படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 27

மாதவரத்தார் நனைத்த மழை!
முனைவர் ச.சுப்பிரமணியன்
முன்னுரை
வாழ்வியலின் மொழிபெயர்ப்பாக இருந்த கவிதை, கைதட்டலுக்காகவும் வெற்றுப் பாராட்டுகளுக்காகவும் வீரியமில்லா விருதுகளுக்காகவும் ஏங்கிச் சாகின்ற இரங்கத்தக்க நிலைக்கு ஆளாகிப் போனது கவலைப்பட வேண்டிய ஒன்றே. தமிழர்களின் வாழ்வியல் பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமைந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் பாலை என்னும் திணைப்பகுப்பும் முதற்பொருளும் இயற்கையைச் சார்ந்தே வகுக்கப்பட்டன. இயற்கையின் மந்தணத்தைப் புரிந்துணராத ஒரு சமுதாயம் இத்தகைய பகுப்புக்குள் தனது வாழ்வியலை அடைகாத்திருக்க முடியாது. இயற்கையின் மூலம் மழை. தெய்வப்புலவன் இறைவனுக்கு அடுத்தபடியாக மழையைப் பாடியிருப்பதன் மந்தணம் இதுதான். இத்தகைய தரவுகளால் மழையின் அருமைப்பாட்டை உணர்ந்துகொண்ட தமிழர்கள் அதன் அழகியலையும் அனுபவித்துச் சுவைத்திருக்கிறார்கள். அத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்து தற்போது மாதவரத்தில் குடிகொண்டிருக்கும் தம்பி பண்ணைக் கவிக்கோ துரை வசந்தராசன் அனுபவித்து எழுதியுள்ள மழை பற்றிய கவிதை எனக்குள் செய்த சில மாயவித்தைகளையும் மலரும் நினைவுகளையும் மற்றவரும் அறிய வல்லமையில் பந்திவைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழிலக்கணத்தில் மழை
நானறிந்தவரையில் பழந்தமிழிலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில் மழை என்பது எழுத்ததிகார உயிர் மயங்கியலில் ‘மழை என் கிளவி வளியியல் நிலையும் (287) என்ற இடத்தில் ஆளப்பட்டுள்ளது. கற்பித்தல் முறையில் காப்பியரின் முறை தனித்துவம் மிக்கது. அவர் உயிர் மயங்கியலில் மூன்று சொற்களுக்கு ஒரே மாதிரியான புணர்ச்சியிலக்கணத்தைக் கூறுகிறார். அவை பனி, வளி, மழை என்பனவாம். இவற்றுள் முந்தைய இரண்டிற்கான புணர்ச்சியிலக்கணத்தை அடுத்தடுத்தும் மழை என்பதற்கான புணர்ச்சியிலக்கணத்தை நாற்பத்தைந்து நூற்பாக்கள் கடந்தும் எடுத்துரைக்கிறார்.
- ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வரும். “பனியென வரூஉம் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும்” (241). “பனியத்துச் சென்றான், பனியிற் கொண்டான்”
- ‘வளி’ என்னும் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றினைக் குறிக்கும் சொல் மேலே பனி என்னும் காலத்தைக் குறிக்கும் சொல்லுக்கு ஓதப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தைப் பெற்றுவரும். “வளி என வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்விது என்ப” (242)
இவ்விரண்டு நூற்பாக்களோடு ஒத்து முடியும் ‘மழை’ என்னும் சொல்லின் வேற்றுமைப் புணர்ச்சியை மாட்டேற்றாக 287ஆவது நூற்பாவில் எடுத்துரைக்கிறார். ஒரு இலக்கியம் சார்ந்த திறனாய்வுக் கட்டுரையில் இத்தகைய இலக்கண விளக்கம் தேவையா என நேயர்கள் உள்ளத்தில் ஐயம் தோன்றுவதை அறிவேன். வாயப்புக் கிட்டும்பொழுதெல்லாம் மரபின் மாண்புணர்வதும் உணர்த்துவதும் நம் கடமையல்லவா? ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல், ‘வளி’ என்பது பூதத்தைக் குறிக்கும் சொல், என்பது தெளிவு தமிழனுக்கு இருந்திருக்கிறது. அன்றியும் தொல்காப்பியம் இலக்கணத்திற்கு இலக்கணம் இலக்கியத்திற்கு இலக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் என்க.
பத்துப்பாட்டில் மழை
அறிவியல் சிந்தனையும் கலையிலக்கிய உணர்வும் இணைந்து கைகோத்த காலம் சங்கக்காலம். சங்கச் சான்றோர்கள் நீரியியல் சுழற்சி
குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். பத்துப்பாட்டு என்னும் தொகைக்கண் ஒன்பதாவது பாடலாகிய பட்டினப்பாலை கி.பி. இரணடாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இரண்டாம் கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடியது.
“வான்முகந்த நீர் மழை பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.” என்கிறார். (ப.பாலை, 126-131)
கவிதைச் சுவைஞர்களுக்குத் தெரியும் உவமம் பொருளினும் உயர்ந்தது. புகார்த்துறையில் அன்றைக்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதி நிகழ்வைக் கண்ணனார் பாடுகிறார். மழையாகிய நீர்ச் சுழற்சியை உவமமாக்கிப் பாடுகிறார்.
அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடிக் கடலில் கலக்கிறது. அதுபோன்று
புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக
நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள்
வரிசையாகக் கப்பலுக்கு ஏற்றப்படுகின்றனவாம். இப்பாடலில்
கண்ணனார் நீரியல் சுழற்சியைப் புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு
ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம்
இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இந்த உவமம்; திருக்குறள் வான்சிறப்பு (17) அதிகாரத்தின் தாக்கம் என்பது உண்மையேயாயினும். மழையின் தோற்றத்தைக் கவிதையில் உவமமாக்கி வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
எட்டுத் தொகையில் மழை
எட்டுத்தொகையின் இரண்டாவது தொகுப்பு குறுந்தொகை. நல்ல குறுந்தொகை என்பதற்கேற்ப நல்ல நல்ல பாக்களைக் கொண்ட நூல் அது. அதில் தோழி. தலைவியை ஆற்றுவிப்பதாக ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கிறது.
முந்நான்கு திங்கள் நிறைபொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
“கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே” (குறுந் 287)
“பன்னிரண்டு திங்கள் நிறைந்து பசிய புளிச்சுவையில் கொண்ட ஒதுக்கப்படாத வேட்கையினைக் கொண்ட கர்ப்பிணி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கிச் செல்கின்ற பொழுது” என்பது பொருள். மழையைப் பற்றி வண்ணனை செய்யும் இந்தப் பாட்டில் மகளிரின் நிறைகரு பன்னிரண்டு திங்கள் தங்கும் என்னும் குறிப்பு நோக்கத்தக்கது.
பன்னிரண்டு திங்கள் வயிற்றிற் சுமந்த அப்பாங்கினால்
என்னிளங் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி போலப் புலரியே கானிற் கன்றின் பின்
என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!
என்னும் பெரியாழ்வார் பாசுரத்திலும் தலைசிறந்த கரு பன்னிரு திங்கள் தங்கும் என்பது குறிப்பிடப்படுவது காண்க. கட்டுரைத் தலைப்பிற்குப் பொருந்தாதெனினும் தகவலுக்காக இசசெய்தி இங்குப் பதிவு செய்யப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை தலைவனைப் பிரிந்த தலைவியைப் பருவம் காட்டி ஆற்றாமை குறைக்கும் பணியைச் செய்யும் தோழிக்குத் துணையாகத்தான் மழை தன் கடமையைச் செய்திருக்கின்றது. கடற்கரையிலிருந்தே கடலைப் பாடிய நெய்தலைப் போலவே வாசற்படியிலிருந்தே மழையைப் பாடிய பாடல்களே அதிகமாக இருக்கிறது. கடலுக்குள் சென்றோ மழையில் நனைந்தோ பாடிய பாடல்கள் அருகிலேயே காணப்படுகின்றன. ஐந்திணைகளில் ஏனைய திணைகளின் முதற்பொருள் சிறப்பதைப் போல நெய்தல் அவ்வளவு சிறக்கவில்லை என்பதும் இக்கட்டுரையாசிரியர் கருத்தாகும்.
சிலப்பதிகாரத்தில் மழை
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து இடம் பெறாததும் திங்கள் ஞாயிறு மழை, மற்றும் பூம்புகார் ஆகியவை தொடக்கநிலை வாழ்த்துக்குரியனவாக அமைநதிருப்பதும் நோக்கத்தக்கது.
“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் சுரத்தலான்!”
என்னும் மங்கல வாழ்த்துப் பாடற்பகுதியில் மழை, மாமழை என அடைபுணர்த்துப் பாடப்படுகிறது. திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரக் கருத்துகளைச் செறித்துக்கொண்டு சிலப்பதிகாரத்தில் ‘உலகிற்குச் சுரத்தல்’ என்னும் இரண்டு சொற்கள் திகழ்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மழை பற்றிய குறிப்புக்கள் உண்டு. ஆனால் அவை கவிதை நயம் கொண்டு விளங்குகின்றனவா என்பது ஆராயத்தக்கது.
பாவை இலக்கியங்களில் மழை
மணிவாசகர் பாடிய திருவெம்பாவையில் மழை பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் மழை பற்றிய குறிப்பு வேண்டுதலாக வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.
“ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்!
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்”
எனப் பெருமாளிடம் வைத்த திருப்பாவையின் வேண்டுதல் “ஆழி மழைக்கண்ணா!” என்றே தொடங்குகிறது. கார்மேகத்திற்குக் கண்ணனின் கார்மேனியும், மின்னலுக்கு அவன் சக்கரமும் இடியொலிக்கு அவன் சங்கொலியும் மழைத்துளிகளுக்கு அம்புகளும் உவமங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளை உவம வழியாகக் காட்சிப்படுத்த முனைவது மரபுசார்ந்த பழந்தமிழ் இலக்கியங்களின் படைப்புக் கொள்கையாகும். இந்தப் பாடல் கூட மழையைப் பற்றிப் பாடப்பட்டதாக இருக்கிறதே தவிர மழையில் நனைந்த அனுவத்தைப் பாடியதாக அமையவில்லை.
மகாகவியும் மழையும்
தேசியக் கவியான பாரதி தெய்வீகத்தையும் பாடியிருக்கிறார். இயற்கையையும் பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை மழையைச் சரியான கோணத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கும் கவியாகவே பாரதியை நான் பார்க்கிறேன். பாரதியின் செவிப்புலனின் கூர்மையும் இயற்கையோடு அந்தக் கவிஞன் வாழ்ந்த வாழ்க்கையும் மழைபற்றிய இந்தப் பாடலில் முற்றுமாக வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்
“திக்குகள் எட்டும் சிதறி தக்கத்
தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது –தாம் திரிகிட
தத்தத் தகிங்கிடத் தத்தோம் –அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய் கொண்டு
தக்கையடிக்குது காற்று – தாம் திரிகிட
தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட
வெட்டியடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டியிடுக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கொட்டிக் கனைத்தது வானம்
எட்டுத் திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா?”
அடுக்குத் தொடர்களைப் போர்முழக்கப் பாடல் வரிகளாக மாற்றிக் காட்டும் கவியாளுமை பாரதியிடம் உண்டு என்பதற்கு இந்த வரிகள் சான்றாகின்றன. கட்டடம் இடிந்தது, மரங்கள் சாய்ந்தன, கப்பல்கள் கவிழ்ந்தன என்றெல்லாம் பாடுவோர் இடையே பாரதிதான் ‘எட்டுத் திசையும் இடிய’ என்று பாடினான். ‘திசைகள் இடிய’ என்னும் கற்பனை அதீதமானது! எவருக்கும் அவ்வளவு எளிதில் பிடிபடாதது. பாரதிக்கு எளிமையாகப் பிடிபடக்கூடியது. காரணம் அவன் கவிஞன். சிலர் கையொப்பம் இடுகிறபோது கூட ‘கவிஞன் கந்தசாமி’ என்று போட்டுப் பூரித்துப் போய்விடுகிறார்கள். கவிஞன் என்பதைக் கையெழுத்துக்குள் சுருக்காமல் பெருமிதத்தின் அடையாளமாகக் கொண்டவன் அவன். அவன் எழுதிய சீட்டுக்கவியில் இதனைக் காணலாம்.
புதுக்கவிதைகளில் மழை
மேலே காட்டப்பட்ட சில எடுத்துக்காட்டுகள் மழை பற்றிய மரபுக்கவிதைக் கூறுகள் என்றால் புதுக்கவிதைக்காரர்கள் பாடிய மழைப்பாடல்கள் இப்படி அமைந்திருக்கின்றன.
“நீ இல்லாத இடத்தில்
கருகி போயின விவசாயம்..
நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
விவசாயம்!
நீ என்ன மழையா? அல்ல்து பிழையா? .”
என்று வினவுகிறது ஒரு கவிதை. அந்த வினாவில் ஒரு ‘கவிதை நியாயம்’ இருப்பதை உணர முடிகிறது. அறுவடைக் காலத்தில் பெய்யும் மழை விவசாயிக்கு மட்டுமன்று பயிர்களுக்கே வேதனையாம் ! எடுப்பதற்கும் கெடுப்பதற்குமான புதுக்கவிதை வடிவம் இது. இப்படியொரு கற்பனையைப் புதுக்கவிதைக்காரன் செய்திருக்கிறான்! இந்தக் கவிதையின் ஒரு பகுதியை இன்னும் மெருகேற்றியிருக்கிறான் இன்னொரு கவிஞன்.
“அடைமழையைக் கண்டு
ஆனந்தம் கொள்ளாமல்
தவிக்கிறது
அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்கள்!”
கவிதை சொல்லப்படும் பொருளில் அல்ல சொல்லப்படும் வகையில் அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தச் சில வரிகள் எடுத்துக்காட்டு. பாவலர்கள் மழைக்குப் பரவசமாகிறார்கள். பயிர்களோ மனம் வாடுகின்றன. இந்த முரண் இந்தச் சீர்களைக் கவிதையாக்குகிறது!
“கண்ணாடிப் பூக்களாய்
மண்மீது உடைகின்றாய்!
கண்மூடித் திறக்குமுன்னே
காணாமல் மறைகின்றாய்!”
என்ற புதுக்கவிதை மழைத்துளியைக் கண்ணாடிப் பூக்கள் என்னும் தொடரால் அழகு பெறுகிறது. மழையை அனுபவித்துப் பாடிய கவிதை இது. ஒரு விவசாயக் கவிஞனின் பார்வை வேறு வகையாக அமைந்திருக்கிறது.
“இப்போதெலலாம்
எப்போதாவது பெய்யும் மழையால்
காளான்கள் கூட முளைப்பதில்லை
விளைச்சலுக்குப் பயன்படாமல்
வீணே கொட்டித் தீர்க்கும்
மழையில்
ஏராளமாய் விளைந்து கிடக்கின்றன
கவிதைகள்!
அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கும்
பொருள் போல
மழை எங்களுக்கு ஏனோ வெறும் பாடுபொருளானது
பாடுபட்டு உழைத்தும் பயனில்லாது போனது
மழையின் பயணத்திட்டத்தில்
அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்!”
திருக்குறள் வான்சிறப்பு என்னும் அதிகார்த்தில் வரும் கெடுப்பதும் எடுப்பதும் என்னும் சொற்களுக்கான பொருளை “மழையின் பயணத்திட்டக் குளறுபடி” என்று புரிந்து கொள்ளலாம். அருமை!
மருதகாசி நனைந்த மழை
மூன்றே நிமிடங்கள் வரக்கூடிய ஒரு திரையிசைப்பாடலில் மூன்று உவமங்களைக் கூறிப் பெய்யும் மழையைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றவர் மருதகாசி.
- “முட்டாப் பயலே மூளையிருக்கா என்று ஏழை மேலே
துட்டுப்படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற் வார்த்தைபோலே”
- “கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே”
- “அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே”
மழை பெய்கிறதாம். பரபரப்பில்லாத தமிழில் அழகியல் மற்றும் வாழ்வியல் கருத்துகளைத் திரையிசையில் தந்து சென்ற கவிஞருள் ஒருவர் மருதகாசி. ஒரு திரையிசைப் பாடலிலும் சமுதாய அவலங்களை உவமங்களாகப் படம்பிடிக்க மழையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.
அப்துல் ரகுமான் கண்ட புகையும் மேகமும்
அடக்கமுடைமையைப் பத்து உடைமைகளில் ஒன்றாக்குவார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தில் ஆமையைக் காட்டி அடக்கத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர் அடக்கத்தையும் பணிவையும் ஒன்றாக்குவார். . கவிக்கோ அப்துல் ரகுமான் பணிவின்மையைப் புகையாலும் பணிவைக் கார்மேகத்தாலும் விளக்குகிறார்.
“காற்றுக்குக் கண்ணில்லை! அது
புகையையும் மேலே கொண்டு போய் வந்துவிட்டது!
மேலே வந்தவுடன்
புகைக்குத் தலைகால் புரியவில்லை!
அது சூரியனையும் சந்திரனையும்
கர்வத்தோடு பார்த்தது!
நானும் உங்களைப் போன்றவன்!
இனிமேல் உங்கள் ராஜவீதியில்
நானும் பவனி வருவேன் என்றது
அது மேகத்தைப் பாரத்துச் சொன்னது!
“உன்னைப் போலவே உயரம்!
உன்னைப் போலவே நிறம்!
உன்னைப் போலவே உருவம்!”
இனிமேல் நானும் மேகந்தான் என்றது
புகையை மேகம் என்று நம்பிய
சில முட்டாள் மயில்கள்
தோகை விரித்தாடின!
மேகம் கடகடவெனச் சிரித்துவிட்டு
மழையாய் இறங்கியது!
நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது!
பெருமை மேலே ஏறுவுதிலே இல்லை!
கீழே இறங்குவதிலே இருக்கிறது!
மழையை ரசித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வான்வீதியையும் ரசித்துக் கவிதையெழுதிய ரகுமான் ஒரு ஆழமான வாழ்வியல் ;சிந்தனையைப் பதிவிடுவதற்கு மழையைப் பயன்படுத்திக் கொள்கிறார். இயற்கையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு கவிமரபாக இருப்பினும் இயற்கையொடு இயைந்து அனுபவித்த இன்பத்தைத் தம்பி வசந்தராசன் அழகியல் மீதூரப் பதிவிட்டிருக்கிறார் என்பதையே இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
வசந்தராசன் கவிதைகளில் இயற்கை
கவிஞர் வசந்தராசனின் கவிதை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையில் கண்டெடுக்க முடியாத (படாத) காட்டுமூலிகை’ என்று குறிப்பிட்டிருந்தேன்.! நீரும் காற்றும் வெப்பமும் இல்லாத விதை சாம்பிவிடுவதைப் போல அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இருக்கின்றன என்பது என் கருத்து. முகநூலில் அவர் பதிவிடும் கவிதைகளில் எழுபத்தைந்து விழுக்காட்டுக் கவிதைகள் உலகத்தரம் வாய்ந்தன. கற்பனைத் திருமணங்களைச் சீர்களின் மந்திரத்தால் சிறக்கச் செய்கிறார். எனக்குத் தெரிந்தவரை இவரளவுக்குக் கற்பனை செய்யும் கவிஞர் இருக்கிறார்களா? அல்லது இவர் கவிதைகளில் காணப்படும் கற்பனை வளத்தோடு ஒப்பிடும் பிற கவிதைகளைக் காணமுடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எண்சீர் விருத்தங்களில் முருகுசுந்தரம், பொன்னிவளவன் முதலியோரோடு எண்ணத்தகுந்த இவர் கற்பனையில் ஈரோடு சிற்பி, தமிழன்பன், அப்துல் ரகுமான், வைரமுத்து ஆகியோரோடு ஒப்பு வைத்து எண்ணத்தக்கவராக எனக்குப் படுகிறார். அவருள்ளும் இயற்கையைத் தனித்துவத்தோடு இவர் துய்ப்பதை இவருடைய கவிதைகள் காட்டுகின்றன.
“வானத்தைச் சுருட்டி
முற்றத்தில் விரித்தேன்
வாயிலில் ஆயிரம் மீன் குளங்கள்!
என்றெழுதுகிறார். பூமியைப் பாயாய்ச் சுருட்டிய கற்பனை மிகுந்த தமிழ்க்கவிதை உலகில், வானைச் சுருட்டி முற்றத்தில் வைத்த புதுமைக்குச் சொந்தக்காரர். வானத்தோடு கூடிய விண்மீன்கள் இவர் வீட்டு முற்றத்தில்! என்ன அழகிய கற்பனை!
“வான்தோட்ட முதற்காய்ப்பா கதிரோன் பிஞ்சு?
வளரிருளைப் பறித்திடவா நிலவுக் கொக்கி?
மீன்தொட்டி வயல்தானா இரவு வானம்?
மின்னலென்ன இடிசொடுக்குச் சாட்டைதானா?
வான்பிடிக்கும் வலைவிரிப்பா மேக தாகம்?
பால்வீதி தான்விண்மீன் குடியி ருப்பா? “
என்று இன்னோர் இடத்தில் எழுதுகிறார். கதிரவன் நிலவுக்கு ஒளிக்கடன் தருகிறது என்பதும் ஒரு கற்பனைதான். ஆனால் வசந்தராசன் கதிரோனின் பிஞ்சாக நிலவைக் காண்கிறார். பிறைநிலவைக் கொக்கியாகப் பார்க்கும் பார்வை அற்புதமானதல்லவா? வானத்து மீன்கள் இயற்கை. அந்த இயற்கையை இவர் செயற்கையாக்குகிறார். மீன்தொட்டி என்கிறார்.
“மூக்கொழுகிக் கொண்டிருக்கும்!மோதும் காற்றால்
முசுக்கென்று தும்மலிடும்! தாளின் ஈரத்
தாக்குதலால் நடுக்கமுறும்! நீர்ச்சீப் பாலே
தலைவாரித் தழைமுடியைத் தானு திர்க்கும்!
சீக்குவந்த கோழியைப்போல் சுருங்கிக் கொள்ளும்!
சூரியனின் வரவென்றால் தோகை அள்ளும்!
நாக்குழற மழலைமொழி சிரிப்பில் ஆடும்
நனைந்துவிட்ட மழைமரங்கள்! இன்று கண்டேன்!”
என்று மற்றொரு பதிவில் மழையில் நனைந்த மரங்களைப் பாடுகிறார் வசந்தராசன். இலைசிந்தும் துளியழகு என்றார் வைரமுத்து. இவரோ மரத்துக்கு மூக்கொழுகுகிறது என்கிறார். மழைத்தூறலாகிய சீப்பால் தலைவாரிக்கொள்ளும் மரம், அதன் வேகத்தால் பழுத்த இலைகளாகிய முடியை உதிர்க்கும் என்னும் கற்பனை அழகியலின் உச்சந் தொடும் முயற்சி!. இத்தகைய சில எடுத்துக்காட்டுகள் இயற்கையைப் பாடுகிற கவிஞராக வசந்தராசன் இல்லாமல் எப்போதும் அவர் மனம் இயற்கையோடு தோய்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் முகநூல் பதிவான ‘மழை நனைத்தேன்’ என்னும் கவிதை இங்கே திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
காம்பணிந்த வெளவால்கள்
ஒன்றைப் பிறர் நோக்காத கோணத்தில் நோக்குவதுதான் கவித்துவப் பார்வை. நமக்கெல்லாம் குடை தெரியும். கறுப்புத் துணி அல்லது வண்ணத்துணிகள் தெரியும். நடுக்கம்பியைச் சுற்றியுள்ள கம்பிகள் தெரியும் மழையில் நனையும் குடைக்கு இருட்டில் வாழும் வெளவாலிடம் என்ன வேலை? வசந்தராசனுக்கு கைப்பிடி கொண்ட கறுப்புக் குடை காம்பணிந்த வௌவலாகத் தெரிகிறது.
“காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்
கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்க”
மழைபற்றி மற்றவர்கள் நனையாமல் பாட வசந்தராசன் மழையில் நனைந்து கொண்டே (நனைத்துக் கொண்டே) பாடுகிறார். இது அவர் குடைபிடித்துக் கொண்டு வீதியில் நடந்து போனது கொண்டு பெறப்படுகிறது. உவமம் பொருளைப் பிரித்துக் காட்டும். படிமம் பொருளை மற்றொன்றாகக் காட்டும். வௌவால்கள் கண்டிருப்போம். கருங்குடைகளைக் கையில் பிடித்து மழையில் நனைந்திருபோம்! ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்தக் கருங்குடையை வௌவால்களாகக் கற்பனை செய்திருப்போம்? அது மட்டுமன்று. குடையின் கைப்பிடியை வௌவால்களின் காம்பாகக் காண்கிற கவித்துவம் நம்மில் எததனைப் பேருக்கு வரும்? நம்மில் என்பது இருக்கட்டும்? எததனைக் கவிஞர்களுக்கு வரும்? அதனால்தான் வசந்தராசன் கவிதைகளால் கவிஞரானவர என்கிறேன் நான்.
‘காம்பணிந்த வௌவால்கள் வானெதிர்க்க’
குடை மழையை எதிர்க்கிறது என்றால் என்ன பொருள்? காற்றுச் சுழனறடிக்க மழையும் சுழன்றடிக்கும். அந்தச் சுழலுக்குத் தக்கவாறு மழையை எதிர்த்து குடையாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குடைக்கு உண்டு. அதனால்தான் மழைபெய்யும் திசையெல்லாம் குடையெதிர்ப்பதாகக் கற்பனை செய்கிறார். கொட்டுகின்ற மழையைக் குடை வென்றதாக வரலாறு இல்லை. குடை என்பது ஒரு தற்காலிகத் தற்காப்பு. அவ்வளவுதான் சரமழையின் வேகததிற்குக் கள்ளிக்கோட்டை மான் மார்க் குடை ஈடுகொடுக்க இயலாது,
“கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்”
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை” என்றாரே ஆண்டாள் அந்த மரபின் தாக்கம் இந்த வரிகளில்!.
முகம் திருத்தும் செடிகொடிகள்
புதுமையைப் பற்றிச் சொல்ல வந்த பாரதி, அப்புதுமை கவிதையின் அனைத்துக் கூறுகளிலும் படிந்திருக்க வேண்டுமென்பான், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது “ என்பான். ஒரு கவிதை எந்நாளும் அழியாத மா கவிதையாக இருக்க வேண்டுமென்றால் இந்த நான்கு கூறுகளிலும் புதுமை மிளிர வேண்டும் என்பது பாரதியின் கவிதைக் கொள்கையாகக் கருத முடியும். செல்போன் புதியதாக வாங்கிவிட்டால் கவிதையும் புதியது என்று பலரும் எண்ணிவிடுவதுதான் கவிதையின் இன்றைய அலங்கோலத்திற்குக் காரணம்.
“தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்
தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த”
என்னும் வரிகளில் கற்பனை புதியதாக அமைந்திருப்பதைக் காணலாம். மழை பெய்கிறது, தாவரங்களில் விழுகிறது, செடிகொடிகளில் விழுகின்ற மழைநீர் அவை தேம்பி அழுவதுபோல் தோற்றம் தருகிறது. அவ்வாறு அழுது வழிகின்ற நீர் அடிரம் நிற்கும் மண்ணில் தேங்கி நிற்க அந்த நீர்க்கண்ணாடியில் முகம் திருத்துகிறதாம் செடிகொடிகள்! எவ்வளவு அழகிய கற்பனை? கண்ணீர் சிந்தியவுடன் முகம் திருத்த முடியுமா என்றால் இரண்டும் தனிததனி வினைகள். முன்னது மழை பெய்கிறபோது. பின்னது மழையடித்து ஓய்ந்துவிட்ட பின்பு.
தசைப்பிடிப்பும் மின்னலும்
இடி, மழை, மின்னல் பற்றிக் கவிக்கோ அப்துல் பாடியுள்ள ஒரு கவிதையில் மின்னலை இப்படிப் பாடியிருப்பார். “வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு. நீலச் சகதியில் நெளியும் வெண்புழு”. தம்பி வசந்தராசன்
“பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்
பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க”
மின்னல் நேர்க்கோட்டில் மின்னாது. இதுதான் காட்சி. இந்தக் காட்சியை கவிஞர் பரும் அவரவர் ரசனைக்கும் பார்வைக்கும் ஏற்பக் கற்பனை செய்து பாடுகிறார்கள். சமுதாய அவலங்களைப் பாடும் இயல்பு கொண்ட வசந்தராசன், நெளிந்த மின்னலை பசியால் உண்டான ஏழையின் தசைப்பிடிப்ப்பாய்க் காணுகிறார். மின்னுவதற்குப் பாம்பின் படததையும் அதன் சுருளுக்குத் தசைப்பிடிப்பையும் உவமமாகக் காட்டிய கற்பனைத் திறன் சிறப்புக்குரியதல்லவா?.
மண் செய்த மாதவம்
‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பரிது’ என்பார் திருவள்ளுவர். மழைத்துளி விழாதா என்னும் உழவனின் எதிர்பார்ப்பு வாழ்வியல். என் வறண்ட மேனியில் மழைத்துளி விழாதா பூமி எதிர்பார்ப்பது கவிதையியல்.
“நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து
நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!”
மழையை மண் எதிர்பார்ப்பது நமக்குத் தெரியும். ஆனால் அது வானத்தை நோக்கித் தவம் செய்வது நமக்குத் தெரியுமா? தெரியாது, காரணம் நாம் கவிஞர்கள் அல்லர். மழைக்காகத் தவம் இருந்த பூமி, அந்த மழையை உள்வாங்கித் தாவரங்களுக்கு ஊட்டி விடுகிறதாம். வறுமை நோயைத் தீர்க்கும் விருந்தாக விழுகிறதாம் மழை!.
மழை நனைந்த மண்மகள் கோலம்
மகளிர் நாணத்தால் தரையைக் கீறுவது ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. மண்ணைப் பெண்ணாக உருவகம் செய்வது தமிழ்க்கவிதை நெடுமரபு. மழை பெய்கிறது. அந்த வேக மழைக்கோடு தரையைக் கீறுகிறதாம். காய்ந்து கிடக்கும் தன் மகளான மண்ணுக்குத் தாயான வானம் கருணை காட்டுகிறதாம். வறட்சியில் புழுங்கிச் செத்த பூமி மழை நீர் பட்டுப் பெருகி உள்ளிருந்த வேர்வை கொப்புளம்போல் வெளிநடக்கிறதாம். காய்நது விட்ட மரத் தளிர்கள் மழைநீரில் மிதந்து செல்வது மண்ணின் தாகங்கள் படகுகளாய்ச் செல்வதுபோல் காட்சி தருகிறதாம்.
“நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற
நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற
குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து
கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்
தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்
தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்! “
என்றெழுதிக் கவிதை காட்சிப்படுத்தும். இறுதி வரிகளில்
“வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!
வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!
என்றெழுதி மழையின் மாண்பை உச்சாணிக் கொம்புக்கேற்றுகிறது. மேலே கண்ட காட்சிகளெல்லாம் மழை பெய்கிற அந்தப் பொழுதில் மட்டுமே!. மழை நின்றவுடன் வானம் வெளுத்துவிடுகிறது. அப்போது உலகம் வெளிர் வாங்குகிறது. இதனைச் “சாயம் போகும்” என்னும் வழக்குச்சொல்லால் உயிர்பிக்கிறார் கவிஞர். “சாயம் வெளுத்துப் போச்சு” என்பது வழக்கு. ஒருவனுடைய உள்ளீடு போலியானால் அதாவது அந்த உள்ளீடு அவனுக்கு உரியது இல்லையென்றால் அது வெளிவந்தவுடன் அவன் போலியாகிறான். கற்றவன்போல வேடமிடுகிறவன் கல்லாதவர் அவையில். வெளுத்துவிடுவதிலலையா அது போல! பைந்தமிழ்க் கவிதைகளில் பழகுதமிழைக் கையாள்வதும் பாமர வழக்கைக் கையாள்வதும் அக்கவிதையின் உயிர்ப்புத்தன்மையை உயர்த்தும். “மண்வெட்டி கூலி தின்னலாச்சே!” என்பார் பாரதியார். “காப்பார் கடவுள் உமை கட்டையில் நீர் போகுமட்டும்” என்பார் பாவேநதர்!, “கட்டையில் போவது என்றால் மரணம். ‘வீடு முச்சூடும்’ அழும் என்பார் ஜீவா! முச்சூடும் என்றால் முழுமையும் என்பது பொருள். சாயம் போகும் என்னும் வழக்குச் சொலலுக்கு இலக்கிய மகுடம் சூட்டியிருக்கும் வசந்தராசன் ஒரு மரபுக்கவிஞராக மலர்வது இங்கேதான்!
கற்பனைக் களஞ்சியம்
பாட்டு முழுமையும் கற்பனையைக் கலவையாக்குவது இடைக்காலத் தமிழ்க்கவிதை மரபு. இடைக்காலத்திற்குப் பிறகு வந்த நூற்றாண்டுகளில் கற்பனைக் களஞ்சியம் என்னும் பெருமைக்கு உரியவர் சிவப்பிரகாச சுவாமிகள். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்தப் பெருமைக்கு உகந்தவனே! தம்பி வசந்தராசன் மழை பற்றி எழுதியிருக்கும் இந்த உருவக விருத்தத்தின் இறுதிப்பாடல் கற்பனைக் களஞ்சியமாகவே மிளீர்கிறது. முதல் வரியில் சொல்கிறார்.
“விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட”
மொக்குளாக விழுகின்ற நீர்த்துளிகளுக்குத் திவலை என்று பெயர். நீர்நிலைகளில் நீராடிவிட்டு வருவோர் வெற்றுடம்பில் இதனைக் காணலாம். வானின்று விழும் நீர்த்திவலைகள் துளித்துளிகளாக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவது சிறு தவளை தாவிக்குதிப்பதுபோல இருக்கிறதாம்!
வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க
மழைத்துளி இலைகளில் விழுகிறபோது அவற்றுக்கு வேர்ப்பதுபோல் இருக்கிறது. காற்றின் அசைவில் இலைகள் ஆட, அவற்றின் மீது விழுந்த நீர் வேர்வைத்துளிகளாகச் சிதறுகிறது. “வேரின் மீது விழுந்த மழை” என்றும் ‘விறகின் மீது விழுந்த மழை’ என்றும் கருத்தியல் விளக்கத்துக்கு மழையைப் பாடும் வைரமுத்தின் பார்வையிலிருந்து “இலைகளில் விழுந்த மழை” என்னும் வசந்தராசனின் அழகியல் பார்வை இப்படி அமைந்திருக்கிறது.
“தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க”
தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு உரியது. அவர்கள் பள்ளிவாசலில் தரையில் தலைவணங்கித் தொழுவது சமயச்சடங்கு. மழையினால் மரங்கள் சோர்ந்து அப்படியே சாய்ந்து எழுவது மழைக்காட்சி. இந்த மழைக்காட்சியைக் காணுகிற கவிஞர் மனத்துள் பள்ளிவாசல் காட்சி நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மரங்கள் தலைசாய்வதை நூற்றுக்கணக்கானவர்கள் தொழுவதாகக் காண்கிறார். தொழுகையாய் என்பதை தொடு கையாய் என்ப்பிரிததுச் சில மரக்கிளைகள் தொழுகின்ற கையைப் போலக் காட்சியளித்ததாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.
“தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க”
அடிக்கிளைகளில் இலைகளற்று நுனிக்கிளைகளில் மட்டும் இலைநிறைந்து குடையைப் போல நிற்கின்ற மரங்கள் உண்டு, பெரிய வீடுகளிலும் சாலைகளிலும் பார்த்திருக்கலாம். அந்த மரங்களின் தாய் பூமியாம். பூமி தவமிருக்கிறது என்று கற்பனை செய்த கவிஞன், இந்த வரியில் அந்த பூமித்தாய் நனைந்துவிடக்கூடாதே என்பதற்காக மரங்கள் அதாவது தொப்பையான மரங்கள் கிளைக்குடையாகிய இலைக்குடை பிடித்ததாகக் கற்பனை செய்கிறார். முன்வரியில் காட்டியது இயல்பான மரம். இங்கே காட்டுவது தொப்பை மரம். உண்மைக் கவிஞர்களுக்குக் கற்பனைக்குப் பஞ்சமா என்ன?
“அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்
அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த”
மழை பற்றிய கற்பனையில் இறுதியாக ஆனால் முத்தாய்ப்பாகப் பதிவு செய்கிறார். “வானம் அழுகிறது” என்பது பொதுவான கற்பனை மரபு. “வானம் அழுவது மழையெனும் போது” என்பார் கண்ணதாசன். மழைப்பொழுதில் வானவில் வண்ணவில்லாகத் தோன்றுவதும் இயல்பு. ஆனால் அந்த வானவில்லை அழுகின்ற வானின் கண்ணீரைத் துடைக்கும் முந்தானையாகக் கற்பனை செய்தது புதுமையிலும் புதுமை. “செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால் சிங்காரச் சிலையை இங்கிருந்தே தொடுவேன்” என்பார் சுரதா!. பொதுவாகச் சேலையின் தலைப்புத்தான் முந்தானையாக அமையும். இங்கே எழுவண்ண வானவில் முந்தானையாதலின் “அழகொளிர் முந்தானை” என்கிறார்.
“முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு
முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.! “
‘நனைந்தேன்’ என்னும் தன்வினையை ‘நனைத்தேன்’ எனப் பிறவினையாக்கிச் சொல்வதன் மூலம் தன் மனத்தின் விசுவரூப தரிசனததை வசந்தராசன் காட்சிப்படுத்துகிறார். மழை பெரியது! விரிந்தது! அகண்டது! உயரத்திலிருந்து கொட்டுவது! மனம் சிறியது! சுருங்கியது! குறுகியது! நம் உயரம் கூட இல்லாதது! எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாதது!. பெரியது சிறியதை நனைக்கலாம். சிறியது பெரியதை எப்படி நனைக்க முடியும்? “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!” என்றானே புரட்சிக்கவிஞன் அதன் மற்றொரு படிமக் காட்சி இது. ‘நனைத்தேன்’ என்பது நுண்ணிய சொல்லாட்சி. இப்போது அந்தப் பாடல்களைப் படித்துப் பாருங்கள்!
காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்
கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்
தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்
தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த
பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்
பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க
நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து
நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!
நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற
நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற
குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து
கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்
தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்
தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்!
வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!
வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!
விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட
வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க
தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க
தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க
அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்
அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த
முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு
முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.!
நிறைவுரை
மழை நனைந்தேன் என்றுதான் பிறரெல்லாம் பாடினார்கள். இவர்தான் மழை நனைத்தேன் என்று பாடியிருக்கிறார். ‘மழையை இவர் நனைத்தாரா’ என்பது நமக்குத் தெரியாது. நாம் காணவில்லை. ஆனால் இவருடைய கவிதை மழை முழுமையையும் ஈரமாக்கியிருக்கிறது. கவிஞர்களின் முகவரிகளையே தங்கள் முகவரிகளாகக் கொண்டு கவிதை பெருகும் ஒரு பேரிடர் காலத்தில் தமது கவிதைகளால் தன்னை அறிமுகம செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் வசந்தராசன் வளிமண்டலம், என்பது போல் கவிதா மண்டலமும் ஒன்றுண்டு. பாரதி தனது தாசனை அறிமுகம் செய்கிறபோது சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலததைச் சேர்ந்த சுப்புரத்தினம்” என்றுதான் குறிப்பிடுகிறார். கவிதா மண்டலம் என்பது இயற்கை அழகியல் மற்றும் சமுதாய அழுகியல் ஆகிய இரண்டினை உள்ளடக்கியது. அவ்விரண்டிலும் தன் உள்ளத்தை இறக்கிவைத்துக் கொண்டிருக்கிறார் வசந்தராசன். காட்டு மூலிகைபோல் கண்டெடுக்காது மாதவரக் காட்டுக்குள் மறைநது கிடக்கும் இந்த மழை நனைத்த மரபுக்கவிஞனுக்கு விண்வெளி தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை!
(தொடரும்)