-மேகலா இராமமூர்த்தி

மாந்த வாழ்வு வசதி படைத்ததாய், இவ்வுலக இன்பங்களை நுகரக்கூடியதாய் அமையப் பொருள்வளம் அவசியமான ஒன்று. அதனால்தான் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று வள்ளுவப் பேராசானும் அக்கருத்தை ஆமோதித்தார். ஆயினும், பொருள் என்றும் நம்மைவிட்டு நீங்காமலிருக்கும் தன்மைத்தா என்றால் இல்லை என்றே பதிலிறுக்க வேண்டிவரும்.

நிலையாத இயல்புடையவை எவை என ஆராய்ந்த நம் முன்னோர் செல்வம், இளமை, யாக்கை ஆகியவை நிலையாத்தன்மை கொண்டவை என்று தம் பட்டறிவின் வாயிலாய் உணர்ந்து அவற்றை உலகுக்கு உரைத்தனர்.

பொருளின் சிறப்பைப் போற்றிய வள்ளுவரும் அதன் இயல்பை வரையறுத்தபோதில், ’அற்கா இயல்பிற்றுச் செல்வம்’ என்றும், ’கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்’ என்றும் உரைத்து அதன் நிலையாத்தன்மையை அழுத்தமாய் அவனிக்கு அறியத்தந்தார்.

செல்வத்தின் இயல்பை வள்ளுவர் கூத்தாட்டு அவையில் சேரும் கூட்டத்துக்கு ஒப்பிட, நாலடியாரோ வண்டியின் சகடக்காலுக்கு ஒப்பிடுகின்றது.

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
(நாலடி – செல்வம் நிலையாமை – 2)

”மக்களே! குற்றமற்ற செல்வம் உண்டானால், அது தொடங்கி வயலில் ஏறு நடந்ததால் கிடைத்த உணவை அனைவரோடும் பகிர்ந்து உண்க; ஏனெனில், செல்வம் என்றும் ஒருவர்மாட்டு நிலைத்திருப்பதில்லை. அதன் இயல்பு வண்டியின் சக்கரம்போல் மேலும் கீழும் புரள்வது; இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வமானது நாளை வேறொருவரிடம் சென்றுவிடும்” என்கின்றது.

எளிதில் அழியக்கூடிய பொருட்செல்வத்தின் இயல்புக்கு நேரெதிரான அழியாச்செல்வம் ஒன்றுண்டு; அதுதான் கல்வி.

செல்வத்தின் நிலையாத்தன்மையை விளம்பிய அதே நாலடியார் கல்விகுறித்துப் பேசும்போது, ”இப்பிறவிக்கு நன்மை பயப்பதாய், பிறருக்கு ஈவதால் குறைவுபடாததாய், கற்போர் தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச்செய்வதாய், தாம் உள்ளபோது அழியாது விளங்கி, அறியாமை எனும் மயக்கத்தை (மம்மர்) நீக்கும் கல்வியெனும் மருந்தினையொத்த பிறிதொன்றை யாம் எவ்வுலகத்திலும் காணவில்லை என்று உறுதிபடத் தெரிவிக்கின்றது.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
(நாலடி: கல்வி – 132)

நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களில் காலத்தால் மூத்ததான தொல்காப்பியம், கல்வி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் நேரடியாகப் பேசாவிடினும், தலைவன் தலைவியைப் பிரிந்துசெல்வதற்கான காரணங்களுள் முதலாவதாக ஓதலைக் குறிக்கின்றது. ஓதல் என்பதனை வேதம் ஓதுதல், கல்வி கற்றல் ஆகிய இரண்டுக்கும் பொதுவான சொல்லாக நாம் கருதலாம்.

ஓதல் பகையே தூதிவை பிரிவே. (தொல்: அகத்திணையியல் – 2)

கல்விக்கான தலைவனின் பிரிவு மூன்றாண்டுகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்ற வரையறையையும் தொல்காப்பியர் தருவதைக் காண்கையில் நிச்சயம் இது உயர்கல்வியையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

மனிதனுக்குப் பெருமிதம் ஏற்படுவதற்கான நான்கு காரணங்களைப் பட்டியலிடுகின்றார் தொல்காப்பியர். அவை, கல்வி, வீரம், புகழ், கொடை ஆகியவை. இந்நான்கிலும் கல்வியை முதலாவதாக வைத்திருப்பது கல்வியால் கிடைக்கும் பெருமிதம் மற்றவற்றினும் உயர்ந்தது எனும் குறிப்புப் பொருளைத் தருகின்றது.

கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம்
 நான்கே. (தொல்: மெய்ப்பாட்டியல் – 253)

வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பெருந்தகை, ’கல்வி’ என்றோர் அதிகாரம் வகுத்து அதில், அழியாது நிலைத்திருக்கும் விழுச்செல்வம் கல்வியே என்றும், கற்றோரே முகத்தில் கண்பெற்றோர் என்றும் அழுத்தந்திருத்தமாய்ப் பதிவுசெய்திருப்பது கல்வி குறித்த அவரின் உயரிய பார்வையை உலகுக்கு உணர்த்துகின்றது.

பிற்கால ஔவையார் தம்முடைய கொன்றை வேந்தன் எனும் அறநூலில், கையிலிருக்கும் பொருளைவிட மெய்ப்பொருளாய்ப் போற்றத்தக்கது கல்வியே என்கின்றார்.

”கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.”

அம்மட்டோ? மன்னனைவிடவும் கல்வியாளன் பெருமைக்குரியவன்; மன்னனுக்கு அவனுடைய நாட்டில் மட்டுமே பெருமையும் சிறப்பும்; ஆனால், கல்வியாளனுக்கோ சென்றவிடமெல்லாம் சிறப்பு என்று கற்றோனின் சிறப்பைக் கடலளவு உயர்த்துகின்றார் இம்மாதரசி தம்முடைய மூதுரையில்.

”மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇட மெல்லாம் சிறப்பு.”
(மூதுரை – 26)

புலவர்களும் அறிஞர்பெருமக்களும் கல்வியைப் போற்றுவதில் பொருளிருக்கின்றது. ஏனென்றால் அரசர்களிடத்தும் வள்ளல்களிடத்தும் தம் புலமைச் சிறப்பை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு பொருள் கிடைக்கும்; அழியாப் புகழ் கிடைக்கும். ஆனால், செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக அக்காலத்தில் விளங்கிய அரசர்களுங்கூடப் பொருட்செல்வத்தைப் போற்றாது கல்வியைப் போற்றியிருப்பதும் கற்கும் முறைகளைச் சாற்றியிருப்பதும் கருதத்தக்கது.

வடவாரியப் படையை வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பெயர்பெற்ற பாண்டிய மன்னனொருவன், கல்வியின் சிறப்பை விரிவாய்ப் பதிவுசெய்திருக்கும் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

அப்பாடல், ”மாணவன் ஒருவன் தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும் காலத்தில் உதவியும், மிகுதியான பொருளை குருதட்சணையாகக் கொடுத்தும், வெறுப்பின்றிக் கல்விகற்றல் நல்லது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள் கல்வியில் சிறந்திருக்கும் பிள்ளைபால் அந்தத் தாய்க்குச் சற்றுக் கூடுதல் அன்பிருக்கும். ஒரே குடியில் பிறந்த பலருள் வயதில் மூத்தவனை வருக என்றழைக்காது அறிவில் பெரியவனையே அரசனும் வருக என்றழைத்துத் தனக்கு உற்றதுணையாக்கிக் கொள்வான். வேறுபட்ட நான்கு குலங்களுள் கீழ்க்குலத்தோன் என்று கருதப்படும் ஒருவன் கல்வியில் மேம்பட்டால் மேற்குலத்தோன் எனப்படும் ஒருவனும் அவனிடம் கல்விகற்கச் செல்வான்” என்கின்றது.

”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோனாறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.”
(புறம்: 183)

நெடுஞ்செழியனின் கருத்துக்களை அப்படியே அடியொற்றி 16/17ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னனான அதிவீரராம பாண்டியன் என்பவனும் கல்வியின் சிறப்பை நறுந்தொகை (வெற்றிவேற்கை என்ற பெயருமுண்டு) எனும் தன்னுடைய நூலில் வடித்துத் தந்திருக்கின்றான்.

”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றில னாயின் கீழிரு ப்பவனே
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்
அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்”
என்கிறான்.

வள்ளுவம்,

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
(குறள்: 409) என்றுரைப்பதும்,

நாலடியார்,

…கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.
(நாலடி – கல்வி: 133) என்றுரைப்பதும் பாண்டிய மன்னர்கள் இருவரின் கருத்தையும் அரண்செய்வதாய் அமைந்திருக்கின்றன.

இப்பாடல்களின் வாயிலாக நாமறிகின்ற மற்றொரு செய்தி, தொழிலின் அடிப்படையிலான குல வேறுபாடுகள் சங்க காலத்திலேயே தோற்றம் கொண்டுவிட்ட போதினும் அவை மாந்தரின் கற்றலுக்குத் தடையாக இல்லை என்பதே.

இடைக்காலத்தில் தமிழகத்தில் நுழைந்த பிற சமயங்கள் தமிழ்ச்சமூகத்தில் நிகழ்த்திய வாழ்வியல் மாற்றங்களால், அனைவர்க்கும் பொதுவாயிருந்த கல்வியானது ஒருசிலர்க்கு மட்டுமே உரித்தானதாகவும், பெண்கல்வி தடைசெய்யப்பட்ட ஒன்றாகவும் ஆகியிருக்க வேண்டும். அதன்பிறகு ஆண் பெண் இருபாலர்க்குமான கல்வி என்பது ஆங்கிலேயர் காலத்திலேயே இங்கே சாத்தியப்பட்டிருக்கின்றது. அப்போதும்கூடப் பெண்கள் கல்விபெறுவதை நம் சமூகம் ஆதரிக்கவோ வரவேற்கவோ இல்லை என்பது கண்கூடு.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞரான மகாகவி பாரதி பெண்கல்விக்கு ஆதரவாக முதலில் உரிமைக் குரலெழுப்பினார்; விடுதலைக் கும்மி கொட்டினார்.

”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

பாரதியின் சிந்தனைகள்மீது கொண்ட விருப்பத்தால் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்ட புரட்சிக்கவியான கனகசுப்புரத்தினமும்,

”பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே

கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் அந் நிலத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை

…வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத ளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே…”

என்று பெண்கல்வியின் அவசியத்தையும், ஆணும் பெண்ணும் நிகராய் நின்று பணிகள் அனைத்தையும் பால்வேறுபாடின்றிச் செய்யவேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டினார்.

சாதி, மத வேற்றுமையின்றி ஆண், பெண் பேதமின்றி அனைவர்க்கும் கல்வி கிட்டவேண்டும் எனும் விழிப்புணர்வைக் கவிஞர்களும் சீர்திருத்தவாதிகளும் தொடர்ந்து வலியுறுத்திய பின்னரும், சாதி அடிப்படையில் மாணவர்களின் கல்விக்குத் தீ மூட்டும் வழக்கம் இன்றும் நம் சமூகத்தில் தொடர்வது வேதனையின் உச்சம். ஆதிக்க மனோபாவத்தில் ஒடுக்கப்பட்ட சாதியாரின் கல்வியையும் நல்வாழ்வையும் ஒழித்துக்கட்ட நினைக்கும் புல்லறிவினர்க்குக் கடுமையான தண்டனையைக் காவல்துறையும் நீதிமன்றங்களும் வழங்கவேண்டும் என்பதே சமூக நல்வாழ்வில் அக்கறை கொண்டோரின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

மாந்தர்களே! மம்மர் அறுத்து இம்மை வாழ்வைச் செம்மையாக்கும் கல்வியைப் போற்றுவோம்; வாழ்வில் உயர்வோம்!

*****

கட்டுரைக்குத் துணைநின்றவை
1. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
2. தொல்காப்பிய மூலமும் இளம்பூரணர் உரையும்.
3. நாலடியார் மூலமும் மகாதேவ முதலியார் அரும்பொருள் விளக்கமும்.
4. புறநானூறு மூலமும் உ.வே.சாமிநாதையர் உரையும்.
5. நறுந்தொகை மூலமும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும்.
6. பாரதியார் கவிதைகள் – வானவில் பிரசுரம்.
7. பாரதிதாசன் கவிதைகள் – அருள்சுடர் பதிப்பகம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.