மாநிலம் பயனுற வந்த மகான் வள்ளலார்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும். வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும்.துன்பமில்லா மல் வாழ வேண்டும். குறை வில்லாது வாழ வேண்டும். வாழும் வாழ்வு நிறைவுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கில்தான் சமயங்களும் அதன் வழி முறைகளும் காலத்துக் காலம் வந்தபடி இருந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம்.இப்படி வருகின்ற சமயங்களில் எது உயர்ந்தது ? எது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது ? எது மிகவும் தீவிரமாக வந்திருக்கிறது ? நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை எது தாங்கி வந்திருக்கிறது ? என்னும் நிலை மண்ணிலே பூதாகரமாகவே வியாபித்து நிற்பதையும் காணமுடிகிறது.
வேதங்களை முதன்மைப் படுத்திய சமயநெறிகள். சித்தாந்தத்தை முதன்மை படுத்திய சமய நெறிகள். கடவுளைப் பற்றியே எண்ணாத சமய நெறிகள். அறத்தினையே முழுமையாய் வலியுறுத்தும் சமய நெறிகள். புராண இதிகாசங்களை நம்பும் சமய நெறிகள். திருமுறைகளை, ஆகமத்தை, ஆலயத்தை மையமாகக் கொண்ட சமய நெறிகள். உருவ வழிபாட்டை முதன்மைப்படுத்தாத சமயநெறிகள். வேள்வி யினை விரும்பி நிற்கும் சமய நெறிகள். இல்லறத்தை ஒதுக்கித் துறவறத்தையே முதனிலைப்படுத்தும் சமய நெறிகள். உருவ வழி பாட்டினை உரித்தாக்கிக் கொண்ட சமய நெறிகள். இப்படிப் பல சமய நெறிகள் சமுதாயத்தை சூழ்ந்து இருந்தன என்பதைக் கட்டாயம் கருத்திருத்தல் வேண்டும்.
சமய நெறிகள் பல தோன்றி சமுதாயத்தை பல கோணங்கள் ஆக்கி விட்டிருக்கின்றன என்பதையும் மறுத்துரைத்துவிட முடியாது. சமணம் வந்தது. பெளத்தம்வந்தது. இஸ்லாம் வந்தது. கிறித்தவம் வந்தது. இந்தியாவில் வைதீக நெறியே மேலோங்கி இருந்தது. இந்தியாவுக்கு புதிதாக வந்த சமய நெறிகளாலும். இந்தியாவில் முகிழ்த் தெழுத்த சமய நெறிகளாலும் – வைதீக சமய நெறிகள் சற்று தடுமாற்றமுறகின்ற நிலை ஏற்பட்டது. ஆனால் வைதீகம் என்பது தன்னிலையில் இறுக்கமாகவே இருந்தது . இருந்தும் வருகிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.
இந்தியாவுக்குள் நுழைந்த சமய நெறிகள் பால் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அந்த சமய நெறிகளின் வழியில் நடந்திடவும் விரும்பிச் சென்றார்கள். வைதீக நெறியில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று உணரும் ஒரு நிலையும் அப்பொழுது அவசியமாகக் காணப்பட்டது. அந்தவகையில் கெளதம புத்தர் வருகிறார். மகாவீரார் வருகிறார். தயானந்த சரஸ்வதி வருகிறார். ராஜாராம் மோகன்ராய் வருகிறார். இராம கிருஷ்ண பரமஹம்சரும் வருகிறார். இவர்களின் சிந்தனைகள் ஒவ்வொன்றுமே வேறுபட்டனவாக இருந்தாலும், சீர்திருத்தம் என்னும் கருமட்டும் அனைவரது சிந்தனைகளிலும் அமைந்தே இருந்தது என்பதுதான் முக்கியமாகும்.
வந்த சமய நெறிகளில் காணப்பட்ட நல்ல சிந்தனைகள் வைதீக சமய நெறியிலே சீராக்கம் செய்திட வேண்டும் என்னும் நிலைக்கு உந்தித்தள்ளுகிறது. கல்வி அறிவின் பெருக்கமும் சிந்தனைகளில் புத்தூக் கத்துக்கு உந்து சக்தியாகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் இறைவனது பெருங்கருணையினால் மண்ணில் வந்து பிறக்கிறார் வள்ளலார் பெருமான்.
வைதீக சமய நெறியினை மனதில் இருத்திய குடும்பத்தில்த்தான் வள்ளலார் வந்து பிறக்கின்றார். அவரின் உள்ளத்தில் முருகப்பெருமானே நிறைந்து இருக்கிறார். ஞானப்பாலை முன்று வயதில் அம்மையின் அரவணைப்பில் உண்ட சீர்காழி தந்த ஞானக் குழந்தை சம்பந்தப் பெருமானைப் போற்றுபவராக வள்ளலார் விளங்கினார். மணி வாசகத்தை மனமுருகப் பாடினார். உருகாதார் மனத்தினையே உருக்கும் திருவாசகத்தைத் தேனாகக் கருதியே சுவைத்து தன்னையே அதன் வசமாக்கி நின்றார்.
சிறிய வயதில் அன்னையையும் தந்தையும் இழந்து நின்றார். அண்ணனின் அரவணைப்பில் அவர் வாழும் நிலை ஏற்படுகிறது. அண்ணன் வீட்டிலிருந்து பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கிறார். பள்ளிப் படிப்பில் செல்லும் கவனம் கலைந்து அவரின் கவனம் – தியானம், யோகம் பக்கமாய் திரும்புகிறது. கல்வியினைக் கற்காமலேயே அவருக்குக் கலைமகள் கருணையினைத் தாராளமாகவே கொடுத்து விடுகிறாள். வள்ளலார் மனத்திலிருந்து கருத்துக்கள் மழையாகக் கொட்டி சிந்தனை வெள்ளமாய் பெருக்கெடுத்தது.
உருவ வழிபாட்டை ஏற்று நின்றவர் மனத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பரம்பொருளானவன் அரு வாய், உருவாய், அருவுருவாய் இருக்கிறான் என்றுதான் சமய நெறிகள் சாற்றுகின்றன. வள்ளலார் உள்ளம் மற்றவர்கள் உள்ளத்தைவிட வித்தியாசமாய் சிந்திக்கத் தொடங்குகிறது. எல்லாச் சமயங்களையும் பார்க்கிறார். பார்த்தோடு அமையாமல் அவற்றின் உட்கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளுகின்றார். அவர் மனதில் ஒரு புது மாற்றம், புதுத்தெளிவு உதய மாகிறது. அந்தத் தெளிவினால் அளப்பருங்கருணையுடைய அந்தப் பரம் பொருளை அவர் அளப் பெருஞ் ஜோதியாகவே அகமிருத்தியும் கொள்ளுகிறார். நிறைவில் “ஜோதி தரிசனமே” அவரின் நிலையாக மாறுகிறது. “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே”, “ஒளி வளர் விளக்கே”. “தீபமங்கள ஜோதி நமோ நம” என்றெல்லாம் அடியார்கள் அந்தப் பரம்பொருளை விழித்ததைப், ஏற்றிப் போற்றியதயெல்லாம் வள்ளலார் மனம் உள்வாங்கிக் கொண்டது. அவர்களே அந்தப் பரம் பொருளினை ஜோதி வடிவில் உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்னும் பொழுது நானும் அவர் வழியில் ஜோதி தரிசனத்தைச் சொல்லுவதில் ஏதும் மாற்றுக்கருத்துகள் கொள்ள வேண்டாம் என்று அவர் மக்களைப் பார்த்து புகன்று நிற்கிறார். ஆனாலும் அவரின் இந்த கருத்தினுக்கு எதிர்ப்பாளர்களும் நிறையவே இருந்தார்கள்.
வைதீக சமயம் மேன்மை மிக்கதான கருக்களைக் கொண்டிருந்த பொழுதிலும், அதனை வழி நடத்த வந்தவர்களின் மனங்களால் விளைந்தவை சமூக நலன்களைப் பாதித்து நின்றதை வள்ளலார் மனம் ஏற்க மறுத்தது. வள்ளலாருக்கு முன்னர் வந்த பலரின் சீர் திருத்தக் கருக்கள் – வள்ளலாரிடம் பதிந்தே இருந்தது. சமத்துவம் இல்லாமை என்பதுதான் வள்ளலார் உள்ளத்தைக் குத்திக் காயப்படுத்திய பெரிய கூரான முள்ளாகவே இருந்தது. அந்தச் சமத்துவத்தை உருவாக்கிட வேண்டும் என்னும் அவா அவரிடம் பேரலையாகவே எழுந்தது. சமரசம் நிலவுவதே சமய நெறிகளின் உயிர் நாடியாக இருக்கவேண்டும் என்ப துதான் வள்ளலாரின் ஆணித்தரமான கொள்கையாகவே அமைந்தது.
பெளத்தத்தின் அட்டசீலம், பஞ்சசீலம், சமணத்தின் அறக்கருத்துகள், இஸ்லாத்தின் சகோதரத்துவம், கிறித்தவத்தின் தொண்டு மனப்பாங்கு யாவற்றையும் வள்ளலார் அகத்திருத்தி தன்னுடைய சமரச சன்மார்க்கப் பாதையினை ஆக்கி நின்றார். வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினை உற்று நோக்கினால் அங்கே வள்ளுவமே கைகொடுத்து நிற்பதையே பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கும். கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பொய் கூறாமை, துறவு, விருந்தோம்பல், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் உண்மை, அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்னும் கரு, நன்னயம் செய்தல் என்னும் பெருநோக்கு, பழித்தது ஒழித்து விடும் கரு, உற்ற நோய் நோற்றல் உயிக்கு உறுகண் செய்யாமை என்னும் எண்ணம், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் உயிர் செகுத்து உண்ணாமை என்னும் உயரிய நோக்கு, அத்தனையும் வள்ளலாரின் புது நெறியாக முகிழ்த்து வந்தது எனலாம். வள்ளலார் சமூகத்தில் மிகவும் சிறப்பான ஒருமைப் பாட்டினை நிலை நிறுத்திடவே தன் வாழ்வெல்லாம் எண்ணியே செயற்பட்டார் என்பதை கருத்திருத்துதல் அவசியமாகும்.
பசிப்பிணி மருத்துவராய் வள்ளலார் விளங்கினார். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பதை வள்ளலார் மிகவும் தீவிர மாகவே மனமிருத்திச் செயற்படுத்தி நின்றார். பசித்தவர்களுக்கு முன்னால் தத்துவங்கள் பயனற்றவை என்பதில் வள்ளலார் பெருதும் உறுதியாகவே இருந்தார். அதனால் பசிப்பிணியினைப் பெரும் பிணியாக எடுத்து அதனைப் போக்குவதையே தம்முழைய சுத்த சமரசசன் மார்க்க சபையின் முக்கிய குறிக்கோளாக்கி நின்றார் வள்ளலார் எனலாம். அவரால் தொடங்கப்பட்ட இப்பாரிய பணி இன்றும் அவரின் சபையினால் அவரின் அன்பர்களினால் தொடர்கிறது என்பது மனங் கொள்ளத்தக்கதேயாகும்.
துறவியாக விளங்கினார். இயற்கை மருத்துவரானார். ஞானியாக ஒளிவிட்டுப் பிரகாசித்தார். துறவியாக தூய்மையினைக் காட்டி நின்றார். திருமூலரின் பல சிந்தனைகளை வள்ளலாரும் உள்வாங்கி நின்றார். திருமூலரைப் போலவே கருத்துக்களை நுட்பமாகச், செப்பமாக நல்ல தமிழில் அருமையான பாடல்களாக ஆயிரம் ஆயிரமாய் ஆக்கி அளித்தார். அவை அத்தனையும் பல திருமுறைகளாக வகுக்கப்பட்டு “திரு வருட் பாக்களாக” சமூகத்துக்கு பெரு வெளிச்சத்தைக் காட்டியபடியே இருக்கின்றன என்பதை மறுத்து ரைத்து விடல் இயலாது.
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!
“சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!”
இப்பாடல்கள் வாயிலாக வள்ளலாரின் ஆரம்ப நிலையினக் கண்டு கொள்ள க்கூடியதாக இருக்கிறதல்லவா !
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
ஏகன் அநேகன் என்னும் கருத்த்தில் , ஏகன் என்பதையே வள்ளலார் அகதில் உறுதியாக்கிக் கொண்டிரு ந்தார். அவரின் மனதில் பல சிந்தனை கள் மலர மலர கடவுள் பற்றிய கொள்கைகளையும் மாற்றியவ ராகவே வள்ளலார் வந்து நிற்கிறார் என்று அவரின் பாதையினைப் பார்க்கும் பொழுது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதியில் ஆச்சிர நீட்டென்றும் – ஓதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்த்தொழத்தலேபிறர்தம்
வாயாட்டம் தீர்த்தன்வே மற்று
வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
சொன்ன வலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இலை.
வள்ளலாரின் கருத்தோட்டங்கள் எவ்வாறு பரிணமிக்கின்றன என்ப தற்கு அவரே தன்னுடைய பாடல் களை எமக்கு வழங்கி நிற்கிறார். சாதியினைச் சாடுகிறார். வேதாகமங்களை மிகவும் கடுமையாக எதி ர்க்கும் நிலை வள்ளலாரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு – அவரின் சீர்திருத்த மனப்பாங்குதான் என்றே கருதைட வைக்கிறதல்லவா !
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
முத்தி பெற்றிடவும் பெற்றிலேன்
உரியதோர் இச்சை எனக்கிலை என்தன்
உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில்
ஆடலே யன்றி ஓர்விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
கருத் தெனக் கில்லை
வீடும் வேண்டா விறலினராகவும் வள்ளலார் தன்னை இங்கே வெளிப்படுத்தி நிற்கின்றார். முத்தியே வேண்டா நிலை என்பதே மிகவும் உன்னதமான நிலை என்று சேக்கிழார் பெருமானே சுட்டிக் காட்டி நிற்பது இங்கு நோக்கத்தக்கதேயாகும்.
மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையோ பொய்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்
இயற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடுஞ் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே
தன்னால் உருவாக்கப்பட்ட மார்க்கத்தை எந்த அளவுக்கு உறுதியானது, பயனானது, புதிய சிந்தனை களைக் கொண்டது என்பதை தனது பாடல் வாயிலாகவே எவ்வித அச்சமுமின்றி துணிவாய் வெளிப்படுத்தி நிற்பதைக் கருத்திருத்த வேண்டியது முக்கிய மாகும். மரணமிலாம் பெருவாழ்வு என்பதைச் சொல்வதற்கு எவ்வளவு மனவுறுதியும், தெளிவும் வேண்டும். அந்தத் தெளிவும் உறுதியும் மிக்கவராய் வள்ளலார் விளங்கி இருந்திருக்கிறார்.
செத்தாரை எழுப்புவேன் என்றார். சித்துக்கள் செய்யும் சித்தராயும் விளங்கினார். செத்தாரை எழுப்பு வேன் என்பதைப் பலருமே தவறாக விளங்கிக் கொண்டு – அவரையே பல வேளைகளில் வருந்திடும் வண்ணம் செய்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது. உயிரோடு வாழ்கின்ற பலர் நல்ல சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு, தனக்கும் பயனில்லாமல், மற்றவர்களுக்கும் பயனில்லாமல், ஏன் சமுதாயத்துக்கே பயனில்லாமல் வாழுவதைக் காண்கின்றோம். அப்படியானவர் உயிருடன் வாழ்ந்தாலும் அவர்களைச் செத்தார் என்றுதான் கணக்கில் எடுத்திட வேண்டும். அப்படியானவர்களுக்கு நல்ல உபதே சங்களைச் செய்தால் அவர்களை நல்லுணர்வுள்ளவர்களாக எழுச்சி பெறச் செய்துவிடலாம் என்னும் கருத்தில்த்தான் வள்ளலார் “செத்தாரை எழுப்பலாம்” என்று சொன்னார் என்பதுதான் உண்மை நிலையாகும்.
வள்ளலாரின் கொள்ளகைகளை நிறையவே பலரும் விமர்சித்தார்கள். அவரின் கொள்கைகள் ஏற்பதற்குக் கஷ்டமாக இருந்தும் இருக்கலாம். ஆனால் அவர் தான் கொண்ட கருத்தைமட்டும் எதற்காகவும், யாருக்காகவும் மாற்றிவிட நினைக்கவே இல்லை. தன்மனத்துதித்த சீர் திருத்தங்களை உள்ளடக்கி தன்னுடைய “சுத்த சமரச சன்மார்க்க நெறியினை” முன்வைத்தார். அதனை நடைமுறைப்படுத்தவும் தன் காலத்தில் அவர் செயற்பட்டு நின்றார். அவருக்கென்றே ஒரு அடியார் திருக்கூட்டமும் திரண்டது. அவரின் ஜோதி வழிபாட்டினையும் ஆதரித்தும் நின்றது. இன்றும் அந்த ஜோதி தரிசன வழிபாடு நிற்காமலே நடந்த படியேதான் இருக்கிறது என்பது முக்கியமாகும்.
சைவத்திருமுறைகளை நாமனைவரும் ஏற்றிப் போற்றுகின்றோம். வள்ளலாரின் அருட்பாடல்களும் திருமுறைகளாகப் பலராலும் போற்றப்பட்டு வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே. அன்னைத் தமிழை நேசித்தார். அந்த தமிழில் அரிய தத்துவக் கருத்துக்களை எமக்கெல்லாம் அள்ளியும் வழங்கினார். தமிழால் தன்கருத்துக்களைக் கூறுவதையே அவர் பெருமையாகவும் பெரும் பேறாகவுமே எண்ணினார். விமர்சனங்கள் பல – அவரின் கொள்கைகளுக்கும், அவரின் அருட்பாடல்களுக்கும் முன்வைக்கப்பட்டாலும் அவர்; ஞானியாக, யோகியாக, சீர்திருத்தச் செம்மலாக, சமூகத்தின் அழுக்குகளை அகற்ற வந்த சமூக மருத்துவராக, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாநிலம் பயனுற வந்த “பெரு வெளிச்சம்” ஆகவே ஆகியிருக்கிறார் என்பதுதான் உண்மையாகும்.