வஞ்சியின் நெஞ்சறிய…
-மேகலா இராமமூர்த்தி
தலைவியோடு தினைப்புனம் காக்கப் புறப்பட்டாள் அவள் ஆருயிர்த் தோழி. வழியெல்லாம் பேசிக்கொண்டு கலகலப்பாக வரும் தலைவி சில நாட்களாக அதிகம் பேசுவதில்லை; தோழி பேசியவற்றுக்கு மறுமொழியாகச் சில வார்த்தைகளை உதிர்ப்பதோடு சரி! தவிரவும் எதையோ சிந்தித்துக்கொண்டிருப்பதை அவள் முகக்குறிப்புக் காட்டுகின்றது. ஏன்… உணவு உண்பதில்கூட நாட்டம் அதிகமில்லை அவளுக்கு. இதன் காரணம் என்னவாக இருக்கும்? துறுதுறுப்பான பெண் திடீரென்று சோர்வாய்த் தெரிவதும், சிந்தனையில் ஆழ்வதும் புதிராக அல்லவா இருக்கின்றது? என்று சிந்திக்கலானாள் தோழி.
அப்போது அவளது எண்ணத் திரையில் வண்ண ஓவியமாய்த் தோன்றினான் அந்த எழில்மிகு இளைஞன். தான் தேடிவந்த யானை அந்தப் பக்கமாக வந்ததா என்று தலைவியும் தோழியும் நின்றிருந்த இடத்தருகே வந்து சில நாட்களுக்கு முன்பு கேட்டான் அவன். தலைவியைக் கண்டதும் அவன் பார்வை அவள்மீதே நிலைக்குத்தி நின்றது; தலைவியும் அவனைக் கண்டு நாணத்தோடு தலைகுனிந்தாள். அதன்பிறகு அவன் அடிக்கடி இந்தத் தினைப்புனத்தருகே தென்படுகின்றான். ஒருவேளை நான் தலைவியோடு தினைப்புனக் காவலுக்கு வாராத சமயங்களில் இவர்களுக்குள் காதல் அரும்பத் தொடங்கிவிட்டதோ? எதுவாக இருந்தாலும் இன்றைக்கு அதைக் கண்டுபிடித்துவிடுகின்றேன் என்று தீர்மானித்தாள். அப்போது தினைப்புனக் காவலுக்காக வழக்கமாகத் தலைவியும் தோழியும் அமரும் மரத்தின் பரணருகே அவர்கள் இருவரும் வந்திருந்தனர்.
பரணில் ஏறி இருவரும் அமர்ந்த சற்றுநேரத்தில் ’கீக்கீ’ என்று கத்திக்கொண்டு கிளிக்கூட்டமொன்று தினைகளைக் கவர்வதற்காகப் பறந்து வந்துகொண்டிருந்தது. தட்டை, குளிர், தழல் ஆகிய கிளி கடியும் கருவிகளை முழக்கிக் கிளிகளை விரட்டினர் இருவரும். வஞ்சியரின் கருவிகள் எழுப்பிய ஒலியால் அஞ்சிப் பறந்தன கிளிகள்.
தலைவி ஏதாவது பேசுவாள் என்று தோழி எதிர்பார்த்தாள்; ஆனால் அவளோ பேசாமடந்தையாய் அமர்ந்திருந்தாள். அவளின் அழகிய முகத்தில் அங்குமிங்கும் பிறழும் நீலமலர்போன்ற கண்களின் வனப்பில் இலயித்த தோழி, ஒரு வேடிக்கை செய்து இவள் உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வரவழைத்துவிடுகின்றேன் என்று நினைத்துக்கொண்டு தலைவியைப் பார்த்து, ”உன்னிடம் ஒரு விசயத்தைச் சொல்லவேண்டும் என்று சில நாட்களாகவே நினைக்கிறேன்; ஆனால் தயக்கத்தின் காரணமாகத் தவிர்த்துவிடுகின்றேன்” என்றாள் பீடிகையோடு.
”தன்னைப் பற்றி ஏதேனும் சொல்லப்போகிறாளோ” எனும் பதற்றம் தலைவியைத் தொற்றிக்கொண்டது. அதனை மறைத்தவளாய், “என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? தயங்காமல் உடனே சொல்!” என்றாள் சிறிது தடுமாற்றத்தோடு.
”அதுவந்து…அழகாகத் தொடுக்கப்பட்ட கண்ணியை அணிந்தவனாய்க் கையில் வில்லோடு, வலிமையான விலங்கின் காலடியைத் தேடிக்கொண்டு வருவதுபோல் இப்பக்கமாக இளைய ஆடவன் ஒருவன் வந்துபோகிறான்…” என்று சொல்லி நிறுத்தினாள் தோழி.
கேட்டுக்கொண்டிருந்த தலைவிக்கு உள்ளூற உதறல் எடுத்தது; அதை மறைத்துக்கொண்டு, ”மேலே சொல்!” என்றாள்.
”நான் வரும் வழியில் என்னையே எதிர்நோக்கி நிற்பவன்போல் நிற்கிறான் அவன்; அதை வெளிப்படையாக வாய்விட்டுச் சொல்கிறானா என்றால் இல்லை; அவனுடைய முகக்குறிப்பை வைத்து அவனுக்கு என்னால் ஏற்பட்டிருக்கும் காதல்நோயை அறிந்தேன்; இவ்வாறே பல நாட்களாக ஏதும் சொல்லாமல் வந்துபோகிறான்” என்று சொல்லிவிட்டுத் தலைவியின்மீது பார்வையைச் செலுத்தினாள் தோழி. தலைவி ஏதும் சொல்லாமல் இருந்தாள்.
விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தவள், ”ம்ம்ம்…எனக்கும் அவன் நினைவால் பாயில் படுத்தால் உறக்கமில்லை; காதல்நோயால் நெஞ்சில் நிம்மதியில்லை. ஆணாக இருந்துகொண்டு அவனே தன் காதலை உரைக்காதபோது பெண்ணான நான் எப்படிச் சொல்வது? எனினும், எனக்கும் அவன்பால் அன்பு உண்டு என்பதை அவன் அறியாமல்போனால் எங்கே என்னைவிட்டு நீங்கிவிடுவானோ என்ற அச்சம் என்னுள் எழுந்தது; அவன் நினைவால் என் தோளும் மெலிந்தது; இதற்கொரு முடிவுகாண வேண்டும் என்று எண்ணினேன்; அதனால் நாணத்துக்கு விடைகொடுத்துவிட்டுத் துணிச்சலாய் ஒரு காரியம் செய்தேன்” என்றாள் தோழி.
தலைவியின் இதயத்துடிப்பு எகிறியது. அதனை அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு, “என்ன செய்தாய்?” என்று கேட்டாள் மெல்லிய குரலில்.
”அதுவா?” என்று நகைத்த தோழி, ”நம் தினைப்புனத்தருகே கட்டப்பட்டிருக்கின்றதே ஊஞ்சல், அதிலேறி நான் ஆடிக்கொண்டிருந்தேன்; அப்போது அவன் அங்கே வந்தான். ”ஐய! நான் ஆடுவதற்கு வசதியாக இந்த ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டிவிட முடியுமா?” என்று அவனைக் கேட்டேன்; அதற்காகவே காத்திருந்தவன்போல் ”நல்லது, இதோ ஆட்டிவிடுகிறேன்” என்று விரைந்துவந்து ஊஞ்சலை ஆட்டினான். அப்போது கைப்பிடி நழுவி வீழ்வதுபோல் நான் அவன் மெய்மீது மெய்யாகவே விழுந்தேன்!” என்றாள் தலைவியைக் குறும்பாய்ப் பார்த்தபடி.
”ஐயோ…அப்புறம்?” என்றால் தலைவி திகிலோடு!
”அப்புறமென்ன? ஊசலாட்டத்தால் நான் தலைசுற்றி மயங்கி விழுந்துவிட்டதாக நினைத்த அவன், என்னை விரைந்து அள்ளிக்கொண்டான். நானோ உணர்விழந்தவள்போல் நடித்துக்கொண்டு அவன் மார்பின்மீது நெடுநேரம் சாய்ந்திருந்தேன். பின்னே? நான் தன்னுணர்வோடு இருப்பதை அவனறிந்தால் என்னைத் தன் மார்பில் தாங்கிக்கொள்வானா? பண்பாடு மிக்கவனான அவன், பெண்ணே! எழுந்திரு…விரைவாக வீடுசெல்! என்றல்லவா, பிறரறியாமல், என்னை அனுப்பியிருப்பான்!” என்று தன் திறமையைத் தானே வியப்பவள்போல் கூறிவிட்டுத் தலைவியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.
தலைவியின் கண்களில் கண்ணீர்முத்துக்கள் திரண்டு வெளியில் விழக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்ட தோழி அதனைத் தாளாமல், ”அடி கள்ளி! உன் உள்ளத்தை உணரத்தான் இவ்வாறு இட்டுக்கட்டிச் சொன்னேன்; அதனை மெய்யென்று நம்பிவிட்டாயா? என்று கேட்டுவிட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.
தலைவி அவளைத் திகைப்போடு பார்க்கவே, ”நீயும் அந்த ஆண்தகையும் காதலிப்பது எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய்? அதனை உன்மூலம் அறியவே இந்தத் திருவிளையாடல்!” என்றுகூறிவிட்டுத் தலைவியின் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டினாள்.
தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதை அறிந்த தலைவி வெட்கத்தோடு தோழியின் தோளில் சாய்ந்தாள்.
இந்தச் சுவையான நிகழ்வைத் தாங்கியிருக்கும் கலித்தொகைப் பாடலிது.
கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன் வரும்என்னை நோக்குபு
முன்னத்திற் காட்டுதல் அல்லது தானுற்ற
நோய்உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்
பாயல் பெறேஎன் படர்கூர்ந்து அவன்வயின்
சேயேன்மன் யானும் துயருழப்பேன் ஆயிடைக்
கண்ணின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்
பெண்ணன்று உரைத்தல் நமக்காயின் இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டென்று ஒருநாளென்
தோள்நெகிழ் புற்றதுயரால் துணிதந்து ஓர்
நாணின்மை செய்தேன் நறுநுதால் ஏனல்
இனக்கிளி யாம்கடிந்து ஓம்பும் புனத்தயல்
ஊசலூர்ந்து ஆட ஒருஞான்று வந்தானை
ஐய சிறிதென்னை ஊக்கி எனக்கூறத்
தையால் நன்றென்று அவனூக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில் வாயாச்செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்
மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவேன் ஆயின்மற்று ஒய்யென
ஒண்குழாய் செல்க எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன். (குறிஞ்சிக்கலி – 37: கபிலர்)
இங்கே தலைவியின் களவொழுக்கத்தை (காதல்) அறிந்து அவளுக்கு உதவுவதற்காகவே தோழி பொய் சொல்கின்றாள். எனவே, நல்ல நோக்கத்தோடு சொல்லப்பட்ட இந்தப் பொய்யும் மெய்யின் இடத்தைப் பெறுகின்றது எனலாம்.
”பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்” (292) என்பது வள்ளுவமன்றோ?
தலைவியின் நலன்கருதித் தோழி அவளிடமும் தலைவனிடமும் இன்னபிற அகத்திணை மாந்தரிடமும் இவ்வாறு கற்பித்துச் சொல்வதை (fabrication) ’படைத்து மொழிதல்’ என்கின்றது தமிழிலக்கணம்.
[படம், செய்யறிவு மென்பொருளின் துணையோடு நான் உருவாக்கியது.]
*****
கட்டுரைக்கு உதவியவை:
- கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
- https://vaiyan.blogspot.com/2017/01/37-kalittogai-37.html
- https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-kalithokai-37-65-kurinji/
- திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்