குறளின் கதிர்களாய்…(473)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(473)
கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்
சொல்லாடப் போஒ முயிர்.
– திருக்குறள்-1070 (இரவச்சம்)
புதுக் கவிதையில்…
இரப்பவர்க்கு
ஈயாது ஒளிப்பவர்
இல்லையெனச் சொன்னதுமே
இரப்பவரின் உயிர் போய்விடுகிறது..
இருப்பதை
இல்லை யென்று
சொல்பவருக்கு மட்டும்
உயிர் போகாமல்
எங்கேபோய்
ஒளிந்துகொள்கிறதோ…!
குறும்பாவில்…
ஈயார் இல்லையெனச் சொன்னதுமே
இரப்பாருயிர் போகையில், இல்லை என்பாருயிர்
எங்குதான் போய் ஒளிந்திருக்கும்…!
மரபுக் கவிதையில்…
இருக்கும் பொருளை மறைத்துவைப்போர்
இல்லை யென்றே சொன்னதுமே
வருந்தி இரப்போர் உயிரதுவும்
வாழும் உடலைப் பிரிந்திடுமே,
இருந்தும் கொடுக்க மனமின்றி
இல்லை எனவே சொல்வோரின்
இருக்கும் உயிரும் போகாமல்
எங்கே போய்த்தான் ஒளிந்திடுமோ…!
லிமரைக்கூ…
இலையென ஈயார் சொன்னால்
இரப்பாருயிர் போய்விடும், இல்லை என்பாருயிர்
எங்கே ஒளித்திடும் பின்னால்…!
கிராமிய பாணியில்…
இருக்கதக் குடுக்கணும்
எரக்கவங்களுக்குக் குடுக்கணும்,
எதயும் மறைக்காமக் குடுக்கணும்
இல்லண்ணு சொல்லாமக் குடுக்கணும்..
இருக்கிறத மறச்சிவச்சி
இல்லண்ணு சொன்னதுமே
எரப்பவன் உசிரு போயிடுமே,
இருக்கதக் குடுக்காம
இல்லண்ணு சொன்னவன் உசிரு
எங்கதான் போயி ஒளிச்சிடுமோ
தெரியல்லியே..
அதால தெரிஞ்சிக்கோ,
இருக்கதக் குடுக்கணும்
எரக்கவங்களுக்குக் குடுக்கணும்,
எதயும் மறைக்காமக் குடுக்கணும்
இல்லண்ணு சொல்லாமக் குடுக்கணும்…!