மணியோசை

பாஸ்கர் சேஷாத்ரி
ஆராய்ச்சி மணியொன்றை அங்க மன்னன் கட்டினான்
யார் ஆட்சி பாரென்று ஊர் முழுதும் கொட்டினான்
ஏதோவொரு அலங்காரம் எனக் கண்டவர்கள் கருதினர்
விளையாட்டுப் பொம்மையெனக் குழந்தைகள் சிரித்தனர் .
மணியடிக்க ஆளில்லை என மன்னவன் மயங்கினான்
குறைகளே இல்லையெனக் குதூகலித்தான் கோமகன்
மாடு மேய்க்கும் சிறுவனுக்கோ அந்த மணியடிக்க ஆசை
அவன் உரு பார்த்து கரு பார்த்து, காவலர்கள் விரட்டினர்
குறைசொல்ல ஒன்றுள்ளதெனக் குயவன் மகன் கூறினான்
என்னவெனக் கேள் என மன்னவனும் அதட்டினான்
கயிறு கட்ட மறந்தீரே கடமை சார்ந்த காவலரே
மாடுபிடி கயிறு இது மணியில் நீர் கட்டுவீர் என்றான்
மன்னவனும் தலையசைத்தான் அதுவும் சரியென்று
ஆசை கொண்ட அழகா போய் மணியடித்துப் பாரென்றான்
ஆசை வேறு குறை வேறு எனச் சொல்லியே மறைந்தான்