குறளின் கதிர்களாய்… (472)
செண்பக ஜெகதீசன்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
– திருக்குறள் -1056 (இரவு)
புதுக் கவிதையில்…
இருப்பதை
இல்லையென மறைக்கும்
துன்பநிலை
இல்லாதவரைக் கண்டால்,
இல்லாமை என்னும்
வறுமைத் துன்பம்
எல்லாம் ஒருசேர
இல்லாமல் அழிந்துபோகும்…!
குறும்பாவில்…
உள்ளதை ஒளிக்கும் துன்பம்
இல்லாரைக் கண்டால் இரப்பவரின் வறுமைநோய்
இல்லாமல் மொத்தமாய் அழிந்துபோகும்…!
மரபுக் கவிதையில்…
இருப்பாய்க் கையில் உள்ளதையே
இல்லை என்றே மறைத்திருக்கும்
பெருத்த துன்பம் அதுதன்னைப்
பெறாதோர் தம்மைப் பார்த்தாலே,
வருந்தி இரப்போர் தாம்கொண்ட
வறுமை என்னும் நோயதுவும்
இருந்த இடமே தெரியாமல்
எல்லாம் சேர்ந்தே அழிந்திடுமே…!
லிமரைக்கூ…
இல்லையெனும் துன்ப நிலையே
இல்லாரைப பார்த்தாலே இரப்போர் கொண்ட
வறுமைத் துன்பமேதும் இலையே…!
கிராமிய பாணியில்…
குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
இருக்கிறத இல்லங்காமக்
குடுத்து வாழணும் குடுத்து வாழணும்..
தனக்கிட்ட இருக்கிறத
இல்லண்ணு மறைக்கிற
துன்பநெல இல்லாதவங்களப் பாத்தா,
எரப்பவங்ககிட்ட இருக்கிற
வறுமத் துன்பம்
இருந்த எடந்தெரியாம
எல்லாம் ஒண்ணாப் போயிடுமே..
அதால
குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
இருக்கிறத இல்லங்காமக்
குடுத்து வாழணும் குடுத்து வாழணும்…!