கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 1)

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

மனிதவாழ்வுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதன் தன்னுடைய ஆரம்பத்தை ஆரம் பித்ததே மரங்களுக்கு மத்தியிலேதான். அப்படி ஆரம்பித்த மனிதன் நாளடைவில் மரங்களின் இணைப்பிலிருந்து விடுபட்டு  மரங்களை ஒருபக்கமாக ஒதுக்கி விட்டுமரமற்ற இடங்களை வாழ்வாக்கி வாழத் தலைப்பட்டு விட்டான். மனிதன் ஒதுக்கினாலும் மரங்களின்றி மனித வாழ்வு திருப்தி அடைவதாக இல்லை என்றே சொல்லலாம். மரங்களும் மனிதனை விட்டு விடுவதாகவும் இல்லை. காட்டு மரங்கள் என்னும் நிலை மாறி நாட்டு மரங்களிடையே மனிதன் வாழும் ஒரு நிலை உருவாகி இருப்பதை இன்று கண்டு கொள்ளமுடிகிறது எனலாம்.

இந்திலையில் கற்பகதரு என்று போற்றப்படும் பனையையும்அதன் வரலாற்றையும்அதன் பயன்பாட்டையும்அதன் முக்கிய த்துவத்தையும் அறிந்து கொள்ளுவது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன்.

பனை என்பது உலகில் பல இடங்களையும் தொட்டே வருகிறது எனலாம். உலக அளவில் நோக்குகையில் பனையின் தொகையானது ஏறத்தாள நூற்று ஐம்பது மில்லியன்கள் வரை இருக்கலாம் என்று புள்ளிபிபரங்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.

கற்பகதருவான பனையின் தொடக்கம் எப்போது எனும் வினாவுக்கு – சரியான விடையினை பனைபற்றி ஆராய்ந்த தாவரவியலாளர்களே கூறமுடியாத நிலையில் மிகவும் தொன்மை மிக்கதாய் விளங்குகிறது என்பது  முக்கிய கருத்தெனலாம். ஆபிரிக்காவில்த்தான் இம்மரம் முதலில் தோன்றி இருக்கலாம். அதன் பின்னரே  தான் மற்றைய இடங்களுக்கும் பனையானது வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் கருத்தும் காணப்படுகிறது.

இந்தியாஇலங்கைஇந்தோனேஷியாமடகஸ்கார்கம்பூச்சியாதாய்லாந்துமியன்மார்என்று பல இடங்களில் பனை காணப்படுகிறது. இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் பெருமளவு பனைகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்திலும் கணிசமாக பனை காணப்படுகிறது. கிழக்கில் பனை இருந்தாலும் பனையின் எழுச்சி என்பது இலங்கையில் வடபகுதியிலேயே இருக்கிறது என்றே கொள்ளலாம். ஏனென்றால் அங்கு காணப்படும் வரட்சிதான் முக்கிய காரணமாய் அமைகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

பனை மரத்தைப் பற்றி எங்கள் இலக்கியங்களும் கூறி நிற்கின்றன. இலக்கியங்களில் கையாளப்படும் அளவுக்கு எங்கள் கற்பதரு இருக்கிறது என்றால் அதன் பெருமையினை நாங்கள் கருத்திருத்துவதும் அவசியம் அல்லவா !

பனையினைத் தமிழர் தங்கள் மரம் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளுவார்கள். நினைப்பதைக் கொடுக்கும் நிலையில் இருப்பதால் இதனை கற்பகதரு என்று போற்றிவருதும் வழமையாய் இருந்துவருகிறது.

குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை பனையோடு நெருக்கமாய் உறவாடியே வந்திருக்கிறோம்! பனை முறத்தால் எங்கள் மறத் தமிழ் பெண் புலியையே விரட்டினாள் என்பதையும் எங்கள் இலக்கியங்கள் காட்டுவதையும் நாம் கருத்திருத்த வேண்டும் !

சங்க இலக்கியம் தொடக்கம் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் வரை கற்பகதருவாம் பனையினை வியந்தே நிற்பது கருத்திருத்த வேண்டிய விஷயம் அல்லவா !

  ” ……………………….. ஏந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந்தானை மலைத்த பூவும் “

என்று தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. இங்கு பனையினைக் காணவில்லையே என்று எண்ணுகிறீர்களா? “போந்தை” என்னும் சொல் பனையின் பூவினைக் குறிக்க சங்ககாலம் பயன்படுத்திய தாகும். அதனையே தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. “ஏந்துபுகழ் போந்தை” என்றால்  – உயர்வான புகழினை உடைய பனம் பூ – என்பது அர்த்தமாகும். பனையானது பழந்தமிழர் வாழ்வில் எந்தளவுக்குச் சிறப்பினைப் பெற்றிருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய விஷயம்தானே !

புறநானூறிற்றிலும் பனையின் பெருமை சுட்டிக் காட்டப்படுகிறது.

  ” கையது வேலே காலது புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
  வட்கர் போகிய வளரிளம் போந்தை “

கையிலே வேல்காலிலே வீரக்கழல்உடலிலிலே வேர்ப்புகழுத்திலே பசும்புண்இவற்றுடன் பனம்பூம் மாலையும் – உடைய வனாய் அதியமான் என்னும் அரசன் காணப்பட்டான் என்று புற நானூறு புகன்று நிற்கிறது. இங்கும்போந்தை” என்னும் சொல்லானது பனம்பூவினாலான மாலையைக் குறிக்க வந்திருகிறது. அரசனின் போர்க்கோலத்தில் பனையின் பூவினால் ஆகிய மாலை அக்காலத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கி இருக்கிறது என்பது பனைக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது அல்லவா!

இரும்பனையின் குரும்பை நீரும்” – (பனை நுங்கின் நீர்), “இரும் பனை வெண்தோடு மலைந்தேன் அல்லன்” (பனம்பூச் சூடிய சேரன் அல்லன்)

என்றும் புறநானூறு காட்டி நிற்கிறது. பனைபற்றிய எடுத்துக் காட்டுகள் புறநானூற்றில் இன்னும் பல இடங்களில் சுட்டப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. மடல் இலக்கியத்திலும் பனையினைக் காணுகிறோம்.

கலித்தொகைநற்றிணைகுறுந்தொகைஅகநானூறு ஆகிய சங்கத் தமிழும் பனையினைத் தொட்டுக் காட்டுகின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

சிலம்பும்வள்ளுவமும் பனையினை விட்டுவிடவில்லை. சிலம்பில் மூவேந்தர்களுடைய மாலைகள் பற்றி வரும்வேளை பனையும் வந்து நிற்கிறது.

    ” தோள் நலம் உணீய கம்பைப் போந்தையொடு “

    ” பலர் தொழ வந்து மலாவிழ் மாலை
போந்தைக் கண்ணிப் பொலம்பூ தெரியல் “

என்னும் சிலம்பின் பாடல்கள் பனையின்பூ மாலைகள் பற்றிக் காட்டி நிற்கிறது.

  “தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்”

என்று வள்ளுவம் பனையினைப் பக்குவமாய் காட்டி இருக்கிறது.

கடையார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கின் அனையர் – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்றிட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு “

என்று நாலடியார் என்னும் அறநூல் பனையின் பெருமையையைப் பறைசாற்றி நிற்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். நால டியார் பனையினைப் போற்றுவதைக் காண்பதிலிருந்து பனையென் னும் கற்பகதரு அக்காலத்தும் பெருமைமிக்கதாய் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது அல்லவா !

  ” நடுவூருள் வேதிகை கற்றுக்கோட் புக்க
படுபனை யன்ன பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக்க கண்ணுங் கொடுத்துண்ணா மக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை “

நாலடியார் இங்கும் பனைபற்றி சொல்கிறது. பெண்பனையினை யாவரும் – நல்லவர்களை அதாவது வள்ளல்களை விரும்புவது போல் ஊர் நடுவே விரும்பிபுவர் என்று காட்டுவது நோக்கத்தக்கது. ஆண்பனை அப்படி அல்ல என்று காட்டினாலும் பனைபற்றிய நிலை காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே !

(வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.