் புகுத்த முடியுமாஎனும் கேள்விக்கு முடியும் என ஆன்மீக அறிவியலின் மூலம் பதிலளித்திருக்கிறார் கவியரசர்.

எங்கே பாடலைப் பார்ப்போமா ?

விரக தாபத்தில் துடிக்கும் ஒரு பெண்ணின் நிலையைஇல்லற சுகத்தின் அனுபவத்திற்கு ஏங்கும் ஒரு பெண்ணின் நிலையை விரசமின்றி வழங்குகிறார் கவியரசர்.

மாலை நேரத்தை ஒரு பெண்ணின் காதல் மயக்கத்திற்கான காலம் என்று கூறுவதன் மூலம் ஒரு பெண் தன் மனநிலையைகாதல் தாபத்தை ஆணிடம் கூறுவதாகக் கவியரசர் வடித்திருக்கும் வரிகள்.

பெண்இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
+
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்
இது மாலை நேரத்து மயக்கம்

அதைக் கேட்டதும் அதற்கான ஆணின் பதில் எவ்வாறு இருக்கும்?

சாதாரண மனநிலையைப் பார்த்தால் நெருப்பிடம் பஞ்சு என்னை அணைத்துக்கொள் என்று கேட்பது போலத் தென்படும்.

இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவின் தாக்கம் வெளிப்படுகிறது.

வாழ்க்கையைத் தத்துவ ரீதியில் பார்க்கும் அந்த ஆணின் பதில் எப்படியிருக்கிறது ?

ஆண்:இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
இது காலதேவனின் கலக்கம்

ஆனால் அவள்தான் விரக தாபத்தில் தவிக்கிறாளேஅவனுடைய தத்துவ வார்த்தைகளில் ஆற்றுப்படுத்தக்கூடியதா அவளுடைய காதல் தாபம்.

பனியும் நிலவும் பொழிகிறதாம் அந்தப் பொழுது எப்படி இருக்கும் ?

காதல் செய்வதற்கு மிகவும் ஏதுவான ஒரு மென்மையான பொழுது என்பதை அக்காதல் வயப்பட்ட பெண் கூறுவதாகக் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம்.

பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன

பசும் பாலை போல மேனி எங்கும்
பழகிப் பார்த்தாலென்ன?

ஏக்கத்தோடு கேட்கிறாளாம் அந்தப் பெண்.

அதற்கு அந்த ஆணின் ஆன்மீகம் சார்ந்த பதிலை எத்தனை அழகாக எடுத்து இயம்பியிருக்கிறார் கவியரசர் பாருங்கள்.

உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஓடியாடி ஒயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன

வெறும் உடல் மயக்கத்தால் சேர்வதுதான் காதல் என்று வாழ்க்கை கூறியதா என்னஇதுவெல்லாம் வெறும் மாயை தானென்று எப்போது உணரப் போகிறோம் என்று கேட்கிறான் போலும்.

காதலுக்கும் ஆன்மீகத்துக்கும் நடக்கும் விவாதமல்லவாஅவளைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளுடைய அந்தப் பருவத்தில் தேவையானது காதல் தானே விட்டுவிடமாட்டாளே சும்மா.

உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன

என்று விடுகிறாள் .

அவனும் தனது நிலையிலிருந்து இறங்கி வருவதாயில்லை அவனது பதிலைப் பார்ப்போம்.

இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன

போட்டானே ஒரு போடுவெறும் ஒன்பது ஓட்டைகளைக் கொண்ட ஒரு கூடுதானே எமது உடம்புஇந்த மூச்சுக்காற்று அந்த ஒன்பது ஓட்டைகளில் ஒன்றால் வெளியேறிவிட்டால் பின்பு விழுந்துவிடப் போகிறோம். இதற்குள்ளே ஏன் வீணாக ஆசை கொள்கிறாய் என்கிறான்.

அவளோ இலேசுப்பட்டவள் இல்லைதன்னுடைய வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் தான் விரக தாபத்தின் வீரியத்தைத் தர்க்கம் செய்கிறாள்.

ஆனானப்பட்ட முனிவன் அவன் கூட ஒரு அழகு மோகினியின் வடிவில் மயங்கிய பூமி ஐயா இதுஇதன் முன்னே நீ எல்லாம் என்ன சும்மா ஆன்மீகப் பிதற்றல் செய்கிறாய் என்கிறாள்.

முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
தினம் மூடி மூடி ஓடினாலும்
தேடும் வாசல்தானே

ஆகா ஆன்மீக வழியாக வந்து என்னைத் தாக்குகிறாளே என்ற அங்கலாய்ப்போடு அவனின் பதில் வெளிப்படுகிறது.

பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத் தேரே

ஏதோ மரணம் எனும் கதவு எமக்குத் திறக்காது என்பது போலல்லவா பேசுகிறாய் பெண்ணே நோய் எனும் ஒரு வலை எம்மைப் பிடித்துப் பிணைத்துவிட்டால் பாயில் விழுவது காதல் செய்வதற்காக அல்ல அதை மறந்துவிடாதே என்கிறான்

என்னையே தருவதற்குச் சித்தமாக இருக்கிறேன் என்று என் காதலை வெளிப்படுத்தியும் பணிய மாட்டேன் என்கிறானே சரி நானாவது பணிந்து போய் விடுவோம் என்று எண்ணுகிறாள் போலும்

இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
இதயமே மாறி விடு

நான் காதலைக் கேட்கிறேன். நீயோ ஆன்மீக வாசலைக் காட்டுகிறாய். உனது இதயத்தை எனக்காக மாற்றிக்கொள்ள மாட்டாயாஎன்று தனது கடைசி ஆயுதமான கெஞ்சலை எடுத்து விடுகிறாள்.

ஆன்மீகத்தின் அறிவியலின் உச்சத்தில் இருக்கும் அவன் இதையெல்லாம் கடந்தவனாயிற்றே. அவனது இதயம் இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன ?

இது ஆடி ஓடிச் சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு

நான் உலகத்தின் அனைத்துப் பாதைகளிலும் பயணித்து அனுபவங்களைச் சேகரித்தவன்ஆன்மீகமே எனது வேதம் நான் மாறப் போவதில்லை. நீ உன்னை மாற்றிக்கொள் என்கிறான் அவன்.

கவியரசர் கண்ணதாசனுக்கு இத்திரைப்படத்தில் காட்சியைக் கொடுத்து, அதற்குக் கேட்ட பாடலுக்கான வரிகளை யாத்துக் கொடுத்துள்ளார்.

இங்கே நான் சொன்ன விளக்கங்களும் அந்தத் திரைப்படத்துக்கான காட்சியின் விளக்கமும் மாறுபடலாம்கவியரசரின் ஆன்மீக அறிவியலின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுவதற்காகவே நான் எனது விளக்கங்களை குறிப்பிட்டேன்.

மீண்டும் சந்திப்பேன்.

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

  1. Sakthi you are really ” A Treasure , Pokeesham to our Thamil Language ” . Wish you always good luck in your great , and good work.

    God bless you.
    K.N .Sivagnanasunderam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.