அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா
அம்மையே அப்பாவென் றழைத்தார் வாசகர்
அன்னையும் பிதாவும் என்றார் ஒளவையார்
அன்னையைத் தொட்டே ஆரம்பம் என்பதை
அனைவரும் அகத்தில் இருத்திடல் வேண்டும்
அன்பின் உருவாய் அன்னையே இருக்கிறாள்
அவளே பொறுமையின் இருப்பிடம் ஆகிறாள்
உண்ண மறப்பாள் உறங்க மறப்பாள்
ஒரு கணமேனும் பிரியவே மறக்காள்
பத்து மாதம் பாடாய் படுவாள்
பசியும் பார்க்காள் ருசியும் பார்க்காள்
கருவை எண்ணியே உருகியே நிற்பாள்
காத்துக் கிடப்பாள் புதுமலர் கண்டிட
பட்ட வேதனைகள் பஞ்சாய்ப் பறந்திடும்
பச்சிளம் குழந்தை முகத்தைக் கண்டதும்
கட்டித் தழுவுவாள் கண்ணீர் பெருகும்
இட்டமாய் அணைப்பாள் இன்பத்தில் மூழ்குவாள்
அன்னையே என்று ஆனந்தப் படுவாள்
அனைத்தும் கிடைத்ததாய் அகநிறை வடைவாள்
பெண்மையே முழுமை பெற்றதாய் நினைப்பாள்
பெரு வரமாகவே எண்ணியே மகிழ்வாள்
நீள நினைப்பாள் நெஞ்சில் சுமப்பாள்
ஆழ அறிவை ஊட்டிட விளைவாள்
வாழ்வை வளமாய் ஆக்கிட முனைவாள்
வழித் துணையாக இருப்பாள் அன்னை
நல்ல குருவை நாடியே நிற்பாள்
வல்ல பிள்ளையாய் ஆக்கிட முனைவாள்
கற்றவர் முன்னே வந்திட வேண்டி
கைகூப்பிக் கடவுளை வேண்டியே நிற்பாள்
துன்பம் வந்தால் துடித்துப் போவாள்
அன்பைப் பொழிந்து அவளும் உருகுவாள்
சிரிப்பைக் கண்டால் சிறகை விரித்து
சிட்டுக் குருவாய் வானில் பறப்பாள்
தாழ்ந்து விடாமல் தாங்கியே நிற்பாள்
வீழ்ந்து விடாமல் வேராய் இருப்பாள்
ஏணியாய் ஆகி ஏற்றியே விடுவாள்
என்றும் அன்னை துணையே ஆவாள்
அன்னை என்பள் ஆருயிர் போல்வாள்
அவளின் உணர்வே பிள்ளையே ஆகும்
அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள்
அவளைப் போற்றுவோம் அவழடி தொழுவோம்